பௌத்த அரசனே முருகன்

பொய்யாமொழி முருகன்

மீபத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது, இந்து அல்லாதவர்கள், இந்துக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பழனி முருகன் கோயிலில் கொடி மரத்தைத் தாண்டி உள்ளே அனுமதிக்கப்படக்கூடாது என்றும், ‘இந்து அல்லாதோர் கோயிலுக்குள் நுழைய தடை’ என்ற பதாகையைப் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனையொட்டிச் சமூக வலைதளங்களிலும் அறிவுத்தளங்களிலும் பெரும் சர்ச்சைகளும், விவாதங்களும், வினாக்களும் எழுந்துள்ளன. இந்து அல்லாதவர் என்பதை எவ்வாறு அடையாளப்படுத்துவது, இந்துக் கடவுள்களின் மீது நம்பிக்கை அல்லாதவர் என்று எவ்வாறு கூறுவது என்பன அவற்றுள் முக்கியமான வினாக்கள். மேலும், கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் என்பவை கடவுள்களின் நிலம். வெகுமக்கள் அங்கு மதங்களைப் பார்ப்பதில்லை. சாதாரணமாக, உழைக்கும் வெகுமக்களிடம் மதம் சார்ந்த இறுக்கமான கொள்கைகள், பார்வைகள் கிடையாது என்பதும் தமிழகத்தில் சமய இணக்கமே மேலோங்கியிருக்கிறது என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. இத்தகைய குரல்கள் ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் இந்துவான ஒருவன் அல்லது மற்றைய மதத்தினர் மக்கா, மதீனாவிற்குள் செல்ல அனுமதி கிடைக்குமா என்றும்; மத நம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கோயிலில் என்ன வேலை, கோயில்கள் என்ன பிக்னிக் செல்லக்கூடிய இடங்களா என்றும் பல்வேறு விதமான எதிர் கேள்விகளும் எழுந்துள்ளன. இவ் விவாதங்கள் வெகுமக்கள் தரப்பில் நடைபெற்றுவந்தாலும் அறிவுத் தளத்தில் இத்தீர்ப்பையொட்டி வேறுவிதமான உரையாடல்களும் விவாதங்களும் நடைபெற்றன. முருகன் இந்துமதக் கடவுளே அல்ல என்றும், முருகன் அல்ல அருகன் என்றும், முருகன் சமணர் என்றும் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தச் சூழலில் இந்திய வரலாறு என்பதே பார்ப்பனியத்திற்கும் பௌத்தத்திற்குமான மோதல்தான் என்று ஆராய்ந்து சொன்ன பாபாசாகேப் அம்பேத்கருக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா என்பது இந்து என்பதிலிருந்து வந்ததல்ல, மாறாக ஐந்திரன் என்னும் ஐம்புலன்களையும் அடக்கி ஆண்ட இந்திரனின் தேசம் என்பதிலிருந்தே ‘இந்திரதேச சரித்திரம்’ தொடங்குகிறது என்று எழுதி உலகிற்கு உள்மெய்யை வெளிப்படுத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர். அவர் தமிழ்ச் சிந்தனையாளர்களில் மிக முக்கியமானவர். புகழ்பெற்ற மருத்துவராக விளங்கியவர். அத்துடன் பழந்தமிழ்ச் சுவடிகளைப் பாதுகாத்தும், அவற்றை அச்சுக்குக் கொண்டுவர உதவிய குடும்பப் பின்னணியைக் கொண்டவர் அயோத்திதாசர். இதுதவிர தமிழன் (1907 – 1914) என்னும் வார ஏட்டினை ஏழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய அனுபவம் கொண்டவர். மேலும், அவ்வையாரின் ‘ஆத்திச்சுவடி’, வள்ளுவரின் ‘திரிக்குற’ளுக்கு உரை எழுதியவர். அதேபோல் பல சுவடிகளில் உள்ள இலக்கியங்களையும் பாடல்களையும் தான் நடத்திய தமிழன் இதழில் முதன்முதலாக வெளியிட்டுவந்த தமிழ்ப் புலமையாளர். அந்தவகையில், இன்றைக்கு விவாதத்துக்குள்ளாகியுள்ள முருகன் பற்றிய பண்டிதருடைய பார்வையினையும் அதன் பொருத்தப்பாடுகளையும் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.

முருகன் பிறப்புப் பற்றிக் கூறப்படும் வைதீகக் கதை

சூரபத்மன் என்னும் அசுரகுலத் தலைவன் தேவர்கள் அனைவரையும் சிறைபிடிக்கிறான். இதனால் தேவலோகம் வெறிச்சோடுகிறது. தேவர்கள், திருமால் மற்றும் பிரம்மனிடம் முறையிடுகின்றனர். ‘சூரபத்மன் பெற்றுள்ள வரத்தால் தங்களால் அவனை அழிக்க முடியாது. சிவனின் சக்தியால்தான் அழிக்க முடியும்’ என்று கூறிவிடுகின்றனர். தேவர்கள் சிவனிடம் வரும்பொழுது சிவன் தியானத்தில் இருப்பதால் அவருடைய சக்தி வெளிப்பட வாய்ப்பில்லை என்று மன்மதனை அணுகுகின்றனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதன் காதல் அம்புகளை சிவன் மீது ஏவுகிறான். இதனால் சிவனின் தியானம் கலைகிறது. கடும் கோபம் கொண்ட சிவன் தன்னுடைய நெற்றிக்கண்ணைத் திறந்து மன்மதனை எரித்துவிடுகிறான். தேவர்கள் அனைவரும் சிவனிடம் நடந்தவற்றைக் கூறவும் சிவன் மனமிறங்கி, ‘யாருடைய கண்களுக்கும் தெரியாமல் இருப்பாய்’ என்ற சாபத்துடன் மன்மதனுக்கு உயிர் கொடுக்கிறார். சிவனுடைய நெற்றியிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள் அக்னி தேவனால் சரவணப் பொய்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாகப் பிறக்கின்றன. அவை கார்த்திகைப் பெண்களால் வளர்த்தெடுக்கப்படுகின்றன. ஒருமுறை பார்வதியும் சிவனும் சரவணப் பொய்கைக்கு வந்து ஆறு குழந்தைகளையும் இறுகக் கட்டித் தழுவி ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்தியோஜதம், ஆதோமுகம் ஆகிய ஆறுமுகங்களுடன் ஓர் உருவமாக மாற்றிவிடுகின்றனர். இந்த முருகனுக்கு பார்வதியானவள் தனது முழு சக்திகளையும் ஒன்றுதிரட்டி வேல் ஒன்றினைப் பரிசாகக் கொடுக்கிறார். அந்த வேலைக் கொண்டு சூரபத்மனுடன் போரிட்டு வெற்றி பெறுகிறான். தோற்றுப்போன சூரபத்மன் ‘உன் அடியிலேயே இருக்க வேண்டும்’ என்று கேட்கிறான். முருகன் தன்னுடைய வேலால் அவனை இரண்டாகப் பிளந்து ஒரு பாகத்தைச் சேவல் கொடியாகவும் மற்றொரு பாகத்தை மயில் வாகனமாகவும் மாற்றி தன்னடியிலேயே வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

பௌத்த மன்னனே முருகன்

வைதீகக் கதைக்கு நேரெதிரான பௌத்தக் கதையினை பின்கலை நிகண்டு, வீரசோழியம், திருமுருகாற்றுப்படை, நாரைக்குறவஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களின் பாடல் வரிகளை எடுத்துக்காட்டி அயோத்திதாசர் விளக்கம் தருகிறார். அதில் முருகன் பௌத்த அரசன் என்கிறார். அதாவது, “பூங்குறிஞ்சி என்றும் பழனி என்றும் அழைக்கப்படுகின்ற மலையினை ஆண்டுவந்த பௌத்த அரசன் மருகன் என்பவனாவான். அவனது மனைவி கங்கை. அரசனான மருகனுக்கும் அரசியான கங்கைக்கும் ‘விசாக நட்சத்திரத்தில்’ ஓர் ஆண் குழந்தைப் பிறக்கிறது. அக்குழந்தைக்கு சரவண (சிரவண) சங்கத்தில் கலைகளும், கல்வி நூல்களும் கற்பிக்கப்படுகிறது. குழந்தைப் பருவம் கடந்து குமரப்பருவம் வந்தவுடன் அரசன் (அரன்) பட்டம் ஏற்று தெய்வானை என்னும் அரசியைத் திருமணம் செய்து இன்பமாக வாழ்ந்துவருகிறான். இந்நிலையில் மற்றொரு மலையில் வள்ளி என்னும் அழகிய மங்கை இருப்பதை அறிந்து அவள் மீது மையலுற்று அவளை அடைவதற்கு வியாபாரியைப் போல் வேடமிட்டுச் செல்கிறான். அப்படியும் வள்ளியை அடைய முடியவில்லை. இந்நிலையில் பௌத்த அரசர்களுக்குள் வழங்கிவந்த ‘மயில் வாகனச் சூத்திரம்’ என்பதன் மூலம் செய்யக்கூடிய கருவி அல்லது வாகனம் ஒன்றைச் செய்து வள்ளி இருக்கின்ற இடத்திற்குச் சென்று வள்ளியை அச்சூத்திரத்தினால் செய்த மயில் ஊர்தியில் அமரவைத்துக் கூட்டிவருகிறான்.

Illustration : RudraAsianArt

மயில் சூத்திர வாகனம்

சூத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள முறைகளைச் செய்யக்கூடிய கருவியாகும். அதாவது அரக்கு, மெழுகுநூல் போன்றவற்றால் மயில் போன்று ஓர் உருவம் செய்து சூஸ்திர இறக்கைகள் அமைத்து நினைத்த இடங்களுக்குச் சென்று வரக்கூடிய கருவி. இதில் மஞ்சளும் அரக்கும் சேர்ந்துள்ளதால் ‘மஞ்ஞை’ என்ற பெயரும் இதற்கு வழங்குவர்.

மேற்கூறிய மயில் சூஸ்திர வாகனத்திற்குச் சான்றாக, ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் சச்சநந்தன் என்ற பௌத்த மன்னன் மயில் சூத்திரம் செய்ததை அயோத்திதாசர் எடுத்துக்காட்டுகிறார்.

அந்தரார்தர் மயனே யென வையுறுந்
தந்திரத்தாற் றம்நூல் கரை கண்டவன்
வெந்திர வான் பெருந்தச்சனைக் கூவியோர்
எந்திரவூர்தி யியற்றுமினென்றான்.
பல்கிழியும் பயினுந்துங்கி நூலோடு
நல்லரக்கு மெழுகுந் நலஞ்சான் றன
அல்லனவும் மமைந்தெழு நாளினுட
செல்வதோர் மாமயில் செய்தன னன்றே.
பீலிநன் மாமயிலும் பிறதாக்கிய
கோநன் மாமயிலுங் கொடுசென்றவன்
ஞானமெலா முடையா னடிகைதுழு
தாழுமிம் மஞ்ஞை யறிந்தரு ளென்றார்.
தன்னெறி நுனயந்தா னன்றுனன்றிது
கொன்னறியிற் பெரியாயிது கொள்கென
மின்னெறி பல்கலமே தகப்பெய்ததோர்
பொன்னறைஞான் கொடுத்தான் புகழ் வெய்யோன்
ஆடியன்மா மயிலூர்தி யையவ்வழி
மாடமுகங்காவு மடுத்ததோர் சின்னாள் செலப்
பாடலின்மென்மேற் பயப்பயந்தான்றுரந்
தோட முறுக்கி யுணர்ந்தான்
பண்டவாழ் விரலிற்பாவை பொறிவலத் திருப்பப் பொங்கி
விண்டவழ் மேகம் போழ்ந்து விசும்பிடைப் பிறக்கும் வெய்ய
புண்டவழ் வேற்கட் பாவை பொறியிடந் திரிப்பத் தோகை.
கண்டவர் மருளவீழ்ந்து கால்குவித் திறங்குமன்றே

குறிஞ்சி அரசனாகிய முருகன் மயில்வாகனம் என்னும் சூத்திர வாகனத்தில் வள்ளியம்மனை அமரவைத்து வரும்போது வள்ளியின் உறவினர்கள் சண்டைக்கு வருகின்றனர். அவர்கள் எய்த அம்புகள் எதுவும் தன்மீதும், வள்ளியம்மன் மீதும் படாத வண்ணம் அவற்றை உதறிவிட்டு அவர்களைப் படுகளம்கிளர்த்தி தன் மாளிகைக்குக் கொண்டுவருகிறான். அதனைத் தொடர்ந்து கலைநூல்களில் தெளிந்த புலவனாகி சில காலம் இல்லற வாழ்வில் ஈடுபடுகிறான். அதன் பின்னர் தன்ம சங்கத்தில் சேர்ந்து பகவன் புத்த பிரானை வணங்கி அரசர்கள் போற்றும் அரசனாக விளக்குகிறான்.

முருகனுக்கு வழங்கப்பெறும் வேறு பெயர்களும் அதன் காரணங்களும்

தாசருடைய பார்வையானது நமக்குப் பல்வேறு புதிய வெளிச்சங்களைத் தரக்கூடியது. பௌத்தத்திற்குரிய பலவற்றை அதாவது பெயர்கள், சடங்குகள், குறியீடுகள், சிலைகள், சின்னங்கள், வழிபாட்டிடங்கள் என எத்தனையோ விசயங்களை வைதீகச் சமயங்கள் தனதாக்கிக்கொண்டன என்றும், அதற்காகப் பல்வேறு தந்திரங்கள் செய்தன என்றும் கூறுகிறார் அயோத்திதாச பண்டிதர். ஒரு பொய்யான கதையைத் திரும்பத் திரும்பக் கூறும்போது வெகுமக்களின் ஏற்பைப் பெற்றுவிடுகின்றன என்கிறார். மேலும், ஒன்றைக் காலத்தால் பழைமையானது என்றும் காலாதீனமானது என்றும் கதை சொல்வதன் மூலம் என்றென்றைக்கும் திரிபடைந்தவையே நிலையாக இருந்தன என்று வைதீகம் கட்டமைக்கிறது என்கிறார். இதன் தொடர்ச்சியில்தான் அயோத்திதாசர், சொற்களைக் கையாளும் விதம் மற்றும் பொருள் கொள்ளும் விதம் ஆழ்ந்த அறிவுப் பின்புலத்தில் காரண காரியத்துடன் விளங்கும் தன்மையுடையது. எனவே, நாம் இன்றைக்குச் சொற்களைக் கையாளும் தன்மையில் அல்லாமல், சொற்களை முன் பின்னாக மாற்றிப் பொருள் கொள்ளுதல், ஓர் எழுத்தை மாற்றுதல், பெயர்ச்சொல் என்று நாம் நினைத்ததை வினைச்சொற்கள் என்பார். அதுபோல சொற்களில் ஏற்றப்பட்டுள்ள திரிபுகளைச் சுட்டிக்காட்டி அதன் அடியாழத்தில் புதைந்துள்ள அர்த்தத்தை (அந்தரார்த்தத்தை) வெளிக்கொணர்வார். உதாரணமாக முருகன், மருகன், அருகன் என்ற சொற்களில் முதல் எழுத்து மட்டுமே மாற்றம் பெற்றுள்ளது. அதுபோல திரி என்ற சொல்லை திரு என்று ஓர் எழுத்தை மட்டும் மாற்றுதல் – திரிக்குறள், திரிவாசகம், திரிமந்திரம், திரிச்சிராப்பள்ளி போன்றவற்றைக் குறிப்பிடலாம். அதுபோல அசுரர், ராட்சசன் என்ற சொற்களையும் எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக இவை பெயர்ச் சொற்களாகவே சுட்டப்படுகின்றன. ஆனால், பண்டிதர் அதனை மறுத்து அவை வினைச்சொற்கள் என்று குறிப்பிடுகிறார். சுராபானம் முதலிய போதை வஸ்துக்கள் உண்ணாதவர்கள் அசுரர்கள் என்றும் ஈகை, விரதம், அறிவு உற்பத்தியைத் தேடுவது, கேள்வி முயலுதல், நன்மை, தீமை என்பவற்றைப் பகுத்துப் பார்ப்பவர்கள் ‘ராட்சசர்’ எனப்படுவர் என்று அதன் உள்ளர்த்தங்களை வெளிக்கொண்டுவருகிறார். அந்தவகையில்தான் முருகனுக்கு வழங்கப்படுகிற ஆறுமுகன், கந்தன், விசாகன், மாயோன், அரண்மகன், கார்த்திகேயன், சரவணன் போன்றவை பெயர்ச்சொற்கள் அல்ல, அவை வினைச்சொற்கள் என்றும் முருகன் செய்த செயலுக்காக அவை வழங்கப்பட்டன என்கிறார். இதனை பிங்கலநிகண்டு முதலிய நூல்களில் இருந்து விளக்கம் தருகிறார்.

வேய்ந்த பூங்குறிஞ்சி வேந்தன் வேலினுக் கிறைவிசாகன்
சேந்தன் காங்கேயன் செவ்வேள் சிலம்பன்மா மஞ்ஞையூர்தி
வாய்ந்த சூர்ப்பகைவன் வள்ளி மனவாளன் தெய்வயானை
காந்தனே குமரன் கந்தன் கலையுணர் புலவனும் பேர்
முருகன்வேள் சாமியாறு முகன் குகன் குழுகன் மாயோன்
மருகன்சேய் கார்த்திகேயன் வருபகை வென்றான் செட்டி
யரன்மகன் கங்கை மைந்த னாண்டலைக் கொடியுயர்ந்தோன்
சரவணபவன் கடம்பன் றாருகற் செற்றோனாசான்.

ஆறுமுகன் என்னும் பெயர்க் காரணம்

பௌத்த அரசனான முருகன், தன்ம சங்கத்தில் சேர்ந்து அரசர்கள் எல்லோரும் போற்றும் கலை நூல் முகம் ஒன்று, சித்து நிலை வாய்க்கப் பெற்ற சிலம்பு முகம் இரண்டு, மந்திர யோசனை ஊட்டுகின்ற மதிமுகம் மூன்று, அனைத்து உயிர்களையும் தன்னுயிர் போல் காக்கின்ற சாந்தமானவர்களான அந்தணர்களுக்குக் காட்டுகின்ற முகம் நான்கு, சாந்த நிலையால் அனைவரையும் அறிவூட்டுகிற சந்திரமுகம் ஐந்து, மேலும் அவரவர் பக்குவநிலைக்கேற்ப காட்சி தருகின்ற முகம் ஆறு என ஆறுமுகம் என்ற சொல்லிற்கான விளக்கங்களையும் அதன் காரணங்களையும் தருகிறார். இவ்வாறு ஞான ஆசிரியராக விளங்கியதால் முருகனுக்கு ஆறுமுகம் என்று பெயர் விளங்கியது என்று கூறுகிறார்.

பன்னிருகரத்தோன்

ஞானாசிரியனான முருகனுக்குப் பன்னிருகைகள் என்பது யாது என்பதைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். அதாவது, ஈகை அளிக்கும் ஒரு கை, இன்னமுது அளிக்கும் கை, ஞானமரபினர்களைச் சேர்க்கும் கை, அன்பை நம்பியவர்களைத் தேடும் கை, அருள் அறமுத்திரை காட்டும் கை, கியான மணிகளை எடுத்தூட்டும் கை, மந்திராலோசனை குறிக்கும் கை, அறமிகுந்தோரை மார்புடன் சேர்த்தணைக்கும் கை, அங்கங்கு சங்கங்கள் அமைக்கும் இரு கை, தசசீலங்களான தரும சக்கரத்தை வலந்திருகும் கை, வானவர் மகளிரான ஞானப் பெண்களுக்கு நன்மணமூட்டும் கை என்று பன்மனி வாய்ந்த பன்னிருகையோன் என்று பலரும் புகழ்ந்து பாடி வணங்குவதற்கான காரணங்களைச் சொல்கிறார்.

கந்தசாமி உள்ளிட்ட பிற பெயர்களுக்கான காரணங்கள்

முருகன் பௌத்த சங்கத்தைவிட்டு வெளியே ‘உன்மத்தர்’ போல உலறிக்கொண்டு திரிந்ததாலும், குப்பைகளில் உள்ள கந்தைத் துணிகளை எடுத்து அணைத்துக்கொண்டு திரிந்ததாலும் கந்தசாமி என்று அழைக்கப்பட்டார். மேலும், பூங்குறிஞ்சி எனப்பட்ட பழனி மலையை ஆண்டதால் மலையரசன் என்று அழைக்கப்பட்டான். மருகன் என்னும் பௌத்த மன்னனின் மகன் ஆதலால் அரன்மகன் என்று அழைக்கப்பட்டான் என்கிறார். இங்கு கவனிக்கப்பட வேண்டியது, சங்கரன் என்ற சொல்லில் இருந்தே அரன் என்னும் பெயர் வந்துள்ளது. அதாவது, சங்கரன் என்பது பௌத்தச் சங்கத்தைச் சேர்ந்தவன். புத்தர் அந்திமமான நிகழ்வைப் பௌத்தர்கள் சங்கராந்தி என்று கொண்டாடிவருவதன் மூலம் இதனை அறிந்துகொள்ளலாம். மேலும் சங்கமித்திரன், சங்கதருமன், சங்கஅறன் என்று புத்தருக்கு வழங்கப்படுகிற ஆயிரம் பெயர்களிலிருந்தும் அறியலாம். அதுபோல விசாக நட்சத்திரதத்தில் பிறந்ததால் விசாகன் என்றும் இரு மனைவியைப் பாகங் கடந்ததால் கடம்பன் என்றும், கலைநூல்களைக் கற்று விளங்கியதால் புலவர் என்றும், குமர பருவத்தில் எல்லாச் சித்துக்களும் விளையாடிச் சிறப்படைந்ததால் குமரன் என்றும், சரவணப் பள்ளியாம் புத்தசங்கத்தில் சேர்ந்து ஆறு அறஹத்துகளின் ஞானமுது உண்டதனால் சரவணபவன் என்றும், கார்த்திகை நட்சத்திரத்தில் பரிநிருவாண நிலையான சமாதி நிலையை (ஆதிக்குச் சமமாதல் – ஞானநிலை அடைதல்) அடைந்ததால் கார்த்திகேயன் என்றும் முருகனுக்கு பல பெயர்கள் உண்டு. மேலும், முருகன் பரிநிருவாணமடைந்த கார்த்திகை நட்சத்திர தினத்தில் மக்கள் அனைவரும் முருகனை நினைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியை இன்றைக்கும் பார்க்க முடியும். கார்த்திகை விரதத்தைச் சாதாரணமாக மக்கள் கடைபிடிக்கும் நடைமுறையுள்ளது.

முருகனுடைய சேவல்கொடியும் காவடியும்

அரசனாகிய முருகன் பக்கத்து மலையில் வள்ளியம்மன் என்ற மங்கையைச் சூத்திர மயில் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வருகையில் வள்ளியம்மையின் சுற்றத்தினர் அவளைத் தேடிக்கொண்டு குறிஞ்சியரசன் முருகன் மாளிகைக்கு வந்துவிடுகின்றனர். இந்நிலையில் அரசன் முருகன் ஒரு சித்து விளையாட்டு விளையாடுகிறார். அதாவது, மேல்மாடங்கள் எங்கும் கோழிகள் மேய்வதாகச் செய்கிறார். இதைப் பார்த்ததும் வள்ளியைத் தேடி வந்தவர்கள் வள்ளியை மறந்து கோழிவேட்டையில் ஈடுபடுகின்றனர். அன்று முதல் முருகனுடைய அரண்மனை மேல் மாடத்தில் சேவல் கொடி பறந்தது. இதனால்தான் முருகன் சேவல் கொடியோன் என்று அழைக்கப்பட்டான்.

குறிஞ்சி நாட்டரசனாகிய முருகன் சரவணப் பள்ளியாம் பௌத்தச் சங்கத்தில் சேர்ந்து ஆறு அறஹத்துகளிடம் ஞானஉபதேசம் பெறுகிறான். பின்னர் வேங்கை மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து வினைகளை வென்று முக்தி அடைந்தபின் தன்னுடைய நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவரையும் அழைத்து தன்மசங்கத்தோராகிய பௌத்த அறஹத்துகளுக்கு அன்னக்காவடியும் அமுதகாவடியும் அளிக்க வேண்டும் என்று ஆணையிடுகிறான். குறிஞ்சி நாட்டு மக்களும் அவ்வாறே செய்கின்றனர். இத்தகவல்களை சாரண சாக்கியர் என்பவர் இயற்றியுள்ள ‘அமுதகாவடி அஞ்சல்’ என்ற நூலில் உள்ள செய்தியிலிருந்து எடுத்துக்காட்டி விளக்கம் தருகிறார் பண்டிதர். ‘அமுதகாவடி அஞ்சல்’ ஒரு காப்புச் செய்யுளும் 108 பாடல்களும் கொண்ட நூலாகும். இந்நூல் இன்றைக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆனால், ஐந்து பாடல்களைத் தனது இதழில் வெளியிட்டுள்ளதன் மூலம் காப்பாற்றியுள்ளார். அப்பாடல்கள் பின்வருமாறு,

அமுதகாவடி அஞ்சல் – காப்பு

முருகக்கடவு ளறுமகத்தானை
இருகைத்தொழுது யேற்றிடுவாமே
வேங்கை மரத்துற்றான் விளித்தான் வினைதீர்த்தான்
றூங்கா மற்றூங்கி சுகமுற்றான் – பாகங்குரங்கக்
கழனியான் சேவடியைக் கண்டுக் களித்தற்கு
பழனியான் காவடியைக்கொண்டு.
திருமுருகன் குரவர்மகன் திவ்யசேவடி
அருமறையோர்க் கூட்டுமபிஷேகக்காவடி.
அண்டர்கள் சேனாதிபநற் குமுதன்சேவடி
உண்டறவோர்க்குயிரளிக்கு ம்மூதகாவடி.
திரன்மிகுந்தோரன்பன் மலைவாசச்சேவடி
பரமர்மகிழ்ந் தருந்திடும்பா யாசக்காவடி.
உற்றவடி வேலனிரு மின்னர் சேவடி
பற்றறுமடியார்களுண்ணு மன்னக்காவடி.
அறுமுகத்த னறுவெழுத்த னரியசேவடி
சிறுவர்பள்ளி சரவணத்தோர்க்குரியகாவடி.

முருகன் அரசன் என்பதைத் தொல்லியல் நோக்கில் கோ.சசிகலா பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘முருகன்’ என்ற சொல்லின் வேர்ச்சொல் ‘முரு’ என்பதாகும். முரு என்ற வேர்ச்சொல்லிலிருந்து முருக்கிய என்ற வினைச்சொல் தோன்றியது என்கிறார். முருக்கிய என்பது வீரனைக் குறிக்கிறது. மேலும் முருகனின் தோற்றமாகக் கையில் வேல், நெற்றியில் கண்ணி மாலை, மார்பில் சன்னவீரம், வெற்றிப்பூ மற்றும் வீரனுக்கு உரிய அரையாடை ஆகியவை சங்க இலக்கியத்தில் காட்டப்படுகின்றன. முருகனின் இருப்பிடமாக வேங்கை மற்றும் கடம்ப மரம் காட்டப்படுவதைச் சுட்டிக்காட்டுவதோடு முருகனுடைய பல பெயர்களையும் வடிவத்தினைவரிவாக எடுத்துக்காட்டுகிறார். “குமார தந்திரத்தில் முருகனின் பெயர்கள் சக்திதாரா, ஸ்கந்தா, சேனாபதி, சுப்பிரமண்யா, கஜவாகனா, சரவணபவா, கார்த்திகேயா, குமரா, சண்முகா, தாரகாரி, சேனானி, பிரம்ம சாஸ்தா, வள்ளி கல்யாண சுந்தரமூர்த்தி, பாலஸ்வாமி என்று உள்ளன. இதில் வீரமுடையவன், தாய்தெய்வத்தோடு இணைந்தவன், படைத்தலைவன், யானையை வாகனமாக உடையவன், குறிஞ்சி நிலத்தலைவியை மணம் புரிந்தவன், இளமையானவன் போன்ற பெயர்கள் தமிழ் நிலத்திற்குரியவை. மேலும், போர் ஆற்றல் வாய்ந்த முருகன் சங்க இலக்கியங்களில் சுடர்விடு இலைவடிவ வேலைத் தாங்கி நிற்பவன் என்றே காட்டப்படுகிறான். பல்லவர் காலத்தில் பிரம்மசாஸ்தா என்ற முருகனின் திருக்கோலம் புகழ்பெற்றது. மாமல்லபுரம் திரிமூர்த்தி குகையில் பிரம்மனின் படைப்புத் தொழிலை முருகன் ஏற்ற பின்பு உருவான பிரம்மசாஸ்தா என்ற உருவ அமைதியில் அக்கமாலையும், கெண்டியும் கையில் கொண்டுள்ளமையும், சோழர் காலத்தில் சக்திப்படையும் வச்சிராயுதமும் கொண்டவனாகவும் சிற்பங்களில் காட்டப்படுவதும், பல்வேறு வடிவங்களுக்கு ஆகமங்களில் விதி கூறப்படுதலும் முருகன் தமிழ் நிலத்திலிருந்து பரந்துபட்ட நிலத்தின் தெய்வமானதைக் காட்டி நிற்கிறது” என்கிறார் (கோ.சசிகலா, ‘தொல்லியல் நோக்கில் தமிழ்நாட்டுக் கடவுளரும் வழிபாட்டு மரபுகளும்’, பக். 85, 86). மேலே கூறப்பட்டுள்ள பெயர்களில் சக்திதாரா, தாரகாரி, பிரம்ம சாஸ்தா என்ற பெயர்கள் பௌத்தத்தோடு தொடர்புடையவை. தாரா என்பது பௌத்தத்தில் உள்ள பெண் தெய்வத்தைக் குறிக்கும். அதுபோல சாஸ்தா என்பது பௌத்தச் சமயக் கடவுளாகும். கேரளத்தில் உள்ள சாஸ்தா கோயில் என்பது ஆய்வு முடிவாகும். கேரள அரசே இதனை ஏற்றுக்கொண்டுள்ளது. தொல்லியலாளர் சசிகலா குறிப்பிடக் கூடிய பிரம்மசாஸ்தாவின் உருவம் அக்கமாலையையும் (உத்திராட்சமாலை, ஜெபமாலை), கெண்டியையும் (நீர்குடுவை) கையில் கொண்டிருப்பது துறவுக்கோலத்தைக் குறிப்பதைக் கவனத்தில் கொள்ளலாம்.

இது இவ்வாறு இருக்க, பழனியில் இன்றைக்கும் உள்ள நடைமுறையையும் மக்களின் நம்பிக்கையினையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது, பழனி கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் காவியுடை (சீவர ஆடை) அணிந்து வருகின்றனர். மேலும், பௌத்தத் துறவிகள் நடந்து செல்வதைப் போலவே பாத யாத்திரையாக வருகின்றனர். அத்துடன் தமிழகத்துக் கோயில்களில், அதிகமான எண்ணிக்கையில் தலையை மழித்துக்கொள்கிற வழக்கம் இங்குதான் காணப்படுகிறது. அதுபோல இந்தக் கோயிலில் முருகனுக்கான அலங்காரம் செய்யும்போது ராஜ அலங்காரமும், ஆண்டி போன்ற அலங்காரமும் செய்யப்படுகின்றன. பொதுமக்கள் சாமி தரிசனம் செய்யும்போது ஆண்டிக் கோலத்தில் பார்த்தால் உடனே வந்துவிட மாட்டார்கள். இருந்து இராஜ கோலத்தைப் பார்த்துவிட்டே வருகின்றனர். அத்துடன் பண்டிதர் சொல்வதைப்போல பக்தர்கள் தங்களுடைய தோளில் காவடியைச் சுமந்து வருகின்றனர். மேலும் கோயிலுக்குச் செல்லும் முன் சரவணப் பள்ளியின் உருவகமாக உள்ள சரவணப் பொய்கையில் மூழ்கிய பின்பே செல்கின்றனர். பழனிக்குச் செல்லும் பக்தர்கள் அரரோகரா, அரோகரா என்ற சரணகோசங்களை எழுப்பியபடிச் செல்வதை இன்றைக்கும் பார்க்க முடியும். இந்தக் கோசத்தின் ஆதி வடிவம் அறஹத்தோ, அறஹத்தோ என்பதாகும். அறஹத் என்பது பௌத்தத் துறவிகளைக் குறிக்கக்கூடிய சொல்லாகும். பொதுமக்கள் பௌத்த அறஹத்துகளை அறஹத்தோ. அறஹத்தோ என்றழைத்து அவர்களுக்கு அன்னம் உள்ளிட்ட பொருட்களைத் தானமாக வழங்கிவந்தனர். இதன் தொடர்ச்சியை இன்றைக்கும் மக்கள் செய்துவருவதைப் பார்க்க முடியும். அதாவது, பழனிக்குச் செல்லும் வழியெங்கும் அன்னதானம் வழங்குவதையும், நீர்ப்பந்தல் அமைத்துத் தாகம் தணிப்பதையும், பல உணவுப் பொருட்களைத் தானம் அளிப்பதையும் பார்க்க முடியும். இனக்குழுத் தலைவன் என்பதும் மலைநாட்டை ஆண்ட மன்னன் என்பதும், பௌத்தப் பின்புலங்களும் முருகன் பௌத்த அரசன் என்பதை அகநிலையிலும் புறநிலையிலும் உறுதிபடுத்துகின்றன என்றே சொல்லலாம்.

பயன்பாட்டு நூல்கள்

  • அயோத்திதாசர் சிந்தனைகள் (சமயம், இலக்கியம்) மிமி – நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை.
  • பண்டிதர் 175, தொகுப்பு: ஸ்டாலின் ராஜாங்கம், நீலம் பதிப்பகம்.
  • ‘தமிழர் சிந்தனை – சமயக் கோட்பாடுகள்’, மாயன் பதிப்பகம், சென்னை.
  • ‘தொல்லியல் நோக்கில் தமிழ்நாட்டுக் கடவுளரும் வழிபாட்டு மரபுகளும்’, கோ.சசிகலா, தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம்
  • ‘தமிழகத்தில் பௌத்தம்’, முனைவர். தேமொழி, தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம்.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!