கல்விப்புலம் தனியானதன்று அது சமூகத்தின் விளைபொருள்

ஆதினி அம்பேத்கர்

ந்தியக் கல்வி நிறுவனங்களில் சகத்துவத்தை நிலைநிறுத்துவதற்குக் கடந்த ஜனவரி மாதம் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்ட உத்தரவுகள் கல்விப் புலங்களில் பெரும் விவாதங்களையும் போராட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளன. உயர் சாதியினர் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் பொதுப் பிரிவு மாணவர்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கருதி டெல்லி மாநகர வீதிகளில் போராடிவந்த நிலையில் யுஜிசியின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளபோதும் இந்த உத்தரவுகள் குறித்த உரையாடல் ஓய்ந்தபாடில்லை.

இந்தியாவில் ஒருவரின் பெயருக்குப் பின்னால் இருக்கும் சாதியப் பின்னொட்டு (Sur -Name) அவருக்கான சமூக வெகுமதியை வழங்கிவிடுகிறது. ஒருவிதத்தில் சாதி சமூக மூலதனமாக அமைகிறது. ஆனால், அது எல்லோருக்கும் இல்லை. ஒருகாலம் வரை பெருந்திரளான மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டுவந்தது. பின்னர் கல்வி பெறுவதற்கான உரிமைகள் வாய்க்கப்பெற்றாலும் கல்விப்புலங்கள் சாதியக் கூடாரங்களாக மாறின. ஆதிக்கச் சாதி என்று சொல்லிக்கொள்ளும் மாணவர்களைவிட பட்டியல் வகுப்பைச் சேர்ந்த சின்னதுரை நன்றாகப் படித்தான் என்கிற காரணத்திற்காக சக மாணவர்களே அவனை அரிவாளால் வெட்டியது சமகாலத்தில் நடந்தேறியது. 2022 – 23ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது கடந்த காலங்களைவிட நான்கு விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) குறிப்பிடுகிறது. மத்தியக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் இடைநிற்றல் கணிசமாக உள்ளதாகவும், இதில் பட்டியல், பழங்குடி மாணவர்கள் அதிக அளவில் உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசின் அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும், கடந்த பத்தாண்டுகளில் மாணவர் தற்கொலை 65 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் யாவும் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களிலிருந்து எடுக்கப்பட்டவையே. தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், இதர கல்வி நிலையங்கள் குறித்த தரவுகள் நம்மிடம் இல்லை. சென்னை ஐஐடியில் சைவம், அசைவம் உண்பவர்களுக்குத் தனித்தனி வழி உருவாக்கப்பட்டதும், அது சர்ச்சையானதும் பின்னர் விளக்கம் தரப்பட்டதும் கடந்த காலங்களில் நடந்தவைதாம். 2021ஆம் ஆண்டு ‘உயர்’சாதிப் பேராசிரியர்கள் தன்னிடம் பாகுபாடு காட்டுவதாகவும் ஒடுக்குவதாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பேராசிரியர் விபின்.பி.வீட்டில் (Vipin.P.veetil) குற்றஞ்சாட்டினார். அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வரையில் பிரச்சினையைக் கொண்டு சென்றும் அவருக்கான நீதி கிடைக்காததால் தன்னுடைய பேராசிரியர் பணியைத் துறந்தார் என்பது இந்தியக் கல்வியியல் வரலாறு. தற்போது அவர் கோழிக்கோடில் உள்ள ஐஐஎம்-இல் பணியாற்றிவருகிறார். அதே சென்னை ஐஐடியில் 2019ஆம் ஆண்டு பாத்திமா லத்திப் எனும் மாணவி கல்லூரி விடுதியில் உயிரிழந்தார். 2016ஆம் ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) முதலாம் ஆண்டு உயிரி தொழில்நுட்பவியல் ( Biotechnology) படித்துவந்த மாணவர் நஜீப் அகமது காணாமல் போனார். 2017இல் ஜேஎன்யுவில் பட்டியல் சமூக மாணவர் முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்தார். இத்தனை உயிரிழப்புகளுக்குக் காரணமாக சாதியும் மதமும் தொழிற்பட்டுள்ளது.

யுஜிசி நடவடிக்கையின் பின்னணி

மேற்குறிப்பிட்ட புள்ளிவிவரங்களைக் கொண்டே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய ஒன்றிய அரசு அதைச் செய்யத் தவறியது. கல்விப் புல ஒடுக்குமுறையால் (நிறுவனப் படுகொலை என்பதே சரி) உயிரிழந்த ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் ரோகித் வெமுலா, டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி பாயல் தக்வி இருவரின் தாயார்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இவ்விருவர் சார்பிலும் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ஆஜரானார். அம்மனுவில் இந்தியக் கல்வி நிலையங்களில் மாணவர்கள் மீது நிகழ்த்தப்படும் பாகுபாட்டைக் களைய போதுமான சட்ட நடவடிக்கைகள் இல்லை. கல்விப்புலத்தில் சமூகச் சமத்துவம் (Social Democracy) நிலவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட், ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய குழு யுஜிசிக்குச் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதில், 2012ஆம் ஆண்டின் விதிகள் கல்விப்புலங்களில் பாகுபாட்டைக் களைய போதுமானதாக இல்லை. மேலும் மாணவர்களின் தற்கொலை கவலை அளிப்பதாகவும் சந்திரசூட் தெரிவித்திருந்தார். பாகுபாட்டைக் களைய விதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார். மாணவர்கள், பேராசிரியர்களிடையே சாதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கல்வி வளாகங்களில் பாகுபாட்டைத் தவிர்க்க பயிற்சி வகுப்புகள் (sensitization workshop) நடத்த வேண்டும்.

ஒவ்வொரு கல்வி நிறுவனமும் சமவாய்ப்பு மையம் (EOC) மற்றும் சமத்துவக் குழுவை (Equity Committee) அமைக்க வேண்டும். இதில் பட்டியல், பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்டவர், மாற்றுத் திறனாளி, பெண் ஆகியோர் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஒரு கல்வி நிறுவனத்தில் பாகுபாடு நடந்தால், அதற்கு அந்த நிறுவனத்தின் தலைவர்தான் (Vice-Chancellor / Principal) நேரடிப் பொறுப்பாவார். ஒவ்வொரு மாணவர் மற்றும் பணியாளர் சேரும்போது “நான் பாகுபாடுகளில் ஈடுபட மாட்டேன்” என எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்க வேண்டும். வளாகத்தில் பாகுபாடுகள் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க நடமாடும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். புகார்களைப் பதிவுசெய்ய 24 மணி நேரமும் இயங்கும் உதவி எண் மற்றும் மெய்நிகர் வெளியைக் (Online) கட்டாயம் உருவாக்க வேண்டும். புகார் பதிவானவுடன் சமத்துவக் குழுவை 24 மணி நேரத்திற்குள் கூட்ட வேண்டும். விசாரணை அறிக்கை அதிகபட்சம் 15 வேலை நாள்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அறிக்கை வந்த ஏழு நாள்களுக்குள் கல்வி நிறுவனத்தின் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிவில் அதிருப்தி இருந்தால் 30 நாள்களுக்குள் முறையீட்டு அதிகாரியிடம் (Ombuds person) மேல்முறையிடலாம். விதிமுறைகளைப் பின்பற்றாத கல்வி நிறுவனங்கள் மீது யுஜிசி மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். யுஜிசி வழங்கும் நிதியுதவி உள்ளிட்ட அனைத்து மானியங்களையும் நிறுத்த முடியும். பல்கலைக்கழகத்தின் பட்டம் வழங்கும் அதிகாரத்தை ரத்து செய்ய முடியும். ஆன்லைன் மற்றும் தொலைதூரக் கல்வி முறைகளை நடத்த  தடை விதிப்பு, யுஜிசி அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் பட்டியலிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல்வேறு விதிகளை யுஜிசி செயல்படுத்தியுள்ளது.

பாகுபாடுகளைக் களைய உருவாக்கப்பட்ட குழுக்களின் விவரம்

யுஜிசியின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.கே.தோரட் தலைமையில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் குறிப்பாக கிமிமிவிஷிஇல் நிலவும் சாதிப் பாகுபாடுகளை ஆய்வுசெய்ய அமைக்கப்பட்டதுதான் தோரட் குழு (Thorat Committee, 2007). இந்தக் குழு அளித்த அறிக்கையில் 76 விழுக்காடு பட்டியல் மற்றும் பழங்குடி மாணவர்கள் தங்களுடைய வாய்மொழித் தேர்வில் (Viva – Voce) சாதி குறித்துக் கேட்கப்பட்டதாகவும், பட்டியல் மற்றும் பழங்குடி என்கிற காரணத்தால் மதிப்பெண் குறைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர். விடுதி அறை ஒதுக்குவதில் பாகுபாடு, விடுதி உணவகத்தில் பாகுபாடு, ஆசிரியர்கள் காட்டும் பாகுபாடு, கலாச்சார நிகழ்ச்சிகளில் பாகுபாடு ஆகிய குற்றச்சாட்டுகள் பட்டியல் மற்றும் பழங்குடி மாணவர்களால் முன்வைக்கப்பட்டன.

இந்தப் புதுவிதிகள் குறித்து தோரட் குறிப்பிடும்போது “2012ஆம் ஆண்டு விதிகளுடன் ஒப்பிடும்போது பலவீனமாக இருக்கிறது. 2012 விதிகளில் 28 வகையான சாதிப் பாகுபாடுகள் தெளிவாகப் பட்டியலிடப்பட்டிருந்தன. ஆனால், 2026 விதிகளில் அவை நீக்கப்பட்டு, ‘பொதுவான பாகுபாடு’ என்று மாற்றப்பட்டுள்ளது. இது சாதி ரீதியான ஒடுக்குமுறைகளை அடையாளம் காண்பதில் சிக்கலை உண்டாக்கும். புதிய விதிகளின்படி, கல்லூரியின் முதல்வரே சமத்துவக் குழுவின் தலைவராக இருப்பார் என்று கூறுவது ‘நலன் சார்ந்த முரண்பாடு’ (Conflict of Interest)’. ஏனெனில், புகார் வரும்போது நிறுவனத்தின் பெயரைக் காப்பாற்ற முதல்வர் புகாரை மூடிமறைக்க வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர்கள் கே.மும்மூர்த்தி, எச்.தேவராஜ், பி.சி.சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய மும்மூர்த்தி குழு (Mummurthy Committee – 2016), உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியல் மற்றும் பழங்குடி மாணவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளைக் களைவதற்கு ஏற்படுத்தப்பட்டது. ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வேமுலாவின் மரணத்திற்குப் பிறகு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரூபன்வால் தலைமையில் உருவாக்கப்பட்ட குழு (Justice Roopanwal Commission 2016) மாணவர்களுக்கான ஆலோசனை மையங்கள் மற்றும் குறைதீர்க்கும் அமைப்புகளை உருவாக்கப் பரிந்துரைத்தது. இப்படி, சாதிய ரீதியிலான பாகுபாடுகளைக் களைய பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டும் தீர்வு எட்டப்படாமல் இருக்கிறது என்பதையே யுஜிசியின் உத்தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

‘உயர்’ சாதி மாணவர்களின் போராட்டம்

மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27% இடஒதுக்கீடு வழங்க 1979இல் பி.பி.மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்தது. ஏறத்தாழ 10 ஆண்டுகள் கிடப்பில் இருந்த இந்த அறிக்கையை, ஆகஸ்ட் 7, 1990 அன்று அமல்படுத்துவதாக அன்றைய பிரதமர் வி.பி.சிங் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதன் காரணமாக உயர்சாதியினர் என்று அழைக்கப்படும் மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். தகுதி புறக்கணிக்கப்படும் என்றும் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்றும் கூறி மண்டல் அறிக்கையைக் கிழித்தெறிந்தனர். “வேலையற்ற ஆண்களைத் திருமணம் செய்ய மாட்டோம்” என்கிற கோஷங்ளோடு உயர்சாதி என்று சொல்லிக்கொள்ளும் பொதுப்பிரிவுப் பெண்கள் வீதிக்கு வந்தனர். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்பதை வலியுறுத்தி டெல்லி பல்கலைக்கழக மாணவர் ராஜீவ் கோஸ்வாமி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். EWS இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டபோது தற்கொலை செய்துகொண்ட ராஜீவ் கோஸ்வாமியின் தந்தை கோஸ்வாமி “இன்று அவர் (ராஜீவ்) உயிருடன் இருந்திருந்தால் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதில் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார். பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கூடாது என்ற ஒருவரின் ‘ஆன்மா’ EWS  இடஒதுக்கீட்டுக்கு மகிழ்ந்திருக்கும் என்பதில் இருக்கிறது சாதிய நலன்.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெரும்பாலும் சாதிய ஏற்றத்தாழ்வினால் உயிரிழப்பதும் இடைநிற்றலாவதும் தொடரும்போது ‘உயர்’சாதி மாணவர்களின் போராட்டம் என்பது சாதியத் திமிர் அன்றி வேறில்லை. சாதி எனும் ஒடுக்குமுறைக் கருவி வழியாக மேற்சாதியினர் என்று சொல்லிக்கொள்பவர்கள் மட்டுமே கீழ் இருப்பவரை ஒடுக்க முடியும். இந்தச் சூழலில் ‘உயர்’சாதி மாணவர்கள் தாங்கள் ஒடுக்கப்படுவோம் என்று வாதிடுவது நகைமுரண். யுஜிசியின் உத்தரவுக்குத் தடை கோரி வழக்கறிஞர் வினீத் ஜிண்டால், தொழில் முனைவோர் ராகுல் திவான், மிருத்யுஞ்சய் திவாரி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இம்மனுக்களை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இதற்குத் தடை விதித்துள்ளது.

ஒன்றிய அரசும் இரட்டை நிலைப்பாடும்

கல்வி நிலையங்களில் பாகுபாட்டை அனுமதிக்கக் கூடாது என்று ரோகித் வெமுலா, பாயல் தக்வி ஆகியோரின் தாயார்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குக்கு முகம் கொடுக்கும் விதமாகப் பழைய விதிகளை மேம்படுத்தி புதிய விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று மாண்பமை நீதிபதிகள் உத்தரவிட்டதன் பெயரில் யுஜிசி இந்த அறிக்கையை வெளியிட்டது. புதிய விதிகளில் தெளிவில்லை என்று கூறி அதே உச்ச நீதிமன்றம் தடைவித்துள்ளது. இது உச்ச நீதிமன்றம் X யுஜிசி என்று இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு விருப்பப்படுகிறதோ என்கிற ஐயம் எழுகிறது. “இந்த விதிகள் யாரையும் துன்புறுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல; மாறாக, அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைவருக்கும் நீதி கிடைப்பதற்கான ஓர் ஏற்பாடு” என்று ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டிருந்தாலும், “பாகுபாடு என்ற பெயரில் இந்த விதிகளை யாரும் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது” என்றும் கூறியுள்ளார். “பொதுப் பிரிவு மாணவர்களின் நலன்களும் மோடி அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும்” என்று பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டது என்ன மாதிரியான நலன்கள் என்பது விளங்கவில்லை. பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் பழங்குடி மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியைக் குறைவாகவே ஒதுக்குகிறது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. மதச் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுவந்த ஆசாத் நிதி நல்கையை ஒன்றிய அரசின் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் ஸ்மிரிதி ராணி 2022 – 23ஆம் கல்வியாண்டு முதல் நிறுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். பிற்படுத்தப்பட்ட, பட்டியல் – பழங்குடி மாணவர்களுக்கான ஆய்வு நிதிநல்கையில் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு வந்தது. ஆய்வு மாணவர்களுக்கான நிதி ஆதாரங்கள் யாவும் யுஜிசியிடம் இருந்த நிலையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் – பழங்குடி மாணவர்களுக்கு 2022 முதல் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் (Ministry of Social Justice and Empowerment) துறையோடு இணைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் உதவித் தொகை பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டணர். ஜுன் 2024இல் NET (National Eligibility Test) தேர்வு எழுதி NFSC (National Fellowship for Scheduled Caste Students) தேர்வான மாணவர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி பழைய பட்டியலை நீக்கி, புதிய பட்டியலை வெளியிட்டது தேசியத் தேர்வு முகமை (National Testing Agency). இதனால் ஏறத்தாழ 64 பட்டியல் சமூக மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இம்மாணவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒன்றிய அமைச்சர் வீரேந்திர குமாரிடம் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் (சிபிஎம்) கடிதம் கொடுத்தார். நியாயம் வேண்டி பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். வழக்கு நிலுவையில் இருக்கிறது. கல்வி நிலையப் பாகுபாடுகள் குறித்துப் பல புள்ளிவிவரங்களை வெளியிட்ட மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு, பாகுபாட்டைக் களைய தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், நிகழ்ந்தவை வேறு. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களான IIT, IIM, NIT, AIMS, IISERs ஆகியவற்றை யுஜிசியின் விதிகள் கட்டுப்படுத்துமா என்பதற்குப் போதிய விளக்கங்கள் இல்லை. மேற்சொன்ன கல்வி நிறுவனங்களில்தான் அதிக அளவு பாகுபாடுகள் நிகழ்த்தப்படுவதாகப் ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எல்லாக் கல்வி நிறுவனங்களிலும் பாகுபாடுகளைக் களைய இந்திய ஒன்றிய அரசும், மாநில அரசும் கடுமையான விதிகளை ஏற்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் மற்ற பிரச்சினைகளைப் போலன்றி, சாதியப் பிரச்சினையைத் தனித்துப் பார்க்க வேண்டும். பாலினம், வர்க்கம் உள்ளிட்ட பிரிவுகள் வழி ஒடுக்குமுறை நிகழ்ந்தாலும் தற்போதைய ‘உயர்’சாதி மாணவர்களின் போராட்டம் என்பது சாதியின் காரணமாகத்தான் நிகழ்கிறது. கல்விக்கூடங்களில் பாகுபாட்டிற்கெதிராக நடைமுறையில் இருக்கும் எஸ்.சி / எஸ்.டி செல்லின் செயற்பாடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை ஒன்றிய – மாநில அரசுகள் வெளியிட வேண்டும். அரசு / கல்வி நிறுவனத்திற்கு ஆதரவான நபர்களையே கமிட்டியில் இடம்பெறச் செய்வதென்பது காலங்காலமாக இருக்கும் நடைமுறை. இதைக் களைவதற்கான வழிமுறைகள் என்ன என்பதையும் அதிகாரத்திலுள்ளவர்கள் விளக்க வேண்டும்.

வாழ்வின் (பிறப்பு, சடங்கு, வழிபாட்டுமுறை, திருமணம், மரணம்) அத்தனை தளங்களிலும் சாதி நீக்கமற நிறைந்திருக்கிறது. இதே சமூகத்திலிருந்து உருப்பெற்ற கல்வி நிலையங்களில் மட்டும் சாதியப் பாகுபாடு இருக்கக் கூடாது என்று எதிர்பார்ப்பது மூடநம்பிக்கை. இருந்தாலும் இப்படியான உத்தரவுகள் சாதியின் மீது தாக்குதல் நிகழ்த்துகின்றன. சாதியைச் சமூகப் பிரச்சினையாகக் கருதாமல் விட்டதன் விளைவுதான் இது. மாணவர்களின் மரணம் குறித்துக் கவலைப்படும் நாம் இடைநிற்பவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். இடைநிற்றல் என்பதும் தற்கொலைக்கு இணையான ஒன்றுதான் என்று அரசுகளுக்குப் புரிய வேண்டும். வெறும் சட்டத்தால் சமூக நடைமுறைகளை மாற்றிவிட முடியாது என்றாலும்கூட இத்தகைய அறிவிப்புகள் எளிய மாணவர்களுக்கு மனத்துணிவை அளிக்கிறது. கல்வி கற்கும் சூழலைச் சுதந்திரமாக வைத்திருப்பதன் வழியாகத்தான் மேம்பட்ட சமூகம் உருவாகும். கல்விப்புலம் தனியானதன்று, அது சமூகத்தின் விளைபொருள். சமூகத்தைப் பண்படுத்துவதன் வழியேதான் மாற்றங்கள் நிகழும். அதற்கு எல்லோரும் துணை செய்ய வேண்டும்.

 

l ambedkaraadhini@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger