வெறுப்பின் வரலாறு: அமெரிக்காவில் தர்பூசணியும் இந்தியாவில் கழுதையும்

G.குருசாமி

ர் இனம் தமக்கு எதிராகப் பரப்பப்பட்ட அனைத்து விதமான அவதூறுகளையும் அசாதரணமாக விலக்கி மேலெழுந்துவந்திருப்பதற்கு மிகச்சரியான உதாரணம் சொல்வதென்றால் கறுப்பர்களையே சொல்ல முடியும். ஹிட்லரின் மரணத்திற்குப் பிறகு மேலெழுந்துவந்த வகையில் யூதர்களைக் கணக்கில் கொண்டாலும், ஐரோப்பாவில் யூதர்களின் பிரச்சினை வேறு, கறுப்பர்களின் பிரச்சினை வேறு. கறுப்பர்களுக்கான விடுதலைப் பாதையை நோக்கி அவர்கள் நகரத் தொடங்கியதும், வெள்ளையர்கள் கறுப்பர்களுக்கு எதிராக மலிவான சிந்தனையோடு தாக்குதலைச் செய்தார்கள். குறிப்பாக, பண்பாட்டுத் தளத்தில் தர்பூசணியை வைத்துக் கறுப்பர்களுக்கு எதிராகப் பொதுப்புத்தியைக் கட்டமைப்பதில் உக்கிரமாகச் செயல்பட்டனர். அதிலிருந்து கறுப்பர்களின் விடுபடல் சாத்தியமாகிய விதம், அதற்கு அவர்கள் கொடுத்த உழைப்பு ஆகியவற்றை உற்றுப் பார்த்தால் இந்தியச் சூழலில் பட்டியல் சாதியினர் மீது சுமத்தப்பட்டுக்கொண்டே இருக்கும் முன்தீர்மானத்தோடான அவதூறுகளிலிருந்து துண்டித்துக்கொள்வதற்கான திறப்புகள் கிடைக்கலாம்.

தர்பூசணியை மையமிட்ட இனவெறி

மாட்டிறைச்சியை வைத்து ஓர் இனத்தின் மீது இழிவைச் சுமத்திவிடலாம் என்று கருதிய இந்திய சாதியவாதிகளைப் போலவே தர்பூசணியை வைத்து ஓர் இனத்தைக் கேலி செய்ய முடியும் என்று அமெரிக்கர்கள் நம்பியிருக்கிறார்கள். சமீபகாலம் வரை அதைச் செய்தும் வந்திருக்கிறார்கள்.

2014இல் ஒபாமா அதிபராக இருந்தபோது அமெரிக்காவின் இரகசியப் பாதுகாப்புச் சேவையின் குறைபாடுகள் விமர்சிக்கப்பட்டன. எதிர்க்கட்சி, நிருவாகத் தோல்வி என்றெல்லாம் குற்றச்சாட்டு வைத்தது. இந்தச் சூழலில் ஒபாமாவைப் பற்றி பாஸ்டன் ஹெரால்டு, ஜெர்ரி ஹோல்பர்ட் ஆகியோர் வரைந்த கார்ட்டூன் சர்ச்சையானது. அந்தக் கார்ட்டூனில் குளியலறையில் ஒபாமா பல் துலக்கிக்கொண்டிருப்பது போலவும், அவருக்குப் பின்னால் உள்ள குளியல் தொட்டியில் குளித்துக்கொண்டிருக்கும் வெள்ளையர் ஒருவர் ஒபாமாவிடம் ‘நீங்கள் புதிய தர்பூசணி சுவையுள்ள பற்பசையை முயற்சித்தீர்களா?’ என்று கேட்பது போலவும் வரையப்பட்டிருந்தது. இந்தப் படத்திற்காகச் சர்வதேச அளவில் கண்டனக் குரல்கள் எழுந்ததும் கார்ட்டூனிஸ்ட் இருவரும் மன்னிப்புக் கேட்டார்கள். ஆதரவாகவும் சில குரல்கள் எழுந்தன. வெள்ளை இனத்தைச் சேர்ந்த அவர்கள், ஒரு வெள்ளை அதிபரைக் குறிவைத்து அவர்களின் முந்தைய வரலாற்றின் மறக்கக்கூடிய ஒரு விஷயத்தைக் காட்டி இழிவு செய்யும் தொனியில் படத்தை வரைந்திருப்பார்களா என்பது சந்தேகமே. இவ்விடத்தில் நமக்கு ஒரு கேள்வி எழும். தர்பூசணியில் அப்படி என்ன இழிவு இருக்கிறது?

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அடிமைநிலையிலிருந்து விடுவிக்கப்பட்ட கறுப்பர்கள் பழ வணிகம் செய்தார்கள். குறிப்பாக, தர்பூசணியை விளைவித்து விற்றார்கள். அதன் காரணமாக அமெரிக்காவில் வெள்ளையர்களிடம் தர்பூசணி என்றாலே ஓர் ஒவ்வாமை இருந்தது. கறுப்பர்களுக்கு எதிரான இந்தப் பொதுப்புத்தி இருபத்தோராம் நூற்றாண்டு வரை நீடித்தது.

2022 மே மாதம் புளோரிடாவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இன அவதூறு செய்யும் நோக்கில் கடிதங்களைத் தூக்கிப் பிடித்தபடி நிற்கும் மனிதர்களின் நிழற்படம் ஒன்றைச் சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். அந்தப் படத்தில் ஒருவர் தர்பூசணி வடிவில் இருந்த கடிதத்தைத் தாங்கிப் பிடித்திருத்தார். 2014இல் எழுத்தாளர் ஜாக்குலின் உட்சன் Brown Girl Dreaming என்ற நூலுக்காக விருது பெற்றார். அதில் கலந்துகொண்ட எழுத்தாளர் டேனியல், “டோனி மோரிசன், கார்னல் வெஸ்ட், ஒபாமா முதலிய பிரபலங்கள் இருக்கும்வரை தர்பூசணி பற்றி எழுதுவேன்” என்றார். பின்னொரு தருணத்தில் டேனியலுக்குப் பதிலளித்த உட்சன், “அவரது (டெனியல்) வரலாறு அறியாமையின் இடத்திலிருந்து வந்தது” என்றார்.

தர்பூசணி பழமையான பழம் என்றாலும் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் அமெரிக்காவிற்கு வந்தது. ஐரோப்பியர்கள் வழியாகவும் அடிமைகள் விற்பனை வழியாகவும் அமெரிக்காவிற்கு வந்திருக்க வேண்டும் என்கிறார்கள் வரலாற்றாளர்கள். தர்பூசணி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் எல்லோருக்குமான உணவாகத்தான் இருந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில்தான் இனவெறியுடன் தொடர்புபடுத்தப்பட்டு, இழிவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. தர்பூசணி உண்பவர்கள் வெள்ளையர்களாகவே இருந்தாலும் இழிவாகப் பார்க்கப்பட்டது. இந்தக் காலத்தில்தான் தர்பூசணி குறித்த எதிர்மறைக் கருத்துகள் வெள்ளையர்களால் முழுவீச்சோடு பரப்பப்பட்டன. ‘அடிமையாக இருந்தவர்கள் தங்கள் எஜமானர்களுடன் சொற்ப அளவில் பயிரிடுவதற்கான ஒப்பந்தங்களைச் செய்துகொள்வது வழக்கமாயிருந்தது. அதன்படி தாங்கள் பணிபுரியும் எஜமான் தோட்டத்தின் ஒரு பகுதியிலேயே பயிரிட்டுக்கொள்வார்கள். அந்தக் காலநிலைக்கு ஏற்றதாகவும் குறைவான உடல் உழைப்பைக் கோருவதாகவும் இருந்ததால் அவர்கள் தர்பூசணியைத்தான் விரும்பி பயிர் செய்தார்கள்’ என்கிறார் வில்லியம் ஆர் பிளாக். அது அவர்களின் விடுதலை உணர்வைப் பிரதிபலிப்பதாக இருந்தது. அவர்கள் விளைவித்த பழங்களை அவர்களே  சந்தையில் விற்றது அவர்களைத் தொழில் முனைவோரைப் போல உணர வைத்தது.

கறுப்பர்களின் இந்தச் செயல் பழமைவாத வெள்ளை எஜமானர்களுக்கு ஆத்திரமூட்டியது. கறுப்பர்கள் தங்களது உழைப்பைத் தாங்களே பொருளாதாரமாக மாற்றுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போக்கு வெள்ளையர்களை அவமானப்படுத்துவதாக இருந்தது எனச் சொல்லும் மெக்கலெஸ்டரின் கூற்று, கறுப்பர்களின் விடுதலை, பொருளாதாரம் நோக்கிய நகர்வு வெள்ளையர்களிடம் எந்த அளவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது என்பதைப் புலப்படுத்தும். கறுப்பர்கள் மேலும் மேலும் இழிவுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டபோதும் அவர்களின் விடாமுயற்சியும் தைரியமும் வெள்ளையர்களைத் தூங்கவிடவில்லை. அதன் விளைவு கறுப்பர்களுக்கு எதிராக, அவர்களின் வணிக முயற்சிகளை வீழ்த்தும் விதமாகத் தர்பூசணியை மையமிட்ட இழிவும் வெறுப்பும் வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டுப் பரப்பப்பட்டன. ஜிம் க்ரோ (இனவெறியை ஆதரிக்கும்) சட்டங்கள் உருவாக்கப் பட்டன. பின்னாளில் ஜிம் க்ரோ அருங்காட்சியகத்தில் தர்பூசணியை மையப்படுத்தி கறுப்பர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட அவதூறுகளைச் சொல்லும் அடையாளங்கள், ஆவணங்கள் முதலியன காட்சிப் படுத்தப்பட்டன. இதனாலேயே ‘ஜிம் க்ரோ’ என்னும் சொல்லைக் கறுப்பர்கள் அவமானமாகக் கருதினார்கள்.

கறுப்பர்கள் சிறுவணிகத்தில் தம்மை நிலைநிறுத்திக்கொண்ட காலத்தில், கறுப்பர்கள் தர்பூசணியைத் திருடுவது, தர்பூசணிக்காகச் சண்டையிடுவது, தெருவில் கும்பலாக அமர்ந்து தர்பூசணியைச் சாப்பிடுவது போன்ற கார்ட்டூன்கள் அவர்களை இழிவு செய்வதற்காகவே வரையப்பட்டன. கறுப்பர்களை வணிகத்திலிருந்து அப்புறப்படுத்துவதுதான் அவர்கள் அதிகாரத்தை நோக்கி வருவதைத் தடுக்கும் ஒரே வழி என்று வெள்ளையர்கள் நம்பினார்கள். அதனால் ஒவ்வொரு கட்டத்திலும் கறுப்பர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் வேகம் காட்டினர். அறியாமை, அசுத்தம், சோம்பல் ஆகியவற்றோடு தர்பூசணியை இணைத்துப் பேசுவது சமூகம், அரசியல், வணிகம் ஆகியவற்றில் கறுப்பர்களின் பங்களிப்பைத் தடுப்பதுடன் அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் என்று நம்பப்பட்டது. 1869ஆம் ஆண்டில் ஃபிராங்க் லெஸ்லியின் இல்லஸ்ட்ரேட் செய்தித்தாள்தான் கறுப்பர்கள் தர்பூசணி சாப்பிடுவது குறித்த முதல் கார்ட்டுனை வெளியிட்டது. ஹோவர்ட் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் புலத்தின் பேராசிரியர் மெக்கலேஸ்டர் (Dr.Jo Von McCalester) கறுப்பர்களின் சமூக, பொருளாதார, அரசியல் மட்டங்களில் தர்பூசணி என்ன மாதிரியான தாக்கத்தைச் செலுத்திவந்திருக்கிறது என்பதை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எழுதியும் பேசியும் வந்தார்.

கறுப்பர்களின் விடுதலைக்குப் பிறகு, அவர்கள் தர்பூசணி சாப்பிடுமாறு வெள்ளையர்களால் தூண்டப் பட்டனர் என்பதான ஒரு கருத்தை தாமஸ் டிக்சனின் The Clansman நாவலைக் கொண்டு 1915ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு தேசத்தின் பிறப்பு’ (The Birth of a Nation) திரைப்படம் முன்வைத்தது. 1941இல் வெளியான Scrub Me Mama with a Boogie Beat திரைப்படம் கறுப்பர்களைச் சோம்பேறிகளாகவும் உழைக்காமல் தர்பூசணியை அதிகமாக உண்ணக் கூடியவர்களாகவும் சித்திரித்தது. இந்தப் பின்னணியில் ஒபாமாவின் பற்பசை குறித்த கார்ட்டூனைப் பார்த்தால் அமெரிக்க வெள்ளையர்களின் மனம் எந்த அளவுக்கு அழுக்குப் படிந்திருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

விடுதலையடைந்த மக்கள் வணிகத்தில் நுழைந்தார்கள், தர்பூசணி விற்றார்கள் என்பதைக் கூட சகித்துக்கொள்ள முடியாத வெள்ளை அமெரிக்கர்கள் நடந்துகொண்ட பிற்போக்குத்தனத்தின் அளவீடுகள்தாம் மேலே விவரித்தவை. விடுதலையால் மாறியவர்களை வேறொரு வடிவம் கொண்டு ஒடுக்குவோம் என்பதைத் தான் வெள்ளை அமெரிக்கர்களின் நடவடிக்கை காட்டுகிறது. அதனால்தான் அமெரிக்க அதிபர் கறுப்பர் என்பதற்காகப் பொதுவெளியில் சாதாரண கார்ட்டூனிஸ்டுகளால் கேலி செய்யப்படுகிறார். ஆனால், அதையும் தாண்டிக் கறுப்பர்கள் உழைப்பு, விளையாட்டு, கல்வி ஆகியவற்றின் துணைகொண்டு அமெரிக்காவின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கிறார்கள்.

Courtesy: Francois Ringuette

கழுதையில் சாதிய மனம்

நகைச்சுவை என்பது நகைப்பதற்காக என்று மட்டும் சொல்லி கடந்துவிடுவது சரியில்லைதான். ஆனால், இந்தியாவில் அப்படியான போக்கு நீண்டநாளாக இருந்து வருகிறது. இந்திய சினிமாக்களிலும் கூட நகைச்சுவை என்பது தனிமனித அல்லது குழு தாக்குதலாகவேதான் இருக்கிறது. ஒருவரைத் தாக்கி அதன்வழி நகைப்பை ஏற்படுத்துவது என்பது மோசமான அணுகுமுறையாகும். இது ஆண்டான் அடிமை மனநிலையின் எச்சம்.

நகைச்சுவையை நகைச்சுவையாகப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறவர்கள் கூட தம்மை அறியாமலேயே அதிகாரத்தின் கோரத்திற்கு ஆதரவளிக்கிறவர்களாகவே இருக்கிறார்கள். நகைச்சுவையைப் போல மென்மையாக, தாக்குகிறவரும் தாக்கப்படுகிறவரும் மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் ஓர் ஆயுதம் வேறெதுவும் இருக்க முடியாது.

2019இல் உண்ணாமதி சியாம சுந்தர் தொகுத்து வெளிவந்திருக்கும் ‘நகைக்கத்தக்கதல்ல அம்பேத்கர் கேலிச்சித்திரங்கள் (1932 – 1956)’ என்னும் நூலை 2022இல் சா.தேவதாஸ் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். உண்ணாமதி சியாம சுந்தர் ஆந்திராவின் விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர். வரைவதில் ஆர்வம் கொண்டவர். ஜே.என்.யூ.வில் மாணவராக இருந்தபோது அரசியல் சார்ந்து வரைய ஆரம்பித்தவர். இவரது கார்ட்டூன்கள் இந்தியாவில் கவனிக்கப்படவில்லை. சுவிட்ஸர்லாந்து முதலிய வெளிநாடுகளில் பிரபலமாகியிருக்கின்றன. ‘உண்மையைப் பேசும் எந்தக் கலை வடிவங்களுக்கும் சொந்த நாட்டில் இடமில்லை’ என்னும் கூற்றை ஆதரிக்கும் மனநிலை கொண்டவராகவே சியாம சுந்தர் இருந்திருக்கிறார். அவரது எம்ஃபில், டாக்டர் பட்ட ஆராய்ச்சிகளும் கேலிச் சித்திரங்கள் குறித்தவைதாம். அந்த ஆய்வுக்கான தேடலின் ஒரு பகுதியாக, இந்தியப் பிராமணிய, சாதி இந்துவிற்கான ஆதரவுப் போக்குடைய ஊடகங்களால் அம்பேத்கர் கேலி செய்யப்பட்டிருப்பதைப் பதிவுசெய்யும் நோக்கில் அந்நூலை எழுதியிருக்கிறார்.

புனா உடன்படிக்கை ஏற்பட்ட 1932ஆம் ஆண்டு முதல் அம்பேத்கர் மரணித்த 1956 வரை சங்கர்ஸ் வீக்லி, இந்துஸ்தான் டைம்ஸ், பயோனீர், தீ லீடர், நேசனல் ஹெரால்டு, ஃபிலீம் இந்தியா, டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைகளில் வெளியான 122 கேலிச் சித்திரங்கள் இதில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சங்கர், ஆர்.கே.லட்சுமணன், என்வர் அகமது, வாசு, ஈரன், பிரேஷ்வர், உம்மன், ஆர்.பானர்ஜி ஆகியோரின் கேலிச்சித்திரங்கள் அவை.

கேசவ சங்கர் பிள்ளை எனப்படும் சங்கர் தீவிரமான சாதி இந்து மனநிலைக்காரர். ‘இந்தியக் கார்ட்டூன் தந்தை’ என்று சிறப்பிக்கப்படுகிறவர். சங்கர்ஸ் வீக்லி நிறுவனர். குழந்தைகளை விரும்பும் தலைவராக, குழந்தைகளால் விரும்பப்படும் தலைவராக நேருவைக் கட்டமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்துஸ்தான் டைம்ஸில் கார்ட்டூனிஸ்டாக இருந்தபோது அம்பேத்கர் தலைமையிலான அரசியல் சாசன வரைவுக்குழு மெதுவாகச் செயல்படுகிறது என்பதைச் சித்திரிப்பதாக நத்தையில் அம்பேத்கர் செல்வது போலவும் நேரு சாட்டை கொண்டு அடிப்பது போலவும் வரைந்தார். அது NCERT பாடநூலில் இடம்பெற்று சர்ச்சையானது.

ஆர்.கே.லட்சுமணன், டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பணியாற்றியவர். ஆர்.கே.நாராயணின் சகோதரர். ஆர்.கே.நா.வின் ‘மால்குடி நாட்க’ளுக்கான ஓவியங்களை வரைந்தவர். இந்தி எதிர்ப்பாளர்களைக் கேலியாகச் சித்திரிப்பதை விருப்பமாகக் கொண்டிருந்தவர். 1949இல் Free Pressஇல் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவும் இவரும் கார்ட்டூனிஸ்டாகப் பணியாற்றியவர்கள்.

என்வர் அகமது தீவிரமான சர்ச்சைக்காரர். காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தபோதும் காங்கிரஸாரிடையே வெறுப்பைச் சம்பாதித்து வைத்திருந்தவர். இவரது கேலிச்சித்திரம் இந்து – முஸ்லிம் மோதலுக்குக் காரணமாக இருந்தது. அதனால் முஸ்லிம்களாலும் வெறுக்கப்பட்டவர். முஸ்லிம் அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தலுக்கு ஆளானவர். ஒருகட்டத்தில், “இந்தியாவில் இருந்து என்வர் அகமது வெளியேற வேண்டும்” என்று காந்தி சொல்லுகிற அளவுக்கு வெறுப்பரசியலில் இயங்கியவர். இவர் அம்பேத்கர் குறித்து வரைந்த கேலிச் சித்திரங்களும் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. வாசு உள்ளிட்ட பிறரின் சித்திரங்கள் கொஞ்சம் இடம்பெற்றிருக்கின்றன. சங்கர், ஆர்.கே.லட்சுமணன், என்வர் அகமது வரைதலில் இருந்த தீவிரம் வாசு, ஈரன், பிரேஷ்வர், உம்மன், ஆர்.பானர்ஜி ஆகியோரின் வரைதலில் இல்லை. ஆனாலும் அவர்கள் கவனிக்கப்பட வேண்டிய வரைதலைச் செய்திருக்கிறார்கள்.

1930களில் அம்பேத்கர் – காந்தி முரண் (1932), வைசிராய் தலைமையில் அமைக்கப்பட்ட செயற்குழுவில் தொழிலாளர்கள் சார்பான உறுப்பினராக அம்பேத்கர் இருந்தபோது அவரது செயல்பாடுகள் (1942 – 1943), இந்தியா விடுதலை பெற தயாராகிக்கொண்டிருந்தபோது அதில் பட்டியல் சாதியினருக்கு அம்பேத்கர் பிரதிநிதித்துவம் கோரியது (1943 – 1946), அரசமைப்புச் சாசன வரைவு (1947 – 1948), இந்து சட்ட மசோதாவை ஒட்டி உருவான சூழல் (1950 – 1951), அம்பேத்கரைச் சந்தர்ப்பவாதியாகக் காங்கிரஸார் கருதியமை (1951 – 1956) என்னும் வகைமைகளில் இந்நூலில் கேலிச் சித்திரிங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இதே காலத்தில் காந்தி, நேரு குறித்த கேலிச் சித்திரங்களையும் மேற்கூறிய பத்திரிகைகளே வெளியிட்டிருக்கின்றன. அவற்றில் அம்பேத்கர் மீது காட்டப்பட்ட வன்மம் இல்லை. அவர்களது இலக்கு அரசியலிலிருந்து அம்பேத்கரைக் காலி செய்வதாகவே இருந்தது. அம்பேத்கர் மீது அவதூறுகள் செய்யப்பட்ட காலத்தில் அவர் மூக்நாயக், பகிஸ்கிரித் பாரத், ஜனதா, பிரபுத்த பாரத் முதலிய பத்திரிகைகளை நடத்தியிருக்கிறார். அதில் யாரையும் குறிப்பிட்டோ, பொதுவான அரசியல் பார்வையிலோ ஒரு கேலிச்சித்திரம் கூட வெளியிட்டதாகத் தெரியவில்லை. கேலிச்சித்திரம் குறித்து அம்பேத்கர் என்ன மாதிரியான எண்ணத்தில் இருந்தார் என்பது அறியப்பட வேண்டும்.

1901 முதல் 1920 வரையிலான காலத்தை இந்திய அரசியலில் முக்கியமானது எனலாம். அந்தக் காலங்களில்தான் காந்தி இந்தியாவுக்குத் திரும்பியிருந்தார். அம்பேத்கர் பொது வாழ்க்கைக்குள் நுழைந்தார். இந்தியாவைப் பிளவுபடுத்தும் வேலைகள் நடந்தன. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, நால்வருணம் பற்றிய சிந்தனைக்கு நகர்ந்திருந்தது. அதுவரை சாதி குறித்துப் பெரிதும் கவலை கொள்ளாமல் இருந்த மக்கள், சாதி குறித்த யோசனைக்குள் அரசாங்க ரீதியாகத் தள்ளப்பட்டிருந்தார்கள். விடுதலைக்குப் பிறகு இந்தியா எப்படி இருக்கும் என்பதை மதிநுட்பம் கொண்ட தலைவர்கள் சரியாக அனுமானித்ததும் இந்தக் காலத்தில்தான். இப்படிப் பல வகைகளிலும் முக்கியமாக இருந்த காலத்தில் மேற்கொண்ட அரசியல் முன்னெடுப்புகள்தான் காந்தியையும் அம்பேத்கரையும் புனா ஒப்பந்தத்தில் கொண்டுவந்து நிறுத்தியது. இதில் இருவருக்குமிடையில் உருவான முரண் அம்பேத்கரைப் பட்டியல் சாதிகளின் செல்வாக்குள்ள தலைவராக மாற்றியிருந்தது. இதைப் பொறுக்க மாட்டாத ஊடகங்கள் அம்பேத்கரைக் குள்ளராக, கழுதையில் பவனி வருகிறவராக, பெண்ணாக, பூணூல் தரித்தவராகச் சித்திரித்திருக்கின்றன.

இந்திய இலக்கியங்களில் குள்ளம் குறித்த சித்திரிப்புகள் ஏராளமாக உள்ளன. உயரமானது என்பது உண்மை, நேர்மை, வலிமை, புனிதம், கடவுள் என்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது. சான்றாக நெடியோன், குன்றவன், உயர்ந்தோர் என்கிற பதங்களைக் கூறலாம். இதற்கு எதிராக ‘குள்ளம்’ திருடராக, ஏமாற்றுக்காரராக, பொய்யராக, பெண் பித்தராகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. குள்ளர்களின் காதல் கூட நகைச்சுவைக்கு உரியதாகச் சொல்லப்பட்டிருக்கும் இலக்கியங்கள் தமிழிலும் உண்டு. சமகால சினிமாக்களிலும் பார்க்கலாம். ‘குள்ளநரி’ என்ற சொற்பதம் கூட அப்படிப்பட்டதுதான். நீண்ட காலமாகக் குள்ளர் குறித்து இருந்துவரும் கருத்தியலை அம்பேத்கர் மீது ஏற்றி உரைப்பதற்குச் சாதி ஒவ்வாமை தவிர வேறெதுவும் காரணமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

யூதக் கலாச்சாரத்தில் கழுதைப் பவனி மரியாதைக்கு உரியது. அரசர்கள், பிரபுகள், மதகுருமார்கள் மட்டுமே கழுதையில் பவனி செல்ல முடியும். மற்றவர்கள் கழுதையைப் பவனிக்காகப் பயன்படுத்துவது குற்றம். அதனால்தான் இயேசு மக்களின் ஆதரவோடு ஜெருசலத்திற்குள் கழுதைப் பவனி சென்றது அரசருக்கும் மதக்குருமார்களுக்கும் எரிச்சலூட்டியது. இந்தியாவில் கழுதைப் பவனி என்பது இழிவுக்கும் ஆற்றாமைக்குமான குறியீடு. அழுக்கோடு தொடர்புபடுத்தப்படும் விலங்கு. சுமை எடுத்துச் செல்வதற்காக அதை வளர்க்கிறார்கள். வேறு பிரயோசமான வகிபாகம் கழுதைக்கு இல்லை. அம்பேத்கர் கழுதை மீது உட்கார்ந்து வருவது போன்று இந்துஸ்தான் டைம்ஸில் 1932 செப்டம்பர் 4இல் வரைந்திருக்கிறார் சங்கர். இது அம்பேத்கரைச் சமூகத்தின் சுமையாகக் கருதும் அப்பட்டமான வலதுசாரி மனம்.

இந்து சட்ட மசோதா குறித்த அம்பேத்கரின் முன்னெடுப்புகள் பெண் உரிமை வெறுப்பாளர்களைக் கோபப்பட வைத்திருந்தது. இதற்காக இந்துக்களோடு இஸ்லாமியர்களும் இணைந்துகொண்டு இந்தியப் பழம்பெருமையைச் சீர்குலைக்கும் சக்தியாக அவரைப் பார்த்தார்கள். இதன் விளைவு அக்டோபர் 1இல் வெளியான நேஷனல் ஹெரால்டில் பிரேஷ்வர் அம்பேத்கரைச் சேலை கட்டிய பெண்ணாக வரைந்தார். இது சான்றுக்காக மட்டுமே. நூல் முழுமையும் வாசித்து முடிக்கும்போது பார்ப்பனியத்தின் சாதிய மனத்தைக் கூடுதலாக அறியமுடியும். அம்பேத்கர் தம் வாழ்நாள் முழுமையும் பார்ப்பனியத்தை எதிர்த்தமைக்கான காரணத்தையும் கார்ட்டூன் வழியாக அறிய முடியும்.

தம்மை உயர்ந்தவர்களாகக் கருதிக்கொண்டு அதிகாரத்தில் இருக்கிறவர்கள் அந்த நிலையைத் தக்கவைப்பதற்குத் தமக்குக் கீழே தாழ்ந்தவர்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் தொலைநோக்கோடு திட்டமிடுகிறார்கள். அதற்குத் தடையாக இருப்பவர்கள் மீது இழிவுகளைச் சுமத்தி அவதூறு செய்கிறார்கள், வெறுப்பை விதைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் செய்யும் மாபாதகமும் புனிதமானவைதான். தர்பூசணியும் கழுதையும் அதைத்தான் நமக்குக் காட்டுகின்றன.

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!