அரசுக்கெதிராகத் திரைப்படங்களை உருவாக்குகிறவர் எனக் குற்றம்சாட்டப்பட்டு 2010ஆம் ஆண்டில் ஈரானிய புதிய அலை இயக்குநர்களில் ஒருவரான ஜாபர் ஃபனாஹி கைது செய்யப்பட்டார். 20 வருடங்களுக்குக் கலைச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அதோடு, 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் இது வீட்டுச் சிறை என மாற்றப்பட்டது. ஊடக நேர்காணல்களில் கூட அவர் பங்கேற்க முடியாத சூழல். சர்வதேச அளவில் அவருக்குப் பல்வேறு ஆதரவுக் குரல்கள் எழுந்தன என்றாலும் ‘செயல்படாத்தன்மையில்’ ஃபனாஹியை வைத்திருக்கத் தீர்மானித்திருந்த ஈரானிய அரசு அக்குரல்களுக்குத் துளியும் மதிப்பளிக்கவில்லை. 1995இல் வெளியான ‘The White Balloon’ எனும் தனது முதல் திரைப்படத்திலிருந்து முழுக்க முழுக்கச் சமூகவயப்பட்ட கதைகளையும் மத இறுக்கங்களினால் உண்டாகும் அழுத்தங்களையும் பெண்களுக்கெதிரான பாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் தொடர்ச்சியாகத் திரைப்படங்களில் பேசி வந்தார். இதுவே அவரது படைப்புச் செயல்பாடுகளை ஈரானிய அரசு முடக்குவதற்கான முக்கியக் காரணமாகும். எனினும், தன் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையையும் எதிர்த்து ஃபனாஹி கலகம் புரிந்துவருகிறார். ‘This is Not a Film’, ‘Closed Curtain’, ‘Taxi’, ‘Three Faces’ முதலிய திரைப்படங்களை இந்தத் தடைகளுக்கு மத்தியிலேயே உருவாக்கப்பட்டன. இதில் ‘This is Not a Film’ திரைப்படத்தை ஒரு பென் டிரைவில் பதிவேற்றிப் பிறந்த நாள் கேக் ஒன்றில் செருகி, அரசுத் துறையைச் சார்ந்த எவருக்கும் தெரியாமல் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்பியிருக்கிறார் ஃபனாஹி. சுதந்திரமாகச் செயல்படுவதற்குத் தடைவிதிக்கப்பட்ட ஒரு படைப்பு மனதின் தத்தளிப்புகளை இத்திரைப்படத்தில் நம்மால் உணர முடிகிறது. துவக்கத்தில், புறச் சூழல்களிலேயே தனது காட்சி அமைப்புகளைப் பதிவுசெய்து வந்திருந்தவர், இப்போது தனது வீடு, வீட்டின் உள்ளறை, தனது கார் எனக் குறுகிய சூழல்களில் இயங்க நேர்ந்தாலும் வெவ்வேறு விதமான திரைப்படமாக்கல் உத்திகளைக் கையாண்டு, தன்னால் இயன்ற அளவில் படைப்பாக்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். வெவ்வேறு இதழ்களில் வெளியான நேர்காணல்களில் இருந்து தொகுக்கப்பட்டிருக்கும் இக்கேள்வி- பதில்களில் கைதுக்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்ட அவரது திரைப்படங்கள் குறித்தும், 2010இல் திரைப்படங்களை உருவாக்குவதற்கான தடை விதிக்கப்பட்டதற்குப் பிறகான காலங்களில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் குறித்தும், அரசு மற்றும் கலாச்சார இறுக்கங்களுக்கு எதிரான அவரது மனப்பதிவுகளையும் பகிர்ந்தளித்திருக்கிறார்.
மோண்ட்ரீலில் திரையிடப்பட்டபோது ‘The White Balloon’ திரைப்படத்தைப் பார்த்தேன். எனக்கு அந்தத் திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது. எனினும், அப்பாஸ் கிராஸ்தொமிதான் அதற்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார் என்பதைப் பிறகு தான் உணர்ந்தேன். இந்தப் படத்திற்கு முன்னால் கிராஸ்தொமியுடன் சேர்ந்து நீங்கள் பணியாற்றியிருக்கிறீர்கள். அதனாலேயே உங்கள் இருவருடைய திரைப்படங்களிலும் சில ஒப்புமைகளை உணர முடிகிறது. குறிப்பாக, பெண் கதாபாத்திரத்திற்கு நீங்கள் அளித்திருக்கும் முக்கியத்துவம். உங்கள் பெரும்பாலான திரைப்படங்களில் சிறுமிகளையோ பெண்களையோ நீங்கள் கவனப்படுத்திவருகிறீர்கள். நிகழ்நேரத்தில் நடப்பதைப் போன்றே காட்சிப்படுத்தும் உங்கள் அணுகுமுறை எனக்கு ஆர்வமூட்டுகிறது, எனினும் அதுகுறித்து நாம் பிறகு பேசலாம். இப்போது கிராஸ்தொமியுடன் சேர்ந்து பணிசெய்த அனுபவம் குறித்துப் பகிர்ந்துகொள்ளுங்கள்…
மாணவப் பருவத்திலேயே சில குறும்படங்களை இயக்கியிருக்கிறேன் என்றாலும், ஆரம்பத்தில் என்னுடைய ஆசிரியரின் படைப்புகளில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறேன். அதன் பிறகு, சில தொலைக்காட்சிப் படங்களையும் இயக்கியிருக்கிறேன். இந்த அனுபவங்களுக்குப் பிறகு அப்பாஸ் கிராஸ்தொமியுடன் ‘Through The Olive Trees’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிசெய்யும் வாய்ப்பு அமைந்தது. இந்தப் படத்தின் பணிகள் நிறைவுபெற்று, படமும் வெற்றி பெற்ற பிறகு, எனது சொந்தத் திரைப்படங்களை இயக்கும் முயற்சிகளில் ஈடுபடலானேன். ‘The White Balloon’ திரைப்படத்தின் முதல் வரைவை எழுதியதும், அதுகுறித்த தனது கருத்தைப் பகிர்ந்துகொள்ளும்படி அப்பாஸ் கிராஸ்தொமியிடம் அதைக் கொடுத்தேன். குறும்படமாக உருவாக்குவதற்கே ஏற்றது என நான் கருதிய அந்தத் திரைக்கதையை முழு நீளத் திரைப்படமாக உருவாக்கலாம் என முன்மொழிந்தவரே கிராஸ்தொமிதான். சிறுவர் திரைப்படங்களைத் தயாரிக்கும் குழுவினரிடம் என்னை அறிமுகம் செய்து, “இவரிடம் திரைப்படம் உருவாக்குவதற்கான முழு ஆற்றலும் இருக்கிறது. இவரால் ஒரு திரைப்படத்தை முழுமையாக இயக்கி நிறைவு செய்துவிட முடியும்” எனப் பரிந்துரை செய்தார். எனக்காகத் திரைக்கதையை முழுமையாக எழுதவும் அவர் ஒப்புக்கொண்டார். இப்படித்தான் குறும்படம் இயக்குநர் எனும் நிலையிலிருந்து முழுநீளத் திரைப்படங்களை இயக்கும் சூழலுக்கு முன் நகர்ந்தேன்.
அருமை. உங்கள் இருவருக்கும் உள்ள குறிப்பிடத்தகுந்த வேறுபாடு என்பது கிராஸ்தொமி பெரும்பாலும் சிறுவர்கள் மற்றும் ஆண்களையே தனது திரைப்படங்களில் மையப்படுத்துவார். ஆனால், நீங்கள் பெண்களையும் சிறுமிகளையுமே அதிகம் மையப்படுத்துகிறீர்கள். இந்த வேறுபாடு எனக்கு ஆர்வமூட்டுகிறது. உங்கள் முதல் இரண்டு திரைப்படங்களிலும் நடித்திருந்த சிறுமி குறித்து ஏதேனும் பகிர்ந்துகொள்ள முடியுமா? இரு படங்களிலும் ஒரே சிறுமிதான் நடித்திருந்தார், இல்லையா?
நான் ஒரு தொழிலாளி வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு நான்கு சகோதரிகளும் இரண்டு சகோதரர்களும் உள்ளனர். ஆனால், பெண் கதாபாத்திரங்களை முதன்மைப்படுத்தும் எண்ணம் எங்கிருந்து வந்தது என உண்மையாகவே தெரியவில்லை. ‘The White Balloon’ ஐச் சிறுவன் ஒருவனின் பார்வையின் வழியே சொல்வதை விட, சிறு பெண்ணை மையப்படுத்தி நகர்த்துவதே சரியாக இருக்குமென எனக்குத் தோன்றியது. போலவே, இரண்டாம் திரைப்படத்தின் பெண் கதாபாத்திரமும் கொஞ்சம் சிக்கலானது. ஆனால், இந்த இரண்டு திரைப்படங்களிலும் நடித்தது ஒரே சிறுமியல்ல. இருவரும் சகோதரிகள். ‘The White Balloon’ இல் நடித்திருந்த ஐடாவின் தங்கையான மினா-தான் எனது இரண்டாவது திரைப்படமான ‘The Mirror’ இல் நடித்தவர்.
இருவருமே மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். அவர்கள் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கிறார்களா?
துரதிர்ஷ்டவசமாக, இல்லை என்பதே எனது பதிலாகும். சிறுவர்களைப் பொறுத்தவரையில் மாறுபாட்ட செயல்முறையை நாங்கள் பின்பற்றி வருகிறோம். அவர்கள் சரியாக நடிக்கவில்லை என்றால், திரைப்படமும் அதற்குரிய வடிவத்தை எட்டாமல் போய்விடும். மேலும் ஒரு சிறுவர்/சிறுமி ஒரு இயக்குநருடன் இணைந்து பணியாற்றிவிட்டு, வேறோர் இயக்குநருடனோ புதிய இயக்குநருடனோ பணியாற்றச் சென்றால், அந்தச் சிறுவர்/சிறுமியிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அவர்களால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். உண்மையில், ‘The White Balloon’ இல் நடித்த ஐடா வேறோர் இயக்குநரின் திரைப்படத்தில் நடிக்கச் சென்றார். அந்த இயக்குநர் எனக்கும் அறிமுகமானவர்தான். படப்பிடிப்பு துவங்கிய இரண்டாம் நாளிலேயே அந்த இயக்குநர் என்னிடம் வந்து, ஐடாவுடன் சேர்ந்து பணியாற்ற முடியவில்லை என்று தெரிவித்தார். எனது திரைப்படத்தில் குரல்களை நாங்கள் படப்பிடிப்பு தருணத்திலேயேதான் பதிவுசெய்தோம். ஆனால், இந்தத் திரைப்படத்தில் குரலைப் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகே சேர்ப்போம் எனத் தெரிவித்திருக்கிறார்கள். அது அவளுக்குத் துளியும் பிடிக்கவில்லை. நான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கான குரலை இந்தத் தருணத்திலேயே பதிவுசெய்தால்தான் உணர்வு வெளிப்பாடுகள் சரியாக இருக்கும் என்றும், தனக்குப் பதிலாக வேறொரு சிறுமியின் குரலைப் பின்னர் பதிவுசெய்தல் அதுவும் போலியாக அமைந்துவிடும் என்றும் அவள் அந்த இயக்குநரிடம் தெரிவித்திருக்கிறாள். அதற்குப் பதிலளிக்கும் வகையில், ஃபனாஹி எங்கள் எல்லோரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு படம் இயக்குகிறார் என என்னைக் குறை கூறுவதைப் போலத் தெரிவித்திருக்கிறார். அது ஐடாவுக்குக் கோபத்தை மூட்டியிருக்கிறது. “ஃபனாஹியைப் பற்றிப் பேசாதீர்கள். உங்கள் எல்லோரையும் விட ஃபனாஹியின் ஒற்றைத் தலைமயிர் மதிப்புமிக்கது” (இது ஈரானிய பாணி) எனத் தெரிவித்திருக்கிறாள். இவ்வாறு அவள் தெரிவித்தது முற்றிலுமாகத் தொழில்முறையிலான அணுகுமுறை அல்ல என்பது நமக்குப் புரிகிறது. அவர்களுக்குத் தேவையான நடிப்பை அவளால் வழங்கவும் முடியவில்லை. ஒரு சிறுவரோ சிறுமியோ புதிதாக ஒரு இயக்குநரின் கீழ் பணியாற்றச் செல்லும்போது அது அவர்களுக்கு அவ்வளவு எளிதான செயலாக அமைவதில்லை.
‘The White Balloon’ திரைப்படத்தில் ஐடாவின் கதாபாத்திரம் மிக வலுவானது. உங்கள் திரைப்படங்களில் உள்ள மற்ற பெண் கதாபாத்திரங்களுடன் ஒப்புமை உடையது. ஆனால், ஐடாவின் சகோதரியான மினா ‘The Mirror’ திரைப்படத்தில் வேறு வகையிலான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட அவள் இரண்டு கதாபாத்திரங்களை நடிப்பதைப் போன்ற சவால் அது. முதலில் புனைவார்த்தமான கதைக் கூறலிலும், பிறகு ஆவணப்படத்தின் தன்மைக்கு மாறும் திரைப்படத்திற்கேற்ற வகையிலும் என இரு விதமான நடிப்பை அவர் வெளிப்படுத்த வேண்டியிருந்தது. பெண்களுக்கு இயல்பாகவே உள்ளுறைந்த பலம் இருக்கிறது என்றும், அதுதான் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கையாளுவதற்கான ஆற்றலை அவர்களுக்கு வழங்குகிறது என்றுதான் உங்களுடைய இந்த இரண்டு திரைப்படங்களிலும் சொல்ல வருகிறீர்களா?
எனக்கு என்ன தேவையோ அதை நான் தேர்வுசெய்யும் நடிகர்களிடமிருந்து பெற்றுவிட முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. இதில் எனக்கு ஏற்படும் முதல் சவாலே, எனது கதாபாத்திரத்தில் நடிக்கப் போகும் நபரைப் பற்றி அதிகளவில் நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். ‘The Mirror’ படத்திற்கு ஐடாவின் சகோதரியான மினாவைத் தேர்வு செய்தேன். ஏனெனில் அவளுக்குள் ஒருவிதமான வெறுமையுணர்வும், இந்த உலகத்திடம் தன்னை நிரூபிக்க விரும்பும் உறுதியும் இருப்பதை என்னால் உணர முடிந்தது. வெறுமையுணர்வு எனும் இந்த எதிர்மறையான பண்பை நான் நேர்மறையான பண்பாக எனது திரைப்படத்தில் மாற்றிவிட்டேன். ஒரு இயக்குநரின் மிக முக்கியமான அம்சமே, தான் உருவாக்கியிருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கப் போகும் நடிகர்களின் பலத்தையும் பலவீனத்தையும் புரிந்துகொள்வதும், அதன்மீதே அந்தக் கதாபாத்திரத்தை வளர்த்தெடுப்பதுவுமே ஆகும். சிறுவர்களை வைத்துப் படமெடுக்கும் குழு ஒரே வகையிலான பாணியையே பின்பற்றி வருகிறார்கள். நான் அவர்களிடமிருந்து மாறுபட்டு நிற்கிறேன். துவக்கத்திலேயே, அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை நான் நடித்துக் காண்பித்துவிடுவேன். என்னை நகலெடுக்க அவர்கள் முயற்சித்தாலும்கூட, அவர்களுடைய சுயத்தை அந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்றிணைப்பதற்கான வெளிகளையும் உருவாக்கிக் கொடுப்பேன். இவ்வகையில், காட்சிகளின் கோணத்திலும் சரி, திரைப்படத்தின் கோணத்திலும் சரி, விஷயங்கள் மிகக் கச்சிதமாகப் பொருந்தி வந்துவிடுகின்றன.
உண்மையில், ‘Bicycle Thieves’ திரைப்படத்திற்குப் பிறகு, இந்தப் படங்களில்தான் சிறுவர்கள் மிகச் சிறப்பாக நடித்திருப்பதை நான் பார்க்கிறேன்…
‘The Circle’ எனும் எனது மூன்றாவது திரைப்படம் ‘Bicycle Thieves’ஸின் உந்துதலில் இருந்து உருவாக்கப்பட்டதுதான். 15 அல்லது 16ஆவது வயதில் அந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன். அது ஏதோவொரு வகையில் மிகுந்த ஆர்வமூட்டக்கூடிய ஒரு திரைப்படமாக எனக்கு இருந்தது. குறிப்பாக, தனது சைக்கிளைத் தொலைத்துவிடும் ஒருவன் வேறு வழியே இல்லாமல், கட்டாயத்தின் பேரில் வேறொரு சைக்கிளைத் திருடச் செல்லும் இடம் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
‘The Circle’ திரைப்படத்தின் முழுக் கட்டமைப்பையும் பார்க்கும்போது, இந்தத் தலைப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது. இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொரு தனிநபரும் பிறிதொருவருடன் தொடர்புடையவராக, இணைக்கப்பட்டவராக இருக்கிறார்கள். இதிலுள்ள பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு சூழலில் சிக்கியிருக்கிறார்கள் என்று கதை எழுதியிருப்பது மிகச் சிறந்த எண்ணமாகும். மேலும் ஈரானில் அந்தத் திரைப்படத்தை உங்களால் இயக்க முடிந்திருக்கிறது. அதுவே பெரிய ஆச்சரியம்தான்.
‘The Circle’ குறித்துச் சிறியளவில் முன்பு உரையாடினோம். இப்போது விரிவாக அதுபற்றிப் பேசுவோம். எனது முதல் திரைப்படமான ‘The White Balloon’ஐப் பொறுத்தவரையில், என்னால் ஒரு செயலை நிறைவுசெய்ய முடியும் என்பதையும், ஒரு முழு நீளத் திரைப்படத்தை இயக்க முடியும் என்பதையும், நடிகர்களிடமிருந்து மிகச் சிறந்த நடிப்பைப் பெற்றுவிட முடியும் என்பதையும் எனக்கு நானே நிரூபித்துக்கொள்ள வேண்டுமென விரும்பினேன். ஆனால், ‘The Mirror’ திரைப்படத்தை இயக்கத் துவங்கியபோது, இனியும் நான் திரைப்பட உருவாக்கம் குறித்துச் சந்தேகங்களுடன் இருக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். எனினும் இதுவொரு துவக்கம் மட்டும்தான். அதாவது, ‘எனது செயல்பாட்டுக் களத்துக்கான’ ஒரு துவக்கம் என்று இதைச் சொல்லலாம். இப்போது நான் வடிவம் குறித்தே அதிகம் யோசிக்கலானேன். திரைப்படத்தை ஒரு நிலை வரை இயல்பாக வளர்த்தெடுத்துவிட்டுப் பிறகு திடீரென அனைத்தையும் மாற்றிவிடலாம் என்றொரு யோசனை எனக்குத் தோன்றியது. சிறுவர்களின் உலகத்தில் உள்ள ‘மென்மைத்தன்மை’ எனக்குப் பிடித்திருந்தது என்றாலும், நான் அதையும் கடந்து செல்ல விரும்பினேன். மேலும் எனது பால்ய பருவத்தில் சிறுகதைகளின் மீது எனக்கிருந்த அலாதியான நேசிப்பும் இந்தத் திரைப்படத்தின் எழுத்துப் பணியின்போது எனக்கு நினைவுக்கு வந்தது. ஒரு புள்ளியில் துவங்கி, அதே புள்ளியில் வந்து நிறைவுபெறும் வகையில் எழுதப்பட்டிருந்த சிறுகதைகள் எனக்கு ஆர்வமூட்டி இருந்தன. ‘The White Balloon’ திரைப்படத்தில், இயல்பான நேரத்தையே திரைப்பட நேரமாகக் கட்டமைக்க நான் விரும்பினேன். அந்தக் கதையின் பரப்பு எவ்வளவு நேரம் யதார்த்தத்தில் நீள்கிறதோ அதே அளவிலான நேரத்தில்தான் திரைப்படமும் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த முறையியலை ‘The Circle’ திரைப்படத்தில் பின்பற்ற முடியவில்லை. ஏனெனில் வெவ்வேறு வயதுடைய நான்கு பெண்களைச் சுற்றி நிகழும் கதை அது. இந்த நான்கு பெண்களுமே ஒரே பெண்தான், அவளுடைய வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டமே இங்குத் தனித்தனியாகப் பதிவுசெய்யப்படுவதைப் போலத் திரைப்படத்தை உருவாக்க முயன்றேன். முதல் கதை, திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்ணைப் பற்றியது, இரண்டாவது கதை குழந்தையுடன் திருமணமாகும் பெண்ணைப் பற்றியது, மூன்றாவது கதை தாயாக இருக்கும் ஒரு பெண் வீட்டுச் சூழலில் இருந்து வெளியேற விரும்புவதைப் பற்றியது, நான்காவது கதை ஏற்கெனவே வீட்டுச் சூழலை விட்டு வெளியேறி இருக்கும், பாலியல் தொழிலாளியாக இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றியது. இது மாதிரியான ஒரு மூடுண்ட சமூகத்தில், தப்பிப்பதற்கான வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது. இவ்வாறு, ஒரு பெண்ணின் பல வாழ்நிலைகளைக் காட்சிப்படுத்துவதன் மூலம் மிகக் குறுகிய ‘திரைப்படக் காலத்திற்குள்’ ஒரு பெண்ணின் வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு பெண்கள் நடித்துள்ளனர். முதல் பெண் ஒரு சிந்தனைவாதி ஆவர். அவரை நாங்கள் கையடக்கக் கேமராவின் மூலம் படம் படித்தோம். இரண்டாவது பெண்ணைப் படம் பிடிக்கும்போது கையடக்கக் கேமராவைப் பயன்படுத்தவில்லை. இப்போது ஒரு டிராலியில் கேமராவைப் பொருத்தியிருந்தோம். அடுத்த பெண்ணுக்குப் பகல்நேரக் காட்சிகள் இல்லை. அது இரவு என்பதால் கேமராவைக் கதாபாத்திரத்திற்கு மிக அண்மையில் நிறுத்திப் படம் பிடித்தோம். மேலும் ஸ்டாட்டிக் கேமராவைப் பயன்படுத்தினோம். நான்காவது பெண்ணைப் படம் பிடிக்கும்போது கேமரா துளியும் அசைவதே இல்லை. கதாபாத்திரமும் அசைவதில்லை. மேலும் இக்காட்சிகளில் ஒலியையும் மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தினோம். கிட்டத்தட்ட மௌனக் காட்சிகளாகவே இத்தருணங்கள் நகருகின்றன. ஒளி மிகக் குறைவாகவும் இருளே முழுதாக வியாபித்திருப்பதாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது. திருமணம் இங்கு சாவுச் சடங்கை ஒத்ததாக நிகழ்த்தப்படுகிறது. பல திரைப்பட இயக்குநர்கள் ஒரே விதமான பாணியில் திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள். ஆனால், நான் அவ்வாறு செயல்படுவதில்லை. ‘The Circle’ – அணுகுவதற்கும் உருவாக்குவதற்கும் மிகக் கடினமான ஒரு திரைப்படம். அத்திரைப்படத்தை நிறைவுசெய்தபோது, அதுவே எனது கடைசித் திரைப்படம் எனும் உணர்வு எனக்குள் எழுந்தது. ஆனால், எங்கிருந்தோ ‘The Offside’ திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தத் திரைப்படத்திற்கான எங்கள் அணுகுமுறை மிக எளிமையானதாக இருந்தது. ஆவணப்படத் தன்மையில் அதை இயக்கினோம். நிஜமான கால்பந்தாட்டம் நிகழ்ந்துகொண்டிருந்த நேரத்தில் அதற்கு அண்மையில் இருந்தபடியே இப்படத்தை நாங்கள் படம் பிடித்தோம்.
ஈரானில் ‘Offside’ திரைப்படம் இயக்கியது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? கட்டுரை ஒன்றில் அரசு அதிகாரிகளிடம் நீங்கள் வேறொரு திரைக்கதையையே சமர்ப்பித்திருந்ததாகவும், பிறகு அது போலியானது என்று கண்டறியப்பட்டுவிட்டதாகவும் படித்தேன். இந்தத் திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஏதோவொரு விபரீதமான முடிவை நோக்கி அது நகர்ந்துகொண்டிருக்கிறது எனும் உணர்வைப் பெற்றேன். இதேபோன்ற உணர்வு உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் திரைப்பட உருவாக்கக் காலத்தின்போதும் இருந்ததா? எந்த நேரத்திலும் காவல்துறையினரால் இடர்பாடு ஏற்படலாம் எனும் சூழல் நிலவியதா?
ஈரானில் பல விஷயங்கள் சிக்கலுக்கு உரியவைதான். நாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் பல்வேறு முறைமைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. பார்சி மொழியில் ஒரு பழமொழி இருக்கிறது, ‘கதவுகளின் வழியே உள்நுழைய முடியவில்லை எனில், ஜன்னல்களின் மீது தாவி ஏறி உள்நுழையுங்கள்.’ இதையே நாம் திரைப்பட உருவாக்கத்திலும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதேபோல, ஒவ்வொரு திரைப்பட உருவாக்கத்தின்போதும் ஒரு முறையியலை மட்டுமே கையாள முடியும். அடுத்தமுறை அதிகாரிகள் விழிப்புடன் இருக்கத் துவங்கிவிடுவார்கள்.
அதிகாரிகளிடம் இந்தத் திரைக்கதையைக் கொடுத்தோம். ஆமாம், அதற்கும் படத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. சில இளைஞர்கள் கால்பந்தாட்டம் பார்க்கச் செல்வதைப் பற்றியதே இந்தப் படம் என்றே தெரிவித்திருந்தோம். அவர்கள் அதற்கு அனுமதி அளித்ததும், படப்பிடிப்பைத் துவங்கினோம். காவல்துறையினர் எங்களுக்குத் தொந்தரவு கொடுக்கவில்லை என்றாலும், இந்தப் படம் வெளியீடு சார்ந்து நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டோம். என்னுடைய முந்தைய திரைப்படங்களில் இருந்த உள்ளடக்கம் அரசுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதாலேயே இந்தப் படத்தை வெளியிடுவதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். அவர்களுடைய விருப்பங்களுக்குச் செவி சாய்த்தால் மட்டுமே இந்தத் திரைப்படத்தை வெளியிட அனுமதிப்போம் என அவர்கள் தெரிவித்தார்கள். இந்த நடைமுறை பிரச்சனை முடிவுற ஒரு வருடம்கூட ஆகலாம் என்றும் என்னிடம் சொல்லப்பட்டிருந்தது. காலம் மிக வேகமாக நகரத் துவங்கியது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்பாகவே இந்தத் திரைப்படத்தை வெளியிட்டுவிட வேண்டுமென்பதில் தீவிரமாக இருந்தேன். அதனால், அனுமதி குறித்துக் கவலைப்படாமல் செயலில் இறங்கிப் படப்பிடிப்பைத் துவங்கிவிட்டோம்.
அரங்கத்திற்கு வந்து கால்பந்தாட்டத்தைப் பெண்கள் பார்ப்பது குறித்து ஈரானில் உள்ள ஆண்கள் என்ன நினைக்கிறார்கள். அதை அவர்கள் வரவேற்கிறார்களா அல்லது பொதுவெளி அரங்கம் என்பது ஆண்களுக்கு மட்டுமேயானது எனக் கருதுகிறார்களா?
புரட்சிக்கு முன்பான காலத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் கால்பந்தாட்டங்களை அரங்கிற்கு வந்து பார்ப்பதற்கு அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். 1979இல் நிகழ்ந்த புரட்சிக்குப் பிறகுதான் இப்போது நிலவும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அரசுடைய ‘கருத்துகள்’ பொதுமைப்படுத்தப்பட்டபோதும், திணிக்கப்பட்ட போதும்தான் சிக்கல் உருவெடுக்கத் துவங்கியது. மக்களும் மெல்ல மாற்றமடைய, அரசின் கொள்கைகளுக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளத் துவங்கிவிட்டார்கள். என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி, பெண்கள் அரங்கிற்கு வந்து கால்பந்தாட்டத்தைப் பார்ப்பதில் பெரும்பாலான ஆண்களுக்கு எவ்விதப் பிரச்சனையும் இல்லை. ஆனால், பெண்கள் இதில் பங்கேற்கத் தடைவிதிக்கப்பட்டதால், ஒட்டுமொத்தச் சூழமைவும் இப்போது ஆண்களுக்கு ஏற்றதாகவும், கால்பந்தாட்ட வெளியென்பது ஆணாதிக்கக் கொந்தளிப்பு நிறைந்த இடமாகவும் மாறிவிட்டது.
இந்தத் தடையை மீறிப் பெண்கள் போட்டியைப் பார்க்க முயற்சித்தால் என்ன நடக்கும்?
ஹிஜாப்பைக் கடைப்பிடிக்காத பெண்களுக்கு நடப்பதேதான் இங்கும் நடக்கும். பெண்களின் தலை மயிர் சிறிதளவு வெளியில் தெரிந்தால்கூட உடனே அதை ‘கெட்ட ஹிஜாப்’ எனக் குறிப்பிடுவார்கள். தடையை மீறி போட்டியைப் பார்க்க முயலும் பெண்களைக் கட்டுப்படுத்துவதற்கு என்றே ஒரு குழுவை அரசு வைத்திருக்கிறது. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம், கைது செய்யப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம். அல்லது அவர்களுக்குப் பதிலாக, அவர்களின் குடும்பத்தில் இருந்து வேறு யாரேனும் ஒருவர் சிறை செல்ல வேண்டியிருக்கலாம். அந்தப் பெண்கள் இதுபோன்ற ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில் மீண்டும் தாம் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி அளித்தால் மட்டுமே சிறையில் இருந்து அவர்கள் வெளியேற்றப் படுவார்கள். இப்படித்தான் நடக்கும். ஆனால், இது எல்லாமே அரசு எப்படித் தன் சட்டத்தைக் கையாளுகிறது என்பதைப் பொறுத்தது.
இதைக் கொஞ்சம் விரிவாகச் சொல்ல முடியுமா?
நீங்கள் ஒன்றைக் கட்டுப்படுத்த நினைத்தாலோ ஒரு தடையை அமல்படுத்த நினைத்தாலோ அது சட்டத்திற்குட்பட்டதாகவே இருக்க வேண்டும். ஆனால், பெண்கள் கால் பந்தாட்டத்தைப் பார்ப்பதற்குத் தடை விதிக்கும் எந்தவொரு சட்டமும் அரசாலோ பாராளுமன்றத்தாலோ இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. இது ஒருவகையில் எழுதப்படாத சட்டமாகவே உள்ளது.
இந்தத் திரைப்படம் ஆவணப்படத்தைப்போல உருவாக்கப்பட்டிருக்கிறது. தொழிற்முறை நடிகர்களையும் நீங்கள் பயன்படுத்தவில்லை. போலவே, கதையும் நிகழ்நேரத்தில் நடக்கிறது. போட்டியில் விடப்படும் இடைவேளையும் படத்திலும் இருக்கிறது. இதுகுறித்து கொஞ்சம் விவரிக்க முடியுமா?
ஆமாம். அனைத்து நடிகர்களும் புதியவர்கள்தான். இந்தத் திரைப்படம் ஆவணப்படத்தைப் போலத்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதில் சில கதாபாத்திரங்களைப் புகுத்தியிருக்கிறேன். நாம் ஒரு ஆவணப்படத்தைப் பார்க்கிறோமா அல்லது திரைப்படத்தையா எனும் குழப்பத்தைப் பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டுமென நினைத்தேன். நிகழ்நேரத்தில் நகரக்கூடிய ஒவ்வொரு நொடியையும் அதே அசல் தன்மையுடன் திரைப்படத்தில் பிரயோகிக்க வேண்டும் எனவும் நினைத்தேன். படத்தில் வருகின்ற இடங்களும், நிகழ்வும், மனிதர்களும் அசலானவர்கள்தான். இந்த அசல் தன்மையைத் தக்கவைப்பதற்காகத்தான் தொழில்முறை நடிகர்களை நான் படத்தில் பங்கேற்கச் செய்யவில்லை.
திரைப்படத்தில் நடித்துள்ள பெண்களை எங்குக் கண்டடைந்தீர்கள்? கதையுடன் பொருந்தும் வகையில் அவர்களும் கால்பந்தாட்டத்தின் மீது பெரும் ஆர்வம் மிக்கவர்கள்தானா?
நான் திரைக்கதையை எழுதியதும், அதில் சிறப்பாக நடிக்கக்கூடிய மனிதர்களைத் தேடும் பணியைத் துவங்கிவிடுவேன். உதாரணத்திற்கு, ‘Tabriz’ திரைப்படத்தில் வரும் இராணுவ வீரனை ஈரானின் வடமேற்குப் பகுதியில் கண்டுபிடித்தேன். இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ள பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அனைவரும் பல்கலைக்கழக மாணவிகளாவர். அவர்களை எனது நண்பர்கள் மூலமாகவும், என்னுடன் பணிசெய்பவர்களின் மூலமாகவும், கல்லூரிகளுடன் எனக்குள்ள தொடர்புகள் மூலமாகவும் கண்டடைந்தேன். கால்பந்தாட்டத்தின் மீதான அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தவரையில், ஆமாம், உண்மையாகவே அவர்களுக்கு அவ்விளையாட்டின் மீது விருப்பம் இருக்கத்தான் செய்கிறது. நேரடியாக அவ்விளையாட்டைப் பார்க்கும் விருப்பமும் அவர்களிடம் உண்டு. ஆனால், நல்லவேளையாக ஈரானில் நடிகர்களுக்குப் பொதுவாக எவ்விதப் பிரச்சனையும் ஏற்படுவதில்லை. இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்தான் இதுபோன்ற முயற்சிகளால் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு, ஏற்கெனவே எனது முந்தைய திரைப்படங்களுக்காக இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறேன் என்பதால், எனக்கு இதுகுறித்துப் பெரியளவில் கவலையில்லை. எனக்கு இது பழகிவிட்டது. நடிகர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்பது மட்டுமே இதில் ஒரே ஆதரவளிக்கும் அம்சமாகும்.
இந்தத் திரைப்படத்தில் நகைச்சுவை ஓர் இழையாக இருக்கிறது. ஒரு கதையைச் சொல்வதில் நகைச்சுவை எந்தளவிற்கு முக்கியமானது எனக் கருதுகிறீர்கள்?
ஒரு பெண்ணிற்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதிகளில் ஒன்றாக, தனது பாலினத்தையே மறைத்துக்கொண்டு ஆண் வேடமிட்டு ஒரு சமூக நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டிய சூழலை நாம் கட்டமைத்துள்ளதைப் பார்க்கிறேன். இது ஒரு நகைச்சுவை. ஆனால், அவல நகைச்சுவை. இதைப் பார்க்கும்போது உங்களுக்குச் சிரிப்பு உண்டாகலாம் ஆனால், தானொரு பெண் என்பதையே மறுத்து ஒரு நிகழ்வில் பங்கேற்கும் பெண்களை நினைத்து உங்களால் வருத்தமடையாமல் இருக்க முடியாது. திரைப்படத்தில் வேண்டுமென்றே பர்தா அணிந்த ஒரு பெண்ணைச் சேர்த்திருந்தேன். இதன்மூலம் மத நம்பிக்கையற்றவர்களும் இந்தக் குழுவிற்கு வெளியில் இருப்பவர்களும் மட்டுமே பிரச்சனைகளை எதிர்கொள்வதில்லை, மாறாக மதநம்பிக்கையுள்ள, பர்தா அணிந்துகொள்வதில் மறுப்பேதும் இல்லாத ஒரு பெண், அந்த விளையாட்டு நிகழ்வில் பார்வையாளராகப் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை என்னால் விவரிக்க முடிந்தது. ஒரு போட்டியைக் காண வேண்டுமெனும் எளிய விருப்பத்தையோ ஆண்கள் குழுமியிருக்கும் ஒரு அரங்கத்தில் பங்கேற்றிருப்பதையோ ஒடுக்குவதன் மூலம் மதநம்பிக்கையுள்ளவர் மதநம்பிக்கையற்றவர் அனைவரையும் கூட்டாகவே அரசும் அமைப்பும் நியாயமற்ற முறையில் நடத்துகின்றன. வெவ்வேறு சமூகப் பொருளாதார நிலைகளிலுள்ள மக்களின் மீதும் இதுபோன்ற தடைகளும் கட்டுப்பாடுகளும் நிறையவே விதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு படைப்பாளியாக எனது நோக்கமென்பது, இதுபோன்ற வேறுபட்ட சமூகக் குழுக்களைப் பிரதிபலிக்கக்கூடியவர்களை ஒன்றிணைத்து அவர்கள் அனைவருக்கும் பாகுபாடில்லாமல் விதிக்கப்பட்டுள்ள தடைகளைப் பேசுபொருளாக மாற்றுவதுதான். பெண்கள் இதுபோன்ற இடங்களில் இருக்கக் கூடாது என்று சொல்பவர்கள், அதுவொரு ரவுடித்தனமான நிகழ்வு என்றும் அங்கு அருவருப்பான சொற்கள் போட்டியாளர்கள் மத்தியில் பகிரப்படுகின்றன என்பதையும் ஒரு காரணமாகச் சொல்கிறார்கள். பெண்கள் இதுபோன்ற செயல்களைப் பார்க்கக் கூடாது என்றும் தெரிவிக்கிறார்கள். ஆனால், இந்த விலக்கத்திற்கான காரணங்களை ஆராய்ந்து அண்மைக் காலத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று, ஆண் போட்டியாளர்கள் தங்கள் உடல் பாகங்கள் தெரியும்படியாக உடைகளை அணிந்து விளையாடுவதைப் பெண்கள் பார்ப்பது சரியானதல்ல என்று தெரிவித்திருக்கிறது. இதுவும் பார்வையாளர்களாகப் பெண்கள் பங்குபெறுவதை விலக்குவதற்கான கூடுதல் காரணமாக அமைந்துவிட்டிருக்கிறது.
தோற்றத்தை மாற்றிக்கொள்ளுதல் இந்தத் திரைப்படத்திலும் உங்களுடைய பிற திரைப்படங்களிலும் ஒரு முக்கியக் கூறாக இருந்துள்ளது. இதுபோன்ற புத்திசாலித்தனமான செய்கைகள் அரசை அச்சுறுத்தும் என்று நினைக்கிறீர்களா?
தோற்றத்தை மாற்றிக்கொள்ளுதல் என்பது ஈரானில் தயாரிக்கப்படுகின்ற பெரும்பாலான திரைப்படங்களில் மிக முக்கியக் கூறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் பல அர்த்தங்களும் உட்பொதிந்துள்ள செய்திகளும் இருக்கின்றன. இது அதிகார அமைப்புகளை அச்சுறுத்துகிறது. இதன் காரணமாகவே ஈரானில் தொலைக்காட்சி துறை முற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதுபோல உட்பொதித்துப் பகிரப்படும் செய்திகளை அல்ல, முதலில் இவ்வாறான கேள்விகளையே அதிகார அமைப்புகள் விரும்புவதில்லை. பெண்கள் குறித்தும், சமூகத்தில் அவர்களுடைய இடம் குறித்தும், ஒரு கால்பந்தாட்டத்தைப் பார்க்க விரும்பும் அவர்களுடைய விருப்பம் குறித்தும் கேள்வியெழுப்புவதை அதிகார அமைப்புகள் தமக்கு விடுக்கப்படும் சவாலாகப் பார்க்கின்றன. அதை அணுகுவதற்குத் தேவையான அறிவுத்தள வலிமையோ அதைக் கையாளுவதற்குத் தேவையான சகிப்புத்தன்மையோ அவர்களிடம் துளியும் இல்லை. ஈரானிய ஆட்சி ஒரு மதவாத ஆட்சிதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மதரீதியிலான பல கட்டுப்பாடுகள் இருந்தாலும் இதுபோன்ற யோசனைகள் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்களாலும் அவர்கள் மதத்தை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் சிலர் கூட இதுபோன்ற விலக்கங்களை விரும்புவதில்லை. ஆனால், அவர்கள் அதிகார வட்டத்திற்கு வெளியில் இருக்கிறார்கள். அவர்கள் இதுகுறித்துப் பேச விரும்பினால், மத நம்பிக்கையைக் குறுகிய பார்வையுடன் அணுகுபவர்களால் இவர்களுக்கும் பிரச்சனை உருவெடுக்கவே வாய்ப்புள்ளது. திரைப்படங்கள் மூலம் நாம் யாருடனும் சண்டையிடவோ யாருக்கும் சவால் விடுக்கவோ விரும்புவதில்லை. ஒரு சமூகச் சிக்கல் குறித்துக் குரலெழுப்பவே விரும்புகிறோம். இதுபோன்ற ஒரு சிக்கல் இருக்கிறது, இதுகுறித்த உங்கள் வரையறைகளை மறுபரிசீலனை செய்யுங்கள் என அரசாங்கத்திடம் நேரடியாக ஓர் உரையாடலைத் துவங்குகிறோம். கட்டுப்படுத்துவதற்கும் புறந்தள்ளுவதற்கும் பதிலாக, இதே விஷயங்களை வேறுவகையில் ஜனநாயகப்பூர்வமாக அணுகலாம் என நாங்கள் முன்மொழிகிறோம்.
உங்கள் ‘This is Not a Film’ திரைப்படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், அதில் சமீபத்தில் வெளியான பல ஹாலிவுட் படங்களின் DVDகள் காட்டப்பட்டிருந்தது குறித்துக் கேட்க விரும்புகிறேன். அவை நிச்சயமாகவே உங்கள் விருப்பத்திற்குரியதாக இருக்காது என்று நம்புகிறேன். அத்திரைப்படங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்டவையா?
பெரும்பாலான DVDகள் கடத்தப்பட்டு எங்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டவை. சட்டவிரோதமாக இவற்றை விநியோகம் செய்யும் சிலர் இங்குள்ளனர். அவர்களின் வாயிலாகவே மக்களுடைய வீடுகளுக்குள் இவை நுழைகின்றன. சில சமயங்களில் நான் இயக்கிய திரைப்படங்களின் பிரதிகளையே என்னிடம் விற்பதற்கு எடுத்து வந்திருக்கிறார்கள். இன்னும் ஒன்றையும் சொல்ல வேண்டும். பெரும்பாலான ஹாலிவுட் திரைப்படங்கள் இணையத்தில் பதிவிறக்கும் வகையிலேயே உள்ளன.
சாதுர்யமான இந்தத் திரைப்படத்தின் வடிவத்தை எப்படிக் கண்டடைந்தீர்கள்?
திரைப்படத்தில் நீங்கள் பார்க்கக்கூடியவை நான் வாழ விதிக்கப்பட்டுள்ள சூழலிலிருந்து உருகொண்டவை. எனது மனம் எந்தளவிற்குத் தடுமாற்றத்துடனும் பதற்றத்துடனும் உள்ளது என்பதை உங்களால் அதில் பார்த்திருக்க முடியும். இதன் திரைக்கதையை எழுதும்போது எனது மனமும் உடலும் நல்ல நிலையிலேயே இல்லை. மன அழுத்தத்தில்தான் இருந்தேன். அதனால்தான் கடற்கரையை ஒட்டியிருந்த வீட்டிற்குச் சென்றேன். அந்தச் சூழல் எனக்குச் சிறிதளவு ஆசுவாசமளித்தது என்றாலும், மன அழுத்தத்தில் இருந்து முழுவதுமாக விடுபட முடியவில்லை. எது உண்மை, எது பொய்யென்றே என்னால் பிரித்துணர முடியவில்லை. இவ்வுணர்வு திரைப்படத்திற்குள் கடத்தப்பட்டிருக்கிறது. இப்போதும்கூட அதேபோன்ற சூழமைவில்தான் இருப்பதாக உணர்கிறேன். உங்கள் எதிர்காலம் என்னவாக இருக்கப் போகிறது என்பது குறித்த எவ்விதக் குறிப்புமற்று இருப்பது உண்மையிலேயே கொடுமையானது. சிறையில் எனக்கு மன அமைதி கிடைத்தது என்றாலும், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. சிறையின் விதிகளுக்குட்பட்டு நான் நடத்தப்பட்டேன். ஆனால், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகும், பணி செய்ய அனுமதிக்கப்படாமல் இருப்பது இன்னும் பெரிதான ஒரு சிறையில் இருப்பதைப்போல உணரச் செய்தது. சூழல் மாறுபட்டிருந்தாலும், வேலை செய்ய அனுமதிக்கப்படாததாலும், இன்னும் சிறையில் இருப்பதாகவே உணர வேண்டியிருக்கிறது. நீண்ட காலத்திற்கு, நான் சமூகத்தின் ஓர் அங்கமாக இருந்தேன், அதனால் என்னால் சமூகவயப்பட்ட, யதார்த்த திரைப்படங்களை உருவாக்க முடிந்தது. ஆனால், இப்போது நான் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். முன்பு இயங்கியதைப்போல செயல்பட முடியவில்லை. அதனால், யதார்த்தத்தில் எனக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்தும், எனது கற்பனையில்தான் நிகழ்ந்து வருகின்றன என்று எனக்கு நானே கற்பித்துக் கொண்டுள்ளேன். யோசிக்கக்கூடிய எது குறித்தும் என்னால் திரைப்படம் இயக்க முடியாமல் இருக்கிறது. அரசு இத்தகைய உலகைத்தான் எனக்கு உருவாக்கியுள்ளது. சில நேரங்களில் என்னுடைய சொந்த எண்ணங்களுக்கே நான் கைதியாக இருப்பதைப்போல உணருகிறேன். இந்தப் பரந்த சிறைச்சாலையில் வாழ்வது மிகக் கடினமானது. அனைத்தும் உள்ளடங்கிய ஒரு நரகத்தைப்போல இது இருக்கிறது. ஒரு சிறு வெளிக்குள்ளாகவே அனைத்தையும் சுவீகரித்துக்கொள்ளும் சூழலில் நான் சிக்குண்டிருக்கிறேன். எதுவும் முன்காலத்தில் இருந்ததைப்போல மீண்டும் இயல்புடன் இருக்கப் போவதில்லை.
உங்கள் முந்தைய திரைப்படங்களின் காட்சிகளில் ஆழம் இருக்கும், தொலைவிலிருந்தே பல காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும். இது போன்ற முறைமைகள் எதுவும் இல்லாமல் ஒரே வீட்டிற்குள் நடக்கும் வகையில் திரைப்படமாக்க எப்படித் திட்டமிட்டீர்கள்?
வெளிப்புறங்களில் படம் பிடிப்பதுதான் எனது பாணியாக இருந்தது. சிறிய வெளிக்குள் சுருங்கும்போது, குறைவான சாத்தியங்களே இருப்பதாக உணருவீர்கள். ஆனால், எனது சூழலைப் பொறுத்தவரையில், பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜன்னல் வழியாகக்கூட வெளியுலகை என்னால் பார்க்க முடியாது. நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை ஒருவரும் அறிந்துவிடக் கூடாது என்பதால் ஜன்னலின் திரைச் சீலைகளைக்கூட இழுத்து மூட வேண்டிய நிலையில் இருந்தோம். நிலபுல ஆழங்களை ஏற்படுத்த முடியாத சூழல். அதனால், இடத்தை விட மனிதர்களைக் கவனப்படுத்தும் முறைமையைக் கையாள வேண்டியதாகியது. இத்திரைப்படத்தில் பெரும்பாலும் மக்கள்தான் கதையை நகர்த்திச் செல்கிறார்கள். சிறிய இடம் என்பதால் ஒளியமைப்பைக்கூட நமக்கேற்ற வகையில் அமைக்க முடியாது. நீங்கள் கவனித்திருந்தால், எனது முந்தையை திரைப்படங்களில் மக்களின் கற்பனைகளுக்கோ கனவுகளுக்கோ கூட நான் இடம் கொடுத்ததில்லை. யதார்த்தத்தைக் கடந்த எதுவும் எனக்குத் தேவையானதாக இல்லை. ஆனால், எனக்கு அமைந்ததுள்ளதைப்போல நெருக்கடியான ஒரு சூழல் நிலவினால், வேறு விதமான விதிகளைத்தான் பின்பற்றியாக வேண்டும். எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் வெளிப்புறத்திலோ, இந்த நாட்டிற்கு வெளியிலோ கூட திரைப்படத்தை இயக்க நான் விரும்புகிறேன். அவ்விதமான ஒரு வாய்ப்பு கைதாகும் சமயத்தில் எனக்கு வாய்த்தது. ‘A Thousand Splendid Suns’ நாவலைத் தழுவி திரைப்படம் இயக்குமாறு என்னை அணுகினார்கள். ஆனால், இப்போது சூழல் எனது விருப்பத்திற்கு எதிர்த் திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது.
‘அசுத்தமான நாய்களுக்கு’ அடைக்கலம் கொடுக்கும் திரைக்கதையாசிரியர் எனும் கருத்தை எப்படி யோசித்தீர்கள். அது உங்கள் நிலையை வேறொரு முறையில் வெளிப்படுத்துவதாக இருந்தது.
நாய்களைச் செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது ஈரானில் தடைசெய்யப் பட்டிருக்கிறது. குறிப்பாக, நாய்களைத் தெருவில் நடைக்கு அழைத்துச் செல்வதோ காரில் அவற்றுடன் பயணிப்பதோ சட்டவிரோதம். இதுபோன்ற ஒரு செய்கைக்காகக் காவலர்கள் உங்களைக் கைது செய்யலாம். இது நியாயமற்றது என மக்கள் கருதுவதால், இந்தச் சட்டத்துக்கு எதிராக அவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். பலர் தங்கள் வீடுகளில் நாய்களை வளர்த்து வருகிறார்கள். டெஹ்ரானில் ஒரு இடத்தில் நாய்களை விற்கிறார்கள். இதுவும் சட்டவிரோதம்தான் என்றாலும், மக்கள் இதிலும் ஈடுபடவே செய்கிறார்கள். நாய்களைக் கொடுமை செய்வதோ, அதன் உரிமையாளர்களின் எதிரிலேயே கொலை செய்வதோ இங்கு அடிக்கடி நடக்கூடிய ஒரு செயல்தான்.
சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் திரைப்படப் போஸ்டர்கள் எதைக் குறிக்கின்றன? உங்கள் முந்தைய கால இயங்குதலையா?
அதில் பெரும்பாலான போஸ்டர்கள் எனது திரைப்படங்களுடையவைதான். எனினும், எனது மாணவப் பருவத்தில் நான் பார்த்த சில திரைப்படங்களின் போஸ்டர்களும் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ‘Bicycle Thieves.’ முன்பே கூறியதைப்போல என் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் அது.
மீண்டும் திரைப்படங்களை இயக்குவதற்கான சட்டப்பூர்வ உரிமையைப் பெறுவது தொடர்பாக, அரசாங்கத்தை எவ்வகையிலும் தொடர்பு கொண்டீர்களா?
இல்லை. புதிதாக எதுவும் நிகழவில்லை. அரசாங்கத்தைச் சேர்ந்த யாரையும் தொடர்புகொள்ள நான் முயன்றதில்லை. எனக்குத் தெரியாமல் எனது நண்பர்கள்தான் சில முயற்சிகளைச் செய்துள்ளனர். எப்படியேனும் இந்தப் பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென அவர்கள் விரும்பினார்கள். நானாக அவர்களிடம் எந்த உதவியும் கேட்கவில்லை என்றாலும், அவர்களாகவே அம்முயற்சிகளில் ஈடுபட்டார்கள். அவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை என்றே இத்தகைய முயற்சிகளுக்குப் பிறகு தெரிவித்தார்கள். அரசாங்கத்தில் இப்போது புதிதாக யாரேனும் பதவி ஏற்றிருக்கலாம். இதுவொரு பழைய முறையியல்தான். ஈரானில் பல இயக்குநர்களுக்கு இதுபோலத் திரைப்படங்களை இயக்கத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
தேசபக்தி, கடமை, மரியாதை இது மூன்றும் உங்கள் திரைப்படங்களில் முக்கியமான பேசுபொருளாக இருந்துள்ளன. இளம் வயதிலேயே இதுகுறித்து நீங்கள் ஆராய விரும்பியிருப்பது வியப்பளிக்கிறது.
இதுவொரு நல்ல கேள்வி. மிக முக்கியமான கேள்வியும்கூட. தேசியவாதம் என்றோ தேசபக்தி என்றோ குறிப்பிடும்போது அது பேரின வாதத்தையோ ஒரு நாட்டின் அல்லது இனத்தின் மேன்மையைப் பற்றியதோ இல்லை என்பதை முதலில் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். புரட்சிகர ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து அது பல மரபார்ந்த முக்கிய நிகழ்வுகளுக்கு, கொண்டாட்டங்களுக்கு எதிராகவே இருந்துள்ளது. புத்தாண்டு விழா போன்றவற்றுக்கு எதிராகவே அது இருந்துள்ளது. ஈரானிலுள்ள மக்கள் தங்கள் தேசிய அடையாளத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டுமென விரும்புகிறார்கள். தங்களுக்கென்று நீண்ட வரலாறு இருப்பதையும் தங்கள் வரலாற்றில் பல பெருமைமிகு தருணங்கள் உள்ளன என்பதையும் ஈரான் மக்கள் சொல்ல விரும்புகிறார்கள். தங்கள் பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும், தாங்கள் பண்பட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் என்பதையும், நாம் நமது கலாச்சார விழுமியங்களை மதித்தபடியே ஒன்றாகச் சேர்ந்து வாழ விரும்புகிறோம் என்பதையும் உலகத்திடம் தெரிவிக்க விரும்புகிறார்கள்.
ஜாபர் ஃபனாஹி இயக்கிய திரைப்படங்கள்:
- The White Balloon (1995)
- The Mirror (1997)
- The Circle (2000)
- Crimson Gold (2003)
- Offside (2006)
- This is Not a Film (2011)
- Closed Curtain (2013)
- Taxi (2015)
- Three Faces (2018)