பல்கலைக்கழக ஆய்வாளர்களின் நிலை

மு.கார்த்திக்

புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலிடும் ஆராய்ச்சிகளே மனித சமூகம் பொருளாதாரத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் மேம்படுவதற்கு அடிப்படையாக அமைகின்றன. நிலவின் வட துருவத்தை ஆய்வுசெய்ததன் மூலம் ஆய்வுலக அரங்கில் முன்னுதாரணமாக விளங்குகிறது இந்தியா. இதுபோன்று அனைத்துத் துறைகளிலும் திறன்மிக்கப் பல ஆய்வாளர்களைக் கொண்டுள்ளது நம்நாடு. இவர்களைத் தனியார் நிறுவனங்கள் அடையாளம் கண்டு தங்களுடைய திட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொள்கின்றன. ஆனால், அரசு அதுபோல பயன்படுத்துவதில்லை. அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய அரசு சார்ந்த ஆய்வு அமைப்புகள் புராணங்களையும் இதிகாச கதைகளின் மூலங்களையும் தேடுவதில் தம் சக்தியை வீணடித்துக்கொண்டிருக்கின்றன.

ஒரு சமூகம் முன்னேற்றமடைய, அறிவியல் ரீதியான முறைகளில் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ ஆய்வுத்துறையின் பங்களிப்பு அவசியமாகும். ஆய்வுத்துறை வலுப்பெற ஆராய்ச்சியாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். கிராமப்புறப் பள்ளிகளில் படித்து மாநிலப் பல்கலைக் கழகங்களில் பட்டங்கள் பெற்றவர்கள் தமிழ்நாடு அளவில் மட்டுமின்றி உலக அளவில் தலைசிறந்த விஞ்ஞானிகளாகவும் கல்வியாளர்களாகவும் வலம் வருகின்றனர். அறிவார்ந்த சமூகமானது சாதிய ஏற்றத்தாழ்வுகளால் அந்நிலையை இழந்து, மீண்டும் அதே நிலைக்கு உயர முதல் தலைமுறையாகக் கல்விக் கற்றுவருகிறது. உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் நிர்வாகிகளாக, விஞ்ஞானிகளாக முக்கியப் பதவி வகித்துவருகின்றனர். இதுபோன்று தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் உயர்கல்வியில் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக வழிகாட்டுகின்றன.

இந்தியாவிலிருந்து பல ஆய்வாளர்கள் ஆய்வுக்காகப் பல்வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர். பன்னாட்டு ஆய்வு நிறுவனங்கள் அவர்களை வரவேற்று, துறைசார் ஆய்வுகளை ஊக்குவிக்க நிதியுதவி அளித்து, ஆய்வுகளை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்கின்றன. இந்திய ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளை இந்தியாவிலிருந்து மேற்கொள்ள சாதகமான சூழல் இல்லை. உலகின் பிற நாடுகளைப் போன்று இந்தியா ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அரசின் பங்களிப்புச் சரியாக அமைந்தால் இந்தியாவிலேயே மிகச் சிறந்த பல ஆய்வுகள் நடந்தேறும். இந்தியாவில் இஸ்ரோ போன்ற ஆய்வு நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தாலும் முறையான ஊதியம் வழங்காமல் உழைப்பை மட்டும் சுரண்டிய நிகழ்வுகளைப் பல செய்திகள் வழி அறிய முடிகிறது.

 இந்தியாவில் திரைப்படத்துறையில் முதலீடு செய்கிற தொகையில் சிறிதளவு கூட ஆய்வுத் துறைகளில் செலவிடப்படுவதில்லை. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களிலும் ஆய்வுக்காக முதலீடு செய்வதில் பெரிய அளவிலான சுணக்கம் உள்ளது. தமிழகத்தில் தற்போது உள்ள பல மாநிலப் பல்கலைக் கழகங்கள், குறிப்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தென்மாவட்டங்களில் உள்ள ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் குறைவான கட்டணம் செலுத்தி உயர்கல்விப் பயில வேண்டும் என்ற நோக்கோடு துவங்கப்பட்டது. ஆனால், தற்போது முற்றிலும் திசை மாறிச் செல்கிறது. முனைவர் பட்டத்திற்கான கல்விக் கட்டண அறிக்கை பதைபதைக்க வைக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் அபிஷேகப் பட்டியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள 102 கல்லூரிகளை உறுப்புக் கல்லூரிகளாகக் கொண்டு மொழி, கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் போன்ற 24 துறைகளைக் கொண்டு இயங்கிவரும் பல்கலைக்கழகமாகும்.

பல மாநிலங்களிலிருந்து ஒரு இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகவும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பகுதி மற்றும் தொலைதூரக் கல்வி முறையிலும் பயின்று வருகின்றனர். பல்கலைக்கழகத்தின் சேர்க்கைப் பதிவுகளில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் எண்ணிக்கையை ஆண்டுவாரியாகக் கணக்கிடுகையில், 2013 – 2022 வரையில் 602 பேர் வெவ்வேறு துறைகளில் முனைவர் பட்ட ஆய்வாளர்களாக அனுமதிக்கப் பட்டுள்ளனர். 2013 – 2019 வரையில் 4,395 பேரும், கொரோனா நெருக்கடி காலத்தில் (2020 – 2022) 2,027 பேரும் பதிவு செய்துள்ளனர். மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு பேர் கொரோனா காலத்தில் பதிவு செய்துள்ளனர். இதற்கு முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு பெரிதளவில் இல்லாததுவும் ஒரு காரணமாகும்.

ஆய்வு மாணவர்கள் தங்களுடைய முனைவர் பட்ட சேர்க்கை முதல் ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் வரையில் செலுத்த வேண்டிய கட்டண விதிமுறையானது, கட்டணக் கொள்ளையாகவே கருத வேண்டியுள்ளது. அதன் விவரம்: 2013 – 2017இல் ஆய்வு பதிவுக் கட்டணம் ஆண்டிற்கு 3,500 எனவும், 2018 – 2019இல் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு 15,300 எனவும், 2020 – 2022இல் 25,000 எனவும் அதிகரித்துள்ளது. இந்தத் தொகையைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆய்வு நிறுவனம் / கல்லூரி ஆய்வு மையங்களுக்கு ரூ. 0 < 3300 < 9000 என செலுத்த வேண்டும் (படம். 1). இத்தொகையானது, மாணவரொருவர் தன்னைப் பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்வதற்கு மட்டுமே பெறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆராய்ச்சி ஆலோசனைக் குழு (Research Advisory committee) நடத்துவதற்கு ரூபாய் 5,000 செலுத்த வேண்டும். இவ்வளவு பணத்தைக் கட்டணமாக வசூல் செய்கிற பல்கலைக்கழகம், ஆய்வு மாணவர்களுக்குத் தேவையான முன்னோட்டக் கருத்தரங்குகள், தரமான ஆய்வுக்கூடங்கள் அமைத்துத் தருதல் போன்றவற்றைச் செய்வதில்லை. ஆய்வு மாணவர்கள் செலுத்துகிற தொகையில்தான் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம் இயங்குகிறதா என்ற கேள்வி எழுகிறது. இதைத்தவிர அபராதம் என வசூல் செய்வதில் முனைப்போடு இயங்குகிறது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

நுழைவுத் தேர்விற்கு ரூ. 2000; நான்குமுறை ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்கு, ஆராய்ச்சி ஆலோசனைக் குழுவை நடத்துவதற்கு ரூபாய் 5000 என முறையே ரூ. 20,000; ஆய்வுக்கான தலைப்புகளில் திருத்தம் செய்யவோ, சமர்ப்பிக்கும்போது மாற்ற வேண்டிய தேவை இருந்தாலோ ரூபாய் 5000; தேர்வுகளில் கட்டாயத் தேர்ச்சி பெற வேண்டிய தேவை ஐந்து பாடங்களை எழுதுவதற்கு விண்ணப்பக் கட்டணமாகப் பாடத்திற்கு ஆயிரம் என ரூ.5000 என வசூலிக்கப் படுகிறது. ஆய்வுப் படிப்புகளை வணிக நோக்கமாக, வருமானமாக மட்டுமே பார்க்கின்ற போக்கினை ஒரு பல்கலைக்கழகம் மேற்கொள்வது ஏற்புடையதல்ல.

ஆய்வுப் பதிவினைப் புதுப்பிக்கச் சிறப்புத் தொகையாக ரூபாய் 5,000 கட்டணம் செலுத்தி ஆய்வு காலத்தை நீட்டிக்கலாம் என அறிக்கை எண்: Ref.MSU/RES/Ph.D. Fee Revision/R2/2023 dated 16.03.2023 குறிப்பிடுகிறது. ஆனால், பல்கலைக்கழகம் 10 மடங்கு அதிகமாக ரூபாய் 50,000 செலுத்தினால் மட்டுமே நீட்டிக்க முடியும் என்று ஆய்வாளர்களை நிர்பந்திக்கிறது. ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டிய அழுத்தத்தில் ஆய்வு மாணவர்கள் கடன் வாங்கிச் செலுத்துகின்றனர். இதற்குப் பல்கலைக்கழகம் எந்த இரசீதும் வழங்குவதில்லை. இதை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பெரும் ஊழல் என்றே சொல்ல வேண்டும். இந்நிகழ்வு மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 மேலும், கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் ஆய்வு மாணவர்கள் தங்கள் ஆய்வைத் தொடர இயலாமல் இழப்புகளைச் சந்தித்ததோடு, பல்கலைக் கழகம் அந்த ஆண்டுக்கும் சேர்த்துக் கட்டணம் செலுத்த அறிக்கை வெளியிட்டது. எந்தவோர் ஆய்வும் நடைபெறாத, பேரிடர் சூழலில் கால தாமதத்தோடு செலுத்துவோரிடமிருந்து அபராதத் தொகையும் வசூலிக்கப்பட்டது. எந்த வருமானமும் இல்லாத ஆய்வு மாணவர்களுக்குக் கூடுதல் சுமையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துவது மனிதநேயமற்றச் செயலாகும். இத்தகைய கட்டண உயர்வால் ஆய்வைத் தொடர இயலாமல் பலர் இடைநிறுத்தம் செய்து பன்னாட்டு நிறுவன வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். அடித்தட்டு மற்றும் விளிம்புநிலைக் கிராமப்புற ஏழை மாணவர்கள் முதல் தலைமுறையாக உயர்கல்வியை நுகர்கின்றனர். அவர்களைப் பொருளாதார ரீதியாக நசுக்குவதும், அரசு தலையிடாமல் வேடிக்கை பார்ப்பதும், மக்கள் பிரதிநிதிகள் பேச மறுப்பதும் எதிர்கால தலைமுறைக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகவே அமையும்.

கொரோனா தாக்கத்தினால் கல்வி நிலையங்களில் பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள் ஆய்வு மாணவர்கள்தாம். அறிவியல் துறைகளைச் சார்ந்த மாணவர்கள் தங்களுடைய ஆய்வு மாதிரிகளைப் பரிசோதனை செய்வதற்குப் பல்வேறு ஆய்வு மையங்களுக்கு அனுப்பியிருந்த சூழலில், பரிசோதனை முழுமைப் பெறாமலும், அதன் மீது அடுத்தகட்ட ஆய்வு நிகழ்த்த முடியாமலும் இக்கட்டான சூழ்நிலை உருவாகி பெரும் மன அழுத்தங்களைச் சந்தித்தனர். முதற்கட்டமாகக் கண்டறிந்த ஆய்வு மாதிரியை மறுபடியும் மீட்டெடுப்பது குதிரை கொம்பாகிவிட்டது. ஆய்வு நிறுவனங்கள் இயங்காத காரணத்தினால் அனைத்துப் பரிசோதனை இயந்திரங்களும் பராமரிப்பின்றி அதன் செயல்பாட்டில் சிக்கல் உருவாகியது. கொரோனா கட்டுப்பாடு தளர்ந்த பிறகு ஆய்வு நிறுவனங்கள் சந்தித்த சிக்கல்களில் இவை முக்கியமானவை.

ஆய்வு படிப்புகளுக்குக் கட்டணம் பெறுவதோடு தங்கள் பங்களிப்பு முடிந்ததாகப் பல்கலைக்கழகமும் கல்லூரிகளும் கருதும் நிலைதான் நிலவுகிறது. எடுத்துக் காட்டாக, ஆய்வுப் படிப்பிற்காக ஆண்டுதோறும் பல்கலைக்கழகத்திற்கு ரூபாய் பதினாறாயிரமும், கல்லூரிக்கு ஒன்பதாயிரமும் செலுத்துகின்ற வேதியியல் துறை ஆய்வு மாணவர்கள், தங்களுடைய ஆய்வுக்குத் தேவையான மூலப்பொருட்கள், பரிசோதனைக் கருவிகள் போன்றவற்றிற்கு மறைமுகமாகப் பெறப்படும் வரி (18%) மிக அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. தங்கள் சொந்தப் பணத்தில் மூலப்பொருட்களை வாங்க வேண்டிய நிலைமையே பெருவாரியான கல்லூரி / பல்கலைகளில் உள்ளது. அத்தகைய பொருட்களைப் பெறுவதும் சிரமமாக இருக்கிறது. இந்த இடர்பாட்டை அனைத்து ஆய்வாளர்களும் சந்திக்கின்றனர்.

இச்சூழலில், குறிப்பிட்ட தேதிக்குள் பதிவுத் தொகையைச் செலுத்தவில்லை என்றால் கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கும் என்ற சுற்றறிக்கை மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மைய இயக்குநர் மூலம் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு புதிய இயக்குநர் வருகிறபோதும் புதிதாக அறிக்கை விடுகின்றனர். அவை ஆய்வுக்கானதாக இல்லாமல் கட்டண உயர்வுக்காக மட்டுமே உள்ளது.

பொருளாதார நெருக்கடியைப் பெரியளவில் சந்திப்பவர்களுள் ஆய்வு மாணவர்களும் அடங்குவர். தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளாக முனைவர் பட்ட ஆய்வுக்குப் பதிவு செய்தவர்களில் 95 சதவீத மாணவர்கள் தங்களுடைய சொந்தச் செலவிலேயே ஆய்வை மேற்கொண்டுவருகின்றனர். தங்களுடைய உடைமைகளையும் உழைப்பையும் முழுமையாக அடகு வைத்துத் தங்களுடைய பிள்ளைகளைக் கல்வி பெற அனுப்புகின்றனர். அவர்களின் கனவுகளைச் சிதைப்பதோடு தரமான கல்வியை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையே தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மேற்கொள்கின்றன.

ஆய்வு வழிகாட்டியாகப் பல்கலைக்கழகத்தின் கீழ் விஞ்ஞானிகளை / பேராசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான தகுதியாக, கடந்த காலங்களில் அவர்கள் சர்வதேச – இந்திய இதழ்களில் ஆய்வறிக்கை வெளியிடுவதைக் கணக்கில் கொண்டு வழங்குவது பல்கலைக்கழகங்களின் கடமையாகும். இவற்றுள் தனிப்பெரும்பான்மை அதிகாரத்தை உபயோகித்து மறுப்பது வருத்தத்திற்குரியது. மேலும், தமிழ்நாடு அரசால் சிறந்த விஞ்ஞானியாக அங்கீகரிக்கப்பட்டவரின் வழிநடத்துதலில் இயங்கும் ஆய்வு மையத்தின் நோக்கமானது, கிராமப்புற முதல் தலைமுறை மாணவர்களை அறிவியல் ஆய்வுகளில் ஈடுபடுத்துவதே. இம்மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகளின் ஆய்வு நெறியாளர் விண்ணப்பம் தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தினால் முறையான காரணமின்றிப் புறக்கணிக்கப்படுகிறது. இது அறிவியலையும் அறிவியல் விஞ்ஞானிகளையும் புறக்கணிப்போம் என்ற நிலையை உருவாக்குகிறது. மேலும், கல்விப்புலங்களுக்கு வெளியிலுள்ள தகுதி வாய்ந்த அறிஞர்களின் அறிவைப் பயன்படுத்திக் கொள்வது இதன் மூலம் தடை செய்யப்படுகிறது.

கிராமப்புற கல்விக்கட்டமைப்புக் குறித்துப் போதிய அறிவு பெறாதோர் முன்வைக்கும் வாதம், பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் முனைவர் பட்டமே தரமற்றது; அனைவரும் எளிதாகப் பயில்கின்றனர் என்பதே. பொதுக் கருத்துகள் போல் சித்திரிக்கப்படும் இவை முதல் தலைமுறையாக உயர்கல்விக்குள் களம் காணும் கிராமப்புற மாணவர்களை உளவியல் ரீதியாகப் பலவீனமடையச் செய்கின்றன. பல தலைமுறைகளாக உயர் கல்வியையும் பெருநிறுவனங்களில் பயிலும் வாய்ப்பையும் பெற்றவர்கள் காழ்ப்புணர்வோடு முன்வைக்கும் கருத்துகள் எளிய மக்களின் கல்வி வாய்ப்பை நிராகரிப்பதாகவும் சமூகக் குழு மனநிலைக்கு எதிராகவும் அமைகின்றன. “PhD எல்லாம் ரொம்ப எளிது. நெறியாளர்களுக்குப் பணம் கொடுத்தால் அவரே ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பது வரையில் தயார் செய்து பட்டமும் வாங்கித் தந்துவிடுவாராமே” என்பதுபோன்ற கருத்தாக்கம் தொடர்ந்து முதல் தலைமுறையினர் மீது வன்முறையாகச் சுமத்தப்படுகிறது.

உயர்கல்வி பெற்று அரசு பணிகளுக்கும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் செல்பவர்களுக்கான சிறப்புத் தகுதியாகப் பணபலமும் அரசியல்வாதிகளின் தொடர்பும் கட்டாயமாகிவருகின்றன. மத்திய மாநில அரசிடமிருந்து பெறப்படும் ஆய்வுக்கான நிதிமுறையாகவும், எத்தனை விழுக்காடு மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்களோ அதன் அடிப்படையில் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். ஆனால், இவற்றோடு நாம் கவனிக்க வேண்டியது MoES, ICMR, AICTE, DRDO, IMD, DBT, DST, CSIR, SERB, ICSSR, DSIR, ICAR – NAIP, UGC போன்ற எந்த மானியக் குழுவும் கிராமப்புற கல்வி அமைப்புகளுக்கு நிதியை வழங்காமல், உயர்கல்வி நிறுவனங்களாக மக்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்ட IIT, IISc, AIMS போன்ற எளிய மக்களுக்கு இதுவரை சாத்தியப்படாத கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கி ஒரு சார்பாகவே நடந்துகொள்கின்றன.

அரசின் ஆய்வு நிதிநல்கை அமைப்புகளும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனமும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அனுப்புகின்ற ஆய்வு முன்மொழிவுகள் மீது உரிய கவனம் செலுத்தாமல் ஒருதலைபட்சமாக நடந்துகொள்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் எந்தவொரு பெரிய ஆய்வறிக்கையும் வெளிவரவில்லை என்பதை ஆய்வாளர்கள் அறிவர். கடந்த 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு SET தேர்வு தமிழ்நாட்டில் நடத்தப்படாத காரணத்தால் தமிழ்நாட்டு மாணவர்கள் தேசியத் தகுதித் தேர்வை (நெட் தேர்வு) மட்டுமே நம்பியிருக்கின்ற சூழல் உருவாகியுள்ளது. மத்திய அரசு நடத்தும் தேர்வைக் குறித்துத் தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பணியாற்றுகிற பேராசிரியர்களைக் கொண்டு NET/SET போன்ற தேர்வுகளுக்குச் சிறப்பு வகுப்பு எடுக்க வழிவகை செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தில் காரணமின்றிப் பெறப்படும் கட்டணங்களைக் கொண்டு சிறப்பு வகுப்பு எடுக்கிற பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும்.

அரசு / தனியார் ஆராய்ச்சி மையங்களில் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஏனைய ஆய்வு மாணவர்களைவிட, தினந்தோறும் ஏராளமான சவால்களைச் சந்திக்கின்றனர். அவற்றில் குறிப்பிடத்தக்கதாக, ஆய்வு நெறியாளர் தாங்கள் தேர்வு செய்கிற ஆய்வு மாணவர்களைச் சாதிரீதியாக அணுகுகிற அவலம் உயர்கல்வித்துறையின் அடிப்படை நோக்கங்களையே சிதைப்பதாக இருக்கிறது. கல்வி ஞானம் பெற்றோர் இவ்வாறு சாதியையும் அதன் இறுக்கத்தையும் அடுத்த சந்ததியினருக்குக் கடத்துவது இந்தச் சமூகத்தின் சாபக்கேடாகவே அமையும்.

ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஆய்வு மாணவர் CSIR / NET தேர்வில் தேர்ச்சி பெற்றதோடு பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் NFSC என்ற ஆணையம் வழங்கும் நிதிநல்கைக்கு நிர்ணயித்துள்ள மதிப்பெண்ணைவிட கூடுதலாகப் பெற்றிருந்தபோதும் தமிழ்நாட்டு ஆதிதிராவிடர் மாணவர்களின் வரிசை எண் விடுபடுகிறது. இதனால் இத்தகைய தேர்வுகளின் மீதே ஐயம் எழுகிறது. இம்மாதிரியான இன்னல்களைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் / பழங்குடியினர் ஆணையம் சிறப்பு கவனம் செலுத்துவதோடு, ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் நடத்தப்படுகிற பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவர்களின் விவரங்களையும் தேர்வு முடிவுகளையும் இவ்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும். SC/STக்கென ஒதுக்கப்படுகிற பட்ஜெட்டிலிருந்து குறிப்பிட்ட நிதியைச் சிறப்பு இணையதளம் ஒன்றை உருவாக்கிடவும், அதனைக் கண்காணித்திட பணியாளர்களை நியமனம் செய்திடவும் வேண்டும்.

 ஆய்வு மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நலத்துறை வழங்கும் 2023 – 24ஆம் ஆண்டிற்கான உதவித்தொகைக்கு விண்ணப்பித்த பிறகு, பல்கலைக்கழகப் பதிவாளரின் ஒப்புதல் பெற்ற பின்னரே விண்ணப்பங்களைத் தபால் வழியே அனுப்ப வேண்டும் என்கிறது விதிமுறை. இந்தச் சூழலில், விண்ணப்பத்தாரர்களின் முழு விவரங்களையும் சோதனை செய்த பின்னரே பதிவாளருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று அறிக்கை வந்ததாகக் கூறுகின்றனர். நிர்வாகம் விதித்துள்ள முறையைப் பின்பற்றியே படிவம் சரிபார்க்கப்படும் என்கின்றனர். இந்நிலையில் “கடந்த ஆண்டு (2022 – 23 SC/ST Scholarship for Ph.D Research Scholar) உதவித் தொகையைப் பெற்றுள்ளீர்கள்தானே, பின்னர் ஏன் கட்டணம் செலுத்தவில்லை” என்கின்றது நிர்வாகம். ஒரு தலித் மாணவனுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்படுகிற உதவித்தொகைக்குக் கணக்கு கேட்கும் இந்நிர்வாகம், அம்மாணவனின் குடும்பச் சூழல் எத்தகையது, அவனின் அன்றாடம் என்ன என்பவற்றைப் பற்றி எந்த அக்கறையும் கொள்வதில்லை. தலித் மாணவர்களுக்கு அரசு ஒரு இலட்சம் ரூபாய் வழங்குகிறது என்ற பொதுபுத்தியின் வெளிப்பாடே இவர்களின் மனநிலை. இதுபோன்று கட்டணம் செலுத்தாத பிற சமூகத்து மாணவர்களை நிர்பந்திக்குமா பல்கலைக்கழகம்?

ஆய்வு மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டண விதிமுறைகளில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும். ஆய்வு மாணவர்களாகப் பதிவு செய்பவர்கள் பொருளாதார அடிப்படையில் சமநிலையை அடையவில்லை. முதல் தலைமுறையாக உயர்கல்வியைக் கற்க வந்துள்ள ஆதிதிராவிடர் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் ஒரே கல்விக் கட்டணம் என்பது எவ்வாறு சமூகநிதியாகும்? சமூகநீதி கொள்கையோடு இயங்கும் தமிழ்நாடு அரசு அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கட்டண விதிமுறையை மாற்றிடவும், நிரந்தரமாக்கவும் வேண்டும்.

மேலும், மத்திய அரசு உருவாக்கியுள்ள ஆராய்ச்சி நிறுவனம் போன்று தமிழ்நாடு அரசும் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே ஆய்வு மையங்களை உருவாக்கிட வேண்டும். அதற்கான சிறப்பு நிதியைச் சட்டமன்றத்தில் சமர்ப்பித்து அறிக்கையை வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். பேராசிரியர்களைப் பணி நியமனம் செய்வதில் ஒவ்வோர் ஆண்டும் முறைகேடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அரசியல் பலம் மற்றும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்கள் மட்டுமே அரசுப் பணியில் சேர முடியும் என்ற சூழல் உருவாகிறது. பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைப் நியமனம் செய்வதிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும். துணைவேந்தரின் பதவிக்காலம் குறித்து அரசாணை வெளியிட வேண்டும். ஆய்வு மாணவர்களுக்கு வழங்கப்படுகிற ஒவ்வொரு சுற்றறிக்கைகளும் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிக்கைகள் குறிப்பிட்ட ஆண்டுகள் வரையில் செல்லும் என்று ஆணைய இயக்குநரின் ஒப்புதலோடு வெளியிடப்பட வேண்டும். சுற்றறிக்கையில் தொடர்ந்து குழப்பம் ஏற்படுவதைத் தவிர்த்திட இம்மாதிரியான முறையைப் பின்பற்றிட வேண்டும்.

சமீபத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளில் நான்கில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது சந்தேகத்தை எழுப்புகிறது. தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூ.500லிருந்து ரூ.2000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் தேர்வுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கின்றனர். இவர்களில் 90% பேர் தேர்ச்சி பெறவில்லை என்ற அறிவிப்பை வெளியிடுகிறது. பட்டியலின மாணவர்கள், பழங்குடியினர், கிராமப்புற முதல் தலைமுறையினர் ஆகியோர் முனைவர் பட்டத்திற்காகவும் உயர்கல்வி பெறுவதற்காகவும் பல்கலைக்கழகம் பக்கம் செல்ல வேண்டாம் என மறைமுகமாகத் தடை செய்கிறது.

இத்தனை சிக்கல்களைச் சந்திக்கும் ஆய்வு மாணவர்களுக்கு ஆதரவாக ஆய்வு நெறியாளர் முதல் சிண்டிகேட் உறுப்பினராக இருக்கிற பேராசிரியர்கள் வரை பேச மறுக்கின்றனர். ஒவ்வொரு பல்கலைக் கழகமும் தமிழக உயர்கல்வித்துறையின் ஒப்புதலின்றியே முனைவர் பட்டங்களுக்கான கல்வி கட்டணங்களை அதிகரிக்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களை விட உயர்கல்வியில் மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதத்தில் (Gross Enrollment Ratio) முன்னிலையில் இருக்கிறது. ஆனால், யதார்த்தத்தில் கட்டணக் கொள்ளை மூலம் அத்தகைய சேர்க்கை விகிதத்தை நிலைகுலையச் செய்கிறது. புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தில் முன்வைக்கப்படுகிற குலக்கல்வி திட்டத்தைப் போன்று பொருளாதார வசதி உள்ளவர்களும், அரசியல் பலம் உள்ளவர்களும் மட்டுமே உயர்கல்வியைப் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன பல்கலைக்கழகங்கள்.

ஆய்வு மாணவர்கள் வங்கி வழியே செலுத்தும் தொகையோடு ரூ.30 கூடுதலாகக் கட்ட வேண்டியுள்ளது. கல்விக்காகச் செலுத்தப்படுகிற கட்டணத்திற்கு அனைத்து வங்கிகளும் வரிவிலக்குச் செய்யும் 80ஜி முறையை இவற்றிற்கும் பின்பற்ற வேண்டும். ஆய்வு மையங்களில் இருக்கிற சாதிய சிக்கல்களைக் களைய, ஆய்வு மாணவரைத் தேர்வு செய்வதில் ஆய்வு நெறியாளர் / பேராசிரியர் இடஒதுக்கீடு முறையைக் கடைபிடிக்க வேண்டும். மேலும், ஆராய்ச்சிக்கு என தமிழ்நாட்டில் தனி அமைப்பை உருவாக்கி ஆய்வுத் துறையின் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய, மாநில அரசு நிர்ணயித்திருக்கும் ஆராய்ச்சி தணிக்கைக் குழு தேர்வு செய்யும் ஆய்வு முன்மொழிவுகள் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் சரிசமமாகத் தேர்வு செய்து நிதி நல்கை வழங்க வேண்டும். மேலும், இவை எளிய மக்களுக்கும் சென்று சேர வழிவகை செய்ய வேண்டும். பெரிய ஆய்வு நிறுவனங்களின் கீழ்ப் பெறப்பட்ட நிதிநல்கையின் உதவியோடு இணைந்து பணிபுரிய கிராமப்புற மாணவர்களுக்குப் பெருநிறுவனங்கள் வாய்ப்பு வழங்க வேண்டும். சிறப்புச் சலுகையுடன் அம்மாணவர்களைத் தேர்வு செய்திட வேண்டும்.

முனைவர் பட்டம் பெறுவதற்காகப் பல்கலைக் கழகங்களில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டைவிட பல மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மட்டுமே தற்போது ஆய்வாளராகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 6000க்கும் அதிகமாக உள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் சேர்க்கை விகிதத்தையும் கணக்கில் கொண்டு பெருமளவில் ஆய்வாளராக / முனைவராகப் பட்டம் பெறுவோரின் எதிர்கால வாழ்க்கைக்கு வேலைவாய்ப்பு என்பது மிகவும் அத்தியாவசியமாகிறது.

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!