“எழுதுவது என்பது முழுக்க அரசியல் நடவடிக்கை” – இமையம்

சந்திப்பு: நவைத் அன்ஜும் | தமிழில்: கவிதா முரளிதரன்

சாகித்திய அகாடமி பரிசு பெற்ற உங்கள் ‘செல்லாத பணம்’ நாவலின் கதாநாயகி இஞ்சினியர் ரேவதி, ஆட்டோ டிரைவர் ரவியைக் காதலிக்கிறாள். குடும்பத்தின் விருப்பத்திற்கெதிராக அவள் அவனைத் திருமணம் செய்துகொண்டபின் தொடர்வது சமூக அழுத்தம், ஆணாதிக்கம், வர்க்க வேறுபாடு காரணமாகத் தொடரும் துயரங்கள். தமிழ்நாட்டுப் பெண்களின் பிரச்சினைகள் பற்றி எழுதும் உங்கள் முனைப்பின் நீட்சியாக இதைப் பார்க்கிறீர்களா?

‘செல்லாத பணம்’ நாவலில் வரும் ரேவதிக்கும், நான் ஏற்கெனவே எழுதியிருந்த நாவல்களில் வரும் பெண்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. ‘கோவேறு கழுதைகள்’ நாவலில் வரும் ஆரோக்கியம் தாழ்த்தப்பட்ட இனத்திற்கும் கீழாக இருக்கின்ற பெண். ஒவ்வொரு வேளை உணவிற்காகவும் ஊரை எதிர்பார்க்க வேண்டிய பெண். ‘ஆறுமுகம்’ நாவலில் வரும் தனபாக்கியம், சின்ன பொண்ணு இருவரும் பாலியல் தொழிலாளர்கள். இவர்களும் தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண்களே; ஒவ்வொரு வேளை உணவிற்காகவும் உடலை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்களே. ‘செடல்’ நாவலில் வரும் செடல், ஊர்க்காரர்களால் பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண். இவளும் முன் சொன்ன கதாபாத்திரங்களைப் போன்றவள்தான். ஏதோ ஒரு விதத்தில் இப்பெண்கள் சமூக நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். ஆனால், ‘செல்லாத பணம்’ நாவலில் வரும் பெண் படித்தவள், வசதியானவள், அழகானவள், சாதியில், வசதி வாய்ப்பில் மேல்நிலையில் இருப்பவள். ஒருவிதத்தில் மேட்டுக்குடிப் பெண். திருமணம் சார்ந்து அவள் எடுக்கக்கூடிய முடிவுதான் அவளைத் தீயிட்டுக் கொளுத்திவிடுகிறது.

சாதி, வர்க்கம், பணம், படிப்பு, வசதி எல்லாவற்றையும் தாண்டிப் பெண் என்ற வகையில், ஆரோக்கியம், தனபாக்கியம், செடல், ரேவதி – எல்லோருமே ஒரேவிதமான நெருக்கடியைச் சந்திக்கிறார்கள். எல்லா இனத்துப் பெண்களும் ஒரே விதமான துன்பத்தை அனுபவிக்கிறார்கள். நம்முடைய திருமண முறை, குடும்ப அமைப்பு, சமூக அமைப்பு, தனிமனிதர்களுடைய மன அமைப்பு, நம்முடைய கல்வி எதைக் கற்றுத் தருகிறது. காதல் புனிதமானதா, தெய்வீகமானதா என்று பல கேள்விகளை, ‘செல்லாத பணம்’ நாவல் எழுப்புகிறது.

இந்த நாவல் உணர்ச்சிகளையும் பணத்தையும் பிணைக்கிறது. ஓரிடத்தில் “இந்த உலகத்திலேயே இருதயத்தைவிடக் கேடுகெட்ட, வெட்கங்கெட்ட ஒன்று இல்லை” என்று ரேவதி கூறுகிறாள். மனிதர்களை ஒன்று சேர்ப்பதும் பிரிப்பதும் பணம்தான் என்று நீங்களும் கூறுகிறீர்கள். உணர்ச்சி காரணமாக யாரை வேண்டுமானாலும் விரும்பலாம். ஆனால், மனிதன் ஏற்படுத்தியுள்ள பிரிவினைகளூடாக வாழ்வதென்பது எளிதல்ல என்ற முரண்பாட்டைக் காட்ட முயல்கிறீர்களா?

குடும்ப நிறுவனத்தை, சமூக நிறுவனத்தை, தனிமனித உறவுகளை, அன்பு, நட்பு தீர்மானிக்கிறதா, திடப்படுத்துகிறதா – பணம், பொருளாதாரம் தீர்மானிக்கிறதா – என்று கேட்டால், இரண்டாவது விஷயம்தான் தீர்மானிக்கிறது என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் அன்பைத் தேடி, அன்பான மனிதர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கவில்லை. பணத்தைத் தேடியும், அதனால் வரக்கூடிய சௌகரியங்களைத் தேடியும்தான் அலைந்துகொண்டிருக்கிறான். அன்பால் உருவாகுகிற உறவுகளின் எண்ணிக்கையைவிட, பணத்தால் தீர்மானிக்கப்படுகிற உறவுகளின் எண்ணிக்கை அதிகம். அதுதான் நிஜம். குடும்ப உறவுகள், சமூக உறவுகள், கணவன்  – மனைவி உறவுகள் அன்பால் தீர்மானிக்கப்படுகிறதா? பணத்தால் தீர்மானிக்கப் படுகிறதா? இலக்கியப் படைப்புகள் பேசுகிற, விரும்புகிற மனித உறவுகள் வேறு, நிஜ வாழ்வில் நாம் சந்திக்கிற மனித உறவுகள் வேறு. பணம் பெரியதா, மனித மனம் பெரியதா? மனிதன்தான் பணத்தைக் கண்டுபிடித்தான். அதற்கே அவன் அடிமையாகிப் போனான். வெளிநாடுகளுக்குச் செல்கிற இந்தியர்கள் அன்பைத் தேடிப் போகிறார்களா, பணத்தைத் தேடிப் போகிறார்களா?

‘செல்லாத பணம்’ நாவலில் வரும் ரேவதி – ரவி உறவின் முறிவுக்கு, மனக்கசப்பிற்குப் பணம்தான் பிரதான காரணம். சாதிகூட இரண்டாம் பட்சம்தான். வர்க்க முரண்பாடு என்பது பொருளாதாரத்தால் தீர்மானிக்கப்படுவதுதான். பணம் இல்லாதபோது – மனம், உறவு, காதல் கசந்து போகிறது.  ‘உலகிலேயே மிகவும் கேவலமானது மனித மனதைப் போன்ற வேறு ஒன்றில்லை’ என்று நாவலில் ரேவதி சொல்கிறாள். அப்படிச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.  ‘உயிர்’ என்று சொன்ன உடலைத்தான் பின்பு நெருப்பு வைத்து எரிக்கிறான். ‘அவன் இல்லை என்றால் நான் இல்லை’ என்று சொல்கிற மனம்தான், ‘அவன் ஆக்சிடண்டில் சாக வேண்டும்’ என்று விரும்புகிறது. எல்லாவற்றையும் துறந்துவிட்டேன் என்று சொல்கிற சாமியார்கள் விலிகிவாக, விறியாக, முதலமைச்சராக இருக்கிறார்கள், கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்கள். எல்லாவற்றையும் துறந்துவிட்ட சாமியார்களின் மனமே, செயலே இப்படி இருக்கும்போது  ‘செல்லாத பணம்’ நாவலில் வரும் சாதாரண ரேவதியின், ரவியின் மனம் என்னவாக இருக்கும்? மனித மனங்களின் புதிர்களைப் புரிந்துகொள்வதற்காகத்தான் ‘செல்லாத பணம்’ நாவல் எழுதப்பட்டது.

உங்கள் படைப்புகள் பெரும்பாலும் தமிழ்நாட்டின் விளிம்புநிலைச் சமூகங்கள் பற்றிய ஆழ்ந்த ஆய்வாகவே இருக்கின்றன. ‘செல்லாத பண’மும் பெண்கள் தீக்குளிப்பது என்ற சோக நிகழ்வை மையப்படுத்தி இருக்கிறது. பெண்களின் தற்கொலைக்கு அடிப்படைக் காரணமான திருமணம், அரசியல் பொருளாதாரம் பற்றிய உட்பொருளை விவரிக்க இயலுமா?

இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர்களில் 90% பேர் பெண்களாகவே இருக்கிறார்கள் என்பது உண்மைதான். உயர்தட்டுப் பெண்கள் தற்கொலை செய்துகொள்வதைவிடச் சமூகத்தின் கீழ்நிலையிலுள்ள பெண்கள்தான் அதிகமாகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஒரு பெண் தீபாவளிக்குப் புதுத் துணி எடுத்துத் தரவில்லை என்பதற்காகத் தீயிட்டுக் கொளுத்திக்கொள்கிறாள். ஊர்த் திருவிழாவுக்கு வீட்டின் சார்பில் தர வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியவில்லை என்று இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து இறந்துபோகிறாள். தற்கொலைகளுக்குப் பணமும் ஒரு காரணம். நம்முடைய குடும்ப, சமூகக் கட்டுமானங்கள்தான் தற்கொலைகளுக்கு முதன்மையான காரணங்கள்.

தற்போது தமிழ்நாட்டில் தண்ணீர் பாட்டிலை அரசே விற்கிறது, சாராயத்தைப் போல. டீ, காபி குடித்தால்கூட இப்போது ஜி.எஸ்.டி. வரி கட்ட வேண்டும். அரசு வேலையிலுள்ள ஓர் ஆண், அரசு வேலையில் உள்ள ஒரு பெண்ணைத் தேடுகிறார். அரசு வேலையில் உள்ள ஒரு பெண், அரசு வேலையில் உள்ள ஆணையே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். அன்பாக இருப்பதற்கும், அரசாங்க வேலைக்கும் என்ன தொடர்பு? உங்களுடைய திருமணத்தை, அன்பை, காதலை, குடும்பத்தை, உறவுகளைத் தீர்மானிக்கிற முதல் புள்ளியாகப் பணம் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் சாதி, மதம், படிப்பு, கௌரவம் இருக்கிறது.

பெண்கள் தற்கொலை செய்துகொள்வதற்கும், ஆண்கள் தற்கொலை செய்துகொள்வதற்கும் எண்ணிக்கை அளவில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அவற்றுக்கான காரணங்கள் எது என்று ஆராய்ந்தால் மற்றோர் உண்மை தெரியும். குடும்ப – சமூக வன்முறைதான் பெண்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கியக் காரணிகளாக இருக்கின்றன.

உங்கள் கதைகளில் ஜாதி, வர்க்கம் இவற்றின் பங்கு பற்றி விவரிக்க இயலுமா? உங்கள் பாத்திரங்களின் வாழ்க்கைப் போக்கை இவை எவ்வாறு தீர்மானிக்கின்றன?

சாதி, மதம், வர்க்க முரண்பாடுகள், பெண்கள் இவற்றைப் பற்றி சிறுகதை, நாவல் எழுத வேண்டும் என்று நான் ஒருநாளும் நினைத்ததில்லை. கண்முன் நிகழும் வாழ்க்கையை எழுத வேண்டும் என்றுதான் நினைத்திருக்கிறேன். ஓர் ஆண் அல்லது ஒரு பெண் அழுகிறார். அவர்களுடைய அழுகைக்கான காரணத்தைத் தேடுவது மட்டும்தான் எழுத்தின் வேலை. அந்த அழுகைக்குப் பின்னால் சாதி, மதம், சடங்குகள், நம்பிக்கை, பொருளாதாரச் சிக்கல்கள், குடும்பம், சமூகம் ஆகியவை காரணங்களாக இருக்கலாம், அது எது என்று கண்டறிவது –  கேள்வி கேட்பது – இது சரியா என்று சமூகத்தின் முன்வைப்பது மட்டும்தான் என் கதைகளுடைய வேலை. ‘செல்லாத பணம்’ நாவலில் வரும் ரேவதி எரிக்கப்பட்டதற்கு எது காரணம்? ஒரு ரேவதி அல்ல, தினம் தினம் தீக்குளிக்கிற, தீ வைத்துக் கொளுத்தப்படுகிற பெண்களின் வீறிடல்கள், கதறல், கண்ணீர் – எதனால், யாரால் ஏற்படுகிறது என்று ஆராய்கிறேன். மனிதர்களால் ஏன் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை? மனிதன் மனிதனாக வாழ்வதற்கும், மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் எவையெல்லாம் காரணம்? மனிதனை மனிதனாக வாழ விடாத, மகிழ்ச்சியாக வாழ விடாத, சாதி தேவையா, மதம் தேவையா, நம்பிக்கைகள் தேவையா – இல்லையா என்பதைச் சமூகம்தான் முடிவு செய்ய வேண்டும். பிரச்சினை இது என்று சுட்டிக்காட்டுவது மட்டுமே எழுத்தாளனின் வேலை. அதைத்தான் நான் ‘செல்லாத பண’த்திலும், பிற நாவல்களிலும், சிறுகதைகளிலும் செய்திருக்கிறேன். சமூகத்திற்குப் பிடிக்குமா, பிடிக்காதா என்ற கவலை இல்லாமல், அச்சமில்லாமல். என் நாவல்களில், சிறுகதைகளில் ‘சாதி’யும் அதன் ‘கொடூர’மும் மிக முக்கியமான பொருளாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். நான் வாழும் சமூகத்தில் சாதிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. அதனால் என் கதைகளும் ‘சாதி’யைப் பற்றியதாக இருக்கிறது. இதற்கு நான் காரணம் அல்ல. சமூகம்தான் காரணம்.

வாழ்க்கையின் கசப்பான யதார்த்தங்களை முரட்டு வெளிப்படைத்தன்மையுடன் பதிவு செய்வதாக உங்கள் எழுத்துகள் அறியப்பட்டிருக்கின்றன. உங்கள் கதைகளில் சமரசமற்ற யதார்த்தத்துக்கும் இலக்கிய ரீதியிலான வெளிப்பாட்டுக்குமான சம நிலையை எப்படி அடைகிறீர்கள்?

என்னுடைய சிறுகதைகள், நாவல்கள் முற்றிலும் யதார்த்தமானவைதான் என்று சொல்வதற்கில்லை. வாழ்க்கை யதார்த்தமாகத்தானே இருக்கிறது. சமூக யதார்த்தத்தைதான் நான் எழுதுகிறேன். சமூக யதார்த்தம்தானே இலக்கியமாக மாற முடியும். வாழ்க்கை மாயாஜாலங்கள் நிறைந்ததாக இல்லையே. இயல்பாக நடக்கிற விஷயம் எப்படிச் சிறுகதையாக, நாவலாக மாறுகிறது என்ற கேள்வி முக்கியமானது. ஆனால், அதற்குப் பதில் சொல்வது கஷ்டமானது. ஒரு சம்பவத்தை ஒரு பத்திரிகையாளன் எழுதுவதற்கும், ஓர் எழுத்தாளன் எழுதுவதற்கும் என்ன வித்தியாசமோ அதுதான் கண்முன் நடக்கிற விஷயத்தை இலக்கியமாக எழுதுவது என்பது. எழுதும்போது இருக்கிற மனநிலையை உணரத்தான் முடியும், விளக்க முடியாது. ஒரு பூவின் வாசனையை உங்களால் உணரத்தான் முடியும், விளக்க முடியாது. மீறி விளக்குவீர்களேயானால் உங்களுடைய கற்பனையில் இருக்கும் வாசனையைத் தான் சொல்ல முடியும். அதுவும் செயற்கையாக. அது உண்மை அல்ல. முதன்முதலாக உங்களுடைய காதலி உங்களைத் தொட்டபோது உங்களுடைய உடம்பில் ஏற்பட்ட குளிர்ச்சியை எப்படி விளக்க முடியும் – எழுதுவது என்பது காதலிப்பதைப் போன்றது. அதை விளக்கிச் சொல்வது சிரமம். ஒருவிதத்தில் உங்கள் கையில் இருக்கும் புத்தகம் நான் எழுதும் என் மனதின் ஒரு நிலை. குழந்தைப் பிறந்துவிட்டது அவ்வளவுதான். அதை விளக்குவது சரியல்ல, விளக்கவும் முடியாது.

நான் மாய யதார்த்த வகை கதைகளையும் எழுதியிருக்கிறேன். உதாரணத்திற்கு ‘வீடியோ மாரியம்மன்’ என்ற சிறுகதை.

நீங்கள் திராவிட இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறீர்கள். இந்த ஈடுபாடு உங்கள் எழுத்தை எவ்வாறு பாதித்திருக்கிறது? எழுத்தும் அரசியலும் பிரிக்க முடியாதவை என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக எழுதுவது என்பது முழுக்க அரசியல் நடவடிக்கைதான். சந்தேகம் இல்லை. சிந்திப்பது – பேசுவது எல்லாமே அரசியல் தொடர்புடையவைதான். நான் செய்யும் அரசியல் நடவடிக்கைதான் என் சிறுகதைகள்,  நாவல்கள். அரசியலற்ற எழுத்து என்று உலகில் ஒரு வரி கூட கிடையாது. அரசியலற்ற சிந்தனை என்று ஒன்று உலகில் கிடையாது. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட எழுத்து என்று ஒருவரியைக் கூட உங்களால் காட்ட முடியாது. கீதை ஓர் அரசியலைப் பேசுகிறது. குர்ஆனும் பைபிளும் வேத நூல்கள் என்றாலும் அவையும் ஒருவகையான அரசியலைத் தான் பேசுகின்றன. நீதிநெறி என்ற பெயரில் மதங்களே அரசியலை முன்வைத்து எழுதப்பட்டிருக்கும்போது, மதம் கூடாது என்று எழுதுகிறவனின் எழுத்தில் அரசியல் இல்லாமல் எப்படி இருக்கும்?

நான் திராவிட இயக்க அரசியலோடு நெருக்கமான உறவில் இருக்கிறேன் என்பது இரகசியமான விஷயம் அல்ல. அதை நான் மறைத்ததுமில்லை, அதற்கான அவசியமும் இல்லை. நேரடி அரசியல் தொடர்பில் இருப்பது என் எழுத்திற்கு உதவவே செய்திருக்கிறது. அரசியல் சார்ந்த பல விஷயங்களை என் சிறுகதைகளில், நாவல்களில் பார்க்க முடியும்.

‘கட்சிக்காரன்’, ‘நம்ம ஆளு’, ‘கட்சிக்காரப் பிணம்’, ‘பிழைப்பு’ என்று கட்சி சார்ந்த பல விஷயங்களைச் சிறுகதைகளாக எழுதியிருக்கிறேன். ‘வாழ்க வாழ்க’ என்ற நாவலையும் எழுதியிருக்கிறேன். நான் நேரடியாகக் கட்சியில் இல்லாவிட்டால் நிச்சயமாக இத்தனை சிறுகதைகளை எழுதியிருக்க முடியாது. ‘வாழ்க வாழ்க’ நாவலையும் எழுதியிருக்க முடியாது. என் அளவிற்குத் தமிழ்நாட்டின் நிகழ்கால அரசியலைப் பகிரங்கமாக, சார்பின்றி எழுதிய வேறு எழுத்தாளன் இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதற்குக் காரணம் என்னுடைய அரசியல் தொடர்பு. நான் திராவிட இயக்கச் சிந்தனை மரபில் வந்த எழுத்தாளன்.

என்னுடைய சிறுகதைகளில், நாவல்களில் பெண்களே முதன்மை கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள். அது எப்படி நடந்தது என்று எனக்கே தெரியவில்லை. நாவல்களில் மட்டுமல்ல, பெரும்பாலான என்னுடைய சிறுகதைகளிலும் பெண்கள்தான் அதிகம் நிறைந்து இருக்கிறார்கள். முதன்மையான இடத்தில் இருக்கிறார்கள். அதனால் நான் பெண்ணியவாதி அல்ல, பெண்ணிய எழுத்தாளரும் அல்ல. வறட்டுப் பெண்ணியம் பேசுகிறவர்களை, வறட்டுப் பெண்ணிய நோக்கில் எழுதுகிறவர்களை ஆதரிப்பவனும் அல்ல.

என்னுடைய  ‘கோவேறு கழுதைகள்’ நாவலில் வரும் ஆரோக்கியம், ‘ஆறுமுகம்’ நாவலில் வரும் தனபாக்கியம், சின்ன பொண்ணு, ‘செடல்’ நாவலில் வரும் செடல் ஆகியோருக்குக் கிராமம்தான் வாழ்விடம். செடல், ஆரோக்கியம் இருவரும் என்னுடைய கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எனக்கு நேரடியாகப் பரிச்சயமானவர்கள். கிட்டதட்ட சாதி ஏற்றத்தாழ்வுகளை அனுபவித்தவர்கள், நானும்தான். வாழும் வாழ்க்கைதான் நிஜமான இலக்கியம். ஆரோக்கியத்திற்கும் செடலுக்கும் உழைப்புதான் வாழ்க்கை. அவர்களுடைய வாழ்க்கை இப்போது இலக்கியப் படைப்புகளாக இருக்கிறது.

‘செல்லாத பணம்’ நாவலில் வரும் ரேவதி, அமராவதி, அருண்மொழி போன்றோருக்கும், ‘எங் கதெ’ நாவலில் வரும் கமலாவுக்கும் உழைப்புச் சார்ந்த வாழ்க்கை இல்லை; சாதி சார்ந்த அவமானம் இல்லை; பொருளாதார நெருக்கடி இல்லை; உணவுக்காகப் பிறரிடம் கையேந்தும் நிலை இல்லை; சமூகக் கௌரவத்திற்கும் பஞ்சமில்லை. ஆனால், ஆரோக்கியம் – வண்ணார் பெண், செடல் – பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண், தனபாக்கியம் – பாலியல் தொழிலாளி. இந்த மூன்று பேருக்கும் சாதி பெரும் பிரச்சினை, வாழ்வது பெரும் பிரச்சினை, செய்யும் தொழிலிலும் அவமானம். என் நாவல்களில் வரும் பெண்கள் எல்லோருமே நான் வாழ்ந்த வாழ்க்கையின் ஒரு பகுதியாக, என் காலத்தில் வாழ்ந்த மனிதர்களாக, நான் வாழ்ந்த நிலப்பரப்பின் வாழ்வை ஏதோ ஒருவிதத்தில் பிரதிபலித்தவர்களாக இருக்கிறார்கள்.

நான் பெண்களை அதிகமாக எழுதியதற்கு எது காரணமாக இருக்கும் என்று யோசிக்கிறேன். பெண்கள் தான் அதிகமாகப் பேசுகிறார்கள். தங்கள் துயரைக் கண்ணீராக வெளியேற்றுகிறார்கள். பெண்களின் ஓயாத பேச்சும், நிற்காத கண்ணீரும்தான் என்னை எழுத வைத்திருக்கலாம்.

உங்கள் கதைகளில் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது குறித்த எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா? பன்முகத்தன்மை கொண்ட பெண் பாத்திரங்களை உங்கள் கதைகளில் படைப்பதை எவ்வாறு அணுகுகிறீர்கள்?

இலக்கியத்தின் அடிப்படையான நோக்கமே நிலவியலையும் நிலவியல் பண்பாட்டையும் பதிவு செய்வதுதான். கதாபாத்திரங்கள் அதற்கு உதவுகிறார்கள். மொழி அதற்கு உதவுகிறது. இலக்கியப் படைப்புகளைப் படிப்பதின் நோக்கமே தனிமனிதர்களின் வாழ்வை, கொண்டாட்டத்தை, துயரினை அறிவதற்காக அல்ல. குறிப்பிட்ட நிலப்பரப்பு, குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள், குறிப்பிட்ட காலம், மக்கள் பின்பற்றிய நடவடிக்கைகள். இந்த நான்கையும் பதிவு செய்வதுதான் முக்கியம். காலம் மாறும், மனிதர்கள் மாறுவார்கள், எழுதப்பட்ட இலக்கியம் மாறாது. குறிப்பிட்ட இன மக்களின் வாழ்வை அறிவதற்கான சிறந்த கருவி இலக்கியம்தான். அரசியல் காரணங்களுக்காகவோ, சொந்தக் காரணங்களுக்காகவோ வரலாறுகள் தவறாகப் பதிவு செய்யப்படலாம். ஆனால், எழுத்தாளன் சொந்தக் காரணங்களுக்காக, அரசியல் காரணங்களுக்காக எதையும் மாற்றி எழுதக்கூடாது, முடியாது. ஏற்கெனவே வாழப்பட்ட வாழ்க்கைதான் இன்றைக்கான வாழ்வின் அடித்தளம், மூலதனம். அடுத்த தலைமுறைக்கான அடித்தளத்தை, மூலதனத்தை உருவாக்குவதுதான் இலக்கியம். அது வட்டார இலக்கியமாக இருந்தாலும், பிராந்திய இலக்கியமாக இருந்தாலும்.

தமிழ்நாட்டின் பல்வேறு சமூகங்களின் மரபு மற்றும் பேச்சுவழக்குகளைப் பதிவு செய்ததற்காக உங்கள் எழுத்துகள் புகழ்ந்துரைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பிராந்தியத்தின் கலாச்சாரப் பன்மைத்தன்மையை உங்கள் படைப்புகளில் பிரதிநிதித்துவப்படுத்துவதும் காப்பாற்றுவதும் உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? உங்கள் ‘பெத்தவன்’ நாவல் சாதி அமைப்பையும் அதன் கொடிய விளைவுகளையும் விவரிக்கிறது. ‘வாழ்க வாழ்க’ சாதி, அதிகாரம் மற்றும் பாலின வேறுபாடுகள் இயங்கும் விதத்தைத் தீவிரமாக ஆய்வுசெய்கிறது. பாதகமான வாழ்க்கைச் சூழலில் பெண்களின் போராட்டத்தை விவரிக்கிறது. சமூக விமரிசனத்துக்கான கருவியாகக் கதைகளைப் பயன்படுத்தும் உங்கள் அணுகுமுறை பற்றி விரிவாகக் கூற முடியுமா?

 ‘பெத்தவன்’ நெடுங்கதை தமிழ்நாட்டில் நடக்கிற சாதிய ஆணவப்படுகொலைகளைப் பற்றி எழுதப் பட்டது. இக்கதை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பொருந்தும். இந்தியா முழுவதும் சாதிய ஆணவப்படுகொலைகள் நடக்கத்தானே செய்கிறது. இனியும் நடக்கும். என்னுடைய ‘வாழ்க வாழ்க’ நாவல் தமிழ்நாடு தேர்தல் சமயத்தில் கூட்டம் சேர்ப்பதற்காக அழைத்துச் செல்லப்படுகிற பெண்கள் படுகிற அவஸ்தைகளைப் பேசுகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துபோன பெண்களைப் பற்றிப் பேசுகிறது. இது கற்பனைக் கதை அல்ல. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருகைக்காகக் காத்திருந்த பெண்கள்தான் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து போனார்கள். இது தமிழ்நாட்டில் மட்டும் நடந்த அதிசயமல்ல. அண்மையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பம்பாயில் பங்கேற்றப் பொதுக் கூட்டத்திற்காக வரவழைக்கப்பட்டிருந்த பெண்களில் பலர் இறந்து போனார்கள். 500 ரூபாய்க்காக வந்து தங்கள் உயிரை விட்ட பெண்களைப் பற்றி எழுதாமல், வேறு எதைப் பற்றி நான் நாவல் எழுத முடியும்?

இந்தியாவில் இருக்கிற ஒவ்வோர் அரசியல் கட்சித் தலைவரின் வருகையின்போதும், காசு கொடுத்து, அதிலும் பெண்களைத்தானே அழைத்துக்கொண்டு போகிறார்கள். கூட்டத்தைக் காட்டுவதற்காக, தன்னுடைய செல்வாக்கைக் காட்டுவதற்காக. தானாகச் சேர்ந்த கூட்டமல்ல. காசு கொடுத்து வரவழைக்கப்பட்ட கூட்டம் என்று எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தெரியும். மீடியாவுக்கும் தெரியும். ஆனால், வாயைத் திறக்க மாட்டார்கள். இந்தியத் தேர்தல் எப்படி இருக்கிறது – மக்கள் தேர்தலை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை ‘வாழ்க வாழ்க’ நாவலைப் படித்தால் தெரியும். இந்திய ஜனநாயகத்தின் பெருமை எப்படி இருக்கிறது என்பதை ‘வாழ்க வாழ்க’ நாவலின் மூலம் சொல்லியிருக்கிறேன்.

சமூகத்தைச் சீர்திருத்துவதற்குச் சிறந்த ஆயுதமாக ஓர் இலக்கியப் படைப்பு இருக்கும் என்று நான் நம்பவில்லை. இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் எத்தனை கோடி பேர் இருக்கிறார்கள். எழுதப் படிக்கத் தெரிந்தவர்களிலேயே எத்தனை சதவீதம் பேர் சிறுகதை, நாவல் படிக்கிறார்கள்? சிறந்த சிறுகதை, சிறந்த நாவல் என்று போற்றப்படுகிற புத்தகமே வருடத்திற்கு ஆயிரம், இரண்டாயிரம் பிரதிகள்கூட விற்காத நிலையில், ஒரு புத்தகம் சமூகத்தைச் சீர்திருத்தும் ஆயுதமாக இருக்கும் என்று நான் நம்பவில்லை. அப்படி நம்பினால் என்னைப் போல முட்டாள் இல்லை. ஜோசியம் சார்ந்த புத்தகங்கள் இலட்சக்கணக்கில் விற்கின்றன.

இந்தியாவில் அதிகமாகப் படிக்கப்படுகிற, பேசப்படுகிற, முன்னிறுத்தப்படுகிற கீதை, உலகளவில் பேசப்படுகிற, படிக்கப்படுகிற பைபிள், குர்ஆன் போன்ற நூல்கள் சமூகத்தைச் சீர்திருத்தும் கருவியாக ஏன் இல்லை, கீதை, பைபிள், குர்ஆன் போன்ற நூல்கள் சமூகத்தைச் சீர்திருத்தத்தான் எழுதப்பட்டது. ஆனால், நிஜத்தில் அப்படியா நடக்கிறது? வர்ணாஸ்ரம தர்மம், மனுநீதி இந்தியாவில் என்ன விளைவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது? அதுவும் சமூகநீதியைத்தான், சமூக அறத்தைத்தான் பேசுகிறதா?

என்னுடைய படைப்புகள் சமூகத்தைச் சீர்திருத்தும் ஆயுதங்களாக இருக்காவிட்டாலும் பரவாயில்லை, சமூகத்தைச் சீர்குலைக்கும் கருவிகளாக இருக்கக் கூடாது என்பதுதான் என் ஆசை.

நன்றி: thefederal.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger