தமிழ்நாட்டில் பட்டியல் சமூக மக்கள் மீதான சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன; அரசியல் தலைவர்களும் பல்துறை பிரபலங்களும் பொதுவிடங்களில், சமூக வலைதளங்களில் பட்டியல் சமூக மக்கள் குறித்து இழிவாகப் பேசுவது தொடர்கதையாக இருக்கிறது; பட்டியல் சமூகத்தினருக்கான உரிய அரசியல் பிரதிநிதித்துவம் தமிழ்நாட்டில் தொடர்ந்து மறுக்கப்படுகிறது; இதுபோன்ற பல்வேறு சாதிய அத்துமீறல்களுடன் தற்போது புதிதாக இணைந்துள்ளதுதான் பட்டியல் சமூகத் தலைவர்களை முடக்குவதென்பது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த சமத்துவத் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்திருக்கும் நிலையில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் அண்ணன் பூவை ஜெகன்மூர்த்தி மீது தமிழ்நாடு அரசு உள்நோக்கத்தோடு வழக்கு பதிந்துள்ளது. ஒரு காதல் விவகாரம், அதையொட்டிய ‘கடத்தல் சம்பவம்‘, புகார்தாரரே “இது குடும்ப விவகாரம். நாங்களே பேசி சமாதானம் செய்துகொண்டோம். இதைக் கடத்தல் வழக்காக பாவிக்க வேண்டாம்” என்று பிரமாணப் பத்திரம் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்து சுமார் ஐந்து நாட்களுக்குப் பிறகு ஏதேதோ காரணங்கள் சொல்லி பூவை ஜெகன்மூர்த்தியைக் குற்றவாளியாக முதல் தகவல் அறிக்கையில் சேர்த்து, கைது செய்ய முற்பட்டுள்ளனர்.
எந்தவித முகாந்திரமும் இல்லாத ஒரு வழக்கில் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது மனுதாரரான அண்ணன் பூவை ஜெகன்மூர்த்தியை நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதையேற்று வந்தவரிடம் நீதிமன்றம் ‘ஆவேசமாக’ சில கேள்விகளை எழுப்புகிறது: “நீங்கள் எத்தனை வாக்குகள் பெற்றீர்கள்? இப்படித்தான் ஒரு எம்.எல்.ஏ நடந்துகொள்வதா? கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தார்களா?” என்றெல்லாம் கேட்கப்பட்டது. வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தியைக் கைது செய்ய முற்பட்டதும், அவரை நீதிமன்றம் அணுகியவிதமும் சட்டத்திற்கு முரணானவை. நீதிமன்றத்திற்குத் தன் ஆதரவாளர்களுடன் வந்த அண்ணன் பூவை ஜெகன்மூர்த்தியிடம் “ஏன் இவ்வளவு பேருடன் வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்ட நீதிமன்றம், ‘அவரை விசாரிக்கச் செல்லும்போது ஏன் நானூறு பேருடன் சென்றீர்கள்?’ எனக் காவல்துறையினரிடம் கேட்க மறந்துவிட்டது போலும். முன்பிணை கேட்டு வந்தவரிடம், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ‘கட்டப்பஞ்சாயத்து’ என்ற முன்முடிவோடு நீதிமன்றம் அணுகியது?
இவ்வாறு முன்முடிவோடு ஒரு வழக்கை அணுகுவது குற்றம் சாட்டப்பட்டவருக்கு மட்டுமல்ல, புகார்தாரருக்கும் தீங்கு விளைவிக்கும். பூவை ஜெகன்மூர்த்தி இடத்தில் சாதி இந்து ஒருவர் இருந்திருந்தால் காவல்துறையினரோ நீதிமன்றமோ இப்படி நடந்துகொண்டிருக்குமா? ‘கட்டப்பஞ்சாயத்து’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பார்களா? தமிழ்நாட்டின் பெரும்பான்மை அரசியல்வாதிகள் ‘கட்டப்பஞ்சாயத்து’ ஆட்கள்தான் என்பதைப் பாமரரும் அறிவர். ஆனால், தொடர்ந்து பட்டியல் சமூகத் தலைவர்கள் மீதே இக்குற்றச்சாட்டுச் சுமத்தப்படுவது சாதியக் காழ்ப்புணர்வன்றி வேறல்ல.
இதில் இணையக் கூலிப்படைகளின் அவதூறுகள் தனிரகம். உளவுத்துறையின் கிளை அமைப்புகள் போல, காவல்துறையின் கதைகளோடு பல்வேறு கட்டுக்கதைகளைப் புனைந்து தள்ளுவார்கள். பட்டியல் சமூகத் தலைவர்களுக்கென்று ஏற்கெனவே உருவாக்கியிருக்கும் ‘டெம்ப்ளேட்’டுக்குள் எண்ணிலா காவியங்களைப் படைப்பார்கள். சில ஊடகவியலாளர்கள் “இந்த டிரெண்டை உருவாக்கியதே நான்தான்” என்று நாணமில்லாமல் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். சாதி இந்து என்றால், அவர் ‘எதிர் கொள்கை’ பாஜக உறுப்பினரானாலும் வலிக்காமல் அடிப்பதில் இவர்கள் வல்லவர்கள். இந்தக் கூலிப்படையினரைப் பொறுத்தவரையில், பாஜகவின் ‘நல்ல முஸ்லிம்‘ போல இவர்கள் ‘நல்ல தலித்’ என்ற வரையறையை வைத்திருக்கிறார்கள். அந்த எல்லைக்குள் அடங்காதவர்கள் யாவரும் ‘ரெளடிகள்’, ‘கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள்’, இன்னும் சிறப்பாக ‘சாதி வெறியர்கள்’.
அண்ணன் பூவை மூர்த்தியின் கூற்றுதான் நினைவுக்கு வருகிறது. “சிலர் சொன்னான், இவங்க ரெளடி கும்பல்னு சொன்னான். இன்னும் சிலர் சொன்னான், இவங்க கட்டப்பஞ்சாயத்து பண்றாங்கன்னு சொன்னான். உண்மையிலேயே கட்டப்பஞ்சாயத்து பண்றது நாங்க இல்ல, பண்றவங்கதான் எங்க மேல பழி சொல்றாங்க…”
சமத்துவத் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் படுகொலையின்போதும் இத்தகைய அவதூறுகளே பரப்பப்பட்டன. ‘ரெளடிகளுக்குள் இருந்த முன்பகையே படுகொலைக்குக் காரணம்’ என்றுதான் அரசும் காவல்துறையும் தொடர்ந்து சொல்லிவந்தன. இதுவோர் அரசியல் படுகொலை என்ற வாதத்தையே அவர்கள் ஏற்கவில்லை; அந்தக் கோணத்தில் வழக்கைக் கையாளவும் இல்லை; வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் முகங்கொடுக்கவில்லை; இன்றுவரை உண்மைக் குற்றவாளியும் கொலைக்கான உண்மை நோக்கமும் கண்டறியப்படவும் இல்லை. இந்நிலையில், அண்ணன் பூவை ஜெகன்மூர்த்தி நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்.
இவ்விடத்தில், முதல் பத்தியில் குறிப்பிட்ட ‘பட்டியல் சமூகத் தலைவர்களை முடக்குவது’ என்ற விஷயத்திற்கு வருவோம். 23.06.2025 தேதியிட்ட தினமலர் நாளிதழில், “விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கான பாதுகாப்பை பலப்படுத்த, அரசுத் தரப்பில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது” என்ற செய்தி ‘உளவுத்துறை எச்சரிக்கை, திருமாவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. ஆனால், யாரால் ஆபத்து என்பதை அச்செய்தி விவாதிக்கவில்லை. சமத்துவத் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு முன்பு, அவருக்கும் இத்தகைய அச்சுறுத்தல் இருக்கிறதென உளவுத்துறை எச்சரித்ததாகச் செய்திகள் வெளியாயின. சமகாலத்தின் பட்டியல் சமூக அரசியல் ஆளுமையாக இருப்பவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன். பெரும்பான்மை பட்டியல் சமூக மக்களின் நம்பிக்கையாகவும் கருதப்படுகிறார். அவருக்கு அச்சுறுத்தல் என்பது, அதுவும் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் படுகொலை, அண்ணன் பூவை ஜெகன்மூர்த்தி மீது வழக்கு என்ற நிகழ்வுகளுக்குப் பிறகு இது அவ்வளவு சாதாரணமாகக் கடந்துவிடக் கூடியது அல்ல.
இந்நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும்போது சாதியச் சக்திகள் நம் தலைவர்களைக் குறிவைத்திருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் அதற்கான வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. இமானுவேல் சேகரன், மாவீரன் ஆரியசங்காரன், செகுடந்தாளி முருகேசன், மேலவளவு முருகேசன் தொடங்கி அண்ணன் ஆம்ஸ்ட்ராங், தீபக் ராஜா போன்று அரசியல் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் மக்கள் செல்வாக்குடன் சமரசமற்று இயங்கிய ஆளுமைகளைப் பட்டியல் சமூகம் இழந்துவருகிறது. இதற்குச் சாதி இந்து சமூகமும், அரசும், அதன் பரிவாரங்களுமே பொறுப்பு. ஒருபுறம் இம்மக்களுக்கான கல்வி – பொருளாதார – சமூக வளர்ச்சிக்கு மேம்போக்கான திட்டங்களைச் செயல்படுத்திவிட்டு, மறுபுறம் அவர்களின் கல்வி – பொருளாதார வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவைக் குறைப்பது, ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதியைத் திருப்பி அனுப்புவது, பூர்வகுடிகளை நாடோடியாக்குவது, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை, குடியிருப்புகளைக் கண்டுகொள்ளாமல் கைவிடுவது, இவற்றுக்கெல்லாம் உச்சமாக இம்மக்களின் நம்பிக்கைக்குரிய ஆளுமைகளை நெருக்கடிக்குள்ளாக்குவது என ஆளும் அரசுகளின் ‘ராஜதந்திர’ங்கள் சமூக ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். எப்போதெல்லாம் அரசு பெரும் வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்கின்றதோ அப்போதெல்லாம் அப்பகுதியில் மக்கள் செல்வாக்குடன் இருக்கும் ஆளுமைகள் இல்லாமலாக்கப்படுகின்றனர் அல்லது மௌனிகளாக்கப்படுகின்றனர். இது உலகப் போக்காகவே இருக்கிறது. அண்ணன் ஆம்ஸ்ட்ராங் படுகொலையிலும், அண்ணன் பூவை ஜெகன்மூர்த்தி வழக்கிலும் இத்தகைய பின்னணி கவனிக்கப்படாமல் இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். “பார்ப்பனியம், ஏகாதிபத்தியம் இரண்டையுமே நாம் எதிர்க்க வேண்டும்“ என்று அன்றே நமக்கு வழிகாட்டினார் பாபாசாகேப் அம்பேத்கர்.
சமூக ஜனநாயகத்தை முழுமைப்படுத்தும் அரசியல் அதிகாரமே நம்முடைய இழிவுகளைப் போக்கும், அதுவே நமக்குச் சமூக – பண்பாட்டு அதிகாரத்தைப் பெற்றுத் தரும் என்பதை உணர்ந்து அந்த அரசியல் அதிகாரத்தை நோக்கிய நகர்வை விரைவுபடுத்துவோம். நமக்கு நாமே ஒளியாக, வழிகாட்டியாக இருந்து செயல்படுவோம். நம் முன்னோடிகளின் கனவான ‘ஜெய் பீம் மாடலை’ சாத்தியப்படுத்துவோம்.