அன்று பள்ளிக்கூடத்தின் கடைசி வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது ஆசிரியர் ஓர் அறிக்கையைப் படிக்கிறார். ‘நாளை முதல் ஐந்து நாட்கள் பள்ளி விடுமுறை. நமது பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள கோயிலில் திருவிழா காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.’ இதைக் கேட்ட மாணவர்கள் சந்தோஷத்துடனும் ஆரவாரத்துடனும் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்திலிருந்த அவன் “நானும் திருவிழாக்குப் போவேன்” என்று கூறி தனது நண்பர்களுடன் சந்தோஷமாக வீட்டுக்குச் சென்றான்.
திருவிழா கனவுகளுடன் மிகுந்த மகிழ்ச்சியில் எப்போது விடியும் என்று எண்ணிக்கொண்டே தூங்கினான். காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு, தன்னிடம் உள்ள புது ஆடைகளை அணிந்துகொண்டு கண்ணாடியைப் பார்த்துத் தலையைச் சீவிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த அவனது பாட்டி “எங்கடா… ராஜா போல கிளம்பி எங்க போகப் போற?”
“திருவிழாக்குப் போகப் போறேன் பாட்டி” என்று கூற,
“டேய் நீ அங்க எல்லாம் போகக்கூடாதுடா” என்று பாட்டி சொல்ல
“பாட்டி, ராஜா எப்படித் திருவிழாக்குப் போகாம இருக்க முடியும்” என்று சிரித்தான்.
m
திருவிழாவுக்குச் சென்றவன் தனது நண்பர்களுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் மற்ற சிறுவர்கள் கோயிலுக்குள் செல்ல, இவனும் பின்செல்ல “உனக்கு இங்கு அனுமதி கிடையாது” என்று ஒருவர் கனத்தக் குரலில் கூறி இவனைத் தள்ளிவிடுகிறார். தனது நண்பர்கள் அனைவரும் உள்ளே செல்ல, தான் மட்டும் வெளியே என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்திலேயே நடக்க ஆரம்பித்தான்.
கோயில் அருகே பறையிசை மேளதாளங்கள் அடிப்பதைக் கேட்டு, தன்னை அறியாமல் நடனமாடத் தொடங்கினான். அனைவரும் அவனைப் பார்த்துச் சிரிக்க, தலை குனிந்து மறுபடியும் குழப்பத்திலேயே நடந்தான்.
இவனைப் பார்த்து அனைவரும் ஒதுங்கிச் சென்றார்கள். அவன் தனது ஆடைகளைப் பார்த்து, ‘நானும் புது ஆடைகளைத்தான் அணிந்திருக்கிறேன். எதனால் ஒதுங்கிப் போகிறார்கள்?’ என்று தெரியாமல் மறுபடியும் குழம்பினான்.
கரகாட்டம் ஆடுவதற்காக வந்த பெண்கள் அனைவரும் அவனைப் பார்த்து, ‘அழகாக இருக்கிறான்’ என்று தூக்கி முத்தமிட, ‘சிலர் ஒதுங்கிச் செல்கிறார்கள், சிலர் என்னை முத்தமிடுகிறார்கள். ஏன் இப்படி…’ புரியாமல் நடந்துகொண்டிருந்தான்.
கோயிலுக்கு வந்திருந்த கூத்தாட்டக் கலைஞர்கள் அவனைப் பார்த்து “கிருஷ்ணர் வேடத்திற்குச் சரியாக இருப்பான்.” என்று ஆச்சரியமாகக் கூற அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
திருவிழாவில் அன்னதானம் நடந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும், ‘பசிக்கிறது, சாப்பிட்டுவிடலாம்’ என்று உள்ளே சென்றான். அங்கே அனைவரும் அமரும் இடத்தில் அல்லாமல், தனியாக கீழே ஓரிடத்தில் அவனுக்கு உணவளிக்கப்பட்டது. இதனால் மேலும் குழப்பமடைந்து அங்கிருந்து வெளியேறினான்.
இதுவரை நடந்த சம்பவங்களை எல்லாம் ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தான். அப்போது தனக்கு நேர் எதிரே உள்ள ஒரு சாமியின் சிலையைப் பார்த்தான், தன்னுடைய கால்களையும் பார்த்தான். இருவர் கால்களிலும் செருப்பு இல்லை, ‘ஒருவேளை நான் கடவுளாக இருப்பேனோ’ என்று கற்பனை பண்ணிக்கொண்டு நடந்ததை எல்லாம் மனதுக்குள் அசைபோட்டான்.
கோயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டது, ‘ஒருவேளை நான் கடவுள் என்று அவனுக்குத் தெரியாது போலஞ் இல்லை, ஒரு கடவுள் இருக்கும் இடத்தில் இன்னொரு கடவுள் வரக்கூடாது போல’ என்று நினைத்துக்கொண்டான்.
‘பறையிசை மேளதாளங்களைக் கேட்டுத்தான் கடவுள் வந்து நடனமாடுகிறது. ஒருவேளை அதனால்தான் நானும் நடனம் ஆடியிருப்பேன்’ என்று யோசித்துச் சிரித்தான்.
Illustration : Tribes India Bhopal
‘கடவுளின் ஊர்வலங்கள் வரும்போது அனைவரும் ஒதுங்கித்தானே செல்கிறார்கள். அதனால்தான் என்னைப் பார்த்தும் ஒதுங்கிச் செல்கிறார்களோ!’ தன்னைக் கடவுளாகவே நினைக்க ஆரம்பித்துவிட்டான்.
‘கரகாட்டப் பெண்கள் என்னைக் கடவுள் என்று கண்டுபிடித்துவிட்டதால் முத்தமிட்டார்கள் போலஞ் கூத்தாடும் கலைஞர்களும் என்னைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.’
‘கோயிலில் சாமிக்குப் படையல் என்பது தனியாகத்தானே கொடுப்பார்கள். அதனால்தான் எனக்கும் தனியாகக் கொடுத்தார்களோ’ முழுவதுமாகத் தன்னைக் கடவுளாக நினைத்துக்கொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில், சுட்டெரிக்கும் வெயிலில் கால்களில் செருப்பின்றி, மரத்தின் நிழலில் ஒதுங்கி ஒதுங்கி, நாய்கள் தண்ணீர் குடிக்கும் தொட்டியிலிருந்து தண்ணீரை எடுத்துக் கால்களில் ஊற்றிக்கொண்டு வேகமாக ஓடிச் சென்று தனது பாட்டியிடம் “நா போம்போது ராஜாவாப் போனேன். வரும்போது கடவுளா மாறி வந்துருக்கேன்” என்று தனது முதல் நாள் திருவிழா அனுபவத்தைக் கூறினான்.
அன்றிரவு தூங்கும் முன்பு “பாட்டி இன்னிக்கு நம்ம ஊர் பக்கம் சாமி ஊர்வலம் வருமா” என்று கேட்டான். அவன் மனம் கஷ்டப்படக் கூடாதென்று “கண்டிப்பா வரும்” என்று பாட்டி கூற, அவன் “கண்டிப்பா வராது. ஏன்னா ஒரு கடவுள் இருக்குற இடத்துல இன்னொரு கடவுள் எப்படி வரும்” என்று மகிழ்ச்சியில் நடனமாடிக்கொண்டு வானத்து நட்சத்திரங்களைப் பார்த்துச் சிரித்தான்.
m
நேற்று ராஜாவாகக் கிளம்பியவன் இன்று கடவுளாகத் திருவிழாவுக்குச் சென்றான்.
பாட்டி, “டேய் எங்கடா போற?”
“திருவிழாக்கு பாட்டி. சாமி இல்லாம எப்படித் திருவிழா நடக்கும்! நான் போய் பாத்துட்டு வறேன்.”
“சரி நில்லுடா, இந்தா” என்று ஒரு ரூபாயைக் கையில் கொடுத்து, “திருவிழால நிறைய கடைங்க இருக்கும். இத செலவுக்கு வச்சுக்கோ” என்றார் பாட்டி. சரி என்று வாங்கிக்கொண்டு சென்றான்.
திருவிழா என்பதால் அனைவரும் கடவுளுக்குப் படைப்பதற்காக வாழைப்பழம், கற்பூரம் போன்ற பூஜை பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தார்கள். அந்தக் கடையின் அருகில் ஒருவர் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தார். அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. ‘நமக்காக எல்லாரும் நிறைய பொருள் வாங்குறாங்க. அதனால நம்மகிட்ட இருக்க பணத்த இவருக்குக் கொடுத்துடலாம்’ என்று முடிவுசெய்து தன்னிடம் இருந்த ஒரு ரூபாயைக் கொடுத்தான்.
“ராஜா நீ நல்லா இருக்கணும்” என்று அவனைப் பார்த்துப் பிச்சைக்காரர் கூற, ‘ராஜாவா?’ என்று மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தான்.
அப்படியே நடந்து சென்று மரத்தின் கீழ் அமர்ந்தான். மிகுந்த தண்ணீர் தாகம் ஏற்பட்டதால் அந்த வழியே வந்த பெண்ணிடம் “அக்கா குடிக்கக் கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?” என்று கேட்டான். தன்னிடமிருந்த தண்ணீர் பாட்டிலை அவனிடம் கொடுத்தார் அவர். தண்ணீரைக் குடித்துவிட்டு பாட்டிலை அந்தப் பெண்ணிடம் கொடுக்க முற்பட்டான். அவரோ “வேண்டா தம்பி, நீயே வச்சுக்கோ” என்று கூற, அவனுக்கு எதுவும் புரியவில்லை.
குழப்பங்களுடன் அமர்ந்திருந்தபோது, திருவிழாவிற்கு வந்திருந்த திருநங்கைகளைப் பார்த்து நிறைய பேர் கைதட்டிச் சிரித்தார்கள், சைகை மொழியால் அவமதித்தார்கள். திருநங்கைகள் அவன் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி வந்தார்கள். அவனோ கன்னத்தில் கை வைத்து குழப்பத்துடன் அமர்ந்திருந்தான். “ஏன் சாமி இவ்வளவு சோகமாக இருக்க?” என்று திருநங்கைகள் கேட்க, ‘சாமி’ என்று சொன்னதால், மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல், “உங்களுக்கு என்ன பிரச்சன. நான் சரி செய்றேன். நான்தான் சாமியாச்சே” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
மீண்டும் தன் நண்பர்களைச் சந்தித்தவன், அவர்கள் அனைவரும் தமது அம்மாக்களுடன் வந்திருப்பதைக் கவனித்தான். நண்பர்கள் அனைவரும் “எங்க அம்மா கோயில்ல பொங்கல் வைக்கப் போறாங்க. உங்கள் வீட்ல இருந்து யாரும் வரலையா” என்று அவனிடம் கேட்க, என்ன சொல்வதென்று தெரியாமல் வேகவேகமாக வீட்டை நோக்கிச் சென்றான்.
பாட்டியோ அவன் வருவதைப் பார்த்தவுடன் பொங்கலை எடுத்து வைத்தார்.
“பாட்டி நீ ஏன் கோயிலுக்குப் பொங்கல் வைக்க வரல்ல” என்று கோபமாகக் கேட்டான். பாட்டி சிரித்துக்கொண்டே “என் கடவுள் இங்க இருக்கும்போது நான் எதுக்கு அங்க போய் பொங்கல் வைக்கணும். அதனாலதான் வீட்லயே செஞ்சேன். இந்தா” என்று சொன்னதும், “ஆமா நாங்கூட மறந்துட்டேன்” என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்து, பாட்டி சர்க்கரைச் சேர்க்க மறந்த பொங்கலை, உற்சாகமாக அள்ளிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.