உதயசூரியன் : ஜோசப் ஜேசுதாஸ் – ஆ.ச.சேரிவாணன்

1940ஆம் ஆண்டில் தலித்துகளின் சமூக அரசியல், கலை, இலக்கியம், இதழியல் செயல்பாடுகள் தனித்துவமிக்கதாக இருந்துள்ளது. குறிப்பாக சென்னை, சேலம், வேலூர் வட்டாரப் பகுதிகளில் சாதியத்திற்கு எதிராக தலித்துகள் தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளதைப் பார்க்க முடிகிறது. J.J.தாஸ், பள்ளிகொண்டா எம்.கிருஷ்ணசாமி, இ.சுப்பிரமணியம், ஆ.இரத்தினம், நாமக்கல் பி.முத்துசாமி போன்றோர் சமூகச் செயல்பாட்டாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும், இயக்கவாதியாகவும் பணியாற்றி வந்துள்ளனர். விடுதலைக்கு முன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கூட ‘தொழிலாளர்களின் தலைவர்’ என்று யாரையும் அடைமொழியிட்டு அழைத்ததாக வரலாறு இல்லை. இக்காலகட்டத்தில் ‘தொழிலாளர்களின் தோழன்’ என்றும் ‘தொழிற்சங்கத் தலைவர்’ என்றும் அழைக்கப்பட்டவர் ஜோசப் ஜேசுதாஸ் என்கிற J.J.தாஸ்.

தமிழ் வரலாற்றில், தமிழகத் தொழிற்சங்க வரலாற்றில், தமிழ் இதழியல் வரலாற்றில் யி.யி.தாஸ் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால், அவர் தொழிற்சங்கத் தலைவராகவும் இதழியலாளராகவும் செயலாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் கூட இவர் பற்றிய குறிப்புகள் இடம்பெறாமல் போனது வரலாற்றை எழுதியவர்களின் சாதிய மனநிலையைத்தான் காட்டுகிறது. 2003ஆம் ஆண்டு முனைவர் பட்ட ஆய்விற்காகத் தலித் இதழ்களைச் சேகரிக்கும் முயற்சியில் சென்னை சென்றபோது, தலித் முரசு இதழ் ஆசிரியர் புனித பாண்டியன், “எக்ஸ்ரே ந.கருணாகரனைச் சென்று பாருங்கள், அவரிடம் தலித்துகள் வெளியிட்ட பழைய இதழ்கள் பற்றிய செய்திகளைப் பெறலாம்” என்றார். எக்ஸ்ரே ந.கருணாகரனைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, சென்னை அண்ணா நகர் சென்று பார்த்தேன். அப்போது ‘தருமதொனி’, ‘பறையன்’ ஆகிய இரு இதழ்களின் நகல்களை என்னிடம் கொடுத்தார். மேலும் J.J.தாஸ் வெளியிட்ட ‘உதயசூரியன்’ இதழ் குறித்து அவர் எழுதி, திராவிடர் கழக இதழான உண்மையில் (உண்மை 15-30, ஆகஸ்ட்,1990) வெளிவந்த கட்டுரையின் நகலையும் தந்தார். இக்கட்டுரைதான் உதயசூரியன் இதழ் குறித்தும், J.J.தாஸ் குறித்தும் வெளிவந்த முதல் கட்டுரை எனலாம். அறிஞர் ஏ.பி.வள்ளிநாயகம், 2004ஆம் ஆண்டு வெளியிட்ட ‘தென்னாட்டு அம்பேத்கர் தளபதி எம்.கிருஷ்ணசாமி’ என்ற நூலில் ‘உதயசூரியன் உதித்தான்’ என்னும் கட்டுரை இடம்பெற்றுள்ளது. அதேநேரத்தில் 1941ஆம் ஆண்டு வெளிவந்த உதயசூரியன் இதழ் குறித்து, நூற்றுக்கணக்கான தலித் இதழ்களில் குறிப்புகள் உள்ளன. இக்குறிப்புகள் J.J.தாஸ் குறித்த, அகில இந்தியப் பட்டியல் சாதிகள் கூட்டமைப்புக் குறித்த, சென்னை மாகாணத் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம் குறித்த தெளிவான, முழுமையான தகவல்களாகக் கொள்ள முடியவில்லை. தலித் கலை, இலக்கிய, அரசியல் வரலாற்று ஆய்வாளர்களின் எழுத்துகளில் கூட உதயசூரியன் இதழ் செய்திகள் குறிப்புகளாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளன. தலித் எழுத்தாளர் அழகியபெரியவன் எழுதிய ‘மீள்கோணம் J.J.தாஸ்’ என்ற கட்டுரை, J.J.தாஸ் அவர்களின் தொழிற்சங்கப் பணிகளையும், உதயசூரியன் இதழ் பணியையும் அவருடைய குடும்ப, சமூக வரலாற்றுப் பின்னணியையும் கள ஆய்வுசெய்து எழுதப்பட்ட கட்டுரையாகும் (2011ஆம் ஆண்டு, மே திங்கள் தலித் முரசு இதழில் வெளிவந்துள்ளது). இதைத் தவிர யி.யி.தாஸ் பற்றிய சான்றுகள் இல்லை.

இத்தகைய களஆய்வு, 1941ஆம் ஆண்டு முதல் 1950ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெளிவந்த பத்திரிகைகளையும், அகில இந்தியப் பட்டியல் சாதிகள் கூட்டமைப்புக் குறித்த செய்திகளையும், வடஆற்காடு, சென்னை, சேலம், மதுரை (திண்டுக்கல்), திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் செயல்பட்ட தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம் குறித்த அரசு ஆவணங்களையும், அக்காலகட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைகளையும், மேற்காணும் மாவட்டங்களில் தலித் மக்களிடையே வேலை செய்த தலைவர்களின் வாரிசுகளைக் கண்டறிந்து ஆவணங்களையும், வாய்மொழிச் செய்திகளையும் திரட்டலாம் என்னும் அனுமானத்தோடு அக்காலத்தில் வெளிவந்த தலித் இதழ்களை மட்டும் தேடி அலைந்தபோது எனக்குப் பதினைந்து உதயசூரியன் இதழ்கள் கிடைத்தன.

எக்ஸ்ரே ந.கருணாகரன், அறிஞர் ஏ.பி.வள்ளிநாயகம், எழுத்தாளர் அழகியபெரியவன் ஆகியோர் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ள செய்திகளோடு கூடுதல் செய்திகளை உதயசூரியன் இதழ்களில் பெறமுடிகிறது. அதாவது, J.J.தாஸ் அவர்களை முன்வைத்து உதயசூரியன் இதழையும், உதயசூரியன் இதழை முன்வைத்துப் பள்ளிகொண்டா எம்.மூர்த்தி, எம்.கிருஷ்ணசாமி இருவரையும் தெரிந்துகொள்ள முடிகிறது. காரணம், எம்.மூர்த்தி, J.J.தாஸ், எம்.கிருஷ்ணசாமி ஆகிய மூவரும் சேர்ந்துதான் உதயசூரியன் இதழை வெளியிட்டுள்ளனர்.

உதயசூரியன் இதழ் வெளிவருவதற்கான சமூக, அரசியல், பொருளாதாரப் பின்புலத்தைக் கடந்தகால வரலாற்றிலும், இதழ் வெளிவந்த சமகாலத்தின் சமூக, பொருளாதார, அரசியல் நிலையை உதயசூரியன் இதழிலும் அறிந்துகொள்ள முடிகிறது. பெருந்தலைவர் எம்.சி.ராஜா ‘அகில இந்திய ஆதிராவிடர் மகாஜன சபை’ என்கிற அமைப்பின் மூலமாகத் தலித் மக்களை அணிதிரட்டிய காலத்தில், ஆப்பிரிக்காவிலிருந்து தமிழகம் வந்த தாத்தா இரட்டைமலை சீனிவாசன், 1928ஆம் ஆண்டில் ‘சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பு’ என்கிற அமைப்பைத் தொடங்கினார்.

ஆங்கிலேய அரசு தலித் மக்களுக்கு வழங்கிய இரட்டை வாக்குரிமையை எதிர்த்து காந்தி மேற்கொண்ட உண்ணாவிரதம், இந்தியாவில் சாதி இந்துக்களிடமும், தலித் தலைவர்களிடமும், பெரியார் போன்ற சனநாயகச் சக்திகளிடமும் சமூக அரசியல், தத்துவ ரீதியான உரையாடலை நிகழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் சாதி இந்துக்கள் வெளியிடும் பத்திரிகைகளில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரைக் கடுமையாக விமர்சித்தும், பார்ப்பனியம், பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கங்கள் வெளியிடும் பத்திரிகைகளில் காந்தியைக் கடுமையாக விமர்சித்தும் எழுதினர். பூனா ஒப்பந்தத்திற்குப் பிறகும் தொடர்ந்து இரட்டை வாக்குரிமைக்காகப் போராட வேண்டும் என்ற எண்ணம் தலித்துகளிடம் வெளிப்பட்டுவந்துள்ளது.

‘நான் இந்துவாகச் சாக மாட்டேன்’ என்ற பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் கருத்துப் பிரகடனமும், ‘தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களே இல்லை என்கிற நிலைப்பாட்டில் நாம் இருக்கிறபோது, நாம் ஏன் மதம் மாற வேண்டும்?’ என்ற தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வாதமும், ‘இந்துவாகவே மரணத்தைத் தழுவுவோம்’ என்ற பெருந்தலைவர் எம்.சி.ராஜாவின் பிரகடனமும், பெரியார் போன்ற நீதிக்கட்சி இயக்கத் தலைவர்களின் பார்ப்பனியம் – பார்ப்பனர் எதிர்ப்பும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டமும் மையம் கொண்டிருந்த காலகட்டம் என்றாலும், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன், பெருந்தலைவர் எம்.சி.ராஜா ஆகியோர் கருத்தியல் ரீதியாக முரண்பட்டிருந்தாலும் தலித் மக்களின் விடுதலையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக இணைந்தும், தனித்தும் செயல்பட்டுள்ளனர். இராவ்பகதூர் ஆர்.சீனிவாசன், எஸ்.சுப்பிரமணி மூப்பனார், எஸ்.வெங்கய்யாகாரு, இராவ்சாகிப் வி.ஐ.முனிசாமி பிள்ளை, சுவாமி சகஜானந்தம், டாக்டர் எம்.வி.கங்காதரசிவா, ஆர்.வீரய்யன், பி.வி.இராஜகோபால் பிள்ளை, எஸ்.பி.கோபால்சாமி பிள்ளை, வி.ஜி.வாசுதேவ பிள்ளை, ஏ.முருகேச பிள்ளை, எச்.எம்.ஜெகநாதன், தந்தை என்.சிவராஜ், ராவ்சாகிப் வி.தர்மலிங்க பிள்ளை போன்றோர் இரட்டை வாக்குரிமையின் முக்கியத்துவத்தையும், அதே நேரத்தில் இரட்டை வாக்குரிமை கிடைக்காமல் போவதற்குக் காரணமாக இருந்த காந்தியின் இந்து அரசியலையும், சாதி இந்துக்களின் வன்முறையையும் இந்தியா முழுவதும் உள்ள தலித் மக்களிடம் எடுத்துரைத்தனர். இத்தகைய அரசியல் பள்ளியில் பயிற்சி பெற்றவர்களில் எம்.மூர்த்தி, J.J.தாஸ், எம்.கிருஷ்ணசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் சிந்தனையளவில் மட்டுமல்லாது தந்தை என்.சிவராஜின் தோழமையுடன், இக்காலகட்டத்தில் செயல்பட்டுவந்த தாத்தா இரட்டைமலை சீனிவாசன் தலைமையிலான The  Madras  Provincial  Depressed  Classes  Federation என்ற அமைப்பிலும், எம்.சி.ராஜா தலைமையில் அனைத்திந்திய ஆதிதிராவிடர் மகாஜன சபா என்ற அமைப்பிலும் இணைந்து செயல்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த J.J.தாஸ்?

வடஆற்காடு மாவட்டம் குடியாத்தம் அருகில் உள்ள வடக்குப் பட்டறை என்னும் குக்கிராமத்தில் 1902ஆம் ஆண்டு பிறந்தவர். பிறந்த தேதியைத் தெளிவாக அறியமுயடிவில்லை. இவருடை அப்பா ஜோசப், தாய் மயாள் ஆவர். தென்னிந்திய திருச்சபையைச் சார்ந்த இவர்களுக்கு இரண்டு மகன்கள்.

ஒருவர் ஜோசப் தேவராசன், மற்றொருவர் ஜோசப் ஜேசுதாஸ். ஜோசப் தேவராசன் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய முடியவில்லை. கோலார் தங்க வயிலிலிருந்து புலம்பெயர்ந்து வடக்குப் பட்டறை வந்தவர்கள் என்னும் வாய்மொழிச் செய்தியும் உண்டு. தொடக்கக் கல்வியைத் தென்னிந்திய திருச்சபைப் பள்ளியில் பயின்ற ஜோசப் ஜேசுதாஸ், இளமைப் பருவத்திலிருந்தே இந்துச் சமூகத்தின் அநீதிகளை அனுபவித்தவர். அதன்மீது கடுங்கோபம் கொண்டவர் என்றாலும் தந்தையின் வேண்டுகோளுக்கேற்ப, வேலூர் ஊரிஸ் கல்லூரியில் F.A., என்றழைக்கப்பட்ட முன்பருவக் கல்வியைப் படித்தார். அருட்திரு ஜான் பாஷ்யம் பாதிரியாரின் பரிந்துரையின் பேரில் 1920ஆம் ஆண்டு இந்தியக் கப்பற்படையில் சேர்ந்துள்ளார். இதனால் அவரது குடும்பம் வடக்குப் பட்டறைக் கிராமத்தில் வசதி வாய்ப்புள்ள குடும்பமாக வளர்ந்துள்ளது.

இவருடைய தந்தையும் அண்ணனும் தலித்துகளுக்கு வழிகாட்டுவதிலும் உதவிசெய்வதிலும் மனம் தளராத குணமும் சமூக அக்கறையும் கொண்டவர்கள். இந்தியக் கப்பற்படையில் பணிசெய்த காலத்தில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் 22.3.1936 அன்று பணியிலிருந்து விலகி வீட்டிற்கு வருகிறார். இளம் பருவத்தில் சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளையும் தீண்டாமையையும் அனுபவித்த ஜோசப் ஜேசுதாஸ், சமூகப் பணியில் தன்னை முழுநேரப் பணியாளராக ஈடுபடுத்திக்கொண்டார். திருமணம் செய்யாமல் சமூகப் பணியில் ஈடுபட்டுவந்த ஜோசப் ஜேசுதாஸ், பெற்றோர் இறந்த பிறகு, நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க 11.07.43 அன்று செட்டிக்குப்பம் லேபர் பாடசாலையின் உதவி ஆசிரியை செல்லம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொள்கிறார். (தென்னாடு, மலர் 1, இதழ் 13, ப.3).

சமரச செடியூல்டு வகுப்பினர் கழகத் திருமண வாழ்த்து மடல்

கோலார் தங்கவயல், சாம்பியன்-ரீப்ஸ் என்ற இடத்தில் செயல்பட்டுவரும் இயக்கம் சமரச செடியூல்டு வகுப்பினர் கழகம். அன்றைய சென்னை மாகாணம், மைசூர் மாகாணம் ஆகியவற்றில் வாழும் தலித் மக்களின் வாழ்வுரிமைச் சிக்கல்களைத் தீர்ப்பதில் முன்னின்ற கழகம். தலித் மக்களுக்காக உழைக்கின்ற தலைவர்களுக்கு, தொண்டர்களுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுதல், திருமண நிகழ்வுகளுக்கு வாழ்த்து மடல் எழுதுதல் போன்றவற்றின் மூலம் தன்னலமற்று உழைக்கும் தலைவர்களுக்கு ஓர் அங்கீகாரத்தையும் உத்வேகத்தையும் கொடுத்துவந்த அமைப்புகளில் குறிப்பிடத்தக்க அமைப்புச் சமரச செடியூல்டு வகுப்பினர் கழகம். 11.07.43 அன்று நடைபெற்ற J.J.தாஸ் – மார்கிரட் செல்லமாள் இணையர் திருமணத்திற்குச் சமரச செடியூல்டு வகுப்பினர் கழகம் திருமண வாழ்த்து மடலை வழங்கியுள்ளது. 1990ஆம் ஆண்டுகளுக்கு முன்பு பொதுவாகவே திருமணம் செய்யும் இணையரை வாழ்த்தி மடல் வழங்கும் மரபு, திருமண நிகழ்வுகளில் முக்கிய இடம்பெற்றுவந்துள்ளதைக் காணமுடிகிறது.

J.J.தாஸ் தன்னிடமிருந்த பணத்தையும் தன்னுடைய இணையரின் ஆசிரியர் பணி மூலம் கிடைத்த பணத்தையும் வைத்து வாணியம்பாடியில் செல்வம் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஜவுளிக் கடை ஒன்றை 1946ஆம் ஆண்டு நடத்திவந்துள்ளார் (உதயசூரியன், மலர் 6, இதழ் 24, 17.10.1947, ப.3). சமூகப் பணி, தொழிற்சங்கப் பணிகளுடன் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் அக்கறை காட்டிவந்துள்ளார். குறிப்பாக, வாணியம்பாடியில் 1947க்கு முன்பாக ஏழை மாணவர்கள் தங்கிப்படிக்கும் வகையில் J.J.தாஸ் பெயரில் விடுதி ஒன்றை நடத்திவந்துள்ளார். ஏழை மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு உதவி கேட்டு உதயசூரியன் இதழில் விளம்பரம் செய்துள்ளார். தொடர்ந்து நன்கொடை அனுப்பியவர்களின் பெயரையும் பணத்தையும் இதழில் பதிவு செய்துள்ளார்.

செல்வம் ஸ்டோர்ஸ் 3-0-6, ஊசி ஷாப் 3-7-3, பள்ளிப்பட்டு ஷாப் 3-5-6, சோழாவரம் பாஷா மியான் ஷாப் 2-3-9, ராமசாமி செட்டியார் ஷாப் 5-0-0, ஆதிசெட்டியர் 2நெ.ஷாப் 1-3-0, நெய்வாசல் நெ2 ஷாப் 1-7-0, நெய்வாசல் இப்ராஹிம் ஷாப் 4-0-0, நெய்வாசல் 1நெ ஷாப் 5-8-0, புதியாரி துருல்லா ஷாப் 1-10-0, சி.ஷி.அய்யாதுரை நாயுடு ஷாப் 5-3-6, கன்னியம்படி உபேதுல்லா சாயபு தொழிலாளர்கள் உண்டியல் 2-1-0, க்ஷி.ரி.ஸி.ஸி. ஆதிலெட்சுமி செட்டியார் ஷாப் 2-13-0, ஒதியந்திரம் வாசக சாலை 1-10-0, நெய்வாசல் 1நெ ஷாப் 4-0-0, நெய்வாசல் இப்ராஹிம் ஷாப் 1-9-2, புதூர் ஆசாங்கன்னி 1நெ தொழிலாளர்கள்2-10-0, கச்சேரிரோட்கேட் கடை கோவிந்தராஜி1-8-4, எனத் தொழிலாளர்கள் அளித்த வசூல் ரூபாய் 53-10-6 பொருளாளர் R.P.பெருமாளிடம் வழங்கப்பட்டுள்ளது (உதயசூரியன், மலர் 6, இதழ் 34, 28-12-47, ப.6). யி.யி.விடுதியில் சென்னை மாகாண செடியூல்டு காஸ்ட் செஞ்சட்டை படைக் கூட்டம் 7-1-1948 அன்று நடைபெற்றுள்ளது (உதயசூரியன், மலர் 6, இதழ் 36, 16-1-48, பக்.3,5).

இன்றைய இந்தியாவில் தலித்துகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் கல்வி நிறுவனங்களை நடத்திவருகின்றனர். ஆனால், தங்கள் நிறுவனங்களில் தலித் இயக்கங்களின் மாநாடுகள், கருத்தரங்கள் போன்ற செயல்பாடுகளை நடத்த அனுமதிப்பதில்லை; உதவி செய்வதும் இல்லை. இந்நிலையில் 1946ஆம் ஆண்டுகளில் J.J.தாஸ், தான் நடத்திவந்த ஏழை மாணவர்கள் தங்கும் விடுதியில் சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பு, அகில இந்தியப் பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு, சென்னை மாகாணத் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம் போன்ற இயக்கங்களின் மாநாடுகள், கருத்தரங்கம், ஆலோசனைக் கூட்டம் போன்ற செயல்பாடுகளை நடத்திக்கொள்ள அனுமதி கொடுத்துள்ளார். குறிப்பாக, இவ்விடுதியில் 1947ஆம் ஆண்டு தமிழ்நாடு செடியூல்டு மாணவர் கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் மைசூர் சமஸ்தான மாணவர் பெடரேசன் சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர் (சமத்துவச் சங்கு, மணி 1, ஓசை 3, 05.11.47, ப.6). மேலும் சென்னை மாகாண செடியூல்டு காஸ்ட் செஞ்சட்டைப் படைக் கூட்டம் 07.01.1948 அன்று J.J.தாஸ் ஹாஸ்டலில் நடந்துள்ளது. இக்கூட்டம் குறித்து தொடர்பு முகவரி ஆ.மாணிக்கம், J.J.தாஸ் ஹாஸ்டல், வாணியம்பாடி என்று குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது (உதயசூரியன், மலர் 6, இதழ் 36, 16.01.48, பக். 3,5).

J.J.தாஸ், தொழிற்சங்கத்தை வர்க்க நலனுக்கு எதிராகக் கொண்டு செல்லாமல் வர்க்க நலனை மட்டும் பிரதிபலித்துள்ளார். வர்க்க நலன் ஒற்றுமைக்கான சங்கச் செயல்பாடுகளில் ஒன்று, வரவு செலவுக் கணக்கில் வெளிப்படைத்தன்மை இருப்பதாகும். அதற்கேற்பத் தோல் பதனிடும் தொழிற்சங்க ஆண்டு வரவு செலவுக் கணக்கை முறையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பராமரித்துவந்துள்ளார். வடஆற்காடு ஜில்லா தோல் பதனிடும் தொழிற்சங்கத் தலைவராக J.J.தாஸ் இருந்தபோது, ஒவ்வோர் ஆண்டும் சங்கத்தின் ஆண்டு வரவு செலவை ஆடிட்டர் ராமசாமியைக் கொண்டு சரிபார்த்து அரசிடம் சமர்ப்பித்துள்ளார். மேலும் தொழிற்சங்கக் கணக்கு விவரங்களைச் சமர்ப்பிக்காத தொழிற்சங்க அங்கீகாரத்தைச் சென்னைத் தொழில் கமிஷ்னர் ரத்து செய்துள்ளார். நூறு சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உதயசூரியன் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே, தோல் பதனிடும் தொழிலாளர் கிளைச் சங்கங்கள் வரவு செலவுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவும், இத்தகைய வெளிப்படைத்தன்மையே தொழிலாளர்களுக்கிடையில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் என்பதற்காகவும் இச்செய்தியைப் பதிவுசெய்துள்ளது என அறிய முடிகிறது. தொழிற்சங்க வரவுசெலவு கணக்கின் வெளிப்படைத்தன்மையும், முதலாளிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில், தொழிற்சங்கத் தகராறுகளில் தொழிலாளர்கள் நலனைக் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் பேசும் அணுகுமுறையும் ‘தொழிலாளர்களின் தலைவர்’ என்கிற உயர்ந்த இடத்தை J.J.தாஸ் அவர்களுக்குப் பெற்றுக்கொடுத்தது எனலாம்.

1900ஆம் ஆண்டு முதல் தொழிலாளர், தொழிற்சங்கம் குறித்த சிந்தனை நாடெங்கும் வளரத் தொடங்கியது. 1930க்குப் பிறகு பல தொழிற்சங்கங்கள் தோன்றியிருந்தன. சென்னை மாகாணத்தில் மதராஸ் தொழிலாளர் பாதுகாப்பு அணி, மதராஸ் அச்சுத் தொழிலாளர் சங்கம், மதராஸ் அலுமினியம் தொழிலாளர் சங்கம், தெற்கு மராத்தா இரயில்வே ஊழியர் சங்கம், மதராஸ் எலக்டிரிக் டிராம்வே தொழிலாளர் சங்கம், சென்னை நகர மூக்குப்பொடி தொழிலாளர் சங்கம், கள் இறக்கும் தொழிலாளர் சங்கம், தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம், துப்புரவுத் தொழிலாளர் சங்கம் எனப் பல்வேறு தொழிலாளர் சங்கங்களை நீதிக்கட்சியும், காங்கிரஸ் சோஷலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், தலித் இயக்கங்களும் இளைஞர் மற்றும் தொழிலாளர்களைத் தொடர்புபடுத்தி ஏற்படுத்தினர்.

தொழிற் சங்கங்களைத் தொடர்ந்து 1933ஆம் ஆண்டு முதல் 1936ஆம் ஆண்டுவரையிலான காலத்தில் தொழிலாளர் கட்சிகள் அதிகம் தோன்றின. பாசுதேவ் சென்னை மாகாணத் தொழிலாளர் கட்சியையும், செல்வபதி செட்டியார் மதராஸ் லேபர் யூனியன் கட்சியையும், வி.எம்.இராமசாமி முதலியார் மாகாணத் தொழிலாளர் கட்சியையும் தொடங்கினர். பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  தேயிலைத் தோட்டம், சுரங்கத் தொழில், துப்புரவுத் தொழில், தோல் பதனிடும் தொழில் போன்ற தொழிற்சாலைகளில் பெரும்பான்மையினர் தலித்துகளே வேலை செய்துள்ளனர்; இன்றும் செய்துவருகின்றனர். சிறுபான்மையினராக மற்ற தொழிற்சாலைகளில் தலித் தொழிலாளர்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருந்தனர். இதனால் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளும் தீண்டாமையும் வேலை செய்யும் இடங்களிலும் தொழிற்சங்கங்களிலும் அதிகம் வெளிப்பட்டன. இதனை ‘மோதல்களில் தொழிற்சங்கங்கள்’ என்னும் நூலில் ஈ.டி.மர்ஃபி சுட்டிக்காட்டியுள்ளார். சென்னை, கோவை, மதுரை, அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களில் பஞ்சாலைத் தொழிற்சங்கங்களின் தோற்றத்தைப் பகுத்தாராய்ந்த இவர், மதுரையிலும் அம்பாசமுத்திரத்திலும் தொழிலாளர்களுக்கிடையேயான சாதி, மத வேறுபாடுகள் தொழிற்சங்கங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் வர்க்க உணர்வு வளர்ச்சிக்கும் தடைகளாக இருந்தன என்பதை இந்நூலில் பதிவுசெய்துள்ளார் (முனைவர் தே.வீரராகவன், 2003:3). ஆகவே, சாதி இந்துத் தொழிலாளர்கள் இன்னும் சாதி அடிப்படையிலேயே சிந்திக்கிறார்கள். எனவேதான் தமக்கென்று தனித் தொழிற்சங்கங்கள் தேவைப்படுகின்றன என பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டார். நீதிக்கட்சியும், காங்கிரஸ் சோஷலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் பிற்படுத்தப்பட்ட சமூகத் தொழிலாளர்களிடமே வர்க்க நலனை உருவாக்க முயன்றனர். இம்முயற்சிகள் தலித் தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தியது. மேலும், தேயிலைத் தோட்டம், சுரங்கத்தொழில், துப்புரவுத் தொழில், தோல் பதனிடும் தொழில் போன்ற தொழிற்சாலைகளில் பெரும்பான்மையினர் தலித்துகளே வேலை செய்துவந்ததால், இத் தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் உழைப்புச் சுரண்டலுக்கும் எதிராக அணிதிரட்ட வேண்டிய தேவையும் எழுந்தது. குறிப்பாக, தோல் பதனிடும் தொழிற்சாலைகளை அதிகம் கொண்டிருந்த வேலூர் மாவட்டத்தில் எஸ்.பி.பாலசுந்தரம், J.J.தாஸ், எம்.பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, எம்.மூர்த்தி, எம்.ஆதிமூலம் போன்றோர் தோல் பதனிடும் தொழிலாளர்களில் ஒருவராக இருந்தவர்கள். அத்தொழிலாளர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகளையும் இழிவையும் உழைப்புச் சுரண்டலையும் நன்கறிந்தவர்கள். தொழிலாளர்களை அமைப்பாக்காமல் தொழில் தகராறுகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும், உழைப்பிற்கேற்ற ஊதியத்தையும் கேட்டுப் போராட முடியாது என்று உணர்ந்தவர்கள் என்றாலும், இக்காலத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் தன்னெழுச்சியான போராட்டங்கள் மிகவும் பரவலாக நடைபெற்றுள்ளன.

தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த ஆதிதிராவிடத் தொழிலாளர்களுக்குக் குறைந்த ஊதியம், கடுமையான அபராதங்கள், மனிதக் கௌரவத்தின் மீது தாக்குதல் (இழிவாக நடத்தப்படுதல்) போன்ற பல குறைகள் இருந்தன. இந்த மோசமான நிலையை எதிர்த்து 1934 – 1935ஆம் ஆண்டுகளில் வேலை நிறுத்தம் வெடித்தது. 1934ஆம் ஆண்டு, ஆகஸ்டு 19ஆம் நாள் மாதவரத்தில் இரண்டு தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் தொடங்கிய வேலை நிறுத்தம், ஆகஸ்ட் 22ஆம் தேதி மேலும் 5 தொழிற்சாலைகளுக்குப் பரவியது. சென்னை மாவட்டத் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் ஆதிதிராவிடர்களின் தலைவருமான சிவசண்முகம் பிள்ளை, இந்தத் தகறாரைத் தீர்த்து வைக்கத் தலையிட்டார். வேலைக்குத் திரும்ப வேண்டுமென்ற அவரது அறிவுரை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வேலை நிறுத்தம் செய்தவர்கள் அடிதடியில் இறங்கினார்கள். அதனால், போலீஸ்காரர்களால் ஒடுக்கப்பட்டார்கள். ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று எந்த நிபந்தனையுமின்றி வேலைக்குத் திரும்பினார்கள். முகமது உசேன் சாகிப் என்பவருக்குச் சொந்தமான மாதவரம் தோல் பதனிடும் தொழிற்சாலையில் தங்களுக்கு அளிக்கப்பட்ட பொங்கல் பரிசு திருப்தியாக இல்லையென்று 2 நாள் கழித்து மீண்டும் வேலைக்குத் திரும்பினர். மீனம்பாக்கத்தில் இருந்த ரோசன் அண்டு கோ என்ற தோல் பதனிடும் தொழிற்சாலையில் 20 விசுவாசமுள்ள தொழிலாளர்களைக் கொண்டு வேலை நிறுத்தத்தை முறியடிக்க அதன் முதலாளி முயன்றபோது 1935ஆம் ஆண்டு, பிப்ரவரி 8ஆம் தேதி நிலைமை விபரீதமானது (முனைவர் தே.வீரராகவன், 2003:322). 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து, கம்புகளை எடுத்துக்கொண்டு தொழிற்சாலையை முற்றுகையிட்டனர். செங்கல்பட்டு மாவட்ட நீதிபதி அந்த இடத்துக்கு விரைந்து வந்து சட்ட ஒழுங்கை நிலைநாட்டினார். 2 பேர் கைது செய்யப்பட்டனர். எதிர்காலத்தில் வேலை நிறுத்தம் செய்ய மாட்டோம் என்று உறுதிமொழி எழுதிக்கொடுத்துவிட்டு எவ்வித நிபந்தனையுமின்றித் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். குறைந்த கூலி, கடின வேலை, வேலையில்லாமலேயே தொழிற்சாலைக்குள் அடைத்து வைக்கப்படுதல், மேஸ்திரிகளின் வசைமொழிகள் ஆகியன தொழிலாளர்களின் குறைகளாக இருந்தன. இவற்றில் எந்தக் கோரிக்கைக்கும் முதலாளி செவிசாய்க்கவில்லை. பம்மலில் கனி முகமது ஈசாக் சத்தார் என்பவருக்குச் சொந்தமான தோல் பதனிடும் தொழிற்சாலையில் 1935ஆம் ஆண்டு, ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்கு, வழக்கமாகத் தமிழ்ப் புத்தாண்டிற்கு வழங்கப்படும் முன்பணம் மறுக்கப்பட்டது காரணமாக அமைந்தது. அந்த முதலாளி வெளியாட்களைக் கொண்டு வந்து வேலை நிறுத்தத்தை முறியடிக்க முயன்றபோது, தொழிலாளர்கள் கல்லெறிந்து தாக்கினர். போலீஸ் உதவியுடன் தொழிலாளர்கள் விரட்டப்பட்டனர். எதிர்காலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம் என்ற ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுவிட்டு எவ்வித நிபந்தனையுமின்றி அடுத்த நாள் வேலைக்குத் திரும்பினர் (முனைவர் தே.வீரராகவன், 2003:323).

இத்தகைய ஒடுக்குமுறைகளை கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், ஈரோடு, வேலூர் போன்ற மாவட்டங்களில் தோல் தொழிற்சாலைகளில் வேலைசெய்த தொழிலாளர்கள் அனுபவித்தனர். திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்கள் குறித்த முறையான ஆவணங்கள் எதுவுமில்லாத நிலையில், சாகித்ய அகாதெமி விருதாளர் டி.செல்வராஜ் 2010ஆம் ஆண்டு வெளியிட்ட ‘தோல்’ நாவல், தோல் சாப்புகளில் சுண்ணாம்பு நீருக்குள் நின்று தோல் அலசுவதால் இரணமாகிப் போன உடலோடும், காலங்காலமாக நிலவும் சாதி அடிமைத்தனத்தாலும், முறி எழுதி வாங்கிக்கொண்ட தோல்சாப் உடைமைகளின் அட்டகாசத்தாலும் இரணமாகிப் போன தொழிலாளர்கள், சம உரிமையும் சமூகநீதியும் சுயமரியாதையும் கேட்டு நடத்திய போராட்ட உணர்வைப் பதிவுசெய்திருக்கும் ஆவணமாக உள்ளது என்றாலும், வரலாற்று ரீதியாகத் திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்களின் போராட்ட வரலாறு எழுதப்படாத ஒன்றாகவே உள்ளது.

“தோல் தொழிற்சாலைகளில் பச்சைத் தோல் ஒன்றை உலர்ந்த, பயன்படுத்தக் கூடிய தோலாக மாற்ற சுமார் நாற்பது நாள்களுக்கு மேலாகும். இத்தொழில் பல்வேறு நிலைகளைக் கொண்டது. நனவு அறுப்பு, சுத்தறுப்பு, தொட்டி, சுண்ணாம்புக்குழி, செல்லா மேட்டு வேலை, இளங்காரம் என்று வழக்குச் சொற்களைக்கொண்டு அழைக்கப்படும் வேலைப் பிரிவுகளில் பச்சைத் தோலின் முடி நீக்குவதிலிருந்து, மேட்டு வேலை வரை நடைபெறும் வேலைகள் அனைத்தும் கடும் உடல் உழைப்பைக் கோருவதுடன் சுகாதாரமற்றச் சூழலில் மேற்கொள்ளப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கக் காலங்களில் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட தலித்துகள், முதலாளிகளால் கடுமையாக ஒடுக்கப்பட்டதாக வயதான தொழிலாளர்கள் நினைவுகூர்கிறார்கள். அதிகாலமே வேலைக்கு வந்துவிட வேண்டும். நேர அளவும், போதிய விடுமுறை நாட்களும் கிடையாது. சுண்ணாம்புக்குழியில் இறங்கி வேலை செய்யும் தொழிலாளிகளுக்குக் கையுறைகளோ, காலுறைகளோ வழங்கப்படாது. சுண்ணாம்பு அரித்துப் புண் உண்டானாலும் வேலை செய்வதை நிறுத்தக்கூடாது. தொழிற்சாலைக்குள் இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட சாதிய ஒதுக்குமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றன. வேலைக்கு வரமறுத்த தலித் தொழிலாளர்களை அடித்து இழுத்துவர ஆட்கள் இருந்திருக்கின்றனர். தலித் தொழிலாளர்களுக்குத் தண்டனையாகக் கழுத்தில் இரும்பு வளையம் போடப்பட்டுள்ளது. தொழிற்சாலைக்குள்ளே உயரமான உத்திரங்களில் தொழிலாளியைக் கட்டித் தொங்க

விட்டு, கீழே முட்களைப் போட்டுக் கொளுத்தியுள்ளார்கள். எதிர்க்கும் தொழிலாளர்கள் மீது தோல் திருட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தொழிலாளியைச் சிறைக்கு அனுப்பிவிட்டு, அவர் வீட்டிலும் நுழைந்து அழிம்பு செய்திருக்கின்றனர். ராணிப்பேட்டையில் தோல்பதனிடும் தொழிலில் கொத்தடிமை முறை இருந்ததாகவும் சொல்கிறார்கள். தொழிலாளிகளுக்கு உழைப்புக்கேற்ற கூலியும், வேறு சலுகைகளும் இருந்ததில்லை. 1900இலிருந்து ஏறக்குறைய 1945 வரையிலும் இந்நிலைமை நீடித்திருக்கின்றன.” இதர தொழிலாளர்களைப் போல், அரசு அனுமதியும், முதலாளிகளின் அங்கீகாரமும், சமூகத் தகுதியும் இல்லாத நிலையில், தோல் பதனிடும் தொழிலாளர்களின் மனவலியை, உரிமையை, உழைப்புச் சுரண்டலை, தீண்டாமையை, ஆதிக்கச் சாதியினரின் அவமதிப்பை அரசுக்கும் முதலாளிக்கும் எடுத்துரைக்க ஓர் அமைப்புத் தேவை என்பதைத் தலித் தலைவர்கள் உணர்ந்தனர்.

இக்காலத்தில் பஞ்சாலை போன்ற தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் இருந்தாலும், அதன் பொறுப்புகளில் சாதி இந்துக்களே இருந்தனர். அதேநேரத்தில், தோல் பதனிடும் தொழிற்சாலை மற்றும் துப்புரவுத் தொழில்கள் தூய்மையற்ற தொழில் என்பதால் தலித்துகளே பெரும்பான்மையினராகப் பணிபுரிந்தனர். இத்தொழில்களில் சாதிஇந்துக்கள் சேரவில்லை. ஆகவே, தனித் தொழிற்சங்கம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. “அனைத்துச் சாதித் தொழிலாளர்களும் ஒருங்கிணைந்த பொதுவான தொழிற்சங்கம் இருந்தபோதும் தலித் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களும் அவசியம்தான். சாதி இந்துத் தொழிலாளர்கள் இன்னும் சாதி அடிப்படையிலேயே சிந்திக்கிறார்கள். எனவேதான் நமக்கொன்று தனித் தொழிற்சங்கங்கள் தேவைப்படுகின்றன” என்ற அம்பேத்கரின் சிந்தனையை உணர்ந்தவராகவும், அதனைச் செயல்படுத்தக்கூடியவராகவும் வேலூர் மாவட்ட தோல்பதனிடும் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கியுள்ளார் தாஸ்.

வடஆற்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட வேலூர், வாணியம்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா, ராணிப்பேட்டை போன்ற ஊர்களில் தோல் பதனிடும் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் வடஆற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம். 1939ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்சங்கம், 1942ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் 1951ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு இன்றளவும் இயங்கிவருகிறது.

J.J.தாஸ் தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கென்று தனித் தொழிற்சங்கம் தொடங்கிய பிறகு, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் சிந்தனை, செயல்பாட்டை, குறிப்பாக, தொழிற்சங்க இயக்கத்தில் தலித்துகளின் பங்கேற்பை முன்வைத்துச் செயல் தந்திர உத்திகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார். குறிப்பாக 1938ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பம்பாய் மாகாணச் சட்டமன்றத்தில் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்வது சட்டவிரோதமானது என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கெதிரான வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், பாருலேகர், எஸ்.ஏ.டாங்கே, நிம்ப்கர் முதலிய தலைவர்கள் தலைமை தாங்கினர். இப்போராட்டத்திற்கு முன்பாக பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், ஜமுனாதாஸ் மேத்தா ஆகியோர் தலித் தொழிலாளர் குடியிருப்புகளுக்குச் சென்று தொழிலாளர்களை ஒருங்கிணைத்தும், முதலாளிகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியும் வந்துள்ளனர். இத்தகைய செயல்தந்திர உத்தியை வேலூர் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தித் தோல் பதனிடும் தொழிற்சங்கக் கிளைகளை உருவாக்கியுள்ளனர். உதயேந்திரம், வாணியம்பாடி போன்ற ஊர்களில் முதல் கிளைச் சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கிளைச் சங்கங்களை நிர்வாக அளவில் ஒழுங்குபடுத்தவும், தொழிலாளர்களை அமைப்பாக்கவும், அரசியல்படுத்தவும் J.J.தாஸ், எம்.ஆதிமூலம் இருவரும் நேரடியாகத் தொழிலாளர்களைச் சந்தித்தும், அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கூட்டங்களை நடத்தியும் தொழிலாளர்களை அணிதிரட்டியுள்ளனர். தொடர்ந்து சென்னை மாகாண அளவில் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில் J.J.தாஸ் பயணம் செய்த காலத்தில், வடஆற்காடு மாவட்டச் சங்கச் செயல்பாடுகளை திரு.எம்.ஆதிமூலம், அவருக்குப் பிறகு திரு.பி.பெருமாள், திரு.நேசராஜ் போன்றோர் ஒருங்கிணைத்தனர். இந்நிலையில் தொழிலாளர்களிடையே தகவல் தொடர்பை ஏற்படுத்தும் வகையிலும், சமூக, அரசியல், பொருளாதார யதார்த்தத்தைக் கற்பிக்கும் வகையிலும் இதழ் ஒன்றை வெளியிட தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம் முயன்றது.

மறையாத ‘உதயசூரியன்’ (1941)

1931 முதல் 1940 வரையில் ‘சாம்பவர் குலமித்திரன்’ (1930), ஆர்.இராஜகோபால் வெளியிட்ட ‘ஆதிதிராவிடமித்திரன்’ (1934), எஸ்.பி.ஐ.பாலகுருசிவம் வெளியிட்ட ‘புத்துயிர்’ (1934), க.அ.பட்டாபிராமதாஸ் வெளியிட்ட ‘தருமதொனி’ (1935) ஆகிய தலித் இதழ்கள் வெளிவந்துள்ளன. இவை ஓரிரு இதழ்களுடன் நின்றுபோய்விட்டன. ஆதிக்கச் சாதிகள் வெளியிட்ட இதழ்களும் தோல் பதனிடும் தொழிலாளர்களின் தேவைகளைக் கண்டுகொள்ளவில்லை என்பதால் இத்தகைய தொழிற்சங்கங்கள் தலித்துகளின் பிரச்சனைகளை அரசிடம் முறையிடுவதற்கும், மக்களிடம் கொண்டு செல்வதற்கும் தகவல் தொடர்பு ஊடகம் இல்லாத நிலையில் எஸ்.பி.பாலசுந்தரம், J.J.தாஸ், எம்.பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, எம்.மூர்த்தி, எம்.ஆதிமூலம் ஆகியோர் இதழ் ஒன்றை வெளியிட வேண்டும் என்ற கருத்தில் ஒன்றுபட்டு நின்றனர்.

தலித் தலைவர்களின் கூட்டு முயற்சியால் 1941 மார்ச் முதல் 1950வரை உதயசூரியன் இதழ் வெளிவந்தது. 1941 மார்ச் முதல் மாதாந்திர இதழாகவும், 1945 முதல் மாதமிருமுறை இதழாகவும், 1947 ஏப்ரல் 14க்குப் பிறகு வார இதழாகவும், 1948 மே மாதத்திற்குப் பிறகு மீண்டும் மாதாந்திர இதழாகவும் வெளிவந்தது என அனுமானிக்க முடிகிறது. மாதாந்திர இதழானாலும், மாதமிருமுறை இதழானாலும், வார இதழானாலும் தொடர்ச்சியாக இதழ் வெளிவரவில்லை என்பது உண்மை. 1941 முதல் 1945 பிப்ரவரி வரை வெளிவந்த இதழ்களில் 20.12.1942 அன்று வெளிவந்த இதழைத் தவிர மற்ற இதழ்கள் கிடைக்கவில்லை. உதயசூரியன் இதழ் வெளிவருவதற்கு முன்பு இதழ் நன்கொடை வெளியிட்ட துண்டறிக்கையில் இதழின் காரியஸ்தர்கள் எம்.மூர்த்தி, J.J.தாஸ், எம்.கிருஷ்ணசாமி என்று குறிப்பிடப்பட்டவர்கள் இதழின் வளர்ச்சியில் பங்களிப்புச் செய்தார்களா, இல்லையா என்பதை அறிய முடியவில்லை. ஆனால், கிடைத்த இதழ்களில் ஆசிரியர் J.J.தாஸ் என்று மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளது. பத்தாண்டுகள் வெளிவந்த உதயசூரியன் இதழின் வரலாற்றை அறிவதற்குக் கிடைக்கக்கூடிய சான்றுகள் உதயசூரியன் இதழ்களும் இதழ் பற்றிய குறிப்புகளுமே.

இதழ் வெளிவருவதற்கு முன்பே இதழின் தேவை, இதழின் நோக்கம் ஆகியவற்றை விளம்பரம் செய்து நன்கொடை திரட்டும் வகையில் துண்டறிக்கை ஒன்றை விளம்பரமாக வெளியிட்டுள்ளனர். இவ்வறிக்கை உதயசூரியன் இதழைப் பற்றி அறிந்துகொள்வதற்குப் பயன்படும் முக்கிய ஆவணமாகும்.

“வருகிறது! வருகிறது! உதய சூரியன் மாதாந்தரப் பத்திரிகை! எப்பொழுது? எப்பொழுது? 1941 வருஷம் ஜனவரி மாதம் முதல். எதற்கு? எதற்கு? தாழ்த்தப்பட்டவர்களின் துயர் தீர்க்கத் தனிக்கட்சியமைத்து ஆவண செய்து ஆதரிக்க ஆதிதிராவிட அருந்தமிழரே வாருங்கள்” என்று துண்டறிக்கை சுட்டுகிறது. தொடர்ந்து, அன்புக்க தோழர்… அவர்களுக்கு நமது சென்னை மாகாண ஜனத் தொகையில் மூன்றிலொருபங்கு ஆதிதிராவிடர்களிருந்தும், நம்முடைய பொது ஜனங்களுக்கு எடுத்துரைக்கப் பத்திரிகை இல்லாமலிருப்பதே நம்முடைய முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாக இருக்கிறது. அதைப் போக்குவதற்கு ஒரு மாதாந்திரப் பத்திரிகையாவது அவசியம். ஆகையால் நமது சமூகம் தேசிய ராஜ்ய பொருளாதாரச் சமூக முன்னேற்றத்திற்கும், சமத்துவம், சகோரத்துவம், சுதந்திரம் பெற ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட வாலிபரும் உயர்த்தப்பட உடல், பொருள், ஆவியைத் தியாகம் செய்து நமது உரிமைகளைப் பெற்று உயிர்வாழ்வதே உலகத்தில் பிறந்த மக்களின் கடமையாகும். இதை உணர்ந்தே இரண்டு மூன்று ஆண்டுகளாக நமது தாழ்த்தப்பட்ட தலைவர்களுடன் கலந்தாலோசித்தும் அவர்கள் கவனிக்கவில்லை. ஆதலால் எங்களுடைய நோக்கத்தைத் தங்களுடைய ஆதரவின்பேரில் பொறுப்பை ஏற்று உதய சூரியன் என்ற மாதாந்திரப் பத்திரிகையை நடத்த முன்வந்திருக்கிறோம். ஆகையால் தங்களாலியன்ற பொருளுதவியையும் சந்தாவையும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட விலாசத்திற்கு அனுப்பவும். 1941ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் உதயசூரியன் மாதாந்தரப் பத்திரிகை புறப்படும். பொருளுதவி செய்தவர்களையும் முன்சந்தா செலுத்தியவர்களையும் முதல் மாதப் பத்திரிகையில் வெளியிடப்படும். ஆகையால் நம் சமூக வாலிபர்களும், உத்தியோகஸ்தர்களும் உபாத்தியாயர்களும் மற்றுமுள்ள சங்கத்தலைவர், நாட்டாண்மைக்காரர், பெருந்தனக்காரர் யாவரும் மனமுவந்து பொருளுதவி செய்யுமாறு மிக வணக்கத்தோடு கேட்டுக்கொள்கிறோம் என்றும், வருடசந்தா ரூ 1-4-0 என்றும், இங்ஙனம் காரியஸ்தர்கள் வி.மூர்த்தி, J.J.தாஸ், வி.கிருஷ்ணசாமி என்றும், விலாசம் வி.மூர்த்தி, காமரேன் பேட்டை, பள்ளிகொண்டா, (N.A.Dt.)” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் துண்டறிக்கை 1940ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு ஒரு கடிதம் போல் அச்சடிக்கப்பட்டுள்ளது எனக் கருதலாம். மேலும் இந்தத் துண்டறிக்கை குடியாத்தம் குமரன் பிரஸ்ஸில் அச்சிடப்பட்டுள்ளது.

இத்துண்டறிக்கை கீழ்க்கண்ட ஐந்து செய்திகளை நமக்குச் சுட்டுகிறது.

1. 80ஆண்டுகளுக்கு முன்பே தலித்துகள் அருந்தமிழர் என்ற சொல்லாட்சியையும், கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் செல்வாக்கு பெறாத காலத்தில் தோழர் என்கிற சொல்லாட்சியையும் பயன்படுத்தித் தோழமை உணர்வையும் வர்க்க உணர்வையும் கட்டியெழுப்ப முயன்றுள்ளனர்.

2.பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடும் கற்பித்தலின் அரசியலைப் பத்திரிகை வழி எடுத்துரைக்க முயன்றுள்ளனர்.

3.ஒடுக்கப்பட்ட சமூகம் வளர வேண்டுமானால் ஒவ்வொருவரும் பொருளாகவோ, உடலுழைப்பாகவோ தியாகம் செய்யும்போதுதான் நாம் உரிமைகளைப் பெறமுடியும்.

4.இன்றைய தலித் பத்திரிகையாளர் சந்திக்கும் பொருளாதாரச் சிக்கலை எண்பதாண்டுகளுக்கு முன்பே உதயசூரியன் இதழாசிரியர்கள் சந்தித்துள்ளனர்.

5.1941ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் உதயசூரியன் இதழ் வெளிவந்துள்ளது.

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன் வெளிவந்த உதயசூரியன்.

1941ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த இதழின் முதல் பக்கத்தில் மலர் 1 என்றும், இதழ் 10 என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

20.12.42 தேதியிட்டு வெளிவந்துள்ள உதயசூரியன் இதழ்; 20-2-45 அன்று வெளிவந்த இதழின் முதல் பக்கம்; ஏப்ரல் 1946 இதழின் முதல் இரண்டு பக்கங்களும் கிடைக்கவில்லை; 25-5-46 அன்று வெளிவந்த இதழின் முதல் பக்கம்; 28 -7-1947 மலர் -6, இதழ் -21.

இந்தியா விடுதலை பெற்றபின் வெளிவந்த உதயசூரியன்

17-10-1947 மலர் -6, இதழ் -24; 24-10-1947 மலர் -6, இதழ் -25; 31-10-1947 மலர் -6, இதழ் -26; 17-11-1947 மலர் -6, இதழ் -28; 23-11-1947 மலர் -6, இதழ் -29; 14-12-1947 மலர் -6, இதழ் -32; 21-12-1947 மலர் -6, இதழ் -33; 28-12-1947 மலர் -6, இதழ் -34; 16-1-1948 மலர் -6, இதழ் -36; 25-1-1948 மலர் -6, இதழ் -37; 8-2-1948 மலர் -6, இதழ் -38.

சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்புக் கொடியில் உதயசூரியன் சின்னம் இடம்பெற்றிருப்பதால் வெளியிடப்போகும் இதழுக்கும் உதயசூரியன் என்று பெயரிட்டு, அரசிடம் பதிவு செய்துள்ளனர் (பதிவுஎண் வி.3480). 1940ஆம் ஆண்டு வெளிவந்த துண்டறிக்கைக் குறிப்புகளின்படி பார்த்தால் 1941 சனவரியில் முதல் இதழ் வெளிவந்திருக்கிறது என முடிவு செய்கிறோம். ஆனால், 1941 டிசம்பர் மாதம் வெளிவந்த இதழின் முதல் பக்கத்தில் மலர் 1, இதழ் 10 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்காணும் துண்டிறிக்கையின்படி 01.01.1941 அன்று உதயசூரியன் முதல் இதழ் வெளிவந்திருந்தால் 1941 டிசம்பரில் வெளியான இதழில் ‘இதழ் 12’ என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், டிசம்பர் மாதம் 10ஆவது இதழ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, 1941ஆம் ஆண்டில் உதயசூரியன் இதழ் தொடர்ச்சியாக வெளிவரவில்லை என்பது உறுதி. துண்டறிக்கையில் பதிவிட்டுள்ளபடி சனவரி, பிப்ரவரி மாதங்களில் இதழ் வெளிவராமல் மார்ச்சில் வெளிவந்திருக்க வேண்டும். அல்லது அதே ஆண்டில் ஏதாவது இரு மாதங்கள் இதழ் வெளிவராமல் இருந்திருக்க வேண்டும். ஆனால், எக்ஸ்ரே ந.கருணாகரன் தன்னுடைய கட்டுரையில் 1941 மார்ச் முதல்நாள் மாத இதழாக வெளிவந்தது என்று குறிப்பிட்டுள்ளார். முதல் இதழ் கிடைக்கும் வரையில், எக்ஸ்ரே ந.கருணாகரன் குறிப்பிட்டுள்ளபடி 1941 மார்ச் முதல் உதயசூரியன் இதழ் வெளிவந்திருக்கிறது என்றே கருதலாம்.

1941ஆம் ஆண்டு வடஆற்காடு மாவட்டம், பள்ளிகொண்டா என்ற ஊரிலிருந்து இதழ் வெளிவந்திருக்கிறது. 1942ஆம் ஆண்டு முதல் வடஆற்காடு மாவட்டம், குடியாத்தம், சந்தப்பேட்டை முகவரியிலிருந்து வெளிவந்துள்ளது. இதழின் இயக்குநராக எஸ்.பி.பாலசுந்தரம் அவர்களும், ஆசிரியராக J.J.தாஸ் அவர்களும் செயல்பட்டனர். உதய சூரியனின் தொடக்க கால இதழ்கள், 1940ஆம் ஆண்டு உதயசூரியன் இதழ் விளம்பரத் துண்டறிக்கை அச்சடித்தது முதல் 1942ஆம் ஆண்டு வரை குடியாத்தம் கணேஷ் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. 1943ஆம் ஆண்டு முதல் இதழ் நிற்கும் காலம் வரை வேலூர் விக்டோரியா அச்சகத்தில் அச்சாக்கம் செய்யப்பட்டுள்ளது.

1941ஆம் ஆண்டு மார்ச் திங்களில் வெளிவந்த முதல் இதழ் கிடைக்கவில்லை. 1941ஆம் ஆண்டு வெளிவந்த 10வது இதழின் முதல் பக்கத்தின் தலைப்பில் ஒரு கிராமத்தில் விடியற்காலம் பின்புலமாக இருப்பதும், இரண்டு மலைகளுக்கிடையில் உதயசூரியன் தோன்றியிருப்பதும், மக்கள் திரளாகக் கூடி ஒரு கம்பத்தில் உதயசூரியன் சின்னமிட்ட கொடியை ஏற்றிவைத்துப் பரவசமடைவது போலவும், வயல்காட்டில் ஓர் உழவன் உழுவது போலவும் படம் வரைந்து அதில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உதயசூரியன் என்று அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்திற்குக் கீழ் மாதாந்திரப் பத்திரிகை, பள்ளிகொண்டா என்று தமிழிலும், (N.A.Dt.) என்று ஆங்கிலத்திலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இக்குறிப்புகளுக்குக் கீழ் மலர் 1 என்றும், சமஸ்கிருதத்தில் ஆண்டும், கார்த்திகை 16 என்றும், (1-12-1941) என்றும், திங்கட் கிழமை என்றும், இதழ் 10 என்றும் இதழ் பற்றிய முழுமையான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

20-12-42 என்கிற தேதியிட்ட உதயசூரியன் இதழின் முதல் பக்கத்தின் வலது மற்றும் இடது புற ஓரம் சிதைந்து காணப்படுகிறது. இதழின் முகப்பில் 8 பக்கங்கள், UDAYASURIYAN என்று ஆங்கிலத்தில், விலை 0-1-0 என்று முதல்வரியும், பெரிய எழுத்துகளில் உதயசூரியன் என்று இரண்டாவது வரியும், ஸிமீரீபீ.ழிஷீ.வி..4380, (ஆசிரியர் J.J.தாஸ்), வருடாந்திரச் சந்தா 1-4-0 என்று மூன்றாவது வரியும், மாதாந்திரத் தமிழ்ப்பத்திரிகை, சந்தைப்பேட்டை, குடியாத்தம் என்று நான்காவது வரியும், சித்ராபானு, மார்கழி 5 (20-12-42) என்று ஐந்தாவது வரியும் இடம்பெற்றுள்ளது. ஐந்தாவது வரியில் மலர், இதழ் எத்தனை என்று அறிய முடியவில்லை. இந்த இதழில் முதல் பக்கத்தின் தலைப்பில் ஒரு கிராமத்தில் விடியற்காலம் பின்புலமாக இருப்பது போன்ற படம், இரண்டு மலைகளுக்கிடையில் உதயசூரியன் தோன்றியிருப்பது போன்ற படம், மக்கள் திரளாகக்கூடி ஒரு கம்பத்தில் உதயசூரியன் சின்னமிட்ட கொடியை ஏற்றிவைத்துப் பரவசமடைவது போன்ற படம், வயல்காட்டில் ஓர் உழவன் உழுவது போன்ற படம் எதுவுமில்லாமல் வெறுமனே இடம்பெற்றுள்ளது.

20-2-45 அன்று வெளிவந்த இதழின் முதல் பக்கத்தில்  1941ஆம் ஆண்டு வெளிவந்த 10வது இதழின் முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ள, ஒரு கிராமத்தில் விடியற்காலம் பின்புலமாக இருப்பதும், இரண்டு மலைகளுக்கிடையில் உதயசூரியன் தோன்றியிருப்பதும், மக்கள் திரளாகக்கூடி, ஒரு கம்பத்தில் வெள்ளை வண்ணக் கொடியை ஏற்றிவைத்துப் பரவசமடைவது போலவும், வயல்காட்டில் ஓர் உழவன் உழுவது போலவும் படம் வரைந்து அதில் ஆங்கிலத்திலும், தமிழிலும் உதயசூரியன் என்று அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. இந்தப் படத்திற்குக் கீழ் Regd.No. M.4380, (ஆசிரியர் J.J.தாஸ்), வருடாந்திரச் சந்தா 2-0-0 என்று முதல் வரியும், மாதமிருமுறை தமிழ்ப்பத்திரிகை, சந்தைப்பேட்டை, குடியாத்தம் என்று இரண்டாவது வரியும், இரண்டு கோடுகளுக்கிடையில் மலர் 5, பார்த்திப ஆண்டு, மாசி மாதம் 12 (20-2-45) ஞாயிற்றுக்கிழமை (இதழ்11) என்று இடம்பெற்றுள்ளது. இதற்குக் கீழ் 4 பக்கங்கள், விலை 0-0-6 என்ற குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

25-5-46 அன்று வெளிவந்த இதழின் முதல் பக்கத்தில் ஒரு கிராமத்தில் விடியற்காலம் பின்புலமாக இருப்பதும், இரண்டு மலைகளுக்கிடையில் உதயசூரியன் தோன்றியிருப்பதும், மக்கள் திரளாகக்கூடி, ஒரு கம்பத்தில் நீல வண்ணக் கொடியில் ஆறு நட்சத்திரங்கள் கொண்ட, ஷிசிதி என்கிற எழுத்துகள் பதிவுசெய்யப்பட்ட கொடியை ஏற்றிவைத்துப் பரவசமடைவது போலவும், வயல்காட்டில் ஓர் உழவன் உழுவது போலவும் படம் வரைந்து அதில் ஆங்கிலத்திலும், தமிழிலும் உதயசூரியன் என்று அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. இந்தப் படத்திற்கு கீழ் Regd.No.M.4380, (ஆசிரியர் J.J.தாஸ்), வருடசந்தா 2-0-0 என்று முதல் வரியும், மாதமிருமுறை தமிழ்ப்பத்திரிகை, சந்தைப்பேட்டை, குடியாத்தம் என்று இரண்டாவது வரியும், இரண்டு கோடுகளுக்கிடையில் மலர் 5, வைகாசி 12 (25-5-46) சனிக்கிழமை (இதழ் 15) என்று இடம்பெற்றுள்ளது. இதற்குக் கீழ் 4 பக்கங்கள், விலை 0-1-0 என்ற குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

01.12.1941 அன்று வெளியான இதழில் உதயசூரியன் சின்னம் கொண்ட கொடி இடம்பெற்றுள்ளது. 20.12.42 அன்று வெளியான இதழில் உதயசூரியன் என்கிற வார்த்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெறுமனே இடம்பெற்றுள்ளது. 20.02.45 அன்று வெளியான இதழில், 01.12.1941 அன்று வெளியான இதழில் உள்ளது போன்று முகப்பு இடம்பெற்றுள்ளது. ஆனால், கொடி வெறுமனே வெள்ளை நிறத்தில் இடம்பெற்றுள்ளது. 25.05.46 அன்று வெளியான இதழில் நீல வண்ணத்தில் கொடியும், அவற்றில் ஆறு நட்சத்திரங்களும், ஷிசிதி என்கிற எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன. உதயசூரியன் இதழின் முதல் பக்கத்தில் ஏற்பட்டுள்ள இம்மாற்றங்களுக்கான காரணங்களை உய்த்துணரும்போது, 1931 முதல் 1945 வரையிலான தலித் இயக்கங்களின் செயல்பாடுகளையும், தலித் தலைவர்களின் சமூக, அரசியல் நிலைப்பாடுகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

1930க்குப் பிறகு எம்.மூர்த்தி, J.J.தாஸ், எம்.கிருஷ்ணசாமி, எஸ்.பி.பாலசுந்தரம், திரு.என்.சிவராஜ் ஆகியோர் 1928ஆம் ஆண்டு தாத்தா இரட்டைமலை சீனிவாசன் தலைமையில் உருவான சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பில் (The  Madras  Provincial  Depressed  Classes  Federation) செயல்பட்டனர். குறிப்பாக, என்.சிவராஜ் சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார். இக்காலத்தில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரைச் சென்னை மாகாணத்தில் அறிமுகம் செய்தவரும் இவரே.

1942ஆம் ஆண்டு திரு.என்.சிவராஜ் அகில இந்தியப் பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு (All India Schedule Castes  Federation) அமைப்பைத் தொடங்கும்வரையில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் தலைமையிலான சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பு (The Madras  Provincial  Depressed  Classes  Federation) ஆதரவு இதழாகவே உதயசூரியன் இதழ் வெளிவந்தது (பார்க்க 01.12.1941 அன்று வெளிவந்த இதழ்க் குறிப்பு).

1942ஆம் ஆண்டு அகில இந்தியப் பட்டியல் சாதிகள் கூட்டமைப்புத் தொடங்கிய பின், சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்புச் சார்பான இதழ் என்றோ, அகில இந்திய ஆதிதிராவிடர் மகாஜன சபா சார்பான இதழ் என்றோ, அகில இந்தியப் பட்டியல் சாதிகள் கூட்டமைப்புச் சார்பான இதழ் என்றோ சுட்டிக்காட்ட முடியாத அளவிலும், தலித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில், அனைத்துத் தலித் இயக்கங்களுக்கும் பொதுவான இதழாக, உதயசூரியன் இதழ் ஆங்கிலத்திலும் தமிழிலும் குறிப்புகளுடன் வெளிவந்தது (பார்க்க: 20.12.42 அன்று வெளிவந்த இதழ்க் குறிப்பு). சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பு உதயசூரியன் கொடியுடன் செயல்பட்டதால், அகில இந்தியப் பட்டியல் சாதிகள் கூட்டமைப்பின் நீல வண்ணக் கொடியில் ஏழு நட்சத்திரங்கள் இடம்பெற்றன.

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் தலைமையிலான சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பு, திரு.என்.சிவராஜ் தலைமையிலான அகில இந்தியப் பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் தனித்தனிக் கொடிகள் என்றானதால், குறிப்பிட்ட தலித் இயக்க அடையாளமில்லாத பொதுவான இதழாக உதயசூரியன் வெளிவந்தது. 1945ஆம் ஆண்டு தாத்தா இரட்டைமலை சீனிவாசன் மறைவிற்குப் பின்னர், அவருடைய அமைப்பில் இருந்த தலைவர்கள் அனைவரும் அகில இந்தியப் பட்டியல் வகுப்பினர் கூட்டமைப்பில் இணைந்து செயல்பட்டனர்.

ஆகவே இரண்டு அமைப்பிற்கும் பொதுவான இதழாக வெளிவந்துகொண்டிருந்த உதயசூரியன், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் வயது மூப்புக் காரணமாக ஓய்விலிருந்தபோதே 20.02.45 அன்று வெளிவந்த இதழில் உதயசூரியன் சின்னம் கொண்ட கொடிக்குப் பதிலாக, எந்தச் சின்னமும் இடம்பெறாத வெள்ளைக் கொடி அச்சடிக்கப்பட்டு, மாதமிருமுறை இதழாக வெளியிடப்பட்டது. தொடர்ந்து 25.05.46 அன்று வெளிவந்த உதயசூரியன் இதழ், அகில இந்தியப் பட்டியல் சாதிகள் கூட்டமைப்பின் இதழாக வெளிவந்துள்ளது என அறியமுடிகிறது. 28.07.47 அன்று வெளியான இதழிலும் மேற்குறித்த அத்தனை செய்திகளும் உள்ளன.

இந்திய விடுதலைக்குப் பிறகு உதயசூரியன் இதழ் எந்தவொரு தலித் இயக்கங்களின் அடையாளமுமின்றி வெளிவந்தது. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என அறிய முடியவில்லை. 24.10.1947 அன்று வந்த உதயசூரியன் இதழின் முதல் பக்கத்தில் பெரிய எழுத்துகளில் உதயசூரியன் என்று முதல் வரியும், வார வெளியீடு, ஆசிரியர் J.J.தாஸ், விலை அணா 1 என்று இரண்டாவது வரியும், மலர் 6, 17-10-1947 வெள்ளிக்கிழமை இதழ் 24 என்று மூன்றாவது வரியும் இடம்பெற்றுள்ளது. இந்த இதழில் முதல் பக்கத்தின் தலைப்பில் ஒரு கிராமத்தில் விடியற்காலம் பின்புலமாக இருப்பது போன்ற படம், இரண்டு மலைகளுக்கிடையில் உதயசூரியன் தோன்றியிருப்பது போன்ற படம், மக்கள் திரளாகக்கூடி ஒரு கம்பத்தில் உதயசூரியன் சின்னமிட்ட கொடியை ஏற்றிவைத்துப் பரவசமடைவது போன்ற படம், வயல்காட்டில் ஓர் உழவன் உழுவது போன்ற படம் எதுவும் இல்லாமல் வெறுமனே இடம்பெற்றுள்ளது.

28.07.1947 (மலர் 6, இதழ் 21) தேதிக்கு முன்பு வெளியான எந்தவோர் உதயசூரியன் இதழும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆகவே, மேற்காணும் இதழ்களின் உள்ளடக்கச் செய்திகளை அறியமுடியவில்லை. ஆனால், 17.10.1947 (மலர் 6, இதழ் 24) அன்று வெளியான இதழுக்குப் பிறகு வெளிவந்த 11 இதழ்கள் கிடைத்துள்ளன. இவ்விதழ்களில் அகில இந்திய ஆதிதிராவிடர் மகாஜன சபா, அகில இந்தியப் பட்டியல் சாதிகள் கூட்டமைப்புப் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள், தோல் பதனிடும் தொழிலாளர் சங்க நடவடிக்கைகள், பார்ப்பனிய எதிர்ப்பு, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அறிவிப்புகள், தீண்டாமை ஒடுக்குமுறைகள், தொழிற்சங்கத் தகராறுகள், முதலாளிக்கும் தொழிலாளிக்குமான முரண்பாடுகள், வேலைநிறுத்தம் குறித்த செய்திகள் போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் கட்டுரை, துணுக்குகள், கவிதைகள் போன்றவை இடம்பெற்றிருந்தன. ‘எம்குலம் தழைக்க எதற்குமஞ்சோம்! புரட்சித் தீ மூட்டினால் பொறாமையால் அணைப்பதா? எம்குல எழுச்சிக்கு ஏந்தலாவோம்! எம்குல உயர்வுக்கு உயிரை விடுவோம்! எம்குல விடுதலைக்குத் தியாகம் செய்வோம்! எம்குலம் வளம்பெற வள்ளல்களாவோம்! எம்குல பகுத்தறிவுக்குப் பணத்தைப் பயன்படுத்துவோம்! எம்குல உரிமைப்போர் வீரன் உதயசூரியனை ஊரெங்கும் பரப்புவோம்!’ (உதயசூரியன், மலர் 6, இதழ் 26, 31.10.47, ப.5) என்பது இதழின் முழக்கமாக இருந்துள்ளது.

தொடக்கக் காலத்தில் இதழ் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்த J.J.தாஸ், பள்ளிகொண்டா எம்.கிருஷ்ணசாமி, எம்.மூர்த்தி ஆகியோரில் பள்ளிகொண்டா எம்.கிருஷ்ணசாமி, எம்.மூர்த்தி இருவரும் 1942க்குப் பிறகு முழுநேரமாக அகில இந்தியப் பட்டியல் சாதிகள் கூட்டமைப்புச் செயல்பாட்டாளராக மாறியதால், இதழ் வளர்ச்சியில் அவர்களுடைய பங்களிப்பு குறைந்தது. உதயசூரியன் இதழ் வெளியிடுவதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட J.J.தாஸ், தலித்துகளை அமைப்பாக்குவதில் இரவு, பகல் பாராது செயல்பட்டார். குறிப்பாக தோல் பதனிடும் தொழிலாளர்களை அமைப்பாக்குவதிலும், அரசியல்படுத்துவதிலும் கவனம் செலுத்தினார். அதற்காக உதயசூரியன் இதழைப் பயன்படுத்தியுள்ளார்.

[email protected]

(கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில்…)

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!