பேராசிரியர் பிரபா கல்யாணி திருநெல்வேலி மாவட்டம், செந்திரபாண்டியபுரம் கிராமத்தில் 13.01.1947இல் பிறந்தார். ஏழை விவசாயக் குடும்பம். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப் படிப்பையும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்தவர். விளக்குநராக, பேராசிரியராக பணியைத் தொடங்கியவர், அரசியல் ஈடுபாடு காரணமாகப் பல்வேறு இயக்கங்களில் செயலாற்றியிருக்கிறார். பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம், தாய்த் தமிழ் நடுநிலைப் பள்ளி எனத் தொடர்ந்து அரசியல், கல்விப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இவரின் வாழ்நாள் பணி அடர்த்தியான ஒரு நூலாகத் தொகுக்கக்கூடியது. சிறுபத்திரிகை, வெகுஜன இதழ் என்று ஏராளமான நேர்காணல்கள் வந்திருந்தாலும், சமூகநீதி தளத்தில் எளிய மக்களின் விடுதலைக்காகச் சமரசமின்றிப் போராடியவரின் அனுபவத்தைப் பதிவுசெய்யும் நோக்கில் இந்த நீண்ட நேர்காணல் அமைந்துள்ளது. தன்னுடைய இடம் என்று வரையறைக்குட்படுத்திக் கொண்டாலும் மனித உரிமை களத்தில், குறிப்பாகத் தமிழகத்தில் இவருடைய பங்களிப்பு அளவிடற்கரியது.
பேராசிரியர் கல்யாணி என்றவுடன் வட தமிழகத்தின் திண்டிவனம் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு நீங்கள் வடமாவட்டத்துக்காரராகவே அறியப்படுகிறீர்கள். ஆனால், நீங்கள் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர். அந்நிலத்தின் தன்மையோடு உங்களின் தொடக்ககாலத்தைப் புரிந்துகொள்வதற்காகச் சற்று விரிவாகவே சொல்லுங்கள்?
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தருமத்துப்பட்டிதான் எனது சொந்த ஊர். அதை சௌந்தரபாண்டியபுரம் என்றும் கூறுவார்கள். மிகவும் சிறிய கிராமம் என்றும் சொல்லி விட முடியாது, அங்கு ஏறத்தாழ 250 குடும்பங்கள் இருக்கின்றன. நாங்கள் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மேலத் தெருவில் பிள்ளைமார்களும் அதற்குப் பக்கத்தில் தேவர்களும் குடியிருப்பார்கள். அதற்கடுத்து நாடார்கள். வடக்குத் தெரு என்று சொல்ல மாட்டார்கள் வடக்கூர், தெக்கூர் என்றுதான் சொல்வார்கள். கிழக்கில் சேரி இருக்கும், அதாவது, மேலச்சேரி கீழச்சேரி இருக்கும். மேலச்சேரியில் இருப்பவர்கள் இந்துக்கள்; கீழச்சேரியில் இருப்பவர்கள் இந்து மதத்தில் இருந்து கிறித்தவத்திற்கு மாறியவர்கள். எங்கள் ஊரில் இரண்டு தேவாலயங்கள் உண்டு, ஒன்று கிறித்தவ நாடார்களுக்கானது. மற்றொன்று தலித் மக்களுக்கானது. ஊரைவிட்டு 1/2 கி.மீ கிழக்குத் திசையில் தேவர்கள் மட்டும் இருக்கக்கூடிய பகுதி இருக்கும், அதைத்தான் அக்காலத்தில் தருமத்தப்பட்டி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தற்போது பத்துக் குடும்பங்கள் கூட அங்கு இல்லை. எங்கள் குடும்பத்திற்குப் பெரிதாக நிலம் எதுவும் கிடையாது. வேறொருவர் நிலத்தைக் குத்தகை எடுத்து விவசாயம் செய்வோம். அப்பாவுக்குத் தலையாரி வேலை. பக்கத்து ஊரான சமூகரங்கபுரம், ரெட்டியார்கள் கணிசமாக வாழும் பகுதி. அந்த ஊரில்தான் அப்பா தலையாரியாக இருந்தார். தலையாரி என்பது எங்களுக்குப் பாரம்பரியமான வேலை. எனக்கு நினைவு தெரிந்து என்னுடைய தந்தைக்கு 18 ரூபாய் சம்பளம் கிடைத்தது. மிகவும் வறுமை சூழ்ந்த வீடுதான் எங்களுடையது. கிருத்தவர்கள் அவர்களுடைய விழா நாட்களில் பொது மக்களுக்கு உணவளிப்பார்கள். நாடார்கள் கொடுக்கும் கஞ்சியைப் பள்ளிச் சிறுவர்களான நாங்கள் குடிக்காமலிருந்தோம். அதை எங்கள் ஆசிரியர் கண்டித்தார்.
எங்கள் ஆசிரியரின் வற்புறுத்தலால் நாங்கள் கஞ்சியைக் குடித்தோம். இது எங்கள் தேவர்மார் தெருவுக்குத் தெரிந்தது. இதனால் கோபமுற்று அவர்கள் (தேவர்கள்) கும்பலாகத் திரண்டு சென்று எங்கள் ஆசிரியரைத் திட்டினார்கள். நாங்கள் இனிமேல் எங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி எங்களைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார்கள். இனிமேல் உங்கள் பிள்ளைகளை நாடார் தரும் உணவுகளைச் சாப்பிடச் சொல்ல மாட்டோம் என்று ரஞ்சிதம் என்கிற ஆசிரியர் உத்தரவாதம் கொடுத்ததன் பெயரில் நாங்கள் மீண்டும் பள்ளிக்கு அனுப்பப்பட்டோம். நான் படிக்கும்போது மதிய உணவுத் திட்டம் இல்லை. ஒப்பீட்டளவில் பறையர்கள் கிருத்தவப் பள்ளியில் சேர்ந்து படித்தவர்களாக இருந்தனர். கிருத்தவக் பள்ளிக் கூடம்தான் எங்களுக்கும் படிக்க வாய்ப்பு வழங்கியது. திருமணம் போன்ற நிகழ்வுகளில் பட்டியல் சமூக மக்கள் வந்தால் அவர்களுக்குக் கடைசிப் பந்தியில்தான் பரிமாறுவார்கள். அதுவும், உட்கார வைத்து உணவு கொடுக்க மாட்டார்கள், நிற்க வைத்துத்தான் கொடுப்பார்கள். இதுதான் எங்கள் ஊரின் சமூக நிலை.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then