ஓட்டுக்குப் பணம்: புரிந்துகொள்ளுதலும் நியாயப்படுத்துதலும்

தலையங்கம்

17ஆவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்த இதழ் நம் கைகளில் தவழும்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும். புதிய அமைச்சரவை பொறுப்பேற்றிருக்கக் கூடும். தேர்தலுக்கு முன்பும், தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு இடைப்பட்ட நாட்களிலும் பல்வேறு விசயங்கள் தேர்தல் சார்ந்து விவாதிக்கப்பட்டன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய அமைச்சரவை, கூட்டணி கணக்குகள் ஊடாக அந்த விவாதங்கள் தொடரலாம். ஒவ்வொரு தேர்தலிலும் குறிப்பிட்ட விசயங்கள் மையமாக அமையும். அவற்றை ஆதரித்தும் எதிர்த்தும் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை அமைத்துக்கொள்ளும். இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிய அரசின் எதிர்ப்பாளர் யார், அடிமை யார், தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரின் குணங்கள் எவை என்பவையாகத் தங்கள் பிரச்சாரங்களை அமைத்துக்கொண்டன. இவை தரந்தாழ்ந்த பிரச்சாரங்கள் என்ற பார்வைகளும் இருக்கின்றன. கடந்த கால பிரச்சாரங்கள் தரமிக்கவையாக இருந்தன என்பதான தோற்றம் இப்பார்வையால் ஏற்படுகிறது. ஆனால், தேர்தல் பிரச்சார வரலாறு தெரிந்தவர்களுக்கு இப்போக்குத் தமிழ்நாட்டிற்குப் புதிதில்லை என்று தெரியும். இவ்வளவு விசயங்கள் பேசப்பட்டாலும், ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டாலும் எல்லோரும் சேர்ந்து மௌனம் காத்த – பேச விரும்பாத செய்தி ஒன்று உண்டென்றால் அது ஓட்டுக்குத் தரப்பட்ட பணம் பற்றியதுதான். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, ஓட்டுக்குப் பணம் தருவது அந்த அளவிற்கு இயல்பானதாக மாறிவிட்டது. அதாவது, ஓட்டுக்குப் பணமளிப்பது தேர்தல் நடைமுறையின் அங்கமாகிவிட்டது. இரண்டு, எல்லாக் கட்சிகளும் சிறிதும் பெரிதுமாக இந்நடைமுறையைப் பின்பற்றுவதாலும் இது பேசப்படுவதில்லை.

சிற்சில விதிவிலக்குகள் தவிர வாக்காளர் ஓட்டளிப்பதற்கான சன்மானம் பணமாகவோ வேறு பொருளாகவோ தரப்படும் நடைமுறை இங்கிருந்து வந்திருக்கிறது. ஆனால், படிப்படியாகத் தேவைக்கேற்ப பணமளிக்கும் நடைமுறை வளர்ந்து இன்றைக்குக் கட்டாயமாகியிருக்கிறது. தேர்தல் ஆணையத்திடம் கணக்காகக் காட்டப்படும் பணத்தை விடவும் பன்மடங்கு இதில் செலவாகின்றன. இந்த விதத்தில் இவை கணக்கிற்கு வராத பணமாகும். இன்றைக்குத் தேர்தல் செலவு பிடிக்கிற விஷயமாக மாறிவிட்டது.

இந்தத் தேர்தலிலும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது கட்டுக்கடங்காத தொகையாக மாறியிருக்கிறது. ஐந்நூறு ரூபாய் என்பது சாதாரண பணமாக மாறிவிட்டது. எனவே ஐந்நூறு ரூபாய் தொடங்கி ஏழாயிரம், எட்டாயிரம் ரூபாய் வரை தொகுதியில் நிலவும் போட்டிக்கேற்ப தொகை தரப்பட்டிருக்கின்றன. பல தேர்தல்களைச் சந்தித்த அனுபவம் காரணமாக  திமுகவும் அதிமுகவும் மாறி மாறி திறம்பட பணத்தை விநியோகித்திருக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளின் தலைமையின்கீழ்ச் செயல்பட்ட கூட்டணி கட்சிகளுக்கும் இது பொருந்தும். தேர்தல் கண்காணிப்பாளர்கள் சாலைகளில் வாகனங்களை மறித்துச் சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது தெருக்களில் பணம் மிகச் சாதாரணமாக விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்ததைப் பலரும் சமூகவலைதளங்களில் எழுதியிருந்தனர். இந்நிலையில் இந்த வாகன சோதனைகளையும், அதன் காரணமாகத் தேர்தல் நடைமுறைகளையும் கேலியாகப் பார்க்கும் நிலைக்கு மக்கள் சென்று சேர்கின்றனர். மக்களையே இந்த ஊழலின் பங்குதாரர் ஆக்கியிருப்பதுதான் இதன் உச்சம். இந்நடைமுறைக்குப் பழகிவிட்ட மக்களே “எங்களுக்குப் பணம் எங்கே” என்று கேட்கும் நிலை உருவாகியிருப்பதைப் பார்க்கும்போது தேர்தல் சனநாயகம் பணநாயகத்திற்கு விலை போனதை நம்மால் பார்க்க முடிகிறது. ஓர் ஊரில் ஒரு கட்சி முதலில் ஒரு தொகையைக் கொடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மற்றொரு கட்சியும் அதே தொகையைக் கொடுக்கிறது என்றால், முன்பு பணம் கொடுத்தக் கட்சி மீண்டும் வந்து கூடுதலாகத் தொகையைக் கொடுத்துச் சென்றதைப் பலர் கூற கேட்க முடிந்தது. தேர்தல் முறைப் பற்றி விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. அதில் ஓட்டுக்குப் பணம் அளிப்பதை முக்கிய நடைமுறையாகக் கணக்கிலெடுத்து ஆய்வு செய்ய வேண்டும். தேர்தலில் ‘வாக்காளர் பொருளாதாரம்’ என்கிற கலைச்சொல்லை உருவாக்கி ஆய்வு செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது தவெக. தங்கள் பிரச்சாரங்களில் அந்தக் கட்சியைப் பற்றிய பேச்சைத் தவிர்த்து ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி சாடிக்கொண்டது மூலம் அக்கட்சியைப் பார்த்துப் பயப்படவில்லை என்று காட்டிக்கொள்ள முற்பட்டன. ஆனால், தவெகவின் வருகையை இக்கட்சிகள் தீவிரமாக எடுத்துக்கொண்டதை வாக்காளர்களுக்குக் கொடுத்த தொகை மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. கடந்த தேர்தல்களில் கொடுத்த தொகையை விட கூடுதலான தொகையை இக்கட்சிகள் கொடுத்ததாக வந்த தகவல்களே இதற்கான சான்றாகும். தவெக பல இடங்களில் பணம் கொடுக்கவில்லை என்றாலும் பணம் கொடுக்க வாய்ப்புள்ள வேட்பாளர்களை அது மறுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் இக்கட்சியிடமும் இப்போக்கு அதிகரிக்கும். எனவே, இந்த விசயத்தில் தவெக பெரிய கட்சிகளுக்கு மாற்றாக அமைய முடியாது என்பதை அறிந்துகொண்டோம். அதனால்தான் பெரிய கட்சிகளின் பல சிக்கல்களை மையப்படுத்திப் பேசிய அக்கட்சி, பணம் கொடுக்கும் நடைமுறையைப் பெரிய அளவில் விவாதமாக்கவில்லை எனத் தெரிகிறது.

ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் நடைமுறைக்கு மக்கள் மட்டுமல்ல, ஊடகங்களும் அறிவுஜீவிகளும் கூட பழகிவிட்டனர் என்றே தோன்றுகிறது. இந்தத் தேர்தலில் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் பேச்சைக் கட்டமைக்கும் வேகத்தில் இந்தப் பிரச்சினையை முற்றிலும் விவாதத்திலிருந்து விலக்கிவிட்டனர். இதனை நியாயப்படுத்தும் போக்கில் தேர்தலில் தூய்மைவாதம் பேச முடியாது என்று சிலர் பேசிப் பார்த்தனர். இப்படியொரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டால், ஒவ்வொருவரும் தம் தரப்பு பிழையைத் தூய்மைவாதம் என்பதைக் காட்டி நியாயப்படுத்திக்கொள்ள முடியும். எது தூய்மைவாதம் என்பதில் ஒவ்வொருவரும் மாறுபடக்கூடும். பிறகு எதையும் கண்டிக்கக்கூடிய நிலை வராமல் போகும். இந்நடைமுறையால் லாபம் பெறும் கட்சிகள் இவற்றைப் பேசாதது மட்டுமல்ல, அது வெளிப்பட்டுவிட்டால் நியாயப்படுத்துவதற்கான கோட்பாட்டைக் கட்டமைக்கும் அறிவுஜீவிகளையும் கண்டுபிடித்து வைத்திருக்கின்றன.

ஓட்டுக்குப் பணமளிக்கும் நடைமுறையை மக்களைச் சென்றடையும் பொருளியல் என்று விளக்கி நியாயப்படுத்திவிடுகிற அபாயம் இங்கிருக்கிறது. இந்நடைமுறையைப் புரிந்துகொள்வதென்பது வேறு, நியாயப்படுத்துவதென்பது வேறு. மக்களுக்கு அளிக்கப்படும் பணம் மக்களுக்கான திட்டங்களிலிருந்து திரும்ப முறைகேடாக எடுக்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்த எளிய உண்மையாகும். மேலும், பணமில்லாத எளிய மக்களின் தேர்தல் சனநாயகப் பங்கெடுப்பை இப்போக்கு முற்றிலும் மூடிவிடுகிறது. இதனால் இந்திய சனநாயகம் முற்றிலும் பணக்காரர்களால் நிர்வகிக்கப்படுவதாக மாறிவிடுகிறது. மக்கள் வெறும் பார்வையாளர்களாகவும், தருவதைப் பெறும் பாத்திரங்களாகவும் மாறிப்போகின்றனர்.

இந்த நடைமுறையை இடதுசாரிகளும், தலித் கட்சிகளும், இன்ன பிற சிறிய கட்சிகளும் இந்தியா முழுவதும் கடுமையாக எதிர்க்க வேண்டும். ஏனெனில், இந்நடைமுறையால் அதிகமும் பாதிக்கப்படப் போகிறவர்கள் இச்சிறிய கட்சிகள்தாம். ஆனால், வாய்ப்புக் கேடாக இக்கட்சிகள் இவற்றைக் கண்டிக்க முடியாமல் மட்டுமல்ல, அவற்றின் அங்கமாகவே மாறியிருக்கின்றன. இந்த விரிந்த நடைமுறையில் அவர்களும் இவற்றைப் பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அப்படி இல்லாதபட்சத்தில் இந்தக் களத்தில் இடம்பெற முடியாதவர்களாகப் போய்விடுகிறார்கள். எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட ஒரு தொகுதியில் அவர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுத்தார்கள் என்று ஒட்டப்பட்ட சுவரொட்டி இணையத்தில் வலம்வந்ததைப் பலரும் அறிந்திருக்கலாம். இந்தப் பணப் போட்டியில் ஈடுபட முடியாதபோது பணம் செலவழிக்கத் தக்க நபர்களைக் கட்சிக்கு வெளியிலிருந்து அழைத்து வந்து போட்டியிட வைக்கின்றனர். அப்போக்கினால் கட்சியில் பணியாற்றியவர்களுக்கு அங்கீகாரம் தர முடியாத நிலைக்குப் போக வேண்டியிருக்கிறது. எனவே இக்கட்சிகள் இணைந்து இப்பெரும் போக்கிற்கு எதிரான கருத்துருவாக்கத்தைச் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. நம்முடைய கல்வியமைப்பு, ஊடகங்கள்,  பொது சமூகத்தின் பல்வேறு அங்கங்கள் பலவற்றிற்கும் இவற்றில் பங்கிருக்கின்றன. தேர்தல் முறை அறிமுகமான நாளிலிருந்து அவற்றிலிருந்த குறைகள் படிப்படியாக நிவர்த்திச் செய்யப்பட்டுச் செழுமைப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வாக்காளர்களுக்குப் பணமளிக்கும் நடைமுறையில் செழுமை பெறுவதற்கு மாறாக, பின்னோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுவருவது சனநாயகத்திற்கு நல்லதல்ல.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger