ராணி
உண்மைக்கும் பொய்க்கும் இடையே
அக்குரல் கேட்டது
இப்போது என் வேலை நேரம் தொடங்கிவிட்டது
மகனுக்குச் சுடுநீரும்
அம்மா அப்பாவுக்கு மருந்துகளும்
அவருக்கு உடையும் உணவும்
என் மனதில் கொதித்துக்கொண்டிருந்தது
ஆற்றங்கரைக்குப் போவதும்
சிறையென்ற வார்த்தையைப்
பயன்படுத்த மாட்டேனென்பதும்
நேற்று முடிந்த ஒப்பந்தம்
இன்று ராகு காலம் முடிந்தவுடன்
நல்ல நேரத்தில் இவ்வீடு
என் பெயருக்குப் பத்திரம் பண்ணப்படும்
பதில் பேசாமல்
இனி சொன்னதை மட்டுமே கேட்பேன் என்பது
இன்றைய ஒப்பந்தம்
அன்றாடம் சிரிப்பை எடுத்துத் துடைத்து வைக்கிறேன்
m
ராஜா
இவ்வூரை நோக்கி கரம் கூப்பி
சிரம் தாழ்த்தி வணங்கி
அடிக்காதேயெனக் கெஞ்சிய பின்பும்
ஒருமுறை கூட என் நரம்பு
வேகங்கொண்டு எதிர்த்துத் துடிக்கவில்லை
ஓங்கிய பயத்தின் வெளிப்பாடு
தலை நசுங்கிய பின்பும்
வாழவே ஆசைப்படுகிறது
என் குரலுக்குப் பதில் பேசும் சக்தியில்லை
தீயென எரிந்தாலும்
அமைதியில் நீரென அமர்ந்து
எல்லாமே புதிது போல
விரோதமனைத்தும் உள்ளேயே
முழுங்கிச் செரிப்பதற்கு
எனக்கு வல்லமை வேண்டும்
நான் இருட்டை நோக்கி இழுத்துச் செல்லப்படுபவனாக இருப்பினும்
நூறாயிரம் விண்மீனாகி
மீண்டு வந்து கூடடைவேன்
ஏனெனில்,
நான் வெறிபிடித்த நாய்
சோற்றைப் பொறுமையாக உண்ணத் தெரியாத பன்றி
m
Illustration : Gemma Petri
இளவரசன்
யாரும் தன் மீது அண்டாத பொழுது
மண் குடித்த முட்களெல்லாம் வெளியே வரும்
முட்களால் என் நிலம் மூடப்படும்போது
கருவேலங்கள் காட்டுகிற பசி
ஓர் அழகிய மரமாக இருப்பதில்லை
அதன் அருகேயுள்ள கள்ளியும்
என் மொழியைப் போல்
பழத்தைக் காயமாக்காத முள்ளால்
ஒரு பாடலைத் தாங்குகிறது
பசியின் பழத்தைப் பறித்து உண்பவர்கள்
பால்யங்களுக்குத் திரும்புகிறார்கள்
முள் வாங்காத கால்கள்
என் நிலத்தின் மொழியை அறியாது
m
இளவரசி
என்னோடு நீண்ட நாட்கள் பணியாற்றிய அலுவலக நண்பர்
உங்களால் எப்படிச் சிரிக்க முடிகிறதெனக் கேட்கிறார்
என்னால் சிரிக்க முடியாவிட்டாலும்
சிரித்த முகத்துடன் உன்னைக் காண்பது
இவ்வளவு நாளும்
என்னை வேலைக்கு வர வைத்திருக்கிறதெனவும் சொல்கிறார்
யார் தயவின் கண்ணிலும் விழாது
தனக்காக ஒரு ஐந்து நிமிடம்
தனியறையில் ஒதுங்க முடியுமாவெனக் கேட்கிறார்
அடைக்கலான் குருவி
யார் பக்கமும் குற்றமில்லை என்கிறபோது
எந்தப் பக்கம் நிற்பாய்
யாரிடமும் பதிலில்லை
உன்னால் என்ன செய்ய முடியும்
அமைதியின் மீது சவாரி செய்யும்
நினைவின் வெட்டவெளியை
வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்
அன்பின் வானத்தில்
எப்பக்கமும் இல்லாத மனதின் மயான வட்டத்தில்
பறக்கிறது உன்னைப் போன்ற பறவை
கைக்காட்டுகிறேன் திசையை
காணாமல் போ பறவையே
என் கண்ணில் படாதே
இங்கே திரும்பி வராதே