மதுரையில் ஊராட்சிமன்றத் தலைவர் பதவியில் போட்டியிட்டு வென்றதற்காக ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட ஆறு பேரைப் படுகொலை செய்த மேலவளவு படுகொலை நிகழ்வுதான் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி உள்ளாட்சித் தேர்தல்களில் தலித்துகள் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டது.
அந்த அடிப்படையில், இரண்டுமுறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பின்பு மூன்றாவது முறையாக 31.12.1996 அன்று நடத்தப்பட்டத் தேர்தலில் மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவராக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த முருகேசன் தேர்ந்தெடுக்கப் படுகிறார். இந்நிலையில், 30.06.1997 அன்று பட்டப்பகலில் ஓடும் பேருந்தை நிறுத்தி முருகேசன் உள்ளிட்ட ஆறுபேரைப் படுகொலை செய்கின்றனர். இச்சம்பவம் நடந்து கால்நூற்றாண்டைக் கடந்திருப்பினும் இன்றைக்கும் அவ்வட்டாரத்தில் சாதிய வன்கொடுமையில் பெரிய மாற்றமில்லை. அண்மையில் சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் தீண்டாமையைக் கடைபிடிக்கும் கிராமங்கள் எவை என்று கேட்டதற்கு, தமிழகத்தில் 445 கிராமங்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பவை என்றும் அவற்றில் மதுரை மாவட்டம் தீண்டாமை வன்கொடுமைகளை நிகழ்த்துவதில் முதலிடத்தில் உள்ளதென்றும் அரசு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கலாம். ஆனால் கள எதார்த்தம் இன்னும் மோசம் என்றே சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரம் சாதிய இறுக்கம் கூடிய பகுதியாகவே இருக்கிறது.
நாடு என்னும் அமைப்பு
மேலூர் வட்டாரத்தில் சாதிய இறுக்கம் அதிகமாக இருப்பதற்கும் தீண்டாமை மற்றும் சாதிய வன்கொடுமைகள் அதிகமாக நடப்பதற்கும் ஆதிக்கச் சாதியாகவும் எண்ணிக்கைப் பெரும்பான்மையாகவும் இருக்கக் கூடிய கள்ளர் சாதியினரிடையே காணப்படும் நாடு என்ற ஆட்சியமைப்பு முறையும் அகமண முறையும் முக்கியக் காரணங்களாகும். மேலும், இத்தகைய செயல்பாட்டைத் தெய்வ வழிபாட்டோடு இணைத்திருப்பதனையும் சொல்ல வேண்டும். மேலும் கள்ளர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய பல ஊர்கள் இணைந்த பகுதியை நாடு என்று அழைக்கின்றனர். இந்த அமைப்பை கிராமம், மாகாணம் என்று பல உட்பிரிவுகளாகப் பிரித்து அதற்குத் தலைவர்களை நியமிக்கின்றனர். இந்தத் தலைவர்கள் ‘அம்பலக்காரர்’ என்றும் ‘பெரிய அம்பலக்காரர்’ என்றும் அழைக்கப் படுகின்றனர். இவர்கள் கள்ளர் நாட்டிற்கு அரசன் போன்றவர்கள். இவர்கள் வைப்பதே இப்பகுதி முழுவதற்கும் சட்டமாகும். இவற்றில் மீறல்கள் நடக்கும்போது மீறுபவர்களைக் கடுமையாகத் தண்டிக்கவும் அபராதம் விதிக்கவும் இதிலும் கட்டுப்படாதவர்களை ஊர்விலக்கம் செய்யவும் இவர்களுக்கு உரிமை உண்டு. மேலூர் வட்டாரம் முழுவதுமே இந்த அமைப்பினில் வருகிறது. அப்படியானால் இவற்றிற்கான காரணங்கள் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.
மேலூர் வட்டாரத்தைப் பொறுத்தவரை பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் வேலை செய்துள்ளனார். அவற்றின் விளைவால் அண்மைக்காலமாக மக்களிடையே விழிப்புணர்வும் சமூகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. கல் குவாரிகள், வெளிநாட்டில் வேலை போன்றவற்றின் மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது. நிலங்கள், பொதுச் சொத்துகள், கண்மாய், குளங்கள் முதலானவற்றில் தங்களுக்கான பங்கினைக் கேட்க ஆரம்பித்தனர். இதுபோன்ற செயல்பாடுகள் பிரச்சனைக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.
அரசியல் இயக்கங்களின் செயல்பாடுகள்
மேலூர் வட்டாரத்தினைப் பொறுத்தவரை 1930களில் காந்தியால் தொடங்கப்பட்ட ஹரிஜன சேவா சங்கம் இப்பகுதி முழுக்கப் பல்வேறு வேலைகளைச் செய்தது. ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அரசுக்கு மனு அளிப்பது, காவல் துறையிடம் புகாரளிப்பது என்பது போன்ற தன்மையில் தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து தலித் இயக்கங்கள் இப்பகுதியில் வேலை செய்தன. குறிப்பாக, தலித் தலைவர்கள் பிரச்சனைகளுக்கேற்பச் செயல் பட்டுள்ளனர். வை.பாலசுந்தரத்தின் அம்பேத்கர் மக்கள் இயக்கம், எல்.இளையபெருமாளின் மனிதஉரிமை மக்கள்கட்சி, மலைச்சாமியின் பாரதீய தலித் பேந்தர் இயக்கம், திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எனப் பல்வேறு இயக்கத்தினரும் கட்சியினரும் பிரச்சனைகள் சார்ந்து இப்பகுதியில் வேலை செய்துள்ளனர்.
1970 – 80களில் தலித் இளைஞர்கள் பலர் மேலூர் பகுதியிலிருந்து அரபு நாடுகளுக்குச் சென்றனர். இதன் மூலம் வருமானம் அதிகரித்தது. கள்ளர் சாதியினரைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலையிலிருந்து தளர்வு ஏற்பட்டது. பாரம்பரியமாகச் செய்துவந்த தொழில்கள், வேலைகளில் சுணக்கம் ஏற்பட்டது. அதுபோல அந்தக் காலகட்டத்தில் சிறுசிறு அளவிலான கல்குவாரிகள் அப்பகுதியில் உருவாயின. கல்குவாரிகளால் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தன. இதன் மூலம் அப்பகுதி பொருளாதாரத்தில் மாறுதல்கள் உண்டாயின. இதுபோன்ற காரணங்களால் பாரம்பரியமாகச் செய்கின்ற வேலைகளுக்கு முன்புபோல் ஆட்கள் கிடைக்காமல் போனார்கள். கல்வி, வேலைவாய்ப்புகள், பொருளியல் வரவு, தன்னிறைவு போன்றவை சுயமாகச் சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் ஏதுவாக அமைந்தன. மேலும், உரிமைகளைக் கேட்கின்ற துணிவையும் சாதியக் கட்டுப்பாடுகளை மீறுகின்ற துணிவையும் வழங்கின.
குடிநீர்க் குழாய்கள்
இப்பகுதியில் மாற்றங்களை உண்டாக்கியதில் குடிநீர்க் குழாய்களுக்கு முக்கியப் பங்குண்டு. அதுவரையில் குடிநீருக்கும் மற்றவற்றிற்கும் கள்ளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள குளங்களையும் கிணறுகளையுமே சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இப்பகுதியில் தலித்துகள் தண்ணீர் எடுக்கச் செல்லும்போது குளத்தின் அருகிலேயே அல்லது கிணறு குழாய்களுக்கு அருகிலேயே நிற்க வேண்டும். ஆதிக்கச் சாதியினர் வந்து நீர் இறைத்து ஊற்றும் வரை காத்திருக்க வேண்டும். இது ஒரு காலகட்டம் என்றால் அதற்கு முந்தைய காலகட்டத்தில் “வீதியில் செருப்பு அணிய முடியாது, பொது ஊருணியில் நீரெடுக்க முடியாது. தலித்துகள் ஊருணிக்கோ பிற நீர்நிலைகளுக்கோ செல்லும்போது தண்ணீர்க் குடங்களோடு புழக்கத்தில் இல்லாத தானியம் அளக்கும் படியை எடுத்துச் செல்ல வேண்டும். ஊற்றும்போது தண்ணீரில் விரல் பட்டாலும் சாதி இந்துக்கள் சிறுகம்பைக் கொண்டு தாக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்” என்று ஸ்டாலின் ராஜாங்கம் குறிப்பிடுகிறார் (‘வஞ்சி நகரம் கந்தன்’, பக்-18). அதுபோல இப்பகுதியில் உள்ள சாதிய ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள் பற்றி ஆனந்த தீர்த்தர் குறிப்பிடுகிறார். “கீழவளவு என்ற இடத்தில் ஒரு அழுக்கடைந்த குட்டையிலிந்து தண்ணீர் எடுக்குமாறு ஹரிஜனங்களுக்குத் தைரியம் சொல்லப்பட்டது. ஆனால் அவர்கள் சென்றபோது சாதி இந்துக்கள் அவர்களை மிரட்டினார்கள். அதனால் ஹரிஜனங்கள் ஊருணியில் தண்ணீர் எடுக்கத் துணியவில்லை. கீழவளவில் காவல் நிலையம் ஒன்று இருக்கிறது. ஆனால் அங்குள்ள காவலர்கள் ஹரிஜனங்களின் இந்தக் கஷ்டங்களைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள். ”ஆட்டுக்குளம் என்ற இடத்தில் நாங்கள் கூறியபடி பொதுக் கிணற்றில் எடுத்த ஹரிஜனங்களைச் சாதி இந்துக்கள் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால் அந்தக் கிணற்றில் மலத்தைப் போட்டார்கள். திருவாரூரில் (திருவாதவூர்) நாங்கள் ஹரிஜனங்களை ஊருணியில் தண்ணீர் எடுக்கச் சொன்னோம். அதன்படி ஊருணிக்குச் சென்ற ஹரிஜனக் கர்ப்பிணிப் பெண்ணைச் சாதி இந்து இளைஞர் தாக்கி அவளுடைய பானையையும் உடைத்தார். மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மூன்று பர்லாங் மட்டுமே தூரம் உள்ள நுண்டிக் கோவில்பட்டியில் (நொண்டிக் கோவில்பட்டி) ஹரிஜனங்கள் வாய்க்காலில் இருந்து குடிதண்ணீர் எடுக்க வேண்டியிருந்தது. இதைப் பற்றிக் காவல் துறையினரிடம் இரு புகார்கள் கொடுக்கப்பட்டன.” (பின்னிணைப்பு, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 9, பக்.180 – 181) தண்ணீருக்காகத் தலித் மக்கள் பட்ட பாடுகளைக் கவனப்படுத்திப் பார்க்கும் போது அடிகுழாய்கள், குடிநீர் தேக்கத் தொட்டிகள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.
குடிகள்ளர் முறை
இவ்வாறு மேலூர் வட்டாரத்தின் சாதியமைப்பும் இயங்குமுறையும் மிகவும் மோசமானதாகவும் நுட்பமானதாகவும் விளங்குகிறது. இப்பகுதியின் சாதியமைப்புப் பிற பகுதியிலிருந்து வேறுபட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை சாதியின் இயங்குமுறை எல்லா இடங்களிலும் ஒன்றுபோல இருப்பதில்லை. அது வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடக் கூடியது. அதுபோலவே மேலூர் வட்டாரச் சாதியமைப்பும் தனக்கான தனித்த கூறுகளுடனே இயங்குகிறது. இதனை ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் பின்வருமாறு விவரிக்கிறார்:
‘இங்கு ‘குடிகள்ளர்’ என்றொரு நிலையும் வழக்கத்தில் உண்டு. அதாவது ஒவ்வொரு கள்ளர் குடும்பமும் தங்கள் பண்ணையில் பணிபுரிய ஊரின் ஏதாவது ஒரு தலித் குடும்பத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும். அத்தலித் குடும்பத்தின் நல்லது கெட்டதை அக்கள்ளர் குடும்பமே பார்த்துக்கொள்ளும். ஊரார் மத்தியில் அத்தலித் குடும்பத்திற்குப் பிரச்சினையேதும் வந்தாலும் அக்குடிகள்ளர் ஆதரவாய்த் தலையிடுவார். தலித் ஒருவரின் ‘தவறினை’க் கண்டிக்க விரும்பும் ஊராரும் முதலில் அக்குடிக்கள்ளர்களிடமே முறையிடும் வழக்கம் உண்டு. இந்நிலையில், அவர்களைக் கடந்து படிக்கவோ, வெளியூர் செல்லவோ எந்தத் தலித் குடும்பமும் நினைக்கக் கூட முடியாது. குடிக்கள்ளர் முறை இம்மக்களைத் தொடர்ந்து அடிமைத்தனத்தில் வைத்துக்கொள்ள முற்பட்டதே ஒழிய, பொது உரிமைகளை அளிக்க முன்வரவில்லை. அதாவது குடிக்கள்ளர்கள் அளிக்கும் சலுகைகளைக் காட்டிப் பொது உரிமைகளை மறுத்தனர். வீதியில் செருப்பு அணிய முடியாது. பொது ஊருணியில் நீர் எடுக்க முடியாது. தலித்துகள் ஊருணிக்கோ பிற நீர்நிலைகளுக்கோ செல்லும்போது தண்ணீர்க் குடங்களோடு புழக்கத்தில் இல்லாத தானியம் அளக்கும் படியை எடுத்துச் செல்ல வேண்டும். அந்தப் படியில் அள்ளிதான் தண்ணீரைக் குடத்துக்குள் ஊற்ற வேண்டும். ஊற்றும் போது தண்ணீரில் விரல்பட்டாலும் சாதி இந்துக்கள் சிறு கம்பைக் கொண்டு தாக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். குறைந்த வட்டி என்றுகூறி கடன் கொடுத்துவிட்டுப் பிறகு அதிக வட்டியோடு பணத்தை வசூல் செய்யும் கந்துவட்டி லேவாதேவி முறையைக் கள்ளர்கள் தலித்துகள் மீது கடைபிடித்தனர். அதேபோல பொதுக் கோயிலில் சமமாகத் திருவிழாவில் பங்கேற்க முடியாது. திருவிழாவில் வரையறுக்கப்பட்ட இடத்தில் நின்றுதான் சாமி கும்பிட முடியும். திருமண நாளில் கூட முழங்கால் வரை வேட்டி அணிய முடியாது. இக்கட்டுப்பாடுகள் தெரிந்தோ தெரியாமலோ மீறப்படும்போது ஊர்ப் பொதுக்கோயிலில் கம்பத்தில் கட்டிவைத்து அடிக்கும் நிலை இருந்துள்ளது.’
சாவடி நீதிமன்றங்கள்
மேலூர் வட்டாரத்தில் செயல்படுகின்ற சாதியச் சட்டங்கள் பற்றியும் அது ஊர்ச் சாவடிகளில் நீதிமன்றங்கள் (நீதிமன்றங்களில் நீதிக்கே முதன்மை. சாவடி நீதிமன்றங்களில் சாதிக்கே முதன்மை) போன்று செயல்படுவதையும் நீதி வழங்கும் அதிகாரத்தை ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த அம்பலக்காரர்கள் கொண்டிருப்பதைப் பற்றியும் ஆனந்த தீர்த்தர் பின்வருமாறு பதிவு செய்கிறார்:
“கிராம மக்கள் பஞ்சாயத்து நடத்துவது என்ற பெயரில், அந்தச் சாவடி நீதிமன்றங்களை நடத்துகிறார்கள். அப்பாவி ஹரிஜனங்கள் இந்தச் சாவடிகளுக்கு வரவழைக்கப்பட்டு அடிமைகளைப் போல விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இவர்களில் யாரேனும் பெரிய அம்பலக்காரரின் உத்தரவை மீறினால், அவரை இரக்கமின்றி அடித்தும் சித்திரவதை செய்தும் கொடுமைப் படுத்துகிறார்கள். ஹரிஜனங்கள் மனதில் பீதியை ஏற்படுத்துவதும் பெரிய அம்பலக்காரரின் கட்டற்ற அதிகாரத்தைக் காட்டுவதும் இதன் நோக்கம். இந்தச் சூழ்நிலையில் ஹரிஜனங்கள் மீது இழைக்கப்படும் கொடுமை, அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கும் பெரிய அம்பலக்காரரின் மனம்போகும் போக்குக்கும் தகுந்தபடி பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. பகிரங்கச் சவுக்கடி, கடுமையான அபராதம், அதைச் செலுத்தத் தவறினால் சொத்துப் பறிமுதல், பொய்வழக்குப் போடுதல், பொருளாதாரப் பகிஷ்காரம், வேலை கொடுக்க மறுப்பது, ஊதியத்தைக் கொடுக்காமல் நிறுத்திவைப்பது, சமூக பகிஷ்காரம் செய்து சமூக நிகழ்ச்சிகளிலும் சமயச் சடங்குகளிலும் அவர்களைப் பங்கேற்கவிடாமல் தடுப்பது, குளங்களிலும் கிணறுகளிலும் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று தடை செய்வது, கிராமத்துக் கடைகளில் அவர்களுக்குப் பொருள்கள் விற்கக் கூடாது என்று தடைசெய்து உணவுப் பொருட்கள் கிடைக்காமல் செய்வது முதலான பல கொடுமைகள் அவர்களுக்கு இழைக்கப்படுகின்றன” என்று பதிவுசெய்துள்ளர்.
மேலவளவு வன்கொடுமை
இவ்வாறு மேலூர் வட்டாரத்தையும் அதன் சாதியத்தன்மை மற்றும் இயக்கம் ஆகியவற்றை இணைத்தே நாம் மேலவளவு சம்பவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலூருக்கும் மேற்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேலவளவு. இங்கு பெரும்பான்மையாகக் கள்ளர் சமூகத்தவரும் (1000 குடும்பங்கள்), முத்தரையர் சமூகத்தவரும் (500 குடும்பங்கள்) வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஆதிதிராவிடப் பறையர் சமூகத்தவரும் (350 குடும்பங்கள்), இஸ்லாமியரும் (100 குடும்பங்கள்) அதற்கு அடுத்தபடியாக வெள்ளாளர் சமூகத்தவரும் (25 குடும்பங்கள்), செட்டியார் சமூகத்தவரும் (10 குடும்பங்கள்) வசித்து வருகின்றனர். மேலவளவு ஊராட்சி தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்டது.
இதனை எதிர்த்து “நாட்டுக்கு ஒரு பறையன் சனாதிபதியாக வந்தாலும் எங்கள் ஊருக்கு ஒரு பறையன் தலைவராக வரக் கூடாது” என்று பொதுவாக அறிவிக்க வேண்டி அவ்வூர்க் கள்ளர்கள் ஆயிரம் பேருக்கும் மேலானோர் கூடி கூட்டுறவு நிலவள வங்கி, பால் பண்ணை ஆகியவற்றிற்கான தேர்தல்களைப் புறக்கணிப்பது எனத் தீர்மானித்து மேலவளவு காந்தி நகர்க் காலனியைச் சேர்ந்த தலித் மக்களை ஊர்க் கூட்டத்திற்கு அழைத்தனர்.
இத்தகைய பிரகடனத்தால் தலித் மக்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில்தான் ஆதிக்கச் சாதியினரின் தீர்மானத்திற்கு எதிராகப் பறையர் சமூகத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினரான முருகேசன் உள்ளிட்ட சிலர் 10.09.1996 அன்று வேட்புமனுத் தாக்கல் செய்கின்றர். வேட்பு மனுதாக்கல் செய்தவர்கள் ஆதிக்கச் சாதியினரின் மிரட்டலுக்குப் பயந்து 13.09.1996 அன்று வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்கின்றனர். 26.09.1996 மேலூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அரசு ஆணைக்குக் கட்டுப்படுவதாக எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்தில் இரு சாதியினரும் கையப்பமிட்டனர். 09.10.1996 அன்று அறிவிக்கப்பட்டவாறு தேர்தல் நடைபெறவில்லை. பயத்தின் காரணமாகத் தலித் மக்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை.
மறுஅறிவிப்பின்படி 28.12.1996 அன்று வாக்குப்பதிவு நடக்கிறது. அன்று ஆதிக்கச் சாதியினர் கலவரத்தில் ஈடுபட்டு வாக்குச் சாவடியைக் கைப்பற்றி வாக்குப்பெட்டிகளைத் தூக்கிச்சென்றுவிடுகின்றனர். இதனால் தேர்தல் தடைபடுகிறது. மீண்டும் மறுதேர்தல் 31.12.1996 அன்று நடத்தப்படுகிறது. 475 வாக்குகள் பெற்று முருகேசன் வெற்றிபெறுகிறார். ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு காங்கிரஸ் தலைவர் கக்கன் அமைச்சராக இருந்த காலத்தில் கட்டிக்கொடுக்கப்பட்ட 20 காலனி வீடுகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும் ரேசன் கடை, பள்ளிக்கூடம், பால் கூட்டுறவுச் சங்கம் ஆகியன தலித் மக்களுக்குத் தனியாக வேண்டும் என்று ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறார். தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்தனர் தலித் மக்கள். 10.09.1996 அன்று மூன்று தலித் மக்களின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
இதற்கு நிவாரணம் பெறவும் தனக்கும் தான் சார்ந்திருக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை வைக்கிறார் முருகேசன். இதனால் ஆத்திரமுற்ற ஆதிக்கச் சாதியினர் 30 பேர் கொண்ட கும்பலாகத் திரண்டு, 30.06.1997 அன்று முருகேசன் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து மனுக்கொடுக்கச் சென்றிருப்பதை அறிந்து அதற்கேற்பத் திட்டமிட்டுத் திரும்பி வரும் பேருந்தை வழிமறித்து ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் (32), ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மூக்கன் (42), ராஜா (24. முருகேசனின் உடன் பிறந்த தம்பி), சேவுகமூர்த்தி (45), செல்லத்துரை (45), பூபதி (26) ஆகியோரை வெட்டிப்படுகொலை செய்து முருகேசனின் தலையைத் துண்டித்து அரைக் கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிணற்றுக்குள் வீசிச் சென்றனர். ஆறுபேர் படுகொலையைக் கண்டித்து மேலூரில் சாலை மறியல் நடைபெற்றது. அதில் மேலவளவைச் சேர்ந்த சௌந்திரராசன் (30. முருகேசனின் நண்பர்) கலந்துகொண்டார். இவரை ஆதிக்கச் சாதிக் கும்பலால் கம்பு, உருட்டுக்கட்டைகளால் கடுமையாகத் தாக்கினர். படுகாயமடைந்த சௌந்திரராசன் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆக சௌந்திரராசனைச் சேர்த்து மேலவலவில் படுகொலை செய்யப்பட்டவர்கள் 7 பேர். மேலவளவு படுகொலை தொடர்பாக 25.09.1997 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில் 41 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 26.07.2001 அன்று அதன் தீர்ப்பு வெளியானது. அதில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கு கிரிமினல் வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதே அன்றி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படவில்லை என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. தண்டனை பெற்றவர்களில் ஒருவர் பாம்பு கடித்து இறந்துவிட மூன்று பேர் 2008 ஆம் ஆண்டில் நன்னடத்தை காரணமாக அண்ணா பிறந்தநாளிலும் 13 பேர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டுத் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே விடுதலை செய்யப்பட்டனர்.
மொத்தத்தில் இச்சம்பவங்களைக் கீழ் வருமாறு தொகுத்துக்கொள்ளலாம்
- 09.1996 அன்று நடந்த இக்கூட்டத்தில் நீங்கள் யாரும் இந்தத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது. மீறித் தாக்கல் செய்தால் நீங்கள் எங்கள் நிலங்களில், தெருக்களில் நடக்கக் கூடாது. கடையில் பொருட்கள் வாங்கக் கூடாது. ஊரணியில் தண்ணீர் எடுக்கக் கூடாது. இது ஊர்க்கட்டுப்பாடு. நாம் எல்லோரும் சேர்ந்து இத்தேர்தலைப் புறக்கணித்தால் பொது என்று அறிவிக்கப்படும் எனும்போது காந்தி நகர் காலனியைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் இதனை ஏற்க இயலாது என்றும் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று கூறி கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
- கொட்டாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் தலித் மக்கள் வேட்பு மனு தாக்கல் செய்யாதவாறு ஆதிக்கச் சாதியினர் (கள்ளர்கள்) ஏற்பாடு செய்த கூலிப்படையினரால் தலித்துகள் தடுக்கப்பட்டனர். மீறி வேட்புமனுத் தாக்கல் செய்தால் உயிருக்கும் உடைமைக்கும் பெரும் இழப்பு ஏற்படும் எனக் காந்தி நகர் காலனியைச் சேர்ந்த தலித் பெரியவர்கள் அஞ்சினர்.
- இதனையும் மீறிக் காஞ்சிவனம் சுரங்கமலை முருகேசன் கண்மாய்ப்பட்டி வையங்கருப்பன் ஆகிய இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவரைச் சந்தித்துப் பாதுகாப்பு வழங்கும்படியாக 05.09.1996 அன்று கேட்டுக் கொண்டனர்.
- மாவட்டக் கண்காணிப்பாளரிடம் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்க, அவர் மேலூர் காவல் கண்காணிப்பாளருக்குத் ‘தேவையான பாதுகாப்புக் கொடுக்கவும்’ என்று கடிதம் எழுதி அவரைச் சந்திக்கும்படி அனுப்பவே அவ்விளைஞர்கள் மேலூர் துணைக் கண்காணிப்பாளரைச் சந்தித்துக் கள்ளர் சமூகத்தவர் தங்களை மிரட்டுகிறார் எனவும் அவ்வாறு மிரட்டுகிற பதினெட்டுப் பேரின் பெயர்ப்பட்டியலை அவரிடம் கொடுத்துள்ளனர். அவர் மனுவைப் படித்துப் பார்த்துவிட்டு அப்பெயர்ப்பட்டியலை மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டு மனுவைத் திருப்பிக் கொடுத்து விட்டு, ‘நீங்கள் போய்வாருங்கள், நான் பாதுகாப்புத் தருகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
- மேலூர் துணைக் கண்காணிப்பாளரின் கூற்றினை நம்பி 06.09.1996 அன்று கொட்டாம்பட்டியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இருந்தனர். ஆனால், பாதுகாப்புக் கொடுக்க காவல்துறை வரவில்லை. அதையும் மீறித் தாக்கல் செய்தால் கூலிப்படையினரால் தாக்கப் படுவோம் என்று பெரியோர்கள் எச்சரித்ததால் அன்று வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.
- இத்தகைய சூழ்நிலையில், கிட்டத்தட்ட ஒருவாரக் காலம் கள்ளர்கள் ஊருக்குள் மிரட்டல் விடுத்துள்ளனர். 09.06.1996 அன்று காலை 10 மணியளவில் ஊர் மந்தையில் கூடிய கள்ளர் சமூகத்தவர்கள் பறையர் சமூகத்தவரைக் கட்டாயப்படுத்தி அழைத்து வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றவர்களை வெளியே விட்டுவிடக்கூடாது. மீறிச் சென்றால் “வெள்ளரிக்காய் போலத் தலையைச் சீவி விடுவோம்” என்று எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் அன்று இரவு வேட்புமனு தாக்கல் செய்யவிருந்த காஞ்சிவனத்தின் வீட்டிற்குத் தீவைத்தனர்.
- 09.1996 அன்று காலை மேலவளவு மந்தைத் திடலுக்குச் சென்று கள்ளர்களின் அம்பலக்காரர்களான பொன்னையா, அய்யாவு, மார்க்கண்டன் ஆகியோரிடம் காஞ்சிவனம் முறையிடவே தீப்பிடித்த வீட்டைப் பழுதுபார்க்க ஊர்ப்பணத்திலிருந்து ரூபாய் 2000 கொடுக்க, அவர் பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டார்.
- அம்பலக்காரர்களிடம் முறையிட்டவுடன் ரூபாய் 2000 கொடுத்துச் சரிசெய்து கொள்ளக் கொடுத்ததால் கள்ளர்கள்தான் தீவைத்திருப்பர் என்ற சந்தேகம் வலுக்கவே, நடப்பது நடக்கட்டும் என்று 70 இளைஞர்கள் மேலூர் வட்டாட்சியரிடமும் காவல்துறை ஆய்வாளரிடமும் நடந்தவற்றை மனுவாக எழுதிக் கொடுத்து, ‘நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்யப் போகிறோம். எங்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்டும்’ என்று கேட்க, மனுவைப் பெற்றுக்கொண்ட காவல்துறை ஆய்வாளர் குற்ற எண் 662/96 பிரிவு 436இன் கீழ் வழக்குப் பதிவு செய்தார்.
- வட்டாட்சியர் மற்றும் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் பாதுகாப்புடன் கொட்டாம்பட்டி சென்று மேலவளவு ஊராட்சித் தலைவர், சுரங்கமலை ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு முருகேசன், காஞ்சிவனம், வையன்கருப்பன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். யார் யார் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர் என்பதை உலகநாதன் மகன் பொன்னையா, ஆண்டிச்சாமி மகன் சந்திரன் இருவரும் உளவு பார்க்கின்றனர் என்பதாலும் நேரே ஊருக்குச் சென்றால் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்பதாலும் பயந்து நேரே மாவட்ட ஆட்சித்தலைவரைச் சந்தித்துத் தகவல் சொல்லிப் பாதுகாப்புக் கேட்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று நிலையைக் கூறவே, அவர் பாதுகாப்பிற்கான ஏற்பாடு செய்வதாகவும் ஊருக்குச் சென்று காவலர்கள் எத்தனை பேர் பாதுகாப்பிற்கு வந்துள்ளனர் என்பதைத் தனக்குத் தொலைபேசியின் வாயிலாகச் சொல்லச் சொன்னார். இவர்கள் தகவலை அறிந்து ஆட்சியருக்குத் தெரிவித்தனர்.
- மறுநாள் 11.09.1996 அன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்து ஊருக்குத் திரும்பியபோது பறையர் சமூகப் பெரியவர்கள், “நாங்கள் சொல்லச் சொல்லக் கேட்காமல் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டீர்கள். எப்படியும் கள்ளர்கள் நம் இனத்தையே கொன்றுவிடப் போகிறார்கள். ஆகையினால் உயிரையாவது காப்பாற்றிக்கொள்ள நாங்கள் ஊரையே காலி செய்து போகிறோம்” என்று ஊரைவிட்டுச் செல்ல ஆரம்பித்தனர்.
- வேட்பு மனுத்தாக்கல் செய்த நாங்கள் மதுரைக்குச் சென்றுவிட்டோம். இந்நிலையில் 10.09.1996 அன்று மதுரையில் எங்களைச் சந்தித்த எங்கள் சமூகப் பெரியவர்கள், வேட்பு மனுக்களைத் திருப்பிப் பெறாவிட்டால் நம்மால் ஊருக்கே செல்ல முடியாது எனக்கூறி கதறி அழுகவே அன்றே கொட்டாம்பட்டி சென்று வேட்புமனுவைத் திரும்பப் பெறும் மனுவினை நிரப்பி, கள்ளர் சமூகத்தவர்கள் எங்கள் சமூகத்தவர்களை மிரட்டுவதால் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுகிறோம் என்று காரணத்தினை வாய்மொழியாகச் சொல்லி திரும்பப் பெற்றோம். அதன்பின்பும் மிரட்டல்கள் தொடர்ந்தன. காவல்துறையினர் இருக்கும் போதே மிரட்டல்கள் தொடர்ந்ததால் உயிருக்குப் பயந்த பலரும் ஊரைக் காலிசெய்து சென்றனர்.
- இதனைப் புகாராக எழுதி 17.09.1996 அன்று டி.ஐ.ஜியிடம் கொடுத்தும் நடவடிக்கை இல்லாத நிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களில் சிலர் ஊருக்குத் திரும்பவில்லை.
- தலித்துகளின் பகுதிகளில் தொடர்ந்து கல்லெறித் தாக்குதல் நடந்துவந்த நிலையில், பாதுகாப்பிற்கிருந்த காவலர்கள் போதிய பாதுகாப்பும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடாமலும் வயர்லெஸ் உள்ளிட்ட கருவிகள் இருந்தும் மேலதிகாரிகளுக்குத் தகவல்களைத் தெரிவிக்காமல் மெத்தனப்போக்கினைக் கடைபிடித்துள்ளனர்.
- அடையாள அட்டையெடுக்கச் சென்ற தலித் மக்களை மிரட்டி அடையாள அட்டைகளை எடுக்கவிடாமல் தடுத்துள்ளனர். இதுகுறித்து வருவாய் அலுவலரிடம் தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
- மேலவளவு படுகொலையைக் கண்டித்துச் 08.07.1997 மற்றும் 23.07.1997 தேதிகளில் மாபெரும் கண்டன அணிவகுப்பினை வி.சி.க நடத்தியது.
- 08.1997 அன்று ஆதிக்கச் சாதி வெறியர்களின் ஆணவத்தை வளர்க்கும் இந்திய அரசைக் கண்டித்துச் சுதந்திரக் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் (வி.சி.க).
- தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நிறவெறிக்கெதிரான உச்சி மாநாட்டில் மேலவளவு முருகேசனின் மனைவி மணிமேகலை கலந்து கொண்டு இந்தப் படுகொலை குறித்து சாட்சியம் அளித்தார்.