தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துவரும் கருத்துகள் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாகின்றன. அவற்றை ஏதோ கவனத்தை ஈர்ப்பதற்கான சர்ச்சை என்ற அளவில் பார்த்து விட முடியாது. மாறாக, அவர் உள்வாங்கிய சனாதன தருமத்தின் கருத்தாகவே இருக்கிறது. மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது. மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் ஆளுநர்களாக நியமிக்கப்படுவர். ஆனால், ஒருவர் ஆளுநர் ஆகிவிட்டபின் கட்சியொன்றின் / தத்துவமொன்றின் பிரதிநிதியாக இயங்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதிநிதியாகவே இருக்க முடியும். கட்சியைவிட அரசுக்கும் சட்டத்திற்கும் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியோ, தான் சார்ந்த ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை வலியுறுத்துபவராகவே இருக்கிறார். முதலில், திருக்குறளை ஆன்மிக கருத்துகளை வழங்கும் நூலெனக் குறிப்பிட்டவர், ஜி.யு.போப் திருக்குறளின் ஆன்மிகத்தைப் புரிந்துகொள்ளாமல் தவறாக மொழிபெயர்த்துள்ளார் என்றார். இக்கருத்துகளை இரண்டு இடங்களில் அவர் பேசியிருக்கிறார். குறள் அறம் சார்ந்த நூலே தவிர, ஆன்மிக நூல் அல்ல. இவர்கள் ஆன்மிகம் என்று எதைக் குறிப்பிடுகிறார்கள் என்பது புரிந்துகொள்ள முடியாததல்ல. சாதிகளின் தொகுப்பாகிய இந்து மதத்தையே ஆன்மிகம் என்ற பொருளில் கூறுகிறார்கள். இரண்டாவதாக ஜி.யு.போப் ஒரு கிறிஸ்தவர் என்ற பொருளில், இவர்கள் விரும்பும் அர்த்தத்தில் மொழிபெயர்க்கவில்லை என்பதால் சாடுகிறார்கள். இது ஆர்.எஸ்.எஸ். பார்வை என்பதில் சந்தேகமில்லை. மதவெறுப்புக் கொண்ட இக்கருத்தை மதச்சார்பற்ற அரசியலைக் காக்க வேண்டிய ஆளுநர் பேச முடியாது, பேசவும் கூடாது. ஆனால், பேசியிருக்கிறார். இது கண்டனத்திற்குரியது. கிறித்தவராக இருப்பதாலேயே குறளின் அர்த்தத்தைத் திரித்தார் என்றால், திருவாசகத்தை அவர் ஏன் மொழிபெயர்த்தார். ஆளுநர் இதனைக் கவனமாக மறைத்து ஒருபக்க நியாயத்தைக் கட்ட முயன்றிருக்கிறார்.
குறள் இந்து சமய நூலல்ல. அது ஜைன சமய நூலென்றே பெரும்பான்மையோரால் ஏற்கப்பட்டிருக்கிறது. அயோத்திதாசப் பண்டிதர் உள்ளிட்டோர் பௌத்த நூல் என்று கூறியுள்ளனர். மொத்தத்தில் வேத மரபைச் சாராத சமயங்களின் கருத்துகளைக் கொண்ட நூலாகவே இருக்கிறது. இக்கருத்தை சைவம் உள்ளிட்ட மரபுகளைச் சேர்ந்த அறிஞர்களே ஏற்றிருக்கின்றனர். இந்நிலையில் அவற்றை ஆன்மிகம் என்கிற பெயரில் இந்து சமய நூலாக மாற்ற முற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாகும். அதே வேளையில் ஆளுநரின் கருத்துகளை எதிர்கொள்ள முற்படுகிறவர்களும் இனியும் அதனைத் தமிழ் நூலாக மட்டும் பேசாமல் குறளின் வேத மரபல்லாத ஜைன – பௌத்த அடித்தளத்தையும் எடுத்துப் பேச வேண்டும். தமிழாகச் சொன்னாலும் உரிமை கொண்டாட முயற்சித்துவரும் வேளையில் மாற்றுமத மரபைத் துல்லியப்படுத்திக் காட்ட வேண்டும்.
அதேபோல, கடந்த அக்டோபர் 17ஆம் தேதி, சென்னையில் சர்வோதயா பள்ளியின் விடுதி திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஆளுநர், தலித்துகளின் உயர்கல்வி வளர்ச்சியில் நிலவும் ஏற்றத்தாழ்வு குறித்துப் பேசியபோது, தலித் மக்களை ‘ஹரிஜன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இச்சொல்லால் தலித் மக்களைக் குறிப்பிடக் கூடாது என்பது இந்திய அரசின் நிலைப்பாடு என்பதையறிந்தும் பேசியிருக்கிறார். அரசியல் ரீதியாகவும் கைவிடப்பட்ட சொல் அது.
மேலும், உயர்கல்வியில் நடந்திருக்கும் வளர்ச்சி விகிதத்தோடு ஒப்பிடும்போது தலித்துகள் மிகக் குறைவாக இருக்கிறார்கள் என்பதை ஆளுநர் குறிப்பிட்டிருப்பது முக்கியமானது, அது விவாதிக்கப்பட வேண்டியது. அதேவேளையில் அவர் குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் யாவும் தவறானவை. ஆங்கில இந்து நாளேடு அத்தவறைப் புள்ளிவிவரத்தோடு சுட்டிக்காட்டி சரியான தகவலைத் தந்திருந்தது. எது எப்படி இருப்பினும் உயர்கல்வியில் தலித்துகள் போதுமான அளவு முன்னேறவில்லை என்பது மட்டும் உண்மை. ஆளுநர் திராவிட அரசுகளைக் குறைகூறும் வேகத்தில் இத்தகைய தவறான தகவல்களைத் தந்துவிட்டிருக்கலாம். அவர் சொன்னது பெரும்பாலும் கடந்த 10 ஆண்டு காலத்தில் ஆட்சி செய்த அதிமுக அரசையே குறிக்கும் என்றாலும் இதைக் காட்டி திமுக அரசு தப்பிவிட முடியாது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் இவ்விரண்டு கட்சிகளே ஆட்சியில் இருந்து வருகின்றன. இதுபோன்ற விஷயங்களில் இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பாலும் வேறுபாடு இருப்பதில்லை. எனவே, இந்தப் போதாமையில் இரண்டு அரசுகளுக்குமே பங்கு உண்டு. இந்தக் குறைபாட்டை மாற்றுவதற்கு இன்றைய தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். ஆளுநர், திமுக என்ற எதிர்மறை இதில் இருப்பதை நாம் மறுத்துவிட முடியாது. அவற்றைப் புரிந்துகொள்ளக் கூடிய அதேவேளையில், இந்தக் கட்சிகளின் எதிர்மறைகளைத் தாண்டி விரிவான தளத்தில் தலித்துகளின் உரிமைகளையும் வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில், இவ்வுரிமைகள் கட்சி சார்பானதல்ல. அவை தலித்துகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் உறுதிபடுத்தியிருக்கும் வாய்ப்புகள். அவற்றை எதன் பெயராலும் விட்டுத் தர வேண்டிய அவசியமில்லை. இங்கு ஒருவரைக் காட்டி மற்றொருவரைக் காப்பாற்றும் அரசியல் நடக்கிறது. இவற்றில் தலித்துகளே எப்போதும் பலியாக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டையுமே சரியாக இனங்கண்டு அவற்றில் எதிர்க்க வேண்டியவற்றை எதிர்த்து, வலியுறுத்த வேண்டியவற்றை வலியுறுத்த வேண்டிய நிலையிலேயே தலித்துகள் இருக்கிறார்கள்.