‘இயல்பாகிவிட்ட’சாதியப் பொதுப்புத்தி – தலையங்கம்

காங்கிரஸ் முன்னணி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக பேச்சாளர் லியோனி, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய மூவரும் அண்மையில் வெவ்வேறு சந்தர்ப்பங்களை ஓட்டி, தலித் தொடர்பில் பொதுமேடையில் மோசமான கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தனர். மூவரும் பெரிய கட்சிகளின் அடையாளங்களாக இருப்பவர்களாவர். இசைஞானி இளையராஜாவின் நிலைப்பாட்டினை விமர்சிப்பதாகக் கருதிக்கொண்டு தலித்துகள் பற்றி, அவர் ஆழ்மனதில் ஊறிக் கிடக்கும் கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். திமுகவின் தலித்துகளுக்கான சேவைகளைச் சொல்வதாகக் கருதிக்கொண்டு தலையில் செருப்பு வைத்துக் கிடந்த சாதியினர் என்று பொது மேடையில் பேசியுள்ளார் திமுக பேச்சாளர் லியோனி.

அதேபோல தமிழகத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட சாதியினரை இழிவு நோக்கில் சுட்டக்கூடிய வார்த்தை என்ற ஓர்மை கூட இல்லாமல் ‘பறையா’ என்ற சொல்லைக் கையாண்டுள்ளார் அண்ணாமலை. இவர்கள் மூவரும் வெவ்வேறு கட்சியை, வெவ்வேறு பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் தலித்துகள் குறித்து ஒரே விதமான – இழிவு நோக்கிலான பொதுப்புத்தியையே வெளிப்படுத்தியவர்களாக இருக்கிறார்கள்.  பல்வேறு மாற்றங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதாகக் கருதப்படும் தமிழகத்தில் இயங்கும் தலைவர்களால் இவ்வாறு மிகச் சாதாரணமாகத் தலித்துகள் குறித்த வெறுப்பை உமிழ முடிகிறது. இத்தகைய மேலோட்டமான பிம்பங்களை விலக்கிவிட்டுப் பார்த்தால் இங்கு எல்லாமும் ஏதோவொரு வகையில் சாதியோடு தொடர்பில் இருப்பதைப் பார்க்கலாம். இம்மூவரும் பேசியிருக்கின்றனர் என்பதால் மற்றவர்களிடம் இத்தகைய பார்வை கிடையாது என்று அர்த்தமல்ல. இம்மூவரும் ‘அறியாமல்’ பேசி வெளிப்பட்டுவிட்டனர், அவ்வளவே. மற்றபடி தலித்கள் மீதான பலரின் பார்வையும் இவைதாம்.

சில ஆண்டுகளுக்கு முன் திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி தலித்துகளுக்கு நீதிபதி பதவியைத் திமுக பிச்சையிட்டது என்றார். தயாநிதி மாறன் ‘நாங்கள் என்ன தீண்டப்படாதவர்களா?’ என்ற உருவகத்தைக் கையாண்டார். இவையெல்லாம் அப்போதே கண்டனத்துக்குள்ளாயின. ஆனாலும், இந்தப் பார்வையில் மாற்றமில்லை என்பதையே இம்மூவரின் கருத்துகளும் தெரிவிக்கின்றன. கடந்தகால அனுபவங்களிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை, கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதையே தொடரும் இப்போக்குகள் காட்டுகின்றன.

இங்கு விமர்சிக்கப்படுபவர் பிறப்பால் தலித்தாக இருப்பின் அந்த விமர்சனம் எவ்வாறு மாறுகிறது என்பதை நாம் இவற்றில் கவனிக்கலாம். தலித் மீதான விமர்சனம் அந்த நபர் பற்றிய, நபரின் கருத்து மீதான விமர்சனமாக இல்லாமல் அவருடைய சாதி பற்றிய விமர்சனமாக மாறிப்போகிறது. சாதியைப் பற்றிய விமர்சனம் என்பது சாதிய இழிவைச் சுட்டிப் பேசுவதேயாகும். இரண்டாவதாக அத்தகைய விமர்சனங்கள் தலித்துகளுக்கு நாங்கள் இதையெல்லாம் செய்தோம் என்பதைச் சொல்லிக் காட்டுவதாக மாறிவிடுகிறது. மரபு ரீதியாகத் தலித்துகளின் உழைப்பாலும் அரசியல் ரீதியாகத் தலித்துகளின் ஓட்டுகளாலும் வாழ்வுப் பெற்ற இந்த அரசியல்வாதிகள் தலித்துகளுக்குத் தாங்கள்  கொடுத்தவர்களாகவும் அவர்கள் பெறுபவர்களாகவும் இருந்ததாகப் பேசுவது வேடிக்கை.

தலித்துகளின் போராட்டங்களும் உரிமைகளும் முன்னோடியானவை என்பது உரிய தரவுகளுடன் தலித் வரலாற்றியலால் நிறுவப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் புறக்கணிக்கக் கூடிய வகையில் இவர்களின் பேச்சும் செயல்பாடும் அமைந்திருக்கின்றன.

கருத்து ரீதியாக மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும் இப்பேச்சுகள் ஆபத்தானவை. தலித்துகள் பற்றிய தங்களின் உளவியல் அழுக்கை மற்றவரிடையேயும் பரப்பி அவர்கள் பற்றி ஏற்கெனவே நிலவிவரும் பொதுப்புத்தியைத் தக்க வைப்பவை. தலித்துகள் என்றால் இவ்வாறு தான் இருப்பார்கள்/இருந்தார்கள் என்ற உளவியலே இவற்றில் செயல்படுகின்றன. தலித்துகளின் இன்றைய முதன்மையான போராட்டம் இந்த உளவியலுக்கு எதிரானதாகவே இருக்கிறது. அந்த வகையில் இப்பேச்சுகள் பிரச்சினைக்குரியவையாக, எதிர்க்கக் கூடியவையாக இருக்கின்றன.

புறநிலையிலான சலுகைகளால் மட்டும் சமூக இழிவு நீங்கி விடுவதில்லை. அது கருத்தியல் மற்றும் உளவியல் ரீதியான விழிப்புணர்வோடும் தொடர்புடையதாகும். இங்கிருக்கும் கட்சிகளின் தலித்துகள் மீதான ‘அக்கறை’ இத்தகைய புற நிலையிலான சீர்திருத்தம் தொடர்பானது மட்டுமே. மற்றபடி உளவியல் மற்றும் கருத்தியல் ரீதியாக வழமையான சாதியப் பார்வையையே உள்ளீடாகக் கொண்டுள்ளது. இதனால் தான்  அரசியல் தேவை அல்லாத தருணங்களில் தலித்துகள் பற்றிப் பேசும் போது தங்களின் உள்ளார்ந்த ஒவ்வாமையை வெளிப்படுத்தி விடுகின்றனர்.

இவர்கள் திட்டமிட்டுப் பேசினார்கள் என்று சொல்ல முடியாது. சொல்லப் போனால் பேச்சில் இயல்பாக வெளிப்பட்டு விட்டது. எனவே இவற்றைச் சாதாரணமாகக் கடந்துவிட வேண்டும் என்று சொல்வார்கள். உண்மையில் திட்டமிட்டுச் சொல்வதைவிட இயல்பாகப் பேசுவதே ஆபத்தானது. இதற்கெதிராகத்தான் நாம் அதிகம் சிந்திக்க வேண்டும். சாதியும், தலித் சாதிகள் பற்றியும் இழிவு அல்லது வெறுப்பு இங்கு இயல்பாகி கிடக்கிறது என்பதே இதன் பொருள். எனவே அவர்கள் மீதான இழிவும் வன்முறையும் எவ்வித தடையும் வெளிப்படலாம் என்றாகி விடுகிறது.

சாதி இழிவைக் குறிப்பிடும்போது அது இங்கிருப்போரை துணுக்குற வைப்பதில்லை. பறையா என்ற வார்த்தையை ஆங்கிலம் பேசுவோர் ஆங்கில அகராதியிலிருக்கும் வார்த்தை என்ற முறையில் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், தமிழ்ச் சூழலில் வாழும் ஒருவர் அப்படியரு பெயரைப் பயன்படுத்தும் போது யோசித்திருக்க வேண்டும். இது தலித் அல்லாதவருக்கு மட்டுமல்ல கருத்தியல் விழிப்புணர்வைப் பெறாத தலித்துகளையும் இயக்கும். சாதிய உளவியலின் வெற்றியே அதுதான். தன் மீதான ஒடுக்குமுறையை  ஒடுக்கப்படுபவனையும் ஏற்க வைத்திருப்பதுதான் அதன் இயங்கியல். லியோனி போன்றோரின் பேச்சுகளை இவ்வாறுதான் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

தலித்துகளைக் குறித்து எதைச் சொன்னாலும் தங்களின் அரசியலுக்குப் பாதிப்பு வராது என்று இன்றைய கட்சிகள் நம்புவதே இப்பேச்சுகள் தொடருவதற்கான காரணம். இந்நிலை மாற வேண்டும். சாதி இந்துக்கள் பெருமை, மதிப்பு என்று எவற்றைக் கருதுகிறார்கள் என்பது நமக்குத் தெரியாமலில்லை. ஆதிக்கம்தான் அவர்களின் பெருமை. ஆனால், தலித்துகளின் பெருமை இந்திய வரலாற்றில் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடியதும், சமத்துவ வாழ்வியலை கட்டமைத்ததும்தான் என்பவற்றை அவர்களுக்கு நாம் நினைவுப்படுத்த வேண்டும். அதற்கான வரலாற்றையும் கதையாடல்களையும் தலித்துகள் உருவாக்கிப் பரப்ப வேண்டும்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger