நிலை மாறுமா?

தலையங்கம்

தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை எனச் சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்து திருவிழாவுக்குக் காப்பு கட்டிவிட்டார்கள். பிரச்சாரப் பணிகள் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றன. ஊடகங்களும் தங்களுக்கென்று உள்ள ‘கொள்கை கோட்பாட்டின்’படி கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. அதுபோக, நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் இந்தமுறை தேர்தல் திருவிழா களைகட்டுகிறது. வழக்கத்திற்கு மாறாக, புதிய வாக்காளர்கள் பெரும் உற்சாகத்தோடு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தனை களேபரங்களுக்கு இடையில் தலித் பிரதிநிதித்துவமும் அதிகாரப் பகிர்வுக்கான யத்தனங்களும் திரைமறைவுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. மேலும், தலித் / பகுஜன் தலைவர்கள் இதுவரையில்லாத நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருப்பதும் பெரிதாகப் பேசுபொருளாகவில்லை. எத்தனை தொகுதிகள், எந்தெந்தத் தொகுதிகள் என்பதில் தொடர் இழுபறி நடந்துகொண்டே இருந்தது. ஏற்கெனவே கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளை விட புதிதாக இணையும் கட்சிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்ததெல்லாம் ‘கூட்டணி தர்மம்’ என்ற பெயரில் பொறுத்துக்கொள்ளப்பட்டது.

ஆனால், இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நாம் இத்தகைய ‘ஏற்றுக்கொள்ளலை’ சகித்துக்கொண்டிருக்கப் போகிறோம்?

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 14 கட்சிகளும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 12 கட்சிகளும் உள்ளன. திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தவிர்த்து வேறு எந்த தலித் பிரதிநிதித்துவக் கட்சியும் இல்லை. தமிழ்ப் புலிகள் கட்சி, ஆதித்தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை என அருந்ததியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் இக்கட்சிகளுக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய தலித் கட்சிகளும் தேவேந்திர குல வேளாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் இடம்பெற்றுள்ளன. இக்கட்சிகளுக்குத் தலா ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட தலித் / பகுஜன் கட்சிகளில் தமிழ்நாடு முழுவதும் செல்வாக்குள்ளது விசிக மட்டுமே. அதனால்தான் ஒப்பீட்டளவில் அக்கட்சிக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. அக்கட்சித் தலைவரின் அயராத உழைப்புக்கான அங்கீகாரம் இது. எனினும், அவர் அடைந்திருக்க வேண்டிய இடம் இதைவிட பல மடங்கு அதிகம் என்பதைச் சமூக அரசியல் வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும். கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் பாட்டாளி மக்கள் கட்சியும் விசிகவும் தொடங்கப்பட்டன. இன்று, பாமக பெறும் தொகுதி எண்ணிக்கை என்ன? மேலும், விசிக தொடங்கி பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கப்பட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) எத்தனை தொகுதிகள் பெற்றிருக்கிறது?

இத்தனை தோல்விகளுக்குப் பிறகும் பாமகவாலும் தேமுதிகவாலும் பெறும் எண்ணிக்கையை, தன் வெற்றி சதவிகிதத்தை நிலைப்படுத்திக்கொண்ட விசிகவால் பெற முடியாததற்கான காரணம் நாம் அறிந்ததே. மக்கள் நல கூட்டணி அமைந்தபோது கூட, தமிழ்நாட்டில் முதல்முறையாக தலித் முதல்வர் வேட்பாளர் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அங்கும் நுழைந்தது தேமுதிக.

தன் தொடர் செயற்பாடுகளாலும், அறிவாற்றல் மிக்க பேச்சாலும் தொல். திருமாவளவன் பெற்றிருக்கும் செல்வாக்கு சாதாரணமானதல்ல. தலித் கட்சி என்ற நிலையிலிருந்து மைய நீரோட்டத்தில் அனைவருடனும் பயணித்துப் பெரும்பான்மை மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே நன்மதிப்பைப் பெற்ற தலைவராக இருக்கிறார் அவர்.

முந்தைய தேர்தலில், இராசிபுரம் தொகுதியில் பிரச்சாரத்தின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன் கிட்ட ஒரேயொரு கேள்வி கேக்கறேன். ஈஸ்வரன் அவர்களே, நீங்க இங்க ராசிபுரம் வாங்க. வந்து, உங்க கூட்டணில எந்தெந்த தலைவர்கள் இருக்காங்களோ அவங்களோட ஆசிபெற்ற வேட்பாளர்னு உங்களால சொல்ல முடியுமா?” என்று பேசினார். அதாவது, ‘திருமாவளவன் ஆசி பெற்ற வேட்பாளர் என்று உங்களால் கேட்க முடியுமா’ என்று கேட்கிறார். இன்றும் இந்த நிலைமை மாறிவிடவில்லை. திமுக ஆட்சிக் காலத்திலேயே விசிக கொடிக் கம்பங்கள் காவல்துறையினரால் தகர்க்கப்பட்டன. தலித்துகள் மீதான வன்முறைகளின்போது விசிக தலைமையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், கலவரம் ஏதும் நிகழாமல் சமரசம் செய்வதற்காக மட்டுமை அவரைப் பயன்படுத்திக்கொள்கிறது அரசு.

2021 – 2026 திமுக ஆட்சியில் எத்தனையோ வகைகளில் தலித் மக்கள் துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர். மேடையில் வைத்தே சென்னை மேயரை “நீ எஸ்.சி.தானே!” என அமைச்சர் ஒருவர் கேட்கிறார். இதுவே அதிமுக ஆட்சியில் இப்படி நடந்திருந்தால் இன்றைய முற்போக்குவாதிகள் (அன்றைக்கும் முற்பேக்குவாதிகளே) எந்தெந்த வகையில் ‘அரசுக்கு எதிரான’ தம் கண்டனங்களைப் பதிவு செய்திருப்பார்கள் என்பது யூகிக்கக் கூடியதே. வேங்கைவயல் விவகாரம், பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை, நாங்குநேரி சம்பவம், கவின் படுகொலை, பட்டியல் சமூக ஊராட்சி மன்றத் தலைவர்கள் அவமதிப்பு போன்ற சம்பவங்களில் ஏதேனும் ஒன்று அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால்… “எழுந்தது பார் யுகப் புரட்சி” என்று மார்க்ஸியர்கள் எதிர்பார்த்த புரட்சி வெடித்திருக்கும். கெடுவாய்ப்பாக இவை திமுக ஆட்சியில் நடந்துவிட்டன.

இம்முறை, சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அதிமுக கூட்டணியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதை ஆதரித்து நீலம் பண்பாட்டு மைய நிறுவனர் இயக்குநர் பா.இரஞ்சித் பதிவிட்டது சர்ச்சையானது. தேர்தல் அரசியலுக்கான கூட்டணியில் வெற்றி / தோல்வி கணக்கு மட்டுமே முதன்மை பெறும். அதுவுமில்லாமல் திருமதி. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் பாதுகாப்புக் கருதியும் இதைப் புரிந்துகொள்ளலாம். முனைவர் தொல். திருமாவளவனும் அதையே குறிப்பிட்டிருந்தார்.

இன்னொன்றும் கேட்கிறோம், அண்மையில் Galatta Voice தளத்திற்காக பாண்டேவுக்கு அளித்த நேர்காணலில், “தவெக கூட்டணிக்கு நீங்கள் முதலில் சென்றிருந்தால், மற்றவர்களும் வந்திருப்பார்கள்” என்று பாண்டே சொல்கிறார், திருமாவளவன் அதை ஆமோதிக்கிறார். அத்தகைய செல்வாக்கு இருந்தும் பாசிச எதிர்ப்பு – சாதி எதிர்ப்பு என்ற கொள்கைக்காக திமுக கூட்டணியில் தொடர்ந்திருக்கிறார். அதற்குச் சற்றும் மதிப்பளிக்காமல் தேமுதிக கூட்டணிக்காக விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றுக்குக் குறைந்த தொகுதிகளையே ஒதுக்கியிருக்கிறது திமுக. இப்போது சொல்லுங்கள், திமுக பின்பற்றுவது வெற்றி / தோல்வி கணக்கா அல்லது கோட்பாட்டுக் கணக்கா?

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு மாலையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்கிறார். ஆனால், பாபாசாகேப் அம்பேத்கர், பண்டிதர் அயோத்திதாசர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு மாலையிட ஆதிதிராவிட அமைச்சர் உட்பட தன் அமைச்சர்கள் சிலரை அனுப்புகிறார். ஒருவேளை, தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் தன் கட்சியின் வழிகாட்டி, தலைவர் என்று நினைத்து அவர் அப்படிச் செய்திருக்கலாம். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர் என்ற முறையில் அரசு சார்பில் அவருக்கு மரியாதை அளிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமையல்லவா? இது ஜனநாயக நாடு என்றால், இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சி என்றால், அந்தச் சட்டத்தை எழுதியவருக்கு அரசு பொறுப்பை ஏற்றிருப்போர் உரிய மரியாதை வழங்க வேண்டுமல்லவா? இது ஒருபுறமிருக்கட்டும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலையிடவும் முதலமைச்சர் நேரில் செல்கிறாரே! அது என்ன கணக்கு?

இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். தலித் அல்லாத தலைவர்களுக்கு நெடுங்காலமாகத் தொடர்ந்து எல்லாத் தேர்தலிலும் வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால், தலித் தலைவர்களுக்குத் தொடர் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதற்குக் கட்சி பாகுபாடெல்லாம் கிடையாது. ஜக்கையன், நாகை திருவள்ளுவன், இரா.அதியமான், தனபால் போன்றோர் ஒருசோற்றுப் பதம். அதேபோல், பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளரை நிறுத்துவது என்பது அறுபதாண்டுகால திராவிட ஆட்சியில் இன்றும் சாத்தியமாகாதது சமூக நீதியின் அவல நிலையைக் காட்டுகிறது. மற்றக் கட்சிகளை விடுங்கள், விசிக போன்ற தலித் கட்சிகளாலும் அது தொடர்ந்து சாத்தியப்படுவதில்லை. இதை அவர்களின் இயலாமை என்றல்லாமல், அவர்களின் நெருக்கடி என்றே புரிந்துகொள்ள வேண்டும்.

கடைசியாக, சமூகநீதி குறித்துத் தொடர்ந்து பேசிவருகிறோம். இந்தத் தேர்தலையும் அந்தக் கண்ணோட்டத்தில்தான் அணுகுகிறோம். ஆனால், நடைமுறை யதார்த்தத்தில், அரசியல் அதிகாரத்தில் சமூகநீதி எப்போது தழைக்கும்?

ஜெய் பீம்!

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger