மனிதக் குல பரிணாம வளர்ச்சியில் வேட்டைச் சமுதாயம் மேய்ச்சல் சமுதாயமாக மாறியது தான் நாகரித்தின் முதல்படியாக இருந்திருக்க முடியும். கோ.கேசவனின் கணிப்புப்படி பல சங்கப்பாடல்கள் கால்நடைகளையே பாடு பொருளாகக் கொண்டுள்ளன. கால்நடைக்காகவே முதன்முதலில் புல், தானியங்கள் வளர்க்கப் பட்டன. இந்தக் கால்நடைக்காகவே ஆநீரை கவர்தலும் மீட்டலும் போருக்கான முதன்மைக் காரணங்களாகின. கூட்டுச் சமூகங்களில் வாழ்ந்த அனைவரும் உறவினர்களே. இன உணர்வோ, சாதி உணர்வோ இல்லாத காலத்தில் வாழ்ந்தவர்கள் இவர்கள்.
உணவு, போர், கொண்டாட்டம் என வாழ்ந்த வேட்டைச் சமூகத்தில் மேய்ச்சல் தொழில் விவசாயம் என்ற சாகுபடி முறைக்கு மக்களைக் கொண்டு சேர்த்தது. இதன் முக்கியக் காரணியான இரும்பின் பயன்பாடும், நெல் வேளாண்மையும் சுமார் 5ஆம் நூற்றாண்டில் தொடங்கியது என்கிறார் வரலாற்று ஆய்வாளர் கிளாரன்ஸ§ மேலோனி. மேலும், வங்காளச் சமவெளியிலிருந்து ஒரிசா, ஆந்திரா வழியாக நெல் பயிரிடும் முறை நீர்ப் பாசனப் பகுதிகளில் பொது ஆண்டின் முதல் 5 நூற்றாண்டுகளில் வந்திருக்கலாம் என்கிறார்.
ஐந்து திணைகளில் வேட்டைச் சமுதாயமும் மேய்ச்சல் சமூகமும் மீனவ குடிகளும் ஒன்றாக இருந்தன என்று சங்கப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. அந்தச் சூழலை ஒரு நிலப்பரப்பிலிருந்து வேறொரு படிநிலைக்குத் திடீரென்று மாற்றியிருக்க முடியாது, மெல்லத் தான் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்க முடியும் என்கிறார் கோ.கேசவன்.
2,500 ஆண்டுகளுக்கு முன்பே ஆற்றங்கரை ஓரங்களில் தொடங்கிய மருதம் என்ற திணை வேளாண்மை நுட்பமடையத் தொடங்குகிறது. இந்தச் சாகுபடி நுட்பம் என்பது கூட்டுறவின் மூலமாகத்தான் சாத்தியமாகியிருக்க முடியும். காடழித்து, களம் அமைத்து, வயல் உண்டாக்கி, வாய்க்கால் வெட்டி பயிர் செய்யப்பட்ட நிலப்பரப்பு மருதம் ஆயிற்று. இந்நிலப்பரப்பு மனிதர்களின் தனியுடைமையாக இருந்திருக்க வாய்ப்பில்லை. அது பொதுவுடமைதான். அனைத்து மக்களும் உழைத்துதான் விவசாய நிலத்தை உருவாக்கினார்கள். இப்படி விளைந்த வேளாண்மையில் உழைத்த அனைவருக்கும் உரிமை இருக்கும். இந்தப் பொதுவுடைமையில் உபரி ஏற்பட்டால் மறு ஆண்டு உழைக்கத் தேவையில்லை. இச்சூழலில் பழங்குடிகள் மருதம் நோக்கி வந்து தங்களை விவசாயத்தில் ஈடுபடுத்திக் கொண்டு உடைமையாளர்களாகி உழுதுண்டோர் என்றழைக்கப்பட்டனர். இது வர்க்கப் பிரிவாக உருவெடுத்தது. இந்தப் பொருளியல் சுழற்சியில் வேட்டைச் சமூகமாக இருந்த பழங்குடிகள் எப்படி தாழ்த்தப்பட்டவர்கள் ஆனார்கள் என்பதும் மருத நிலத்தில் விவசாயிகளாக இருந்தவர்கள், அரசர்கள் காலத்தில் அடிமைகளாகி நிலப்பிரபுகளின் காலத்தில் பண்ணையடிமையாகி நவயுக இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள், கூலிகள் ஆனார்கள் என்பதும் வரலாற்றுப் புதிர். அதனை அவிழ்க்கவே வரலாற்றை முன்னும் பின்னுமாகக் கலைத்துப் போட வேண்டியிருக்கிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then