“பௌத்த மதமாற்றம் என்பது சமூக அரசியல் நடவடிக்கை” – யாக்கன்

சந்திப்பு: இலஞ்சி அ.கண்ணன்

கடந்த இதழில் வெளியான நேர்காணலின் தொடர்ச்சி

 

‘அம்பேத்கரின் வரையறையின்படி பௌத்தம் என்பது மதமாகாது. அதை ஓர் அறநெறி அல்லது கொள்கை என்றே பொருள் கொள்ள முடியும்’ என்கிறார் தலித் முரசின் ஆசிரியர் புனித பாண்டியன். இக்கருத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

முதலில் மதம் என்றால் என்ன என்பது பற்றிப் பேச வேண்டியது அவசியம். பாபாசாகேப் அம்பேத்கர் ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலில் மதத்தைப் பற்றித் தெளிவாக விவரித்திருப்பார். அவரின் கருத்துப்படி மதம் என்பது வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பொருள்களில் கையாளப்பட்டிருக்கிறது. கற்காலங்களில் நெருப்பு, மழை, வெள்ளம், பேரிடர் போன்ற இயற்கையின் செயற்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியாமல், ஒரு மேஜிக் வந்து செயல்படுகிறது என நம்பினார்கள். இடைக்காலங்களில் யாரோ ஒருவர் அல்லது ஒரு சக்தி இயக்குகிறது எனச் சொல்லிக் கொண்டார்கள். அடுத்தடுத்த காலகட்டங்களில் அந்தச் சக்தி குறித்து விவாதங்கள் தொடங்கின. அந்தச் சக்தி ரொம்பக் கோபக்கார சக்தி. நாம் தவறு செய்துவிட்டால் நம்மைக் கொன்றுவிடும். எனவே, அதை அமைதிப் படுத்துவதற்குக் காணிக்கை கொடுப்பது, ஜெபங்கள் செய்வது, விழாக்கள் எடுப்பது போன்ற செயல்பாடுகளில் இறங்கினார்கள். அதற்குக் கடவுள் என்று பெயர் வைக்கிறார்கள். கடவுளுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்கிற கருத்துகள் உருவாகி இன்று இருக்கக்கூடிய நிலையை எட்டியிருப்பதாகப் புரட்சியாளர் அம்பேத்கர் கூறுகிறார்.

பௌத்தம் என்கிற சொல்லுக்குள் புத்தருடைய வாழ்க்கை வரலாறு, புத்தருடைய போதனைகள், புத்தர் உருவாக்கிய சங்கத்தின் வரலாறு இவையெல்லாம் அடக்கம். ஆனால், குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், புரட்சியாளர் அம்பேத்கர் தம்மம் என்கிற வார்த்தையை எடுத்துக்கொள்கிறார். தம்மம் என்பது ஓர் அறிவியல் சார்ந்த நடைமுறை. அங்கு கடவுள் கிடையாது, ஆன்மா கிடையாது. இந்து மதம் வலியுறுத்தக் கூடிய சதுர்வர்ண கட்டமைப்பு, சாதியக் கட்டமைப்பு இவை எவற்றுக்கும் தம்மத்தில் இடமில்லை. தம்மம் என்பது ஒழுக்க நெறி. Morality is a dhamma, Dhamma is a morality என்கிறார். அப்படியென்றால் தம்மம் என்பது வாழ்வியல் முறை கிடையாது. ஒரு தனிமனிதன் வனாந்தரத்தில் வாழ்கிறான் என்றால், அவனுக்கு அங்கு ஒழுக்கம் தேவையில்லை. அவன் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிடலாம். ஆனால், இன்னொரு மனிதனோடு சேர்ந்து வாழும்போது அங்கு ஒழுக்கம் கட்டாயம் ஆகிறது. நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ அதைக் கடைபிடித்தே ஆக வேண்டும். அப்படியொரு நிர்ப்பந்தத்தை, மனித வாழ்வியலைத் தம்மம் கொடுக்கிறது. ஒழுக்கத்தை ஒரு நிபந்தனையாக வைக்கிறது.

இப்போது நீங்கள் தம்மத்தை ஒரு மதமாகச் சொல்லலாமா என்கிற கேள்விக்கு இத்தகைய கண்ணோட்டத்திலிருந்து பதிலளிக்க வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கக்கூடிய மதம் குறித்த கருத்துகளில் தம்மம் வராது. தம்மத்திற்கென்று தனிப்பட்ட நெறிமுறைகள், நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றை மதம் என்று சொல்ல முடியாது என்று சொன்னால், இழப்பு தம்மத்திற்கு அல்ல, மதத்திற்கு. எனவே, இப்போதிருக்கக் கூடிய மனித சமூகத்திற்குத் தம்மத்தை மதமாக ஏற்றுக்கொள்வதுதான் அவசரத் தேவை.

தம்மத்தைத் துல்லியமாகப் புரிந்துகொள்பவர்கள் அதை மதமாகவும், அதற்கு மேலானதாகவும் ஏற்றுக் கொள்வார்கள். அங்கு கடவுளுக்கு, ஆன்மாவுக்கு வேலை இல்லை. அப்படிப்பட்ட ஒன்று இல்லவே இல்லை. இல்லாத ஒன்றை இதற்குப் பொருத்தப் பாடாகப் பேசுவது பிழையான வாதம். பாபாசாகேப் இன்னொரு விளக்கம் தருகிறார். அதாவது, இந்தியாவில் இருக்கக்கூடிய மதங்கள் இரண்டு வகைப்படும். இயற்கையாக வளர்ந்த மதங்கள் (Natural religion), வெளிப்படுத்தப்பட்ட மதங்கள் (Revealed religion). உலக அளவிலும் இதுதான். இயற்கையாக உருவான மதங்கள் இரண்டு என்கிறார்: இந்து மதம், பௌத்தம். வெளிப்படுத்தப்பட்ட மதங்கள்: கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கியம். இதிலெல்லாம் யாராவது ஒருவர் நானே கடவுள் என்றோ, கடவுளுடைய வாரிசு, தூதர் என்றோ சொல்லியிருப்பார். அவரது கருத்துகளை மதக் கருத்துகளாக மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.

எல்லா மதங்களுக்குமே கடவுள் இருப்பார். கடவுளைத் துதிக்க வேண்டும், அதற்கான சடங்கு சம்பிரதாயங்களைச் செய்ய வேண்டும், அதற்கொரு புரோகிதர் இருப்பார். இதுதான் மதம் என்பதற்கான இன்றைய கருத்து. ஆனால், பௌத்த தம்மத்தில் இப்படியான கோட்பாடுகளுக்கு இடமே இல்லை. ஆனாலும், தம்மம் 2500 ஆண்டுகாலமாக உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதை மதமாகவும் அதற்கு மேலான ஒழுக்க நெறியான வாழ்க்கை முறையாகவும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கர் நமக்குத் துல்லியமாக வலியுறுத்துகிறார். அவர் தேரவாதத்தையோ, மகாயானத்தையோ, ஹீனயானத்தையோ, வேறு பிரிவுகளையோ வலியுறுத்தவில்லை. அவர் பாலி மொழியில் இருந்த நிகாயங்கள், வினய பிடகங்கள் உள்ளிட்ட பல நூல்களை வாசித்தறிந்து, ஆய்வுசெய்து அதனடிப்படையில் இந்தத் தியரியை வழங்கியிருக்கிறார். இந்துமதம் உருவாக்கி வைத்திருக்கக்கூடிய சாதியக் கட்டமைப்பை உடைத்து நொறுக்கி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் ஒழுக்கத்தைக் கற்றுத் தருகிற தம்மத்தை அவர் வழிமொழிகிறார். இதுதான் அவரது மதம்.

இன்னொரு விவாதமும் இதில் இருக்கிறது. மதத்திற்கு இந்திய அரசு முக்கியமான இடம் கொடுத்திருக்கிறது. அரசமைப்புச் சட்டத்திலும் மதம் என்பது முக்கியமான இடத்தில் இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் பௌத்தத்தை மதமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதை, ஒரு கோட்பாடு, மார்க்கம் என்று கூறி அதன் கனபரிமாணத்தைக் குறைத்துவிடக்கூடாது. பெரியாரிமும் மார்க்சியமும் அம்பேத்கரியமும் கருத்தியல்கள், கோட்பாடுகள், அவை மத அங்கீகாரத்தைப் பெற முடியாது. கருத்தியல்கள் அழியும் தன்மை கொண்டவை, மதம் அப்படிப்பட்டதல்ல. ஆனால் பௌத்தம் கோட்பாடு மட்டும் அல்ல; கருத்தியல் மட்டும் அல்ல; இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக நீடித்துவரும் ஒரு மதம். இந்திய அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மதம். எனவே, தலித் மக்கள்  பௌத்தத்தை மதமாக ஏற்பதில் எந்தத் தவறும் இல்லை. அது முக்கியத் தேவையும்கூட. அரசமைப்புச் சட்ட அங்கீகாரத்துடன், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளைச் சமூகத்தில்  உருவாக்கி வளர்க்கும் தனித்துவமான பௌத்த மத அடையாளத்துடன் ஒன்றுதிரட்டப்பட்ட அரசியல் சக்திகளாகத் தலித் மக்கள் மாற வேண்டும் என்பது அம்பேத்கரின் கனவாக இருந்தது.

எந்தவொரு சமூகத்திலும் சட்டத்தைவிட மதம்தான் நீண்டகாலமாக வினையாற்றிக்கொண்டிருக்கிறது என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். மதம் இல்லாமல் ஒரு மனிதன் வாழ முடியாது எனும் அளவிற்கு அவர் அதை வலியுறுத்துகிறார். மதம் என்பதைக் கடவுள், கோயில், வழிபாடுகள், ஜெபங்கள், சடங்கு வழிமுறைகள், புரோகிதர் என்ற தன்மையோடுதான் அரசியலமைப்புச் சட்டம் புரிந்து வைத்திருக்கிறது. அதனால், ஒரு கோட்பாடு என்ற அடையாளத்தைப் பௌத்தத்திற்குப் பொருத்த முடியாது. இந்த விவாதம்தான், புனித பாண்டியன் எழுதிய கட்டுரையின் மையமாக இருக்கிறது என நினைக்கிறேன். தம்மம் என்ற கோட்பாட்டை விளக்கிய அம்பேத்கர், தம்மம்தான் மதமுமாகக் கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இந்தியச் சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்குத் தேவை தம்மம்தான் என்கிறார். அவரைப் பொறுத்தவரைக்கும் தம்மம்தான் மதம், மதம்தான் தம்மம்.

கூடுதலாக இன்னொன்றும் சொல்ல வேண்டும், பெரியாரியவாதிகளும் தமிழ்த்தேசியவாதிகளும்  பௌத்தத்தைக் கடவுள், ஆன்மா, வழிபாடுகள் போன்றவற்றுடன் செயல்படும், மதமாகப் பார்க்கிறார்கள். இதில் மிகப்பெரிய கருத்தியல் சிக்கல் இருக்கிறது. தங்களுடைய வாதத்திற்காக இலங்கை, ஜப்பான், சீனாவில் உள்ள பௌத்தத்தையும் அவர்கள் துணைக்கு அழைத்துக்கொள்கிறார்கள். இலங்கையில் பௌத்த மதவாதிகள்தான் படுகொலைகளைச் செய்கிறார்கள். அந்த நிலைதான் இங்கும் வரும் என்று வாதிடுகிறார்கள். இங்குதான்  பாபாசாகேப் அம்பேத்கர் வலியுறுத்தும் கோட்பாட்டை அவர்கள் தவறவிடுகிறார்கள். எனவே, பெரியாரியவாதிகளாலும் மார்க்ஸியவாதிகளாலும் தமிழ்த்தேசியவாதிகளாலும் முன்வைக்கப்படுகிற இத்தகைய விவாதத்தைப் புறக்கணிக்க வேண்டும். தலித்துகளுக்கென்று ஒரு மதம் உருவாகிவிடக் கூடாது என்கிற பின்புலத்தோடு அவர்கள் பேசுகிறார்கள். ஒருவேளை புனித பாண்டியன் அப்படியொரு கருத்தை வலியுறுத்தியிருந்தால், அதை அவர் சரி செய்துகொள்ள வேண்டும். தலித்துகளால் சொல்லப்பட்டாலும், தலித் அல்லாதவர்களால் சொல்லப்பட்டாலும் பௌத்தம் மதம் அல்ல என்பது போன்ற கருத்துகள், இந்தியச் சூழலில் பௌத்தம் எவ்வாறு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று அம்பேத்கர் கொண்டிருந்த கருத்துகளுக்கு எதிரானது.

புத்தருக்கும் மார்க்ஸுக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடுகள் என்ன?

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலகட்டத்திலிருந்தே மார்க்ஸிய நூல்களைக் கற்றிருக்கிறேன் என ‘புத்தரா, காரல் மார்க்ஸா’ நூலில் பாபாசாகேப் அம்பேத்கர் தெளிவாகச் சொல்கிறார். சமூகத்திற்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த ஓர் அறிவுஜீவி, தான் கற்றறியாத ஒன்றைக் கற்றறிந்தேன் எனச் சொல்வதற்குத் துளியும் வாய்ப்பில்லை. கம்யூனிஸ்டுகள், அம்பேத்கருக்கு மார்க்ஸியம் தெரியுமா தெரியாதா என்பதில் வாதத்தைத் தொடங்கி, அவருக்குத் துல்லியமாக எதுவும் தெரியாது என்கிறார்கள். இதிலிருந்துதான் மார்க்ஸ் மீது அம்பேத்கர் வைத்த விமர்சனங்களை அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பதற்காக இதை முதலில் சொல்கிறேன். ‘புத்தரா, காரல் மார்க்ஸா’ என்று அம்பேத்கர் தொடங்கி வைத்த மிகப்பெரிய விவாதத்தை, கம்யூனிஸ்டுகள் ஒரு கருத்தாகக் கூட எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள்.

இந்தியாவில் புரட்சியாளர் அம்பேத்கருக்கு இணையாக, பௌத்தத்தை அறிவியல் – சமூக அரசியல் கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்தவர் எவருமிலர். எனவே, அம்பேத்கருக்கு மார்க்ஸியமும் தெரிந்திருக்கிறது பௌத்தமும் தெரிந்திருக்கிறது. அதன் அடிப்படையில்தான் இந்த ஒப்பீட்டையே செய்கிறார். புத்தரையும் மார்க்ஸையும் ஒப்பிடலாமா? புத்தர் 2,500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர். அவரை எப்படி நவீன கால அரசியலுக்குள் ஒப்பிடுவது என்று அவரே கேட்டுக்கொள்கிறார். மார்க்ஸை அந்நூலில் வானளவிற்குப் புகழ்கிறார். மிகச் சிறந்த மேதை என்பதில் சந்தேகமில்லை என்கிறார். மார்க்ஸியம் வலியுறுத்தும் பொதுவுடைமைச் சமூகத்தை புத்தர் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப் படுத்தினார் என்று சொல்கிறார். அரசியல் கோட்பாடு பற்றி நீங்கள் ஆய்வு செய்தால், (நான் கூட அதைப் பற்றிச் சிறு நூல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன்) புத்தர் ஏற்கெனவே நடைமுறையில், வர்ண சாதிக் கட்டமைப்பு உருவாக்கியிருந்த உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக, ஒரு பொதுவுடைமைச் சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று விரும்பினார். அதன் அடிப்படையில்தான் சங்கத்தை நிறுவுகிறார். அங்கு புத்த பிக்குகளுக்கு உடைமையென்று எதுவும் இருக்கக் கூடாது என்கிற விதிமுறையை நடைமுறைப் படுத்தினார். பல மன்னர்கள் நிலங்களையும் தோப்பு துறவுகளையும் தானமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று அவரிடம் கொடுத்தார்கள். அவை யாவற்றையும் புத்தர் பொது உடைமை ஆக்குகிறார். எப்போது வேண்டுமானாலும் சங்கத்தில் உறுப்பினர்கள் தங்கலாம்; யாரும் சங்கத்திற்குள் வரலாம்; பெண்கள் வரலாம்; பெண்கள் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுவார்கள்; பெண்கள் பிக்குகளாக மாறலாம், புனிதத் தன்மையை அடையலாம்.

சமூகத்தில் இருக்கக்கூடிய அனைத்துத் தீங்குகளுக்கும் எதிராக, தான் கட்டமைக்க நினைத்த ஒரு சமூகத்தை உருவாக்கி அதை நடைமுறையும்படுத்தினார். உடைமை என்பது என்ன, உடைமை எவ்வாறு உருவாகிறது, உடைமை உருவாகுவதற்குக் காரணம் என்ன, அது சமூகத்திற்கு எம்மாதிரியான தீங்குகளை விளைவிக்கிறது, இவை குறித்தெல்லாம் புத்தருக்குத் தெளிவான கண்ணோட்டம் இருந்தது. இதையேதான் 2,500 ஆண்டுகளுக்குப் பின்பு மார்க்ஸ் சொன்னார். இரண்டுக்கும் உள்ள முக்கியமான வேறுபாட்டை பாபாசாகேப் கூறுகிறார். கார்ல் மார்க்ஸ் இதை வன்முறையால் நிகழ்த்த முடியும் என்று நம்புகிறார். புத்தர் கனிவான போதனைகளின் மூலம் சாத்தியமாக்க முடியும் என்று நினைக்கிறார். இதுதான் வேறுபாடு.

வன்முறையின் மூலமாகப் பொதுவுடைமைச் சமூகத்தைக் கட்டமைக்க நினைத்தால், அதைப் பொதுவுடைமை தன்மையிலேயே வைத்திருப்பதற்குத் தொடர்ந்து வன்முறையைப் பிரயோகித்துக் கொண்டே இருக்க வேண்டும். எனவே, வன்முறை நிரந்தரமானதாக மாறுகிறது. அது சமூகத்தில் அமைதியை ஏற்படுத்தாது என்பதுதான் புத்தருடைய கோட்பாடு. இந்தக் கருத்திலிருந்து புத்தரைப் பார்க்கிறபோது, யார் முதன்மையானவர், பின்பற்றத் தகுந்தவர் என்பது நமக்குப் புலப்படுகிறது. இதுதான் அந்த நூலில் அம்பேத்கர் முன்வைக்கக்கூடிய விவாதம். இதைத் துல்லியமாகப் புரிந்துகொண்டவர்கள், அதனுடைய இயல்பான தன்மையையும் புரிந்துகொள்வார்கள். அந்த நூல் எழுதப்பட்டதே கம்யூனிஸ்டுகளை மையப்படுத்திதான். ஆனால், கெடுவாய்ப்பாகக் கம்யூனிஸ்ட்கள் அதை வாசிக்கவே இல்லை. திறந்த மனதோடு யாரேனும் ஒரு கம்யூனிஸ்ட் அதை வாசிப்பாரானால், அவர் அதை ஏற்றுக்கொள்வார்; நேர்மையானவராக இருந்தால், உடனடியாக இந்து மதத்திலிருந்து வெளியேறி பௌத்தத்திற்கு மாற வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வார். நேர்மையான, சமூக அர்ப்பணிப்புள்ள, மிகக் கற்றறிந்த, டி.டி.கோசாம்பி, ராகுல சாங்கிருத்யாயன் போன்ற பல மார்க்சியவாதிகள் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டு பிக்குகளாகவே மாறி இருக்கிறார்கள். இந்தியர்களுக்கான மார்க்ஸியத்தைக் கற்றுக்கொடுத்ததும் அவர்கள்தான். இன்று கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தங்களைக் கம்யூனிஸ்டுகள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தியாவில் ஒரு மார்க்ஸிஸ்ட் கூட கிடையாது. இதை நான் கோபுரத்தின் மேல் நின்றுகூட கூவுவேன். காரணம், கம்யூனிஸத்திற்கான பிரச்சாரம் இடைவிடாமல் நடைபெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். பௌத்தப் பிரச்சாரம் எப்படி இடைவிடாமல் நடக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொல்கிறாரோ, அதற்கு முன்னுதாரணமாகக் கம்யூனிஸ்டுகள் நடந்திருக்க வேண்டும். எந்தப் பிரச்சாரமும் நடைபெறவில்லை. இன்னும் சொல்லப் போனால், இந்தியச் சமூகத்தில் தொழிலாளி என்கிற உணர்வே கொன்று புதைக்கப்பட்டுவிட்டது. அப்படிப்பட்ட சூழலில், ‘நான் புரட்சியைக் கட்டுவேன்’ என்று யாரும் சொல்ல முடியாது. இதை வைத்துதான் இங்கு ஒரு மார்க்ஸியவாதி கூட இருக்க முடியாது என்று சொல்கிறேன். அப்படி இருப்பார்களேயானால், வாய் பேசாமல் இருப்பார்கள். மாறாக தலித்துகளுக்கு எதிராக, அம்பேத்கருக்கு எதிராகப் பேச மாட்டார்கள். எனவே, ஒவ்வொரு கம்யூனிஸ்டுக்கும் நான் சொல்வேன் ‘புத்தரா, காரல் மார்க்ஸா’ நூலை வாசித்து வெளிப்படைத் தன்மையோடு விவாதம் வையுங்கள். அம்பேத்கரிய பௌத்தத்தைப் புரிந்துகொண்ட, தம்மத்தை ஏற்றுக் கொண்ட அறிவுஜீவிகள் எந்த விவாதத்திற்கும் தயாராகவே இருக்கிறார்கள்.

பௌத்த மார்க்கத்தை முன்னகர்த்திச் சென்றதில் மாமன்னர் அசோகருக்குப் பின் புரட்சியாளர் அம்பேத்கரின் பணி போற்றுதலுக்குரியது. அதே வேளையில், இன்றைய தலித் தலைவர்கள் பண்டிதர் அயோத்திதாசர், புரட்சியாளர் அம்பேத்கரைப் பற்றிப் பேசுகிற அளவிற்கு அவர்கள் முன்னெடுத்துச் சென்ற பௌத்த அரசியலைப் பற்றிப் பேசுவதில்லையே ஏன்?

1935இல் புரட்சியாளர் அம்பேத்கர் ஆற்றிய உரை ஒன்றில், ‘நான் இந்து மதத்திலிருந்து வெளியேறப் போகிறேன்’ என்ற கருத்தைப் முதன்முதலில் பதிவு செய்திருப்பார். அந்த நொடியிலிருந்து பிரச்சினைகள் தொடங்கின. மதம் மாறுவது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்கிற சந்தேகம் அவருக்கு எழுகிறது. இந்திய அளவில் மக்களைத் திரட்டிக் கேட்பது சாத்தியமாகாது. அதனால் முதலில் நம் மக்களிடம் கருத்துக் கேட்போம் என்று, பம்பாய் தாததரில் 1936இல் ஒரு மாநாட்டைக் கூட்டினார். அதில்தான் ‘விடுதலைக்கு என்ன வழி’ என்பதைப் பற்றிப் பேசுகிறார். அம்பேத்கர் ஆற்றிய உரைகளிலே மிகச்சிறந்த உரை அதுதான். தீண்டத்தகாத மக்களுக்கு அவர் சொல்ல விரும்பிய கருத்துகளை எல்லாம் சொல்லியிருப்பார். பொதுவாக, அம்பேத்கர் தீண்டத்தகாதவர்களுக்கு என்று தனியாகச் சொல்லி இருக்கிறார்; சாதி இந்துக்களுக்கென்று தனியாகச் சொல்லியிருக்கிறார்; வெளிநாடு வாழ் மக்களுக்கும் சொல்லியிருக்கிறார்; காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கும் தனியாகச் சொல்கிறார். பல்வேறு தளங்களில் இப்படி இயங்கியிருக்கிறார். பட்டியல் சாதி மக்களுக்கு அவர் சொல்லியவற்றில் மிகவும் முதன்மையான செய்தி, ‘முழு விடுதலைக்கான வழி’ உரையில்தான் இருக்கிறது.

மதம் மாறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதைத்தான் வலியுறுத்திச் சொன்னார். இந்தக் கருத்து இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டுச் சூழலில் எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் இதற்கு மிக அழுத்தமாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். அம்பேத்கர் இந்து மதத்தைப் புரிந்துகொண்ட அளவிற்கு இணையாக, பிற மாநிலங்களில் அதைப் புரிந்துகொண்ட தலைவர்கள் அப்போது இல்லை. இன்று எல்லாத் தலைவர்களும் இந்து மதம் என்ன செய்திருக்கிறது என்பதைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், அப்போது இந்து மதத்தின் மீது விமர்சனம் வைப்பதற்குக் கூட தலைவர்கள் போதிய விவரங்களோடு இல்லை. இவற்றுக்கெல்லாம் முந்தியவர் பண்டிதர் அயோத்திதாசர். ஒடுக்கப்பட்ட மக்கள் இந்துக்களே அல்ல, பூர்வ பௌத்தர்கள் என்று சொல்கிறார். இக்கருத்தையும் வழிகாட்டுதலையும் கூட எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவாசன் போன்றோர் ஏற்கவில்லை.

தலித் மக்களுக்கு நேரும் வன்கொடுமைகளுக்குப் பின்னணியாக இந்து மதம் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வதற்குக் கூட கடந்த ஐம்பதாண்டுகளாகத் தமிழகத்தில் தலைவர்கள் உருவாகவில்லை. மதம் எப்படிப் பின்னணியாக இருக்கும் என்று மேலோட்டமாகப் பேசுகிற தலைவர்கள்தான் இன்று மக்களை வழிநடத்துகிறார்கள். நான் அறிந்தவரைக்கும் தொண்ணூறுகளுக்குப் பிறகு, தலித் அமைப்புகளைக் கட்டியெழுப்பிய தலைவர்கள் பெருமளவு இந்து மதப் பற்றோடுதான் இருக்கிறார்கள். சில தலைவர்கள் இந்துமத பயங்கரவாத அமைப்புகளோடு இணைந்துகொள்வதில் பேரார்வம் காட்டுகிறார்கள். இப்படிப்பட்ட தலைவர்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறி பௌத்தத்தில் இணைய வேண்டும் என்று பேசுவார்கள் என எதிர்பார்ப்பது வீண் செயலே.

இதை நான் குற்றச்சாட்டாகச் சொல்லவில்லை. கடந்த முப்பதாண்டு காலமாக அவர்கள் எவ்வாறு இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள், அம்பேத்கர் முன்வைக்கக் கூடிய மதமாற்றம் பற்றிய சிக்கலை, அவர் தொடங்கி வைத்த மதமாற்ற மக்கள் இயக்கத்தை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதைக் கவனித்துவருபவன் என்கிற முறையில் இக்கருத்தைக் கூறுகிறேன்.

சவால் என்னவென்றால், மதமாற்றத்திற்கு எதிராக இவர்கள் உருவாக்கியிருக்கக்கூடிய கருத்தியலை மக்களிடமிருந்து அகற்றுவதற்கு இன்னும் பத்தாண்டு காலப் பிரச்சாரம் தேவை. அந்த அளவிற்கு இந்து மத கருத்தாக்கங்களைத் தலித் மக்களிடம் ஆழமாக விதைத்திருக்கிறார்கள். இதை மிகவும் வேதனையுடன் சொல்கிறேன். இவர்களை நம்புவது கோழைத்தனம். இக்கருத்தைப் புரிந்துகொண்ட இளைஞர்கள், பெரும் வீச்சாக மக்களிடம் செல்ல வேண்டும்.

‘இந்து என்ற பெயரில் பிராமணியச் சடங்குகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் தங்களுடைய தனித்துவமான பண்பாட்டுப் பாதையில் சென்றாலே போதும்; புதிய மத அடையாளம் ஒன்றுக்குள் தலித்துகள் செல்வது அவர்களுடைய மரபை வேரறுத்துவிடுவதுடன், சமூகத்தைப் பிளவுக்குள் தள்ளிவிடும்; தலித்துகளை எண்ணிக்கை ரீதியாகப் பலவீனப்படுத்தும்’ என்று முனைவர் தொல்.திருமாவளவன் சொன்னதாகப் பத்திரிகையாளர் சமஸ் சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். இக்கருத்து அம்பேத்கரின் மதமாற்றக் கூற்றுக்கு எதிரானதாக அமையாதா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையும் தொண்டர்களும் பௌத்தத்திற்கு எதிராகச் செயல்பட்டதாக நான் பார்க்கவில்லை. தொல்.திருமாவளவன் பல பௌத்த நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார், பௌத்தக் கருத்தரங்குகளிலும் பங்கேற்றுவருகிறார். புத்தரை அவர் எந்த இடத்திலும் குறைவாகவோ, விட்டுக்கொடுத்தோ பேசியது கிடையாது. பாபாசாகேப் அம்பேத்கருடைய மதமாற்ற மக்கள் இயக்கத்தை மலினப்படுத்திப் பேசியதும் இல்லை. அவரின் கொள்கையை ஏற்றுக்கொண்ட அக்கட்சி நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாகவே பௌத்தச் செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.

ஆனால், எழுத்தாளர் சமஸ் குறிப்பிட்டிருப்பது விசிக தலைவர் திருமாவளவனின் கருத்துதான். இதற்கு இணையாகப் பல இடங்களில் அவர் பேசியிருக்கிறார். இந்து மதத்திலிருந்து வெளியேறி தலித் மக்கள் பௌத்தத்திற்குச் சென்றால், இந்துக்கள் சிறுபான்மை ஆகிவிடுவார்கள் அல்லது பௌத்தத்திற்குச் செல்லக் கூடிய மக்கள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள் என்கிற கருத்து மிக நீண்டகாலமாக அவரால் சொல்லப்படுகிறது.

நீங்கள் துல்லியமாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருபக்கம் பௌத்தத்திற்கு ஆதரவான கருத்துகளைப் பேசி, பௌத்த நிகழ்வுகளிலேயே பங்கேற்கக் கூடிய அளவிற்கு ஆர்வம் காட்டுகிறார். இன்னொரு பக்கம், மதமாற்றம் என்பது மோசமான விளைவுகளை மக்களிடையே உருவாக்கிவிடும் என்கிற கருத்தையும் கொண்டிருக்கிறார். இவ்படி முரண்பட்ட கருத்துகளைக் கொண்டிருக்கும் அவர், டாக்டர் அம்பேத்கர் தொடங்கி வைத்த பௌத்த மதமாற்ற மக்கள் இயக்கத்திற்கு உதவமாட்டார் என்பது என்னுடைய கருத்து.

ஆனால், சமஸ் இக்கட்டுரையை எழுதியதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. முதலில் இந்த மேற்கோளை மட்டும் எதற்காக சமஸ் கையாள வேண்டும்? திருமாவளவன் எவ்வளவோ செய்திகளைச் சொல்லி இருக்கிறார். தலித் பிரச்சினைகளைப் பொறுத்தவரை இடைநிலைச் சாதிஇந்து அறிவுஜீவிகள் அந்நியர்கள். அவர்களுக்குத் தலித் பிரச்சினையின் அடிப்படைக் கூடத் தெரியாது. அப்படியான சூழலில், இவ்வளவு பெரிய கருத்தைச் சொல்வது மிகவும் சிறுபிள்ளைத் தனமானது. அம்பேத்கரின் மதமாற்றம் தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் இந்தக் கருத்தைக் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிடுவதற்குப் பின்னால், அவருக்கு ஒரு செயல் திட்டம் இருப்பதாகத் தோன்றுகிறது. பௌத்த அலை இப்போது தமிழகத்தில் தொடங்கியிருக்கிறது என்று சொல்ல வேண்டும். அது சாதி இந்து அறிவுஜீவிகளிடம் மன வருத்தத்தை, எரிச்சலை, அவமானத்தை உருவாக்கியிருக்கிறது. அதனுடைய வெளிப்பாடுதான் இது. திருமாவளவன் பௌத்தத்திற்கு ஆதரவாக ஏராளமாகப் பேசியிருக்கிறார். அவற்றை எல்லாம் விட்டுவிட்டு இவ்வாறு திசை திருப்புவது என்பது மர்மமான செயல்பாடு.

‘அம்பேத்கருடைய அரசியல் பாதையின்படி தலித் இயக்கங்கள் தேசியக் கட்சிகளாகவே செயல்பட முடியும்; அந்தந்த மாநிலத்தின் இயல்புத்தன்மையைச் சுவீகரித்து வளர்வதற்கு ஏற்ற சட்டகம் அம்பேத்கரின் மாதிரியில் இல்லை’ என்கிறார் பத்திரிகையாளர் சமஸ். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தலித்துகளுடைய பிரச்சினை பிராந்திய அளவிலான பிரச்சினை கிடையாது; தேசிய அளவிலான பிரச்சினை. அதைப் பிராந்திய அளவில் தீர்த்துக்கொள்வதற்கான சட்டகங்கள், கருதுகோள்கள் அம்பேத்கரிடம் இல்லை என்று சொல்வதே சிறுபிள்ளைத்தனமாகத் தெரிகிறது. இது தேசியப் பிரச்சினை என்று அவரே சொல்கிறார். அதைத் தேசிய அளவில்தான் தீர்க்கப்பட முடியும் என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார். ஆனால், பிராந்திய அளவில் தீர்த்துக்கொள்வதற்கான சட்டகம் அவரிடம் இல்லை என்று சொல்வது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிராந்திய அளவில் அதாவது, மாநில அளவிலான சிக்கல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அத்தகைய மாநில கட்சிகளோடு இணைந்து இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறது. நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என தமிழக வரலாற்றில் எந்தவொரு தலித் கட்சியும் பெற்றிடாத வெற்றி இது.

இந்த வெற்றி எப்படிக் கிடைத்தது என்பதுதான் சமஸினுடைய விவாதம். இது பிராந்திய உணர்வோடு செயல்பட்டதனால் கிடைத்த வெற்றி என்று அவர் சொல்கிறார். அப்படிப் பிராந்திய உணர்வோடு செயல்படுவதன் மூலமாகத்தான் தலித் அமைப்புகள் வெற்றி பெற முடியும் என்பது அவர் கருத்து. பொதுவாக, இடைநிலைச் சாதியினரின் அறிவு வன்மம் என்பது இவ்விடத்தில்தான் இருக்கிறது. பிராந்திய உணர்வோடு செயல்பட்டால்தான் நீங்கள் வெற்றியை ஈட்ட முடியும் என்று அவர் வலியுறுத்துகிறார். ஆனால், அவரே தேசிய அளவிலான சிக்கல் என்றும் சொல்கிறார். அப்படியானால், அச்சிக்கல் தீர்க்கப்பட்டு விடக்கூடாது என்பதுதான் அவருடைய உள்நோக்கம். தீர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால், ‘பிராந்திய அளவில் செயல்பட்டால் எப்படித் தேசிய அளவிலான சிக்கலை நீங்கள் சரி செய்வீர்கள்?’ என்றுதான் அவர் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அவரின் நிலைப்பாடு வேறு.

விடுதலைச் சிறுத்தைகள் மாநில அளவிலான அரசியல் வெற்றியைப் பெற்றுவிட்டது. இதுபோன்ற வெற்றியைத் தலித்துகள் பெற வேண்டுமென்றால், அனைத்து மாநிலங்களிலும் பிராந்திய அளவிலான அரசியலைச் செய்ய முன்வர வேண்டும். நேரடியாகச் சொல்லாவிட்டாலும், இதுதான் அவர் வலியுறுத்தக் கூடிய செய்தி. இதைப் பகுஜன் சமாஜ் கட்சியோடும் அம்பேத்கரோடும் அவர் பொருத்துகிறார். அம்பேத்கர் வெற்றி பெறவில்லை என்பது அவருடைய எண்ணம். சமஸைப் பொறுத்தவரை வெற்றி என்பது தேர்தல்களில் எம்பிக்கள், எம்எல்ஏக்களைப் பெறுவது. புரட்சியாளர் அம்பேத்கருக்கு இதுவொரு பொருட்டே அல்ல.

தலித் கட்சிக்கு எம்எல்ஏக்கள், எம்பிக்கள் எதற்குத் தேவை என்கிற அடிப்படையைக் கூட சமஸ் தெரிந்து வைத்திருக்கவில்லை. மக்களுக்காகப் பரிந்து பேசுவதல்ல, மக்களுடைய பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் –  சட்டமன்றத்தில் பேச வேண்டும் என்பதல்ல, மக்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்குகிற உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வாதிடத்தான் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டும். அதுதான் அவர்களுடைய கடமை. அதை இவர்கள் செய்திருக்கிறார்களா? திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய தலித் எம்.எல்.ஏ ஒருவர் எவ்வாறு செயல்படுகிறாரோ, அதேபோன்றுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருக்கக்கூடிய எம்.எல்.ஏக்களும் இருக்கிறார்கள். இவர்களின் வெற்றி எதற்குப் பயன்படுகிறது என்பது முக்கியமான கேள்வி.

ஆளும் கட்சிக்கு ஆதரவான வாக்குகளைப் பெருமளவில் பெற்று, பிராந்திய அளவிலான இந்த வெற்றி, தலித் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா என்பது இரண்டாவது கேள்வி. இவற்றையெல்லாம் ஆய்வுசெய்வதை விட்டுவிடுகிறார். அப்பிரச்சினைகளை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. கருத்துச் சொல்வதற்கு அவருக்கு அடிப்படைத் தகுதிகூட இல்லை என்று சொல்வேன். இரண்டாவதாக, அவர் பகுஜன் சமாஜ் கட்சியை வெகுவாகக் குறைபட்டுச் சொல்கிறார். இந்திய வரலாற்றில் வேறெந்த அரசியல் கட்சியுமே செய்ய முடியாத வெற்றியைப் பதிவு செய்த கட்சி பகுஜன் சமாஜ் கட்சி. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைத்த கட்சி. அரசியலில் வெற்றி தோல்வியை மையப்படுத்தி ஓர் அரசியல் சித்தாந்தத்தை விவாதிக்க முடியாது. கடந்த தேர்தலில் தோற்றுவிட்டது என்பதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் கோட்பாட்டைப் பிழையானது என்று சமஸ் கூறுவதைத் தான் சிறுபிள்ளைத்தனமானது என்று சொல்கிறேன்.

சேலம் பெரியேரியில் உள்ள ‘தலைவெட்டி முனியப்பன்’ சிலையானது புத்தர் சிலைதான் என்று ஆதாரப்பூர்வமாகச் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதேபோன்று மதுரையில் உள்ள பாண்டி கோயிலும் மீட்கப்படுமா?

இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் காடு கரைகளில், ஆற்றங்கரை ஓரங்களில், மரத்தடிகளில் ஏராளமான புத்தர் சிலைகள் கண்டெடுக்கப் படுகின்றன. பல்வேறு விகார்களில் இருந்த சிலைகள் எல்லாம் உடைக்கப்பட்டு, அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன. இம்மாதிரியான பௌத்த எச்சங்களை எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது.

 முனி என்பது புத்தருடைய பெயர்தான். ஒருமுறை ஆய்வுக்காக மதுரை பாண்டி முனியாண்டி கோயிலுக்குப் போயிருந்தோம். பூசாரியிடம் ‘நாங்கள் பத்திரிகையிலிருந்து வருகிறோம். இந்தக் கோயில் பற்றிக் கட்டுரை எழுதப் போகிறோம், அதற்குச் சில ஆய்வுகள் செய்யவிருக்கிறோம். அதனால் சிலையைப் பார்க்க வேண்டும்’ என்று சொன்னோம். அச்சமயம் அச்சிலைக்குப் பெரிய பாதுகாப்பெல்லாம் இல்லை. சிறிதாக ஒரு திரை போட்டிருந்தார்கள். அதை அவர் விலக்கிக் காட்டினார். சிலைக்கு அடியில் தாமரை இதழ்கள் அழகாகக் கற்களில் செதுக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதன் மீது பீடம், பீடத்தின் மீது சிலை. புத்தருடைய தத்துவமான சிலை கழுத்து வரைக்கும் மிகத் துல்லியமாகத் தெரிந்தது. கழுத்து வெட்டப்பட்ட சிலை அது. சிலையை அங்கு நிறுவியவர்கள் உடைத்திருக்க வாய்ப்பு இல்லை. சிலையின் தலைப்பகுதி சிமெண்ட்டால் பூசப் பட்டிருந்தது. அலுமினியத் தகட்டில் கண்கள் பதித்திருக்கிறார்கள் அவ்வளவுதான். அளவு எதுவும் இல்லாத சிலை. வெறும் கையால் பூசப்பட்டிருந்தது, அதன் தடம் அதில் பதிந்திருக்கிறது. கற்சிலை என்பது வெளியில் தெரியாதபடி கழுத்துக்குக் கீழே சிவப்புத் துணியால் கட்டியிருக்கிறார்கள். அதன்மேல் மாலைகளை அடுக்கி வைத்திருக்கிறார்கள். இதனால் மக்களும் இது பாண்டிமுனிதான் என்று நம்பி வழிபட்டுவருகிறார்கள். சாதாரண ஆளுக்குக் கூட தெரியும், அது புத்தர் சிலை என்று.

புத்தர் சிலைகளை இந்துக்கள் எல்லா இடங்களிலும் வைத்து வழிபடுகிறார்கள். அதுமட்டுமல்ல, இன்றைக்குப் பெரிய பெரிய மால்களில் புத்தர் சிலைகளைப் பார்க்க முடியும். இத்தகைய சிலைகளைப் பௌத்தர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்கிற கோரிக்கை தற்போது எழுந்திருக்கிறது. இது அரசு செய்ய வேண்டிய வேலை. நீதிமன்றமும் அதை வலியுறுத்துகிறது. அது எப்போது வேண்டுமானாலும் நடக்கக் கூடியதுதான். பாண்டி முனியாண்டி கோயிலை மீட்பது ஒன்றும் கடினமில்லை.

சிக்கல் எங்கிருக்கிறது என்றால், புத்தர் சிலையை உங்களிடம் கொடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அச்சிலையை வைத்து வணங்குவதற்குப் பௌத்த விகார்கள் இருக்கின்றனவா, வணங்குவதற்கு மக்கள் இருக்கிறார்களா? இல்லாத ஒன்றுக்காக ஏன் இவர்கள் இப்படித் தவிக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய கேள்வி.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பௌத்த அமைப்புகள் அங்கங்கே விகார்களைக் கட்டி, புத்தர் சிலைகளை நிறுவி வழிபட்டுவருகிறார்கள். பொது இடத்தில் இருக்கக்கூடிய சிலையை மீட்பதற்கென்று பெரிய மக்கள் இயக்கம் தேவை. பௌத்த சமூகத்திலிருந்துதான் பௌத்த அடையாளங்களை மீட்பதற்கான இயக்கம் தொடங்கப்பட வேண்டும். அதுதான் நிலைத்தன்மைக் கொண்டதாக இருக்கும்.

முதலில், பௌத்த சமூகத்தை உருவாக்க வேண்டும். அதாவது, பத்துக் குடும்பங்களை ஒரு விகாரோடு இணைக்க வேண்டும். பத்துக் குடும்பங்கள் சேர்ந்து விட்டால் அதுவொரு சமூகம்தான், புத்திஸ்ட் சமூகம். இப்படிப் பத்துக் குடும்பங்களை இணைத்துக்கொண்ட புத்த விகார் இன்று இருக்கிறதா? பதிவு செய்யப்பட்ட குடும்பங்களைக் கொண்ட, அக்குடும்பங்களிலிருந்து மாதந்தோறும் நன்கொடை பெற்று, யாரேனும் ஒரு பிக்குவை வழிபாட்டுத் தலைவராகக் கொண்டு முறையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிற பௌத்த விகார்கள் எங்குமே இல்லை. அப்படியொரு சமூகம் இன்னும் உருவாகவே இல்லை. பௌத்தர்கள் அந்தத் தேவையோடு உருவாகவில்லை. தமிழ்நாடு முழுவதிலும் ஆங்காங்கே கிடக்கும் புத்தர் சிலைகளை மீட்பதற்கு அரசியல் இயக்கமும் தேவை. இவை இரண்டிலும்தான் நமது கவனம் குவிய வேண்டும்.

‘மாட மாளிகை போன்ற விகார்களைக் கட்டி எழுப்புவதை விட, ஒரேயொரு தீண்டத்தகாதவரைப் பௌத்தத்திற்கு மாற்றுவது மிக முக்கியமானது.’ என்று புரட்சியாளர் அம்பேத்கர் தெளிவாக வலியுறுத்துகிறார். இதுதான் இப்போதைய தேவை. பௌத்தப் பிரச்சாரங்களை முன்னெடுத்து, அலை அலையாக மக்கள் இணைகிற போது, பௌத்த சமூகம் உருவாகிவிடும். அப்போது அவர்களுக்கு விகார்கள் தேவை, அதற்கான சிலைகள் தேவை. ‘எங்கள் ஊரில் புத்த விகார் கட்டி முடித்தாகி விட்டது, சிலை வேண்டும். கண்மாயில் கிடக்கிறது ஒரு புத்தர் சிலை, அதை யாரிடம் கேட்டு நான் எடுத்து வைக்க வேண்டும்? அரசு அருங்காட்சியகத்தில் இருக்கிறது புத்தர் சிலை. அதை எடுப்பதற்கு யாரைக் கேட்க வேண்டும்? அவை யாவும் நம் முன்னோர்கள் வைத்த சிலைகள்.’ எனவே, இயல்பான ஓர் உரிமை வந்துவிடுகிறது. அப்போது நீதிமன்றத்திற்குப் போக வேண்டிய தேவையே இல்லை. மக்கள் அலை அலையாகச் சென்று தூக்கிவருவார்கள். அந்தச் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.

பௌத்தம் மாறியவர்கள் அதற்கான சான்றிதழைப் பெறுவது எப்படி? பௌத்தராகச் சான்றிதழ் பெற்ற பின்னர், சமூக நீதி அடிப்படையில் கிடைக்கக்கூடிய இடஒதுக்கீடு நீடிக்குமா?

2004இல் நான் பௌத்தத்தில் இணைந்தேன், 2007இல் அரசிதழில் பதிவு செய்தேன். பட்டியல் சாதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் என்கிற சான்றிதழைப் பெற்றேன். என்னுடைய குழந்தைகள் அதன் அடிப்படையிலேயே இடஒதுக்கீட்டைப் பெற்றுப் படித்துவருகிறார்கள். எனவே, பௌத்தமேற்ற ஆதிதிராவிட, பட்டியல் சாதியினருக்குப் பட்டியல் சாதியினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்பது நடைமுறையில் இருக்கிறது. சிக்கல் என்னவென்றால், பௌத்தமேற்கும் பட்டியில் சாதியினர், உணர்ச்சி வேகத்தில் மாறிவிடுகின்றனர். அவர்கள் குறைந்தபட்சம் அம்பேத்கர் எழுதிய நூலைப் பார்த்தவராகக் கூட இல்லை. நான் மாறுங்கள் என்று சொல்கிறேன், உடனே அவர் மாறிவிடுகிறார். மாறாக, அதனுடைய கோட்பாடுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்; அதன் பின்னால் இருக்கும் சிக்கல்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி அவர்கள் செய்திருந்தால், சான்றிதழைப் பெறுவதற்கான அனைத்து நடைமுறைச் சிக்கல்களையும் அவர்களால் சரிசெய்ய முடிந்திருக்கும். அதைக்கூட அறியாதவர்களாக இருக்கிறார்களே என்பதுதான் என்னுடைய வருத்தம்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில், 1990இல் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பட்டியல் சாதியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பௌத்தத்தைப் பின்பற்றினாலும் அவர்களுக்குப் பட்டியல் சாதியினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்று கூறுகிறது. இது, அரசிதழில் வெளியிடப்பட்டு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் பௌத்தத்திற்கு மாறிய பட்டியலினத்தவர்கள் பட்டியல் சாதியினருக்குரிய உரிமைகளைப் பெற்றுவருகிறார்கள்.

பல மாவட்டங்களில் பௌத்தத்திற்கு மதம் மாறிய ஆதிதிராவிடர்கள், பௌத்த ஆதிதிராவிடர் சான்று கேட்டு விண்ணப்பிக்கும்போது, கிராம நிர்வாக அதிகாரியிலிருந்து மாவட்ட ஆட்சியர்வரை மறுப்புத் தெரிவிக்கிறார்கள் என்று என்னிடம் சொல்கிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் மேற்கண்ட நடைமுறைகளை எடுத்துச் சொல்லி, அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், தமிழ்நாடு அரசு 2009இல் வெளியிட்ட அரசாணை, ஆதிதிராவிட நலத்துறைச் செயலாளர்கள் வெளியிட்ட அறிக்கைகள் இவற்றையெல்லாம் சேகரித்து முறைப்படி கொடுத்து எனக்குச் சான்றிதழ் தர வேண்டியது உங்கள் கடமை என்று வலியுறுத்த வேண்டும். இது சாதாரண நடைமுறை. இதைக் கூட செய்ய முடியவில்லை என்றால், பௌத்தத்தை முன்னெடுக்கவே விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கக் கூடிய சாதி இந்து சமூகத்தை, அறிவுஜீவிகளை எப்படி உங்களால் எதிர்கொள்ள முடியும்?

சான்றிதழ் பெறுவதற்காக மனு கொடுத்தும் அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்கிறார்களே…

தமிழ்ச் சமூகத்தில், அரசு அதிகாரிகள் பௌத்தத்திற்கு மக்கள் மதம் மாறுகிறார்கள் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். பல அதிகாரிகள் திட்டமிட்டுக் கொடுக்க மறுத்துவருகிறார்கள். உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூட இந்திய அரசின் சட்டத்திருத்தத்திற்கு எதிராக அதன் உள்ளடக்கத்திற்கு எதிராகத் தீர்ப்பு கூறியிருக்கிறார்கள். சமூகமும், ஆட்சியும், நீதியும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, சட்டத் திருத்தத்தையும் அரசாணைகளையும் கொடுத்து, வலியுறுத்திப் பேசி அதை நடைமுறைப்படுத்த வேண்டியது யாருடைய கடமை? நானறிந்தவரை பௌத்தத்திற்கு மதம் மாறியவர்கள், போதுமான சான்றிதழ்களை அதிகாரிகளுக்குக் கொடுப்பதில்லை. முறையாக விண்ணப்பிப்பதும் இல்லை.

பௌத்தர் என்பவர், அறிவு தளத்தில் இயங்கக் கூடியவர் என்கிற அடிப்படையில் பௌத்தச் சான்றிதழ் வாங்குவதற்கு என்னென்ன தேவை என்பதை முதலிலேயே ஆய்வு செய்ய வேண்டும். தெளிந்த அறிவோடு இருந்தாக வேண்டும், அதுதான் நீங்கள் பௌத்தத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்பதற்குப் பொருள். இல்லையென்றால், இந்து மதத்தில் எப்படி இருந்தீர்களோ அதே மாதிரிதான் பௌத்தத்திலும் இருக்கிறீர்கள் என்று பொருளாகும்.

கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர், நிலம் வாங்குகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் எல்லாவற்றையும் வாசித்துப் பார்க்கிறாரா இல்லையா? அதில் மட்டும் அவருக்கு எப்படி அறிவு வருகிறது. நாம் ஏமாந்து விடுவோம் என்று நினைக்கிறார். அதனால் அதில் மட்டும் விழிப்போடு செயல்பாடுகிறார். கிராமத்தில் இருக்கக்கூடிய பாமரன் எல்லா விஷயங்களிலும் பாமரனாக இருப்பதில்லை. இப்படிப்பட்ட பார்வையோடு இவர்கள் சான்றிதழ் வாங்கக்கூடிய பிரச்சினையைக் கண்ணோக்க வேண்டும். நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமை அது. அவர்கள் எப்படி அதை மறுக்கலாம்? மறுப்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதுதான் இவர்களுக்கு வர வேண்டிய பார்வை. இந்து, கிறித்தவ, இஸ்லாம் இன்னும் பிற மதங்களில் இருக்கும் பட்டியல் சாதியினர்,  பௌத்த மதத்திற்கு மாறினால், அவர்கள் பட்டியல் சாதியினர் பெறும் உரிமைகளைப் பெறலாம் என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டு, நாடாளுமன்றம், மேல் சபை – கீழ் சபை என இரண்டு அவைகளிலும் ஒப்புதல் பெற்று, குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டு, இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. 2009ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசும் ஆணை பிறப்பித்துள்ளது. இவ்வளவும் செய்த பிறகு, தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் வி.ஏ.ஓ.வும், தாசில்தாரும் சான்றிதழ் தர முடியாது என்று சொல்ல முடியுமா?

இன்றைய தலைமுறையினராயினும் வருங்கால வழித்தோன்றல்களாயினும் புத்தர் அல்லது கார்ல் மார்க்ஸ் இவ்விரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். இக்கூற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தற்போதைய சூழலில் மார்க்ஸியத்தை இனி நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. பாபாசாகேப் இதைச் சொல்கிறபோது உலகமயமாக்கல் (Globalisation) என்கிற கருத்தாக்கம் இல்லை என்கிறார். பன்னாட்டுப் பெருவணிக நிறுவனங்கள் உலகம் முழுவதும் தங்குத்தடையற்ற வணிகத்தைச் செய்ய முடியும் என்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அன்றைய சூழலில் சிறிதேனும் இந்தியாவில் பொதுவுடைமைச் சமூகத்தை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது. அதனால்தான் பாபாசாகேப் மார்க்ஸியத்தை இரண்டாவதாகக் கூறுகிறார். இன்றைய சூழலில் மார்க்ஸியத்தை இந்திய மண்ணில் நடைமுறைப் படுத்துவது எளிதான காரியமல்ல. ஏனென்றால் அதற்கான அடிப்படை தேவை வர்க்க உணர்வுதான். இதை மார்க்ஸ் வலியுறுத்திச் சொல்வார். அந்த வர்க்க உணர்வை ஒவ்வொருவரும் பெற வேண்டும். இவர் நம்முடையவர்; இவருடைய துயரம் நம்முடைய துயரம்; இவருடைய வறுமை நம் வறுமை என்று நினைக்கக்கூடிய வர்க்க உணர்வுதான் பொதுவுடைமைச் சமூகத்தை உருவாக்குவதற்கான முதற்கட்ட தேவை. இந்த உணர்வு இந்தியச் சமூகத்தில் சுருங்கிவிட்டது. லேபர், தொழிலாளி என்கிற வார்த்தைகள் இன்று அவமானகரமான சின்னமாக மாற்றப்பட்டிருக்கின்றன. அந்த வர்க்க உணர்வை மீண்டும் உயிர்ப்பித்து, வர்க்கத் திரட்சியை உருவாக்கி, புரட்சியை ஏற்படுத்தி, இந்திய முப்படைகளையும் தோற்கடித்து, இந்திய மண்ணில் பொதுவுடைமைச் சமூகத்தை உருவாக்க முடியும் என்பது நம்புவதற்குரிய வாதமே அல்ல. எனவே, பாபாசாகேப் அம்பேத்கர் ஒப்பிட்ட அந்த இரண்டில் ஒன்று தானாகவே விலகிவிடுகிறது. எஞ்சியிருப்பது பௌத்தம்தான்.

பாபாசாகேப் அம்பேத்கர் 1935இல் மதம் மாறப் போகிறேன் என்று அறிவித்தபோது மூன்று முக்கியமான பொறுப்புகளைச் சுமந்துகொண்டிருந்தார். ஒன்று தீண்டத்தகாத மக்களுக்குச் சமூக – பொருளாதார – அரசியல் விடுதலையைப் பெற்றுத் தரக்கூடிய ஒரு மதத்தை முன்மொழிய வேண்டிய கடமை அவருக்கு இருந்தது. இரண்டாவது, உலகம் முழுதும் இருக்கக்கூடிய மக்களுக்குப் பொருத்தமான மதத்தை முன்மொழிய வேண்டிய தேவை இருந்தது. மூன்றாவதாக, இந்து மதத்திற்கு மாற்றாக, அறிவியல் சிந்தனையோடு கூடிய மக்களுக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தரக்கூடிய, மக்களிடையே ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடிய ஒரு மதத்தை அடையாளப்படுத்த வேண்டிய தேவையும் இருந்தது. இம்மூன்று தேவைகளின் அடிப்படையில் மதங்களைக் குறித்து ஆய்வு செய்த பின் அவர் முன்மொழிகிற மதம்தான் பௌத்தம். அதுதான் இன்றைய – இனி வரப்போகிற உலகத்திற்கு மிக முக்கியமான தேவையாக இருக்கிறது.

விழிப்பு இல்லாதவர் விடுதலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது எனப் புரட்சியாளர் அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க, பஞ்சமி நிலம் பற்றிய தகவல்களை அரசே நீர்த்துப்போகச் செய்வதாகச் செவிவழிச் செய்திகள் வருகின்றன. இத்தகைய சூழலில் இழந்த பஞ்சமி நிலங்களைப் பெறுவதெப்படி? 2006இல் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கரடிச்சித்தூரில் மக்கள் நடத்திய மண் மீட்புப் போராட்டத்தைப் போன்று மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்க வாய்ப்பிருக்கிறதா?

நிச்சயம் இருக்கிறது. நிலம் இல்லாதவன் வேரற்ற செடிக்கு ஒப்பானவன். அதனால் நிலத்திற்கான தேவை தலித்துகளுக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. பிரச்சினை என்னவென்றால், பஞ்சமி நிலம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. ஒருசிலர் அதற்காக நீண்டகாலமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இருக்கக் கூடிய பஞ்சமி நிலங்கள் குறித்த ஆவணங்கள் முறையாகச் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கின்றன. நிலத்திற்கான வேட்கை இன்னும் தலித்துகளிடம் குறையவில்லை.

ஆனால், எப்படிச் சமூகத் தளத்தில் நாம் மோசமான நிலையில் வைக்கப்பட்டிருக்கிறோம் என்பது புரிந்து கொள்ளப்படவில்லையோ, அதுபோன்றே நிலத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் மக்களால் புரிந்துகொள்ளப்படவில்லை. உதாரணமாக, அமைச்சருக்குத் தெரிந்த நபர் ஒருவர் நிலத்தைக் கேட்கிறார் என்றால், அரசு கொடுத்துவிடுகிறது. அதிகாரிக்குத் தெரிந்தவர் நிலம் வேண்டும் என்று கேட்டால் உடனே அவரிடம் குத்தகைக்குக் கொடுத்துவிடுவார்கள். ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு 1000 ஏக்கர் நிலங்களைக் கூட கொடுத்துவிடுவார்கள். அரசிடம் யாருக்கு நிலம் கொடுக்க வேண்டும், யாருக்குக் கொடுக்கக் கூடாது, எவ்வளவு காலம் கொடுக்கலாம் என்பன குறித்துத் தெளிவான வரையறை எதுவும் கிடையாது. அந்த வரையறைக்குள் தலித்துகள் வரவே மாட்டார்கள். அரசு, உங்களுக்கானது அல்ல. எனவே, அரசு தலித்துகளுக்கு நிலங்களைக் கொடுப்பது, குத்தகைக்கு விடுவது என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்று. இதுகுறித்த தகவல்கள், விவாதங்கள் மக்களிடையே கொண்டு செல்லப்படவில்லை.

அதைப்போலதான் பொருளாதாரச் சுழற்சியில் இருந்தும் தலித் மக்கள் விலக்கி வைக்கப் பட்டிருக்கிறார்கள். இந்திய அரசு ஒரு வருடத்திற்கு 30 இலட்சம் கோடி பட்ஜெட் போடுகிறது. இந்த 30 இலட்சம் கோடிக்கும் மக்கள் தொகையில் 30 சதவீதம் இருக்கக்கூடிய தலித் மக்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. பல நூற்றாண்டுகளாக நாட்டினுடைய பொருளாதாரச் சுழற்சியிலிருந்து தலித் மக்கள் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் உலகம் முழுவதும் செயல்படுகின்றன. இந்தியாவில் ஆயிரக்கணக்கிலான நிறுவனங்கள் செயல்படுகின்றன. அந்த நிறுவனங்களில் தலித்துகளுக்கு எத்தனை சதவீதம் பங்குகள் இருக்கின்றன? எதுவுமே கிடையாது. பங்குச்சந்தையில் ஈடுபடுகிறீர்களா என்று ஒரு தலித்திடம் கேட்டால், அவருக்கு அது முற்றிலும் தொடர்பே இல்லாத விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு அவர்கள் பொருளாதாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களும் நிர்வாகிகளும் இணைந்து செய்கிற இத்தகைய சதி பற்றிய பிரச்சாரங்களை மக்களிடம் கொண்டு சென்றால் மட்டுமே தன்னெழுச்சியாக மக்கள் புரட்சி வெடிக்கும்.

ஏதேனும் ஓர் ஊரில் ஆயிரக்கணக்கில் கோயில் நிலம் இருக்கிறது. எனக்கு அந்த நிலத்தைக் கொடுங்கள் என்று ஒரு தலித் மனு கொடுப்பாரா? அப்படிக் கேட்டால் அவர் படுகொலை செய்யப்படுகிற ஆபத்து கிராமங்களில் இருக்கிறது. தொடர்ச்சியாகச் சமூகம் (அரசு, நிர்வாகம், நீதித்துறை உட்பட) தலித்துகளுக்கு நிலம் சென்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது. இந்நிலை மக்களிடம் விரிவாக விளக்கப்பட வேண்டும். அதற்கான அமைப்புகள் கூட இன்னும் உருவாகவில்லை. இத்தனை கடமைகளும் பொறுப்புகளும் வருங்கால தலைமுறைகளுக்கு இருக்கிறது.

உங்கள் ‘இருளில் முளைத்த மிருகம்’ சிறுகதைத் தொகுப்பில், ‘அழிந்த காட்டு அலறல்’, ‘இருளில் முளைத்த மிருகம்’, ‘கலகத்தின் சினைகள்’, ‘காலம் கொண்டுவந்த அழிவு’ போன்ற கதைகளில் தலித்துகள் மீது அரங்கேற்றப்படும் சாதியக் கொடுமைகளுக்கு அவர்களே நீதியை நிலைநாட்டுகிறார்கள். புனைவாக நீங்கள் சொன்னாலும் இவை தென்மாவட்டங்களில் நிகழ்ந்தவைதாம். ஆனால், இன்றும் இக்கொடுமைகள் தொடர்ந்த வண்ணமாகவே இருக்கிறதே? இதைக் களைவதற்குத் தலித் இலக்கியத்தின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?

தொடக்கக் காலகட்டங்களில் தலித் இலக்கியவாதிகள் பெரும்பாலும் தலித் மக்கள் மீது நிகழ்த்தப்படுகிற வன்கொடுமைகள், அவர்களுடைய புலம்பல்கள், அவர்களுடைய இழிவான வாழ்க்கை முறை இவற்றைத்தான் பதிவு செய்துகொண்டிருந்தார்கள். இதனால் தலித் இலக்கியத்தை ‘அழுவாச்சி இலக்கியம்’ என்றே சாதி இந்து அறிவுஜீவிகள் குறிப்பிட்டார்கள், இது எனக்குள் வெறுப்பை உருவாக்கியது. எதார்த்தமான நிலையை இலக்கியத்தில் பதிவு செய்தால் அழுவாச்சி இலக்கியம், புலம்பல் இலக்கியம் என்று கேலி செய்கிறார்கள். தலித்துகளிடமிருந்து அறிவுஜீவி செயல்பாடு நடந்தால், இம்மாதிரி ஏதாவது சொல்லிக் குழப்பிவிடுவார்கள். பொதுவாக, நான் கட்டுரைகள்தான் நிறைய எழுதியிருக்கிறேன், கதைகள் அதிகமாக எழுதவில்லை. ஆனாலும், இலக்கியத்தின் மீது ஆழமான பிடிப்பும் கண்ணோட்டமும் இருந்தது. நான் வாழ்ந்த சூழலில், என்னுடைய கிராமத்தில் வன்கொடுமைகள் கிடையாது. காரணம், ஊரில் நான் சார்ந்திருக்கும் சமூகம்தான் மன வலிமை கொண்டது. வேளாண் விவசாயக் கூலிகளாக இருந்ததினால், அங்கு தீண்டாமை வெவ்வேறு வடிவங்களில் இருந்தது. ஆனால், வன்கொடுமை வடிவத்தில் இல்லை. மக்கள் இழிதொழில்கள் செய்ததில்லை. இயல்பான விவசாய மக்களாக இருந்ததினால், ஒரு விவசாயிக்கு இருக்கக் கூடிய தன்மான உணர்வு கொண்ட மக்களைத்தான் பார்த்தேன். அவர்களைத்தான் கதையில் பதிவு செய்திருக்கிறேன். பல இலக்கியவாதிகள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளில் அப்படிப்பட்ட மக்களைப் பார்க்கவில்லை. கற்பனையில் வராத மக்களை எப்படிப் பதிவு செய்ய முடியும்.

நானறிந்தவரை இலக்கியங்கள் சமூக மாற்றத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்திருக்கின்றன. உலக அளவிலும் இது நடந்திருக்கிறது. தமிழ்ச் சூழலில் இக்கடமையை உணர்ந்துகொண்ட தலித் எழுத்தாளர்கள் நிறைய எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் கூடுதலான வீச்சு புறப்பட்டுவர வேண்டிய தேவை இருக்கிறது. அடுத்த தலைமுறை வேறொரு வீச்சில் நிச்சயமாக வரும். தலித்துகள் மிகவும் காத்திரமான படைப்புகளை உருவாக்குவார்கள். அவர்களுக்கு அந்தத் திறன் இருக்கிறது என்பது பொதுச் சமூகமும் சாதி இந்துக்களும் ஏற்றுக்கொண்ட உண்மை. அடுத்த தலைமுறை, தலித் மக்களுக்கு விடுதலைப் பெற்றுத் தருகிற வழிமுறைகளை, பௌத்த அரசியலை, உலகப் பொருளாதாரத்தில் தலித்துகளுக்குக் கிடைக்க வேண்டிய அந்தப் பங்கைப் புரிந்துகொண்ட சமூகமாக வருமெனில் அதிகப் பலன்களை எதிர்பார்க்கலாம். பௌத்த இலக்கியத்தை மீண்டும் தமிழ் மண்ணில் உருவாக்கி, வளர்த்தெடுக்கும் பௌத்த இலக்கியவாதிகள் தலித் சமூகத்திலிருந்து நிச்சயம் வருவார்கள்.

தலித் முரசு இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்திருந்தீர்கள். இதழின் பணி போற்றத்தக்கது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி இருக்கையில் ஏன் அந்தக் குழு கலைந்தது?

தலித் முரசு சமூகத்தில் அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்கிறது. மிக முக்கியமான காலகட்டங்களில் கருத்துச் செறிவோடு அது பயணித்திருக்கிறது. சாதி இந்துக்கள், பிராமணர்கள் முன்வைக்கக்கூடிய வாதங்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களோடு ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தியிருக்கிறது. அது விட்டுச் சென்றிருக்கக்கூடிய பங்களிப்பை எதிர்கால தலைமுறைகள் புரிந்துகொள்வார்கள். மகாத்மா ஜோதிராவ் புலே, பண்டிதர் அயோத்திதாசர், பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் வழிகாட்டுதல்களை, அவர்கள் உருவாக்கித் தந்த அரசியல் பாதையை, நன்கு புரிந்துகொண்ட குழுவாக இருந்தது.

ஆனால், அப்படியொரு பத்திரிகை நமக்குத் தேவை என்பதைத் தலித் சமூகம் உணரவில்லை என்பதுதான் சோகம். ஒரு தலித் தலைவர், தலித் முரசைப் படிக்க வேண்டாம் என்று மேடையிலேயே பேசினார். அந்த அளவிற்கு எதிர்ப்புகள் இருந்தன. அதுகூட இரண்டாம் பட்சம்தான். ஆனால், ஒரு சமூகம் தனக்கென்று ஓர் ஊடகம் இருக்க வேண்டும்; தனது கருத்துகளை அது பதிவு செய்ய வேண்டும்; தனது வாதங்களை அது முன்வைக்க வேண்டுமென்ற தேவையைப் புரிந்துகொள்ளாதது மிகப்பெரிய பரிதாபம். இன்று நீங்கள் நீலம் பத்திரிகையை நடத்துகிறீர்கள். எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது என்பது உங்களுக்குத்தான் தெரியும். அதற்கான தேவையை உணர்ந்துகொண்டதாகத் தலித் சமூகம் இல்லை. அதனால்தான் சிதறடிக்கப்பட்ட மனநிலையிலேயே இருக்கிறார்கள். அதிலிருந்து அவர்களை மீட்பதுதான் அவசரத் தேவை. அதன் மூலமாகத்தான் அவர்களை ஒன்றுபட்ட சக்தியாக மாற்ற முடியும். அதன் முதற்படியாகத்தான் இந்து மதத்திலிருந்து வெளியேறி பௌத்தத்தில் இணைய வேண்டும் என்று பாபாசாகேப் அம்பேத்கர் வலியுறுத்துகிறார்.

சிதறடிக்கப்பட்ட – அடிமை மனநிலையிலிருந்து மக்களை ஒருங்கிணைத்து, ஒருமுகப்பட்ட தன்மையில் கொண்டுவருவதற்கு முக்கிய மார்க்கமாக விளங்குகிறது பௌத்த மதமாற்றம். பௌத்தத்தில் இணைவது குறித்து தலித் முரசு ஏராளமாக எழுதியது. ஆனால், தொடர்ச்சியாக அதை முன்னெடுத்துச் செல்லக்கூடிய தலைமுறைகள் உருவாகிவரவில்லை. இன்றைய தலைமுறை ஊடகத்தின் தேவையை உணர்ந்து இன்னும் தீவிரமாகச் செயல்பட்டால், அது பெரிய வாய்ப்பாக இருக்கும். நமக்கோர் ஊடகம் வேண்டும் என்று சமூகம் உணர வேண்டும். எந்த இந்துவாவது ஆசிர்வாதம் தொலைக்காட்சியைப் பார்ப்பார்களா? அது நமது ஊடகம் இல்லை என்கிற புரிதல் அவர்களுக்கிருக்கிறது. தலித்துகளுக்கு அது தெரியவில்லை. தங்களுக்கு எதிராகவே கருத்துச் சொல்லிக்கொண்டிருக்கக் கூடிய தினத்தந்தியை, தினமலரை விரித்து விரித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

முற்றுகை என்கிற காலாண்டிதழின் ஆசிரியராக இருந்திருக்கிறீர்கள். தொடர்ந்து ஏன் நடத்தவில்லை?

ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் உருவானதுதான் முற்றுகை காலாண்டிதழ். அதைத் தொடங்கும்போது தலித் முரசில்தான் எழுதிக்கொண்டிருந்தேன். வேறு பத்திரிகைகளில் நான் எழுதுவதில்லை. சாதி இந்துக்களிடம் சென்று நியாயம் கேட்கக்கூடிய மனநிலை எனக்கு அறவே கிடையாது. ஒரு சாதி இந்துவால் தலித்துகளுக்கான நியாயத்தைப் பேசவே முடியாது, பேசவும் மாட்டார். அதை நான் ரொம்பத் தீவிரமாக உணர்கிறேன், நம்புகிறேன். அதன் காரணமாக தலித் அல்லாத இதழ்களில் நான் எழுதுவதே இல்லை. அப்போது எழுதுவதற்கு தலித் முரசு மட்டும்தான் இருந்தது. நிறைய எழுத்தாளர்கள் அதில் எழுத விரும்பியதால் என்னுடைய கட்டுரைகள் பெரும்பாலும் முகப்பு கட்டுரைகளாகத்தான் வெளிவந்திருக்கிறது. அதில் நான்கு பக்கங்கள்தான் கிடைக்கும். பலருக்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் ஆசிரியர் இருந்ததினால், விரிவான விவாதங்கள் நடத்துவதற்கு அது போதுமான இடத்தை அளிக்கவில்லை.

உதாரணத்திற்கு Economic and Political Weekly என்கிற இதழ் இப்போதும் வருகிறது. விரிவான விவாதங்கள் போதுமான தரவுகளோடு அதில் இருக்கும், பக்கங்கள் கணக்கே கிடையாது. இப்படிப்பட்ட இதழைத் தொடங்க வேண்டும் என்று எண்ணினேன். நான் எழுதுவதற்காகவே முற்றுகை இதழை உருவாக்கினேன். யாழன் ஆதி பொறுப்பாசிரியராகச் செயல்பட்டார். மூன்று, நான்கு இதழ்கள் வந்தன. நான் எதிர்பார்த்தபடி விரிவான விவாதங்களைத் தாங்கி அது வரவில்லை. மேலோட்டமாக நான்கு பக்க அளவில் கட்டுரைகள் வந்தன. இதை வெளியிடுவதற்கென்றே வேறு பத்திரிகைகள் இருக்கின்றன, நாம் ஏன் வெளியிட வேண்டும் என்று நினைத்து அதை அப்படியே நிறுத்தி விட்டேன். இது ஒரு காரணம். இரண்டாவது காரணம், முற்றுகை என்கிற பெயரில் இதழைப் பதிவு செய்ய முடியாது என்று இந்திய அரசு சொல்லிவிட்டது. அது வன்முறைச் சொல்லாக இருக்கிறது, அமைதியான முறையில் அதை நீங்கள் நடத்துவது மாதிரி தெரியவில்லை என்றார்கள். நான் புரிந்துகொண்டேன். ‘முற்றுகை’, ‘எங்கள் முற்றுகை’, ‘மக்கள் முற்றுகை’ என்றெல்லாம் பெயர் அனுப்பி வைத்திருந்தேன். கடைசியாகப் ‘பேருருவம்’ என்கிற பெயரையும் கொடுத்திருந்தேன். மற்றவற்றை நீக்கிவிட்டுப் ‘பேருருவம்’ என்ற பெயரில் பதிவுசெய்து அனுப்பியிருந்தார்கள். அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், புத்தர்தான். இருந்தாலும் அந்தப் பெயரில் நடத்துவதற்கு நான் முயற்சிக்கவில்லை.

ஆதிதிராவிடராய் ஒன்றிணைவோம் என்ற துரை.ரவிக்குமாரின் கூற்றையும் பட்டியலினக் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்ற இயக்குநர் பா.இரஞ்சித்தின் கூற்றையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பள்ளர் சமூக மக்கள் தேவேந்திரர்களாக ஒன்றிணைவோம் என்கிற கருத்தை முன்வைத்தபோது ஆதிதிராவிடர்களாய் ஒன்றிணைவோம் என்ற கருத்தை ரவிக்குமார் எழுப்பினார். பறையராய் ஒன்றிணைவோம் என்பதுதான் அதன்பொருள். எப்படி தேவேந்திரகுல வேளாளர்களாக ஒன்றிணைவோம் என்பதில் சுயசாதிப் பற்று இருக்கிறதோ, அதைப் போன்ற வெளிப்பாடுதான் இக்கருத்தும்.

சுயசாதி உணர்வைத் தூண்டிவிடுகிற, சுயசாதி ஒன்றிணைப்பை வலியுறுத்துகிற எதுவும் தலித் அரசியலுக்கு எதிரானது, பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலுக்கு எதிரானது, அது நிர்மூலமாக்கப்பட வேண்டும். அதை யார் சொன்னாலும் சரி. தீண்டாமை அவலத்தைச் சுமந்துகொண்டிருக்கக் கூடிய மக்களை எல்லாம் ஒன்றுதிரட்டி, இணக்கமாக்கி சாதியக் கட்டமைப்புக்கு எதிராகப் போராடுவதன் மூலமாகத்தான் பலன்களைப் பெற முடியும். ஏற்கெனவே சிறு சிறு உட்சாதிகளாக உடைந்திருக்கக்கூடிய மக்களை, பலவீனத்திலும் பலவீனமாக இருக்கக்கூடிய மக்களை அதே பலவீனத்தில் வைத்துக்கொண்டு நீங்கள் எந்தப் பலனை அவர்களுக்குப் பெற்றுத் தர முடியும். எனவே, ‘ஆதிதிராவிடராய் ஒன்றிணைவோம்’ என்பது முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டிய அபாயகரமான கருத்து.

பட்டியலினக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்; கூட்டணி அமைக்க வேண்டும் என்ற இயக்குநர் பா.இரஞ்சித்தின் கருத்தானது, அவசரமான அவசியமான ஒரு தேவை, நிர்பந்தத்தின் அடிப்படையில் எழும்புகிற தேவை. இந்த உணர்வு ஏறத்தாழ அனைத்து தலித் மக்களிடமும் இருக்கக்கூடியதுதான். எல்லோரும் ஒன்றிணைந்து போட்டியிடுங்கள். எதற்காக ஒவ்வொரு கட்சியிலும் தனித்தனியாக இருக்கிறீர்கள் என்கிற ஆதங்கத்தில் இரஞ்சித் சொல்கிறார். அரசியல் தளத்தில் தொடர்ந்து ஏற்படுகிற தோல்விகளைக் கண்டே இந்த உணர்வு வருகிறது. நமக்கென்று சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தால், சட்டசபையில் நமக்காகப் பேசுவார்கள் என்கிற ஆற்றாமையில், ஏக்கத்தில் வெளிப்படக்கூடிய உணர்வு.

ஆனால், அந்தக் கோரிக்கையை நாம் யாரிடம் வைக்கிறோம் என்பது முக்கியமானது. தலைவர்களிடம் அல்ல; மக்களிடம் நாம் வைக்க வேண்டும். ஒரணியில் நிற்க வேண்டும் என்ற அந்தத் தேவையை உணர்ந்து கொள்ளாமல், கடந்த முப்பதாண்டுக் காலமாக அரசியல் நடத்திவருகிற தலைவர்களிடம் இந்தக் கோரிக்கையை நாம் வைத்தால், அது பலன் தருமா!. வெற்றியோ தோல்வியோ, தேர்தலில் ஓரணியில் நிற்பது அதிக பலன்களைத் தரும் என்ற கருத்தைப் புரிந்துகொள்வதற்கு, ஏற்றுக்கொள்வதற்குப் பெரிய முயற்சி எதுவும் செய்யத் தேவையில்லை. ஆனால், ஒன்றிணைய முடியாதபடி தடுக்கக்கூடிய காரணிகளை அவர்கள் உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள். இதற்கு அவர்கள் மட்டுமல்ல, சமூகமும் பொறுப்பு. ஆதிதிராவிடர்கள், தேவேந்திர குல மக்கள், அருந்ததியர்கள் இந்த மூன்று சமூகங்களையும் ஒன்றிணைத்துத் தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும். அதை மையப்படுத்திதான் இயக்குநர் இரஞ்சித் பேசினார். அதற்குப் பலமான எதிர்ப்பு கிளம்பியதையும் பார்த்தோம்.

தலித் மக்கள் ஏற்கெனவே இவை தனித்தனி சாதிகளாகப் பிரிந்தே செயல்படுகின்றனர். சுயசாதி அடையாளத்துடன் இயல்பாகவே பிரிந்து நிற்கின்றனர்.  இம்மக்களிடையே சாதிக்கலப்பு ஊக்குவிக்கப்படவில்லை. சமூக, பொருளாதாரத் தளங்களில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்கிற கருத்தும் அவர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்படவில்லை. அரசியல் தளத்தில் அந்தந்த சாதித் தொண்டர்களை உறுப்பினராகக் கொண்டு, தனித்தனிச் சாதி அடையாளத்துடன் அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. தலித் அறிவுஜீவிகளும்கூட சுயசாதி உணர்வுடன் இயங்குகிறார்கள். ஆதிதிராவிட சமூகத் தலைவருக்கு தேவேந்திர குல வேளாளர் மக்களிடமிருந்து ஆதரவு கிடைப்பதில்லை; அருந்ததியச் சமூகத் தலைவருக்கு ஆதிதிராவிட சமூகத்திலிருந்து ஆதரவு கிடைப்பதில்லை. சாதி உணர்விலிருந்து விடுபடும் சிந்திக்கும் ஆற்றல் இல்லாத மக்களாக தலித் மக்கள் இருக்கிறார்கள். இந்துக்களாக நீடிப்பதுதான் இவை அனைத்திற்கும் காரணம் எனத் துணிந்து கூறுவேன்.

தலித்  அமைப்புகள் பின்பற்றும் கொள்கைகளும் ஒன்றிணைவிடாமல் தடுத்து வைத்திருக்கிறது. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள், இந்து மதப் பற்றோடு இயங்கிவருவதை நாம் பார்க்கிறோம். மருத்துவர் கிருஷ்ணசாமி ஆர்.எஸ்.எஸ் உடன் கூட்டணி சேர்ந்து, நண்பர் என்று தன்னைச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக்கொள்கிறார். அருந்ததிய, ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் மேடையில்தான் இந்துத்துவ சக்திகளுக்கு எதிராகப் பேசுகிறார்கள். ஆனால், உள்ளுக்குள் இந்து மதப்பற்றோடு இயங்குவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

எனவே, 1990க்குப் பிறகு அரசியல் கட்சி தொடங்கி நடத்திவரக்கூடிய தலித் தலைவர்கள் தங்கள் வாழ் நாளில் ஒருபோதும் இந்த ஒற்றுமையைக் கொண்டுவர மாட்டார்கள் என்பது என் நம்பிக்கை. காரணம், தலித் மக்களின் விடுதலைக்கு மூலாதாரமாக இருக்கும் அம்பேத்கரியம்,   பௌத்த மதமாற்றம் ஆகிய இரண்டின் அடிப்படைகள்கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்குள்ளிருக்கும் இந்துத்தன்மை, ஒருபோதும் அவர்களை ஒன்றுசேர அனுமதிக்காது. தலைவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளக்கூடிய சூழலைக் கூட கெடுத்து வைத்திருக்கிறார்கள்.

எனவே, இனிவரும் தலைமுறைகள்தான் அதைச் செய்தாக வேண்டும். இந்தக் கண்ணோட்டம் முதலில் மக்களிடம் கொண்டுசெல்லப்பட வேண்டும், மக்களிடம் சமூக ஒற்றுமை உருவாகுமேயானால், மக்களைப் பிரித்துக் கட்சி நடத்திப் பிழைக்க நினைப்பவார்கள் வளர முடியாது. சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் தலித் மக்களை ஓரணியில் திரட்டும் கொள்கையைக் கொண்ட புதிய கட்சிகள் உருவாக்கப்பட வேண்டும். அம்பேத்கரியத்தையும்  பௌத்தத்தையும் நன்கு கற்றறிந்த புதிய தலைவர்கள் உருவாக வேண்டும். அதுதான் தலித் சமூகத்தின் இப்போதைய தேவை.

புனா ஒப்பந்தத்தின் மூலம் பறிக்கப்பட்ட இரட்டை வாக்குரிமையை மீண்டும் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா?

இரட்டை வாக்குரிமை அல்ல, தனி வாக்காளர் தொகுதி என்று அதைச் சொல்ல வேண்டும். அதாவது, பட்டியல் சாதியினரே போட்டியிட்டு, பட்டியல் சாதி மக்களே வாக்களித்து ஒருவரைத் தேர்வு செய்யக்கூடிய தனி வாக்காளர் தொகுதி முக்கியமான தேவை. அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும் அதைக் கேட்டுக்கொண்டே இருந்தார். புனா ஒப்பந்தத்திற்குப் பிறகு 1937இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ஒப்பந்தத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் மீறியது. கூட்டு வாக்காளர் தொகுதியாக அறிவிக்கப்பட்டுத் தனித் தொகுதிகளாகக் கருதப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை நிறுத்தக்கூடாது என்பது விதிமுறை. அது எழுதப்படவில்லை, காங்கிரஸ் தனது வேட்பாளர்களை நிறுத்தாது என்று வாய்மொழியாகவே காந்தி அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தியது. காங்கிரஸ் கட்சியைத் தவிர பிற கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடிய தலித் வாக்காளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இதைப் போலவே, 1946இல் நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தலித்துகளை ஓட்டுப்போட விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். பல தலைவர்கள் அது பற்றி எழுதியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் மேற்கு வங்காளத்திலும் நடந்தது. புனா ஒப்பந்தத்தைக் காங்கிரஸ் கட்சி அப்பட்டமாக மீறியது. புனா ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்தத் தனித்தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள், மௌனிகளாக மாற்றப்படுகிற நிலை 1937இலிருந்து நடந்துகொண்டிருக்கிறது. அதையெல்லாம் பார்த்து விட்டுத்தான் பாபாசாகேப் அம்பேத்கர், தனி வாக்காளர் தொகுதி மீண்டும் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கடைசிவரை வலியுறுத்திக்கொண்டிருந்தார். அதையும் கடந்து இன்றைக்குச் சூழல் எப்படி மாறியிருக்கிறது என்றால், சாதி இந்து அரசியல் கட்சிகளோடு கூட்டணி வைத்து வெற்றி பெறுகிற தலித் எம்.எல்.ஏக்களும் அவ்வாறே இருக்கிறார்கள். கட்சியில் இருக்கிறவர்கள் மட்டுமே அடிமை என்பது மாறி, கூட்டணி வைத்தாலும் அடிமை என்கிற நிலை வந்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் தனித்தொகுதி முறையானது அடிமைகளை மட்டுமே உருவாக்கும் என்பது திட்டவட்டமான உண்மை. இப்போதைய  காலகட்டத்தில் இந்திய ஜனநாயகத்தில் பங்கேற்க, தங்களுக்கான உண்மை பிரதிநிதிகளை அனுப்புவதற்குத் தலித்துகளுக்கு இருக்கக்கூடிய ஒரே வழி மீண்டும் தனி வாக்காளர் தொகுதிகளைக் கேட்பதுதான்.

பாபாசாகேப் அம்பேத்கர் இரண்டே இரண்டு வழிமுறைகளை விட்டுச் சென்றார். ஒன்று மதம் மாறுவது. இரண்டாவது, தனித் தொகுதிகளுக்காகக் குரல் எழுப்புவது. இந்தத் தேர்தல் நடைமுறை எங்களுக்கு எதிரானது. எங்களது உண்மையான பிரதிநிதிகள் அங்கே அனுப்பப்படுவதில்லை. அதற்குத் தனி வாக்காளர் தொகுதிகள் தேவை என்ற குரலைத் தலித்துகள் எழுப்ப வேண்டும்; அதற்கான தனி இயக்கம் தொடங்கப்பட வேண்டும்.

அடிமை மனப்பான்மை, அறியாமை, வறுமை, தாழ்வு மனப்பான்மை இவற்றிலிருந்து விடுபட தலித் மக்களுக்குத் தாங்கள் கூறும் வழிமுறை என்ன?

70 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பாபாசாகேப் அம்பேத்கர் தெளிவாகச் சொல்லிவிட்டார். அடிமை மனநிலையிலிருந்து தலித் மக்கள் விடுபடுவதற்கான போதனைகள் பௌத்தத்தில் இருக்கின்றன. வேறு எங்கும் அந்தக் கருத்துகள் இல்லை. புத்தருடைய போதனைகளை வாசிக்கிறபோது சாதியச் சமூகத்திற்கு எதிராகப் பெரிய அகஎழுச்சியே உருவாகிறது; அதுதான் என்னை வழிநடத்துகிறது; வன்கொடுமைகளிலிருந்து காப்பாற்றுகிறது; உழைப்புச் சுரண்டலிலிருந்து மீட்கிறது; எனக்குத் தாழ்வு மனப்பான்மை என்பதே இல்லை. நானொரு பௌத்தன். அதனடிப்படையில் இந்தப் பிரச்சினைகளைப் பார்க்கிறேன். சாதி இந்துக்களிடமும் அடிபணிந்து போக வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டதே இல்லை. நெறிகெட்ட தலைவர்களின் பின்னால் நான் சென்றதே இல்லை.

இப்போது தலித் மக்களுக்குத் தேவை அறிவும் துணிவும்தான். தனிமனித ஒழுக்கத்தைப் பௌத்தம் தீவிரமாக வலியுறுத்துகிறது.  அறிவு, துணிவு, ஒழுக்கம் இவை மூன்றும் சேர்ந்துவிட்டால் ஒரு மனிதன் உன்னத நிலையை அடைய முடியும். அகவிடுதலை உணர்வையே உன்னத நிலை என்கிறார் புத்தர். டாக்டர் அம்பேத்கர், சாதி அடிமை மனநிலையிலிருந்து உடனடியாக விடுபடுவதற்கான வழியாகப் பௌத்தத்தைப் பார்த்தார்; நமக்கும் வழிமொழிந்தார்.

பௌத்த சித்தாந்தங்களைச் சமூக, அரசியல், பொருளாதாரக் கண்ணோட்டத்தோடு பிரச்சாம் செய்ய ஒரு ‘பௌத்தப் பரப்புரைக் குழு’ தேவை. பௌத்த மதமாற்றம் என்பது சமூக அரசியல் நடவடிக்கை. அது இன்னொரு மதத்திற்குத் தாவும் செயல் அல்ல. ஓர் இந்து, கிறிஸ்தவ மதத்திற்குச் சென்று கர்த்தர் என்று சொல்கிறாரே அம்மாதிரியான நடவடிக்கையல்ல. பௌத்த மதமாற்றம் என்பது, தலித் மக்களைப் பொருத்தவரை நேரடியாகச் சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் தலையிடக் கூடிய நடவடிக்கையாகும். “நாங்கள் இந்துக்கள் அல்ல; இந்துக்களின் துணைப்பிரிவும் அல்ல; தேசிய வாழ்வில் நாங்கள் தனிக்கூறு என்பதுதான் எனது கொள்கையின் மூலக்கரு” என்கிறார் டாக்டர் அம்பேத்கர். அந்தக் கண்ணோட்டத்தோடு பௌத்தம் கொண்டுசெல்லப்பட வேண்டும். அப்போதுதான் அடிமை அரசியல் மனநிலையிலிருந்து மக்கள் விடுபடுவார்கள், அறிவையும் சிந்திக்கின்ற ஆற்றலையும் பெறுவார்கள். அறிவுதான் வாழ்க்கையின் அடித்தளம் என்கிறார் பாபாசாகேப் அம்பேத்கர். அதற்கான அடிப்படைகளைப் பௌத்தம் வழங்குகிறது.

துன்பத்திற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பது பற்றி பௌத்தம் விளக்குகிறது; தலித் மக்களின் துயரம், துக்கம் இரண்டுமே தீண்டாமைதான்.   தீண்டாமைக்கான காரணம் இருக்கிறது, அதை விலக்குவதற்கான வழிமுறையும் இருக்கிறது என்கிறார் புத்தர். நான்கு பேருண்மைகள் (Four Noble Truths) என்று சொல்வார்கள். இந்த நான்கு பேருண்மைகளை அரசியல், தளத்தில், சமூகத் தளத்தில் செயல்படும்படியாகப் பொருத்திப் பார்த்து, பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.

அறிவை, துணிவை, ஒழுக்கத்தை, கனிவை, இரக்கத்தைப் பெறுவதற்குதான் பௌத்தத்தை ஏற்க வேண்டும் என்கிறோம்! அந்தக் கண்ணோட்டத்தோடு பௌத்தம் பிரச்சாரம் செய்யப்படுமேயானால், மக்கள் அடிமை மனநிலையிலிருந்து வெளியேறுவர்.  அவரை எவரும் சுரண்டவும் முடியாது, ஒடுக்கவும் முடியாது. அதற்குப் பௌத்தம் நிச்சயமாக உரிய பங்களிப்பைச் செலுத்தும். பாபாசாகேப் அம்பேத்கர் நமக்கு அரிய பல வழிகாட்டுதல்களைக் காட்டிச் சென்றிருக்கிறார். அவற்றைப் பின்பற்றுகிற சூழலில் மிக விரைவில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைப் பெற்று, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் மிகுந்த ஒரு சமூகத்தை இந்திய மண்ணில் உருவாக்கிக் காட்டுவார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை.

[email protected]

[email protected]

புகைப்படங்கள்: கபிலன் சௌந்தரராஜன்

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger