மாமன்னன் நந்தன்

ஸ்டாலின் ராஜாங்கம்

2

முதல் அத்தியாயத்தில் நந்தனை மன்னனாகக் கூறும் நான்கு சான்றுகளைப் பார்த்தோம். நான்கு சான்றுகளும் தஞ்சை வட்டாரத்தைச் சேர்ந்தவை. அவை நந்தனின் இருப்பிடமாக ஒரே பகுதியையே (பட்டீஸ்வரம்) குறிக்கின்றன. அதேவேளையில் நான்கு சான்றுகளும் வாய்மொழி மரபைச் சார்ந்ததாகவும் இருக்கிறதெனில் எழுத்து மரபில் நந்தனுக்கு இடமில்லையா என்கிற கேள்வி எழும். எழுத்து மரபில் இதற்குப் பின்னால்தான் நந்தனுக்கான இடம் உருவானது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வேதநாயக சாஸ்திரி நந்தனை மன்னனாகச் சொல்லியிருப்பது நமக்குக் கிடைக்கிறதென்றால் அதற்கு முன்பிருந்தே அந்த வழக்காறு உலவியிருந்திருக்க வேண்டும். இவ்வாறு நீண்டகாலம் வாய்மொழி வழக்காறு நீடித்த பகுதியில் – அதற்கும் பின்னால் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் நந்தனைப் பற்றி எழுத்து மரபில் ஒரு கதை உருவானது. அதுதான் பொதுவில் இன்றறியப்படுகிற நந்தனார் கதை. ஆனால், எழுத்துக்கு வந்த இந்த நந்தன், வாய்மொழி மரபில் இருந்தது போலல்லாமல் அதிலிருந்து தலைகீழாகச் சொல்லப் பட்டிருந்தார். ஆம், அரசன் நந்தன் அடிமை நந்தன் என்றாக்கப்பட்டிருந்தார். அதன் தொடக்கமாக அதுவரையில் வாய்மொழி மரபில் நந்தன் என்று அறியப்பட்டிருந்த பெயர் எழுத்து மரபில் நந்தனார் என்று மாற்றப்பட்டிருந்தது. நந்தனுக்கும் நந்தனாருக்கும் இடையில் நடந்திருப்பது வெறும் ‘ஆர்’ என்னும் பெயர் மாற்றம் மட்டுமல்ல. அது வரலாற்று மாற்றம்.

கோபாலகிருஷ்ண பாரதியார்:

நந்தனை மன்னனாகக் கூறும் நினைவுகளும் அடையாளங்களும் நிலவிய தஞ்சை வட்டாரத்தில்தான் அவரைப் பண்ணை அடிமையாக – சிவ பக்தராகக் காட்டும் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ பாடப்பட்டுப் பிறகு நூலாகவும் வெளியிடப்பட்டது. கோபாலகிருஷ்ண பாரதியார் அதன் ஆசிரியர். பாரதியார் இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகிலுள்ள நரிமணம் என்ற ஊரில் பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவரைப் பற்றி ‘கோபாலகிருஷ்ண பாரதியார் (கீர்த்தனங்களுடன்)’ என்ற தலைப்பில் (கேசரி அச்சுக்கூடம், சென்னை) நூலொன்றை எழுதி 1936ஆம் ஆண்டு வெளியிட்டார் உவேசா. அவர் தரும் தகவல்படி பார்த்தால் கோபாலகிருஷ்ண பாரதியாரின் ஆளுமை உருவாக்கத்தில் இன்றைக்கு மயிலாடுதுறை என்றழைக்கப்படும் மாயூரத்திற்கு முக்கிய இடம் இருந்திருக்கிறது. அத்வைத சாஸ்திரங்களையும், யோக நூல்களையும், வேதாந்த நூல்களையும் பயின்ற கோபாலகிருஷ்ண பாரதியார், சங்கீதமும் பயின்றிருக்கிறார். அதற்காக ஊரிலிருந்து மாயவரம் சென்று தங்கியிருக்கிறார். குறிப்பாக, கீர்த்தனைகள் இயற்றிப் பாடப் பழகியிருக்கிறார். இதற்காகத் திருவிடை மருதூரிலும் தங்கிப் பயிற்சி பெற்றிருக்கிறார்.

அதே காலத்தில் அடிக்கடி சிதம்பரமும் சென்று வரலானார். இவருடைய கீர்த்தனைகளால் மாயூரத்திலும் சுற்றுவட்டாரங்களிலும் பரவலாக அறியப்பட்டார். எங்கு சென்றபோதிலும் மாயூரமே அவருக்கான மையமாக இருந்தது. முதலில் சிவக்கதைகள் இயற்றி வந்த பாரதியார், நாகப்பட்டினம் வணிகரும் சிவ பக்தருமான கந்தப்ப செட்டியாரின் “ஏதாவதொரு நாயனார் சரித்திரத்தைக் கதை வடிவில் பாடித் தர வேண்டுமென்ற” தூண்டுதலின் பேரில் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யை இயற்றி அரங்கேற்றினார்.  நந்தனார் கீர்த்தனைக்குப் பிறகு ‘இயற்பகை நாயனார் சரித்திரம்’, ‘திருநீலகண்ட நாயனார்’ சரித்திரம் போன்றவற்றையும் இயற்றினார். “இவற்றோடு பாரதியார் காரைக்காலம்மையார் சரித்திரத்தையும் இயற்றியதாகச் சிலர் கூறுகின்றனர்” என்கிறார் உவேசா. எனினும் அவர் பாடியவற்றுள் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யே இன்றறியப்படுகிறது.

‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யின் சுருக்கம்:

 நந்தனார் காவிரி பாய்வதால் நிலவளமுடையதாக விளங்கும் ஆதனூரில் பிறந்தவர். நந்தனார் கீர்த்தனையில் புலையர், பறையர் என்கிற இரண்டு சொற்களும் ஒன்றுக்கு மற்றொன்று மாற்றாகக் கையாளப்படுகிறது. புலையரான நந்தனாரின் வாழிடம் புலைப்பாடி அல்லது கடைஞர் இருப்பு என்று அழைக்கப்படுகிறது. புலைப்பாடியில் நல்ல நீரோ காற்றோ இருப்பதில்லை. சுரை படர்ந்த குடிசைகளே குடியிருப்புகள்; மண் பாண்டங்களே பாத்திரங்கள். ஏழைகளான நந்தனார் குலத்தினர் ஊரிலுள்ள பிராமண ஆண்டையின் நிலத்தில் கூலி அடிமைகளாக இருக்கின்றனர். அந்தப் பிராமண ஆண்டை, சாதி வேறுபாடுகளை அழுத்தமாக நம்புகிறவர். இப் பின்னணியில் நந்தனார் கதை விவரிக்கப்படுகிறது.

நந்தனார் தம் குலத்துக்குரிய தெய்வங்களை விடுத்துப் பிராமணர் போன்ற ‘மேலோர்’ வணங்கும் சிவபெருமான் மீது பக்தி கொண்டிருக்கிறார். ஆனால், நந்தனார் குலத்தினர் ‘அவரவர்க்குரிய’ தெய்வங்களையே வணங்கிவருகின்றனர். ஆனால், அவர் அவர்களுக்கும் சிவ வழிபாட்டையே வலியுறுத்துகிறார். இதனால் நந்தனாருக்கும் சேரியிலிருப்போருக்கும் இடையே வாக்குவாதங்கள் கூட உண்டாகின்றன. ஆதனூரிலிருந்து திருப்புன்கூர் சிவன் கோயிலுக்குச் சென்று தூரத்திலிருந்து சேவித்துப் பாடியாடிவந்தார். பிறகு அவர் பேச்சைக் கேட்கும் பதினோரு பேரை அழைத்துக்கொண்டு திருப்புன்கூர் சிவன் கோயிலுக்குச் செல்கிறார். அந்தத் தலத்தில் நந்தி பெரிதாக இருந்தபடியால் வெளியே நின்று சாமியை வணங்க முற்பட்டார். இறைவன் அவர் மீது இரங்கி நந்தியை விலகியிருக்கச் சொன்னார். விலகி நின்றது நந்தி. இவையெல்லாம் சிவபெருமான் செயல் என்று மகிழ்ந்து ஆதனூர் திரும்பினார். திருப்புன்கூரிலிருந்து திரும்பிய நாள் முதல் ஊண் உறக்கம் மறந்தார். புன்கூரின் தொடர்ச்சியில் தில்லை சென்றும் சிவனைத் தரிசிக்க வேண்டுமென்று விரும்பினார். இவ்வாறு சிவனையே கொண்டாடிவந்த காரணத்தால் பண்ணையில் வேலை நடப்பதில்லை, பண்ணை விளைவதில்லை என்று காரியத்தை நினைவூட்டத் தொடங்கினர் புலையர்கள்.

அது பற்றி அறிவுரை கூறுவோருக்கு இறைவனின் பெருமைகளைப் பதிலாக வழங்கினார் நந்தனார். அதனால் மெல்ல மெல்ல புலையர்களும் சிவபக்தி கொள்ளத் தொடங்கினர். இந்த நிலைமை எல்லாம் பிராமண ஆண்டைக்குத் தெரியவந்தது. சிதம்பரம் போகும் நந்தனாரின் விருப்பத்தையும் அதற்குத் தன்னுடைய அனுமதியை எதிர் நோக்கியிருப்பதையும் தெரிந்துகொண்ட ஆண்டை, “தில்லை நடராஜன் உங்களுக்குரிய சாமியில்லை. எனவே, நீங்கள் அதனை வணங்க நினைப்பது முறையில்லை” என்று கூறி அதனை மறுத்தான். மேலும், புலையர்கள் வணங்க வேண்டிய தெய்வங்களையும் நந்தனாருக்கு நினைவுபடுத்தினான். சில நாட்கள் கழித்து, திரும்பவும் வந்து சிதம்பரம் போக அனுமதி கேட்டார் நந்தனார். ஆண்டை மீண்டும் மறுத்தான். ஒரு கட்டத்தில் நந்தனாரின் சிதம்பர பித்தைப் பார்த்து ஓர் உபாயம் செய்தான். நாற்பது வேலி பூமி நடவு நட்டாகவில்லை, இதைச் செய்துவிட்டால் சிதம்பரம் போக அனுமதி கிடைக்கும் என்றான். அவ்வளவு விரைவில் அதனைச் செய்து முடிக்க முடியாது என்பதால் சிதம்பர தரிசனத்திற்கு வழி இருக்காது என்று புலம்பிக்கொண்டே செல்கிறான் நந்தனார். ஆனால், இறைவன் தம் பூதகணங்கள் மூலம் ஒரே இரவில் நாற்பது வேலியையும் நட்டு அறுவடை செய்வித்தார். இதனை நந்தனார் கனவிலும் தெரிவித்தார். மறுநாள் இதனைக் கண்ட ஆண்டை, நந்தனாரின் பக்தியைப் புரிந்துகொண்டு சிதம்பரம் செல்ல வழிவிட்டார். கதையின் ஒரு பகுதி இது.

இரண்டாம் பகுதியில் முதல்முறையாகத் தில்லையில் நுழையும் நந்தனார் சிவாலயத்தைக் கண்டு ஆனந்தம் அடைகிறார். தில்லைவாழ் அந்தணர்களின் வீடுகளைக் கண்டு அங்கு போகாமல் தலத்தின் மதில் பக்கத்திலேயே வணங்கி வலம் வந்தார். உள்ளே போகலாமோ என்று அஞ்சி ஏங்கினார். அன்றிரவு அவர் கனவில் வரும் சிவபெருமான், அந்தணர்கள் வந்து அழைத்துச் சென்று பிரவேசம் பண்ணுவர் என்றுரைக்கிறார். அதையே தில்லை அந்தணர்கள் கனவிலும் சொன்னார். அவர்கள் நந்தனாரைத் தேடிவந்து அழைத்துச் சென்றனர். பிறகு, மூட்டியிருந்த அக்னியில் புகுந்து இவ்வுலக உடலை ஒழித்து, பிராமண வடிவமாய் பூணூல் விளங்க சடை முடியோடு இறைவனை நோக்கி நடந்தார் நந்தனார். இது இரண்டாம் பகுதி. இவ்வாறு நந்தனார் என்பவர் பண்ணையடிமை – சிவ பக்தர் என்னும் சித்திரம் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’  மூலம் முன்வைக்கப்பட்டது.

‘சொல்’வதும் ‘சொல்’லப்படாததும்:

இவ்விடத்தில்தான் நந்தன் அடிமை அல்ல, அரசன் என்று நாம் கூறுகிறோம். ஆனால், நாம் கூறுவதைப் புதிதாகச் சொல்வதாகவே யாரும் கருதுவர். அதுவே ‘இயல்பு’. ஆனால், அரசன் என்று கூறுவது புதிதல்ல, மக்களிடம் புழங்கிவந்தது என்பதையே கண்டோம். புழங்கியிருக்கிறது என்பது உண்மையாக இருந்தாலும் வெகுமக்கள் நினைவில் அது இல்லாமல் அடிமை என்னும் கதை மட்டுமே இருக்கிறது. ஏன்?

மன்னன் என்ற செய்தி சமூகத்தில் புழங்கியிருந்தாலும் அது எடுத்துச் ‘சொல்லப்பட்டிருக்கவில்லை’ என்பதுதான் இதில் அறிய வேண்டிய செய்தி. நந்தனை மன்னன் என்று சொல்வதைக் காட்டிலும், அவன் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்த மன்னர் என்று சொல்வதுதான் இங்கு பிரச்சினை. அது பலருக்கு நம்ப முடியாததாக இருக்கிறது. அதாவது, தலித்துகள் எப்போதும் அடிமைகளாக இருந்தவர்கள், அவர்களுக்கு மதிப்பான காலமோ நிலைமையோ இருந்திருக்க முடியாது என்று மனதளவில் படிந்திருக்கும் எண்ணப் போக்கே இதற்குக் காரணம். இந்த எண்ணம் எவ்வாறு ஏற்பட்டது? நந்தன் பற்றி நிலவிய இரண்டு வடிவங்களை வைத்தே இதற்கான காரணத்தைச் சொல்லலாம்.

நந்தன் பற்றிய இரண்டு வடிவங்களுக்கும் நேரடியான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. எனவே, இரண்டுமே கதை என்று சொல்லலாம். ஆனால், வெகுமக்களுக்குச் சிதம்பரம் சென்ற நந்தனார் என்பது கதை அல்ல. கதை வடிவில் சொல்லப்படும் வரலாறு. அவர்களிடம் வரலாறுக்கும் கதைக்கும் அதிக வேறுபாடு இருப்பதில்லை. எனவே, இவற்றில் எது கதை, எது வரலாறு என்று விவாதிப்பதில் அதிக பயனில்லை.

இன்னும் சொல்லப்போனால் சைவ சமய பக்தர் நந்தனாரை வரலாற்று மாந்தராகக் கருதுவோரிடம், நந்தன் மன்னன் என்று சொன்னால் பொய் என்றுதான் கூறுவர். மன்னன் – அடிமை என்னும் இரண்டு வடிவமும் தஞ்சை வட்டாரத்தைச் சேர்ந்தவை. ஒரே காலகட்டத்தில் புழங்கியிருக்கின்றன. இவற்றில் மன்னனாகக் கூறும் வடிவம் நந்தனார் கீர்த்தனைக்கு முந்தையதாகவும், வெகுமக்கள் நினைவில் புழங்கி வந்ததாகவும் இருக்கிறது.

தெரியவந்த வடிவமும் தெரியாத வடிவமும்:

அரசன், அடிமை என்னும் இரண்டு வடிவத்தில் அடிமை எனும் வடிவம்தான் இன்றைக்கு எல்லோருக்கும் தெரிகிறது. மற்றொன்று தெரியவில்லை. இரண்டில் எந்த வடிவம் இன்றுவரை நீடித்திருக்கிறது, எந்த வடிவம் நீடிக்கவில்லை என்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளும்போதுதான் நந்தன் பெயரில் இங்கு நிலவுவது வெறும் கதைகளல்ல. அதற்குப் பின்னால்  பெரும் சமூகப்  பண்பாட்டு அரசியல் இயங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்கிறோம்.

‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ தரும் கதைதான் இன்றைக்கு நந்தன் பற்றிய சமூகப் பொது நினைவாக இருக்கிறது. ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’க்கு வேராக இருந்தது பெரியபுராணம் என்று சொல்லப்பட்டாலும், நந்தனார் கதை தெரிந்த எல்லோருக்கும் அந்தத் தகவல் தெரியும் என்று சொல்ல முடியாது. மொத்தத்தில் சமூகத்தில் நந்தனார் பற்றிய இன்றைய சித்திரம் கோபால கிருஷ்ண பாரதியின் பிரதியால் உருவானது.

பொதுச் சமூகத்தின் நிலை இதுவென்றால், முற்போக்காகச் சிந்திப்போர் மன்னன் வடிவத்தை ஆண்ட பெருமை என்னும் சாதியச் சட்டகமாகவும், சமயங்களில் பொய்யாகவும் கருதும் நிலையில் இருக்கின்றனர். இவ்வாறு கருதுவோரிடம் நந்தனார் பண்ணை அடிமை என்று சொல்வதற்குச் சான்றுகள் இருக்கின்றன என்று அர்த்தமில்லை. முன்னரே சொன்னது போல அவர்களுக்கும் கதைதான் வரலாறு. மொத்தத்தில் இத்தகைய சூழலை எவ்வாறு புரிந்து கொள்வது? எந்த வடிவம் சொல்லப்பட்டது, எந்த வடிவம் சொல்லப்படவில்லை என்பதுதான் இதிலிருக்கும் அடிப்படை பிரச்சினை.

திரும்பத் திரும்பச் சொல்லுதல்: 

இரண்டு வடிவங்களில் அடிமை என்ற கதையாடல் மட்டுமே இதுவரை சொல்லப்பட்டுவந்திருக்கிறது. மாறாக, மன்னன் என்ற கதையாடல் சொல்லப்படவில்லை. ஒரு கதையாடல் நீடிப்பதிலும் நீடிக்காமல் போவதிலும்  சொல்வதற்கும் சொல்லாமல் விடுவதற்கும் பங்கு இருக்கிறதா என்ற கேள்வி இங்கெழலாம். ‘சொல்’வதில்தான் எல்லாமே இருக்கிறது. அதாவது நந்தன் பற்றிய இரண்டு கதை வடிவங்கள் இருந்தன. அவற்றில் நந்தன் மன்னன் என்ற தகவல் வாய்மொழியாக இருந்து வாய்மொழித் தகவலாகவே நின்றுபோயிருக்கிறது. அது தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை; எழுத்துப் பிரதியாக்கப்படவில்லை. சொல்லப்படவில்லை என்பதன் பொருள் இதுதான். ‘சொல்’வது என்றால் என்ன? ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருப்பது.

ஒரு விஷயம் உண்மையோ பொய்யோ திரும்பத் திரும்பச் சொல்லப்படும்போது வெகுமக்கள் மனதில் மெல்ல மெல்லப் படிந்து நாளடைவில் நிலைபேறு அடைகிறது. பிறகு, ஏதோவொரு வகையில் அவர்களின் அன்றாடத்தில் இடம் பிடிக்கிறது. இரண்டு வடிவங்களில் எது உண்மை, எது பொய் என்பதை ஆராய்ந்த பிறகு மக்கள் ஏற்பதில்லை. மாறாக அவர்களுடைய நினைவுக்கு எது கொண்டு செல்லப்பட்டதோ அவற்றை ஏற்றார்கள். அந்த வடிவம் முதலில் சொல்லும்போது கண்டுகொள்ளாமலோ, ஏற்காமலோ இருந்திருக்கலாம். ஏன்? சந்தேகத்துக்குரியதாகக்கூட பார்த்திருக்கலாம். ஆனால், சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கும்போது கண்ணுக்குப் புலப்படாத வகையில் மெல்ல மெல்ல ஏற்பை அடைகிறது எனில் உண்மை வரலாறு என்பதற்கான பொருள் என்ன என்ற கேள்வி எழலாம்.

திரும்பத் திரும்பச் சொல்லப்படாவிட்டால் ‘உண்மை’ கூட ‘வரலாறு’ ஆவதில்லை என்பதுதான் இதற்கு நாம் தரக்கூடிய பதிலாக இருக்க முடியும். இவ்வாறு திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டதாலேயே வரலாறு ஆகிவிட்ட பொய்கள் இங்கு அநேகம் உண்டு. ஒரு பொருள் பருண்மையாக இருப்பதனால் மட்டும் உண்மையாகிவிடுவதில்லை. அதனை நம்பத் தயாராக இருக்கிறோமா, இல்லையா என்பதில்தான் அதற்கான அர்த்தமே உருவாகிறது. எவ்வளவுதான் ஆதாரங்களை அடுக்கினாலும் அவையெல்லாம் இட்டுக்கட்டியதாகவே இருக்கும் என்று ஒருவர் நம்புவாரேயானால் அந்த இடத்தில் செய்வதற்கு ஒன்றும் இல்லாமல் போய் விடுகிறது. நம்பினால்தான் உண்மை. எனவே, சான்றுகள் மட்டுமே உண்மையை உருவாக்குவதில்லை.

எதைச் சொல்லுகிறோம்? எதைச் சொல்லாமல் விடுகிறோம்? எத்தனை முறை எப்படியெல்லாம் சொல்கிறோம்? சொல்வது யார்? எந்த இடத்தில் சொல்லப்படுகிறது? என்பவற்றோடு எல்லாம் தொடர்புடைய பிரச்சினை இது. சொல்லிக்கொண்டே இருந்தால் மட்டுமே அது நம் நம்பிக்கையில் நுழையும்.

ஓவியங்கள்: ரவி பேலட்

‘புதியது’ சந்தேகத்திற்குரியது:

நந்தன் பற்றிய இரண்டு வடிவங்களில் எது உண்மை, எது வரலாறு என்று கேட்டால் மன்னன் என்பதன் பக்கம் யாரும் நிற்கப் போவதில்லை. ஏனெனில், அதை இதுவரை யாரும் கேட்டதில்லை. அது உண்மையா, பொய்யா என்பதெல்லாம் அடுத்த கட்டம். எடுத்த எடுப்பிலேயே மறுக்கப்பட்டுவிடும். ஆனால், அது தொடர்ந்து சொல்லப்பட்டுவந்திருந்தால் உடனே மறுக்க முடியாது. சற்று நிதானிக்கச் செய்வோம். நந்தன் மன்னன் என்பதற்குச் சான்றுகள் இல்லை என்று கூறி அதைக் கதையென்று கருதுபவர்கள், நந்தனாரைச் சைவ அடியார் என்று கூறுவதற்கு இதேபோல் சான்றுகள் கேட்பதில்லை. சான்றுகள் இல்லாவிட்டாலும் கதையாகத் திரும்பத் திரும்பச் சொல்லியதால் அது வரலாறு போலாகிவிட்டதால் இந்தக் கேள்விக்கே செல்வதில்லை. மக்கள் நினைவுகளில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்ததால் நந்தனார் கதைக்கு இந்தச் சலுகை. மாறாக, புதியவற்றைப் புனைவு என்று மறுக்க முற்படுவர். இவையெல்லாமே ‘சொல்’வதோடு தொடர்புடைய விசயங்கள்.

வாய்மொழியும் எழுத்தும்:

 நந்தன் மன்னன் என்பதற்கு வாய்மொழிச் சான்றுகள் மட்டுமே காட்டப்பட்டன. வாய்மொழித் தரவுகள் இட்டுக்கட்டப்பட்டவை அல்ல. அதனால்தான் நவீன வரலாற்றியலில் வாய்மொழி வழக்காறுகளுக்குப் பிரதான இடம் தரப்பட்டிருக்கிறது. ஏதோவொரு காலத்தில் நடந்த ஒன்று மக்கள் நினைவில் புதைந்து கிடந்து அதே வடிவிலோ மாறுபட்ட வடிவிலோ வெளிப்படும் என்பது தெரிந்ததே. நந்தனை மன்னனாகக் கூறும் வாய்மொழித் தகவல் பல்வேறு இடங்களிலும் – வடிவங்களிலும் ஒன்றுபோலவே இருந்திருக்கின்றன. அதற்கான வரலாற்று மூலம் இல்லாமல் இத்தனை பரவலாக அது வழங்கப்பட்டிருக்க முடியாது. நந்தன் ஆண்ட இடம், ஆண்ட காலம், நடந்த சம்பவங்கள் ஆகியவற்றில் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மன்னன் என்பது முற்றிலும் பொய்யாக இருக்க முடியாது.

ஒப்பிடும்போது எழுத்துப் பிரதியாக உள்ள ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யில் அறிவியல் பண்பு குறைவு. அதிலிருப்பது போல் நடந்திருப்பதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு. அவை நம்பிக்கை மட்டுமே. இறைவன் கனவில் தோன்றுவது, நந்தியை விலகியிருக்கச் சொன்னதும் விலகுவது, நாற்பது வேலி பூமி ஒரே இரவில் நடவு ஆதல், அக்கினியில் இறங்கி உயிர் பெற்றுச் செல்லுதல் போன்றவற்றை இவ்வாறு கூறலாம். நந்தன் மன்னன் என்பதைப் போல வெகு மக்களிடம் நெடுங்கால வழக்காறாகவும் இது  இருந்திருக்கவில்லை. முழுக்க ஒரு புனைவாக எழுதப்பட்டிருக்கிறது. பெரியபுராணத்தை மூலமாகக் கொண்டது என்று சொல்லப்பட்டாலும் அதுவும் ஒரு புனைவே. நந்தனாருக்கு எந்தச் சமகாலச் சான்றுகளும் கிடைக்கவில்லை. எனினும் கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் வடிவமே இன்றைக்கு மக்களிடம் இருக்கிறது, வரலாறாக நம்பப்படுகிறது. ஒப்பீட்டளவில் சிறந்ததான நந்த மன்னன் கதை வடிவம் மக்களிடமும் இல்லை வரலாற்றிலும் இல்லை. இதுதான் ‘சொல்’லப்படுவது என்பதன் நுட்பம்.

 ‘சொல்’லப்படுதல் பற்றி விளக்கும்போது ‘திரும்பத் திரும்பச் சொல்லுதல்’ என்றொரு நிலைப்பாட்டையும் சேர்த்தே கூறிவருகிறோம். ஒரே விஷயத்தைச் சொன்னாலும் வேறு வேறு வடிவங்களில் சொல்லப் படுவதையே இப்பெயரால் குறிப்பிடுகிறோம். ஒரு கருத்தை வேறு வேறு வடிவங்களில் சொன்னால்தான் எல்லாத் திசைகளிலும் துலங்கும். கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் கதை இவ்வாறு திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது.

ஏற்பிற்கான காரணங்கள்:

ஒரு பிரதியின் ஏற்பு மற்றும் ஏற்பின்மைக்கு அதற்குள்ளே இருக்கும் காரணங்களையும் பார்க்க வேண்டும். வெளியேயுள்ள காரணங்களைப் போல உள்ளேயிருக்கும் காரணங்களையும் கணக்கிலெடுத்து மதிப்பிடுவதே சரி. என்னதான் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டாலும் நந்தனார் கீர்த்தனை ஏற்பைப் பெறுவதற்கு அதற்குள்ளேயே காரணிகளும்  இருந்தன.

‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யின் கதைப் போக்கு கவனிக்கத்தக்கது. இரண்டு பண்புகளைக் கொண்ட பாத்திரங்கள் எதிரும் புதிருமாக வாதிடுவதும், வாதத்தில் ஜெயிப்பதும் தோற்பதும் எவர் என்பதும் இயல்பாகவே மனித உளவியலைச் சுவாரஸ்யமாக்கும். காண்போரின், கேட்போரின் ஆர்வத்தைத் தூண்டும். இந்த அம்சம் ஒரு கதையாகக் குறிப்பிட்ட வரிசையில் அமையும்போது ஈர்ப்பானதாகும். நந்தனார் கீர்த்தனையில் கீழ் – மேல் என்றமைந்த இரண்டு எதிர்மறை பாத்திரங்களை உணர்ச்சிப்பூர்வமாக மோதவும் இணையவும் வைத்து ஒரு கதையாக வார்த்திருப்பது முக்கியமானதாகும். இது கதையளவிலான சாதகமான அம்சம். மற்றோர் அம்சம் சமூக உளவியல்.

சமூக உளவியல்:

நந்தனார் கீர்த்தனையில் கீழோன் ஒருவருக்கு மேலோருடைய பக்தி மார்க்கத்தில் இடம் கிடைக்கிறது. அதுவே கதையின் உச்சம். ஆனால், கதை முழுவதும் வன்முறைகளைக் காட்டிவிட்டுக் கடைசி காட்சியில் மட்டும் வன்முறை கூடாது என்று உபதேசம் கூறும் நம்கால திரைப்படங்களைப் போல இக்கதையும், தான் இறுதிக்காட்சியில் வழங்கப் போகும் மதிப்பு மிக்க இடத்திற்காகக் கதை முழுக்க நந்தனாரை இழிவாக விளக்கியிருக்கிறது. அவன் தன் மீதான இழிவை ஏற்பதோடு, தன்னுடைய ஜனங்களின் தெய்வங்களையும் இழிவாகக் கருதுகிறான். இதற்கு நேரெதிராக ஆண்டையிடமும் அந்தணர்களிடமும் கெஞ்சுகிறான், பணிகிறான். இவ்வாறு கதை முழுதும் பணிந்து வந்ததால்தான் இறுதியில் அவனுக்கு ‘மேலான’ இடம் தரப்படுகிறது. இக்கதைச் சட்டகத்தை ஒத்துக்கொள்வதில் சாதியச் சமூகத்திற்கு எந்தப் பிரச்சினையும் இருக்கப் போவதில்லை. நந்தனார் மீது பொதுச் சமூகம் பரிவுகொள்வதற்கு எல்லா நியாயமும் கதையில் இருக்கிறது. ஏனெனில், சமூகத்தின் சாதி உளவியலைத் தொந்தரவு செய்யும் விதத்தில் அவை இல்லை. ஒரே சமயத்தில் நிலவும் சமூக அமைப்பை மாறாமல் தக்கவைப்பதோடு, அதனால் ஏற்படும் குற்றவுணர்வில் இருந்து தப்பவும் சமூகத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய காலத்தில் வைத்து இக்கதையைப் பார்க்க வேண்டுமே ஒழிய, இன்றைய புரிதலை அன்றின் மீது ஏற்றக்கூடாது என்று இதற்கொரு சமாதானம் கூறப்படலாம். ஆனால், மேற்கண்ட விமர்சனத்திற்கு இந்தச் சமாதானம் பொருந்தாது. உண்மையில் இந்தச் சமாதானம்தான் வலிந்ததே ஒழிய விமர்சனம் அல்ல. நந்தனார் கீர்த்தனையின் கதைச் சட்டகம் சாதிய மனநிலையை அன்றைக்கும் தொந்தரவுக்குள்ளாக்கி இருக்காது, இன்றைக்கும் உள்ளாக்குவதில்லை. நந்தனார் கதை ஏற்பு பெற்ற வரலாற்றைப் புரிந்துகொள்ள முற்படும் போது இந்தச் சமூக உளவியலையும் கணக்கில் கொண்டு பார்க்க வேண்டும்.

கீர்த்தனையின் எளிமை:

இப்போது கதையின் வடிவம் காரணமாய் இருந்ததைப் பார்க்கலாம். நந்தனார் கதை கீர்த்தனையில் பாடப்பட்டுள்ளது. கீர்த்தனை எளியோருக்கானது; எளிமையானது. எளிய இசையறிவு உள்ளவர்களும் பாடவல்லது. எளிமையான ராகங்களால் அமைக்கப்பட்டுப் பலர் சேர்ந்து பாட ஏற்றதாகவும் இருக்கும். சுரப்பகுதியை விட சொற்பகுதியே கீர்த்தனைகளில் பிரதானமானது. பக்தர்களின் உணர்ச்சியைத் தெரிவிப்பதற்கு ஏற்ற பாவகை இது. கீர்த்தனைக்கிருந்த இத்தகைய எளிமையும் இனிமையும் நந்தனார் கதை பரவுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் ஏதுவாக அமைந்தது. கீர்த்தனை பாடுவோர் பொதுமக்களிடமும் தொடர்பு கொண்டிருந்தனர். கர்நாடக சங்கீத வித்துவான்களிடமும் இசை பயின்றிருந்த பாரதியார் வெளியே கீர்த்தனை பாடி உஞ்சவிருத்தி பண்ணியவர்களிடமும் சிவக்கதை பண்ணுகிறவர்களிடமும் தொடர்பு கொண்டிருந்தார். ஹிந்துஸ்தான சங்கீதமும் பயின்றிருந்தார். தஞ்சை பகுதியில் மராட்டியர் ஆட்சி நிலவியதால் மராட்டிய மொழி இசைப் பாடல் போக்குகளையும் அறிந்திருக்கிறார். கல்யாண காலங்களில் பாடுவதற்குரிய நலுங்கு, ஊஞ்சல், லாலி, கும்மி முதலிய வகைகளில் இவர் இயற்றிய பாடல்கள் பல. சிறு பெண்கள் கோலாட்ட ஜோத்ரையிற் பாடுவதற்குரிய பாட்டுகளையும் இவர் இயற்றியளித்தார் என்று உவேசா கூறுகிறார். ராகம், தாளம் இயைய கீர்த்தனை பாடியிருப்பினும் அதில் ஓர் எளிமையிருந்தது. அதுவே இக்கதை பரவவும் உதவியது.

அதுமட்டுமல்லாமல் வேறு விஷயங்களின் தாக்கமும் கீர்த்தனை மீதிருந்தது. இதனை உவேசா, “பழைய தமிழ் நாடகக் கீர்த்தனைகளிற் காணப்படாத கட்கா, த்விபதை, த்ரிபதை, தண்டகம் முதலியன இவரது நந்தனார் சரித்திரத்திற் காணப்படும். இவை மகாராஷ்டிரம் முதலிய பாஷைகளிலுள்ள சரித்திரங்களைப் பின்பற்றி அமைக்கப்பட்டவை” என்கிறார். கீர்த்தனையின் பரவலாக்கம் பற்றி யோசிக்கும் இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

அச்சுப் பண்பாடு: 

வாய்மொழி மரபைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த இந்தியச் சமூகத்தில் எழுத்து மரபு சொற்பமாகவே புழங்கியது. அரசும் நிர்வாகமும் அதற்கேற்றார் போல வளரவில்லை. இந்நிலையில்தான் காலனிய அரசு எல்லாவற்றையும் எழுத்தில் கேட்டது; எழுத்திற்குள் அடக்கியது. உண்மை என்பதற்கான ஆதாரமாக எழுத்துப்பூர்வ சான்றுகளையே கோரியது. அரசும் நிர்வாகமும் எழுத்து ஆவணங்கள் சார்ந்தே அமைந்தது. இதற்கேற்ப அச்சு இயந்திரமும் அறிமுகமாகியது. உரைநடை மரபு செல்வாக்கு பெறத் துவங்கியது. இவ்வாறு எழுத்துச் சார்ந்து சமூக அமைப்பு உருவாவதையே கல்விப் புல ஆய்வில் அச்சுப் பண்பாடு என்றழைக்கிறோம். 17, 18 நூற்றாண்டுகளில் இருந்தே மிஷனரிகளும் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளும் இந்தியாவின் உள்ளூர்ப் பற்றிய தேடலில் ஈடுபட்டபோது எழுத்துப் பிரதிகளையே தேடினர். கிடைத்தவற்றை மொழிபெயர்த்தனர்; பதிப்பித்தனர்; வரலாறு எழுதினர். இந்தியர்கள் அச்சியந்திரத்தைப் பயன்படுத்துவதில் இருந்த சில தடைகளும் 1835ஆம் ஆண்டு நீங்கிய பிறகு இந்தியர்கள் அச்சை பரவலாகப் பயன்படுத்தினர்; அரசாங்கத்திற்கு விண்ணப்பங்கள் எழுதினர்; இதழ்கள் நடத்தினர்; நாவல் உள்ளிட்ட உரைநடை இலக்கியம் படைத்தனர்.

அச்சுப் பண்பாட்டின் வழி உருவான ஓர்மை புதிய அரசியல் வடிவத்திற்கும், கருத்திற்கும் வழிவகுத்தது. அதேபோல புதிய அரசியல் விழிப்புணர்வு அச்சுப் பண்பாட்டின் பரவலாக்கத்திற்கும் உதவியது. தேசியம், திராவிடம், தமிழ்ப் போன்ற தேசியவாத சொல்லாடல்களும் உருவாயின. கிறித்தவமும் பரவிவந்தது. ஏற்கெனவே மரபாக வழங்கிவந்த உள்ளூர் மரபுகள் சமயங்களாக மறுஉருவாக்கம் அடைந்தன. புதிய அரசியல் சூழலின் சொல்லாடல்களைத் தங்கள் உருவாக்கத்திற்கேற்ப பயன்படுத்திக்கொண்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே செவ்வியல் சைவர்கள் அச்சு பண்பாட்டைப் பயன்படுத்த விரைந்தனர். மரபான – அதிகம் பயன் கொள்ளப்படாத பிரதிகளை, சைவ பிரதிகளை மடத்திலிருத்து வெளிக்கொணர்ந்தனர்; மறு ஆக்கம் செய்தனர். இத்தகைய பின்னணியில்தான் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ பிறந்தது. சைவர்களாலும் விரைந்து படிக்கப்பட்டது. அச்சின் வழி அதிக மக்களைச் சென்றடையவும் வழி ஏற்பட்டது.

அச்சில் கீர்த்தனை:

நந்தனார் கீர்த்தனையை இயற்றி முடித்த பின்னர் காரைக்காலில் அரங்கேற்றினார் கோபாலகிருஷ்ண பாரதியார். அதனைக் கண்ட பிரெஞ்சு அதிகாரி சீசையா என்பவர் 1848ஆம் ஆண்டு கீர்த்தனையை நூலாக வெளியிட்டார் என்று கூறப்படுகிறது. பிறகு, 1861ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. 1861ஆம் ஆண்டு பதிப்பே முதல் பதிப்பு என்று கூறுமளவிற்கு 1848ஆம் ஆண்டு பதிப்பு பரவலாகவில்லை.

முதல் பதிப்பு எத்தனை பிரதிகள் அச்சிடப்பட்டன என்று தெரியவில்லை. ஆனால், முதல் பதிப்பு வெளியான அடுத்த ஆண்டே (1862) இரண்டாம் பதிப்பு வெளியாகிவிட்டது. அந்த அளவிற்கு அந்நூல் பரவலாகியிருக்கிறது. நந்தனார் கீர்த்தனை நூலாக வெளியான பின் நடந்த மாற்றங்களை உவேசா “….அச்சரித்திர புஸ்தகங்கள் எங்கு பரவின. அதனை யாவரும் வாங்கிப்படித்து மனனம் பண்ணினர்” என்று கூறுகிறார். நந்தனார் கதைக்கே இக்கீர்த்தனையால் புதுமலர்ச்சி உண்டானதாகத் தெரிகிறது. கதையோடு தொடர்புபடுத்தப்பட்ட இடங்கள் பக்தர்களால் தேடப்பட்டுப் பக்திக்குரிய இடங்களாக மாற்றப்பட்டன. நூல்களைப் படித்தவர்கள் – கேட்டவர்கள் “…..திருப்புன்கூர் சென்று நந்தி விலகிய நிலையையும், திருக்கோயிற்கு மேற்கேயுள்ளதும் நந்தனாரால் வெட்டப்பட்டதுமான திருக்குளத்தையும் கண்டு இன்புற்று வந்தனர்; சிலர் சிதம்பரம் சென்று நந்தனார் தீக்குளித்த இடமாகிய ஓமக்குளத்தைத் தரிசித்து அதில் ஸ்நானம் செய்துவந்தனர்; மற்ற நாயன்மார்களைப் பற்றிக் கேட்டும் அறியாதவர்கள் கூட நந்தனாரைப் பற்றி நன்றாக அறிந்துகொண்டனர். நந்தனார் வரலாற்றுக்கே ஒரு தனி மதிப்பு உண்டாயிற்று. பல ஊர்களில் புதிய பஜனை மடங்களும், பஜனைக் கோஷ்டிகளும் உண்டாயின; நடராஜப் பஜனையைத் தமிழ்நாட்டினர் பாரதியாருடைய கீர்த்தனைகளின் உதவியால் நடத்தினார்கள். தமிழ்நாடு முழுவதும் சிதம்பர நினைவு மலிந்தது” என்கிற உவேசாவின் கூற்றின்வழி நந்தனார் கீர்த்தனையின் நூலாக்கத்தால் நடந்த மாற்றங்களைத் தெரிந்து கொள்கிறோம். பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியது என்பது மட்டும் தெரிகிறது. பெரியபுராணத்தால் சைவ புலமையோர் மட்டும் தெரிந்திருந்த திருநாளைப் போவாரை, பாரதியாரின் கீர்த்தனை நந்தனாராக்கிப் பக்தி உணர்ச்சியால் உந்தப்பட்ட வெகுமக்கள் வரை கொண்டு சேர்த்தது. நூல் பரவலாக்கம் என்பது நூலை நேரடியாகப் படிப்போரை மட்டுமல்லாது, நூலைப் படித்தவர்களிடமிருந்து தனியாகவோ – கூட்டமாகவோ கேட்டோர்வரை குறிக்கும். நந்தனாரோடு தொடர்பு படுத்தப்பட்ட இடங்கள் நந்தனார் கீர்த்தனைக்குப் பிறகு மக்களால் கண்டு கொள்ளப்பட்டன. அதற்கு முன்பு அவ்விடங்கள் இவ்வளவு சிறப்பைப் பெற்றிருந்ததாக அறிய முடியவில்லை. கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றி பிரபலமாகாத மற்ற இரண்டு கீர்த்தனைகள் அச்சாகவில்லை என்பதையும் இவ்விடத்தில் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அச்சுப் பண்பாட்டோடு இக்காலகட்டத்தையும் சேர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். 19ஆம் நூற்றாண்டில் நடந்த சமூக அரசியல் பண்பாட்டு மாற்றங்களும் இவ்விடத்தில் நினைக்கத்தக்கது. மிஷனரிகளும் காலனிய அதிகாரிகளும் உள்ளூர் வரலாற்றைப் பதிப்பிப்பதிலும் எழுதுவதிலும் ஈடுபட்ட பின்னர் பல்வேறு காரணங்களால் உள்ளூர் அதிகார சாதியினர் சுதாரித்தனர். குறிப்பாக, பிராமணர்களும் வேளாளர்களும் இம்முயற்சிகளில் வேக வேகமாக ஈடுபட்டனர். பிராமணர்கள் உருவாகிவந்த தேசிய வாதத்தைப் பற்றிக்கொண்டார்கள் எனில் வேளாளர்கள் சைவத் தமிழ் அடையாளத்தைத் தங்களுக்குரியதாகத் தகவமைக்க முயன்றனர். இரு தரப்புக்கும் முரணும் உறவும் இருந்தாலும் தங்களுக்குக் கீழிருப்போரை அணுகும் பார்வையில் ஒன்றுபோல் இருந்தனர். சைவ நூல்களும் சைவ வரலாறும் மீட்கப்பட்டுக் கொண்டிருந்த இக்காலத்தில்தான் நந்தனார் கீர்த்தனையும் பரவலாகிவந்தது. இந்த அரசியல் சூழலுக்கு அது ஏற்றதாக இருந்தது. இதன்படி அக்கதை பரவுவதில் அக்காலச் சூழலும் பங்கு வகித்தது என்கிறோம்.

இதன்படி 19ஆம் நூற்றாண்டிலேயே நந்தன் மன்னன் என்னும் வடிவம் மெல்ல மெல்ல மறையவும் நந்தனார் சைவ பக்தர் என்னும் வடிவம் மேலெழவும் தொடங்கிவிட்டது. இது மன்னன் கதையைப் பறைசாற்றிவந்த பறையர் வகுப்பினரிடம் வினையாற்றி விட்டது என்பதை ரெட்டைமலை சீனிவாசன் குறிப்பின் வழி தெரிந்துகொள்கிறோம். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் 1893க்கு முன்பு கும்பகோணத்தில் நந்தன் கோட்டை மதில், தோல்காசு நந்தன், கலம்பகம் நந்தன், போன்ற மன்னர் தொடர்புபெறும் அடையாளங்களை நேரில் கண்டதாகக் கூறும் ரெட்டைமலையார் “திருநாளைப் போவார் என்னும் நந்தனார் நின்று துதித்த ஓமக்குளக் கரை”யையும் கண்டு வந்ததாகக் கூறுகிறார். இவ்விடத்தில் அரசன், அடிமை என்ற இரண்டு அடையாளங்களும் ஒன்றாகச் சொல்லப் படுகிறது.

நந்தனார் கதை பெரியபுராணத்திலிருந்து விரிக்கப் பட்டது என்று கூறப்பட்டாலும் கீர்த்தனைக்கு முன்பு அதற்குச் செல்வாக்கில்லை. உள்ளூர் மரபில் கதையாக வழங்கப்படவுமில்லை. மேலும் நடிக்கப்படவோ பாடப்படவோ இல்லை. விநோதமாக – அநீதியாகக் கொல்லப்பட்ட மனிதர்கள் மீது கட்டப்படும் கதைப் பாடல் வடிவமும் இக்கதைக்கு இல்லை. இவற்றோடு ஒப்பிடும்போது மன்னன் நந்தன் பற்றிய வாய்மொழி வழக்கு மட்டுமே மக்களிடம் இருந்தது.

இந்நிலையில்தான் நத்தனார் பண்ணையடிமை என்னும் கதை கோபால கிருஷ்ண பாரதியாரால் எழுதப்பட்டுப் பரவலானது. இதற்குக் காரணம் அச்சுப் பண்பாடுதான். தொடர்ந்து இக்கதை நாடகம், பாடல் என்று எடுத்தாளப்பட அச்சும், அவ்வடிவங்கள் வழி பரவலாவது அச்சு நூலுக்குச் செல்வாக்கையும் உண்டு பண்ணியது.

எது முதல்?:

இத்தகைய புரிதல்களின் பின்புலத்திலிருந்து நந்தன் மன்னன் என்ற வழக்கை எடுத்து வைக்கும் போது, அது நந்தனாரைப் பண்ணையடிமையாகக் காட்டியிருப்பதற்கான கோபமான ‘எதிர்வினை’ என்றே பலரும் கருதுகின்றனர். பண்ணையடிமை நந்தனார் என்று கூறிவந்ததை எந்தச் சான்றும் கேட்காமல் வரலாறாகவே கருதிவந்தவர்கள், நந்தனை மன்னன் என்று கூறும்போது மட்டும் அதற்குச் சான்று என்ன என்று வேகமாகக் கேட்கின்றனர். இவ்வாறு கூறப்படும் ‘எதிர்வினை’ என்ற வார்த்தையில் ஒரு நுட்பமான அரசியல் அர்த்தம் ஒளிந்திருக்கிறது. எதிர்வினை என்றால் அசலானதில்லை, ஏற்கெனவே முதலாவதாக ஒன்றிருந்து அதனை எதிர்க்கும் பொருட்டுத் தோன்றியது என்ற அர்த்தம் இருக்கிறது. இதன்படி எதிர்வினைக்கென்றே சொந்தமாக வினையில்லை. எதிர்ப்புக்கான தேவையிருந்தால் மட்டுமே அது எழும். எதிர்வினை வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வது ‘முதல்’தான்.

அடித்தள மக்களின் போராட்டங்களை – யோசனைகளை அங்கீகரிப்பவர்கள் கூட ஏறக்குறைய அவற்றை எதிர்வினை என்றே கூறுகின்றனர். இதன் மூலம் ஆதிக்கச் சக்திகள்தான் ‘முதல்’, அடித்தளச் சக்திகளுக்கு எதுவும் முதலாக இருந்ததில்லை என்றாகிவிடுகிறது. ஆனால், இன்றைய ஆதிக்கச் சக்திகள்தாம், பூர்வ – அடித்தள மக்களிடமிருந்து பலவற்றை எடுத்துக்கொண்டிருக்கின்றனர்; போலச் செய்திருக்கின்றனர். இதன்படி அடித்தள மக்களே ‘முதல்’. இன்றைய ஆதிக்கச் சக்திகள்தாம் எதிர்வினையாகப் பலவற்றை உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தச் சட்டகத்தை நந்தன் மன்னன் என்பதற்கும் பொருத்திப் பார்க்கலாம். உண்மையில் நந்தன் மன்னன் என்று நாம் கூறுவது எதிர்வினை அல்ல. மாறாக, பண்ணையடிமை நந்தனார் என்று எழுதியதுதான் எதிர்வினை. நந்தன் மன்னன் என்று வழங்கிவந்த பகுதியில் – காலகட்டத்தில் அந்த நினைவை மறைப்பதற்காகப் பின்னால் எழுந்த பிரதியாகத்தான் (எதிர்வினை) ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ இருக்கிறது.

அரசன் அடையாளத்தின் இடத்தை அடிமை அடையாளம் எடுத்துக்கொள்ளத் தொடங்கியதின் அறிகுறியாக இதனைப் பார்க்கலாம். பின்னர் இவற்றில் அடிமை பக்தன் என்பதே நிலைத்தது. இதன் தொடர்ச்சியில்தான் இருபதாம் நூற்றாண்டுக்குள் நந்தன் கதை நுழைந்தது.

 (தொடரும்)

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!