பொதுவாக நம்முடைய ஊர், முன்னோர்கள், தேசம் குறித்து தகவல்கள் கதைகளிலிருந்தே கிடைத்தன. மட்டுமல்ல, அவை கதை என்கிற வடிவத்திலேயே சொல்லப்படுகின்றன. காலனியக் காலத்தில் தேசிய வரலாறு எழுதப்பட்டபோது கதைகளையே நாம் துணைகொள்ள வேண்டியிருந்தது. இந்த வகையில் கதைகள் வரலாறானது பற்றி இங்கு நிறையப் பேசப்பட்டிருக்கின்றன. இதற்கு மாறாக ‘ஆதாரங்கள்’ அடிப்படையிலான வரலாறு இருப்பதாகக் கருதி அவற்றை மீட்டெடுப்பதற்கான எத்தனங்களே நவீன வரலாற்றியலில் நடந்துவருகின்றன.
இவ்வாறு எது வரலாறு என்பதான விவாதங்கள் ஒருபக்கம் நடந்துவந்தாலும், வெகுமக்களிடம் வரலாறு என்னும் அர்த்தத்தைப் பெற்றிருப்பது இந்தக் கதைகளே. தீபாவளி பற்றிய நரகாசுரன் கதை புனைவாக இருக்கலாம். ஆனால், மக்களைப் பொறுத்தவரை தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணத்தை அக்கதையே வழங்குகிறது. அதாவது, அதுதான் தீபாவளிக்கான வரலாறு. அவற்றிலிருந்தே வரலாற்றைப் புரிந்திருக்கிறார்கள். நாளடைவில் இந்தக் கதைகளே சமூக நினைவாக மாறி சமூக உளவியலில் செயலாற்றத் தொடங்கிவிடுகின்றன.
சாதிகள் பற்றிய கதைகள்
கதைகளின் இயல்பே இதுதான். இன்றைக்கு, மேல் கீழாக வரிக்கப்பட்டிருக்கும் சாதிகள் பற்றிய வரலாறும் இவ்வாறு கதைகளாகவே சொல்லப்படுகின்றன. குறிப்பிட்ட சாதியைப் பெருமையானது என்றும் மற்றொரு சாதியை இழிவானது என்றும் ஒரு கதை தொடர்ந்து சமூகத்தில் பரப்பப்படும்போது, அது காட்டும் சாதிகள் பற்றிய சித்திரமே சமூகத்தின் நினைவாக அழுத்தம் பெற்றுவிடுகிறது.
பள்ளுவும் நந்தனார் கீர்த்தனையும்
இதனை விளக்க இரண்டு பிரதிகளை எடுத்துக்கொள்கிறேன். ஒன்று முக்கூடற்பள்ளு. இரண்டு நந்தனார் சரித்திரக் கீர்த்தனை. முக்கூடற்பள்ளு ஆசிரியர் பெயர் கிடைக்கவில்லை. நந்தனார் சரித்திரக் கீர்த்தனையின் ஆசிரியர் கோபால கிருஷ்ண பாரதியார். ஏற்கெனவே எழுதப்பட்ட சைவப் பிரதிகளில் இக்கதைக்கான வேர் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும் இன்று அறியப்படும் நந்தனார் கதைக்கான முழு வடிவம் கோபாலகிருஷ்ண பாரதியாரால் எழுதப்பட்ட இப்பிரதியிலிருந்தே பரவியிருக்கின்றன.
இரண்டு பிரதிகளுக்குமிடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவை இதுவரை ஒப்பிடப்பட்டு ஆராயப்பட்டதில்லை. இரண்டு பிரதிகளும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவை. நாயக்கர்கள் ஆட்சியில் தோன்றியதாகவோ அல்லது காலனிய ஆட்சியில் எழுதப்பட்டுப் பரவியதாகவோ இருக்கின்றன. இரண்டு பிரதிகளிலும் அடித்தளச் சாதிகள் பாத்திரங்களாகக் கொள்ளப்பட்டிருப்பதோடு, உடைமைச் சாதியினரோடு மேல் – கீழ் என்னும் இருமையில் நிறுத்தப்பட்டு இருதரப்பாருக்கிடையேயான மோதல் – இணக்கம் என்னும் கதையாடலாகப் பின்னப்பட்டுள்ளன. அடித்தள மக்களைப் பாத்திரங்களாகக் கொண்டு எழுதப்படுவதற்குத் தெளிவான நோக்கம் இருந்திருக்கிறது. இவ்வாறு கதையாடல் புனைவது அன்றைக்குப் பொதுப் போக்கு போல இருந்திருக்கிறது. அடித்தள மக்களைப் பாத்திரங்களாகக் கொள்வதற்கான காரணம் வேறோர் ஆராய்ச்சிக்குரியது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then