தன்மானத்திற்காகத் தலையைக் கொடுத்தவர் – வணங்காமுடி சந்திரன்

பொய்யாமொழி முருகன்

ல்வெட்டுகளையும், செப்பேடுகளையும், ஆட்சியாளர்களின் பரம்பரைப் பட்டியலையும், அரசர்கள் நிகழ்த்தியப் போர் பயணங்களையும், மேட்டுக்குடிகளின் ஆடம்பர வாழ்க்கையையும், அரண்மனைகள், கோயில்கள் குறித்த வர்ணனைகளையும், அந்தப்புர மனைவியரின் எண்ணிக்கையையுமே வரலாறு என்ற பெயரில் படித்துவந்தோம். இவை மட்டுமா இந்திய வரலாறு? நிச்சயமாக இல்லை. அப்படியென்றால் முழுமையான வரலாற்றை எவ்வாறு எழுதுவது? ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த வட்டாரங்களில் நடந்த நிகழ்வுகள், வீரதீரச் செயல்கள், செயல்பட்ட தலைவர்கள், அவர்கள் தலைமை தாங்கிய இயக்கங்கள் உள்ளிட்ட உள்ளூர் வரலாறுகளும் எழுதப்படும்போதுதான் வரலாறு முழுமைப் பெறும். இது ஒருவகை என்றால் மற்றொன்று சுதந்திரப் போராட்டம் தொடர்புடையது. சாதி ஒழிப்புக் களத்தினில் ஆதிக்கச் சாதியினருக்கு எதிராகவும், அடக்குமுறைக்கு எதிராகவும் போராடியவர்களின் வீரமும் தியாகமும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் சற்றும் குறைந்ததல்ல. அந்நியர்களின் கப்பல் வாணிபத்திற்கு எதிராகச் சுதேசிகளும் கப்பல் வாணிபத்தில் ஈடுபடுவோம் என்று களமிறங்கிய வ.உ.சிதம்பரத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல, ஆதிக்கச் சாதியினரின் நிலவுடைமையாதிக்கத்தை எதிர்த்துக் கல்குவாரி ஏலம் எடுத்த வஞ்சிநகரம் கந்தனுடைய செயலும், கோயில் நிலங்களை ஏலத்தில் எடுத்துக் கூட்டாகப் பயிர் செய்த சென்னகரம்பட்டி மக்களுடைய செயலும். அதுபோல ஆங்கிலேயரை எதிர்த்துச் சுதந்திரக் கோஷமிட்ட கொடிகாத்த குமரனுடைய தன்மான உணர்விற்குச் சற்றும் குறைந்ததல்ல உலகுப்பிச்சன்பட்டி வணங்காமுடி சந்திரனின் வீரமும் தியாகமும்.

1990இல் தொடங்கி 2000 வரையிலான பத்தாண்டுக் காலம் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் இந்தப் பத்தாண்டுகளில்தான் பாபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அதனையொட்டித் தமிழக அரசியலில் தலித் இயக்கங்கள் மிகுந்த ஆவேசத்துடன் வெளிப்பட்டன. வெவ்வேறு வகையில் பிரிந்து கிடந்த தமிழக தலித் மக்களை ஒன்றாக்கித் தம்முடைய உரிமைக்குரலை எழுப்பின. குறிப்பாக தொல்.திருமாவளவன், கிருஷ்ணசாமி, தலித் ஞானசேகரன் உள்ளிட்டோரின் எழுச்சிமிகு பேச்சுகள் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தின. இதன் காரணமாக விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சிகளில் ஏராளமான இளைஞர்கள் இணைந்து வீரியமாகச் செயல்படலாயினர். குறிப்பாக மண்ணுரிமைப் போராட்டங்கள் சார்ந்தும், பொதுவுரிமைப் போராட்டங்கள் சார்ந்தும், சமத்துவத்திற்கான போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அதுவரை தங்களுக்கு மறுக்கப்பட்டுவந்த ஊர்ப் பொதுச் சொத்துகளில் உரிமைக் கோருவது, பொது ஏலங்களில் பங்கு பெறுவது, அதாவது ஊர்க் கண்மாயில் மீன்பிடி குத்தகையில், கிராமங்களில் உள்ள தென்னை மரங்கள், புளிய மரங்கள், கருவேல மரங்கள் ஆகியவற்றை ஏலங்களில் எடுப்பது போன்றவற்றில் உரிமைக் கோரவும் செய்தனர். ஏன் இதற்கு முன்பு இத்தகைய செயல்பாட்டில் ஈடுபடவில்லை என்றால், கிராமங்களில் சாதியச் சட்டங்கள் வலுவாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை ஏற்று நடக்க வேண்டியவர்களாகவும், எதிர்த்துக் குரல் எழுப்ப முடியாதவர்களாகவும் தலித் மக்கள் இருந்தனர். காரணம், ஆதிக்க வர்க்கத்தினரிடையே இருந்த நில உரிமை. கிராமங்களில் பெரும்பான்மை விவசாய நிலங்கள் ஆதிக்கச் சாதியினரிடமே இருந்தன. ஊர்ப் பொதுச் சொத்துகளும் இவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. எனவே, ஏழை தலித் மக்கள் தங்களுடைய அன்றாடத் தேவைகளுக்கு ஆதிக்கச் சாதியினரையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது; ஊர்க் கட்டுப்பாடு எனும் சாதியக் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களாகவும் இருந்தனர். இந்தச் சூழலில்தான் தொண்ணூறுகளில் ‘அடங்க மறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பி அடி; வாள் கைமாறும்போதுதான் உன் வாழ்க்கை மாறும்; இருட்டும் திருட்டும் ஒரு முடிவுக்கு வரும்; எதிர்காலமும் அதிகாரமும் நம் கைகளுக்கு வரும்; சேதாரம் இல்லாமல் சிலை செய்ய முடியாது; சிலரேனும் செத்துமடியாமல் விடுதலைக் கிடைக்காது’ என்பன போன்ற எழுச்சிமிக்க வாசகங்களை மக்கள் மத்தியில் பேசினார் தொல்.திருமாவளவன். திருமாவளவன் என்னும் பெயரும் விடுதலைச் சிறுத்தைகள் என்ற இயக்கமும் தலித் மக்களுக்குப் பெரும் உத்வேகத்தைக் கொடுத்தன.  சேரிகள்தோறும் விசிக கொடிகள் ஏற்றப்பட்டன. இயக்கத்தின் பெயர்ப் பலகைகள் திறக்கப்பட்டன. அவ்வாறு கொடிகள் ஏற்றப்பட்ட சேரிகளில் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. குடிசைகள் கொளுத்தப்பட்டன. தலித்துகளிடையே ஏற்படும் விழிப்புணர்வும், உரிமைக்கான குரல்களும் ஆதிக்கச் சாதியினருக்கு எரிச்சலையும் அச்சுறுத்தலையும் தந்தன. இவற்றையெல்லாம்விட தலித்துகள் ஓரணியாகத் திரள்வதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே தலித் மக்கள் மீது கண்மூடித்தனமான வன்முறையை ஏவினர். அன்றைக்கு ஆட்சியில் இருந்த கழக அரசுகளும் தலித் மக்களையும் தலித் செயல்பாட்டாளர்களையும் கடுமையாக ஒடுக்கின. கொடுஞ்சிறையில் அடைத்தனர். எளிதில் வெளிவர முடியாத ‘தேசியப் பாதுகாப்புச் சட்டம்’, ‘குண்டர் தடுப்புச் சட்டம்’ உள்ளிட்டப் பல வழக்குகளில் சிறைப் பிடித்தனர்.

நாடு என்னும் கட்டமைப்பும் சாவடி நீதிமன்றமும்

இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தில்தான் மதுரை மாவட்டம், மேலூர் வட்டாரத்தில் நடந்த ஆதிக்கச் சாதி எதிர்ப்புகளைப் பார்க்க வேண்டியுள்ளது. இப்பகுதியில் நிலவுரிமை மற்றும் பொதுவுரிமைச் சார்ந்த போராட்டங்கள் அதிகமாக முன்னெடுக்கப்பட்டன. ஏனென்றால், இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத ‘நாடு’ என்னும் சாதியக் கட்டமைப்பு இப்பகுதியில் நிலவுகிறது. இந்தியாவில் நிலவிய சாதிய ஆதிக்கங்களையும் கொடூரமான ஒடுக்குமுறைகளையும் ஆராய்ந்து எழுதிய பாபாசாகேப் அம்பேத்கர் தன்னுடைய எழுத்துகளில் நாடு என்ற சாதி அமைப்புப் பற்றியும், இப்பகுதியில் நடைபெறுகின்ற ‘சாவடி நீதிமன்றங்கள்’ பற்றியும் விரிவாக எழுதியிருப்பார். காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் போலீஸ் மற்றும் விவசாயத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்த கக்கனுடைய தந்தை பூசாரிக்கக்கனும் இத்தகைய சாவடி நீதிமன்றத் தண்டனைகளிலிருந்து தப்ப முடியவில்லையென்றால் இதனுடைய இறுக்கமான நடைமுறைகளைப் புரிந்துகொள்ள முடியும். எனவேதான் இதனை அம்பேத்கர் ‘சட்டப்பூர்வமற்றச் சட்டங்கள்’ என்று குறிப்பிட்டார். பிற்காலத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் மேலூர் வட்டாரத்தைச் ‘சாதிய வன்கொடுமை பகுதி’ என்று அறிவிக்க வேண்டும் என்றார். இந்தப் பின்புலத்தில்தான் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட 1½ செண்ட் வீட்டுமனைப் பட்டாக்களை 5 செண்ட் நிலமாக அதிகரித்து மக்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும்; அரசு சொத்துகளில், குத்தகையில் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும்; தலித் மக்களுக்கு ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடமே ஒப்படைக்க வேண்டும்; இவற்றிற்கு ஊறு விளைவிப்பவர்களையும், தடையாக இருப்பவர்களையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்; வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இதற்கு ஆளும் அரசு தடை விதித்தது. ஆனாலும் விடுதலைச் சிறுத்தைகள் போராட்டங்களை முன்னெடுத்தது.

art by Negizhan

 

மண்ணுரிமைக்கான போராட்டங்கள்

மண்ணுரிமைக்கான போராட்டங்களுக்கு அடிப்படையாய் அமைந்தது மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தில் நடந்த இரண்டு படுகொலைகள்தாம். ஒன்று, 1992ஆம் ஆண்டு சென்னகரம்பட்டியில் அதுவரையிலும் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே குத்தகைக்கு எடுத்துவந்த கோயிலுக்குச் சொந்தமான 9லு ஏக்கர் விவசாய நிலத்தினை ‘நாங்களும் குத்தகை எடுப்போம்’ என்று தலித் மக்கள் ஏலம் எடுக்கின்றனர். அவர்கள் ஒன்றுகூடி நிலத்தில் நெல் பயிர் செய்தனர். இவையெல்லாம் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் முன்னிலையிலேயே நடைபெறுகிறது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்கச் சாதியினர் நெல்பயிரை அழித்ததோடு அம்மாசி, வேலு என்னும் இருவரை இரவில் ஓடும் பேருந்தை வழிமறித்துப் படுகொலை செய்தனர். இது விடுதலைச் சிறுத்தைகள் உருவான பின்பு நடந்த முதல் தலித் படுகொலையாகும். இது இப்பகுதி மக்களிடையே சாதி ஆதிக்கத்திற்கு எதிராகத் தீவிரமாகச் செயல்படும் மனநிலையை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து 1995ஆம் ஆண்டு நாடு என்ற கட்டமைப்பையும், சாவடி நீதிமன்றங்கள் எனப்படும் ஊர்ப் பஞ்சாயத்தினையும் மதிக்காத காரணத்தினால் 27 வயதான விடுதலைச் சிறுத்தைகளின் மேலூர் ஒன்றிய பொறுப்பாளர் சந்திரன் படுகொலை செய்யப்படுகிறார்.

மைக்செட் போட்டதற்காகக் கலவரமும் படுகொலையும்

இன்றைக்கு அறிவியல் தொழிற்நுட்பத்தில் இந்தியா வெகுவாக முன்னேறியிருக்கிறது. தகவல் தொழிற்நுட்பத்தில் 4G, 5G என்றெல்லாம் வளர்ந்துவருகிறது. ஆனால், இதே காலத்தில் ஜீன்ஸ், டிசர்ட், கூலிங் கிளாஸ் அணிவது பெண்களை மயக்குவதற்காகத்தான் என்று ஒரு சமூகத்தையே குற்றம் சாட்டிப் பொது வெளியில் அரசியல் செய்ய முடிகிறது. இது ஒருபுறம் என்றால் தலித் மக்கள் தங்கள் கடின உழைப்பால் சிறுகச் சிறுகச் சேர்த்து வாங்கிய பொருட்களான இருசக்கர வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கலவரத்தின்போது கொள்ளையடிப்பது, முடியாத பட்சத்தில் சேதப்படுத்துவது என்பவற்றைத் தொடர்ச்சியாக நடந்துவரும் சாதியக் கலவரங்களில் பார்க்க முடியும். வெளியில்தான் வளர்ச்சி, முன்னேற்றம் என்பதெல்லாம், உள்ளூர் அளவில் பார்க்கும்போது காழ்ப்புணர்வும் வன்மமுமே தலித் மக்கள் மீது வெளிப்படுத்தப்படுகிறது.

பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தில் மைக் செட் போட்டதற்காக 17.01.1994இல் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள எர்ரம்பட்டி கிராமத்தில் சேரிகள் சூரையாடப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 14, அம்பேத்கரின் பிறந்தநாளைக் கொண்டாடியதற்காக ஆதிக்கச் சாதியினர் ஒன்றுதிரண்டு 25 வயதான லாரி ஓட்டுநர் எர்ரம்பட்டி சோலைமலை என்பவரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்கின்றனர். இவர் விடுதலைச் சிறுத்தைகளின் உறுப்பினராவார். இதேபோன்ற சம்பவம் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், திருவாதவூருக்கு அருகிலுள்ள உலகுப்பிச்சம்பட்டியில் நடந்தது. இந்தக் கிராமம் 200, 300 குடும்பங்கள் கொண்ட சிறிய ஊர் ஆகும். இதில் கள்ளர்கள் பெரும் எண்ணிக்கையிலும் பறையர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலும் இருக்கிறார்கள். இவ்வூர் நாடு என்ற கட்டமைப்புக்குள் வருகின்ற ஊராகும். இத்தகைய சாதி ஆதிக்கம் நிறைந்த ஊரில் கருப்பணன் – மீனாட்சி தம்பதியினர் சந்திரன், கேசுமணி, தேவனாண்டி, பாண்டியம்மாள் என நான்கு பிள்ளைகளோடு வாழ்ந்துவந்தனர். இதில் மூத்தவர் சந்திரன். தொடக்கத்தில் இடதுசாரி சித்தாந்தத்தில் பற்றுக்கொண்டிருந்த சந்திரன் மெல்ல தலித்தியச் சிந்தனைக்கு நகர்கிறார். குறிப்பாக விசிகவில் இணைந்து மேலூர் ஒன்றியப் பொறுப்பாளராக இயக்கப் பணியாற்றுகிறார். மக்கள் பிரச்சினைகளுக்காக மனுக்கொடுப்பது, அதிகாரிகளைச் சந்திப்பது என்று கையில் பையுடனும் காகிதங்களுடனும் இருப்பார் என்று ஊர் மக்கள் அவரை நினைவுகூருகின்றனர். இந்நிலையில் மேலே சொன்னதுபோல, அம்பேத்கர் தினத்தில் மைக்செட் வைத்து திருமாவளவன் பேச்சை ஒலிபரப்பியதற்காக மைக்செட்டை அடித்து நொறுக்குகின்றனர்; தலித் பகுதிக்குள் புகுந்து குடிசைகளுக்குத் தீ வைத்தனர். மேலும், சந்திரன் ஊர் மந்தையில் விழுந்து கும்பிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் உயிரோடு இருக்க முடியாது என்று அறைகூவல் விடுக்கின்றனர். சந்திரன் அதற்கு மறுப்புத் தெரிவித்த நிலையில் அசாதாரணமான சூழல் நிலவுவதை உணர்ந்த சந்திரன் கட்சியின் தலைமையிடமான தல்லாகுளத்தில் 20 நாட்கள் தங்கியிருக்கிறார். இந்நிகழ்வு நடந்த சில தினங்களுக்குள் மதுரை கருவனூர் கிராமத்தில் உள்ள தலித் குடியிருப்புகள் முழுவதும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாகக் கட்சித் தலைமை தீவிரமாகக் கவனம் செலுத்திவந்த சூழலில் சந்திரன் கருவனூருக்குச் சென்று பார்த்து வருத்தப்படுகிறார். இந்நிலையில், மே 5ஆம் தேதி சந்திரன் உலகுப்பிச்சன்பட்டிக்கு வந்திருப்பதையறிந்த ஆதிக்கச் சாதி வெறியர்கள் அதிகாலையில் கொலைவெறி தாக்குதல் நடத்துகின்றனர். படுகாயமுற்ற சந்திரன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகிறார். தன்னை யாரெல்லாம் தாக்கினர் என்று மரண வாக்குமூலம் அளித்துவிட்டு அன்று மாலை 5 மணிக்கு மரணமடைகிறார். சந்திரனின் அடக்கத்தின்போது கொட்டும் மழையில் நனைந்துகொண்டே விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தன் தலையே போனாலும் தலைவணங்க மாட்டேன் என்று சொல்லி வீர மரணம் எய்திய சந்திரனின் வீரத்தைப் புகழ்ந்து ‘வணங்காமுடி சந்திரன்’ என்று அடைமொழி கொடுத்து அஞ்சலி செலுத்தினார்.

பலிகளைக் கணக்கெடுத்தலும் விடுதலைப் போரின் கடனடைத்தலும்

படுகொலைக்குப் பின்பு 23.05.1995 அன்று மதுரை இரயில் நிலையம் தொடங்கி அண்ணா பேருந்து நிலையம் வரையில் மாபெரும் கண்டன ஊர்வலத்தை விடுதலைச் சிறுத்தைகள் நடத்தினர். பேரணியைத் தொடர்ந்து அண்ணா பேருந்து நிலையத்தில் விடிய விடியக் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. படுகொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. சந்திரனின் வீரம் சிறுத்தைகளுக்குப் பெரும் உத்வேகம் அளித்தது. ஊர்ச் சேரியை மையமாகக் கொண்டு வணங்காமுடி என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கப்பட்டு நூல்கள் வெளியிட்டு வருவதோடு, கருத்தரங்குகள் போன்றவற்றை தமிழ்க்கனி, தமிழ் முரசு ஒருங்கிணைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொலைக் குற்றவாளிகள் விடுதலையாகினர். தொடர்ந்து கோயிலில் கிடாய் வெட்டி விருந்து வைக்கின்றனர் கொலையாளிகள். இது தலித் மக்களிடையே கொந்தளிப்பையும் கோபத்தையும் உண்டாக்கியது, திருப்பித் தாக்கினர். பொதுவாக இதுபோன்ற சாதிக் கலவரங்களில் தலித்துகள் பாதிக்கப்படுபவர்களாக, இழப்புகளை மட்டும் சந்தித்துவருபவர்களாகவே காட்சிப்படுத்தப்படுகின்றனர். சிறிய உயிரினமான புழுக் கூட தனக்கு ஓர் இன்னல் வரும்போது எதிர்வினை புரியும், அதுவே உயிரின் இயல்பு. ஆனால், தலித்துகள் மட்டும் எப்படிக் காலங்காலமாக வன்முறையை, இழப்புகளை ஏற்றுக்கொண்டவர்களாகவே இருக்க முடியும்? இங்குதான் வரலாற்றின் மீது கேள்வி எழுகிறது. தலித்துகள் எதிர்தாக்குதல் நடத்தினர் என்றால் தங்களுடைய ஆதிக்கம் இல்லாமல் போகிறது. எனவேதான் ஆதிக்கச் சாதியினர் தங்களது இழப்புகளையும் சேதாரங்களையும் வெளியே சொல்வதில்லை.

கீழ்வெண்மணியில் அரைப் படி நெல்லை உயர்த்திக் கேட்டதற்காக இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளைத் திருப்பித் தாக்கி உயிர் சேதத்தை ஏற்படுத்தியது போல உலகுப்பிச்சன்பட்டி சந்திரன் படுகொலைக்கும் தலித்துகள் திருப்பித் தாக்கினர். பலிக்குப் பழி வாங்கினர் என்பது வரலாறு. அதுபோலவே வஞ்சிநகரம் கந்தன் படுகொலைக்கும் திருப்பித் தாக்கி உயிர்ச்சேதம் விளைவித்தனர். இது கந்தன் படுகொலைக்குப் பின் பல ஆண்டுகள் கழித்துக் காத்திருத்து செய்தனர். ஆனால், சந்திரனுக்கு அவ்வாறல்லாமல் உடனடியாகச் செய்தனர். இது குறித்த செய்திகள் அன்றைய நாளிதழ்களில் வெளியானது; அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது; ஆதிக்கச் சாதியினரிடையே அச்சத்தை உண்டாக்கியது. இப்படுகொலைக்குப் பின்னர் மேலூர் வட்டாரத்தில் சாதிய ஆதிக்கம் குறைந்தது என்பது வரலாறு.

 

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger