இரட்டைத் தமிழகம்

 

“சாதி முறைமை பொருளாதாரத் திறன்பட்ட நிலையை உருவாக்குவதில்லை. அது இனத்தை முன்னேற்றவுமில்லை, முன்னேற்றவும் முடியாது. ஆனால், சாதி ஒன்றைச் செய்திருக்கிறது, அது இந்துக்களை முழுமையாகக் குலைத்து அறம்பிறழச் செய்திருக்கிறது” என்கிறார் புரட்சியாளார் அம்பேத்கர். இத்தகைய அறமற்ற, மனிதத்தன்மையற்ற செயலைத்தான் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் சாதி இந்துக்கள் பட்டியல் சமூக மக்களின் மீது அரங்கேற்றி வருகின்றனர். குறிப்பாக, ‘முற்போக்கு மாநிலம்’, ‘பெரியார் மண்’, ‘திராவிட மாடல்’, ‘விடியல் அரசு’ என்று சொல்லிக்கொள்பவர்களின் ஆட்சியிலும் பொதுப் பாதையில் நடக்க, பிணத்தைக் கொண்டு செல்ல தடை; தீண்டாமைச் சுவர்; பொதுவெளி என்றறியப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் பிரதிநிதிகள் இழிவுபடுத்தப்படுதல் போன்றவை தொடர்ந்த வண்ணமே உள்ளன. மேலும், ஊராட்சி மன்றத் தலைவர் தலித் என்பதால் அவருக்கான அதிகாரத்தைத் தலித் அல்லாத ஊராட்சி மன்றத் துணைத் தலைவரோ அல்லது வார்டு மெம்பரோ எடுத்துக்கொள்வதும் மலக்குழி மரணங்களும் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமாகவே இருக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கவயல் கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனித மலத்தைக் கலந்த சம்பவம், அங்குள்ள தேநீர்க் கடையில் நடைமுறையிலிருக்கும் இரட்டைக் குவளை முறை, பட்டியல் சமூக மக்கள் கோயிலில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று ‘சாமியே’ வந்து சொல்வதும் கூட சமூகநீதியைக் கடைப்பிடிக்கும் இதே தமிழகத்தில்தான்.

அடிப்படையில் தமிழர்கள் அதிபுத்திசாலிகள். அவர்கள் இந்துத்துவத்தை எதிர்த்துச் சமர் புரிவார்கள்; பகுத்தறிவுக்கு ஒவ்வாத நிகழ்வுகளையும் அதை முன்னிறுத்திப் பேசுகிற அரசியல்வாதிகளையும் விமர்சனம் செய்வார்கள். ஆனால், பட்டியல் சமூக மக்களின் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்படும் அநீதிகளையும் வன்கொடுமைகளையும் பற்றிப் பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் மறந்தும்கூட பேசமாட்டார்கள். காரணம், அவர்களுக்குள் ஊறிப் போயிருக்கும் நாற்றமெடுத்த இந்துமதக் கற்பிதங்களே.

புதுக்கோட்டை மாவட்டம்  கந்தர்வக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தில், பட்டியல் சமூக மக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தனிக்குடிநீர்த் தொட்டியில் மனித கழிவைக் கலந்த விஷயத்திற்காக இந்நாடே வெட்கித் தலைகுனிந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு அப்படிப்பட்ட நிகழ்வு நடப்பதற்குச் சாத்தியமில்லை என்பதைத்தான் இந்நிகழ்வு தொடர்பாகத் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.

இங்கு நாம் கவனிக்கத் தவறிய மௌனிக் கூட்டம் ஒன்றுண்டு. Intellectuals என்றழைக்கப்படும் இவர்கள் தமிழகத்தின் மாபெரும் வளர்ச்சி திட்டம், தனித்தமிழ்நாடு, ஒன்றிய அரசு என்று இவர்கள் பேசாத துறைகளே இல்லை என்று சொல்லுமளவிற்குப் பேசுவார்கள். ஆனால், பட்டியல் சமூக மக்களின் பிரச்சனை என்றால் காந்தியின் பொம்மைகளைப் போல் ஆகிவிடுவார்கள்.  சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள், திராவிட இயக்கங்களின் ஆட்சியில் 50 ஆண்டுகள்… இன்றும் அதே விஷயங்களைப் பேசிக்கொண்டிருப்பது அவமானம் இல்லையா? ஒரு முன்னுதாரண அரசு என்ன செய்திருக்க வேண்டும். பட்டியல் சமூக மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தின் நிலையோ 2021-22 நிதி ஆண்டில் தலித் மக்களுக்கான 13 திட்டங்களுக்கு ஒரு ரூபாய்கூட செலவிடாமல் முடக்கியுள்ளது. ‘கீழ்வெண்மணி படுகொலையைவிட இது மோசமானது’ என்று விமர்சித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் முனைவர் ரவிக்குமார்.

தலித் மக்களின் இத்தகைய நிலைக்கு முக்கியக் காரணம், தங்களின் பலம் என்ன என்பதையறியாமல் ஒற்றுமையின்றிச் சிதறுண்டு கிடப்பதே. இதைப் பயன்படுத்திக்கொண்டுதான் அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்; பிரிவினையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதை உணர்ந்து பட்டியல் சமூக மக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே சாதிய வன்கொடுமைகளுக்குத் தீர்வுகாண முடியும். பட்டியல் சமூக மக்கள் தொடர்ந்து இந்துவாக நீடிப்பதும் இதற்கு மிக முக்கியமான காரணம். புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னது போல், சமூக விடுதலையும் அரசியல் விடுதலையும்தாம் தலித்துகளை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். தலித்துகள் தன்முயற்சியினால் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், உள்ளிட்டவற்றில் வெகுவாக முன்னேறிவந்துள்ளனர். தங்கள் மீது சுமத்தப்படுகிற இழிவுகளிலிருந்து வெளியேற விரும்புகின்றனர். ஆனால், சமூக நடைமுறைகளும் அரசின் பாராமுகமும் அவர்களை உளவியல் ரீதியாகப் பலவீனப் படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன. இதைத்தான் இரட்டைத் தமிழகம் என்கிறோம். எதைப் பேசுகிறோம் என்பதைவிட எதைப் பேச மறுக்கிறோம் என்பதில் இருக்கிறது அரசியல்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!