நாம் ஏன் பௌத்தத்தைத் தழுவ வேண்டும்? பகுதி – II

- கச்சாமி

தொடக்கத்தில், தம் மக்களுக்காக ஒரு பாதுகாப்பான கூட்டைச் செய்ய மரச் சுள்ளிகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்த நீலவானப் பறவையான அம்பேத்கர், இறுதியில் செல்லரித்த கறையான் புற்றை உடைத்து அதில் பௌத்தம் என்னுமொரு கருங்கல் கோட்டையைக் கட்டி முடித்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அடித்து நொறுக்கி இடித்துச் சிதைத்துத் தரைமட்டமாக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட தாய்மண்ணை மீட்டெடுத்துக் கட்டியெழுப்பிய பகுத்தறிவுக் கோட்டைக்குள் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் போன்ற தூண்களால் கட்டமைத்துத் தூக்கி நிறுத்தினார். இக்கோட்டைச் சுவர்களில் மஹாயானம் இருக்காது; ஹீனயானம் இருக்காது; வஜ்ராயனம் இருக்காது உன்னதமானச் சமூக விழுமியங்களைக் குழைத்துக் கட்டியெழுப்பிய நவீனக் காலத்து நவயானக் கோட்டை இதுவென்று பிரகடனம் செய்தார். கட்டற்றுப் பாய்ந்தோடும் காட்டாற்று வெள்ளத்தையே திசைதிருப்பும் ஆற்றல் வாய்ந்த கற்பாறை நெஞ்சம்கொண்ட அம்பேத்கர் கட்டியெழுப்பிய கருங்கல் கோட்டைக்குள் எவரும் துணிந்து நுழையலாம். கெடுவாய்ப்பாக, அம்பேத்கரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு செங்கோட்டைக்குப் போக நினைப்பவர்கள்கூட இந்தக் கருங்கல் கோட்டைக்குள் கால் வைப்பதில்லை. கோட்டைக்குச் சொந்தக்காரர்களும் பெரும்பாலும் குடிசைகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இன்னும் சிலர், கோட்டையைப் பெயர்த்தெறியும் எண்ணத்துடன் தந்திரமாகத் தத்துவ எறிகணைகளை வீசுகின்றனர். ‘இந்தக் கோட்டைச் சுற்றுச் சுவரின் மூன்றாவது வரிசையிலிருக்கும் நான்காவது கல் உதிர்ந்து விழுந்துவிடும்’ என்று எவரேனும் கூப்பாடு போட்டால், ‘அக்கோட்டையின் அடிக்கட்டுமானத்தைச் சோதித்துப் பார்’ என்றார் அம்பேத்கர். எக்காலத்துக்கும் தாங்கி நிற்கும் அறத்தையும் அறிவியலையும் கலந்து கூட்டிச் சேர்த்து புத்தர் கட்டி வைத்துவிட்டுப்போன அடிக்கட்டுமானம் அது. ஆனாலும், ‘அம்பேத்கர் பௌத்தம் தழுவினார். நாம் ஏன் பௌத்தத்தைத் தழுவ வேண்டும்?’ என்ற கேள்வியோடு வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பவர்களே இங்கு அதிகம். இக்கேள்விக்குப் பதில் அளிப்பதின் முதல்படியாக அம்பேத்கர் தழுவிய பௌத்தம் தலித்துகளின் மத்தியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

அம்பேத்கரின் பௌத்தம் ஏற்படுத்திய தாக்கம்

இந்தியாவில் பௌத்த மறுமலர்ச்சியை உண்டாக்கியவர் அம்பேத்கர். இந்திய வரலாற்றில் அத்தகைய நிகழ்வு எப்போதும் நிகழ்ந்ததில்லை. பௌத்தத்தைப் பரப்புவதற்காக அநாகரிக தர்மபாலா 1891-இல் கல்கத்தாவில் மகாபோதி சொசைட்டி தொடங்கிய காலத்தில் இந்தியாவில் பௌத்தர்களின் மக்கள்தொகை வெறும் 50,000 மட்டும்தான். அம்பேத்கர் பௌத்தம் தழுவுவதற்கு முன்பு 1951-இல் பௌத்தர்களின் மக்கள்தொகை 1,80,823. அது 1961-இல் 32,50,227 ஆகப் பல மடங்கு உயர்ந்தது. அதுவரை 2,487 பௌத்தர்கள் மட்டுமே இருந்த மகாராஷ்டிராவில் 27,89,501 ஆக உயர்ந்தது. அதற்கடுத்த சில ஆண்டுகளில் மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் பௌத்தம் தழுவியவர்கள் சேர்த்து இன்றைக்குப் பௌத்தர்களின் மக்கள்தொகை 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 84 லட்சம் பேர். இது இந்திய மக்கள்தொகையில் 0.7 சதவீதம். 75 சதவீதத்திற்கும் அதிகமான பௌத்தர்கள் அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிராவில் உள்ளனர். இதுவே கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளில் உண்டான தாக்கமும் அதனால் ஏற்பட்ட மாற்றமும் ஆகும்.

கெயில் ஓம்வெத் மற்றும் இன்னபிற ஆய்வாளர்களும் அறிஞர்களும் சொல்வதைப் போல ஜோதிராவ் பூலே, அயோத்தி தாசர், லட்சுமி நரசு முதலான இந்து மதத்திற்கெதிராகப் போராடிக்கொண்டிருந்த பல சிந்தனையாளர்கள், தலைவர்கள் மதம் சார்ந்தும், மதம் சாராமலும் எடுத்த முன்னெடுப்புகளின் தொடர்ச்சியாக அம்பேத்கர் வந்தடைந்த மார்க்கம்தான் பௌத்தம். 1956, அக்டோபர் 14 அன்று நிகழ்ந்த பௌத்தம் தழுவலுக்குப் பின்பு இந்தியாவிலுள்ள மற்ற ஏழு கோடி தீண்டத்தகாத சாதியினரும் தம்மைப் பின்பற்றிப் பௌத்தம் தழுவுவார்கள் என்று எதிர்பார்த்தார். தீண்டத்தகாத சாதியினரின் மதமாற்ற நடவடிக்கைகள் தீண்டத்தகாதரல்லாதோரையும் பௌத்தத்தின் பக்கம் ஈர்க்கும் என்றும் நம்பினார். அவ்வாறு இந்தியச் சமூகத்தினர் எல்லோரும் பௌத்தத்திற்கு மாறுவதன் மூலம் இந்தியாவை மீண்டும் பௌத்த நாடாக மலரச் செய்ய முடியும் என்ற விருப்பத்தையும் தன் வாழ்வின் இறுதிக் காலகட்டங்களில் வெளிப்படுத்தினார். ஆனால், அம்பேத்கர் எதிர்பார்த்தவாறு எதுவும் நடக்கவில்லை. அம்பேத்கரின் தலைமையில் ஐந்து லட்சம் பேர் பௌத்தம் தழுவிய நிகழ்வு உலக மதங்களின் வரலாற்றில் அரிதாக நிகழ்ந்த ஒன்று. அவர் பிறந்த மகாராஷ்டிராவில், குறிப்பாகப் பெரும்பாலும் அவர் பிறந்த மகர் சாதியினர் மட்டுமே அவரைப் பின்பற்றி பௌத்தம் ஏற்றனர். இந்தியாவின் பிற எந்த மாநிலங்களிலும் தீண்டத்தகாத சாதியினர் பெரும்பாலும் மதம் மாறவில்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் மகார் சாதியினரைத் தவிர இந்தியாவின் பிற எந்தத் தீண்டத்தகாத சாதியினரும் அவரைப் பின்பற்றிப் பௌத்தத்தைத் தழுவவில்லை. ஏதேனும் சிக்கல்கள் எழும்போது இந்து மதத்திலிருந்து வெளியேறும் முடிவை எடுக்கும் தலித் மக்கள் இசுலாமையும் கிறித்தவத்தையும் தழுவுவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார்களே ஒழிய பௌத்தத்தை ஒரு மாற்றாகக் கருதவில்லை. தமிழ்நாட்டில் மீனாட்சிபுரத்தை இதன் உதாரணமாகக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அம்பேத்கருடைய மதமாற்றம் இந்திய வரலாற்றில் மிகப்பெரும் அதிர்வுகளையும் மாற்றங்களையும் உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதெல்லாம் கனவாகவே இருந்து கலைந்துவிட்டது. அது அறிவுலக வட்டாரங்களில் விவாதப் பொருளாகப் பயன்படுகிறதே தவிர மக்களிடத்தில் பெரிதாக எந்தத் தாக்கத்தையும் உண்டாக்கவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அம்பேத்கரைத் தலைவராக ஏற்றுக்கொள்கிற தலைவர்களும் இயக்கங்களும் கட்சிகளும் கூட பௌத்தம் ஏற்பதைச் செய்வதில்லை. தீவிர அம்பேத்கரியவாதிகள் என்று சொல்லிக்கொள்கிறவர்களும் அறியப்படுபவர்களும் கூட பௌத்தத்தைத் தழுவவில்லை. தமிழ்ச்சூழலை ஓர் உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், அம்பேத்கருக்கு முன்பே அயோத்திதாசர் பௌத்தத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் பூர்வ மதம் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார் என்று மார்தட்டிக்கொள்ளும் தமிழகத் தலித்துகள்கூட பௌத்தத்திற்குக் கணிசமான எண்ணிக்கையில் மாறவில்லை. அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறவர்களும் பௌத்தத்திற்கு மாறும் கொள்கையை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிட்டுக் கண்டும் காணாமலும் செல்லும் போக்கே பெரும்பாலானவர்களிடம் உள்ளது. யாரேனும் இதைக் கேட்டால் அவர்களிடம் ஏதேனும் ஒரு பதில் தயாராக இருக்கிறது. அம்பேத்கரின் காலத்துச் சமூக அரசியல் சூழல் வேறு. இன்றைக்கு நிலவுகிற சமூக அரசியல் சூழல் வேறு என்று சாக்குச் சொல்வார்கள். அம்பேத்கர் அதை ஓர் உத்தியாக மட்டுமே கையாண்டார் என்று வியாக்கியானம் பேசுவார்கள். அம்பேத்கரின் நவயான பௌத்தம் ஓர் அரசியல் தந்திரம் இல்லை என்பது குறித்து முன்பே போதுமான அளவு விளக்கப்பட்டுவிட்டது.

அம்பேத்கரின் பௌத்தம் மீதும், அவர் பௌத்தம் தழுவிய காலத்தின் மீதும் பழி போடுவோர் இவ்வகையினரென்றால் மக்கள் மீது பழிபோடுவோர் இன்னொரு வகையினர். மக்கள் இந்து மதத்தில் ஊறிப்போய்விட்டனர், அவர்கள் மதம் மாற மாட்டார்கள். மதம் மாறுவதால் அவர்களின் சாதி அடையாளமும் சமூக மதிப்பும் மாறப் போவதில்லை என்று எளிதாக மக்களைக் காரணம் காட்டிப் பௌத்தம் ஏற்பதைத் தவிர்த்துவிடுகின்றனர். சிலர் மட்டுமே அம்பேத்கரின் பௌத்தத்தையும் தம்மத்தையும் ஏற்றுக்கொண்டு மதம் மாறுதலையும் அதைப் பிரச்சாரம் செய்வதையும் கடமையாகச் செய்து வருகின்றனர். அதிலும் சிலர் அடிப்படைப் புரிதல்கள், கருத்தியல் தெளிவுகள் இல்லாமல் அம்பேத்கர் வடிவமைத்த அறத்தையும் அறிவியலையும் அடிக்கட்டுமானமாகக்கொண்ட பௌத்தத்தில் சடங்குகள் என்ற பெயரில் இந்து மதச் சடங்குகளையும் அதன் மதக்கூறுகளையும் கலந்து பின்பற்றுகின்றனர். இந்த நிலையைக் காண அம்பேத்கர் உயிருடன் இல்லாதது நல்வாய்ப்பா அல்லது கெடுவாய்ப்பா எனச் சொல்ல இயலவில்லை. ஆனால், அம்பேத்கரின் கொள்கைகளையும் நோக்கங்களையும் சரியாகப் புரிந்துகொண்ட அம்பேத்கரியவாதிகளால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். அம்பேத்கருக்குப் பிந்தைய இந்தத் தேக்கத்தை எண்ணி வருத்தம்கொள்ளவோ, நம்பிக்கையைக் கைவிடவோ தேவையில்லை. அதுதான் இப்போதைக்கு நாம் அனைவரும் உணர வேண்டிய மிகமுக்கியமான செய்தி.

மானுட வாழ்வியல் நடைமுறையைத் தன் சுய அனுபவத்தின் மூலம் ஆழமாகவும் தெளிவாகவும் புரிந்து வைத்திருந்த அம்பேத்கர் ஒரு தனிமனிதனின் வாழ்க்கைத் திசைப்போக்கைத் தீர்மானிக்கும் வலிமை மதத்திற்கு உண்டு என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தார். மதம் தனிமனித வாழ்க்கையை மட்டுமல்ல; ஒட்டுமொத்தச் சமூகத்தையும் மாற்றும் என்றும் உறுதியாக நம்பினார். ந.முத்துமோகன் அம்பேத்கரின் மதம் பற்றிய கோட்பாடு அமெரிக்க நடைமுறைவாதிகளான வில்லியம் ஜேம்ஸ் மற்றும் ஜான் டூவி ஆகியோரின் வரையறையை ஒட்டியிருப்பதாகக் கூறுகிறார். அம்பேத்கரின் மதம் பற்றிய கோட்பாடு சமூகவியலாளர் துர்க்கேமின் மதம் என்னும் கோட்பாட்டோடு ஒத்துப் போவதாகச் சொல்கிறார் கெயில் ஓம்வெத். இந்தியாவில் அம்பேத்கரியத்தையும் தலித்தியத்தையும் ஆழமாகவும் விரிவாகவும் ஆய்வு செய்து பல்வேறு நூல்களை எழுதிய கெயில் ஓம்வெத் அம்பேத்கரின் பௌத்த மதமாற்றத்தையும் ஆய்வு செய்துவிட்டு இப்படிச் சொன்னார். அம்பேத்கரின் பார்வையில் மார்க்ஸ், மாக்ஸ் வெபர் கணித்தது மாதிரி மதம் மடியவும் செய்யாது மறையவும் செய்யாது. மதம் நவீன அறிவியல் யுகத்தில் பழைமையை உதிர்த்துவிட்டு நவீனத்தை ஏற்றுக்கொண்டு ஒரு கட்டத்தில் மதச்சார்பற்றத் தன்மையை அடையும் என்ற மதம் குறித்து விரிவான ஆய்வுகள் செய்த இயங்கியல்வாதியான துர்க்கேமின் கணிப்புடன் அம்பேத்கரின் மதம் பற்றிய கோட்பாடு ஒத்துப் போவதாகக் குறிப்பிடுகிறார். எதிர்காலத்தில் அறிவியலின் மதம், பகுத்தறிவின் மதம் உருவாகும் என்றார் துர்க்கேம். அம்பேத்கரும் பௌத்தத்தை அறிவியலின் மதம், பகுத்தறிவின் மதம் என்றே முன்வைத்தார்.

சாமானியர்களின் வாழ்வில் மதம் எவ்வாறு வினையாற்றும் என்பதில் அம்பேத்கருக்குத் தீர்க்கமான பார்வை உண்டு. மதம் என்பதை நாம் புரிந்து வைத்திருக்கும் கடவுள், பக்தி, முக்தி, மோட்சம், சொர்க்கம், நரகம், ஆன்மா, கர்மா, சடங்கு முதலானவற்றை உள்ளடக்கிய தத்துவமாகப் பார்க்கவில்லை அம்பேத்கர். மனிதக் கண்ணோட்டத்தில் மதம் என்பது என்ன என்பதை விளக்க முற்பட்டார். அதனால்தான் “மதத்தின் நோக்கம் உலகத் தோற்றத்தை விளக்குவது. ஆனால், தம்மத்தின் நோக்கம் உலகத்தை மறுகட்டமைப்பு செய்வது” என்று அம்பேத்கர் கூறினார்.

அவர் ஏற்றுக்கொண்ட தம்மத்தையே மதமாக வரையறுக்கிறார். தம்மத்தின் நோக்கம் மனிதனைப் பற்றியதாக இருக்கிறது என்று விளக்குகிறார். அதாவது நாம் புரிந்து வைத்திருக்கும் மதம் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் பார்த்தால் மதத்தின் நோக்கம் ‘கடவுள் இவ்வுலகைப் படைத்தார், கடவுள் ஆதாம் ஏவாளைப் படைத்தார்‘ போன்ற உலகத்தின் தோற்றத்தைப் பற்றிய விளக்கமாக இல்லாமல் உலகை மனிதர்களுக்கான நல்ல வாழிடமாகக் கட்டியெழுப்பவதாக இருக்க வேண்டுமென வாதிடுகிறார். மதத்தையும் மனிதனையும் பிரிக்க முடியாது என்னும் தீர்மானத்திற்கு வந்து சேர்ந்த அம்பேத்கர் மதத்தை எவ்வாறு மனிதனுக்கேற்றவாறு வடிவமைப்பது என்று கவனம் செலுத்தினார். அதுவும் அறிவியல் கண்டுபிடிப்புகள் தினந்தோறும் மாற்றங்களை உண்டு பண்ணும் நவீனக் கால மனிதனுக்கு உகந்த மதத்தை வடிவமைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். வெளிச்சத்தை ஏற்க மறுக்கும் இருட்டுக்குகையான இந்து மதம் அம்மாற்றங்களை உள்வாங்கத் தயாராக இல்லை. மேம்போக்கான சீர்திருத்தங்களை அனுமதித்த இந்து மதம் அடிப்படை மாற்றங்களை அனுமதிக்கவில்லை என்பதை உணருகிறார். அதனால்தான், அம்பேத்கர் வேறொரு மதத்திற்கு மாற வேண்டுமென முடிவெடுத்தார்.

அம்முடிவுக்குப் பிறகு, மதங்களின் ஆராய்ச்சிக் கடலில் மூழ்கிய அம்பேத்கர் விலைமதிப்பற்ற முத்துக்களை அள்ளி வந்தார் என்று துணிந்து சொல்லலாம். இந்து மதத்தின் கொடுங்கரங்களிலிருந்து தப்பிப்பதை மட்டுமே முதன்மை நோக்கமாகக்கொண்டு ஆரம்பித்த மதங்களின் ஆராய்ச்சிக் கடலில் மூழ்கிய அவர் அடியாழத்தில் சேறுகளில் சிக்கி மறைந்து கிடந்த ஒளிவீசும் முத்துக்களைப் போலத் தீண்டத்தகாதச் சமூகத்தின் மறைக்கப்பட்ட உண்மையான வரலாற்றின் சுவடுகளைக் கண்டடைந்தார். தீண்டத்தகாத சமூகத்தினர் பூர்வ பௌத்தர்கள் என்றும், பௌத்தம் அவர்களின் பூர்வ மதநெறி என்னும் பேருண்மையைக் கண்டுகொண்டார். (அம்பேத்கருக்கு முன்பே இம்முடிவுக்கு அயோத்திதாசர் வந்துவிட்டார். அதைப்பற்றிப் பிறகு விரிவாகப் பார்க்கலாம்) பௌத்தத்தைப் பரப்பி வந்த நாகர்களே தீண்டத்தகாத சாதியினர் என்றும் அறிந்தார். சனாதனத்தைப் பரப்பிய இந்து மதத்தை எதிர்த்துச் சமத்துவத்தைப் பரப்பும் தம்மம் நடத்திய எதிர்ப் போராட்டத்தின் விளைவாகத்தான் இச்சமூகத்தினர் தீண்டத்தகாதார் ஆக்கப்பட்டனர் என்னும் வரலாற்றுக் காரணத்தையும் கண்டறிந்தார். இந்திய வரலாறு என்பதே இந்து மதத்திற்கும் பௌத்த மதத்திற்கும் இடையில் நடந்த போரே என்பதையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.

நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு வந்த இந்தப் புதிய வரலாற்று உண்மைகள் பஞ்சமர்கள், சூத்திரர்கள் என இந்து மதத்தால் ஒடுக்கப்பட்டச் சமூகத்தினர் அனைவரும் தம் கடந்தகால வாழ்வின் உன்னதங்களைத் தேடிச் செல்ல வாய்ப்பளித்தன. அதுநாள் வரையில், பாதங்களில் பிறந்த சூத்திரர்கள் என்றும், மனிதரென்னும் தகுதியே இல்லாத பஞ்சமர்கள் என்றும் இகழ்ச்சியான வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாய் அறியப்பட்டவர்கள் தாங்கள் உலகத்தின் உன்னதமான தத்துவத்தைப் பின்பற்றியவர்கள் என்று பெருமிதம்கொள்ளச் செய்தது அம்பேத்கரின் பௌத்த மதமாற்றம். இதுதான் அம்பேத்கரின் பௌத்த மதமாற்றம் உண்டாக்கிய மாபெரும் தாக்கம் என்று உறுதியாகச் சொல்லலாம். அந்தத் தாக்கத்தின் வலிமையை இன்றும் உணரலாம். இத்தகைய அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியும் அம்பேத்கரின் நவயான பௌத்தம் இந்தியாவில் பரவலாக்கப்படாமல் போனதற்குச் சில முக்கியக் காரணங்கள் உள்ளன. அக்காரணங்களைப் புரிந்துகொண்டால்தான் அவற்றை அகற்றிப் பௌத்தத்தை வளர்த்தெடுக்கப்படுவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட முடியும்.

அம்பேத்கரின் பௌத்தம் ஏன் வளரவில்லை?

அடிமைத்தனமே தமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை என்று வாழ்ந்தவர்களுக்குப் பௌத்தம் எதிர்கால வாழ்வின் மீதான புதிய நம்பிக்கைகளை அளித்தது. இந்துமத இருட்டுக்குகையைத் தகர்க்க அம்பேத்கர் பௌத்தம் என்னும் அணுகுண்டை வெடிக்கச் செய்தார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் இருந்த தீண்டத்தகாதார் (குறிப்பாக, மகர்கள்) விடுதலைக் காற்றை சுவாசிக்கத் துவங்கினர். அம்பேத்கர் கையளித்துவிட்டுப்போன தத்துவ ஆயுதமான பௌத்தத்தைச் சரியாகக் கையாள்வதன் மூலம் உறுதியாக யுத்தத்தில் வெற்றிகொள்ள முடியும் என்னும் நம்பிக்கையில் போராட்டத்தைத் தொடர வேண்டிய கடமை தலித்துகளுக்கு இருக்கிறது.

அத்தகைய தொடர்ச்சியான போராட்டத்திற்கான வழிமுறைகளை அம்பேத்கரே கூறிச் சென்றிருக்கிறார். ஆனால், அவநம்பிக்கையாளர்கள் நமக்குச் சுட்டிக் காட்டுவதெல்லாம் வீழ்ச்சியின் வடுக்களைத்தான். அம்பேத்கரின் பௌத்தம் தோல்வியைத் தழுவிவிட்டதென்றும் அம்பேத்கருடன் மதம் மாறிய மகர்களே பெயரளவில் மட்டும் பௌத்தர்களாய் இருப்பதும், நடைமுறையில் இந்துக்களாய் இருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். இது முற்றிலும் உண்மை. மகாராஷ்டிராவில் உள்ள நவயான பௌத்தர்கள் அடையாள அளவில் பௌத்தர்களாய் இருப்பதையும், நடைமுறையில் இந்து மதத்தின் சில பண்பாட்டுக் கூறுகளைப் பௌத்தப் பண்பாட்டுக் கூறுகளோடு கலந்து கலப்படமான ஒன்றைக் கடைபிடிக்கின்றனர் என்பது உண்மைதான். அதற்கு அம்பேத்கர் கையளித்துவிட்டுச் சென்ற பௌத்தத்தின் மீது ஒட்டுமொத்தக் குற்றத்தையும் சுமத்தித் தப்பித்துக்கொள்ள நினைப்பது தலித்துகளைச் சாதியச் செக்கில் போட்டு எந்நேரமும் அரைத்துக்கொண்டிருக்க வேண்டுமென நினைக்கும் கெடுமதியாளர்களின் செயலாகத்தான் இருக்க முடியும்.

பௌத்தம் என்னும் மதத்தைப் பரப்புவது ஒரு கோரிக்கை மாநாடு நடத்துவது மாதிரியான ஒருநாள் அல்லது ஒருவார நிகழ்ச்சி நிரல் இல்லை. அது மரபில் ஊறிப்போன பல நூற்றாண்டு கால வரலாற்று நினைவுகளில் பாய்ந்தோடும் சுழிப்பில் சிக்கிக்கொண்டோரை மீட்டு வெளிக்கொண்டு வருவதாகும். ஒரு மதத்தின் மக்கள்தொகை வளர்கிறது என்று தெரிந்தாலே அதைக் கட்டுப்படுத்த சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.

சாதிய அமைப்புக் கெட்டித்தட்டிப் போயிருக்கும் இந்தியச் சமூகத்தில் பௌத்தம் வளர்வதை யார்தான் விரும்புவார்கள்? பௌத்தத்தை வளர்த்தெடுப்பது எவ்வளவு கடினமாயினும் அது செய்யவே இயலாத காரியமும் இல்லை. அதற்காக நீண்டகாலத் தொலைநோக்குப் பார்வையோடும் உடனடியாகவும் திட்டங்களை வகுத்துச் செயலாற்ற வேண்டும். அம்பேத்கரின் பௌத்தம் பரவுதலை எளிதாகவும் விரைவாகவும் சாத்தியப்படுத்தும் செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும். அம்பேத்கரே இந்தச் செயல்திட்டங்களை உருவாக்கி வைத்திருந்தார் என்பது அனைவரும் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயங்களில் ஒன்று.

பௌத்தத்தை வளர்த்தெடுப்பதற்காக அவர் வரைந்த திட்டங்களில் அவருக்குப் பின்பு எத்தனை திட்டங்களை அம்பேத்கரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் இயக்கங்கள் செயல்படுத்தி இருக்கின்றன என்று சிந்திக்க வேண்டும். தவறு எங்கேயிருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள வேண்டும். அத்தோடு நில்லாமல், அதற்கான காரணங்களை ஆராய்ந்து தவறுகளைக் களைந்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான செயல்பாடுகளில் இறங்க வேண்டும். இவற்றில் எதையும் செய்வதை விட்டுவிட்டு வெறுமனே ஆய்வுகள், விவாதங்கள், விமர்சனங்கள் என்னும் பெயரில் வாய்ச்சவடால் அடிப்பதும், புத்தர், அம்பேத்கரின் சிலைகளையும் சித்திரங்களையும் வைத்துக்கொண்டு படம் காட்டுவதாலும் ஒடுக்கப்பட்டச் சமூகத்திற்கு எந்த நன்மையையும் தரப் போவதில்லை. மாறாக, இதே நிலை நீடிக்கும் வரைக்கும் இம்மக்களுக்குப் பெரும் பாதகமான விளைவுகள் உண்டாக எல்லா வாய்ப்புகளும் உண்டு. எவ்வளவு தாமதப்படுத்துகிறோமோ அவ்வளவு அதிகமாகச் சிக்கல்கள் உண்டாகும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

கல்வியறிவற்று விழிப்புணர்வற்று இன்றும் சாதியச் சமூகத்தின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்லிப் பிரச்சாரம் செய்ய வேண்டிய கடமையுள்ள படித்தவர்களில் சிலரைத் தவிர, வழக்கம் போல எந்தச் சமூக அக்கறையுமின்றித் தானுண்டு தன் வேலையுண்டு என்று சுயநலத்தில் மூழ்கித் திளைக்கின்றனர்.

சிலர் பௌத்தத்தைத் தியானங்களைக் கற்றுக்கொள்ளும் மார்க்கம் என்று நினைத்துத் தினமும் தியானம் செய்வதால் புத்தராகிவிட்டதாக நினைத்துக்கொண்டு அங்கேயே நின்றுவிடுகின்றனர். மேதாவிகளில் ஒரு பிரிவினர் பௌத்தம் குறித்து இன்னும் தத்துவ விசாரணைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். புத்தரே, ‘எனது பணி தத்துவ விசாரணைகளில் ஈடுபடுவதல்ல. மக்களுக்குத் தொண்டாற்றுவது’ என்று சொல்லியிருக்கிறார். இன்னும் சிலர் அதீத ஆர்வக்கோளாறினால் எல்லாச் சடங்குகளையும் பௌத்தச் சடங்கு என்பதைப் போல ஏதோதோ விளக்கமளித்து மறுபடியும் இந்து மதத்தைப் போல பௌத்தத்தையும் சடங்குச் சம்பிரதாயங்களின் கூடாரமாக ஆக்கப் பார்க்கிறார்கள். அவற்றைப் பௌத்தத்தைக் கற்றவர்கள் களைந்து உண்மையான செய்திகளைப் பரப்ப வேண்டும். ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவது பற்றிச் சிந்திக்காமல் காலத்தை வீணடிக்கும் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

பௌத்தம் வளர என்ன செய்ய வேண்டும்?

பௌத்தம் பரவ வேண்டுமென்று சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல், என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அம்பேத்கர் சொல்லியவற்றை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அவை:

  • பௌத்த பைபிள் ஒன்றை உருவாக்குவது.
  • பௌத்தத்தில் இணையும்போது செய்ய வேண்டிய நடைமுறைகள்
  • மறுசீரமைக்கப்பட வேண்டிய பிக்கு சங்கம் மற்றும் பிக்கு பயிற்சிப் பள்ளிகள் அமைப்பது
  • பௌத்தப் பிரச்சாரகர்கள்
  • உலக பௌத்த மிஷன் ஏற்படுத்துவது.
  • விகார்கள் கட்டுவது
  • பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைப்பது.

மேற்கண்டவற்றில் எத்தனை திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம் என்று ஆராய்ந்து பார்த்து அவற்றை நிறைவேற்றுவதில் அனைவருடைய சொல்லும் செயலும் ஒருங்கிணைய வேண்டும். பெரும்பாலும் அவருடைய பௌத்தத்தைப் பரப்பும் செயல்திட்டங்கள் கிறித்தவத்தின் சாயலில் இருப்பதாக ஒருவர் உணரத் தலைப்படுவது இயல்பு. அம்பேத்கரும் அதைக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அவை எல்லாமே பௌத்த மதத்தின் வேர்கொண்ட சாயல்கள்தான். எல்லாக் காலத்திற்கும் நீடித்து நிலைபெற்றிருக்கும் வகையில் வலுவான நிறுவனக் கட்டமைப்பு வேண்டுமென்ற முனைப்பு அதில் தெரியும்.

மேற்கண்டவற்றில் முதல் இரண்டு பணிகளை அம்பேத்கரே செய்து முடித்துவிட்டார். அதுதான், இன்றைக்கு நம்முடைய கைகளில் தவழும் ‘புத்தரும் அவரது தத்துவமும்’ நூல். கிறித்தவர்களுக்கான பைபிளைப் போல இருக்க வேண்டுமென்ற கனவில் இந்த நூலை எழுதினார். கிறித்தவர்கள் பைபிளைப் பயன்படுத்தியதைப் போல எத்தனை பேர் ‘புத்தரும் அவரது தத்துவமும்’ நூலைப் பயன்படுத்துகிறோம்? அதைத் தினமும் வாசிக்க வேண்டும். அவ்வாறு தினமும் வாசிக்கும் போதுதான் பௌத்தத்தின் தத்துவமும், அறக் கருத்துகளும் மக்கள் மனதில் தங்கி மாற்றத்தை உண்டாக்கும். ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்துச் சேரியிலும் வாரத்திற்கொருமுறை குறைந்தபட்சம் கூட்டு வாசிப்புக் கூட்டங்களையாவது ஒருங்கிணைத்து நடத்த வேண்டும்.

இரண்டாவதாக, பௌத்தம் தழுவும்போது ஒவ்வொருவரும் பௌத்தத்திற்குள் நுழையும் தருணம் உணர்வுப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தார். புதிதாகப் பௌத்தத்தை ஏற்கும் ஒருவரைப் புதிய மனிதனாக மாற்றிய உணர்வைத் தரவேண்டுமென்று விரும்பினார். கிறித்தவ மதத்திற்குள் நுழைவதன் அடையாளமாக ஞானஸ்நானம் எடுத்துக்கொள்வது போல என்று சொல்லலாம். பல்லாண்டுகளாக மனதிலும் நினைவுகளிலும் தங்கிவிட்ட இந்து மதத்தின் சாதிய அடிமை உளவியலிலிருந்து வெளிவர வேண்டுமென்பதே இதன் நோக்கம். அதைப் போன்ற ஒன்றை, அதைவிடவும் ஆழமான ஒன்றைச் செய்யும் முயற்சியாக அம்பேத்கர் ஐந்து லட்சம் மக்களோடு நாக்பூரில் அக்டோபர் 14, 1956-இல் பௌத்தம் தழுவிய போது புத்த பிக்குவிடமிருந்து தீட்சைப் பெற்றுக்கொண்டதோடு மட்டும் நில்லாமல் 22 உறுதிமொழிகள் ஏற்றுக்கொள்ளும் நடைமுறையையும் இணைத்தார். அம்பேத்கரோடு பௌத்தம் தழுவியவர்கள் ஏறத்தாழ எல்லோரும் இந்துக்கள் என்பதால் அவர்கள் இந்த உறுதிமொழிகளை வாசிக்கும்போது இந்து மதத்தை முற்றிலும் துறந்துவிட்டு வெளியே வந்தவர்களாக, விடுதலை உணர்வை அடைய வேண்டுமென்று விரும்பினார். பிக்குகளாக விரும்புவோரும் இதைப் போன்ற ஒரு முறையான அறிவுப்பூர்வமான நடைமுறை ஒன்றைச் செய்ய வேண்டுமென்றும் திட்டமிட்டார். அம்பேத்கர் அறிவும் அறமும் இணைந்து கலந்த பௌத்த வழிபாட்டு முறைகள் குறித்துச் சிறுநூல் ஒன்றையும் எழுதி வெளியிட்டார். இன்னும் ஏராளமான நூல்களை எழுதி வெளியிட வேண்டிய தேவை இன்றும் இருக்கிறது. பௌத்தத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் எல்லா வகையான பிரச்சார உத்திகளையும் கையாள்வது அம்பேத்கர் குறிப்பிட்ட பௌத்தம் வளர்வதற்காகச் செய்ய வேண்டிய பணிகளில் முதன்மையானதாகும்.

மூன்றாவதாக, பௌத்தத்தை மக்களிடையே கொண்டு செல்வது மட்டுமன்றி அதை நிலைநிறுத்தும் பணியைச் செய்ய இரண்டு தளங்களில் பயிற்சி பெற்றவர்களை (நிறுவனங்களை) உருவாக்க வேண்டுமென்று திட்டமிட்டார். முதல் தளத்தில் பிக்குகளும் இரண்டாம் தளத்தில் பௌத்தப் பிரச்சாரகர்களும் வேண்டுமென்று திட்டமிட்டார். அப்போதைக்கிருந்த பிக்குகள் குறித்தும், பிக்கு சங்கம் குறித்தும் அம்பேத்கர் கடுமையாக விமர்சனம் செய்தார். பௌத்தத்தையும் பிற சமயங்களையும் தத்துவங்களையும் ஆழமாகக் கற்பதும், கற்ற பின் மக்களுக்காக அர்ப்பணிப்புணர்வுடன்கூடிய சேவைகளைச் செய்ய வேண்டுமென்றும் எதிர்பார்த்தார். மக்களோடு கலந்து பணிசெய்து அவர்களை நல்வழிப்படுத்தும் நடவடிக்கைகளில் பிக்குகள் ஒரு வழிகாட்டியைப் போலச் செயல்பட வேண்டுமென்று விரும்பினார். உதாரணமாக, யேசு சபை பாதிரிமார்கள் மற்றும் ராமகிருஷ்ணா மிஷன் செய்யும் கல்வி மற்றும் மருத்துவப் பணிகளை எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டினார். பிக்குகளுக்கான சமயப் பயிற்சிப் பள்ளியைத் துவக்க மைசூர் மன்னர் மூலம் பெங்களூரில் நிலம் பெறுவதற்காக ஏற்பாடு செய்திருந்தார். அவர் திட்டமிட்டு வைத்திருந்த பிக்கு சங்கங்கள் உருவாக்கப்படவில்லை. பௌத்தத்தை வளர்க்க வேண்டுமென்றால் முதலில் இவற்றை உருவாக்க வேண்டும்.

பிக்குகள் மட்டுமன்றி மக்களிடையே தினமும் பௌத்தத்தைப் பிரச்சாரம் செய்யும் நோக்கில் உள்ளூர்ப் பிரச்சாரகர்களை உருவாக்க நினைத்ததையும் அம்பேத்கரால் செய்ய முடியவில்லை. இப்போது அதைத் தவறாமல் செய்தால் மட்டுமே பௌத்தம் பாமர மக்களிடையேயும் செழித்து வளரும். இவர்கள் உள்ளூர்க்காரர்களாக இருக்க வேண்டும். அந்தந்தப் பகுதி மக்களிடையே பிறந்து வாழ்பவர்கள்; எப்போதும் மக்களோடு உடனிருப்பவர்கள்; அவர்கள் திருமணம் முடித்துக் குடும்பம், குழந்தைகளோடு வாழ்பவர்களாயினும் பௌத்தத்தின் அடிப்படையைப் பயின்றவர்களாகவும், மக்கள் எளிதில் அணுகக்கூடிய முறையில் இருப்பவர்களாகவும், மக்களின் சிறிய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். எளிய உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், உள்ளூர்க் கோயில் பூசாரிகளைப் போலவும் அரசியல் கட்சித் தொண்டர்களைப் போலவும் இந்தப் பௌத்தப் பிரச்சாரகர்கள் செயலாற்ற வேண்டும். ஆனால், இறைக்கடமை செய்யும் மற்ற மதப் பூசாரிகளைப் போல இது பக்திப்பணி இல்லையென்பதையும், மக்களை வாக்குக்காகப் பயன்படுத்தும் வழமையான அரசியல் நோக்குடைய கட்சித் தொண்டர் பணி இது கிடையாது என்பதையும் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பௌத்தத்தின் அடிப்படை அறக்கருத்துகளைப் புரிந்து போதிக்கும் வல்லமை உள்ளவர்களாக இந்தப் பிரச்சாரகர்களைப் பயிற்றுவித்து வளர்த்தெடுக்க வேண்டும்.

ஐந்தாவதாக, பாரத பௌத்த மகாசபையை அம்பேத்கர் நிறுவினார் என்றாலும் அம்பேத்கரின் திட்டத்தின்படி அது தீவிரமாகச் செயல்படவில்லையென்றே சொல்ல வேண்டும். இந்தக் குறையைப் போக்குவது மேற்சொன்ன எல்லாப் பணிகளையும்விடக் கடினமானது. தேசிய அளவிலான, சர்வதேசிய அளவிலான சில பௌத்த அமைப்புகள் உள்ளன. என்றாலும், அவை அம்பேத்கரின் நவயான பௌத்த தம்மத்தைப் பின்பற்றுவதாக இல்லை. அவை அம்பேத்கரின் நவயான பௌத்தத்திற்கு ஆதரவளிக்க முன்வருவதாக இருக்குமா என்பதைத் தேடிச் சோதித்துப் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்குத் தேவையான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். ஆங்காங்கே அம்பேத்கரியவாதிகள் தொடங்கி நடத்தும் சிறுசிறு அமைப்புகள், பௌத்தம் சார்ந்த குழுக்கள் ஒன்றுபட்டதாகவும் வலுவானதாகவும் இல்லை. தேசிய மற்றும் சர்வதேசிய அளவிலான ஆதரவுகளையும் ஆதாரங்களையும் தேட வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், பௌத்தத்தைப் பரப்புவதும் நிலைநிறுத்துவதும் கடினம் என்பதை உணர வேண்டும். அம்பேத்கர், ‘புத்தரும், அவரது மதத்தின் எதிர்காலமும்’ குறித்து விவாதிக்கும் போது சொல்வது இதுதான்,

“பௌத்தனின் கடமை என்பது வெறுமனே நல்ல பௌத்தனாக இருப்பது கிடையாது. அவனது கடமைப் பௌத்தத்தைப் பரப்புவதுதான். பௌத்தத்தைப் பரப்புவது என்பதே மனிதகுலத்திற்குச் செய்யும் தொண்டு என்பதை அவர்கள் உணர வேண்டும்.”

பௌத்தம் வளர வேண்டுமென்று விரும்புகின்றவர்கள் அல்லது மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்று விரும்புகின்றவர்கள் இதை உணர்ந்து தம் செயலை வேகப்படுத்த வேண்டிய நேரமிது.

கடைசியாகப் பெரும் விகார்களையும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளையும் மெட்ராஸ், பம்பாய், நாக்பூர் மற்றும் டெல்லி என நாட்டின் நான்கு பகுதிகளிலும் கட்ட வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தார். அவை பௌத்தத்தை நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் பரப்புவதற்குத் தேவையான வலிமையான, நிலையான நிறுவன, நிர்வாகக் கட்டமைப்பைக் கொடுக்க வேண்டுமென்பது அவரின் நீண்ட செயல்திட்டங்களின் ஒரு பகுதியாக இருந்தது.

அம்பேத்கரின் இக்கனவை எவரும் நிறைவேற்றுவதாகவோ அல்லது நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாகவோ எங்கும் தெரியவில்லை. உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் அரசியல் அதிகாரம் தலித்துகளின் கையில் இருந்த போது அடையாளம் சார்ந்து முன்னெடுக்கப்பட்டச் சில நடவடிக்கைகள் பாராட்டுக்குரியன. அரசின் ஆதரவுடன் சமய இயக்கங்கள், நிறுவனங்கள் செய்ய வேண்டிய பணியை உத்தரப்பிரதேசத்தில் அரசே அவற்றை அடையாளப்பூர்வமாகச் செய்தது. ஆனால், அவை அம்பேத்கரியத்தையும் பௌத்தத்தையும் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட தலைவர்களான கான்சிராம், மாயாவதி முதலானோர் முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ற அளவிலேயே நின்றுவிட்டன. இவ்வனுபவத்திலிருந்து பார்க்கும்போது அரசியல் அதிகாரத்தால் மட்டும் சாத்திமாகும் என்பது பகற்கனவே. பௌத்தத்தைப் பரப்புவது மக்கள் இயக்கமாக வளர்த்தெடுக்கப்படவில்லை. அம்பேத்கருக்கு முன்பும் இதே நிலைமைதான். அயோத்திதாசர், லட்சுமி நரசு ஆகியோர் சந்தித்த சிக்கல்கள் இதுதான். அம்பேத்கருக்குப் பிறகும் இந்தியாவில் எங்கும் அதற்கான தனித்த பண்பாட்டு இயக்கம் அமைத்து யாரும் செயலாற்றவில்லை. அம்பேத்கர் ஒருவரே இந்தியா முழுமைக்கும் இல்லாவிடினும் முதல் கட்டமாகத் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் மக்கள் இயக்கமாக முன்னெடுத்தார். பின்நாட்களில் அதைப் பரவலாக்கம் செய்யும் தெளிவோடு பல தயாரிப்புகளில் ஈடுபட்டார். மகாராஷ்டிராவின் நவயான பௌத்தர்களிடத்தில் இன்று பல குறைபாடுகள் இருப்பினும், அது எண்ணிக்கை அளவில் குறிப்பிடத்தக்க உண்மையான பௌத்தப் பண்பாட்டு மக்கள் இயக்கமாக இன்றுவரை இயங்குகிறது. இப்போதுவரை அதற்கான சூழலும் சக்தியும் தலித் இயக்கங்களுக்கு இல்லையெனினும் அம்பேத்கர் வரைந்த திட்டங்களை அடிப்படை மாதிரியாக எடுத்துக்கொண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுமக்களிடத்தில் பௌத்தம் வளர்வதற்குச் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. அவற்றைத் தொடர்ச்சியாகச் செய்துகொண்டேயிருப்பது கட்டாயத் தேவையாகிறது. அதுவும் இன்றைய தேர்தல் அரசியலில் இருக்கும் அரசியல் கட்சிகள் மட்டுமே செய்யக்கூடிய சாத்தியங்கள் இல்லை என்று சொன்னாலும், அவர்கள் இதில் முன்நிற்க வேண்டும். ஆனால், இவற்றை அவர்கள் கண்டுகொள்வதில்லை. பௌத்தம் குறித்து அம்பேத்கருக்கு இருந்த தெளிவும், அதை மக்கள் இயக்கமாகக் கட்டியெழுப்ப உயிர் போகுமளவு உழைத்த வேகமும் சமகாலத் தலித் தலைவர்கள் எவரிடத்திலும் புலப்படவில்லை என்றே சொல்லலாம். அம்பேத்கர் செய்ததைவிட இக்காலத்தில் அதைவிடப் பன்மடங்குப் பணிகள் இன்னும் அளவிலும் வேகத்திலும் கூடுதலாகச் செய்ய வேண்டியுள்ளன. அரசியல் இயக்கங்களைப் போல பௌத்தம் பரப்புவதற்கென்றே தனித்த பண்பாட்டு இயக்கம் வேண்டும். சமய நிறுவனங்கள் துவங்கப்பட வேண்டும். இத்தகைய இயக்கங்களும் பௌத்தம் வளர்ப்பதை முழுநேர வேலைத் திட்டமாக எடுத்துக்கொண்டு செய்தால் மட்டுமே பௌத்தம் பரவுவது இங்குச் சாத்தியமாகும்.

தமிழ்நாட்டுச் சூழலைக் கருத்தில்கொண்டு விவாதிக்கலாம். குறைந்தபட்சம், மகாராஷ்டிராவில் செய்ததைப் போல கிராமங்கள் தோறும், சேரிகள் தோறும் விகார்கள் அமைக்க வேண்டும். கிராமங்களில் எழும் விகார் என்னும் கட்டட அமைப்பே இந்து மதத்தின் மீது விழும் பேரிடியாக இருக்கும். அம்பேத்கர் இந்தியாவில் டெல்லி, பம்பாய், சென்னை, நாக்பூர் ஆகிய நான்கு பகுதிகளில் பிரமாண்டமான விகார்களும் பள்ளிகள், கல்லூரிகளும் அமைக்கச் சொன்னதைப் போலத் தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் மாவட்டத் தலைமை விகார்களும் சென்னை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் முதலான பகுதிகளில் மணடலத் தலைமை விகார்களும் அவை எல்லா மாவட்டங்களிலும் உள்ள விகார்களையும், அதன் பணிகளையும் ஒருங்கிணைத்துத் தொடர்ந்து செயலாற்றும் பணிகளைச் செய்யவேண்டும். எல்லா மாவட்டங்களிலும் பௌத்த நிறுவனங்களால் பள்ளிகளும், கல்லூரிகளும் அமைக்கப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இளைய தலைமுறையினரைச் சிறுவயதிலிருந்தே பௌத்தம் போதிக்கும் அறிவும், அறமும் நிரம்பிய மனிதர்களாக வளர்த்தெடுக்க உதவும்.

விகார்களில் தினமும் மக்களைக் கூட்டி ‘புத்தரும் அவரது தம்மமும்’ வாசிக்க வேண்டும். தினசரி தம்ம வாசிப்புக் கோயில்களில் அல்லது தேவாலயங்களில் நடப்பதைப் போல மந்திரங்களை உச்சரிப்பதும் கடவுள் மீது பாரத்தை இறக்கி வைத்துவிட்டுப் போவதுமாக இருக்கக் கூடாது. மகாராஷ்டிராவிலுள்ள பௌத்தர்கள் முன்பு கோயில்கள் கட்டியிருந்த இடங்களில் விகார்களை எழுப்பியிருந்தாலும் அங்கு பௌத்தக் கட்டடம் மட்டுமே இருக்கிறது. பௌத்தக் கருத்து இல்லை. அடையாள ரீதியாக ஒன்றுகூடும் தளமாகக் கட்டடமும் வேண்டும். அடையாள ரீதியாக ஒன்றாய் உணரும் கருத்தும் வேண்டும். ஒன்றை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டவர்கள் இன்னொன்றையும் செய்ய முடியாது என்பதில்லை. அப்பணியைத் தொடர வேண்டும். அதைத் தொடர்ந்து செய்ய, மக்களைச் சரியான முறையில் வழிநடத்தப் பயிற்சி பெற்ற பௌத்தத்தை ஆழக் கற்ற பிக்குகளும் பிரச்சாரகர்களும் இதைச் செய்ய வேண்டும். அம்பேத்கரின் 22 உறுதிமொழிகளில் உள்ளதைப் போலத் தெளிவாகவும் உறுதியாகவும் சாதி இல்லை, கடவுள் இல்லையென்பதை அழுத்தமாகச் சொல்ல வேண்டும். அன்பு, சமூக நீதி, சுயமரியாதை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் போன்ற சமூக விழுமியங்களைத் தம் அன்றாட வாழ்வில் இயல்பாகப் பின்பற்றுமாறும் சமூகத்திலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதின் துவக்கமாகத் தம்ம வாசிப்புகள் நடத்தப்பட வேண்டும்.

நீதியும், உரிமையும் மறுக்கப்படும் இடங்களில் அவற்றை நிலைநாட்டும் போராட்டங்களைச் செய்யும் மனத்திண்மையைத் தினசரி தம்ம வாசிப்புகளின் மூலம் மக்களிடையே வளர்த்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ‘நீயே உனக்கு ஒளியாவாய்’ என்பதைச் சொல்லிப் புரியவைத்து அவர்களின் சிக்கல்களுக்கு அவர்களே தீர்வுகளை அடைய வழிகாட்ட வேண்டும். அங்கிருக்கும் பௌத்தப் பிரச்சாரகர் மற்றும் பிக்குகள் அவர்களின் சிக்கலுக்கு வழிதேடி அதைக் களையும் முயற்சியில் இறங்கத் துணை செய்யவும், வழிகாட்டவும் வேண்டும். அவர்கள் கடவுளற்ற, மூட நம்பிக்கைகளற்ற, பகுத்தறிவின் அடிப்படையிலான பௌத்த அறக் கருத்துகளைப் பரப்புவதிலும், மக்களுக்குத் தேவைப்படும் நேரங்களில் வழிகாட்டும் தலைவனாகவும் திகழ வேண்டும். அம்பேத்கரின் மேற்கண்ட எல்லாக் கனவுகளும் நிறைவேறாமலே போனது என்பதால் இதுவெல்லாம் சாத்தியமாகுமா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழலாம்.

முதல் முயற்சியாக, தமிழ்நாட்டில் அயோத்திதாசர், சிங்கார வேலர் மற்றும் லட்சுமி நரசும், மகாராஷ்டிரத்தில் அம்பேத்கர் செய்ததைப் போலப் பௌத்தப் பண்பாட்டு இயக்கம் ஒன்றை உருவாக்குவதில் இருந்து இப்பணியைத் தொடங்க வேண்டும். தமிழ்நாடெங்கும் எல்லாத் தலித் குடியிருப்புகளிலும் விகார்கள் கட்ட ஊக்குவிக்க வேண்டும். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பார்ப்பனரல்லாதாரை அர்ச்சகராக்கும் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கமே பயிற்சிப் பள்ளிகளின் மூலம் பயிற்சியளித்ததைப் போலப் பௌத்தப் பிக்குகளுக்கான பயிற்சிப் பள்ளிகளை அரசாங்க உதவியுடன் ஆரம்பிக்கலாம். மெல்ல மெல்ல பௌத்த நிறுவனங்களும் துவங்கப்பட வேண்டும்.

அம்பேத்கரின் கேள்வியும் பதிலும்!

இவ்வாறாக அம்பேத்கரின் மேற்கண்ட திட்டங்களை நடமுறைப்படுத்துவதைத் தமிழ்நாட்டிலிருந்தே தொடங்கலாம். சாதி எதிர்ப்பு, ஒடுக்குமுறை எதிர்ப்பு, ஆதிக்க எதிர்ப்பு மற்றும் சுரண்டல் எதிர்ப்புச் சிந்தனைகளிலும், அது சார்ந்த போராட்டங்களிலும் முன்னணியில் இருக்கும் தமிழகத் தலித்துகள் இதற்கான முன்னெடுப்பை எடுக்கலாம். இந்தியாவைப் பௌத்த நாடாக்க வேண்டுமென்று கனவு கண்ட அம்பேத்கர் அதற்காகத் தயாரித்த செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்தான் பௌத்தம் வளர்வதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு. தன்னுடைய காலத்திற்குப் பிறகும் பௌத்தத்தைப் பரப்புவதற்காகத் திட்டமிட்டதில் இரண்டை மட்டும்தான் அம்பேத்கரால் தம் வாழ்நாளில் முழுமையாக நிறைவேற்ற முடிந்திருக்கிறது. ஒன்று, ‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ என்னும் அரிய அறிவுப் பொக்கிஷம். இரண்டு, பௌத்த மத ஏற்பு நடைமுறைகளும் செயல்திட்டங்களின் பட்டியலும். வழக்கம் போல அம்பேத்கர் தன் கடமையைச் செய்துவிட்டார். நாம் நம்முடைய கடமையை எப்போது செய்யப் போகிறோம்?

ஒடுக்கப்படும் மக்களை விடுதலை பெறச் செய்ய வேண்டுமெனத் திட்டமிட்ட அம்பேத்கர் ஒடுக்குபவரையும் சேர்த்து ஆதிக்க மனப்பான்மையை வளர்க்கும் கொடுமைகளிலிருந்து விடுதலைபெறச் செய்ய வேண்டுமெனச் சிந்தித்து முன்வைத்தத் தத்துவம்தான் பௌத்தம். பௌத்தத்தைப் பரப்புவது என்பது ஒடுக்குவோர், ஒடுக்கப்படுவோர் என்ற எல்லோரின் கடமையாகவும் ஆகிறது. அதிலும் குறிப்பாக, தினந்தோறும் ஒடுக்குமுறைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் ஒடுக்கப்படும் சமூகத்தின் உடனடிக் கடமை ஆகிறது.

அம்பேத்கரின் பௌத்தம் இந்தியாவில் எந்தத் தாக்கத்தையும் உண்டு பண்ணவில்லை என்று பலர் கருத்து சொல்கின்றனர். பௌத்தம் இந்து மதத்திற்கு வலிமையான மாற்று இல்லை என்றும் பலர் கருதிக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, இன்னொரு மதத்திற்கு மாறும் போது அம்மத அடிப்படையிலான மக்கள் ஆதரவு கிடைக்கும் அல்லது நிறுவனங்களின் ஆதரவு கிடைக்கும் என்றெண்ணிப் பிற மதங்களுக்கு மாறுவதை ஆதரிப்போருக்கு ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அம்பேத்கர் தம் காலத்தில் முற்றிலும் மறைந்துவிட்ட, குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த நிறுவனங்களின் ஆதரவும் இல்லாத பௌத்தத்திற்கு மாறினார். இந்து மதத்திலிருந்து வெளியேறுவதால் அரசியலமமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை இழக்க நேர்ந்திடும் என்று அறிந்தும் வெளியேற முடிவெடுத்தார் அம்பேத்கர். ஏன் அதைச் செய்தார்? இங்கிருந்தே சிந்திக்கவும், செயலாற்றவும் தொடங்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின் ஒரு பகுதியாக, தற்காலிக நிவாரணமாக உரிமைப் போராட்டங்களை நடத்திய அம்பேத்கர் முற்று முழுதான விடுதலை குறித்துச் சிந்தித்தே பௌத்தத்திற்கு மாறினார். அதற்கு முதன்மைக் காரணம் அதன் தத்துவம். அதாவது ‘பௌத்தமும் அதன் தம்மமும்’. பௌத்தம் மாறுவது குறித்துத் தயங்குவோருக்கும், அது குறித்துக் கேள்விகள் எழுப்புவோருக்கும் அம்பேத்கர் கேட்கும் கேள்வியும், அதற்கு அவர் அளிக்கும் பதிலும் இதுதான்.

அம்பேத்கர் கேட்கும் கேள்வி,

“உங்கள் மதத்தில் சாதியமைப்பு உண்டா? தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதா?”

அம்பேத்கர் அளிக்கும் பதில்,

“ஆம் என்றால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். பௌத்த மதத்திற்கு மாறுங்கள்!”

ஜெய் பீம்! நமோ புத்தாய!

(இந்தக் கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழிலும் வெளிவரும்)

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger