யோகேஷ் மைத்ரேயா கவிதைகள்

தமிழில்: சிவராஜ் பாரதி

சேரிகளில் பிறந்து
பார்ப்பனக் கூடாரங்களில்
பயில்வதில் உள்ள
ஓர் ஆபத்து என்னவெனில்,
நம் தாய்மொழியை இழந்த பிறகும்
உயிரோடிருப்பதாய் பாசாங்கு செய்வதே.

¥

தேனீயும் மலரும்
சிறந்த காதலர்கள்

மலரின் இதழ்களிலிருந்து
வாழ்வின் இனிமையைப்
பருகுகிறது தேனீ

தேனீயின் ரீங்கரிக்கும் சிறகுகளிலிருந்து
வாழ்வின் கானத்தைக்
கேட்கிறது மலர்

அச்சமயம்
அவை ஒன்றையொன்று
துன்புறுத்துவதில்லை

தேனீயும் மலரும்
சிறந்த காதலர்கள்

¥

நானொரு தலித் கவிஞன்
என்னை நீ நேசிப்பதாய் இருந்தால்,
ஜாக்கிரதை!
நான் உன் சாதிய மனநிலையைத்
தாக்கக் கூடும்.

¥

பாபாசாகேப்:
வெறிபிடித்த இத் தேசத்தில்
தவறுதலாகப் பிறந்தவிட்ட
ஜீரணிக்க முடியாத கனவு

அதனால்தான்
நாங்கள் அவரைப் பாதுகாத்து
எங்கள் பாடல்களிலும் கவிதைகளிலும்
கொண்டாடுகிறோம்

¥

சேரிகளில் இருந்து வந்த
நாங்கள்

எங்கள் காயங்களில்
மலர்களை நடுகிறோம்

எங்கள் காதலர்களின் உதடுகளில்
புரட்சியை எழுதுகிறோம்

எங்கள் சாபங்கள் வழியே
தேனை உமிழ்கிறோம்

இருண்ட எங்கள் வரலாற்றில்
கதிரொளியாய் வளர்கிறோம்.

¥

ந்தையின் தேவைக்கேற்ப
எழுதிக் குவிக்கும் இந்த
ஜாதி இந்து கவிஞர்களுக்கு
ஒருபோதும் புரியப் போவதில்லை:

இந்நாட்டைப் பொறுத்தவரை
கவிதை என்பது
வடிவத்தில் சோசலிசமாகவும்
நடையில் கம்யூனிசமாகவும்
கருத்தியலில் (உள்ளடக்கத்தில்) அம்பேத்கரியமாகவும்
இருக்க வேண்டும்.

l

யோகேஷ் மைத்ரேயா (பி. 1985)

நாக்பூரைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர். மகாராஷ்டிராவின் முதல் சாதி எதிர்ப்பு ஆங்கில நூல் பதிப்பகம் என்று கருதப்படுகிற பாந்தர்ஸ் பா பதிப்பகத்தின் (Panther’s Paw Publication) நிறுவனர், பதிப்பாசிரியர். மொழி, இசை, சினிமா, வரலாறு, சமூகம் போன்றவற்றில் நிலவும் சாதியம் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.

The Bridge of Migration (கவிதை), Flowers on the Grave of Caste (சிறுகதை), Of Oppressor’s body & Mind (இலக்கியக் கட்டுரைகள்) போன்ற சில நூல்களை எழுதியுள்ளார்.

Blues from Bhimnagar என்ற இவரது தொகுப்பிலிருந்து சில கவிதைகள் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

 

l sivaraj53.sb@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger