மாட மாளிகைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன
அதன் மந்திரக்கதவுகளை உடைத்துக்கொண்டு
நீ உள் நுழைகிறாய்
பிரமாண்டத்தில் மூச்சுத் திணறுகிறது
வாசல்வழி தெரியாமல் மாளிகையின் உள்ளும் புறமுமாய்
அலைமோதித் திரிகிறாய்
கவனிப்பாரற்றுக் கிடக்கும் புற்களுக்காகவும்
நீரின்றி வாடிக்கிடக்கும் செடிகளுக்காகவும்
வருத்தம் கொள்கிறாய்
அவற்றுக்கு நீர் பாய்ச்சுகிறாய்
அவர்களோ உன் துயரத்தையும்
எரியும் வயிற்று நெருப்பையும்
வெறுமனே வேடிக்கை பார்த்தவர்கள்
நீச்சல் தடாகத்துள்
மேல் இருந்து எம்பிக் குதிக்கிறாய்
மாளிகைவாசிகளின் பாவக்கறைகள்
தூரத் தெறிக்கின்றன
பியானோவில் சூழ்நிலைக்குத் தக்கபடி
பாடலை இசைக்கிறாய்
அறைச் சுவர் எங்கும் தெறித்து அலைகிறது துயர்
சமையலறைகளில் எரிவாயு இருக்கிறது
களஞ்சியப்படுத்தப்பட்ட உணவுகள் இருக்கின்றன
எல்லாம் நிறைவாக இருக்கிறது
சமைக்கிறாய் பரிமாறுகிறாய் வயிறார உண்கிறாய்
புராதன அரியாசனங்களில்
கால் மேல் கால் போட்டு அமர்ந்து உரக்கச் சிரிக்கிறாய்
புகைப்படம் எடுக்கிறாய் வாட்ஸப்பில் பகிர்கிறாய்
நீ உனது வலிமையை உணரும் இந்நாளை
உயிருள்ள வரை மறக்கக்கூடாது எனச் சபதமெடுக்கிறேன்
நீ சங்கடப்படத் தேவையில்லை
இது உனது மாளிகை
இங்கிருக்கும் எல்லாம் உன் கண்ணீர்
உன் வியர்வை உன் இரத்தம்
சிறுகச் சிறுக உனது உண்டியல்களில்
திருட்டுப் போன சில்லறைக் குற்றிகள்
உனது தேசத்துக் குழந்தைகளின்
களவாடப்பட்ட எதிர்காலம்
தலையின் மீதிருக்கும்
தீராப் பெருங் கடன்
நீ எப்போது வேண்டுமானாலும் வரலாம் வசிக்கலாம்
கேள்விகேட்கலாம் விரட்டியடிக்கலாம்
அவ்வளவு பெரிய வசதிகளோடு வாழ்பவர்கள்
இவ்வளவு எளிய உனது துயரங்களைத் துடைப்பார்கள் எனக்
காலங்காலமாய்
எவ்வளவு அப்பாவியாய் நம்பிக்கொண்டிருந்திருக்கிறாய்
இல்லையா???
மாளிகை – றஹீமா பைஸல்
Credits: claire b cotts