அஞ்சலி: பி.வி.கரியமால் (1929 – 2025)
தலித் மக்களின் சிவில் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் போராடிய அம்பேத்கரியப் பெரியவர் வி.பி.கரியமால் கடந்த செப்டம்பர் 17 அன்று தர்மபுரி மாவட்டம் அரூரில் காலமானார். வெங்கட்ராமன் – வடிவியம்மாள் தம்பதியருக்கு 1929 மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி பாப்பிசெட்டிபட்டியில் பிறந்தார். ஏறத்தாழ எழுபத்தைந்து ஆண்டுகள் அரசியல் பயணத்தில் அவர் பெற்றுக் கொடுத்தவை அதிகம். அம்பேத்கரின் அரசியலை அடியொற்றிய இலட்சியவாதப் பயணத்தில் தனக்காக எதையும் சேர்த்துக்கொள்ளாத முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். ஷெடியூல் கேஸ்ட் ஃபெடரேஷன் அமைப்பில் தொடங்கிய அவரது இயக்கப் பணி, இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்குமளவிற்குச் கொண்டு சென்றது.
அரசியல் பயணம் / போராட்டங்கள்
பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய செடியூல் கேஸ்ட் ஃபெடரேஷன் அமைப்பிலிருந்து தன் வாழ்க்கையைத் தொடங்கிய கரியமால், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலவிய இரட்டைக் குவளை முறைக்கெதிராகப் போராடி அதனை ஒழித்தார். பொத்தூர், மூங்கிலேறி, பூங்கணை உள்ளிட்ட ஊர்களில் தலித்துகளுக்குக் கோயில் வழிபாடு மறுக்கப்பட்டபோது அதற்கெதிராகப் போராடி வெற்றியும் பெற்றார். தலித்துகளுக்குக் கோயில் நுழைவென்பது ஆன்மீகத்திற்கானதன்று, அது ஆதிக்கச் சாதியினரின் பண்பாட்டு அதிகாரத்திற்கெதிராகக் கல்லெறிதல். காலாராம் கோயில் நுழைவுப் போராட்டத்தை பாபாசாகேப் முன்னெடுத்தபோது, அதைச் சுயமரியாதைக்கான போராட்டமாக வரையறுத்தார். பொதுச் சொத்தில் பங்கெடுப்பது தொடர்பான போராட்டங்களையே அம்பேத்கரியப் பெரியவர்கள் ஆரம்பத்தில் நடத்தியுள்ளனர். மக்களைத் திரட்டிப் போராடுவது, சட்டப் போராட்டம் நடத்துவது, இழிதொழில் செய்யவிடாமல் மக்களைத் தடுப்பது போன்றவை தமிழகம் முழுதும் நடந்தேறின. அந்த மரபில் உருவாகி வந்த கரியமால், தோளில் துண்டு அணியும் போராட்டம், செருப்பு அணியும் போராட்டம் உள்ளிட்டவை வழியாக தலித்துகள் தன்னுரிமைப் பெறப் போராடினார். பின்னர், ஃபெடரேஷன் கலைக்கப்பட்டு இந்தியக் குடியரசுக் கட்சி உருவானபோது அதில் பயணித்தார். 1959ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் ஒருங்கிணைந்த சேலம் மண்டலத் தலைவராகப் பொறுப்பேற்றார். பின்னர் மாநிலத் தலைவராகவும் உயர்ந்தார். தந்தை சிவராஜ், பாபாசாகேப் அம்பேத்கரின் மகன் யஷ்வந்த்ராவ் அம்பேத்கர், பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி போன்றோரை அழைத்து மாநாடு நடத்தியுள்ளார். தலித் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்தியதால் பலமுறை சிறை சென்றுள்ளார். 1972ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் அம்பேத்கரின் திருவுருவப் படத்தை வைக்கக் கோரி போராட்டம் நடத்தியதாலும், 1964ஆம் ஆண்டு பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்தியதாலும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். 1982ஆம் ஆண்டு, தருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென சைக்கிள் பேரணி நடத்தியபோது காவல்துறையால் தாக்கப்பட்டு, செவித் திறனை இழந்தார். எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில் சாதியச் சுடுகாட்டை ஒழித்துப் பொதுச் சுடுகாட்டை உருவாக்கியவர். தான் நம்பிய லட்சியவாத அம்பேத்கரிய அரசியலுக்காகப் பல ஏக்கர் நிலத்தை விற்று மக்கள் பணியாற்றியவர் கரியமால்.
தேர்தல் அரசியல்
சமூக அதிகாரமற்ற தலித்துகள் குறைந்தது அரசியல் அதிகாரத்தையாவது பெற வேண்டும் என்று போராடியவர் பாபாசாகேப் அம்பேத்கர். தேர்தல் அரசியல் உருவானபோதே அதில் பங்கேற்றவர்கள் தலித்துகள். தேர்தலையும் போராட்டத்தின் ஓர் அங்கமாகப் பாவித்தனர். சமூகத்தைச் சமன் செய்வதற்காகப் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர். கரியமாலும் சில விசயங்களை முன்னெடுத்தார். பழனிபாபாவை அழைத்து வந்து தலித் – இஸ்லாமியர் ஒற்றுமை மாநாடு, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸைக் கொண்டு ஆதிதிராவிடர் – வன்னியர் ஒற்றுமை மாநாட்டை அரூரில் நடத்தினார். 1991ஆம் ஆண்டு பாமக சார்பிலும், 1996ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுக் கட்சி சார்பிலும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2011ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுக் கட்சி அதிமுகவோடு கூட்டணியில் இருந்தது. இரட்டை இலையில் போட்டியிட மறுத்து தேர்தல் அரசியலிலிருந்து விலகி, சமூகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
மண்ணுரிமைப் போராட்டம்
சேவைச் சாதியாக தலித்துகள் ஆக்கப்பட்டதற்கும் நிலத்திற்கும் தொடர்பு உண்டு என்கிறார்கள் சமூகவியலாளர்கள். சொத்துரிமை மறுக்கப்பட்ட காரணத்தால் பிறரைச் சார்ந்து வாழும் நிலை உருவானது மட்டுமல்லாமல், அதிகாரத்தின் செயற்களமாக நிலம் இருந்துவருகிறது. பிற சாதியினரைப் போன்று தலித்துகளுக்கும் நிலம் வைத்துக்கொள்ளும் தனிச் சொத்துரிமை வேண்டும். மேலும், விவசாயத்தை அரசுக் கட்டுப்பாட்டிலுள்ள தொழிலாக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்ட அவையிடம் பாபாசாகேப் அம்பேத்கர் கோரிக்கை விடுத்ததையும் நினைவுகூர்ந்தால் நிலத்தின் பெறுமதி விளங்கும். பண்டிதர் அயோத்திதாசர் காலத்திலிருந்து நிலத்திற்கான போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. ஜான் தாமஸ் – ஏழுமலை இருவரும் பஞ்சமி நிலமீட்புப் போராட்டத்தில் உயிரிழந்துள்ளனர். பெரியவர் கரியமாலும் நில உரிமைக்காகத் தொடர்ந்து போராடிவந்தார். மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தியதோடு மட்டுமின்றிச் சட்டப்போராட்டத்தையும் முன்னெடுத்தார். 2009ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதி பேராணை மனுவைத் தாக்கல் செய்தார். பஞ்சமி நில மீட்பு, தருமபுரி மாவட்டத்தில் பாபாசாகேப் அம்பேத்கருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பதற்காக REEDS அமைப்பை ஏற்படுத்திச் செயல்பட்டுவந்தார் கரியமால். தலித்துகளுக்கு நிலப்பட்டா பெற்றுத் தருவதற்காக மாவட்ட ஆட்சியருக்குப் பலமுறை மனு அளித்துள்ளார். வேலை நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்வதை வழக்கமாகவே கொண்டிருந்தார். தான் கொண்டிருந்த அம்பேத்கரிய அரசியலுக்குச் சாகும் வரை நேர்மையாக இருந்தவர். கட்சி அரசியலின் போராட்டம் என்பது ஒருநாள் கூடி கலைவதாக மாறிவிட்ட நிலையில், கரியமால் தனியொருவராகப் போராடிவந்தார். இந்த நெஞ்சுரத்தை அவர் அம்பேத்கரிடம் பெற்றார். அம்பேத்கரை அடியொற்றி பௌத்தம் தழுவி தீக்ஷா பூமி செல்வதை உடல் நலிவுறும் காலம்வரை வழக்கமாகக் கொண்டிருந்தார். பௌத்த முறைப்படி அவருடைய இறுதி நிகழ்வு நடைபெற்றது. அம்பேத்கரிய இயங்கியலின் முக்கிய இழையாக இருந்தவரிடம் நாம் கற்றுக்கொள்வதன் வழியே அவருக்கான இறுதி மரியாதையைச் செலுத்த முடியும்.
தகவல் உதவி: ராகுல், யாசட் சங்கம், அரூர்