கிணறு
நூலகத்தில்
கடுந்தாகத்துடன் வாசித்துக்கொண்டிருக்கிறேன்
கிணறு என்ற சொல்லை அடைய
இன்னும் மூன்று பக்கங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது
மிகுந்த பிரயத்தனத்தின் பின் அப்பக்கத்தை அடைகிறேன்
தாகம் ஊற ஊற
அப்பக்கம்
மறு பக்கம்
எனக் கண்களால் ஓடி ஓடித் தேடுகிறேன்
கிணற்றைக் காணவில்லை
முந்தைய வாசகர்களால்
தாகம் தீர அருந்தப்பட்ட கிணறு
நீர் வற்றி
கடைசிப் பகுதிக்கு நகர்த்தப்பட்டிருந்தது.
நனைதல்
நினைவில் தோன்றும் அடர்வனங்களின்
கிளை ஒன்றில்
அலைந்து தனித்த பறவையான பொழுது
அதிகாலை திறந்துவிடும் ஒற்றை ஜன்னலினூடே
பாயும் குளிர் பட்டுச் சிலிர்க்கிறது அந்நினைவு
உருகி வழிந்து பெருக்கெடுக்கிறேன்
சருகுகளையும் கூழாங்கற்களையும்
அள்ளிச் சுமந்தோடுகிறேன்
சிறு மீன்கள் கொஞ்சம் தோன்றி மறைகின்றன
எதிர்ப்படும் பாறைகளில் முட்டிமோதி
சொற்கள் வெடித்துச் சிதறுகின்றன
சிதறிய சொற்கள்
கிளைகளாகி எட்டுத் திக்கும்
எல்லா மொழிகளிலும் பெயர்ந்துகொண்டிருக்கின்றன
அதில் ஒரு துளி மட்டும் உங்களை நனைக்கலாம்.