வரலாறுகள் என்பவை கல்வெட்டுகள் போல் நிலையாக இருப்பவையல்ல. தரவுகளையட்டி வரலாற்றின் எல்லைக் கோடுகள் திருத்தி எழுதப்படும். இரண்டாயிரம் ஆண்டுகளாக வரலாற்றிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களாக தலித்துகள் இருக்கிறார்கள் என்கிற கதையாடலைத் திட்டமிட்டு ஆதிக்கவாதிகள் பரப்பியுள்ளனர். அதை உடைத்து உள்மெய் வரலாற்றை எழுதி வருகிறோம். அது தலித் வரலாற்று எழுத்தியல் என்கிற முறைமையை அடைந்திருக்கிறது. புதுச்சேரி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பிரெஞ்சுக் காலனியக் கட்டடங்கள், பிரெஞ்சு உணவுகள், கடற்கரை, கொண்டாட்டங்கள், இன்னபிற. அதுமட்டுமே புதுச்சேரி அல்ல. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட வரலாற்றில் புதுச்சேரிக்கென்று தனியிடம் இருக்கிறது. தலித் மக்களின் முன்னேற்றத்திற்காகப் பல போராட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்தவகையில் புதுச்சேரியில் உள்ள தலித் மக்களின் உரிமைக்காகப் போராடியவர்களில் ஒருவர் மரிய அமலதாசன் நோயேல்.
புதுச்சேரி உழவர்கரைப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் நோயல். பணிநிமித்தமாகத் தற்போது வெள்ளை நகரம் என்றழைக்கப்படும் பிரான்சுவா மாத்தேன் தெருவில் குடிபெயர்ந்தார். செல்வச் செழிப்பான தலித் குடும்பத்தில் குப்புசாமி (எ) ஆரோக்கியதாஸன் நோயேல் – சற்குணத்தம்மாள் என்ற பிரெஞ்சுக் குடியுரிமைப் பெற்ற தம்பதியின் முதல் குழந்தையாக 1888 நவம்பர் 3ஆம் தேதி பிறந்தார் மரிய அமலதாசன் நோயேல். இரண்டாவதாகப் பிறந்தவர் அபிஷேகதாசர் நோயேல். இவர் இரண்டாம் உலகப் போரில் பிரெஞ்சுப் படையில் பணியாற்றியபோது 1948 ஜனவரி 19 அன்று மரணமடைந்தார். பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்கள் குடும்பப் பெயர் வைத்துக்கொள்வது வழக்கம். அதன்படி நோயேல் என்கின்ற குடும்பப் பெயரையும் மரிய அமலதாசன் என்ற பெயரையும் சுருக்கி ம.நோயேல் என்று மாற்றிக்கொண்டார்.
தமிழ், பிரெஞ்சு, ஆங்கில மொழிகளைக் கற்றுத்தேர்ந்தவர் ம.நோயல். படிப்பு முடிந்த பிறகு நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டுவந்தார். இத்தொழிலை மற்றவருக்குக் கற்றும் கொடுத்தார். 1907ஆம் ஆண்டு பிரான்ஸீஸக்கா லெசேல் என்ற பிரெஞ்சு அம்மையாரை நிறுவனராகக் கொண்டு ரெவேய் சொசியால் சங்கம் (SOCIETE REVEIL SOCIAL) என்கிற பிரெஞ்சுத் தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. இச்சங்கத்திற்குத் தலைவராக ந.ஓராஸ், துணைத் தலைவராக ம.நோயேல் ஆகியோர் பொறுப்பு வகித்தனர். இவர்களின் தலைமையில் புதுச்சேரியில் உள்ள தலித் மக்களுக்குக் கல்வி, பொதுவுரிமை, தேநீர் விடுதி, கிறிஸ்தவக் கோயில் உரிமை, இளைஞர்களுக்கு வேலை, தலித் மக்கள் மீது நடக்கும் சாதியக் கொடுமைக்கெதிரான போராட்டம், தலித் மக்களின் வாழ்விடங்களை ஒட்டி குளம் அமைத்துக் கொடுத்தல், வறுமை போக்குதல் போன்ற செயற்பாடுகள் மூலம் ஒடுக்கப்படும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு இச்சங்கம் நிறைய பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then