வெட்டு
அன்றாடம்
ஆத்துக்கொமுட்டியும்
காலாண்டுக்கோர்முறை
கண்டங்கத்தரியும்
தவறாது தேய்க்கும்
தலைவெட்டுக்காரி
நாள்பட்ட இளங்கன்னியைக்
கரை சேர்க்க
நாயாய்ப் பேயாய் நானிலமெங்குமலைந்து
நல்வரனொன்றைப் பார்த்தாயிற்று
தா போறேன் தே போறேனெனக் கிடந்தவள்
மனம் நோவ ஏன்
மசிர் மசிரெனக்
கத்துகிறாய் ரத்தினாம்பா…
மாலையெடுத்துப் போட்டு
நெற மரக்கா விளக்குப் பார்த்து
மாங்கல்யம் தொட்டுக்கொடு
ஈனும் கன்றாய்
கொடி தாங்கும் ஆலாய்ச் செழிக்கட்டுமவள்.
களை
நாளு வந்து சாவங்காட்டியும்
நாழியில் போகுமுசுரு
பதுவுசு பட்ட மொளா
எம்பேரு ரெட்ட மொளா என்பவள்களெல்லாம்
நாக்கின்மேல் பல்லைப் போட்டுப் பேசுவாள்கள்
வறுமைக்குப் பொழப்புக்குப் போனால்
கொடுமையைக் கொண்டு வந்திருக்கிறாள்
யார் தலையில் கட்டி
எப்படியோட்டுவது குறைக் காலத்தை
சொல்லென்றாகிவிட்டது
மான அவமானம் பார்த்திருந்தால்
யார்தான் வாழமுடியுமிங்கு
முழுப்பிள்ளையைப் பெத்திடலாம்
அரைப்பிள்ளையைக் கலைப்பதற்கு.