உலக இலக்கியத்தை எழுதிய உக்ரைன் அகதி

கஜன்

பிரிட்டிஷ் – உக்ரைனிய எழுத்தாளர் மரினா லெவிகா, உலக இலக்கியத்தில் தனக்கென ஒரு பாதையை வரையறுத்த அரிய படைப்பாற்றல் கொண்டவர். 2025ஆம் ஆண்டின் இறுதியில் 79 வயதில் அவர் மறைந்த செய்தி, உலகம் முழுவதும் உள்ள அவரது வாசகர்களுக்கும் இலக்கிய உலகுக்கும் பெரிய இழப்பாகப் பார்க்கப்படுகிறது.

ஐரோப்பியக் குடியேற்ற வாழ்க்கையின் குழப்பம், குடும்ப அனுபவங்களின் வலி, வரலாற்றின் ஆழம் ஆகியவற்றை நகைச்சுவை வடிவில் சொல்லிய தனித்த குரல் அவருடையது. நகைச்சுவை – சமூகப் பார்வை – வாழ்க்கைத் துயரங்கள், அவரது எழுத்தின் அடையாளமாக இருந்தன. அவை வாசகர்களைச் சிந்திக்கவும், சிரிக்கவும், அதே நேரத்தில் உணர்ச்சியடைய வைக்கும் தன்மையையும் கொண்டவை.

போரின் பின்னணியில் பிறந்த குழந்தை

உலகப் போரின் நிறைவுக்குப் பிறகு எஞ்சிய சிதைவுகளின் நடுவில் விழித்தெழுந்த குழந்தை அவர். 1946ஆம் ஆண்டு ஜெர்மனியின் கீல் நகரில், பிரிட்டிஷ் நிர்வகித்துக்கொண்டிருந்த அகதிமுகாம் ஒன்றில் பிறந்தார் லெவிகா. நாஜிகளால் வலுக்கட்டாயமாக வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட இரண்டு உக்ரேனியர்களின் மகளாகப் பிறந்தார். மரீனாவுக்குச் செமோலினா சாப்பிட மிகவும் பிடித்திருந்ததால், வீட்டில் அனைவரும் அவளை “மரீனா செமோலினா” என்று அழைத்தார்கள் (Semolina என்பது குழந்தைகள் சாப்பிடும் மென்மையான புட்டிங் போன்றதோர் உணவு).

வாழ்க்கையின் முதல் அத்தியாயத்தைப் போரின் புண்களுடனும், இடம்பெயர்வின் நிர்ப்பந்தத்துடனும் தொடங்கினார். உக்ரைனிய வேர்களைக் கொண்ட அவரது பெற்றோர், பாதுகாப்புக்காகவும் வாழ்வாதாரம் தேடியும் இங்கிலாந்தில் குடியேற வேண்டிய சூழலைச் சந்தித்தனர். லெவிகாவின் குழந்தைக் காலம், குடியேற்றக் குடும்பங்களின் வழக்கமான சிக்கல்கள், புதிய அடையாளத்தை உருவாக்க முயலும் போராட்டம், இரண்டு கலாச்சாரங்களுக்கிடையில் வாழ வேண்டிய தவிப்பு ஆகியவற்றால் நிரம்பியது. இந்த அனுபவங்களே அவர் பின்னர் எழுதிய கதைகளின் அடிப்படை சாரமாக அமைந்தன.

மரீனா இங்கிலாந்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். பள்ளியில் சில சிறுவர்கள் அவளைத் தொந்தரவு செய்தனர். அவள் தன் முடியைக் குட்டையாகச் சுருட்டிப் பின்னியிருந்ததால், அதைப் பிடித்து இழுக்கும் விதமான தொல்லையும் செய்தார்கள். ஜெர்மனியில் பிறந்ததற்காக, அவர்கள் ‘நீ ஒரு ஜெர்ரி’ என்று கேலி செய்தனர் (“நாங்கள்தான் யுத்தத்தில் வெற்றி பெற்றோம்” என்ற வகையில்). உக்ரைன் பற்றி யாருக்கும் தெரிந்ததில்லை என்பதால், ‘நீ ஒரு ரஸ்கி, கம்யூனிஸ்ட்’ எனவும் அவளைப் பழித்தனர்.

இரண்டு உலகப் போர்களின் காலங்களில் பிரிட்டிஷ் சிப்பாய்கள் ஜெர்மனிய சிப்பாய்களைச் “Jerry” என்று கூப்பிட்டனர். அந்தக் காலத்தில் ஜெர்மன் சிப்பாய்களின் ஹெல்மெட் வடிவம் ‘ஜெர்ரி கேன்’ போல இருந்ததால், பிரிட்டிஷ் சிப்பாய்கள் கேலியாக “Jerry” எனக் கூறினர். அக்காலகட்டத்தில் ஜெர்மன் ஹெல்மெட்டும் ‘jerry can’ என்ற எரிபொருள் குடுவையும் ஜெர்மன் இராணுவத் தொழில்நுட்பத்தின் முக்கிய அடையாளங்களாகப் பார்க்கப்பட்டன.

கல்வி மற்றும் எழுத்து

இங்கிலாந்தில் Keele பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் தத்துவம் படித்து, பின்னர் York பல்கலைக்கழகத்தில் சமூக ஆராய்ச்சியில் உயர் கல்வி பெற்ற லெவிகா, நீண்ட காலம் கல்வி மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டார். சமூக நீதியின்மை, தொழிலாளர் சுரண்டல், கலாச்சார வேறுபாடுகள், ஏழ்மை போன்ற பிரச்சினைகள் பற்றிய அவரது பார்வை மிகத் தெளிவானது. எழுத்தாளராவதற்கு முன்பே, அவருடைய சமூக ஆராய்ச்சி வாழ்க்கை மனிதநேயப் பார்வையை மேம்படுத்தியிருந்தது.

நாவலாசிரியராக மாறுவதற்கு முன்பு, அவர் ஷெஃபீல்ட்  ஹாலம் பல்கலைக்கழகத்தில் (Sheffield Hallam University  – SHU) மீடியா துறையில் விரிவுரையாற்றினார். அக்காலகட்டத்தில், அவர் படைப்பூக்க எழுத்துப் பாடநெறியில் சேர்ந்தார். அதில் பயின்ற பின்னர் A Short History of Tractors in Ukrainian எனும் நாவலாக வெளிவந்த தனது கையெழுத்துப் பிரதியை மேலும் செம்மைப்படுத்தினார்.

முதல் நாவல்

லெவிகாவின் இலக்கியப் பயணம் 59ஆவது வயதில்தான் ஆரம்பமானது. அவரது முதல் நாவல் ‘A Short History of Tractors in Ukrainian’ (2005) வெளிவந்தவுடனேயே பரபரப்பை ஏற்படுத்தியது. நகைச்சுவை, குடும்ப அரசியல், குடியேற்றச் சிக்கல்கள், உக்ரைனிய வரலாறு என அனைத்தையும் ஒரே நூலில் இணைத்தார். குறிப்பாக, கிழக்கு ஐரோப்பாவின் அரசியல், குடியேற்ற வாழ்க்கையின் துயர்மிகு நிஜங்கள், மனித உறவுகளின் சிக்கல்கள் ஆகியவை அந்நூலில் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்நாவல், லூயிகாவின் வாழ்க்கை அனுபவங்களை நேரடியாகத் தொட்டது – சகோதரிப் பிரச்சினைகள், தாயை இழந்த துயரம், மேலும் தன்னைவிட மிகவும் இளைய பெண்மணியைத் திருமணம் செய்யும் அவரது பொறியாளர் தந்தை. அந்தப் பெண்மணியை வீட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மகள்கள் தீட்டும் திட்டங்களே கதையின் நெடுவரிசையை உருவாக்கின.

இது நேரடியாக அகதிகளின் வாழ்க்கையை முழுவதும் மையப்படுத்தவில்லை என்றாலும், உக்ரேனிய அகதி குடும்பத்தின் தலைமுறை அனுபவங்கள், நாஜி – சோவியத் ஆட்சிக் கால துயரங்கள், போருக்குப் பிறகு மேற்கு நாடுகளுக்குக் குடியேற்றம் போன்றவை கதையின் மூலம் வெளிப்படுகின்றன. நாயகியின் பெற்றோர் இரண்டாம் உலகப் போரின்போது கடுமையான கட்டாய வேலைகள் காரணமாக உக்ரைனிலிருந்து ஜெர்மனி, பின்னர் இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்தனர். நகைச்சுவை கலந்த புலம்பெயர் சமூக அடையாளம் (Diaspora Identity) என்ற கரு மிக முக்கியமாகக் காணப்படுகிறது.

இந்தப் படைப்பு புக்கர் பரிசின் நீண்ட பட்டியலில் (Booker Prize Longlist) இடம்பெற்றதுடன் 35க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. நகைச்சுவையும் துயரமும் கலந்த அரிதான நாவல் என விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. வூட்ஹவுஸ் பரிசின் முதல் 16 ஆண்டுகளில் அவ்விருதைப் பெற்ற ஒரே பெண் எழுத்தாளர் லூயிகா. ‘A Short History of Tractors in Ukrainian’ நாவலின் பிரபலமும் பாராட்டும், நவீன பிரிட்டிஷ் புனைவுலகில் அவரைத் தனிப்பட்ட குரலாக உருவாக்கியது.

குடியேற்றக் கதைகளின் வல்லுநர்

அதன் பின்னர் வெளியான ‘Two Caravans’ (Strawberry Fields), ‘Various Pets Alive and Dead’, ‘Lubetkin Legacy’, ‘The Good’, ‘The Bad and The Little Bit Stupid’ போன்ற படைப்புகள், குடியேற்றத் தொழிலாளர்கள், தொழிலாளர் வர்க்கம், சமகால அரசியல், பிரிட்டிஷ் சமுதாயத்தின் வேறுபாடுகள் போன்றவற்றை விரிவாகப் பதிவு செய்தன.

Two Caravans / Strawberry Fields (2007) – அகதி/குடியேற்றத் தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றிப் பேசும் நூல்.  இங்கிலாந்தின் தோட்டங்களில் பணி செய்ய வரும் உக்ரேனிய, போலிஸ், ஆப்பிரிக்க, சீன குடியேற்றத் தொழிலாளர்கள்தான் கதையின் மையம். அவர்கள் எதிர்கொள்ளும் குறைந்த சம்பளம், வசிப்பிடச் சிரமங்கள், சுரண்டல்,  சட்டப்பூர்வ நிலை இல்லாததால் வரும் பயம், மனித கடத்தல் ஆகியவை பற்றிப் பேசுகிறது. இவர்களின் வலியையும் துயரத்தையும், அதே நேரத்தில் அவர்களின் நகைச்சுவை உணர்வையும் நம்பிக்கையையும் லெவிகா மிக உண்மையாகவும் அழகாகவும் எழுதுகிறார். பல்வேறு நாடுகளிலிருந்து வரும் மனிதர்கள் ஒரே இடத்தில் வாழ முயல்வதின் மூலம் மனித ஒற்றுமை என்ற கரு படைப்பின் அடிநாதமாக உள்ளது.

Various Pets Alive and Dead (2012) – நேரடி அகதி வாழ்க்கை இல்லாவிட்டாலும், இடமாற்றம், பண்பாட்டு மோதல், இரண்டாம் தலைமுறை குடியேற்ற அனுபவம் போன்றவை பதிவுசெய்யப்பட்டுள்ளன. இது லெவிகாவின் புலம்பெயர் பின்னணியைக் காட்டும் இன்னொரு படைப்பு என்று சொல்லலாம்.

அகதி வரலாற்றின் மனித முகம்

லெவிகாவின் எழுத்தில் இலகுவான நகைச்சுவை ஒருபக்கம், அதே நேரத்தில் ஆழமான துயரமும் வேதனையும் மறுபக்கம் என இரண்டும் சேர்ந்து தனித்துவமான உணர்வுப் பிணைப்பை உருவாக்குகின்றன. இது அவரை மற்ற எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்தியது. மனிதர்கள் எவ்வாறு சிரிப்பின் பின்னால் துயரத்தை மறைக்கிறார்கள் என்பதை அவர் நுணுக்கமாகக் காட்டினார்.

லெவிகாவின் எழுத்தில் உக்ரைன் – ரஷ்யா வரலாறு ஒரு கண்ணாடி போலப் பிரதிபலித்தது. அவரது பெற்றோர் சோவியத் ஒன்றியத்தின் உருவாக்கத்தையும், அதன் சிதைவையும் நேரில் பார்த்தவர்கள். தனது பெற்றோர் வாழ்நாள் முழுவதும் பார்த்த அரசியல் மாற்றங்கள், லெவிகாவின் எழுத்தின் அடிநாதமாக உள்ளது. இந்த வரலாறு, அவரது எழுத்தில் ஒரு காயமாகவும், நினைவாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது. அதனால், அவர் எழுதும் ஒவ்வொரு கதையும் வெறும் கற்பனை அல்ல; மறைக்கப்பட்ட வரலாற்றின் சாட்சியம்.

“மரீனாவைத் திருத்தி, வெளியிடுவதில் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி இருந்தது, உண்மையான தனித்துவம் கொண்டவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர்; மரீனா அவர்களில் ஒருத்தி. நகைச்சுவையுடனும், வித்தியாசமான சிந்தனையுடனும், கற்பனைக்குப் புலப்படாத சிறந்த அரசியல் பார்வையுடனும் இருந்தவர். சில நேரங்களில் ‘அசாத்தியமானவள்’, அதே நேரத்தில் அற்புதமானவள். அவரின் போராட்ட மனப்பான்மை கொண்ட புனைவுகள், காலங்களையும் இடங்களையும் அற்புதமாகப் பதிவு செய்த தீவிரமான – நகைச்சுவையான இலக்கியங்களாக என்றும் வாழும்” என்று மரீனா லெவிகாவின் முன்னாள் பதிப்பாசிரியர், ஜூலியட் அனன் நினைவுகூர்ந்து கூறினார்.

நோயுடனான போராட்டம்

அவரது மறைவுக்கான முக்கிய காரணம் Multiple System Atrophy (MSA) என்ற அரிதான நரம்பியல் நோயாகும். கடந்த வருடம் இறக்கும் வரை பல ஆண்டுகள் இந்த நோயுடன் போராடினார். தன் நிலையைப் பற்றிப் பேசும்போது, “நண்பர்களின் ஆதரவிலும், அந்நியர்களின் கருணையிலும் நான் மிகவும் நம்பிக்கையுடன் வாழ்கிறேன். இந்த நிலைமையின் சில அரிதான நன்மைகளில் ஒன்று, மனிதர்களின் சிறந்த பக்கத்தை நான் காணும் வாய்ப்பு கிடைப்பதாகும்” என்று கூறினார். மேலும், “நான் மெதுவாக எழுதுகிறேன், சில சிறிய தவறுகள் கூட புதிய எண்ணங்களைப் படைப்புகளாகத்  திறக்க வழிவகுக்கின்றன. சிரிக்கத் தோன்றாத நாட்களில்கூட இது எனக்கொரு சிறிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது” என்று அவர் தெரிவித்தார்.

விமர்சனமான அம்சங்கள்

அவரது எழுத்துகளில் ‘ப்ளாக் காமெடி’ (Black comedy) முக்கிய பாணியாகக் காணப்படுகிறது. அதில் ஊடுருவியுள்ள கடுமையான சமூக – அரசியல் அம்சங்கள் (உள்நாட்டிலிருந்து இடம்பெயர்வு, அகதி வாழ்க்கை, குடும்பப் போராட்டங்கள்) நுட்பமாகப் பின்னப்பட்டுள்ளன. இதனைச் சில மதிப்பீட்டாளர்கள் ‘நையாண்டி எழுத்து’ (Satire) எனக் கருதினாலும், தீவிரமான சமூகப் பிரச்சினைகள் நகைச்சுவை மூலமாக மங்கிப்போய்விடுமோ என்ற கவலை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. அவரின் ‘கலப்பின அடையாள’ (hybrid identity) கதைகள் பெரிதும் பாராட்டப்பட்டாலும், மற்றொரு பக்கம் சிலர் அவை பின்புல அரசியல் சிக்கல்களை மிக விரைவில் எளிதாக்கிவிடுகின்றன என்று விமர்சிக்கிறார்கள். குறிப்பாக, அகதிகள் எதிர்நோக்கும் கடுமையான வெறுப்பும் வன்முறையும் நகைச்சுவையாகச் சித்திரிக்கப்படும்போது, அந்தத் தீவிரமான உணர்வுகளைப் புறக்கணித்துவிட்டதாக உணரும் வாசகர்களும் உள்ளனர்.

தன் சுயாதீனமான விமர்சனத்தில், “Valentina -வின் ‘DIY Ukrainian’ பேச்சுநடை, மொழியியல் பாணிகள், சில வாசகர்களுக்கு, புரிந்துகொள்வதற்குச் சற்று கடினமாக இருந்த”தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (DIY Ukrainian என்றால், உக்ரைன் மக்கள் தாங்களே கற்றுக்கொண்ட, தங்களின் அனுபவத்தில் இருந்து உருவான செயல்முறை/ பேச்சு/ அணுகுமுறை ஆகும்).

மரினா லெவிகாவின் விவாதங்கள் பெரும்பாலும் அவரது நகைச்சுவை + சமூக அரசியலின் கலவையாக (Satirical + Political) உருவாகியுள்ளன. அவர் “கடுமையான உண்மைகளை நகைச்சுவையாகச் சொல்லுவதால்” சிலர் அதனைப் பாராட்டுகிறார்கள், சிலர் கருத்துகளின் சிக்கலான தன்மை அழிந்து, விவாதத்திற்கு உரிய நுணுக்கங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசியல் நிலைப்பாடு

லெவிகாவின் பெரும்பாலான நாவல்கள், அரசியல் கருத்துகளை நேரடியாகச் சொல்லாமல், நகைச்சுவை, படைப்பின் எதிர்முரண், மனித உறவுகளின் முரண்பாடுகள் வழியே அரசியல் சாடல்களைக் கொண்டு வரும். லெவிகா, உக்ரேனிய அகதி குடும்பத்தில் பிறந்ததால், குடியேற்ற எதிர்ப்புக் கருத்துகளுக்கு அவர் எப்போதும் எதிர்ப்புத் தெரிவித்தார். அவரது நாவல்களில் குடியேற்றத் தொழிலாளர்களின் நெருக்கடிகளை — “குடியேறிகள் சுமை அல்ல, அவர்கள் பொருளாதாரத்தின் முக்கிய அங்கம்” என்று விவரிப்பது அவரது அரசியல் நிலைப்பாட்டைக் காட்டுகிறது.

2020ஆம் ஆண்டு வெளியான ‘The Good, the Bad and the Little Bit Stupid’ என்ற நூல், Brexit -ஐ வெளிப்படையாக நகைச்சுவை பாணியில் விமர்சிக்கிறது. Brexit என்பது தவறான தகவல்களும் உணர்ச்சிவசப்பட்ட அரசியலும் இயக்கிய முடிவு, பொதுமக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட தீர்மானமல்ல. குடியேற்ற எதிர்ப்பு மனநிலையைத் தூண்டும் ஆபத்தான அரசியல் திட்டமாகவே அது சித்திரிக்கப்படுகிறது என்பதுவே அவரின் நிலைப்பாடு. லெவிகா தன்னை Pro-EU / anti-Brexit சிந்தனையாளர் என வெளிப்படையாகக் காட்டிக்கொண்டார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உக்ரேனியர்கள் சந்தித்த இடர்பாடுகள், ரஷ்யப் பேரரசு மற்றும் சோவியத் ஆட்சியின் ஒடுக்குமுறைகள் ஆகியவை அவரது குடும்ப அனுபவங்களில் இருந்ததால், ரஷ்ய அதிகார விரிவாக்க அரசியலை அவர் விமர்சித்தார். உக்ரைனின் தன்னாட்சி, தேசிய அடையாளம், சுதந்திரம் ஆகியவற்றை அவர் ஆதரித்தார். உக்ரேனின் துன்பம் என்பது கடந்த வரலாற்றை மீண்டும் நினைவூட்டும் காயம் மட்டுமல்ல; அது இன்றும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் நிஜம்” என அவர் பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளார்.

ஒரே ஆட்சிமுறை (Ideology) ஒரே தீர்வு அல்ல. அதிகாரம் சமமாகப் பகிரப்படும் அமைப்பும், தொடர்ந்து பரிசோதனை செய்யும் அணுகுமுறையும் அவசியம் என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறார். அதிகாரம் கண்காணிக்கப்பட வேண்டும். அரசியல் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், குடிமக்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர் அதிகாரவாத அரசியல் (authoritarian politics) குறித்து எப்போதும் எச்சரிக்கை மனப்பான்மையிலேயே இருந்து, அதன் ஆபத்துகளை இடையறாது எடுத்துக் கூறிவந்தவராக இருந்தார்.

முடிவுரை

மரினா லெவிகா தனது வாழ்நாளில் சில நாவல்களே எழுதியிருக்கிறார்; ஆனால் ஒவ்வொரு நாவலும் முழு வரலாற்றைப் போன்றது. அவரது படைப்புகள் நகைச்சுவை, அனுதாபம், அரசியல், கலாச்சார மாற்றம், மனிதத் துடிப்பு என எல்லாம் மென்மையுடனும் கூர்மையான பார்வையுடனும் வெளிப்படுத்தப்பட்டவை. மரினா லெவிகா எழுதிய நாவல்கள், குடியேற்றப்பட்ட மக்களின் போராட்டங்களை, அவர்களின் நம்பிக்கைகளை, துயரங்களை, நகைச்சுவை கலந்த வாழ்வியல் அனுபவங்களை மிக நுணுக்கமாகச் சொல்லுகின்றன.

ஐரோப்பாவின் அரசியல் நிகழ்வுகளும், சாதாரண மக்களின் அன்றாட வாழ்வும் எவ்வாறு கலந்திருக்கின்றன என்பதை அவர் காட்டினார். மக்களின் கதைகள் – குறிப்பாக இடம்பெயர்ந்தோரின் கதைகள் – வரலாற்று நூல்களில் இல்லாவிட்டாலும், அவையே மனிதநேயத்தின் உண்மை ஆதாரங்கள் என்பதை அவரது எழுத்துகள் உணர்த்துகின்றன. அகதி முகாமில் பிறந்து, உலகம் முழுவதும் வாசிக்கப்பட்ட எழுத்தாளராக உயர்ந்த அவரது பயணம், இலக்கிய உலகில் மட்டுமல்ல; மனித உறவுகளிலும், சமூக உணர்விலும் தனித்தக் குரலாக நிலைத்திருக்கிறது. சிரிப்பையும் சிந்தனையையும் ஒரே நேரத்தில் தந்த அசாதாரண கதையாளராக அவர் என்றும் நினைவில் நிற்பார்.

l gajan2050@yahoo.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger