உலகில் ஓரிசை மட்டுமே மகோன்னதமென்பவள் கழுதைக்காரி.
மகாராணியின் படர்தாமரைக்குக் கழுதைக்கோமியம்
இளவரசியின் மர்மதேமல்களுக்குக் கழுதைப்பால் குளியல்
தூக்கத்தில் அலறியெழும் குட்டிஇளவரசனுக்குத்
தூபத்தில் லத்தித்தூள்
அரண்மனை வைத்தியனின் குறிப்பை
உடனே நிகழ்த்தும் உத்தரவுகளோடு
ஊறவைத்த பாதாம்கொட்டைகள்
குதிரைகளுக்கென்பதிலும் கவனமாக இருப்பார் மகராஜ்.
குருத்தோலைப் பவனியில்
சின்ன மறிக்குச் சின்ன பாலனிலொருவன்
இயேசுவிடமிருந்து பறித்த இளங்குருத்தோலையைத்
தின்னக் கொடுத்தான்
அதன்பிறகே அதுவும்
தாவீது மைந்தனுக்கு ஓசன்னா துதி பாடியது.
தள்ளி அமரச்சொல்லி
காகிதக் குவளையில் காப்பியை நீட்டினான் கடைக்காரன்
முன்பேசியபடி ஆளுக்குப் பாதியென
ஊறிய வர்க்கியை நீட்டியவளிடம்
அவனது சில்வர் கிளாஸைத் தின்னும் அளவுக்கான
கடுங்கோபத்தில் தட்டிவிட்டுத் துள்ளியது
புதுக்கழுதைக்குட்டி.
தானொரு கழுதையென நம்பிய
குதிரையைக் காதலித்ததெனச் சொல்லி
தானொரு குதிரையென நம்பும்
ஒரு கழுதையைப் பலிபீடத்தில் நிறுத்தினர்
இருப்பது உனக்கென்ன
குதிரையின் குறியா என்றனர்
குதிரையின் இதயமென்றதது.
பேரரசின் சோற்றுக்கெனப் போர்வெற்றிக்கென
ரோசமூட்ட
மூச்சிறைக்க நிலமனைத்தும் உப்பைச் சுமந்தவை
வரலாற்றில் கரைந்தழிய
தலைவனுக்கு வாகைப்பூவோடு
கல்முலைக்காரிகள் காத்திருப்பது
புரவியோடு வாரணத்தோடு
யாருமறியாத யாழியோடு
பங்குபெறாத பசுக்களோடு
புடைத்த சிற்பமென
முன்கால்கள் கட்டப்பட்ட
எஞ்சிய ஒரு கழுதையின் வழிநடைத்தடம்
முன்பு அங்கு ஆறு இருந்த இடம்
அல்லது இனி ஆறுபாயும் இடம்
இவ்வளவு மனிதத்திரளுக்குள்ளும்
இவ்வளவு கடவுள்களுக்குள்ளும்
என்னைப்பார் யோகமென்கிற அட்டையை
எவனோ ஒருவன் விற்கிறான்
எவனோ ஒருவன் வாங்குகிறான்
எவனோ ஒருவன் வைக்கிறான்
எவனோ ஒருவன் தவிர்க்கிறான்
எவனோ ஒருவன் நாளின்
இரண்டாம் முறையும்
கண்குளிரக் காண்கிறான்.
மூன்று கால்களோடு பிறந்ததை விட
ஐந்து கால்களோடு பிறந்த குட்டிக்கு
ஆள்வருகையும் ஆராதனையும் கொஞ்சம் கூடத்தான்.
புரோட்டாக்கள் நஞ்சானவை மற்றும் சுவை குறைந்தவை
ரப்பர் பேண்டோடான சால்னா பாக்கெட்டுகளை விடவும்.
எல்லாக் கழுதைக்காரரும் சொல்வது
அதற்கு ஆறறிவு என்றே.
நூறுசொல்லிக் கடைசியாக
எழுபதுக்குப் பீய்ச்சுகிறாள்
கவட்டுக்குள் கைவிட்டதற்குச்
சங்கில் பத்துச்சொட்டை
ரிப்பேர் வாஷிங்மிஷின்களோடு
தண்டுவடத்தில் தகராறுள்ள
டிரை சைக்கிள் அழுத்துபவனை
ஆகாயத்துக்கு அன்னார வைத்ததோடு
நதிப்பாலத்தைத் தாண்ட உதவியதோடு
ஆஸ்துமாவில் பாதிகுறைத்ததோடு
இனிக்குதெனவும் சொல்லவைத்து
பிள்ளைக்குப் போசாக்குத் தந்திருக்கிறாள்
பஞ்சக்கல்யாணி
அவள் வாழ்க
வாழ்வாங்கு வாழ்க.