நடந்தேன் வாழி
வாங்கி ஒரு குவார்ட்டரைப் பருகினேன்
பனிமலையில் உருண்டு செல்லும்
தீப்பந்து பாய்ந்து சரிந்தது
குடல்களின் பள்ளத்தாக்கில்
அது வெடித்துச் சிதறி வினை புரியுமென்று
நாய்கள் புணர்ந்து பிரியும்
நேரம் வரையிலும் காத்திருந்தேன்
ரம்யத்திற்குப் பதிலாகச் சினமிகுவாக
வடித்தவர்களை வண்டை வார்த்தைகளால்
அர்ச்சித்தபடி மீண்டும் நடந்தேன் வாழி…
m
இரண்டாம் குவார்ட்டரோடு
நடந்தேன் வாழி புதர் நோக்கி
மெதுமெதுவாய் உள்ளே
உலகையே கோணித்துச் சிரிக்கும்
பால்ரஸ் குண்டுகளையொத்த
பாதரச நரிகள் பனிப் போளங்களைப்
பிளந்து திசைகள் திரிய வண்ணங்கள் சுழிய
கடுத்தச் சுவையில் சூரியன்
ஆரஞ்சுப் பழமாகக் கனிய
கனிவின் குறுக்கே நெளிந்த கண்ணாடி விரியன்
ஓணானை ஈர்த்து விழுங்க
யாருடைய கால் கட்டை விரல் என
அஞ்சி விலகி நடந்தேன் வாழி…
m
பயந்து நடந்தேன் வாழி
மூன்றாம் குவார்ட்டர் நெகிழ்வைக்
கண்ணின் கடற்கரை விழியில்
யாரையும் கொல்லாமல் வெற்றி பெற்ற வீரனாகவும்
அல்லாமல் நவீன யுகப் புரட்சியில் பங்கேற்கும் பாட்டாளியாகவுமே அல்லாத
என் தோல்விகளை மகிழ்ச்சியாகவும்
துயரமாகவும் இமைகளில் உப்புக் கரைகட்டி
விளிம்பில் தத்தளித்தேன்.
மூன்றாம் குவார்ட்டர் தன்னுடன் நெடுங்காலம்
தன்னருகே சிறை கிடந்த நெப்போலியனை
மீட்கக் கேட்க வாழி..
m
அவனை நான் மீட்டு நடந்தேன் வாழி
விடியலுக்காக ஒன்றை மறைத்துத்
தன் குடிசையில் வாழக் கூடாதென
விரட்டிய சகோதரனைக் கொல்ல
காலம் கடந்த தன்னிடம்
ஓர் ஆயுதமும் இல்லையென எண்ணியபோது
குழறி நடந்து போனேன் வாழி…
m
போனேன் வந்தேன் வாழி
யாரென்று
அறியாப் பிணம் முன்
தந்தையே தந்தையே அப்பா அப்பா என ஆர்ப்பரித்து அழுது
நடனம் புரிந்தேன் வாழி வாழி
இது யாருடா ஒக்காள ஓழி
புதுசா சக்களத்திப் புள்ளையெனத்
தாய்களும் தனயர்களும்
வீதியில் தள்ள
விடியல் வரைக் காத்திருக்கும் பொறுமையற்ற
ஐந்தாம் குவார்ட்டர் என்னைப்
பருகிப் புணர்ந்துவிட உன்மத்தம் சிதற
நான் பேருந்தை மறித்தும்
மகிழுந்தைக் குப்புறக் கிடத்தியும்
மறியல் போர் நிகழ்த்திக் கிடந்தேன்
பாழாய் வாழி…
m
இரவெல்லாம் பூமி அதளப் பாதாளத்தில் வீழ்ந்துவிடாமல்
பற்றிப் பிடித்துத் தழுவிக் கிடந்த என்னிடம்
விடியலில் கூடி நின்று வைகிறார்கள்
இத்தனை அழிம்புக்கும் காரணமான
ஐந்தாம் குவார்ட்டரைக் கண்டிப்பதை விட்டுவிட்டு
இவனை ஏனய்யா வைகிறீர்கள்
என நியாயம் கேட்க யாருமே
இப்புவியில் யாருமே இல்லையெனச்
சோர்ந்தே நடந்தேன் வாழி வாழி…