கை நீட்டி அழைத்த கலையின் கரங்களில் தலையைக் கொடுத்துவிட்டுப் போனவர்களின் பிள்ளைகளே நாம். ஆனால், பாதையின் குறுக்கே நடக்க இடைஞ்சலாகக் கிடக்கிறதென நாம் உற்சாகத்தோடு உதைப்பதோ அவர்களின் மண்டையோடுகளைத்தான். பொருட்பயன் மதிப்பற்ற ஒரு காரியத்தை வீரியம் குறையாமல் செய்துவிட்டுப் போனவர்களின் கதைகள் இக்காலகட்டத்தில் பழங் கதைகளாகவோ, பிழைக்கத் தெரியாதவர்களின் கதைகளாகவோ பார்க்கப்படுகின்றன. இந்தச் சூழலில் அஃக் பற்றியும் பரந்த்தாமனைப் பற்றியும் பேசுவது மிகவும் அவசியமாகிறது. இது நாம் யார், எங்கிருந்து வருகிறோம், எங்கு செல்ல வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டலாம்.
தன்னை ‘ஓர் எழுத்தாயுத மாத ஏடு’ என்கிற துணைத் தலைப்புடன் பகிரங்கமாக அறிவித்துக்கொண்டு, சேலம் மாவட்டம், ஜாகிர் அம்மாபாளையத்திலிருந்து வெளிவந்த அஃக் இதழ், 1972 – 1980 வரை (22 இதழ்கள்) வெளிவந்தது. 2006இல் சந்தியா பதிப்பகம் அஃக் இதழ்களின் தொகுப்பை வெளியிட்டது.
நவீன இலக்கிய வரலாற்றில் அஃக் பரந்தாமனின் பங்கு அளப்பரியது. அதுவரை இல்லாத அளவுக்கு, அச்சுத் துறையிலும், வடிவமைப்பிலும், தாங்கிவந்த படைப்புகளிலும் ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்தியது அஃக் இதழ். மேலும், இதுவரையிலான சிற்றிதழ் வரலாற்றில் இதழாசிரியரே சொந்தமாக இயந்திரம் வாங்கிப் போட்டு, குடும்பத்தோடு சேர்ந்து அச்சடித்துக் கொண்டுவந்த முதல் இதழ் என்ற பெருமையும் இவ்விதழுக்கே உண்டு. இன்றைக்கு ஒருசில இதழ்கள் குறுநாவல்களையும் நாவல் பகுதிகளையும் ஒரே படைப்பாளியின் கணிசமான கவிதைகளையும் வெளியிடுவதை நாம் பார்க்கிறோம். இதை, பிரமிளின் 38 கவிதைகள், கலாப்ரியாவின் 20க்கும் மேற்பட்ட கவிதைகள் என 70களிலேயே அஃக் தொடர்ச்சியாகச் செய்துவந்திருக்கிறது. ஐந்தாறு வருடங்களாக எழுதாமலிருந்த சுந்தர ராமசாமியை பசுவய்யாவாக மீண்டும் கொண்டுவந்தது. பிரமிளின் புகழ்பெற்றக் கவிதையான ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று’ கவிதையும், கலாப்ரியாவின் பாராட்டாலும் விமர்சனங்களாலும் புகழ்பெற்ற ‘அவள் அழகாயில்லாததாலே எனக்குத் தங்கையாகிவிட்டாள்’ கவிதையும் இவ்விதழில் வெளிவந்ததே.
சிற்றிதழ் என்றோர் இயக்கத்தைக் கட்டமைக்கவும் வளர்த்தெடுக்கவும் இங்கு படாதபாடு பட்டிருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து அவர்களின் குடும்பங்களும் அவற்றை அனுபவித்திருக்கின்றன. யோசித்துப் பார்த்தால் இலக்கியம் ஓர் அழகிய நீலியென அவர்களை மயக்கி அழைத்துச் சென்று கொன்றுபோட்டதோ என்றும், இல்லையில்லை இவர்களே தலையைத் திருகி அவள் மடியில் போட்டுவிட்டார்களோ என்றும், இல்லையில்லை நாம்தான் கொன்றோம் என்றும் சமயத்தில் முகம் மாறி மாறித் தோன்றும்.
பரந்த்தாமனைப் பற்றிக் கூறுகையில் பலரும் அவர் கோபக்காரர், முகத்திலடித்தது போல் பேசுவார் என்கிறார்கள். இயல்பில் அவர் ஒரு கலையொழுங்கை அதன் தீவிரத்தோடு செய்ய வேண்டுமென விரும்பினார். அதை மட்டுப்படுத்தும் எதையும் கறாராகக் கண்டிக்கவும் செய்தார். அதற்கான சிறு உதாரணமாக நான் சொல்ல நினைப்பது, இதழில் ஒரு சிறிய அறிவிப்புப் பகுதி இருக்கிறது. அதில் அஃக் இதழானது தன்னைக் குறித்து தனது வாசகர்களிடம் மனம் திறந்து கனிவாகவும் உறுதியாகவும் பேசுகிறது. அதை மேற்க்கண்ட படத்தில் வாசிக்கலாம்.
ஒருமுறை அஃக் பரந்த்தாமன் வடிவமைத்திருந்த கவிஞர் தமிழ்நாடனின் ‘நட்சத்திரப் பூக்கள்’ என்கிற நூலின் அட்டைப் படத்திலிருந்த தலைப்பைக் கண்டு பெரும் வியப்படைந்தேன். தலைப்பில் வரும் ஒவ்வோர் எழுத்துருவும் பூவைப் போலவே வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒரு வடிவமைப்பாளனாக, மென்பொருள்களின் காலமான இன்றைக்குக் கூட இவ்வளவு நேர்த்தியோடு வடிவமைப்பது சற்று சவாலான காரியமாகவே தோன்றுகிறது. டைப்போகிராபி என ஒன்று இருக்கிறது என்றே எனக்கு நான்காண்டுகளுக்கு முன்புதான் தெரியும். இன்னும் கூட இந்த இதழியல் வெளியிலும் பொதுவெளியிலும் இதுகுறித்த அறிமுகம் பெரிய அளவில் இல்லை. ஆனால், பரந்த்தாமன் 70களின் தொடக்கத்திலேயே டைப்போகிராஃபியில் புகுந்து விளையாடியிருக்கிறார். அவர் எங்கே டைப்போகிராபியைக் கண்டார், கிரியேட்டிவான லே-அவுட்களுக்கான மாதிரிப் பிரதிகளைப் பார்த்தார், அவற்றைக் காண எங்கெல்லாம் அலைந்தார் என்றெல்லாம் ஏகப்பட்ட யோசனைகள் ஓடுகின்றன.
தஞ்சாவூர் பெரிய கோயிலின் கட்டுமானங்களைக் குறித்துப் பல வியப்புகள் இருந்தாலும் கோபுர உச்சியிலுள்ள – 81 டன் – கல்லை எப்படித் தூக்கி அவ்வளவு உயரத்தில் வைத்தார்கள் என்பது பெரும் மர்மமாகவே இருக்கிறது. ஏலியன்களால் மட்டுமே செய்திருக்க முடியும் என்றெல்லாம் கூறுகிறார்கள். கிட்டத்தட்ட பரந்த்தாமனின் வடிவமைப்பைப் பார்க்கும்போதும் அதே எண்ணமே தோன்றுகிறது. தோதற்ற ஒரு காலகட்டத்தில் உட்கார்ந்துகொண்டு இத்தனை பரீட்சார்த்த வேலைகளையும் எப்படிச் செய்ய முடிந்தது என்ற குரல் உள்ளுக்குள் ஓயவேயில்லை.
வண்ணதாசனின் முதல் சிறுகதை நூலான ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’-க்கும், அஃக் இதழின் வடிவமைப்புக்கும், அச்சு நேர்த்திக்கும் என மூன்று தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். அஃக் இதழையும் அதன் இலச்சினையையும் உற்றுக் கவனித்தால் எவ்வளவு ஆழ்ந்த சிந்தனை மிக்க, உலகத் தரமான வேலைப்பாடு வெளிப்பட்டிருக்கிறது என்பதை அறியலாம். தேடிப் பார்த்தால், தமிழில் இவ்வளவு நேர்த்தியான பலகோண சாத்தியங்கள் இருக்கக் கூடிய வகையிலான இலச்சினைகளை இன்றைக்கும் காண முடியவில்லை. இந்த அட்டை மேற்கத்திய பாணியில் ரசனை மிக்க அழகியலோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இலக்கியத்துக்கு வெளியே இப்பணியைச் செய்திருந்தால் புகழ் ரீதியாகவும், பொருள் ரீதியாகவும் அவர் இன்னும் மிகப் பெரிய உயரத்தை நிச்சயம் அடைந்திருப்பார். மணல்வீடு வருடந்தோறும் ஜனவரி முதல் வாரம் நடத்தும் களரி மக்கள் கலை இலக்கிய விழாவில் சீரிய சிற்றிதழ் செயற்பாட்டுக்கான விருது “அஃக் பரந்த்தாமன்” பெயரில் வழங்கப்படுகிறது. தமிழில் வடிவமைப்புக்கென ஒரு விருது வழங்கினால் அது நிச்சயமாக அஃக் பரந்த்தாமன் பெயரிலேயே வழங்கப்பட வேண்டும். அவரே தகுதியானவர். அவரே முன்னோடி.
அஃக் பரந்த்தாமனுக்கு ஓவியத்திலும், வடிவமைப்பிலும், இலக்கியத்திலும், சினிமா இயக்குவதிலும் அதீத ஈடுபாடு இருந்தது. அவ்வகையில் ஓவியம், வடிவமைப்பு, இலக்கியம் ஆகியவற்றில் தனக்கிருந்த ரசனையையும் திறனையும் கொஞ்சமும் சூடு குறையாமல் இறக்கிவைக்க அஃக் இதழ் அவருக்குப் பெரிய களமாகவே அமைந்தது. எந்த அளவு சூழலுக்கான பிரதியாகக் கொண்டுவர வேண்டுமென நினைத்தாரோ அதேயளவு தனது கலையறிவின் பிரதியாகவும் அவ்விதழ் இருக்குமென நம்பினார். வறுமையின் கோடுகள் முகத்தில் விழ கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் இழுத்துப் பிடித்து இதழ் நடத்திய பின், இனியும் தாமதிக்காது தனது சினிமா இயக்கும் கனவை நோக்கிச் சென்னைக்குச் செல்ல வேண்டும் என முடிவெடுத்தார். ஏற்கெனவே தனக்கிருந்த இலக்கிய வேட்கைக்காக அம்மாவின் வைப்புநிதியையும் வீட்டையும் விற்ற பரந்த்தாமன், தனது சினிமாக் கனவுக்காக வாழைத் தோட்டத்தை விற்றார். சென்னைக்குச் சென்றவர் திருவல்லிக்கேணியில் வீடு வாடகைக்குப் பிடித்து, குடும்பத்தோடு குடியேறி, பகற்பொழுதுகளில் சென்னையின் சினிமா உலகச் சுழற்பாதைகளில் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் களைப்புடன் மனப்பிசகும் தொற்றிக்கொண்டது. பிறகு, அவரது மகள் அவரை மனநலக் காப்பகத்தில் சேர்த்தார். அதன் பின் விகடன் அவரைக் காப்பகத்தில் வைத்து நேர்காணல் செய்தது. அதன் வழியே சற்றுப் பொருளாதார உதவிகள் கிடைத்தன. ஏற்கெனவே மனவெளியில் திரும்பிவர முடியாத பாதையில் பயணித்த பரந்த்தாமன், கொஞ்ச காலத்தில் இறந்துவிட்டார். கூருணர்வோடும் கலைப் பெருஞ் செயல்களைப் புரிய வேண்டும் என்கிற தாகத்தோடும் இங்குமங்குமாய் அலைந்துகொண்டிருந்தவர் நல்லவேளையாக சுயநினைவு திரும்பாமலே இறந்துவிட்டார். தனது கனவுகளும் தானும் மண்ணாய்ப் போகப் போகிறோம் என்று தெரியாமலே இறப்பதென்பதும் ஒரு கொடுப்பினைதான்.
Illustration : Thilipkumar
பிரபஞ்சன் ஒரு மேடையில் இப்படிச் சொல்கிறார், “மூன்று வேளை நிம்மதியான சோறு கிடைத்திருந்தால் நான் இன்னும் சில கதைகளை எழுதியிருப்பேன், இந்த வாழ்க்கை இன்னும் கொஞ்சம் என்னைப் பயன்படுத்தியிருக்கலாம்.” கலை மனதின் தீவிரத்தோடு இயங்கும் யாருக்கும் இது பொருந்தும். அவ்வண்ணம் பரந்த்தாமனிடம் இன்னும் கொஞ்சம் பணம் இருந்திருந்தால் இன்னும் நான்கு ஊர் அலைந்து திரிந்து இன்னும் பல பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்து, நமக்கு இன்னும் கொஞ்சம் கொடையளித்துச் சென்றிருப்பார். வாழ்க்கை பரந்த்தாமனை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம்தான்.
இன்றைக்கு எழுத்து, ஓவியம், வடிவமைப்பு, இதழியல் என்று இயங்கும் அனைவரும் அஃக் இதழ்களை வாசிப்பதும் பரந்த்தாமனின் தீவிரச் செயற்பாடுகளை அறிந்துகொள்வதும் மிகவும் அவசியமானது. பரந்த்தாமனை அறிந்துகொள்வது என்பது நமது வேர்களை அறிந்துகொள்வது. லௌகீக வாழ்வில் இருக்கும் சிக்கல்களைச் சமாளிப்பதற்குள்ளாகவே இவ்வாழ்வு போதும் போதும் என்றாகிவிடும் நிலையில், சமூகம் சார்ந்தும் கலை சார்ந்தும் சிந்திப்பது, இயங்குவது எல்லாம் ஆகச் சவாலான காரியமே. ஒரு தனிமனிதன் பொருள் பயன்மதிப்பற்ற விஷயங்களுக்காகத் தன்னை எவ்வளவு ஒப்புக்கொடுக்க முடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்.
லினோ கட் ஓவியம் :
ஒரு காகிதத்தில் கோட்டோவியம் வரைந்து அதை மை தடவிய பலகையிலோ கெட்டி அட்டையிலோ ஒட்டி, ஏற்கெனவே வரையப்பட்ட அக்கோடுகளின் மீது பேனாவால் அழுத்தம் கொடுத்து வரைந்துவிட்டு அக்காகிதத்தை எடுத்துப் பார்த்தால், வரைந்ததின் அச்சு அந்த அட்டையில் தெரிந்தும் தெரியாததுபோல இருக்கும். அந்த அச்சை உற்றுக் கவனித்து சிறிய டெஸ்டர் (திருப்புளி) போன்ற உளியால் செதுக்க வேண்டும் (இன்றைக்கு வாகனங்களுக்குப் பெயர், எண், படங்கள் ஒட்டும் ஸ்டிக்கர் கடைகளில் இதே பாணியைத்தான் நவீன வசதிகளுடன் பின்பற்றுகிறார்கள்). பிறகு அதன் மீது மீண்டும் மை தடவ வேண்டும். இப்போது தடவிய மையானது அட்டையின் மேல் மட்டத்துக்குத்தான் இருக்கும். செதுக்கிய குழியான உட்பகுதியில் துளியும் மை இருக்காது. அதை எடுத்து, ஓவியம் எந்தப் பக்கத்தில் வர வேண்டுமென்று நினைக்கிறோமோ அந்தப் பக்கத்தில் நன்கு அழுத்தி ஒட்டி எடுத்தால் அட்டையிலிருந்த ஓவியத்தின் ஒரு படி காகிதத்தில் அப்படியே வந்துவிடும். இப்படி ஒவ்வொரு காகிதத்திலும் மை தடவித் தடவி, ஒட்டி ஒட்டி எடுக்க வேண்டும்.