தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் துளுக்கவேலி கிராமத்தைச் சேர்ந்த சரண்யாவும் அவரது இணையர் மோகனும் கடந்த 13.06.2022 அன்று படுகொலை செய்யப்பட்டனர். காதல் திருமணம் செய்த இருவர் படுகொலை செய்யப்பட்டால் அதில் சாதி முக்கியக் கூறாக இருப்பதோடு கொலை செய்யப்பட்டவர் பட்டியல் சமூகத்தவராகத்தான் இருக்கக்கூடும் என்று ஊர்ஜிதமாக நம்புமளவு பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான வன்முறை போக்குத் தமிழ்ச் சமூகத்தின் இயல்பாவே இருந்துவருகிறது. அதனடிப்படையில் சமூக வலைதளத்தில் இப்படுகொலையைச் சாதிய ஆணவப் படுகொலை எனக் கருதி தலித்துகள் கண்டனம் தெரிவிக்க ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றும் கோரிக்கையும் வலுபெற்றது. சம்பவம் நடந்த ஓரிரு நாளில் மற்றோர் உண்மையும் புலப்பட்டது. அது, இக்கொலையைத் திட்டமிட்டுச் செய்தது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சரண்யாவின் அண்ணன் சக்திவேலும் அவரது மைத்துனன் ரஞ்சித்தும் என்பதே.
கொலையுண்ட சரண்யாவின் இணையர் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த உண்மை வெளிவந்ததும் சாதி ஆணவக் கொலைகளுக்கு வழக்கமாகக் கடைபிடிக்கப்படும் சாதி இந்துக்களின் மௌனம் உடைந்தது. சமூகச் செயற்பாட்டாளர் முருகப்பன் மற்றும் ஜெசி தொகுத்த ‘நொறுக்கப்பட்ட மக்களும் மறுக்கப்படும் நீதியும்’ என்கிற நூலில் கடந்த 20 வருடத்திற்கும் மேலாகத் தலித் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளை ஆவணப்படுத்தியுள்ளனர். (இவையுமே வெளி வந்தவை மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் இனங்காணப்பட்டவை மட்டுமே) அந்தப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் திமுக மற்றும் அதிமுக என எந்த ஆட்சியிலும் தலித்துகளுக்கெதிரான வன்கொடுமைகளில் வேறுபாடில்லை. உண்மை நிலை இப்படியிருக்க சரண்யா – மோகன் கொலை வழக்கில், கொலை செய்தது பட்டியல் சமூகத்தவராக இருந்ததனால் இந்த ஒரு கொலையைக் கொண்டு இதுவரை தலித்துகளுக்கு எதிராக நிகழ்ந்த அத்துணை வரலாற்று வன்முறைகளையும் ஈடுசெய்யும் போக்கு உரையாடல்களில் தென்பட்டது. அவை மிக வெளிப்படையாக இல்லாமல் போனாலும் கொலை செய்தது பட்டியல் சமூகத்தவர், கொலையுண்டது பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று மீண்டும் மீண்டும் மேற்கோளிட்டுக் காட்டுவதின் பின்னாலிருக்கும் உளவியல், சாதி வேற்றுமை என்பது மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் இயங்கக்கூடிய மிக இயல்பான ஒன்றெனச் சாதி அமைப்பை நியாயப்படுத்துவதற்காகவே.
பட்டியல் சமூகத்தவரால் செய்யப்பட்ட சாதி ஆணவப் படுகொலை என்று நிறுவிவந்த வேளையில் சாதி ஒழிப்பு முன்னணியும் எவிடன்ஸ் அமைப்பும் உண்மை அறிந்து ஓர் அறிக்கையை வெளியிட்டன. சரண்யாவின் அண்ணன் சக்திவேலு தன் மைத்துனன் ரஞ்சித்துக்கு சரண்யாவை முடிவு செய்திருந்த வேளையில் சரண்யா – மோகன் திருமண முடிவால் வெறிகொண்டு இக்கொலையை நிகழ்த்தியிருக்கிறார்கள் சக்திவேலுவும் ரஞ்சித்தும். தன் இணையைத் தானே தீர்மானித்துக்கொள்ளும் சரண்யாவின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் பூத்த அவர்களது அழகான காதலும் எதிர்காலமும் உயிரோடு வெட்டி சாய்க்கப்பட்டிருக்கிறது. இக்கொடூர கொலையை நாம் எந்தப் பெயரைச் சொல்லியும் குறிப்பிடலாம்; கொலையாளிகளுக்கு எத்தகைய தண்டனையையும் பரிந்துரைக்கலாம். ஆனால், இக்கொலை நிகழ்த்தப்பட்ட நோக்கம் சாதியை மையப்படுத்தி அல்ல என்பது உண்மை அறியும் குழுக்களால் வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கிறது. சாதி அடுக்கில் மேல் – கீழ் என்று நம்பப்படும் அமைப்பில் சாதியத்துக்கெதிராகக் கூர்மையான கேள்விகள், விமர்சனங்கள் பெருமளவு தலித்துகளால் முன்வைக்கப்படுபவை. அத்தகைய கேள்விகளை முன் வைப்பவர்களிடமும் சாதி இயங்கினால் அந்தக் கேள்விகளைச் சுலபமாக எதிர்கொண்டுவிடலாம் என்கிற தந்திரம்தான் இவ்வுரையாடல்களில் அதிக பங்கு வகிக்கிறது. எந்த இடையூறும் இல்லாமல் ஓர் சாதி இந்து இச்சமூக அமைப்பில் பெற்றுவரும் கட்டற்ற சமூக, பொருளாதார உரிமைகளை ஒரு தலித் பெற இன்னும் பன்னெடுங்காலம் உழைக்க வேண்டியிருக்கிறது.
இவையெல்லாம் கேள்வியெழுப்பும் தலித்துகளை மட்டுமே மனதில் கொண்டு கேள்வி எழுப்ப இயலாத சாதாரண தலித் மக்களின் உரிமைகளையும் நீர்த்துப்போகச் செய்யும் உரையாடல்கள் என்பதை நாம் உணர வேண்டும். சமூகத்தை எதிர்த்துக் கேள்வியெழுப்ப பிறப்பினடிப்படையிலான அளவுகோலே ஒரு தலித்துக்குப் போதுமானது. அக்கேள்விகளை எழுப்புவதினாலேயே சமூகத்தில் நிலவும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அவனுக்குக் கருத்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுமே ஒரு வகையில் ஆதிக்கம்தான்.
தலித் விடுதலையைப் பேசுகிற பெண்களாக இருந்தாலும், அது குறித்து எந்த தொடர்புமில்லாத சரண்யா போன்ற வெகுஜன பெண்களாக இருந்தாலும், அசலான பெண் விடுதலை என்பது தலித் விடுதலையைப் போலவே சிரமமானது. குடும்ப அமைப்பின் ஆணாதிக்கம் பெண்ணின் உரிமை மீது தாக்கம் செலுத்தியபடியே இருக்கிறது. சரண்யா, மோகன் கொலை செய்யப்பட்டதிலும் அதுவே நிகழ்ந்திருக்கிறது. அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காகத் திசை மாற்றப்படுகின்ற உரையாடல்களால் நாம் உண்மையில் பேசாமல் போனது 21ஆம் நூற்றாண்டிலும் தன் வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொள்ள உரிமையில்லாமல் படுகொலை செய்யப்பட்ட சரண்யாவின் விடுதலையைத்தான். நம் நோக்கங்களையும் இடைச்செருகல்களையும் விலக்கிவிட்டு அந்தந்தப் பிரச்சனைகளை அதனதன் அளவில் நேர்மையாக எதிர்கொண்டால் மட்டுமே நம்மால் மாற்றத்தை உருவாக்க முடியும்.