இதுவும் கடந்து போகும்! – பி.இ.சோன்காம்ப்ளே

ஆங்கிலத்தில் : ஆர்.ராஜ் ராவ். தமிழில் : ராம் முரளி

 

எனக்கு இரு மைத்துனர்கள் இருக்கிறார்கள். தோண்டிபா மற்றும் கிஷன் என்பது அவர்களுடைய பெயர்களாகும். என்னுடைய இரு சகோதரிகளில் மூத்தவளை தோண்டிபாவும் இளையவளை கிஷனும் திருமணம் முடித்திருந்தார்கள். தோண்டிபாவின் கிராமம் செரா. கிஷன் ஜகல்பூரைச் சேர்ந்தவர். அவர்கள் இருவரும் என் தந்தையின் மூத்த சகோதரிகளின் மகன்களாவர். அந்த வகையில் இருவரும் எனக்கு முறைமாமன்கள்.

எனது பெற்றோர் இருவரும் இறந்ததற்குப் பிறகு நான் தோண்டிபாவுடன் வசித்துவந்தேன். அவர் சாந்தமான குணவியல்புகளைக் கொண்டவராக இருந்தார். உயர் சாதியினருக்குச் சொந்தமான ஒட்டகங்களைப் பராமரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அந்த ஒட்டகத் தொழிலில் முதலீட்டாளராக வேறொருவர் இருக்க, இவர் வெறுமனே அவற்றைச் சவாரிக்கு அழைத்துச் செல்லும் நபராக இருந்தார். ஒட்டகத்தின் மூலம் கிடைக்கும் கூலியில் பாதி அவருக்குச் சன்மானமாக வழங்கப்பட்டது. எனினும், மாதாந்திரத் தேவைகளை இந்தச் சிறிய தொகையின் மூலம் அவரால் பூர்த்திசெய்ய முடியவில்லை.

என் அக்காள் இதுகுறித்து அவரைத் தொடர்ந்து நச்சரித்துக்கொண்டே இருப்பாள். அவருடைய சோம்பேறித்தனத்தால், தானும் ஏதேனும் வருமானம் ஈட்டினாலன்றி மாதாந்திரச் செலவுகளைச் சமாளிக்க முடியாது எனும் நினைப்பில் அவளும் வேலைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. ஒட்டகத்தில் சவாரி செய்ய ஆட்கள் வருகிறார்களா இல்லையா என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், என் மைத்துனர் வெறுமனே ஒட்டகங்களுடன் தனது தினசரிகளைக் கடத்திக்கொண்டிருந்தார். வேறெந்தவொரு வேலைக்கும் செல்ல மறுத்துவிட்டார். அதனால்தான் பெரும்பாலான தருணங்களில் தன் குடிசையிலேயே அவரால் இருக்க முடிந்தது. தனது குழந்தைகளுடன் பொழுதுகளைச் செலவிட்டபடியே, வீட்டில் இருக்கும் எந்தவோர் உணவையும் அசட்டையாக அமர்ந்து அவரால் உட்கொள்ள முடிந்தது. அதனால் எனது அக்காள் எப்போதும் அவர் மீதான தனது அதிருப்தியைத் தெரிவித்தபடியே இருப்பாள். சமயங்களில் அவரை நோக்கி வசவுச் சொற்களை வாரி இரைப்பாள். இதுபோன்ற தருணங்களில் அவளுக்கு மறுமொழி எதுவும் கூறாமல் எனது மைத்துனர் அங்கிருந்து நழுவி வெளியே சென்றுவிடுவார். எனினும் இவ்வழக்கம் எல்லா நேரங்களிலும் தொடர்வது இல்லை. தோண்டிபாவின் அம்மா (எனது அத்தை) சில நேரங்களில் இத்தகைய சச்சரவுகளைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டு மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் சண்டையைத் துவக்கி வைப்பவளாக இருந்திருக்கிறாள். ‘ஓ தோண்டியா… உன் மனைவி உன்னைப் பற்றி என்னவெல்லாம் சொல்கிறாள் பார்த்தாயா? நீ ஒரு மழுமட்டை என்று அவள் சபிக்கிறாள். பன்றியே, வீட்டுச் செலவுகளை உன்னால் பார்த்துக்கொள்ள முடியவில்லை எனும்போது உனக்கு எதற்குக் குழந்தையின் தேவை வேண்டியிருக்கிறது என்கிறாளே, உன் மனைவி’ என்று அத்தை தோண்டியாவிடம் கூறுவாள். இச்சொற்கள் அவரைக் கோபமடையச் செய்யும். எனது அக்காளுக்கு அடி உதைகள் கிடைக்கத் தொடங்கும். அவளுடைய தலையில் பலமான காயங்கள் ஏற்பட்டு மிகுதி அளவில் இரத்தம் பீறிடும்வரை எனது மைத்துனர் நிதானமடைய மாட்டார். அத்தனை அடிகளையும் தாங்கிக்கொண்டு, தரையில் சப்பணமிட்டு உட்கார்ந்து அழுதபடியும் சபித்தபடியும் இருக்கும் அக்காள், ‘கடவுளே, நான் செத்துக்கொண்டிருக்கிறேன்’ என்பாள் உடல் குலுங்க. எனது அத்தை தோண்டிபாவைத் தொடர்ந்து கோபமூட்ட, என் அக்காளுக்கு மேற்கொண்டு சில அடிகளும் உதைகளும் கிடைத்துக்கொண்டிருக்கும்.

இதுபோன்ற தருணங்கள் என்னை வருத்தமடையச் செய்யும். எனினும், என்னால் என்ன செய்துவிட முடியும்? அக்காளைத் தாக்கியதற்காக அவளுடைய கணவனை அடித்து நொறுக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றும். எனினும் நானொரு சிறு பையன். மௌனச் சாட்சியாக இந்தக் களேபரத் தருணத்தில் நின்றிருப்பதும், பின் அவளுடைய குடிசைக்குச் சில தினங்கள் வராமல் இருப்பதும் மட்டுமே என்னால் செய்ய முடிகின்ற காரியமாக இருந்தது. செரா கிராமத்தில் இருக்கும் அக்காள் அடி உதை வாங்கும்போதெல்லாம், அங்கிருந்து வெளியேறி ஜகல்பூரில் இருக்கும் மற்றோர் அக்காளின் திசைவெளியில் ஓட்டமெடுப்பேன். இருந்தும், நேரடியாக அவளுடைய வீட்டிற்கு என்னால் செல்ல முடிந்ததில்லை. ஏனெனில், அவளுடைய கணவர் விசித்திரமான குணவியல்புகளை உடையவராக இருந்தார். அச்சுறுத்துவதைப்போல என்னைப் பார்க்கும் அவரது குரலில் செருக்கும் ஆணவமும் மிகுந்திருக்கும். என்னுடைய வருகை அவருக்குத் துளியும் மகிழ்வளிப்பதில்லை. அப்படியே சிறிதளவு அவர் சந்தோஷமாக இருக்கும்போது நான் அங்குச் செல்ல நேர்ந்தால், பொருட்படுத்த தேவையில்லாத ஓர் உயிரைப்போல என்னை அவர் பார்ப்பார். யாரேனும் அவரிடம், ‘கிஷன், உனது மனைவியின் சகோதரன் வந்திருக்கிறான் போல…’ என்று சொன்னால், அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, ‘ஆமாம், ஆமாம் வந்திருக்கிறான். ஒரு காரணமும் இல்லாமல் இவன் ஏன் இங்கு வருகிறான் என்றே புரியவில்லை’ என்பார்.

அவரை நினைத்தாலே என் உள்மனம் நடுங்கத் துவங்கிவிடும். அதனால் நேரடியாக அவருடைய வீட்டிற்குச் செல்லாமல், அவர்களது வீட்டிற்கு அருகிலிருக்கும் மாரியாயி கோயிலுக்குச் சென்று அங்கு ஏதேனுமொரு சிறுவெளியைப் பிடித்து அமர்ந்துகொள்வேன். அத்தருணங்களில் அந்தக் கோயிலுக்கு வழங்கப்படும் தேங்காயையும் வேறு பிறவற்றையும் எடுத்துண்ண வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் எழும். எனினும் தெய்வமான மாரியாயி என்னை ஏதேனும் செய்துவிடுவாளோ என்கிற பயத்திலேயே அதைத் தொடுவதற்குக் கூட நான் துணிந்ததில்லை. எதுவும் செய்யாமல் அமைதியாக அந்தக் கோயிலுக்குள் மறைந்திருப்பேன். யாரேனும் கோயிலுக்குள் நுழைந்தால், என்னைப் பார்த்துவிட்டு எனது சகோதரியிடம் அவர்கள் தெரிவிக்கக்கூடும் எனும் எதிர்பார்ப்பில் மறைந்திருக்கும் இடத்திலிருந்து கூச்சத்துடன் எக்கி அவர்களின் பார்வையில் படும்படியாகத் தலையை நீட்டுவேன். அதன்பிறகு, கோயிலுக்குள் விளையாடவரும் சில சிறுவர்கள் என்னைக் கண்டறிந்து, எனது அக்காளிடம் சென்று ‘அக்கா… பல்ஹத் மாமா வந்திருக்கிறார்..’ என்றோ ‘உங்கள் தம்பி வந்திருக்கிறார், மாரியாயி கோயிலுக்குள் அவர் உட்கார்ந்திருக்கிறார். நாங்கள் எவ்வளவு அழைத்தும் வீட்டிற்கு வர மறுக்கிறார்’ என்றோ தெரிவிப்பார்கள்.

அதனால், மனதில் பெரும் அச்சவுணர்வுடன் எனது அக்காள் என்னை அழைத்துச் செல்ல கோயிலுக்குள் வருவாள். எளிமையானவளான அவள் சூட்சமப் புத்தியுடைய தனது கணவனை நினைத்துப் பெரிதும் அச்சத்தில் இருந்தாள். எந்தவோர் இடத்திற்கும் செல்ல அவளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கவில்லை. இதுபோன்ற கட்டளைகள் அவளுக்கு அதிகப்படியான மன உளைச்சலையும் ஏற்படுத்தியிருந்தது. எங்குச் சென்றாலும் அக்காளின் கணவர் மட்டுமே தெய்வீகப் பாடல்களைப் பாடுவார். அசைவ உணவைச் சாப்பிடும் வழக்கம் இல்லாததோடு, தனது கழுத்தைச் சுற்றிப் புனிதக் கயிற்றையும் அணிந்திருந்தார். அதனாலேயே உயர் சாதியினர் அவருடன் ஓரளவு நட்புணர்வோடு பழகிவந்தார்கள். இதனால் பெருமை பிதுங்கும் முகத்துடன் காணப்படும் அவர், அரிதாகவே நலிந்த நிலையில் இருக்கும் மக்களுடன் பேசுவார். வானத்தைத் தொட்டுவிட்டதாகக் கருதும் அவர், தனது கடந்த காலத்தை முற்றிலுமாக மறந்துவிட்டார். என் அக்காள் என்னை நெருங்கி வந்து, ‘வா தம்பி…’ என்று அழைப்பாள். அவளுடன் வீட்டிற்குச் செல்ல எனக்குக் கொஞ்சம் பயமாகவே இருக்கும். வீட்டினுள் நுழையும்போது என்னையும் என் அக்காளையும் நோக்கி ஊர்ந்தலையும் அந்த விசித்திர மனிதனின் விழிகள் என்னைப் பதற்றமடையச் செய்தன. இருப்பினும், வேறு வழியேதும் தெரியாததால், அவளுடைய முதுகின் பின்னால் மறைந்தபடியே அவ்வீட்டில் ஏதேனும் மூலையில் ஒடுங்கிக்கிடப்பேன்.

அவ்வூரில் இருந்த மக்களுக்கு ஒரு தீயப் பழக்கம் இருந்தது. ஏதேனுமோர் அண்டைவீட்டுப் பெண் என் அக்காளிடம், ‘திருவிழா நெருங்கிக்கொண்டிருக்கிறதே, உன் தம்பி உனக்காக என்ன வாங்கி வந்திருக்கிறான்?’ என்று கேட்பாள். பிறருடைய கருணையின் நிழலில் இளைப்பாறும் யாருமற்ற ஓர் அனாதைச் சிறுவன் நான் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களுடைய கேலியும் கிண்டலும் என் அக்காளை வேதனையடையச் செய்தன. எனினும், இதுகுறித்து நான் எதுவும் செய்ய இயலா நிலையில் இருந்தேன். நான் சிறுவன், யாருமற்றவன். அவளுக்கென்று எதுவும் செய்ய முடியவில்லையே எனும் குற்றவுணர்ச்சியில் அல்லலுறுபவன். தினமும் என் மைத்துனர் சாப்பிட்டுவிட்டு வெளியேறியதும், மீதமிருக்கும் பழங்கஞ்சியையும் காய்கறிகளையும் நானும் என் அக்காளும் அமைதியாகப் பகிர்ந்து சாப்பிடுவோம். இரவு நேரங்களில் குரு மஹாராஜ் கோயிலில் நான் படுத்துறங்குவேன். மஹர் சாதியைச் சேர்ந்த மக்கள் தினமும் இரவில் அங்கு ஒன்றுகூடுவார்கள். அந்த மக்களில் சிலர் என்னைப் பார்த்துவிட்டு, ‘யாரது? இருளில் யார் அங்குப் படுத்திருப்பது?’ என்று கேட்பார்கள். அதற்கு யாரோ சிலர், ‘அவன் கிஷனுடைய உறவினன்’ என்று சொல்வார்கள். அவ்வுரையாடலில் பங்கேற்கும் மற்றொரு நபர், ‘இர்மாமாவின் கடைசி மகன் இவன். இவனுடைய தந்தை உயிருடன் இருந்த காலத்தில் அவர்கள் வசதியாகவே வாழ்ந்தார்கள். பலரும் அவரைத் தேடிச் செல்வார்கள். அவரொரு வைத்தியர். இப்போது அவரது மகன் துயரத்துடன் தனது தினசரியைக் கடத்துகிறான். அந்த கிஷன், அவனும்கூட இவனைப் பார்த்துக்கொள்வதோ பொருட்படுத்துவதோ இல்லை. கிஷன் தற்சமயம் நல்ல நிலையிலேயே இருக்கிறான், அவன்தான் இச்சிறுவனை வளர்க்கும் பொறுப்பைத் தன்னிச்சையாக ஏற்க வேண்டும். ஆனால், அவன் அப்படிச் செய்வதாகத் தெரியவில்லை. அவன் அந்த அளவிற்குக் கஞ்சத்தனம் மிகுந்தவனாக இருக்கிறான்’ எனத் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.

இரவு முழுவதும் அந்தக் கோயிலில் படுத்திருந்துவிட்டு, காலை விடிந்ததும் என் அக்காளிடம் சில சமயங்களில் தெரிவித்துவிட்டும், சில சமயங்களில் தெரிவிக்காமலும் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் செரா கிராமத்திற்குச் செல்வேன். அவளிடம் தெரிவிக்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றால், அது அவளை வருத்தமடையச் செய்யும். பிறகு யாரேனும் ஒருவர் அவளிடம், ‘சிறுவன் செரா கிராமத்திற்குச் சென்றிருக்கிறான்’ எனும் தகவலைப் பகிர்ந்துகொள்வார்கள். அவள் அந்தக் கோயிலிலேயே பதற்றத்துடனும் விம்மி அழுதபடியும் அமர்ந்திருப்பாள். சில சமயங்களில், என்னைத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல அக்காள் வரும்போது, நான் அவளுடன் செல்லாமல் கோயிலிலேயே தங்கியிருந்துவிட்டு, மீண்டும் செரா கிராமத்திற்குத் திரும்பிவிடுவதும் நடந்திருக்கிறது. அப்படி செரா கிராமத்தை நோக்கிச் செல்லும் சில நேரங்களில் நான் எனக்குள்ளாகவே ‘பகல் இன்னும் உயிர்த்திருக்கவே செய்கிறது. அதனால் தொடர்ந்து நடந்துகொண்டே இரு’ எனச் சொல்லிக்கொள்வேன். புக்கா மற்றும் பெம்பராவின் பண்ணையை நான் அடையும்போது சூரியன் முழுவதுமாக மறைந்து இருள் இறங்கத் துவங்கியிருக்கும். இருள் என் நடைவழியில் குறுக்கிடத் துவங்கும்போது இயல்பாகவே என்னில் பீதியுணர்வு ஆட்கொண்டுவிடும். அந்த நேரத்தில் அப்பகுதியில் ஏதேனும் இலைகள் காற்றில் சலசலத்தால்கூட எனது உடல் பாகத்தில் இருந்து ஏதோ ஒன்று தகர்ந்து விழுவதாகக் கற்பனை செய்துகொள்வேன். சுத்தரின் பண்ணையை நெருங்கும்போது என்னுடைய அச்சம் பலமடங்காக உயர்ந்துவிடும். ஏனெனில் அங்கிருக்கும் ஆலமரம் ஒன்றின் அடியில் கொடூரமான பேய் ஒன்று சுற்றுவதாக அவ்வூரில் வதந்தி பரவியிருந்தது. அப்பகுதியை அவசரத்துடன் கடந்துசெல்லும் நான், ஏதேனுமொரு சிறிய சப்தம் எழுந்தாலும்கூட நடையை விரைவுப்படுத்தி ஓட்டமெடுத்துவிடுவேன். இருளில் புதைந்திருந்தபடி ஆந்தை ஒன்று தொலைவில் குரலெழுப்பிக்கொண்டிருக்கும், அதையோர் அபசகுணமாகக் கருதுவேன். உடல் பதற்றத்தில் தாறுமாறாகக் குலுங்கித் தவிக்கும். சில நேரங்களில் நிலத்தில் கிடக்கும் காய்ந்த குச்சிகள் என் கால்களைக் கீறிவிடும், அதிலிருக்கும் முட்கள் காயத்தை ஏற்படுத்தும். என் பாதத்திலிருந்து முட்களைப் பிடுங்க முயற்சி செய்கையில் அவை பாதியாக உடைந்துவிடும். என் அக்காளின் அழைப்பை ஏற்று அவளுடைய வீட்டிற்குச் செல்லாததை நினைத்து இதுபோன்ற சமயங்களில் என்னையே நான் நொந்துகொள்வேன். அவளுடைய நேசத்தைப் புறக்கணித்ததால் இதுபோன்ற செய்கைகள் எனக்குப் பாடம் கற்பிக்கின்றன என நினைத்துக்கொள்வேன்.

நான் நான்காம் வகுப்பை நிறைவுசெய்திருந்தேன். அதன்பிறகு படிப்பைத் தொடரும் வாய்ப்பு அமையவில்லை. வேலைக்குச் செல்லும் வயதையும் எட்டாததால் தொடர்ந்து வாழ்க்கையில் என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. அத்தகைய காலங்களில்தான் விசித்திரமான ஒன்று நிகழ்ந்தது. செராவில் இருந்த எனது அக்காள், ஜகல்பூரில் இருக்கும் அக்காளை அவளுடைய பிரசவத்திற்காகத் தனது வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள். கர்ப்பிணியாக இருந்த அக்காள் இதனால் தனது பாரம் குறைக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தாள். கணவன் வீட்டில் வதைப்பட்டுக்கொண்டிருந்த அவளுடைய நாட்கள் இங்கு இலகுவாக மாறியிருந்தன. அவளுக்குப் பெண் குழந்தை பிறந்தது. செராவில் இருந்த வீடானது ஓலைகளால் வேயப்பட்ட சிறு குடிசை என்பதற்கு மேல் ஏதுமில்லை. தினமும் இளம் தாய்க்காக அக்குடிசைக்குள் ஓர் எண்ணெய் விளக்கு இரவு நேரங்களில் ஏற்றிவைக்கப்பட்டிருந்தது. குழந்தையைக் கவனித்துக்கொள்ள அந்தத் தீ அவசியமாக இருந்தது. ஆனால், எவரும் எதிர்பாராத ஓர் இரவில் அந்த விளக்கில் பிரகாசித்துக்கொண்டிருந்த தீ குடிசையில் பற்றிக்கொண்டுவிட்டது. இதை உணர்ந்தவுடனேயே குடிசைக்குள் இருந்த எல்லாரும் வெளியில் வந்துவிட்டோம் என்றாலும் நேரம் செல்லச் செல்ல தீயின் உக்கிரம் தாள முடியாததாக வளர்ந்துகொண்டே சென்றது. அதைக் கட்டுப்படுத்தும் வழிகளெதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. அப்பகுதியில் இருந்த மக்களும் தங்களால் இயன்ற எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தார்கள். ஏராளமான வாளிகளில் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயை அணைக்கப் போராடினார்கள். ஆனால் அவர்களுடைய முயற்சிக்குப் பலனேதும் கிடைக்கவில்லை. காற்றின் சுழலும் தாண்டவமாடிய அந்த இருண்ட பேரிருளில் தீயின் உக்கிரமும் கைக்கோத்துக்கொண்டு முழுக் குடிசையையும் எரித்து வெறும் சாம்பல் குவியலாக மண்ணில் கிடத்தின. தீ பற்றிய நிகழ்வே ஊரிலெங்கும் பேச்சாய் இருந்தது. மஹர் சாதியைச் சேர்ந்த சிலர், ‘ஏன் அவள் தன் தங்கையை இங்கு அழைத்து வந்திருக்கிறாள் தெரியுமா?’ எனப் பேசத் துவங்கிவிட்டார்கள். அதற்கு ஒரு பெண், ‘தன்னுடைய அன்பை அவள் காண்பிக்க முயல்கிறாள்’ என்றாள். மற்றொரு பெண், ‘சரியாய்ப் போயிற்று, அவள் அடிவயிறு குளிர்ந்திருக்க வேண்டுமென்பதற்காக நம்முடைய குடிசைகள் அனைத்தும் தீயில் கருக வேண்டுமா?’ என்றாள். ‘அப்படிப் பேசாதே, எல்லோருக்கும் கெட்ட காலம் வரும்’ என்று வேறு சிலர் அதற்குப் பதிலளிப்பார்கள். இவ்வாறு தீயின் பாதகத்தில் தம்மையும் பிணைத்துக்கொண்டு அவ்வுரையாடல் தொடர்ந்தபடியே இருந்தது.

செராவில் இருந்த எனது அக்காள் மிகவும் வறுமை நிலையில் இருந்தவள். மழைக் காலங்களில் உதவும் என்பதற்காகச் சில சாக்குத் துணிகளை அவள் தன் குடிசையில் சேகரித்து வைத்திருந்தாள். அதோடு விதையில்லாத பருத்திகளும் ஒட்டகச் சேணத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இவை எல்லாமும் இப்போது கருகிச் சாம்பலாகிவிட்டன. அவர்களுடைய ஆடைகளும் மழைக் காலங்களிலும் குளிர் காலங்களிலும் கதகதைப்பைத் தரக்கூடிய துணிகளும் இப்போதும் முழுவதுமாக அழிந்துவிட்டன. என் அக்காளின் குழந்தையை அத்தகைய துணி ஒன்றின் மீதுதான் படுக்கவைத்துப் பார்த்துக்கொண்டோம். ஓட்டை விழுந்திருந்த அத்துணிகளை அக்காள் தைத்துத்தான் வந்திருந்தாள் என்றாலும் குளிர்காலத்தைத் தாங்கக்கூடிய அளவுக்கு அது தரமானதாகவே இருந்தது. இப்போது எல்லாம் போய்விட்டன. ‘மொத்தக் குடிசைகளும் எரிந்து சாம்பலாகிவிட்டன. ஆனால் யாருக்கும் எதுவும் நடக்கவில்லை. கடவுளின் கருணையே கருணை! அவர் எப்போதும் ஏழைகளின் பக்கம்தான் இருக்கிறார்!’

‘நெருப்பு! நெருப்பு! சக்குபாயின் குடிசை தீப்பற்றி எரிகிறது’, ‘ஏன் அந்தக் கழுதை தன் தங்கையை இங்கு அழைத்து வந்தாள்? அவள் எங்கு வசித்திருந்தாளோ அங்கேயே அவளை வைத்திருந்திருக்க வேண்டும்’, ‘அவர்களுடைய தந்தை இறந்துவிட்டதால், பிரசவக் காலத்தில் தானே முன்நின்று அவளைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென அவள் நினைத்திருக்கலாம்’ என ஊர் எங்கள் குடும்பத்தைப் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தது. சிலர் அவளருகில் நெருங்கி வந்து பரிதாபத்துடன், ‘எங்கள் வீட்டிற்கு வா சக்கு, எங்களால் இயன்றதைத் தருகிறோம்’ என்றார்கள், வேறு சிலர், ‘உங்கள் குழந்தைக்கு நாங்கள் ஆடைகளைத் தருகிறோம்’ என ஆறுதலாகக் கூறினார்கள்.

இப்படியே நாட்கள் நகர்ந்தன. சிலர் எங்களுக்குத் துணிகளையும் சிலர் பருப்பு வகைகளையும் சிலர் தானியங்களையும் சிலர் அரிசியையும் வழங்கினார்கள். தனக்கு வழங்கப்பட்ட எந்த உணவையும் வீணடிக்க அக்காள் தயாராக இல்லை. அவை நாட்கணக்கில் பொட்டலத்திலேயே பிரிக்கப்படாமல் இருந்தாலும்கூட தேவையேற்படும்போது அவற்றை நாங்கள் உட்கொள்ள வேண்டியிருந்தது. அதன் சுவை குமட்டலை வரவழைக்கக்கூடியதாக இருந்தது என்றாலும், புதிதாகக் கிடைக்கும் உணவுடன் அவற்றையும் சேர்த்து அக்காள் எங்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தாள். அப்போதும் அதன் சுவை அருவருப்பூட்டுவதாகவே இருந்தது என்றாலும் எவ்விதமான எதிர்ப்பையும் காண்பிக்காமல் கிடைப்பதை உட்கொள்ள வேண்டிய நிலையில் நாங்கள் இருந்தோம். சிறிது சிறிதாக எங்கள் மண் குடிசையின் சுவர்களைக் கட்டியெழுப்பினோம். அந்த மண் குடிசையின் மீது மரக்கிளைகள், இலைகள் மற்றும் தீவினங்களால் இட்டுக்கட்டப்பட்ட கூரையையும் வேய்ந்தோம். நாங்கள் அந்தக் குடிசையினுள்ளாகவே மீண்டும் வசிக்கத் துவங்கியிருந்தோம். கோடைக்காலம் அப்போது உச்சத்தில் இருந்தது. உடலில் பொத்தலை ஏற்படுத்தும் அளவுக்கு வெப்பம் மிகுந்திருந்தது. அதனால் மதிய வேளைகளில் குடிசைக்குள் இருக்க முடியாததால், பிராமணர்களுக்குச் சொந்தமான புளியமரத்தின் நிழலில் போய் அமர்ந்துகொள்வோம்.

சக்குவின் கணவன் இப்போதாவது ஒட்டகத்தை விட்டொழித்துவிட்டு, ஏதேனுமொரு வேலையைத் தேடிக்கொள்ள வேண்டுமென எல்லாரும் அறிவுறுத்தினார்கள். ஆனால், அவர் தனது பிடிவாதத்தில் உறுதியுடன் இருந்தார். ஒட்டகத்தைத் துறக்கும் எண்ணமே அவருக்கு இல்லை. ஏதேனும் வேலை செய்யும்படி அவரிடம் நாம் கோரினால், அதற்கு நறுக்கென்று, ‘ஒட்டகத்தைக் கவனித்துக்கொள்ளவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது, நீங்கள் போய் உங்கள் வேலையைப் பாருங்கள்’ என்று பதிலுரைப்பார். பிற வேலைகள் எதிலும் ஈடுபட அவர் தயாராக இல்லை. உணவு இருக்கிறதோ இல்லையோ அவர் தனது ஒட்டகத்தையே சுற்றிச் சுற்றி வரும் வழக்கத்தைக் கைவிடுவதாக இல்லை. வீட்டுக்குத் தேவையான சாமான்கள் இருக்கின்றனவோ இல்லையோ அதுகுறித்தெல்லாம் அவருக்குத் துளி கவலையுமில்லை. ஏழ்மை நிலையில் இருக்கும் என் அக்காள் மட்டும்தான் தன்னுடைய பெண்ணையும் கவனித்துக்கொண்டு, குடும்பப் பாரத்தையும் சுமக்க வேண்டியிருந்தது.

வேறொருவரின் வீட்டிற்காக மாட்டுச் சாணத்தைச் சேகரித்துத் தருவது, புல் அல்லது விறகுகளைப் பொறுக்கி எடுத்துச் செல்லவது எனத் தொடர்ச்சியாகப் பல வேலைகளைச் செய்தபடியே இருந்தாள். இதுமாதிரியான சமயங்களில் நானும் அவளுடன் இருந்தேன். சில நேரங்கள் இத்தகைய வேலைக்கு அவள் அழைக்கும்போது அவளுடன் செல்ல எனக்கு விருப்பமிருக்காது. அவளது அழைப்பை மறுக்குமாறு என் மனக்குரல் உச்சரிக்கும். எனினும், மறுப்புத் தெரிவித்தால் அவள் என்னை அதட்டக்கூடும் எனும் அச்சத்தால் அவள் எங்கெங்கெல்லாம் சென்றாலோ அங்கெல்லாம் நானும் அவளுடன் இருந்தே தீர வேண்டிய கட்டாயம் இருந்தது. மழைக்காலம் அப்போது தொடங்கிவிட்டிருந்தது. உண்மையில் மழையின் முதல் துளி இன்னமும் மண்ணில் விழுந்திருக்கவில்லை என்றாலும் மழைக் காலமாதலால் புறச்சூழலின் மீது குளுமை படர்ந்திருந்தது. அதனால் எல்லாரும், ‘சுக்கு, உன் தம்பியை இனிப் பள்ளிக்கு அனுப்பாதே. ஏதேனும் ஓரிடத்தில் பணியாளாகச் சேர்த்துவிடு’ எனத் தெரிவிக்கத் துவங்கியிருந்தார்கள். அக்காள் அவர்களிடம், ‘அவன் இன்னமும் சிறியவன்தான்’ என்பாள். அவர்களும் பதிலுக்கு, ‘அன்பு, அரவணைப்பு எனச் சொல்லி வீட்டிலேயே அவனைப் பூட்டி வைத்திருக்காதே. அது உனக்கு வருமானம் ஈட்டித் தராது. அவனுக்குப் பதிமூன்று வயது ஆகிவிட்டது. அவனுக்கு என்ன பிரச்சனை? ஏன் அவனால் வேலைக்குச் செல்ல முடியாது என்கிறாய்?’ என்பார்கள். சில பெண்கள் என்னிடம், ‘கிருஷ்ணராவ் பட்டீல் அல்லது அப்பா மூர் ஆகிய இருவரில் யாருடைய வீட்டில் நீ பணியாளாகச் சேர விரும்புகிறாய்?’ எனக் கேட்பார்கள். அவர்களுக்குப் பதிலளிக்காமல் நான் அமைதியுடனேயே இருப்பேன். அக்காளுக்கும் நான் வேலைக்குச் சென்றால் சற்றே மகிழ்வாய்தான் இருக்கும். குடும்பத்தை நிர்வகிப்பதற்குக் கூடுதலாய் அவளுக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கும் என்பதோடு, பணியிடத்திலேயே எனக்கு உணவு வழங்கிவிடுவார்கள் என்பதால் குடிசையில் சமைக்கும் உணவிலும் ஒரு நபரைக் குறைத்துவிடலாம் அல்லவா.

இக்காரணங்களால் அக்காள் என்னை வேலையில் சேர்த்துவிட்டாள். அவளுடைய கணவரும் இதுகுறித்து எதுவும் கவலை கொண்டவராகத் தெரியவில்லை. கிருஷ்ணராவ் பட்டீல் எனக்கு மாதம் 2 ரூபாய் 50 பைசா ஊதியமாகத் தருவதற்கு ஒப்புக்கொண்டார். எல்லாரும் இப்போது எனது அக்காள் தன் மீதிருக்கும் சுமையைக் கொஞ்சம் சமாளிக்கக்கூடியவளாக மாறப் போகிறாள் என்றே கருதினார்கள். எனக்குக் கூலியாகக் கிடைக்கும் பணத்தில் குடிசைக்கு ஏதேனும் பொருட்களையும் அவளால் வாங்க முடியும். நான் இதற்கு முன்பு இதுபோன்ற வேலைகள் எதையும் செய்ததில்லை என்றாலும், சிறிது காலம் வரை நானும் இவ்வேலையில் எவ்விதப் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவில்லை. நான் வேலைக்குச் சேர்ந்திருந்தபோது உண்மையில் அங்கு அதிக வேலைகளும் இருக்கவில்லை. இது எல்லாவற்றையும் விட எனது எஜமானர்கள் என்னை எந்த வேலையையும் செய்யச் சொல்லி நச்சரிக்கவில்லை. மேலும், என் அக்காள் வீட்டில் சாப்பிடும் உணவைவிட இங்கு தரப்பட்ட உணவு சுவை கூடியதாக இருந்தது. அதே பழங்கஞ்சியும் காய்கறிகளும்தாம் என்றாலும் இதன் சுவை அதிலிருந்து வேறுபட்டிருந்தது. அக்காளின் வீட்டில் சில நாட்களில் உணவு இருக்கும், சில நாட்களில் இருக்காது. சில சமயங்களில் கீரைப் பச்சடியுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்கு ஒருசில பிரெட் துண்டுகள் எனக்குக் கிடைக்கும். பெரும்பாலும் அறுவடையின்போது உலர்த்தப்பட்டுச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மூலிகைகள் வைத்தே எங்கள் வயிறுகளை நிரப்பிக்கொள்ள வேண்டியிருக்கும். அல்லது வெறுமனே காய்கறிகளை மட்டும் சாப்பிடுவோம். அதனால்தான் கிருஷ்ணராவ் பட்டீல் வீட்டில் வழங்கப்பட்ட உணவு எனக்குப் பெரிதும் பிடித்திருந்தது.

எனினும், இந்த நிலை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. சிறிது நாட்களிலேயே நான் உணவருந்தும் இடம் மாற்றப்பட்டது. சாணக் குவியலின் அருகில் அமர்ந்தோ அவர்களுடைய குழந்தைகள் மலங்கழிக்கும் இடத்திற்கு அருகிலோ அமர்ந்து சாப்பிடும் நிலை உண்டானது. நான் கிளர்ச்சியடைந்தேன். என் விருப்பத்திற்கு எதிரான சூழலில் வேலை செய்வது மிகக் கடினமானது எனக் கருதினேன். என்றாலும், என்னால் அந்த உணவைச் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. அங்கிருந்து விலகியோடும் எண்ணம் எனக்குள் எழுந்தது. ஆனால், நான் அப்படியே நிலைத்துவிட்டேன், நான் கூச்சச் சுபாவம் உள்ளவன் ஆயிற்றே. பள்ளியில் பயின்ற காலத்தில் உணவு கிடைக்கவில்லை என்றாலும் பள்ளிக்குச் செல்வது அற்புதமானதாக இருந்தது. ஆனால், இங்கு உணவு எனக்கு வழங்கப்பட்டாலும் சிறுவர்கள் மலங்கழிக்கும் இடத்தில் அமர்ந்து நானதைச் சாப்பிட வேண்டும். நான் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக உணர்ந்தேன். ஒருநாள் தீவினத்தைச் சேகரிப்பதற்காக நான் பட்டீலுடைய பண்ணைக்குச் சென்றேன். அங்கு அதிகளவிலான தீவினம் கிடைத்தது. அவற்றை முழுவதுமாக என்னால் சுமந்துசெல்ல முடியவில்லை. என்னால் என்ன முடியுமோ அவ்வளவு செய்தாலும், இரண்டு அல்லது மூன்று மூட்டைகளுக்கு மேல் என்னால் சுமக்க முடியவில்லை. காற்றும் அப்போது பலமாக அடித்துக்கொண்டிருந்தது. தீவினங்களைக் கயிற்றால் கட்டியிருந்தேன் என்றாலும், என்னால் அதனை இறுக்கமாகக் கட்ட முடியவில்லை. அது வழுவிக்கொண்டுபோனது. என் முகத்தின் மீது மோதிய காற்றின் ஆக்ரோஷத்தால் என்னால் சில அடிகள் கூட நகரவே முடியவில்லை. அப்போது என்னைக் கடந்து செல்லும் சிலர், ‘என்னப்பா நீ பணியாளனாக மாறிவிட்டாய்?’ என்பார்கள். சில பள்ளி மாணவர்கள் கிண்டலாக, ‘நீ பள்ளியில் இருந்து விலகிவிட்டாயா? இப்போது கிருஷ்ணராவ் பட்டீலின் வீட்டில் பணியாளனாக இருக்கிறாயா?’ என்பார்கள். என்னால் அவர்களுக்குப் பதில் சொல்ல முடியாது. அவர்களுடைய கேள்விகளை ஆமோதிப்பதைப்போல முணுமுணுத்தபடியே, அவ்வாறு செய்வதற்காக என்னையே நொந்துகொண்டபடி அவர்களைக் கடந்து சென்றுவிடுவேன். பிச்சைக்காரர்கள் தேர்வுசெய்யும் நிலைகளில் இருப்பதில்லை. வேலை செய்வதைத் தவிர எனக்கு வேறு எந்தவொரு வழியுமில்லை. எனது அக்காளுக்கும் நான் வேலை செய்வதில் மகிழ்ச்சியில்லை என்றாலும், அவளுக்கு மாற்று வழிகள் எதுவுமில்லை. அவளுடைய குடிசை எரிந்து சாம்பலாகியிருக்கிறது. அக்காள் என்னிடம், ‘தம்பி, நன்றாக வேலை செய், அதனால் நம்மால் நமது குடிசையைக் கட்டியெழுப்பவும் நல்ல வாழ்நிலையை அடையவும் முடியும்’ என்பாள்.

ஒருவேளை எனது பெற்றோர் இப்போது உயிருடன் இருந்திருந்தால், ஜகல்பூரில் இருந்த அக்காவைப் பிரசவக் காலத்தின்போது அவர்கள் கவனித்திருப்பார்கள், இந்தக் குடிசை எரிந்து சாம்பலாகும் நிலை உருவாகியிருக்காது என எனக்குள் நான் நினைத்துக்கொள்வேன். ஆனால், இவ்வளவு விரைவாக எனது பெற்றோர் ஏன் கடவுளின் காலடியை நோக்கிச் சென்றார்கள் என்பது சொர்க்கத்திற்கே வெளிச்சம்.

இப்போது பட்டீலின் குடும்பம் ஏராளமான பணிகளில் என்னை உட்படுத்துகிறார்கள். நான் ஒரு சிறுவன். எப்படி என்னால் இப்படியே தொடர முடியும்? அதன்பிறகு மழைக் காலம் வந்தது. என்னை வேலையில் ஈடுபடுத்தியதற்காக என் மைத்துனர் என் அக்காளின் மீது கோபத்தில் இருந்தார். ‘வாழ்க்கை நமக்கு என்ன சாத்தியங்களை அளித்திருக்கிறதோ, அதை வைத்து நாம் வாழ்வோம். ஏன் இந்தச் சிறுவனையும் ஓர் அடிமையாக ஆக்குகிறாய்?’ என அக்காளிடம் தெரிவித்த அவர், தனது பார்வையை என் பக்கமாகத் திருப்பி ‘இனி நீ வேலைக்குச் செல்ல வேண்டாம், பள்ளிக்குச் செல்’ என்றார். இதனால் ஆசுவாசமாக உணர்ந்த நான் விடுவிக்கப்பட்ட மனோநிலையில் அன்று பணியிடத்திற்குச் செல்லாமல் வீட்டிலேயே தங்கிவிட்டேன். மறுநாள் என்னைத் தேடி கிருஷ்ணராவ் பட்டீல் எங்கள் குடிசைக்கே வந்துவிட்டார். பெரும் கோபக் குரலில், ‘ஒன்றுக்கும் உதவாத சிறுவனே, உனக்கு என்ன ஆயிற்று. கொஞ்சம் கூட உனக்கு நன்றியுணர்வே இல்லையா? எதற்காக வேலைக்கு வராமல் உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறாய்?’ என்றார். பிறகு என் அக்காளைப் பார்த்து, ‘உனது கணவன் எங்கே?’ எனக் கேட்டார். வீட்டினுள்ளிருந்து வெளியே வந்த மைத்துனர், ‘இந்தச் சிறுவனும் அவனுடைய அக்காளும்தான் இது தொடர்பாக முடிவு செய்திருக்கிறார்கள். எனக்கும் இதற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை’ என்றார். இதுவரையில் அந்த மாதத்திற்கான என்னுடைய சம்பளத்தை அவரிடமிருந்து பெற்றிருக்கவில்லை என்பது ஒரு நல்ல செயலாக இருந்தது எனக்கு. அவர் வீட்டில் நான் சாப்பிட்ட உணவுக்கு, நானங்கு செய்த வேலைகள் ஈடாகிவிடும். அதனால் இனிமேல் அங்கு நான் வரப்போவதில்லை எனத் தெரிவித்துவிட்டேன். அவருடைய வீட்டிற்குச் சேவகம் புரியச் செல்வதிலிருந்து விடுபட்டு, இங்கு வீட்டிலேயே இருப்பது என முடிவுசெய்திருந்தேன். பட்டீல் என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் ஒருவிதச் சலிப்புடன் அங்கிருந்து விலகிச் சென்றார். எல்லாரும் என்னையே குற்றம் சாட்டினார்கள். ‘அட அனாதைச் சிறுவனே. உன்னால்தான் உன் அக்காளின் குடிசை தீப்பற்றி எரிந்தது. அப்படியிருக்க, ஏன் உனது வேலையை விடுவதென முடிவு செய்தாய்?’ இது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த நான், எப்போதும் ஒடுங்கிய நிலையிலேயே இருந்தேன். ஆனால் அவர்கள் பெரியவர்கள். நான் அவர்களுக்குப் பதில் சொல்ல முடியாததால் என் அக்காள் எனக்காகப் பரிந்து பேசுவாள். அதையெல்லாம் கூர்ந்து கவனிக்கும் நான், என்ன செய்வதென்று தெரியாமல் அருகிலிருக்கும் வீடொன்றில் உட்கார்ந்தபடி அழுதுகொண்டிருப்பேன். அதன்பிறகு நான் அமைதியுடன் யாரோ ஒருவரின் பண்ணைக்குச் சென்று சிறிய சிறிய வேலைகளைச் செய்துகொண்டு, அவர்கள் எனக்களிக்கும் எதுவொன்றையும் சாப்பிட்டபடியே நாட்களைக் கடத்துவேன். எனக்குக் கொடுப்பதற்கு உணவு எதுவும் அவர்களிடம் இல்லாதபோது, ‘இந்தத் தானியங்களை அடுப்பில் வாட்டிச் சாப்பிடு’ என்பார்கள். சில நேரங்களில் நான் அவற்றைச் சாப்பிட்டிருக்கேன், சில நேரங்களில் எதுவும் சாப்பிடாமலேயே கிடந்திருக்கிறேன். அவ்வப்போது அவர்கள் எனது பொறுமையைச் சோதிப்பதைப்போல, ‘என்ன, நான் உன்னைச் சாப்பிடு என்றுதானே சொன்னேன், அதற்கு ஏன் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்துகொள்கிறாய்? பள்ளியில் உனக்கு நற்பண்புகள் எதையும் சொல்லித் தரவில்லையா? எப்போதுதான் உனது அறிவு வளரும்?’ என்பார்கள். அதனால் அவர்கள் வற்புறுத்தினால் மட்டும் அவர்கள் கொடுக்கும் ஏதோவொன்றை நான் சாப்பிடுவேன். அவர்கள் கொடுக்கும் தானியங்களை அதிகளவிலான தண்ணீரில் கழுவுவேன். வறுபட்ட தானியங்கள் பருத்து, என் வயிற்றில் விசித்திரமான ஒலிகளை எழுப்பும். பிறகு, வயிறு வலிக்கத் துவங்கிவிடும். இதுபோன்ற ஒன்றை உட்கொண்டதற்காக என்னையே நான் கடிந்துகொள்வேன்.

இது ஒருபுறமிருக்க, செராவில் இருந்த என் அக்காளின் சூழலும் நாளுக்கு நாள் கவலையளிக்கும் விதமாக இருந்தது. சூழலை இன்னும் கடினமாக்கும் விதமாக, அந்தக் கிராமத்தில் பள்ளி எதுவும் இல்லாததால், எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் எனது பொழுதுகளை நான் வீணடித்துக்கொண்டிருக்கிறேன் என்றே எல்லாரும் கருதினார்கள். நானும் என்ன செய்வதென்று தெரியாமல்தான் வீட்டிலேயே இருந்தேன். ஒருநாள் ஜகல்பூரில் இருக்கும் எனது மைத்துனர், ‘பார்ல்ஹத், நீ ஏன் எங்களுடன் வந்து வசிக்கக்கூடாது? உனக்காக நாங்கள் ஒரு கடையைத் திறக்கலாம் என்றிருக்கிறோம். ஆனால் பத்து வருடங்களுக்கு நீ அந்தக் கடையைக் கவனித்துக்கொள்ள வேண்டும். இப்போதே முடிவுசெய். சுற்றியிருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால் நீயிங்கு பத்து வருடங்கள் தங்கியிருந்தால் நாங்கள் உனக்குத் திருமணம் முடித்து வைப்போம். உன்னுடைய செலவுகளையும் கவனித்துக்கொள்வோம்’ என்றார்.

திருமணம் குறித்தெல்லாம் எனக்கு அக்கறையில்லை. ஆனால், ஒரு கடையில் வேலை செய்வது என்பது என்னளவில் என்னைப் பிரயோஜனமான ஒருவனாக உணர்வதற்குக் கைக்கொடுக்கலாம். அதனால் எனது மைத்துனரின் வேண்டுகோளை ஏற்று, எழுதுகோலையும் எழுத்துப் பலகையையும் எடுத்துக்கொண்டு ஜகல்பூரை நோக்கிப் புறப்பட்டேன். எனது அக்காளும் அத்தையும் என்னை செரா கிராமத்திலேயே இருக்கும்படி வலியுறுத்தினார்கள். அவர்கள் என்னிடம், ‘அந்தத் திருட்டுப்பயல் கிஷன், காகத்தைப்போல தந்திரசாலி. உனக்காக ஒரு கடை திறப்பதாக அவன் பொய்யுரைக்கவே செய்கிறான்’ என்றார்கள். அவர்களின் பேச்சை நான் பொருட்படுத்தவில்லை. ஒரு கடையைப் பராமரிக்கும் விருப்பத்துடன் ஜகல்பூருக்குச் சென்றேன். மாறாக, எனது மைத்துனர் என்னை, அப்பா ராவ் கைப்பற்றி வைத்திருக்கும் நிலமொன்றில் களை வெட்டும் வேலையில் சேர்த்துவிட்டார். என்னவென்று உறுதியாகச் சொல்ல முடியாது என்றாலும், அந்த நிலம் தொடர்பாக ஏதோவொன்று சட்டத்திற்கு விரோதமானதாக இருந்தது. ஆனால் அது என்னுடைய பிரச்சனை இல்லை. எனக்கான ரொட்டியை ஈட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்திவந்தேன். அந்த நிலம் பயன்தரும் நிலையிலும் இல்லை. பயனற்றக் களைகளும் முறையற்றப் பயிர்களும் மட்டும்தான் அங்கு வளரும்.

தினமும் எனது மண்வெட்டியைச் சுமந்துகொண்டு பண்ணைக்குச் செல்வேன். எல்லா வகையிலான சவால்களையும் கடந்து என்னுடைய வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்வதில் எனது மனதை ஈடுபடுத்தியிருந்தேன். புற்கள் மிகவும் அடர்த்தியாக இருந்ததால், ஆங்காங்கு இருந்த சிறிய இடைவெளிகளில் சிறிதளவு உளுந்து மட்டுமே முளைவிட்டிருந்தது. அந்நிலத்தில் இதுவரை எதுவுமே விதைக்கப்பட்டிருக்கவில்லை என்பதைப்போல இருந்தது. ஏராளமான கால்நடைகள் அவ்விடத்திற்குப் புற்களை மேய்வதற்காக வரும். அவற்றை நிலத்திற்கு விடக்கூடாது என என் மைத்துனர் எனக்குக் கட்டளையிட்டிருந்தார். நான் ஓர் அனாதைச் சிறுவன், அந்நிலத்திற்கு முற்றிலும் அந்நியமானவன். மஹர் சாதியைச் சேர்ந்த சில பெண்கள் தங்களுடைய எருமை மாடுகளை மேய்ச்சலுக்காக அந்நிலத்தை நோக்கி ஓட்டி வருவார்கள். அதன்பிறகு அருகில் இருக்கும் குட்டையில் அவற்றை இறக்கிவிடுவார்கள். அந்தக் குட்டையில் இருந்த நீர் கலங்கியதாக இருந்தது. மீன் போன்ற உயிரினங்களால் நிறைந்திருந்தது. அவற்றை உண்மையான மீன் எனக் கருதிய நான், குட்டையில் இருந்து அவை வெளியே வந்து விழும்போது அள்ளியெடுப்பேன். தங்களுடைய கால்நடைகளைத் தொந்தரவு செய்வதற்காக அந்தப் பெண்கள் என்னைத் திட்டித் தீர்ப்பார்கள். சிலர் நையாண்டியாக என்னைப் பார்த்து, ‘முக்தாவின் தம்பி இங்கு என்ன செய்கிறான்? அவனால் எருமை மாடுகளைத் தொந்தரவு செய்வதை மட்டும்தான் சிறப்பாகச் செய்ய முடியும்’ என்பார்கள். நான் யார் என்பதை அறிந்திருக்காத பிறர், மற்றவர்களிடம் என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிவார்கள். நான் வேலை செய்யும் நிலத்தை எருமை மாடுகள் நெருங்கி வரும்போது, அவற்றை நான் விரட்டினால் அந்தப் பெண்கள் என்னை வசைபாடுவார்கள். அது மட்டுமல்லாமல், சுள்ளிகளையும் மரக்கிளைகளையும் பயன்படுத்தி ஒரு பாடையைத் தயார் செய்து, என்னை உருவகப்படுத்தும் ஒரு களிமண் பொம்மையை அதன் மீது வைத்துத் தூக்கிச் செல்வார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக, அந்தக் கிராமத்தில் இருந்த எல்லோரையும் நான் தெரிந்துகொண்டேன். அங்கிருந்த சில சிறுவர்கள் ஹடோல்டியில் இருந்த பள்ளியில் படித்துவந்தார்கள். அப்பா ராவின் நிலத்தில் அமர்ந்திருக்கும் நான் அவர்களைப் பார்த்து, ‘நண்பர்களே, ஐந்தாம் வகுப்புப் பாடம் கடினமாக இருக்குமா?’ எனக் கேட்பேன். அவர்கள் எனக்குப் பதிலளிக்க மாட்டார்கள். அவர்கள் எல்லோருமே உயர் சாதியினராக இருந்ததோடு, அதுகுறித்துப் பெருமிதம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். என்னுடன் பேசுவதன் மூலம் தங்களைக் கரைப்படுத்திக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. படிப்பு குறித்து எனக்குப் பெரும் ஆர்வம் இருந்தது. அத்தகைய சிறுவர்களில் விதால் எனும் பெயருடைய ‘கோலி’ சாதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனும் இருந்தான். பாராஹலியைச் சேர்ந்த அவன், ஜகல்பூரில் இருந்த தனது உறவினரின் வீட்டில் தங்கியிருந்தபடி ஹடோல்டியில் படித்துவந்தான். வேறொரு கிராமத்தைச் சேர்ந்தவன் என்பதோடு, கிட்டத்தட்ட கீழ்நிலைச் சாதிகளில் ஒன்றைச் சேர்ந்தவனாகவும் அவன் இருந்ததால், ஏனைய சிறுவர்கள் அவனை விலக்கியே வைத்திருந்தார்கள். அதனால் இயல்பாகவே என்னிடம் நட்புணர்வுடன் பழகினான். தினமும் நான் புற்களைப் பிடுங்கிக்கொண்டிருக்கும்போது, பள்ளிக்குச் செல்லும் அவனுடன் சிறிது உரையாடுவது எனது வாடிக்கையாக இருந்தது. நான் அவனிடம் ஆங்கிலம் கடினமான மொழியா எனக் கேட்டேன். அதற்கு அவன், ‘ஆமாம், கொஞ்சம் கடினமானதுதான். ஆனால் நீதான் பள்ளிக்கு வருவதில்லையே, பிறகு ஏன் இதுகுறித்துக் கேட்கிறாய்?’ என்பான். பிறகு, ‘ஆங்கிலமும் கணிதமும் கடினமானவை. அறிவியல் ஆசிரியர் கொஞ்சம் மோசமானவர்’ எனச் சேர்ப்பான். ஹடோல்டி அங்கிருந்து வெகு தொலைவில் இல்லை என்பதாலும், கடையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மைத்துனர் எனை இங்கு அழைத்திருந்ததாலும், அவர் என்னையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதாக எனது விருப்பங்கள் பரிதவிக்கத் துவங்கிவிடும். ஆனால் பணம் ஈட்டுவதில் மட்டும் கருத்தாக இருக்கும் அவர் எப்படி என்னைப் பள்ளியில் சேர்ப்பார்? அவருக்குப் பிறரைப் பற்றிய கவலையே கிடையாது. தன்னிலையில் இருந்து மெலெழுந்துவிட்டதாக உணரும் அவர், தனக்குக் கீழ் இருப்பவர்களை ஏறெடுத்துப் பார்ப்பது கூட இல்லை. செரா கிராமத்தில் இருக்கும் எனது அக்காளும் அவளது கணவரும் ஏழ்மையில் உழல்பவர்களாக இருந்தாலும், இவரைவிட ஆயிரம் மடங்கு உயர்வானர்கள் என உணர்ந்தேன். ஜகல்பூருக்கு வந்ததை நினைத்து எனக்கு வருத்தமேற்பட்டது. இங்கிருந்து தப்பியோட விரும்பினேன். ஆனால் இங்கிருந்து மீண்டும் நான் எங்குச் செல்வது? செராவுக்கு என்னால் போக முடியுமா? பலமுறை என்னிடம் அவர்கள் கேட்டுக்கொண்டபோதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் இவ்வூருக்கு வந்திருக்கிறேன் அல்லவா? மீண்டும் எப்படி அவர்களைச் சந்திப்பது. நான் நன்றாகச் சிக்கியிருக்கிறேன். இங்கிருந்து தப்பி ஓடுவதற்கான தைரியமும் எனக்கில்லை. நான் என்ன செய்தாலும், அது தவறாகவே சென்று முடியும். அது ஒன்று வாணலியில் உணவை வாட்டி உண்பதில் போய் முடியும் அல்லது தீ பரவுவதில் போய் நிலைக்கும். அதனால், என்னையே நான் சமாதானம் செய்துகொண்டு இருப்பதைத் தவிர வேறு வாய்ப்புகள் எதுவும் எனக்கு இல்லை. எனக்குள்ளாகவே நான் சொல்லிக்கொள்வேன்: இதுவும் கடந்து போகும்.

ஆசிரியர் குறிப்பு:

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் உயிர்ப்புடன் இயங்கிய அஸ்மிதாதர்ஷா (Asmitadarsha) எனும் காலாண்டிதழ் தலித் இலக்கியத்திற்கும் இயக்கத்திற்கும் பெரும் பங்களிப்புச் செய்திருக்கிறது. தயா பவார், அர்ஜுன் டாங்ளே போன்ற பல முன்னணி எழுத்தாளர்களும் கவிஞர்களும் இவ்விதழில் எழுதியிருக்கிறார்கள். அத்தகையோரில் ஒருவர் பி.இ.சோன்காம்ப்ளே. இவர் தன்னுடைய தன்னனுபவக் கட்டுரைகளின் தொகுப்பான ‘Birds of Memories’ மூலம் வெகுவாக அறியப்பட்டவர். தன்னுடைய சிறுவயது அனுபவங்களையும் கல்வி பெறுவதற்கான போராட்டங்களையும் மையப்படுத்தி எழுத்தப்பட்டிருக்கும் இப்புத்தகத்தில் மொத்தமாக 28 கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தான் பிறந்து வளந்த மராத்வாடாவின் உட்கிர் பகுதியிலுள்ள வட்டார வழக்கில் இந்தக் கட்டுரைகளை சோன்காம்ப்ளே எழுதியிருக்கிறார். இந்நூல் 11 இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஓர் அனாதைச் சிறுவனாகத் திக்கற்று நிற்கும் நிலையிலும் கல்வி பயில்வதற்கான தீவிர வேட்கையை அவர் இழந்துவிடவில்லை. அதன் விளைவாக, பிற்காலத்தில் டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசியர் எனும் நிலை வரை அவர் உயர்ந்திருக்கிறார். அரசு அவருக்கு ‘முன்னுதாரண ஆசிரியர்’ எனும் பட்டம் வழங்கிக் கௌரவித்திருக்கிறது. மேலும் இரு நூல்களை எழுதியிருந்தாலும் ‘Birds of Memories’ நூல்தான் அவரது ஆகச் சிறந்த ஆக்கமாகக் கருதப்படுகிறது.

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!