பொட்டக்கம்மா
வளந்த பனையில வளரி வீசி
ஒடஞ்ச பானையில ஒழுகுன கள்ள மண்டி
பொழுது கெறங்கையில போத தலைக்கேறி
வைர லாடமடிச்ச வெள்ள நல்லக் குதிரையில
தங்க நல்லக் கடிவாளம் புடிச்சு
பொட்டக் கம்மாக் கரமேல அடிமேல அடிவச்சு
முங்கி குளிக்க முனியன் மட தேடி போகயில
கம்மாயில கும்மாளம் போட்ட ஊருசனம்
பரி ஏறி வந்தாலும் முனியன் பறையந்தான்
புலி ஏறி வந்தாலும் புலையன் புலயந்தான்
நீ தண்ணீல கால வச்சா தண்ணி தீட்டாகும்
மீறி மிதிச்சாலோ குளிச்சாலோ பறக்குடி தீயாகும்
ஊருசனம் ஒன்னுகூடி கரையேறி எச்சரிக்க
கலங்குன கண்ணோட கடமடையில மண்டியிட்டு
முனியன் என்ன நெனச்சானோ தெரியல
ஒத்த மூச்சுல மொத்தக் கம்மாத் தண்ணிய
ஒத்த ஆளா உறிஞ்சி குடிச்ச நாள்ல இருந்து
ஒக்கலி மொட்டக் கம்மாவாவே கெடக்குது பாரு
எங்கூருப் பொட்டக் கம்மா…
m
ஆணவக் கொலைகளின் காலம்
அந்த வறண்ட நிலத்தில் எப்போதும் பெய்யாத மழை
அன்று அப்படிப் பெய்திருக்கக் கூடாது
நமது ஆடுகளின் பின்னே அந்தப் பாலத்திற்கு அடியில்
தொப்பலாக நனைந்த நாமும்
மழைக்கு ஓடி ஒதுங்கியிருக்கக் கூடாது
அதுவரை கூட பிரச்சினை இல்லைதான்
அதற்குப் பிறகு அந்த ஆடும் கிடாவும்
நம் கண்முன்னே புணர்ந்திருக்கக் கூடாது
அப்பொழுது உன்னைப் பார்த்து நானும்
என்னைப் பார்த்து நீயும் அப்படிச் சிரித்திருக்கக் கூடாது
அதுவரை கூட பிரச்சினை இல்லைதான்
மழை விட்டு வானம் வெட்டரிக்கையில்
அவிழ்ந்து கிடந்த பூப்போட்ட பாவாடையையும்
கட்டம் போட்டக் கைலியையும்
அந்த மீசைக்காரரின் நாய் பார்த்துக் குலைத்திருக்கக் கூடாது.
m
முன்பொருமுறை தெய்வமாக்கப்பட்டவளை
விளக்கேத்தி வணங்கிவிட்டு
இந்தமுறை நடுக்குட்டியைத் தேடி
அப்பாவோடு தம்பியும் மாமாவும் தாத்தாவும் இன்னும் சிலரும்
அந்த முழு அமாவாசை இருட்டுக்குள்
அரவமில்லாமல் ஆயுதங்களோடு கிழக்கே சென்றார்கள்
அத்தையும் சித்தியும் அம்மாவோடு சேர்ந்து
அப்பாவின் வேட்டியைக் கிழித்து
மனநிறைவோடு தத்தமது கருத்த தொடைகளில்
நடுக்குட்டிக்கு விளக்கு போட திரி உருட்டுகிறார்கள்
அழுது சுரண்டு கிடந்த அவளிடம்
அப்பாவிடம் இன்னும் பல வேட்டிகள் இருப்பதாக
எச்சரிக்கும் தொனியில் அச்சுறுத்துகிறாள் அம்மா
உறுதியாகவே சொல்லிவிட்டாள் தனக்கும் சேர்த்து திரி உருட்ட…
m
அந்த ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவருக்கு
ரத்தம் அப்படிக் கொதித்தது
அவரது மீசை அப்படித் துடித்தது
அந்தக் காதலை அவரால் ஏற்கவே முடியவில்லை
முடிவெடுத்துவிட்டார் முடித்துவிடுவதென்று
தீட்டுக்கட்டையில் தெள்ளிய மண்ணள்ளி தீட்டி
இடது பெருவிரலில் கீறி சூரியைப் பதமேற்றிக்கொண்டார்
சத்தமில்லாமல் சங்கருக்க மனதில் ஒத்திகை பார்த்தபடி
மீசையை நீவி இடவாரில் சூரியைச் சொருகி
கிழக்கு நோக்கி சைக்கிளை அழுத்தினார்
போகும் வழியில் திறந்திருந்த ரேசன் கடையைக் கண்டதால்
போன வேகத்தில் சைக்கிளை வீட்டிற்குத் திருப்பியவர்
அரிசியும் சீனியும் வாங்க முதல் வரிசையில் இடம் பிடித்தார்
நடக்கவிருந்த ஆணவக்கொலை அன்றொருநாள் தள்ளிப் போடப்பட்டது.
] pa.viduthalaisigappi@gmail.com





