பட்டியல் சமூகத்திற்கில்லையா திராவிட மாடல்?

மூலம் : பாரதி சிங்காரவேல், தமிழில் : ராம் முரளி

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, பட்டியலினச் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அவர்களுக்குச் செலவு செய்வதில் 2022-23ஆம் ஆண்டு பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. தமது பெருவாரியான மக்களில் மிக மிகப் பின்தங்கியுள்ள பிரிவினர் எதிர்கொண்ட ஏற்றத்தாழ்வுகளைக் கணிசமான அளவில் குறைத்ததில் தன்னையொரு முன்னோடி என்று தமிழகம் முன்னிலைப்படுத்தும் கூற்றில் இது பெரும் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. நிதியாண்டு முடிவடைய ஏறக்குறைய ஒரு மாதம் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், இந்த ஆண்டு பட்டியலினச் சாதிக்கான துணைத் திட்டத்தில் ஆதி திராவிடர் & பழங்குடினர் நலத்துறை செலவிட்டிருக்க வேண்டிய ரூ.10,466 கோடி இன்னமும் செலவிடப்படாமல் இருக்கிறது. SCSP (பட்டியலினச் சாதியினருக்கான துணைத் திட்டம்), TSP (பழங்குடியினருக்கான துணைத் திட்டம்) ஆகியவற்றைத் தமிழக்கத்தில் உருவாக்கி, செயல்படுத்துவதற்கான நோடல் ஏஜென்சியாக நியமிக்கப்பட்ட ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறை மொத்தமாக இத்திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட ரூ.16,422 கோடியில் வெறும் ரூ.5,976 கோடியை மட்டுமே செலவிட்டிருக்கிறது. அதாவது, ஒதுக்கப்பட்ட தொகையில் வெறும் 37% மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மதுரையைச் சேந்த களச் செயற்பாட்டாளரான கார்த்திக் தாக்கல் செய்த RTI (தகவலறியும் உரிமைச் சட்டம்) மூலம் AD & TW இல் இருந்து பெறப்பட்ட தகவல்கள், கடந்த மூன்று நிதியாண்டுகளாகவே இந்த ஒதுக்கப்பட்ட நிதிகளைச் செலவு செய்வதில் இருக்கும் வீழ்ச்சியைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. நிதி ஒதுக்கீட்டில் திராவிடர் முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கணிசமான அளவு ஏற்றம் இருப்பதைப் போலவே, அதைச் செலவு செய்யாமல் இருக்கும் விகிதமும் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் அதிகரித்தபடியே இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 2020-21இல் 6.77% என்பதாக இருந்த செலவு செய்யப்படாத நிதி ஒதுக்கீட்டுத் தொகை, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் ஆண்டான 2021-22இல் 16.81% ஆக வீழ்ச்சியை எதிர்கொண்டிருந்தது. 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்தத் தமிழக மக்கள் தொகையில் (7.21 கோடி) பட்டியல் சமூக மக்கள் 20.01% (1.44 கோடி) ஆக உள்ளனர்.

தமிழகத்தில் SC/ST பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பயன்படுத்தப்படாமல் இருப்பவை:

நிதியாண்டு     ஒதுக்கப்பட்ட நிதி (கோடிகளில்)        செலவிடப்பட்ட நிதி (கோடிகளில்)    செலவிடப்படாத நிதிகளின் சதவீதம்

2016-17           12462  12166  2.38%

2017-18           11627  10960  5.74%

2018-19           11669  11116  4.74%

2019-20           12104  11647  3.78%

2020-21           13680  12754  6.77%

2021-22           14388  11969  16.81%

2022-23 (டிசம்பர் 2022 வரை)            16442  5976    63.65%

2022-23இல் AD & TW வெளியிட்ட கொள்கை அறிவிப்பு, பட்டியலினச் சாதி மற்றும் பழங்குடியினச் சமூகங்களின் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதியைச் செலவிடுவதில் நாட்டிலேயே தமிழகம்தான் முன்னணியில் இருப்பதாகக் கூறுகிறது. நிதி ஆயோக் வரையறுத்துள்ளபடி நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் இலக்கு 10இன் படி (சமத்துவமின்மையைக் குறைத்தல்) 2018ஆம் ஆண்டில் தமிழகம் 85 குறியீட்டு மதிப்பைப் பெற்றிருந்ததாகவும் அது தெரிவித்திருந்தது. உண்மைதான் என்றாலும், 2019இல் இந்தக் குறியீட்டு மதிப்பு 65ஆகச் சரிந்திருந்தது. 2020 ஓரளவுக்கு இதிலிருந்து மேம்பட்டு 74 ஐப் பெற்றிருக்கிறது.

இத்தகைய மோசமான எண்ணிக்கைகளால், சமூக நீதி என்றும் ‘திராவிட மாடல்’ என்றும் சொல்லும் திமுக கூற்றுகளின் செல்லுபடித்தன்மை குறித்துச் சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள். SCSP – TSP கூட்டமைப்பிற்குள் தமிழகத்தின் இணைப்பை ஒருங்கிணைத்தவரான ரிச்சர்ட் தேவதாஸ், ‘தமிழகத்தில் அடுத்தடுத்து ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவர்கள் பிராமணர்களுக்கு எதிரானவர்களா இல்லையா என்பதையெல்லாம் கடந்து, திராவிட அரசியலில் அவர்களுடைய அடித்தளம் இருந்தபோதிலும் எப்போதுமே தலித்துகளுக்கு எதிரானவர்களாக மட்டுமே இருந்திருக்கிறார்கள்’ என்று சொல்கிறார்.

தலித்துகளை அணுகும் விதத்தில் திமுகவும் அதிமுகவும் ஒரேபோலத்தான் செயல்படுகின்றன என்று சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) (MIDS) இணைப் பேராசிரியராக இருக்கும் லட்சுமணன் தெரிவிக்கிறார். ‘உண்மையில் திமுகதான் இவ்விஷயத்தில் மோசமாக இருக்கிறது. சமூக நீதி என்பது சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மட்டுமே அல்ல. ஆனால் தமிழகத்தில் சமூதி நீதி என்பது இடஒதுக்கீட்டிற்கு ஈடாக மட்டுமே எப்போதும் வைத்து அணுகப்படுகிறது. சமூக நீதி ஒட்டுமொத்தச் சமூகத்தின் வளர்ச்சியுடன் தொடர்புடையது. துணைத் திட்டத்தின் நிதி என்பது சமூக நீதியை வளர்த்தெடுப்பதற்கும் நிலைப்படுத்துவதற்கும் இன்றியமையாத ஒன்றாகும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

‘திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையில் எவ்வித வேறுபாட்டையும் என்னால் பார்க்க முடியவில்லை’ என்று சொல்லும் தலித்-பெண்ணிய எழுத்தாளரும், களச் செயற்பாட்டாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான பி.சிவகாமி, ‘தலித் சார்புடைய’ அரசு என்றும் ‘திராவிட மாடல்’ என்றும் சொல்லிக்கொள்ளும் அரசாங்கம், ஒதுக்கப்பட்ட நிதியை முழுவதுமாகச் செலவு செய்யாமல் இருப்பது கண்டிக்கப்பட வேண்டியது என்கிறார்.

‘வகைப்படுத்த முடியாதவை’

ஆறுவருடக் கால தரவுகளைப் பார்க்கும் போது ‘வகைப்படுத்த முடியாதவை’ எனும் பிரிவின் கீழ், நிதி செலவிடப்பட்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்தத் திட்டங்களின் கீழ் ஒதுக்கப்படும் தொகையானது குறிப்பாக, தலித் சமுதாயங்களுக்கு என்றில்லாமல், சாலையமைப்பு, குடிநீர்த் தொட்டிகளை அமைத்தல் போன்ற பொதுப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. RTI தரவின்படி, கடந்த 6 ஆண்டுகளில் ‘வகைப்படுத்த முடியாதவை’ திட்டத்தில் ரூ.8,867 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. அதில் ரூ.958 கோடி திமுக ஆட்சிக் காலத்தில்தான் செலவிடப்பட்டிருக்கிறது.

‘வகைப்படுத்த முடியாதவை’ திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி ஏன் தலித் சமூகங்களுக்குப் பயனுள்ளவையாக இல்லை என்பதை சிவகாமி விளக்குகிறார். ‘மின்சாரம் அல்லது சாலைகளுக்கு இந்த நிதியைச் செலவழிப்பதால் அப்பகுதியில் ஏற்கெனவே அதிக வசதிகளையும் வளங்களையும் கொண்டிருக்கும் ஆதிக்கச் சமூகத்தினர் மட்டுமே பயனடைவார்கள். இதற்குப் பதிலாக, சிறப்புத் திட்டங்களில் அரசு தனது கவனத்தைக் குவிக்க வேண்டும். உதாரணமாக, தமிழகத்தில் சாதிய மோதல்கள் அதிகம் நிகழ்வதாக அடையாளம் காணப்பட்ட 480 கிராமங்களின் மீது ஏன் அவர்கள் கவனம் செலுத்தக் கூடாது. இன்னும் கூடுதலாகச் சொல்ல வேண்டுமெனில், இந்த மோதல்கள் பெரும்பாலும் பொது நீர்த் தொட்டிகளையோ, பொதுச் சாலைகளையோ, பொது நிலங்களையோ பகிர்ந்து பயன்படுத்துவதில் இருந்துதானே ஆரம்பிக்கின்றன? இதனால், துணைத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை இதுபோன்ற கொந்தளிப்பு நிறைந்த பகுதிகளில் தனிக் குடிநீர்த் தொட்டி அமைத்தல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தலாமே.’

மாநிலத்தின் பல்வேறு துறையினரையும் ‘வகைப்படுத்த முடியாதவை’ திட்டத்தில் செலவிடப்படும் தொகை குறித்துக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று சிவகாமி தெரிவிக்கிறார். ‘அதிகார அடுக்கில் மிகக் கீழ் நிலையில் இருக்கும் கயல்விழி செல்வராஜை (AD & TW அமைச்சர்) மட்டுமே இதற்கான பொறுப்பாளி என்று கை நீட்டுவதில் அர்த்தமில்லை. மற்றொருபுறம் மாநிலத்தின் நிதி அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் தலித் மற்றும் பிற சமூகத்திற்கும், மாநில அரசுக்கும், பத்திரிகைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பவர். தொடர்புடைய ஏதேனுமொரு துறை தமது பணியினைச் சரிவரச் செய்யவில்லை என்றால், அவர்களைத் தீவிரப்படுத்த வேண்டிய பொறுப்பு அவரிடமே இருக்கிறது.’

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனைச் செய்தியாளர் அணுகியபோது ‘என்னிடம் தரவுகள் இல்லை’ என்றார். அதோடு, தன்னால் இதுகுறித்து இப்போது கருத்துகள் எதையும் பகிர்ந்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். அமைச்சர் கயல்விழி செல்வராஜும், தமிழ்நாடு பட்டியலினச் சாதியினர்/பழங்குடியினருக்கான ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் புனித பாண்டியனும் கூட இப்போதைக்குத் தங்களால் எந்தவிதக் கருத்தையும் இதுதொடர்பாகப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றே தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுடைய பதில்கள், கருத்துகள் கிடைத்தால் அதையும் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்.

சிறப்புச் சட்டத்திற்கான தேவை

SCSP மற்றும் TSP நிதிகளை நிர்வகிப்பது தொடர்பாக ஒரு சிறப்புச் சட்டம் தேவையெனச் சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். இது குறித்துச் செய்தியாளரிடம் ரிச்சர்ட் தேவதாஸ், ‘தங்கள் கூட்டமைப்பு இவ்விஷயம் குறித்த மக்கள் மசோதா ஒன்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான முனைவர் தொல்.திருமாவளவனிடம் கையளித்திருப்பதாகத்’ தெரிவித்தார்.

“இதே மசோதா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் அலுவலகச் செயலாளர்களில் ஒருவரிடமும் அரசின் பல்வேறு துறையிடமும் இந்த மசோதாவின் நகல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்தார். இதேபோன்ற சட்டம் தெலங்கானாவில் வெற்றிகரமாக அமலாக்கப்பட்டதைக் குறிப்பிடும் ரிச்சர்ட் தேவதாஸ், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால் நிதியைச் சரிவரப் பயன்படுத்தாமல் இருக்கும் செயல் குறையும் என்று கருத்துரைக்கிறார்.

சிட்டிசன்ஸ் விஜிலன்ஸ் அண்ட் மானிட்டரிங் கமிட்டியின் (CVMC) தலைவரான எட்வின், இதுகுறித்த அதாவது, நிதியைச் செலவிடும் முறைகளில் முழுமையான மாற்றம் செய்யப்பட்டுச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார். “துணைத் திட்டங்கள் தோல்வியுறுவதைப் பல ஆண்டுகளாக விவாதங்களுக்குக் கொண்டுவரும் சமூக ஆர்வலர்களையும், சிவில் சமூகத்தையும் முதல்வர் இந்தச் சட்ட வரைவில் ஈடுபடுத்த வேண்டும். சமூக நீதியை வழங்க வேண்டுமென ஸ்டாலின் நினைத்தால், தனது முன்னோடிகளைப்போல, அதிகாரத்துவ அடுக்குகளைக் கொண்டிருக்கும் அதே பழைய அமைப்பையே சார்ந்திருக்கக் கூடாது” என்றும் எட்வின் தெரிவித்தார்.

தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் துணைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கென்று ஏற்கெனவே தனிச் சட்டங்களைக் கொண்டிருக்கின்றன என்று சொல்லும் லட்சுமணன், “சட்டம், சட்டரீதியாக அணுகுவதற்கான ஒரு நிலையை உருவாக்குகிறது. ஆனால், அதே சமயத்தில் அரசியல் ரீதியிலான ஒத்துழைப்பும் இதற்குத் தேவை. துணைத் திட்டத்திற்குப் பின்னுள்ள கருதுகோள்களுக்கு திமுகவும் அதிமுகவும் எதிராகவே இருந்துவருகின்றன” என்கிறார். அரசதிகாரமும் அதிகாரத்துவ அமைப்பும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் விருப்புறுதியுடன் முன்வரவில்லை என்றால், எந்தவொரு மாற்றமும் நிகழாது. “உதாரணமாக, பட்டியலின மக்களுக்கும் பழங்குடியினருக்கும் எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்டம் நம்மிடம் இருக்கிறது, அதை நடைமுறைப்படுத்தத்தான் ஒருவரும் விரும்புவதில்லை” எனவும் லட்சுமணன் தெரிவித்தார்.

நன்றி : The News Minute

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger