கறுப்புத் திரை

ஜா.தீபா

மெரிக்காவின் வரலாறு தெரிந்தவர்களுக்கு அந்தத் தேசம் வியப்பளிப்பதில்லை. ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்களை அடிமைகளாகத் தங்கள் நிலத்தில் இறக்கிக்கொண்டவர்களால் இன்றும் சமமான நோக்கில் தங்களது குடிமகன்களை நடத்த முடியவில்லை. முன்பு கறுப்பினத்தவருக்கு அடிமைகள் என்று பெயர், இப்போது குற்றவாளிகள் என்று பட்டம். இந்தக் குற்றவாளி பட்டத்தினைக் கறுப்பினத்தவருக்கு ஏற்படுத்தித் தர ஒவ்வோர் அமெரிக்க ஜனாதிபதியும் எந்த அளவுக்கு அக்கறையாக இருந்திருக்கின்றனர் என்பதை ஏவ டூவர்னே ஓர் ஆவணப்படமாக இயக்கியிருக்கிறார்.

இந்த ஆவணப்படம் எதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்பதைப் பார்த்த அனைவராலும் சொல்லிவிட முடியும். இதில் நேர்காணல் செய்யப்பட்டவர்கள் அமெரிக்க அரசியலையும், பொருளாதாரத்தையும், சட்டத்தையும், குற்றங்களையும் நெடுங்காலமாக ஆராய்ந்து வருபவர்கள். வரலாற்றின் அழிக்க முடியாத காட்சிகள் ஆவணப்படத்துக்கு இன்னும் வலு சேர்க்கின்றன.

இந்த ஆவணப்படத்தின் பெயர் ‘13th’. நெட்ஃப்ளிக்ஸில் காணக் கிடைக்கிறது. 13 என்கிற எண் அமெரிக்காவின் பதிமூன்றாவது சட்ட உரிமை எண்ணைக் குறிக்கிறது. அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து முடிந்த பிறகு இந்தச் சட்டத் திருத்தத்தை ஆபிரகாம் லிங்கன் கொண்டு வந்தார். அமெரிக்காவில் எந்த வடிவிலும், நிலையிலும் அடிமைத்தனத்தை ஒழிப்பதை மையமாகக் கொண்டிருந்தது. இது முறையான சட்டமாக இருந்தாலும் இதில் சேர்க்கப்பட்ட ஒரு வார்த்தைதான் இப்போது வரை பெரும் வரலாற்றுப் பிழைகளை உருவாக்கிவருகிறது. இந்தச் சட்டம் குற்றம் செய்தவர்களுக்குப் பொருந்தாது என்கிறது.

சட்ட உரிமை மூலமாகத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையும், இந்தப் பதிமூன்றாவது சட்டத் திருத்தத்தின்படி அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்பும் கறுப்பினத்தவர்களுக்கான உரிமைகளும் வாழ்வாதாரமும் நிலைபெற்றிருக்க வேண்டுமல்லவா? ஆனால், இன்றுவரை அப்படி இல்லை என்கிறது இந்த ஆவணப்படம். ஒவ்வோர் அமெரிக்க ஜனாதிபதியும் எப்படிக் கறுப்பினத்தவர்களை அச்சம் கொள்ளச் செய்கின்றனர், அவர்களின் உழைப்பைச் சுரண்டுகின்றனர், அவர்களைத் தொடர்ந்து குற்றவாளிகளாகக் காட்டி இன்னும் அடிமைகளாக நடத்துகிறார்கள் என்பதைச் சொல்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை உலகில் உள்ள அத்தனை இனத்தவர்களும் அங்கே வசிக்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை மட்டும் ஐந்து சதவீதம். வந்தாரை வாழ வைக்கும் தேசம் என்கிற பெருமையை அவர்கள் பெற்றுக்கொண்டாலும் வெளித்தெரியாத ஓர் அவலத்தைச் சொந்தக் குடிமகன்களுக்குச் செய்துவருகின்றனர். அமெரிக்கச் சிறைகளில் உள்ள கைதிகள், அமெரிக்க மக்கள்தொகைக் கணக்குப்படி இருபத்தைந்து சதவீதம். அதாவது உலகக் குடிமக்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தோமானால் நான்கில் ஒருவர் அமெரிக்கச் சிறையில் உள்ளார்கள். உலகிலேயே அதிகச் சிறைக்கைதிகள் உள்ள தேசம் அமெரிக்காதான். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்க – அமெரிக்க இனத்தவர்கள். நான்கில் ஒருவர் ஆப்பிரிக்க அமெரிக்கராகவும், பதினேழு பேருக்கு ஒருவர் வெள்ளை இன அமெரிக்கராகவும் இருக்கிறார்கள். ஏன் இப்படி நடக்கிறது என்பதைத்தான் இந்த ஆவணப்படம் விரிவாகக் காட்டுகிறது.

லிங்கன் பதிமூன்றாவது சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்த பிறகு பெரும்பாலான வெள்ளையினத்தவர்கள் கடும் எரிச்சலைக் கொண்டிருந்தனர். கறுப்பினத்தவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி ரகசியக் குழுக்கள் செயல்பட ஆரம்பித்தன.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்த அமெரிக்கத் திரைப்படங்கள் கறுப்பினத்தவர்களை எத்தனை தூரம் மலிவானவர்களாகக் காட்டின என்பதை விளக்குகிறது. நவீன சினிமாவின் முகம் என அறியப்பட்ட டி.டபிள்யூ. க்ரிஃபித் ‘The Birth of Nation’ படத்தை எடுக்கிறார். இந்தப் படத்தில் ஒரு கறுப்பினத்தவர் வெள்ளை இனப் பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திக் கொலை செய்வதாகக் காட்டப்பட்டது. அவரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க ஒரு பெண் மலையிலிருந்து குதித்து விழுந்து இறந்து போவதாகவும் காட்டப்பட்டது. இதோடு சேர்த்து இனவாத வெறுப்புக் குழுவான KKK என்று அழைக்கப்படுகிற குக்ளக்ஸ் கிளேனைப் புரட்சிகர குழு போல சித்திரித்தது. வெள்ளைத் தூய்மைவாதத்தினைக் கொள்கையாகக் கொண்டு, கறுப்பினத்தவர் மட்டுமல்லாது, கத்தோலிக்கர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோரையும் அழிக்க நினைக்கும் வலதுசாரித் தன்மையுடன் இயங்கிவரும் குழு இது. இப்போதும்கூட இந்தக் குழு ரகசியமாக இயங்கிவருகிறது. கறுப்பினத்தவர்களை எரித்தும், தூக்கிலிட்டும் கொல்வதைப் புனிதச் செயலாகச் செய்தவர்கள். இதனை ‘The Birth of Nation’ படம் நாயகத்தனமாகக் காட்டியது. இந்தக் குழு அழிவினை ஏற்படுத்திய பின் மரத்தாலான சிலுவைக்குத் தீயிடுவர். இதனை அவர்கள் தங்களின் அடையாளமாகவே செய்தனர். இப்படத்திலும் இதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. நேரடியாகவே இந்தக் குழுவுக்கு ஆதரவளித்த படமாக இருந்தது. ஆதரவு என்பதைவிட அந்தக் குழுவுக்கான விளம்பரப் படம் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படம் ஏற்படுத்திய பாதிப்பாக ஆவணப்படம் சொல்வது, இந்தப் படத்திற்குப் பின் பல்லாயிரக்கணக்கான வெள்ளையின மக்கள் இந்தக் குழுவில் உறுப்பினராகச் சேரத் தொடங்கினார்கள்.

பொதுவெளிகளில் கறுப்பினத்தவரைத் தாக்குவது தவறில்லை என்று இன வெறுப்பாளர்கள் செயல்படத் தொடங்கினார்கள். கறுப்பின மக்கள் என்பவர்கள் பாலியல் குற்றவாளிகள், திருடர்கள், வன்முறையாளர்கள். அவர்களைப் பார்த்ததும் தாக்கி விரட்டுவது சமூக அமைதிக்கு ஏற்றது என்பதாகப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இதனைச் சில ஊடகங்களும் சிறப்பாக வழிமொழிந்தன. சாதாரண தவறு செய்யும் கறுப்பினத்தவர்களைப் பெரும் தவறு செய்தவர்களாகச் சித்திரித்தது.

“கறுப்பினத்தவர்கள் வெள்ளையினப் பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகத் தொடர்ந்து பரப்பப்பட்டது. அதே நேரம் வெள்ளையின ஆண்களால் கறுப்பினப் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதை யாரும் பதிவு செய்வதில்லை” என்கின்றனர் ஆவணப்படத்தில் பேசியவர்கள்.

1920களில் அமெரிக்காவில் பெரும் பொருளாதார மந்தநிலை உருவானது. இதன் காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம், அன்றாட உணவுக்கு அரசினை நம்பியிருக்க வேண்டிய சூழலும் உருவானது. அதிலிருந்து மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கையிலும் மருத்துவத்திற்கும், அடிப்படைத் தேவைக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்த மக்கள் அரசையே நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.

நிக்சன் அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவுடன், ‘அமெரிக்கா கடும் பொருளாதாரச் சிக்கலில் உள்ளதால் எல்லாவற்றுக்கும் அரசை நம்பி மக்கள் இருக்க வேண்டாம். தங்களது கையிருப்பைக் கொண்டே சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டார். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது கறுப்பின மக்களே. அவர்கள் நூற்றாண்டுக் காலமாகக் கல்வி மறுக்கப்பட்டவர்கள். கூலி வேலைகள் தொடங்கி எதற்கும் அவர்களுக்கு வேலைகள் கொடுக்க யாரும் முன்வருவதில்லை. இதற்குக் காரணம் அவர்கள் குறித்து மக்களிடம் பரப்பப்பட்ட வதந்திகளும் குற்றச்சாட்டுகளுமே. அப்படியே வேலை கிடைத்தாலும் சொற்பக் கூலியே தரப்பட்டது.

அமெரிக்க வியட்நாம் போரின்போது வியட்நாமில் இருந்து போதைப் பொருட்கள் சகஜமாக அமெரிக்காவிற்குள் வர ஆரம்பித்தன. நிக்சன் இதனைச் சரியாகப் பிடித்துக்கொண்டார் அல்லது அதற்கான சூழலை உருவாக்கினார் என்றும் சொல்லப்படுகிறது. போதைப் பொருளுக்கு எதிராக அமெரிக்கா செயல்பட வேண்டும் என்று முழக்கமிட்டார். இந்த முழக்கத்தினால் அமெரிக்காவின் பொருளாதார தேக்கநிலையும் மற்ற பிரச்சினைகளும் காணாமல் போயின. பாலியல் வன்புணர்வு, திருட்டு, கொலை போன்ற குற்றங்களோடு சேர்த்து இப்போது கறுப்பினத்தவர்களை நோக்கி ‘போதைப் பொருள் கடத்தும் கும்பல்’ என்கிற பெயரும் சேர்ந்துகொண்டது. இவர்களால் அமெரிக்காவின் எதிர்கால சந்ததியினருக்குப் பெரும் அழிவு ஏற்பட இருப்பதாகச் சொல்லப்பட்டது. கறுப்பினத்தவர்கள் போதைப் பொருள் தொழிலில் ஈடுபட்டார்கள் என்பது உண்மைதான் என்றபோதிலும், அத்தனை பேரும் இதையே தொழிலாகக் கொண்டவர்கள் என்கிற பிம்பம் உருவாக்கப்பட்டது. சந்தேகத்தின்பேரில் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். சிறை வேகமாக நிரம்பியது. அவர்களை அதன்பின் பிணைக் கைதியாகக் கூட வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

அமெரிக்கச் சிறை சில இலட்சங்களில் இருந்து கோடி கைதிகளால் நிரம்பத் தொடங்கியது இப்படித்தான். அதன்பிறகு ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ரொனால்ட் ரீகன் இன்னும் பலபடிகள் மேலேறினார். போதைப் பொருட்களால்தான் அமெரிக்கச் சமூகம் சீரழிகிறது என்பதைத் தொடர்ப்

பிரச்சாரமாக முன்னெடுத்தார். இதனைப் போதைக்கு எதிரான போர் என்று அறிவித்தார். இந்த முன்னெடுப்புக்குக் காரணம் தனது மனைவிதான் என்றார். திருமதி ரீகன் இந்தப் போதைப் பொருள் தடுப்புக் குறித்துத் தொடர்ந்து வலியுறுத்திப் பேசினார். அமெரிக்காவில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறபோது ஜனாதிபதி ஊதிப் பெரிதாக்கும் அளவுக்குப் போதைப் பொருள் இல்லை என்று புள்ளிவிவரங்கள் சொல்லப்பட்டபோதும் மீண்டும் மீண்டும் அமெரிக்கா போதைப் பொருட்களின் ஆதிக்கத்தில் இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவுறுத்தியது. வீடுகளில் புகுந்து எந்த நேரமும் யாரையும் கைது செய்ய முடியும் என்கிற நிலைமை உருவானது. அந்தக் கைதுகள் யாவும் கறுப்பின மக்கள் வாழ்கிற பகுதியிலேயே நிகழ்ந்தது.

இதற்கெல்லாம் காரணம் அரசாங்கம் வலுவாக இருந்தது என்பதல்ல, கறுப்பினத்தவர்கள் பலவீனமாக இருந்தார்கள் என்பதுதான். இவர்களை ஒருங்கிணைக்கும் எவருக்கும் கடுமையான உளைச்சல்கள் தரப்பட்டன. அவர்கள் போலீஸால் சுடப்பட்டனர் அல்லது தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இது கறுப்பினத்தவரிடம் உளவியல் தாக்குதலை ஏற்படுத்தியது.

அதன்பிறகு பதவியேற்ற ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் இருவருமே கூட கறுப்பின வெறுப்பினைத் தங்களது பிரச்சாரத்தின் மூலம் மறைமுகமாக ஆதரித்தனர்.

சிறைக் கைதிகளின் மனித உழைப்பை வீணாக்கக் கூடாது என்று அடுத்த பிரச்சாரத்தை அரசாங்கம் முன்வைத்தது. வால்மார்ட் போன்ற பெரு நிறுவனங்கள் சிறையில் தங்களது உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கினார்கள். வெளியில் வேலை செய்பவர்களை விட குறைந்த அளவு கூலி கொடுத்தால் போதுமானது என்பது இந்தப் பெரு நிறுவனங்களுக்கு இன்னும் வசதியானது.

அரசாங்கம் இதன் மூலமாக டாலர்களைக் குவித்தது. சிறைக் கைதிகள் தங்களது குடும்பத்தினரிடம் பேசுவதற்குச் சிறைக்குள் போன் பூத்துகள் உருவாகின. இதற்கான ஒப்பந்தத்தை அரசாங்கம் தனியார் வசம் ஒப்படைத்தது. கடும் போட்டிக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் உறுதியானது. ஒரு சிறைக் கைதி பத்து நிமிடங்கள் மட்டுமே தங்கள் குடும்பத்தாருடன் பேச முடியும். இப்படிப் பேச அவர்களது பத்து நாட்கள் கூலியைக் கட்டணமாக எடுத்து வைக்க வேண்டியிருந்தது. இப்படியாக, அடிமை முறையில் கறுப்பினத்தவர்களை எந்த அளவுக்குச் சுரண்டினார்களோ அதற்கு இணையாக மீண்டும் மீண்டும் சுரண்டினார்கள். இந்த முறை குற்றவாளிகள் என்ற பெயரில். இந்த நிறுவனங்களுக்குத் தொடர்ந்து மனித உழைப்புத் தேவைப்பட்டுக்கொண்டே இருந்ததால் கைதிகள்மீதான வழக்குகள் மெதுவாக நடந்துகொண்டிருந்தன. 95 சதவீத கைதிகள் பிணைக்காகவும் சட்ட உதவிக்காகவும் காத்திருக்கின்றனர்.

இப்படியே இருந்தால் சிறையில் இடப் பற்றாக்குறை ஏற்படும் அல்லவா? நாடு முழுவதும் ஒருகோடி கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஒரே தேசத்தில் இத்தனை கைதிகளை இதற்கு முன்பு எந்த நாடும் கண்டதில்லை. அதனால் CCC என்கிற நிறுவனத்தோடு அமெரிக்கா ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டது. இந்த நிறுவனம் நாடு முழுவதும் சிறைச்சாலைகளையும், அகதி முகாம்களையும் கட்டியது. சிறைக் கைதிகளுக்கான உணவுத் தேவைக்காக அராமார்க் என்கிற நிறுவனத்தோடு மற்றோர் ஒப்பந்தம். எதுவுமே தரமாக இல்லை என்பது குறிப்பிடப்பட வேண்டியது. இந்த உணவு நிறுவனம் ஏற்கெனவே தரமற்ற உணவினை உற்பத்தி செய்ததற்காகச் சட்ட விசாரணையை எதிர்கொண்டுவந்தது.

இந்த ஆவணப்படத்தில் பேசிய ஒவ்வொருவரும் ஆழ்ந்த கருத்துகளையும், புள்ளிவிவரங்களையும் முன்வைக்கிறார்கள். இந்த ஆவணப்படம் வெளிவந்து 2016ஆம் ஆண்டு ஆஸ்கருக்குப் பரிந்துரையானது. ஙிகிதிஜிகி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றது. இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் ஏவ டூவர்னே இதற்காகப் பெரும் அளவில் ஆய்வு செய்திருக்கிறார்.

ஒவ்வொரு ஜனாதிபதியும் கறுப்பினத்தவர்கள் செய்கிற குற்றங்களை எப்படித் தங்களது அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டனர் என்பதை இந்தப் படம் காட்டுகிறது. இதோடு காவல்துறையினராலும் பொதுமக்களாலும் துன்புறுத்தப்பட்டு இறந்துபோன கறுப்பினத்தவர்களின் கடைசி நேர வீடியோக்களை அந்தந்தக் குடும்பங்களின் அனுமதியோடு வெளியிட்டிருக்கிறார்கள். இந்த மரணங்களைப் பார்க்கிறபோது நமக்கு எழுவது அரசாங்கம் தங்கள் மக்கள் மீது கொண்ட இறக்கமின்மை குறித்த அச்சம்தான். கறுப்பினச் சிறுவன் ஒருவனைக் கொன்றுவிட்டு மிகச் சாதாரணமாக, சந்தேகத்தின் பேரில் கொன்றேன் என்றவருக்கு நீதிமன்றம் விடுதலை அளிக்கிறது. பாதுகாப்புக்காகத் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னவுடன் வால்மார்ட் துப்பாக்கிகளையும் தோட்டாவையும் உற்பத்தி செய்து விற்பனைக்கு வைக்கின்றனர். இந்தத் துப்பாக்கிகள் கறுப்பினத்தவரை நோக்கியே ஒவ்வொரு முறையும் நீண்டதையும் ஆவணப்படம் பதிவு செய்கிறது. இவையெல்லாம் இன அழிப்பின்றி வேறென்ன என்கிற கேள்வியை முன்வைக்கிறது ஆவணப்படம்.

1940 தொடங்கி இப்போது வரை கூடிக்கொண்டே போகும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை ஏன் குறைக்கப்படவில்லை என்பதை இந்த ஆவணப்படம் போல வேறொன்றும் இத்தனை விளக்கமாக ஆதாரத்தோடு சொன்னதில்லை.

“வரலாறு என்பது மனிதனின் நினைவு. நினைவு இல்லாது போனால் மனிதன் விலங்குக்கும் கீழானவனாவான்” என்றார் மால்கம் எக்ஸ். இந்த ஆவணப்படம், வரலாற்றின் பிழை தொடர்ந்து நிகழ்த்தப்படுவது குறித்துச் சொல்கிறது. நிச்சயம் இந்த ஆவணப்படம் இயக்குநர் ஏவ டூவர்னே முன்வைத்த ஓர் ஆயுதமே.

1970 – 3,57,292

1980 – 5,13,900

1985 – 7,59,100

1990 – 1,179,200

2000 – 2,015,300

2014 – 2,306,200

(வருடங்களும் – கைதிகளின் எண்ணிக்கையும்)

 

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!