அஞ்சலி: அந்டோனியோ நெகிரி (1933 – 2023)
அரசியல் தத்துவ அறிஞரான அந்டோனியோ நெகிரி, இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள படுவ பகுதியில் பிறந்தார். இவரின் தந்தை நீரியோ நெகிரி, இத்தாலிய கம்யூனிசக் கட்சியின் நிறுவனராக இருந்து கம்யூனிச இராணுவப்படையில் தீவிரமாக இயங்கிவந்தார். நெகிரிக்கு இரண்டு வயது இருக்கும்போது பாசிச அரசால் சிறையிலடைக்கப்பட்டு, ஆமணக்கு எண்ணெய்யைக் குடிக்கவைத்துக் கொலை செய்யப்பட்டார். தாய் ஆல்டினா மால்விஸி பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து நெகிரியை வளர்த்தார்.
நெகிரி, சிறுவயதில் ரோமன் கத்தோலிக்க இளைஞர் அமைப்பில் இணைந்து இயங்கினார். பிறகு கம்யூனிசக் கருத்தாக்கத்தில் ஆர்வம் செலுத்தி, இத்தாலிய சோசியலிசக் கட்சியில் தீவிரமாக இயங்கினார். பட்வ பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்து அங்கேயே தத்துவம் மற்றும் அரசியல் அறிவியல் கற்பிக்கும் பேராசிரியரானார்.
1960களில் கம்யூனிசக் கட்சிகளுக்கு வெளியே உருவான நவமார்க்ஸியக் குழுக்களில் இணைந்து பங்காற்றினார். 1979ஆம் ஆண்டு நெகிரி அரசியல் சூழ்ச்சிகரமாகச் சிறையிலடைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். முன்னாள் இத்தாலிய பிரதமர் அல்டோ மொரோ கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் நெகிரிக்கும் இடதுசாரி தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட ரெட் பிரகேடெஸ் என்ற இயக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாகச் சம்பந்தப்படுத்தப்பட்டது. நெகிரி இத்தாலிய இளைஞர்களின் மனதில் விஷ சிந்தனையை விதைப்பதாக இத்தாலிய பிரதமர் குற்றம் சாட்டினார். நெகிரியால் தனக்கெதிரான அரசியல் தந்திரங்களிலிருந்து தப்பிக்க இயலவில்லை. அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய இடதுசாரி தீவிரவாத இயக்கத்திற்கு மூளையாகச் செயல்பட்டதற்காக முப்பது வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது நெகிரிக்கு ஆதரவாக, மிஷல் ஃபூக்கோ, ஃபெலிக்ஸ் கத்தாரி, கில்ஸ் டெல்யூஸ் போன்ற சமகால தத்துவ அறிஞர்கள் குரல் கொடுத்துக் கையெழுத்து இயக்கம் நடத்தினர். எந்தப் போராட்டமும் பலனளிக்கவில்லை. நெகிரி, இத்தாலியக் கடுங்காவல் சிறையில் அடைக்கப் பட்டார்.
சிறையிலிருந்த நான்காவது வருடம், தேர்தலில் நின்று நெகிரி வெற்றிப்பெற்றார். தேர்தல் வெற்றியால் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தியும் ஃபெலிக்ஸ் கத்தாரியின் உதவியாலும் பிரான்ஸிற்குத் தப்பினார். அங்கு மைகேல் ஹார்ட்டின் அறிமுகத்தைப் பெற்றார். தன்னைவிட முப்பது வயது இளையவரான ஹார்டுடன் இணைந்து தத்துவ ஆய்வுகளை மேற்கொண்டார். தற்போது மைகேல் ஹார்ட் அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறையில் பணிபுரிகிறார்.
பிரான்ஸிற்குச் சென்றதும் நெகிரி, அங்குள்ள உலகப்புகழ் பெற்ற பாரிஸ் VIII பல்கலைக்கழகத்திலும், ழாக் தெரிதாவால் துவங்கப்பட்ட சர்வதேச தத்துவக் கல்லூரியிலும் பணிபுரிந்தார். இத்தாலியில் அரசியல் ஸ்திரத்தன்மை அடைந்த பின்னர் 1997ஆம் ஆண்டு மீண்டும் நாடு திரும்பினார். 1997ஆம் ஆண்டு முதல் 2003 வரை அங்கு சிறையில் இருந்தார். சிறைக் கால கட்டத்திலும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார்.
அரசியல் தத்துவ அறிஞரான நெகிரி, இருபத்தோராம் நூற்றாண்டின் அரசு, சமூகம், உடைமை பற்றிய ஆழமான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார். இருபது மற்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் காண்டினென்டல் தத்துவத்தின் முக்கிய முகமாகவும், பிரெஞ்சு தாக்கம் பெற்ற நவ பினோஸாயிச இயக்கத்தில் லூயி அல்தூஸர் மற்றும் கில்ஸ் டெல்யூசின் சிந்தனைகளுக்கு நெருக்கமான தத்துவ அறிஞராக நெகிரி இருக்கிறார். கார்ல் மார்க்ஸ், ஸ்பினோசா, கில்ஸ் டெல்யூஸ், மிஷல் ஃபூக்கோ ஆகியோரது ஆய்வுகளின் தொடர்ச்சியாக நிறைய கருத்தாக்கங்களை வளர்த்தெடுக்கக் கூடிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அந்டோனியோ நெகிரியும் மைகேல் ஹார்ட்டும் இணைந்து எழுதிய தத்துவ நூல்களான Empire (2000), Common Wealth (2009), Multitude: War and Democracy in the age of Empire (2009), Declaration (2012), Assembly (2017) ஆகியவை ஆய்வுலகில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. நெகிரியும் ஹார்ட்டும் நம் காலத்திற்கான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை (The Communist Manifesto) அளித்திருப்பதாக Empire நூல் பற்றி புகழ்பெற்ற ஸ்லோவேனிய தத்துவ அறிஞர் ஸ்லோவிக் சீசக் புகழ்ந்துரைக்கிறார்.
Assembly என்ற நூலில் ‘பொது உடைமை என்பது சாத்தியமில்லை. ஏனெனில், பொது எப்போதும் உடைமையாக இருக்க இயலாது. பொது என்பது மக்களின் பரஸ்பர பங்களிப்பும் பயன்பாடும் கொண்டு மக்களால் பராமரிக்கப்படுவது. ஆதலால், பொது என்பது உடைமையிலி’ என்கிறார். பொதுவுடைமை சித்தாந்தத்தைச் சமகாலத்திற்கு ஏற்றார் போல விமர்சன ரீதியில் மறுவிவாதத்திற்கு உட்படுத்தினார். மேலும், நடைமுறை சாத்தியமுள்ள – நாம் வளர்த்தெடுக்க வேண்டிய சமத்துவச் சமூகம் எப்படி இருக்க வேண்டும், அதனை அடைவதற்கான வழிகள் பற்றியும் விவாதித்துள்ளார்.
உலகமயமாதல் பொருளாதாரம், பின்னை முதலாளித்துவம், வெகுசனவியம், நவகால அரசு, மாற்று நவீனத்துவம் ஆகியவற்றில் முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்ட நெகிரி, தன் தொண்ணூறாவது வயதில் மரணமடைந்துள்ளார். இலட்சியவாதங்கள் தோற்றுவிட்டதாகவும், வரலாறு முற்றுபெற்றுவிட்ட தாகவும் பேசப்பட்டுவந்த காலத்தில் தொடர்ந்து நவீன சமூகத்தை உழைக்கும் மக்கள் நலன் சார்ந்தும் சமத்துவச் சமூகம் உருவாக்க வேண்டும் என்ற பிரஞ்ஞையுடனும் தொடர்ந்து இயங்கிய தத்துவ அறிஞருக்கு அஞ்சலி செலுத்துவது நம் கடமை. நெகிரி நம் காலத்தில் வாழ்ந்த முக்கியமான தத்துவ அறிஞர் என்றால் அது மிகையல்ல.