சமத்துவம் எனும் நீண்ட சொல்

தலையங்கம்

‘சமத்துவம் என்பது கற்பனையாக இருக்கலாம். ஆயினும், அதை நம்மை

வழிநடத்தும் கொள்கையாக்கிக்கொள்ள வேண்டும்.’

– பாபாசாகேப் அம்பேத்கர்

ண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்தும் ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு கருதப்படுகிறது. பன்னாட்டு அரங்கு நடத்தும் அளவுக்குச் சென்னைப் புத்தகக் கண்காட்சி வளர்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், கண்காட்சியை நடத்தும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) அதன் நிர்வாகக் கோளாறுகளால் தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. பட்டியலின – பழங்குடி – திருநர் பதிப்பகங்களுக்கு முறையான அரங்குகள் ஒதுக்காதது, உறுப்பினர்களாக உள்ள பதிப்பகங்களுக்குச் சலுகை விலையிலும், உறுப்பினர் அல்லாத பதிப்பகங்களுக்குக் கூடுதல் விலையிலும் அரங்கு கட்டணம் விதிப்பது, அரங்குகள் ஒதுக்குவதில் உள்ள வெளிப்படையற்றத் தன்மை என இப்பட்டியல் நீள்கிறது.

கடந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் தலித் பதிப்பகங்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டன. குறிப்பாக, புத்தகக் கண்காட்சியில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தைக் கூட போராடித்தான் பெற வேண்டிய சூழல் இன்றும் நிலவுகிறது. புத்தகக் கண்காட்சி நடத்துவதில் பபாசி சில விதிமுறைகள் வைத்திருக்கிறது. பிற பதிப்பகங்கள் அவற்றை மீறும்போது கண்டு கொள்ளாத பபாசி, தலித் பதிப்பகங்கள் மீறும்போது மட்டும் தன் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. இத்தகைய அத்துமீறலைத் திருநர் பதிப்பகமான குயர் பதிப்பகமும் எதிர்கொண்டது. ஆணாதிக்கம், சாதியம், மாற்றுப் பாலின வெறுப்பு என மூன்று கத்திகள் அவர்கள் மீது வீசப்பட்டன.

இங்கு பொருளாதார வலிமையற்ற பதிப்பகங்களின் நிலையையும் குறிப்பிட்டாக வேண்டும். அரங்குகள் ஒதுக்கும் பேரத்தில் கடைசி நேரம் வரை காத்திருந்து, ஏமாற்றப்பட்ட பதிப்பகங்களின் குரலாக ஒலித்தது சால்ட் பதிப்பகம். கடந்த ஆண்டு அரங்குகள் ஒதுக்காத பபாசியை எதிர்த்து, புத்தகக் கண்காட்சி நடக்கும் வளாகத்திற்குள் சாலையோரம் புத்தகங்களை விற்பனை செய்தது அப்பதிப்பகம். அவர்களுக்கு ஆதரவாகப் பல எழுத்தாளர்கள் குரல் கொடுத்த பின்னர் இந்த ஆண்டு சால்ட் பதிப்பகத்திற்கு அரங்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயக நாட்டில் ஒவ்வொன்றுக்கும் புரட்சி செய்ய வேண்டியிருக்கிறது.

உறுப்பினரானால் அரங்குகள் ஒதுக்குவதிலுள்ள சிக்கல்கள் குறையும் என்று சொல்லப்படுகிறது. எதன் அடிப்படையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுதான் இங்கு பெரிய சிக்கல். பதிப்பகம் வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கைதான் அளவீடு என்றால், பத்து நூல்கள் கூட வெளியிட்டிராத சில பதிப்பகங்களுக்கு எப்படி ஒவ்வொன்றுக்கும் நான்கு அரங்குகள் ஒதுக்கப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது. கட்டணம் விதிப்பதிலும் கூட இதே நிலைதான். ஒவ்வோர் ஆண்டும் கட்டண நிர்ணயத்தில் குளறுபடிகள் தொடர்ந்தவண்ணமே இருக்கிறது.

தனியார் பதிப்பகங்களின் கூட்டமைப்பு என்றாலும் அரசின் நிதியுதவி பெற்றுதான் புத்தகக் கண்காட்சி நடத்துகிறார்கள். அரசின் நிதியுதவி இல்லையென்றாலும், மக்களின் பங்களிப்பே மையம் எனும்போது, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பிரதிநிதித்துவப் படுத்தப்பட வேண்டும். அது சட்டம், அறமும் கூட. அப்படிச் செயல்படவில்லை எனில், எதிர்விளைவுகள் நிச்சயம் இருக்கும்.

இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது ‘வாய்ஸ் ஆஃப் புத்தா’ பதிப்பகமும் ‘எழுச்சி’ பதிப்பகமும் நீதிமன்றத்தை நாடியுள்ளன. “சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் ஆட்சியர்கள் வாயிலாகப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. சென்னையில் மட்டும் பபாசி என்ற அமைப்பு நடத்துகிறது. இதற்கு அரசு நிதியுதவி வழங்குகிறது.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நடத்தும் பதிப்பகங்களுக்குப் போதிய அளவில் அரங்குகள் ஒதுக்குவதில்லை. பபாசி உறுப்பினர்களுக்கு 50 சதவீத சலுகையில் அரங்குகள் ஒதுக்கப்படுகின்றன.

எங்களைப் போன்றோருக்கு அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; அரங்குகளும் தாமதமாக ஒதுக்கப்படுகின்றன. எனவே, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஆதிதிராவிடர் – பழங்குடியினத்தைச் சேர்ந்த பதிப்பாளர்கள் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று ‘வாய்ஸ் ஆஃப் புத்தா’ பதிப்பகத்தின் செந்தமிழ் செல்வியும் ‘எழுச்சி’ பதிப்பகத்தின் பிரதீப்பும் மனு அளித்துள்ளனர்.

வழக்கு விசாரணையில் பபாசி அமைப்பை எதிர் மனுதாரராக இணைத்து, தமிழ்நாடு அரசும் பபாசி அமைப்பும் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் நீதிபதி அனிதா சுமந்த். சட்டப் போராட்டம் மட்டுமே நமக்கான வாய்ப்பு, அது மட்டுமே நம்மை ஓரளவுக்குக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்புக்காகக் காத்திருப்போம்.

m

தொடக்கத்தில் சென்னை – காஞ்சிபுரம், அடுத்து திருநெல்வேலி – தூத்துக்குடி என மிக்ஜாம் புயலை ஒட்டிப் பெய்த பெருமழை நான்கு நகரங்களையும் மூழ்கடித்துவிட்டது. வரலாறு காணாத பெருமழை என்ற வார்த்தையே இதன் தீவிரத் தன்மையை உணர்த்தி விடும். இம்மழை ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து மீள சில காலம் ஆகும் என்று சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் மக்கள் கூறுகின்றனர்.

பேரிடர் என்பதால் அரசை மொத்தமாகக் குறை கூறுவது அறமாகாது. அரசும் அவ்வளவு மெத்தனத்தோடு செயல்படவில்லை. பல அமைச்சர்கள் அந்தந்தப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை தீவிரமாகப் பணியாற்றினர் என்பதெல்லாம் சரியே. ஆனால், அதிலும் சில பாகுபாடுகள் இருந்ததைச் சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை. சென்னை வெள்ளத்தில் நடிகர்கள், பிரபல எழுத்தாளர்கள் ஆகியோருக்கெல்லாம் கேட்ட உடனே உதவிகள் கிடைத்தன. ஆனால், புளியந்தோப்பு, கண்ணகி நகர் என ‘நகர’த்திற்கு வெளியே வீசப்பட்ட மக்களை, மழை ஓய்ந்து மூன்று நாட்களுக்குப் பிறகே, அதிகாரிகள் எட்டிப் பார்த்தனர். அதுவும் சமூக வலை தளத்தில் காணொளி பரப்பப்பட்டு விமர்சனங்கள் எழுந்த பிறகே. அதிகாரமற்றவர்கள் அதிகாரத்தின் கருணையைப் பெறுவதற்கான அடிப்படை தகுதி, அதிகாரத்திற்குப் பக்கத்தில் இருக்க வேண்டும்.

அதேபோல், அரசின் எந்தச் செயற்பாடும் தங்கள் பகுதியை எட்டாத விரக்தியில் வீதியில் போராடிய மக்களைப் பார்த்து, “பால், பிரெட்டுக்காக நிற்கிறார்கள்” என்ற இழிவாகப் பேசியிருக்கிறார் ஒரு அமைச்சர். அவர் கொடுத்த நிவாரணப் பொருட்களை அப்போதே வீதியில் வீசியெறிந்தனர் மக்கள். இந்த மக்கள்தாம் உங்களை ஆட்சியில் அமரவைத்தனர், மாடி வீட்டில் அமர்ந்து ‘சுத்த சைவ’ உணவு கேட்டவர் அல்ல.

இவை யாவும் தோழமைச் சுட்டல்.

m

காலங்கள் கடந்தும் நம் வரலாறு இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. அதிகாரத்திடம் போரிட்டு வென்ற வரலாறு சிலருக்கு மட்டுமே என்ற கற்பனைகளை உடைத்து நிற்கிறது பீமா கோரேகான் நினைவுச் சின்னம். சாதியத்தை, அதிகாரத்தை வீழ்த்த முன்னெடுக்கும் ஒவ்வோர் அடியிலும் அந்த வீரர்களின் கரகோஷம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றி, அதைத் தம்மமாக்கும்வரை ஒலித்துக்கொண்டே இருக்கும்.

அனைவருக்கும் ஜெய் பீம்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!