நேற்று சுடப்பட்டவன் உனது மகன்

சிவசங்கர் எஸ்.ஜே

‘எல கோமதி ஒரு கெட்டு செய்து பீடி வேங்கிட்டு வருவியாடே.’ அய்யனார் அண்ணாச்சி திண்ணையில் அமர்ந்துகொண்டே தெருவில் போன என்னிடம் கேட்டார்.

‘ஏன் அண்ணாச்சி கால்ல ஆணியோ?’

‘நளியாடே அடிக்க. கொஞ்சம் கூடுதலா தின்னுட்டம். அதான்.’

‘அப்ப வாங்கோ காலாற நடந்துட்டு வருவோம். செமிக்கட்டு.’

‘அதுவும் சர்தாம்ல. வா’

முக்குக் கடையில் பீடி வாங்கும்போது தொலைவில் ஏதோ பொதுக்கூட்டத்தின் ஒலிபெருக்கிச் சத்தம் கேட்டது.

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.’’

யாரோ ஒருவன் உரத்தக் குரலில் முழங்கிக் கொண்டிருந்தான்.

அய்யனார் அண்ணாச்சி ‘அவனுக்க அம்மைக்க சங்கு’ வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டதைக் கவனித்துவிட்டேன். கட்டாயம் திண்ணைக்குத் திரும்பியதும் இதைப் பற்றிக் கேட்க வேண்டும்.

அண்ணாச்சி எனக்கு வாய்ப்புத் தராமல் அவரே ஆரம்பித்தார்.

‘மொழிப்போர் தியாகிகன்னு நெறைய பேரு பென்ஷன் வேங்கிட்டிருக்கானுவ. ஒரு ஈர மண்ணும் வேங்காமப் போன உண்மையான தியாகிகளும் உண்டும். ஆருக்கும் தெரியாமச் செத்துப் போன ஆளுவளும் உண்டும் தெரியுமாடே?’

‘சொல்லுங்கோ அண்ணாச்சி. ‘எங்களோடு இணைந்து கொண்ட பூக்கடை எசக்கி ஆர்வமாய்க் கேட்டான்.

‘மொதல்ல இது என்ன சம்பவம்னு தெரியுமாடே உனக்கு?’

‘நமக்கு என்ன தெரியும் அண்ணாச்சி நான் கண்டனா கேட்டனா? எனக்கப் பூக்கடை உண்டும் நான் உண்டும். பூவப் பத்தி கேளுங்கோ சொல்லுதேன்.’

‘அதுவும் சர்தாம்டே. ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தி ஏழுல தொடங்கின போராட்டம். எல்லோரும் மூணு மொழி படிக்கணும்னு மத்திய சர்க்காரு சட்டம் போட்டுது. அத எதித்து நம்ம ஆளுக போராடி அத வாபஸ் வேங்க வச்சாங்கோ. அதுக்கும் பொறவு இடையில ரெண்டு தரம். அரசியலமைப்புச் சட்டத்த எரிச்சது. கைது கலவரம்னு நடந்துது. நான் சொல்லுகது ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தஞ்சில, நான் காலேஜு படிக்கும்போது அதே சட்டம் திரும்ப வந்துது. இந்தி எதுப்புப் போராட்டம்னு பேரு கேட்டிரிக்கியா? எல்லாம் படிக்கப்பட்ட பயக்க தொடங்கினதுதான். இன்னைக்கு எல்லாத்தையும் மாத்தி சொல்லுதானுவோ. கள்ளப் பயக்க.’ அய்யனார் அண்ணாச்சி தெருவில் காறித் துப்பினார்.

அண்ணாச்சி ஓய்வுபெற்ற மின் ஊழியர். வயது எப்படியும் இன்றைய தேதியில் எழுபதுக்கு மேல் இருக்கும். தினசரி காலை பத்து மணிக்குச் சரியாக வந்து திண்ணையில் அமர்வார். சுப்பையாவோ மூக்கையாவோ முருகனோ யாரோ, அன்று யார் வாயில் கிட்டுகிறார்களோ அவர்களிடம் ஒருமணி நேரத்தைச் செலவிடுவார். பாதி கட்டு செய்யது பீடி தீர்ந்திருக்கும். சரியாக மணி பதினொன்றுக்கு ஏதாவது சாப்பிடப் போய்விடுவார். அதன்பிறகு வெயில் சாய்ந்தபிறகு மாலை அஞ்சரையிலிருந்து இரவு பீடி தீரும்வரை சபை கூடும். அண்ணாச்சியின் கதைகளில் இருக்கும் வரலாற்றுத் தகவல் வேறு எங்கும் கேள்விப்படாததாய் இருக்கும். பக்கச் சார்பிருக்காது. ஓர் ஊரில என்கிற வழமை இருக்காது. புதிதாய், சுவாரசியமாய் சினிமாக்கதை போலவே இருக்கும். சில வேளைகளில் ஒற்றை வரியில் பெரும் வரலாற்றுக் கதையாடலை அண்ணாச்சி கடந்து போவதும் உண்டு.

‘இந்தா இந்த வண்ணாரப்பேட்டைத் துறையோட பழய பேரு என்னென்னு தெரியுமாவே?

குட்ட நீக்கித் துறை.

இங்க குளிச்சா குஷ்ட நோய் தீருமாம் கேள்விப்பட்டிருக்கீரா ஓய்?.’

‘ஈஸ்ட் இந்தியா கம்பெனி கூட துணி யாவாரம் பண்ணின வெங்கு மொதலியார் தெரியுமா முருகா?

அவர் இல்லேன்னா மேலப்பாளையமே கெடையாதும் தெரியுமாடா?’

‘நம்ம வள்ளியூர்ல ஒரு நெய் கம்பனி இருந்தது தெரியுமாடே எசக்கி ?’

‘ஏலு சிந்துபூந்துறைக்கு அந்த பெயர் வரக் காரணம் தெரியுமாப்போ?’

‘கிருஷ்ணன் கோயில்ல பட்டு நூல் நெசவு வந்த கத தெரியுமாப்போ?’

‘வண்ணாரப்பேட்டை பேரு ஏன் வந்து உனக்குத் தெரியுமா முருகா?’

‘சாஹித்ய அகாதெமி விருதுக்குக் கெடச்ச காசுல நம்மூர்ல ஒரு ஆசுபத்திரி கட்டினது ஆருன்னு தெரியுமால?’

எல்லாம் ஓரிரு வரி துணுக்குகள் போலத் தோன்றும் வரலாற்றுச் செய்திகள். யாரும் இவற்றைக் கேட்டு விரிவாகப் பதிவு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. அண்ணாச்சிக்கு அதைப் பற்றி கவலையுமில்லை.

நான் வசதியாய் திண்ணைத் தூணில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டேன். அண்ணாச்சி கதைக்குள் ஆழ்ந்துவிட்டார். இனி அவரை இடைமறிப்பது அசாத்தியம்.

“ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுவத்தஞ்சி ஜனவரி இருவத்தஞ்சி. மதுரை தியாகராஜா காலேஜுல ரெண்டு ஸ்டூடன்டுக தொடங்கினதுதான் மொதலாவது போராட்டம். அடுத்த நாளு குடியரசு தினம். அன்னைக்கு கருப்பு நாளா அனுசரிக்கணும்னு கருப்பு சொவப்புக் காரங்க திட்டம் போட்டிருந்தாங்கோ. அண்ணாதுரை எல்லா கட்சிக்காரங்களும் வூட்ல கருப்பு கொடி கட்டாயமா ஏத்தனும்னு வேற சொல்லியிருந்தாரு. ஒரு ரகசியம் தெரியுமா?” அண்ணாச்சி யாராவது கேட்டு விடுவார்கள் என்கிற பாவனையில் ரகசிய குரலில் சொன்னார். ‘அப்போ எஸ்.எஸ்.ஆர் வூட்ல கொடி ஏத்தியிருந்துது. முக்கிய நடிகர் வூட்ல ஏத்தலயாம்..’

‘ஆரு, எம்.ஜி.ஆரா அண்ணாச்சி?’ இசக்கி இடைமறித்தான்.

‘இவம் ஆருல கூறு கெட்டவன்’. நமுட்டுச் சிரிப்பு சிரித்தார் அண்ணாச்சி. ‘கதையைக் கேளு. எதுல விட்டேன். ஆங்… கருப்புக் கொடி. கட்சிகாரனுவள கருப்புக்கொடி ஏத்தச் சொல்லி ஒருபக்கம் நடக்குது. ஆனா நடந்துது வேற. மதுரை காலேஜ்ல நா.காமராசன், காளிமுத்துன்னு ரெண்டு படிக்கப்பட்ட பயக்க தலைமையில இந்தி அரக்கி கொடும்பாவியை எரிக்கணும்னு மாசி வீதில யூனிவசிட்டி பயக்க போயிருக்கானுவோ. குடியரசு தெனத்துக்கு கூட்டம் போட அங்க கதர் கட்சிக்காரானுவ மேடை போட்டிற்றிருந்தானுவ. பயக்களுக்கும் அவனுவளுக்கும் அடிபிடி ஆயிப்போச்சு. அவ்வளவுதான் கலவரம் தொடங்கிட்டு.’

‘நம்ம ஊர்ல எதுவும் நடந்துதா அண்ணாச்சி?’

‘கதையே அதப்பத்திதாம்டே. பொறுமையாக் கேளு.’

‘எப்படி நியூஸ் வந்துதுன்னு தெரியாது. கள்ளமும் கலவரமும் சீக்கிரம் பரவும்னு சொல்லுவாவல்லா. நான் அப்ப பேட்ட இந்து காலேஜ்ல படிச்சிட்டு இருந்தேன். அடுத்த நாள் காலையில பயலுவோ ஒண்ணு கூடுனோம். படிக்கப்பட்ட பயக்க மேல கையை வைக்கானுவோன்னா சும்ம இரிக்க முடியுமா? இத இப்படியே வுடப்பிடாது. நாங்க ஒரு நூறு வேரு காலேஜ வுட்டு வெளிய வந்தோம். நேர ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போய் இந்தி போர்டை எல்லாம் மை பூசி அழிக்கணும்னு திட்டம். எடையில எளவுடுப்பானுவோ இந்த ஹை ஸ்கூல் பயக்க, அப்புறமாட்டு டவுன் ஸ்கூல் பயக்க எல்லா நண்டு சிண்டுமா சேந்து பெரிய ஊர்வலமா ஆயிட்டு. சந்திப் பிள்ளையார் கோயில் கிட்டக்க வரும்போது காங்கிரஸ் கொடியப் பாத்தததும் நாலுவேரு அதப் போய் பிடுங்குறதுக்கு ஆட்டுறானுவோ. கொடிக்கம்பத்துக்க மேல எலெக்ட்ரிக் லைனு. எனக்குப் பதறிட்டு.  கத்திக்கிட்டே ஓடுதேன். சத்தத்தில ஒண்ணும் கேக்க மாட்டேங்கு. எப்படியோ யாரோ சொல்லி பயலுக கொடிக்கம்பத்தை வுட்டானுங்க. இல்லேன்னா அன்னைக்குப் பாதி வேருக்கு சங்குதான்.’

‘நீங்க அப்பவே ஈ.பி. ஆளுதான் அண்ணாச்சி’ எசக்கி காலை தரையில் ஓங்கி உதைத்து உதைத்துச் சிரித்தான்.

அண்ணாச்சி முறைத்தார். பிறகு என்னைப் பார்த்துத் தொடர்ந்தார்.

‘போராட்டம் தன்னெழுச்சியா நடக்குது. அன்னைக்கு குடியரசு தினம் இல்லையா நேரா அடுத்து ரயில்வே ஸ்டேஷன். சீனியர் பயக்கோ ஆளுக்கு கொஞ்சம் சின்ன உள்ளிய கையில குடுக்குதானுவோ. எதுக்குன்னு தெரியல. என் பிரெண்டு சங்கரன்தான் சொல்லுதான். கண்ணீர் பொக குண்டு போட்டானுவன்னாக்கா வெங்காயத்த வச்சிருந்தா கண்ணு எரியாதாம். நான் ரெண்டணம் வேங்கி வச்சுகிட்டேன். தாயளி வுள்ளையளுக்க கண்ணீர் குண்டையும் பாத்துகிடுவோம். இப்ப பாரதியார் செல இருக்கில்லாடே அங்க இந்து ஸ்கூல் பக்கத்தில ஒரு ஆர்ப்பாட்டம் நடக்கு. கொஞ்சம் பேரு வேற எங்கயோ போறானுவ. தெருவெல்லாம் போர்க்களம் போல கெடக்கு. எங்களுக்கு எலக்கு ரயில்வே ஸ்டேஷன். அப்போ ஜங்க்ஷன்ல மேம்பாலம் கெடையாது பாத்துக்கோ. ரெயில்வே க்ராசிங்க்தான்.’

‘எது நம்ம ஜங்க்ஷன்லயா?’ எசக்கி இடைமறித்தான். இப்போது நான் முறைத்தேன்.

‘ஆமடே. அங்கணதான். நல்ல பெரிய கிராசிங். ரெட்ட கேட் போட்டிருக்கும். ம்ம்.. கதையைக் கேளு.’

கேட்டை உடைச்சிட்டு முன்னால போறானுவோ. கேட் கீப்பர் ஓடுதான். அவனுகளுக்குச் சொவப்புக் கொடி பிடிக்கேது, அப்பறமா நெருக்கடியான நேரத்தில பட்டாசு கொளுத்தி போடுகதுன்னு ஏதோ சிக்னல் உண்டு போல. அவன் தூரமா ஓடுதான். முடிஞ்சவர கருப்பு பெயிண்ட வச்சி கண்ணுல கண்ட எல்லா இந்தி போர்டையும் அழிச்சோம். தமிழ் மீடியம் படிச்சு காலேஜ்ல இங்கிலீஸ் புடிக்காத நாங்க அஞ்சாறு வேரு கூட்டத்தோடி சேந்து இங்கிலீஷ் எழுத்தையும் கருப்படிச்சோம்.

ரெயில்வே ஸ்டேஷன் முடிச்சிட்டு பயக்க அம்புடு பேரும் அடுத்து போலிஸ் ஸ்டேஷனுக்குப் போறோம். இதுக்கெடையில நம்ம அப்பவே கவித எல்லாம் எழுதுவோம்லா. நம்மகிட்டே கோஷம் எழுதிக் கேக்கானுவோ. சவத்த எழுதுவோம்னு ஒரு கட வரந்தாவுல ஒக்காந்தேன். அப்ப அண்ணாமலை யூனிவசிட்டி துப்பாக்கிச் சூட்டில செத்துப் போனவன் யாரோ ராஜேந்திரன்னு நெனைக்கேன். அவன் ஒரு போலீஸ்காரனுக்க மவன். எனக்கு கோஷம் ரெடி ஆயிட்டு. எழுதினேன்.

நேற்று சுடப்பட்டவன் உனது வீட்டு மகன்
இன்று சுடப்பட நிற்பவன் உனது நாட்டு மகன்
ஏவாதே ஏவாதே அடக்குமுறையை ஏவாதே
திணிக்காதே திணிக்காதே இந்தியைத் திணிக்காதே
கொல்லாதே கொல்லாதே மாணவர்களைக் கொல்லாதே

ஓவியம்: பெனித்தா பெர்சியல்

பயலுகளுக்கு ரொம்பப் பிடிச்சிட்டு. கோஷம் உண்மைக்கும் வானத்தை முட்டுது. அதைக் கேட்டு எனக்கே நெஞ்செல்லாம் அதிருது. பயக்க அம்புடு பேரும் கம்பா நிக்கானுவோ. இந்த ரெண்டு நாளில ரெண்டு போலீஸ்காரனுவள கொன்னுட்டானுவோன்னு நியூசுவோ வருது. பாவம் திருப்பூர்ல ஒரு போலீஸ்காரன் இந்தக் கலவரத்தில மாட்டிக்கிட்டாம். அங்க வந்த வெறகு வண்டில போட்டு மண்ணெண்ணெய் வுட்டு எரிச்சு கொன்னுட்டானுவளாம்னு செய்தி. எனக்குப் பதறுது. ஆனா ஒரு  வீம்பு. இந்த அரசியல் மயிர எல்லாம் முழுசா மனசிலாக்க முடியலேன்னாலும்.  நம்ம என்ன மொழி பேசணும்னு இவனுவோ எப்படி முடிவெடுப்பானுவோன்னு ஒரு கடுப்பு. அப்போ போலீஸ் சூப்ரண்டு வடநாட்டுக்காரன் பங்காரான்னு என்னமோ ஒரு பேரு. எல்லா போலீசும் வரிசையா நிக்கனுவோ. எனக்கு அவனுவோ நிக்கத பாத்தவொடனே லத்தி சார்ஜூக்கு ரெடி ஆன மாரி தோணுது. நான் ஓடுகதுக்கு தயாரா நிக்கேன். அப்பதான் வயர்லெஸ் சேதி வருது. இந்தப்பக்கம் ஸ்டுடெண்ட் ஒருத்தன் ஓடி வந்து பாளையங்கோட்டைல துப்பாக்கிச் சூடுன்னு சொல்லுதான் எல்லோரும் செதறி ஓடுதோம். கொஞ்ச பேரு பயந்து வூடுகளுக்குப் போறோம். கொஞ்ச பேரு பாளையங்கோட்டை நோக்கிப் போறோம்.

அப்போ நம்ம ஊரு எம்.எல்.ஏ ஒரு லேடிஸ். பேரு ராஜாத்தி குஞ்சிதபாதம். அதன்ன எளவோ குஞ்சிதபாதம் அவ்வோ மாப்பிள பேருன்னுதான் நெனக்கேன்..

எசக்கிக்குச் சிரிப்பு வந்தது. எனக்கும். அவன் அடக்கிக்கொண்டு புத்திசாலித்தனமாய்

‘அப்போவே பொம்பளயாளுவ எல்லாம் எம்.எல்.ஏவா இருந்திருக்காவ என்ன அண்ணாச்சி’ என்றான்.

‘எம்.எல்.ஏ என்னடே எம்.எல்.ஏ? மந்திரியாட் டெல்லாம் இருந்திருக்காவ. லூர்தம்மாள் சைமன் தெரியுமாடே? என்று விட்டுவிடாமல் கதையைத் தொடர்ந்தார்.

‘இங்கணதான் எல்.ஐ.சி பக்கத்தில வூடு. கதர் கட்சி. யாரு தூண்டிவிட்டதுன்னு தெரியல. நம்ம ஸ்கூல் பயக்க நேரா எம்.எல்.ஏ வூட்டுல கல்லெறியப் போயிட்டானுவ. எம்.எல்.ஏ புருஷன் துப்பாக்கி வெச்சிருந்திருக்கான். எடுத்துச் சுட்டுட்டான்னு சொன்னானுவ. ஆரு சுட்டதுன்னு தெரியல. ஒருத்தன் செத்துட்டான். இன்னொருத்தன் நல்ல காயம். நாங்க பாளையங்கோட்டை போம்போது ரோடெல்லாம் கல்லும் செருப்பமாக் கெடக்கு. போலீஸ்காரனுவோ தெரத்துதானுவோ. ஒரே ஓட்டம்.

‘எல கோமதி மணி என்னாச்சு? பசிக்குதேடே பதினொண்ணு ஆச்சா?’

‘நீங்க சாப்பிட்டிட்டு வாங்கோ அண்ணாச்சி நாங்க இரிக்கோம்.’ நான் ஆத்தலாய்ச் சொன்னேன்.

‘அதுவும் சர்தாம்டே.’ அண்ணாச்சி எழுந்தார்.

நானும் எசக்கியும் பாய் கடையில் ஒரு டீயும் பீடியும் குடித்துவரவும், அண்ணாச்சி திண்ணையில் உட்காரவும் சரியாக இருந்தது. எசக்கி அவருக்காக வாங்கிய ஒரு கட்டு செய்யது பீடியை அண்ணாச்சி முன் வைத்தான்.

‘இந்த பீடிக் கம்பனி கதை தெரியுமாப்போ?’

‘அண்ணாச்சி துப்பாக்கிச் சூடு கதையைச் சொல்லுங்கோ, பீடிக் கம்பனி கதை இன்னொரு நாளைக்குப் பாப்போம்.’ எசக்கி பரபரத்தான்.

அண்ணாச்சியின் ஓய்வுக்குப் பிறகு முதன்முறையாகப் பதினோரு மணிக்கு மேல் திண்ணையில் கச்சேரி கூடியதை ஒன்றிரண்டு தெருவாசிகள் பார்த்துக்கொண்டே கடந்தார்கள்.

‘அதுவும் சர்தாம்ல… எங்க வுட்டேன் ஆங்… துப்பாக்கிச் சூடு… அடுத்த நாலஞ்சு நாள் திர்ணவேலியே சுடுகாடு போல கெடக்கு. ஒரு ஈ காக்கா அனக்கமில்ல. கர்ஃபியூ தெரியுமா?’

‘எது நூத்தி நாப்பது நாலுதானே?’

‘அது வேற கோமதி. ஒன் பாட்டி போர்னாக்கா அஞ்சு பேரு மேல கூட்டம் போடக்கூடாது. அம்புடுதான். கர்ஃபியூன்னாக்கா ஒரு பயலும் வூட்டைவிட்டு வெளிய வரக்கூடாது. தமிழ்நாட்டுல மொத மொத போட்ட ஊரடங்கு உத்தரவு அதுதாம்ல. எனக்குத் தெரிஞ்சு அதக்கப்றம் ராஜீவ் காந்தியைக் கொன்னப்போ போட்டானுவோ.’

‘ஓ…’

‘எல்லா எடத்திலையும் போலீஸ். கொண்டுவந்து குமிச்சிட்டானுவோ. போர்தான். ஊரே போர் களம் போல கெடக்கு. ‘அண்ணாச்சியின் முகம் அந்தக் காலகட்டத்துக்குப் போய் திரும்பியது.

‘கருப்பு சொவப்பு காரனுவோ எங்களுக்கு எந்த சம்மந்தமுமில்லை. இது மாணவர்கள் போராட்டம்னு கைய மலத்திட்டானுவோ.’

அண்ணாச்சி ரெண்டு பீடிகளைத் தொடர்ந்து பற்ற வைத்து அமைதியாக ஆழ்ந்து இழுத்து வலித்தார். நானும் இசக்கியும் அவர் பேசுவதற்காகக் காத்திருந்தோம்.

—-

‘அப்போ ஈ.பி கெடையாது. ஈ.எஸ்சுன்னு சொல்லுவாங்கோ. அதாவது எலக்ட்ரிசிட்டி போர்ட் இல்ல எலக்ட்ரிசிட்டி சப்ளை சிஸ்டம். திர்ணவேலி ஈ.எஸ்னா தூத்துக்குடி, திர்ணவேலி, எல்லாம் வந்திரும். அப்போ மாவட்டமும் பிரிக்கல. கட்டபொம்மன் மாவட்டம், வ.உ.சி மாவட்டம்னு இருக்கு. நான் கொஞ்ச நாள் தூத்துக்குடில வேலை பாத்தன். அப்றமாட்டு எம்பத்தஞ்சிலதான் இங்கிட்டு வந்தன். யாரெல்லாம் சொந்த ஊருக்கு போவணும்னு கேட்டானுவோ. சர்தாம்னு மாத்தலாயி வந்திட்டேன்.’

‘அண்ணாச்சி அந்த துப்பாக்கிச் சூடு ?’

‘இரிடே அதாம் சொல்லவாரேம். தூத்துக்குடில ஆபீஸ் அஜிஸ்டன்ட் ஒருத்தம் பேரு பாலு. குடின்னா அப்படி குடிப்பான். டூட்டிக்கே  குடிச்சிட்டு வருவாம். ஒண்ணும் சொல்ல முடியாது. ஆபீசருக்க சொந்தக்காரன். குடி ஒண்ணுதாம். ஆனா ஆளு தங்கமான பய்யன். ஒருநாளு மூணாம் மைலுகிட்ட ஒரு டிரான்ஸ்பார்மர் பிரச்சனை, நானும் இவனுமா போறோம். சின்ன கம்ப்ளைண்டுதான். ஏரியா லைன் மேனும்  வந்துட்டான். சப்ளை சரி பண்ண மேல ஏறணும். வேல நடந்திட்ருக்கும்போது பிளையர் வேணும்கான் லைன் மேன். அப்போ பேண்ட் எல்லாம் கெடயாது வேட்டிதான். நம்ம பாலு பய ஏத்திக் கட்டிட்டு சைட் சொவர்ல கால் வெச்சு ஏறுதாம். பய நல்ல கலரு. தொட தெரியி. என்னமோ கருப்பா இருக்கு. இந்தா இந்த வெரலு நீளத்துக்குத் தொடையில ஒரு தொள. எனக்குப் பதறிப் போச்சு.

ஏய்… என்னடே பாலு இது என்னப்போன்னு கேக்கேன். சார் பழைய கத சார். ஸ்கூல் படிக்கறப்போ ஒரு போராட்டம். பயங்கர கலவரமாயிட்டு. துப்பாக்கி சூடு நடந்தது அதுல பட்ட காயம் சார். கொஞ்ச மாசம் ஆஸ்பத்திரி. ஓட்டை மாதிரி தழும்பாயிடுத்து. அதுக்கப்றம் வீட்ல ஸ்கூலுக்கு அனுப்பல. நானும் எட்டாம் க்ளாஸ் தாண்டல. என் அப்பாதான் சொந்தக்காரர் மூல்யமா ஈ.பி ஆபீஸ்ல சேத்துவிட்டார். இல்லேன்னா பொழப்பு கஷ்டம்தான்.”

‘எனக்குக் கண்ணுக்குள்ள இருவது வருஷம்  முன்னால ஸ்கூல் பயக்க போராட்டத்தில அங்கிட்டும் இங்கிட்டும் ஓடினது ஞாபகத்துக்கு வருது. பாவம் இவன மாரி எத்தன பேரோ. பாலு பாவம் நல்ல பய. கொழந்தமொகம் மாறவேயில்ல. சார் சார்னு எங்க போனாலும் கூடவே நாக்குட்டி மாரி வருவாம். என்ன சொல்ல குடி.. சர்வீஸ் முடியறதுக்கு முன்னகூட்டியே குடிச்சுக் குடிச்சுச் செத்தும் போனாம்.

‘பாலு…’ அண்ணாச்சி அமைதியாகிவிட்டார்.

கொஞ்ச நேரம் திண்ணையும் தெருவும் அமைதியாகிவிட்டது. நானும் இசக்கியும் தரையைப் பார்த்தபடி இருந்தோம்.

‘என்ன அண்ணாச்சி பென்ஷன் கேஸ் அடுத்த வாய்தா என்னைக்குன்னு ஓர்மையிருக்கா?

முருகேசன் குமாஸ்தா கேட்டுவிட்டுப் பதிலுக்குக் காத்திருக்காமல் போனான்.

அண்ணாச்சி அதைக் கேட்டது போலவே தெரியவில்லை. நெடுநேரம் அண்ணாச்சி பேசாமல் இருக்க, இசக்கியும் நானும் கிளம்பவும் மனசில்லாமல் உட்காரவும் மனசில்லாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தோம். கொஞ்ச நேரம் கழிந்ததும் அண்ணாச்சி நிமிர்ந்து ஆழத்தில் எதையோ யோசித்தபடிச் சொன்னார்…

“பாலு, அவம் முழுப் பெயரு பாலசுப்ரமணியம் ஐயரு.’’

 

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!