கடலோடிகள் கருவிழியில் வளர்ந்து தேயும் நிலவு
பார்த்துப் பார்த்து
வளர்ந்த காதல்.
செங்குத்தாய் உயர்ந்த மரம் வரையும் நிழல் கடிகாரத்தில் இருந்து
பிறக்கிறது
காத்திருப்பின்
குகைச்சுவர் திறக்கும்
விரல்ரேகை அச்சு
கடல்உப்பு தின்ற விமானத்தின் எலும்புக்கூடு
நீ வராத இலையுதிர் காடு
மகிழ்ச்சியால் நம் அன்பு
சுவீகாரம் எடுக்கப்பட்டிருந்த
ஒளிகூடிய நாட்களில்
நீ இன்னும் சிறகு முளைக்காத பறவையின் உடல் போன்ற
உள்ளங்கையை ஒப்புக் கொடுத்திருந்தாய்
நான் இன்னும் அகழ்ந்து பிரிக்கப்படாத உலோகம்
என உன்னுள் கன்னிமையோடு
கலந்திருந்தேன்
துருவ வானத்தில் தோன்றும்
இரவு வானவில் நிலவின்
ஆடை சரிகை
கூடல் முனைப்பில் நீ
மறுத்த செய்கையில்
முகம் படர்ந்த வெட்கம்
தன் மரணத்தை முன் அறிவித்துவிட்டுச் சவப்பெட்டிக்குள்
படுத்துக்கொள்ளும் புத்த பிக்குவின்
அசாதாரணமான இமைகள்
நம்முள் கிளைத்திருக்கும்
இந்த ஊடல்
சால் பிரித்த செங்காட்டில்
இமை இமையாய்த் திறந்துகொண்டிருக்கிறது விதைத்த மஞ்சள்
ஆம்
கூதிர்காலம் சமீபித்துவிட்டது.