‘பிராமண்வாத் ஜிந்தாபாத்’ (பிராமணீயம் வாழ்க)
டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாட்டுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறைகளை எதிர்த்துத்தான் கல்லூரி மாணவி ஒருவர் இப்படியொரு கோஷத்தை எழுப்பினார்.
யுஜிசி-யின் புதிய சமத்துவ விதிமுறைகள்
உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் கையாள்வதற்காகப் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல்) விதிமுறைகள் 2026இன் ஒழுங்குமுறை 3(c) கூறுவது:
“மதம், இனம், ஜாதி, பாலினம், பிறந்த இடம், மாற்றுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவ, மாணவிகளிடம் பாகுபாடு காட்டப்படக்கூடாது.
குறிப்பாக பட்டியலினத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஒபிசி), பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடுகளை ஒழிப்பது.”
இதிலுள்ள முக்கிய விதிகள்
- பாகுபாட்டைத் தீர்க்கும் வகையில் கல்வி நிறுவனங்களில் சமவாய்ப்பு மையம் (EOC), சமத்துவக் குழு, சமத்துவக் கண்காணிப்புப் படைகள் ஆகியவற்றை அமைக்க வேண்டும்.
- 24 மணி நேர ‘சமத்துவ உதவி எண்’ மற்றும் சமத்துவத் தூதர்கள் நியமிக்கப்படுவார்கள்.
- மேலும், இந்த வழிமுறைகளைக் கடைபிடிக்காத நிறுவனங்கள் தங்கள் நிதி உள்ளிட்ட பிற சலுகைகளை இழப்பார்கள்.
- புகார் பெறப்பட்டு 24 மணிநேரத்தில் கூட்டம் நடைபெற வேண்டும். 15 நாட்களுக்குள் அறிக்கை வெளியிட வேண்டும்.
சனவரி 13, 2026 அன்று இந்த விதிமுறைகள் வெளிவந்த உடனே ‘பொதுப் பிரிவு’ (அதாவது உயர் ஜாதியினர்) மாணவர்கள் பெரும் போராட்டத்தைத் தொடங்கி இன்றுவரை முன்னெடுத்து வருகின்றனர்.
இப்போராட்டத்தில் ஜாதிய – இந்துத்துவ அமைப்புகள் முன்னணியில் நிற்கிறார்கள்.
எதிர்ப்புக்கான காரணங்கள்
- முதல் காரணம், இந்தப் புதிய விதிமுறைகளில் தவறான புகார்கள் தருபவர்களைத் தண்டிக்கும் விதியானது நீக்கப்பட்டுள்ளதால், இது தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்று பொதுப் பிரிவு மாணவர்கள் கூறுகிறார்கள்.
- அடுத்து, இவை மாணவர்களிடம் சமத்துவத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக ஜாதிப் பிரிவினையைத் தூண்டிவிட்டு, உயர் ஜாதியைச் சேர்ந்த மாணவர்களை ஒடுக்குவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
- அடுத்து, சமத்துவக் கண்காணிப்புப் படைகள் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் எப்போதும் இருக்கும். பாகுபாடு நடக்கும் இடங்களைக் கண்டறிந்து அவற்றைக் கண்காணிக்கும். இதனால் சாதாரணமாகப் பேசுவதுகூட கட்டுப்படுத்தப்படும் சூழலை உருவாக்குவதாகக் கூறுகின்றனர்.
ஆனால், யதார்த்தத்தில் இவை எல்லாம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். நிரூபிக்க முடியாதவை.
முதலில் இத்தகைய பாகுபாடு அடிப்படையிலான புகார்களைக் கல்வி நிறுவனங்கள் கருத்தில் எடுத்துக் கொள்கின்றனவா எனக் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. பதிவு செய்யப்பட்ட புகார்களைவிட பதிவு செய்யப்படாமல் போன புகார்களின் எண்ணிக்கை எத்தனையோ! நமக்குத் தெரியாது.
ஒடுக்கப்படுவர்களுக்கு ஆதரவாகச் சட்டம் கொண்டுவரும் ஒவ்வொரு முறையும் ஒடுக்குபவர் போடும் கூச்சல்கள்தான் இவை.
ஆதிக்க மனப்பான்மை இல்லாவிட்டால் எதற்குப் பயப்பட வேண்டும்?
இந்து திருமணச் சட்டம் 1955இல் கொண்டுவந்தபோது பழைமைவாத இந்து ஆதிக்க ஆண்களும், இந்துத்துவ அமைப்புகளும் அலறியடித்துக்கொண்டு அதற்கு எதிராகக் கூச்சலிட்டதை நினைவில் கொள்வோம்.
புதிய விதிமுறைகளின் பின்னணி
சனவரி 17, 2016
“கார்ல் ஸேகன் போல அறிவியலை எழுத வேண்டுமென்பதே என் விழைவு. ஆனால், இறுதியில் இத் தற்கொலை கடிதம் மட்டுமே எனக்கு எழுத வாய்த்திருக்கிறது.
என் பிறப்பே மரணத்தையொத்ததொரு விபத்துதான்.
…………
…………
இக்கணத்தில் நான் காயப்பட்டிருக்கவில்லை. வருத்தங்கொள்ளவும் இல்லை. வெறுமையாய் இருக்கிறேன்.”
பெரிய கனவுகளுடன் படிக்கவந்த ரோஹித் வெமூலா, இப்படியொரு கடிதம் எழுதிவைத்துத் தற்கொலை செய்துகொண்டார்.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. படித்த ரோஹித் வெமூலா, அம்பேத்கரிய மாணவர் அமைப்பின் செயல்பாடுகளில் ஈடுபட்டார். அவர் உட்பட ஐந்து மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவரைத் தாக்கியதாக ஆதாரமற்ற புகார் வருகிறது. அதன் அடிப்படையில் அவர்களின் நிதியுதவி ரத்து செய்யப்பட்டு, விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு, பின்னர் இடைநீக்கமும் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த நிலையில், பல்கலைக்கழக விடுதியில் ரோஹித் தற்கொலை செய்துகொண்டார்.
இதில் நாம் கவனிக்க வேண்டியது, ரோஹித் மீது புகார் வந்தவுடனே பல்கலைக்கழகம் உடனடி நடவடிக்கை எடுத்ததுதான். அதுவும் அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்கள் நேரடியாக இவ்விசயத்தில் தலையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒடுக்கப்பட்டவர்கள் புகார் தரும்போது எந்த உயர்கல்வி நிறுவனமாவது உடனடி நடவடிக்கையில் இறங்கியதா என்பது ஆய்வுக்குரியது.
மே 22, 2019
பாயல் தத்வி, மும்பையில் உள்ள BYL நாயர் மருத்துவக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவி. தொடர்ந்து சீனியர் மாணவிகளால் ஜாதிரீதியாக அவமானப்படுத்தப்பட்டார். அறுவை சிகிச்சை அறையில் மூன்று சீனியர் மாணவிகள், ஊழியர்கள், நோயாளிகள் முன் அவர் அவமானப்படுத்தப்பட்டார். அவமானம் தாங்க இயலாமல் அன்று மாலை தற்கொலை செய்துகொண்டார். மூன்று சீனியர் மாணவிகளும் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இன்றுவரை வழக்கு நடைபெற்றுவருகிறது.
பாயல் தத்வி, ‘பில்’ எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். இன்னும் சொல்லப்போனால் அந்தப் பழங்குடி இனத்திலிருந்து மருத்துவம் படிக்க வந்த முதல் பெண்.
தன் மகள் பலமுறை ஜாதியின் பெயரில் ராகிங் செய்யப்படுகிறார் என்று பாயலின் அம்மா கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்துள்ளார். கல்லூரி முதல்வர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அவரையும் இந்த வழக்கில் பின்னர் சேர்த்தனர். இந்த இரண்டு மாணவர்களின் அம்மாக்களும் (ராதிகா வெமூலா, அபேதா சலீம் தத்வி) இணைந்து 2019இல் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். பல்கலைக்கழக வளாகங்களில் ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறையைக் கோரினர்.
இதற்கு முன்பு உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாட்டுக்கு எதிரான வழிமுறைகள் இல்லையா என்ற கேள்வி எழலாம். இருந்தது.
2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பாகுபாட்டிற்கு எதிரான வழிமுறைகள் மிகவும் பலவீனமானவை.
பாகுபாட்டிற்கு எதிரான புகாரை விசாரிக்க ஒரேயோர் அதிகாரி மட்டுமே இருப்பார். அவர் நடவடிக்கை எடுக்க 60 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம்.
பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர் (SC/ST) மட்டுமே புகார் செய்ய முடியும். புகார் நிரூபனமானால், குற்றவாளிக்கு ஆலோசனை மட்டுமே தரப்படும். தண்டனை இல்லை.
இதுபோன்ற பலவீனங்களைக் கேள்விக்குட்படுத்தி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தனர்.
அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய விதிமுறைகளை உருவாக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது. யுஜிசி அதை இறுதிசெய்து இவ்வருடம் சனவரி மாதத்தில் வெளியிட்டது.
புதிய விதிமுறைகளில் குறைபாடுகள்
தற்போதைய சமவாய்ப்பு மையங்களில் (EOC), எஸ்சி /எஸ்டி பிரிவுகள் ஆகியவற்றுக்குத் தன்னாட்சி அதிகாரம் இல்லை. இவை பல்கலைக்கழக நிர்வாகத்தின் பிடியில் இருக்கின்றன. அதுமட்டுமின்றி இக்குழுக்களின் தலைமைப் பொறுப்பு துணைவேந்தர்கள் வசமே உள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் பட்டியலின – பழங்குடியின ஆசிரியர்களின் எண்ணிக்கை வெறும் 6% மட்டுமே. அதனால் இன்னும் முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் அவர்கள் கையிலே உள்ளது.
குறைகள் இருந்தாலும், இது சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் முதல் படியாகும்.
இவ்வளவு களேபரம் வடஇந்தியாவில் நடக்கிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான கல்லூரி மாணவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். அரசியல் புரிதலற்ற கல்லூரி மாணவர்களை இங்கே உருவாக்கிக்கொண்டிருக்கிறோமா என்ற கவலையும் எழுகிறது.
உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி
உயர் ஜாதியைச் சேர்ந்த மாணவர்களை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஜாதியச் சமூகத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் அவர்களால் வாழ்ந்துவிட முடிகிறது.
“உன் ஜாதி என்ன?”
என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்கள் இல்லை. ஜாதிப் பற்றித் தெரிந்ததும், ஏற்படும் மோசமான பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டியதில்லை.
உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதியப் பாகுபாடுகள் பற்றிய தரவுகளைப் பார்த்தால் தலை சுற்றுகிறது.
தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, கடந்த ஐந்து வருடங்களில் உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாடு 118 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, 2019 – 20 ஆண்டுகளில் 173 புகார்கள் வந்த நிலையில், 2023 – 24 ஆண்டில் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 378 ஆகும்.
ஒட்டுமொத்தமாக 704 பல்கலைக்கழகங்கள், 1553 கல்லூரிகளில் இருந்து 1160 புகார்கள் வந்துள்ளன.
ஜாதிப் பாகுபாடுகள் குறித்த இத்தகைய புகார்களுக்கும் நிறுவனத்திற்குள் இத்தகைய ஆதரவு கிடைக்காத சூழலுக்கும் இதே உயர் பிரிவினர் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?
“Dalits are drugged with ‘victimhood’ ”
“தலித்துகள் ‘பாதிக்கப்பட்டவர்கள்’ என்ற போதை ஊட்டப்பட்டுள்ளனர்.”
சமத்துவ விதிமுறைகளுக்கு எதிராகச் சமீபத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாந்திஸ்ரீயின் கருத்து இது.
ஒருவரைத் தொடர்ந்து குற்றவாளி ஆக்கிக்கொண்டே இருந்தால் முன்னேற முடியாது என்கிறார்.
இந்தியாவில் தலித்தாக வாழ்வதன் சவால்கள் பற்றி உயர் ஜாதியினருக்குக் கிஞ்சித்தும் புரிதல் இல்லை.
மகாபாரத ஏகலைவனுக்குக்கூட கட்டைவிரல்தான் போனது. ஆனால், சுதந்திர இந்தியாவில் ஏகலைவன்கள் வாழக்கூட விடாமல் கொல்லப்படுகிறார்கள்.
தற்போதைய நிலை
யுஜிசி சமத்துவ விதிமுறைகள் வெளியான நாள்முதல், வேறு எதற்கும் போராட வெளியே வராதவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். இந்துத்துவ அமைப்புகள், உயர்ஜாதி மாணவர்களுடன் சேர்ந்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் உருவப்பொம்மைகளை எரித்தனர்.
புதிய விதிமுறையில் SC, ST பிரிவினருடன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் (ஒபிசி) சேர்க்கப்பட்டது போராட்டத்துக்கு முக்கியமான காரணமாகும்.
பிரதமர் நரேந்திர மோடி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் போராட்டத்தில் அவர் கேலிக்குள்ளாக்கப்பட்டார். போராட்டக்காரர்கள் யாரும் இப்போதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்துத்துவ அமைப்புகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக, சனவரி 29, 2026 அன்று புதிய விதிமுறைகளில் தெளிவின்மை மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படும் சாத்தியம் உள்ளதாகக் கூறி, உச்ச நீதிமன்றம் யுஜிசி சமத்துவ விதிமுறைகளை நிறுத்தி வைத்துள்ளது.
இவர்களுக்கு மட்டும் எவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் நீதி கிடைத்துவிடுகிறது!
எது சமூகநீதி?
எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணமாகக் காட்டும் படித்த, மேல்தட்டு ஜாதியினருக்கு அதே அமெரிக்கா எப்படிச் சமூகநீதியை நிலைநாட்டியது என்ற வரலாற்றை வாசித்துப் பார்க்க வேண்டும்.
அமெரிக்காவில் 1961இல் கூட ஆப்பிரிக்க அமெரிக்கக் கல்லூரி மாணவர்கள் பொது நூலகத்தில் நுழைய அனுமதி இல்லை. அதை மீறி மிசிசிப்பி பொது நூலகத்தில் ஒன்பது கல்லூரி மாணவ, மாணவிகள் நுழைந்தனர். பொது அமைதியைக் குலைத்தார்கள் என்று கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், அடுத்த வருடமே அமெரிக்க நீதிமன்றம் பொது நூலகத்தைக் கறுப்பின மக்களும் பயன்படுத்துவதை உறுதி செய்தது. சட்டம் ஒடுக்கப்பட்டவர்களுக்குத் துணையாக நின்றது. இந்தத் தீர்ப்பு அமெரிக்க சிவில் உரிமை இயக்கம் வீரியமாகச் செயல்பட வழிவகுத்தது.
கறுப்பினத்தவரான பராக் ஒபாமா 2009ஆம் ஆண்டு தேர்தலில் வென்று, ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார்.
இந்தியாவில் ஒரு தலித் பிரதமர் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்படுவது இருக்கட்டும், உயர்கல்வி நிறுவனங்களில் நுழையும் தலித் மாணவர்கள் படித்து முடித்து நல்லவிதமாக வெளியே வருவதை உறுதி செய்ய முடியுமா?
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எச்சரித்த சொற்களை ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்வோம்.
இந்தியா வடிவத்தில் மட்டும் ஜனநாயகம், யதார்த்தத்தில் சர்வாதிகார ஆட்சியாக மாறுவதைத் தவிர்க்க வேண்டும்.
தனிமனித சுதந்திரம், சமத்துவத்தை உறுதி செய்யாமல் இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
l muthukumari.15@gmail.com




