“சமூகப் பணி என்பது சுயசாதி விமர்சனமே” – மாற்கு

சந்திப்பு : சிவராஜ் பாரதி ; புகைப்படங்கள் : கபிலன் சௌந்தரராஜன்

மிழ் இலக்கியத் தளத்தில் பெரும் அசைவுகளை ஏற்படுத்தியது தலித் இலக்கியங்களே. அதில் எழுத்தாளர் மாற்குவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. நாவல், சிறுகதை, சமூகவியல், மானுடவியல், விழிப்புணர்வு, இறையியல்  எனப் பல்வேறு களங்களில் இயங்கிவரும் மாற்குவின் படைப்புகள் அடித்தட்டு மக்களின் உணர்வுகளை, போராட்டங்களை, அரசியலை, விடுதலையை முன்னிறுத்துபவை. சேசு சபை துறவியாகத் தன் சமூக வாழ்வைத் தொடங்கிய மாற்கு, கிறிஸ்தவத்திற்குள் உண்டாக்கியிருக்கும் மாற்றங்கள் முக்கியமானவை. அவற்றை நாவல்களாகவும் சமூகவியல் ஆவணங்களாகவும் தன்வரலாறாகவும் பதிவு செய்துள்ளார். மண்ணுக்கேற்ற கிறிஸ்தவம் என்ற இவரது அணுகுமுறையும் செயற்பாடுகளும் சுவாரசியமானவை. 50 ஆண்டுகளாக இயங்கிவரும் மாற்குவின் படைப்புகளைப் போலவே இந்நேர்காணலும் இலக்கியம் – சமூகம் – மதம் எனப் பல தளங்களில் விரிந்திருப்பதாக நம்புகிறோம்.

 

தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு விவிலியத்தின் பங்கு பெரியது என்பதால் அதிலிருந்து தொடங்கலாம் என்று நினைக்கிறேன். தமிழ்ச் சூழலில் இலக்கியத்திலும் சமூகத்திலும் விவிலியத்தின் தாக்கம் குறித்துச் சொல்லுங்கள்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகிலுள்ள வ.புதுப்பட்டியில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். ஊரில் கிறிஸ்தவம் குறித்து யாரும் அறிந்திராத காலத்தில் ஜான் பாப்டிஸ்ட் திரிங்கால் என்ற பாதிரியார் இங்கு வந்து பணியாற்றினார். 1844இல் தமிழகம் வந்த அவர் 1875 முதல் எங்கள் ஊரில்தான் பணி செய்தார். தமிழகம் வந்த பிறகே அவர் தமிழ் கற்றுக்கொள்கிறார். பல நூல்களை எழுதியிருக்கிறார்; புதிய ஏற்பாட்டையும் மொழிபெயர்த்திருக்கிறார். 1860களில் தொடங்கிய இப்பணியை 1880இல் முடித்திருக்கிறார். 1890இல் நூலாக வெளியாகிறது. கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் முதன்முதலாகப் புதிய ஏற்பாடு தமிழில் பெயர்க்கப்பட்டது வ.புதுப்பட்டியில்தான். 19ஆம் நூற்றாண்டுகளில் மணிப்பிரவாள நடை பயன்பாட்டில் இருந்ததால் திரிங்காலும் அதையே பின்பற்றுகிறார். இதில் குறிப்பிடத்தக்கச் சிறப்பு என்னவென்றால் பெயர்களையும் தமிழ்ப்படுத்தியிருப்பதுதான். உதாரணத்திற்கு, பேதுரு (பீட்டர்) என்பதை இராயப்பன் என்று பெயர்க்கிறார். பாறை போன்றவர் என்று இயேசு குறிப்பிட்டிருப்பதால் இப்பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். போலவே, பால் என்பவர் உயரம் குறைவானவர் என்பதால் அவரது பெயரைச் சின்னப்பர் என்று மாற்றுகிறார். பிற பிரிவுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்களும் தங்களுக்கான தமிழ் விவிலியத்தை உருவாக்கினர்.

அனைவருக்கும் பொதுவான மொழிபெயர்ப்பின் தேவை கருதி 1972இல் கிறிஸ்தவ அமைப்புகள் குழு ஒன்றை ஏற்படுத்துகிறார்கள். விவிலிய அறிஞர்கள், தமிழறிஞர்கள் ஆகியோர் இணைந்து மிக நேர்த்தியான மொழிபெயர்ப்பைக் கொண்டுவந்தனர். அவன், அவள் என்று வரும் இடங்களில் இரு பாலாரையும் சமமாகவும் மரியாதையாகவும் குறிக்கும் விதத்தில் ‘அவர்’ என்று பெயர்க்கப்பட்டது. பொதுவாக, மொழிபெயர்ப்புகளில் பெயர்களை மாற்றும் வழக்கம் இல்லை என்பதால் திரிங்கால் செய்த பெயர் மாற்றங்களை மட்டும் தவிர்க்கலாம் எனப் பிற பிரிவினர் சொல்ல கத்தோலிக்கர்கள் ஏற்றுக்கொண்டர். அனைவரது ஒத்துழைப்பில் உருவான மொழிபெயர்ப்பு என்றாலும் இன்று கத்தோலிக்கர்கள் மட்டுமே இதைப் பின்பற்றுகின்றனர்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒருமுறை, “தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் புதிய விவிலிய மொழிபெயர்ப்பை வாசியுங்கள்” என்று பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். அதன் பிறகே நானும் அதை வாசிக்கத் தொடங்கினேன். இம்மொழிபெயர்ப்பு வருவதற்கு முன்பு விவிலிய வாசிப்பு என்பது கத்தோலிக்கர்களிடையே பரவலாக இல்லாமல் இருந்தது. தேவலாயத்திற்குச் செல்லும்போது விவிலியத்தை எடுத்துச் செல்வது என்பதும் நடைமுறையில் இல்லை. இன்று கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது பிற மதத்தினரிடையும் விவிலிய வாசிப்பு அதிகரித்திருக்கிறது. காந்தி உள்ளிட்ட பல தலைவர்களைக் கவர்ந்த இயேசுவின் மலைப் பொழிவு, இன்றும் பலராலும் விரும்பிப் படிக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்படுகிறது.

இறை ஊழியரான நீங்கள் எழுத்தாளரானதன் பின்னணி என்ன?

கொஞ்சம் விரிவாகவே பதில் சொல்லலாம் என்று நினைக்கிறேன். புதுப்பட்டியில் என்னுடைய பள்ளி நண்பர்களே அதற்கு முக்கியக் காரணம். ராஜ் கௌதமன் (எழுத்தாளர்), நடராஜன், பழனி, பாலகுரு என நாங்கள் ஐவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். ஒவ்வொருவரும் வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள். நான் கிறிஸ்தவன், ராஜ் கௌதமன் மார்க்சிய சிந்தனையாளர், நடராஜன் தீவிர இடதுசாரி செயற்பாட்டாளர், பாலகுரு பெரியாரியவாதி, பழனியோ காங்கிரஸ் பற்றாளர். ஐவருக்கும் ஓரளவு இலக்கியத்தில் ஆர்வம் இருந்தது. அதனால் எங்களிடையே தீவிர இலக்கிய விவாதம் ஏற்படும். அது விரிவடைந்து பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசுவோம். செக்கடி என்று சொல்லப்படும் கடைவீதியில்தான் நாங்கள் கூடுவோம். எங்கள் நண்பர்களில் ஒருவரது தந்தை காய்கறி கடை வைத்திருந்தார். இரவு எட்டு மணிக்கு மேல் வியாபாரம் இருக்காது என்பதால் தம் மகனிடம் கடைப் பொறுப்பைத் தந்துவிட்டுச் சென்றுவிடுவார். அங்கு கூடி தீவிரமாக விவாதிப்போம். பார்ப்பவர்களுக்கு நாங்கள் சண்டைப் போட்டுக்கொள்வது போல் தோன்றும்.

அக்காலகட்டத்தில் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அதைத் திரைப்படமாக எடுத்ததைப் பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 1969 என்று நினைக்கிறேன். ராஜ் கௌதமன் அதை நாடகமாக எழுதி, இளைஞர்களைக் கொண்டு தெருவிலேயே அரங்கேற்றினார். எங்களது வாசிப்பும் செயற்பாடும் அந்த அளவுக்குத் தீவிரமாக இருந்தது. அப்போது வெளியான எல்லாப் பிரபல நாவல்களையும் நான் வாசித்திருக்கிறேன். வத்திராயிருப்பில் நூலகம் இருந்தது. தினமும் அங்கு சென்று, பெரிதாக இருக்கும் நூல்களையே எடுத்துப் படிப்பேன். நீண்ட நேரம் படிக்கலாம் என்பதே காரணம். இப்படியான தொடர் வாசிப்புதான் என்னை எழுதத் தூண்டியது. 19 வயதிலேயே இரண்டு நாவல்கள் எழுதினேன். நான் படித்த புத்தகங்களைப் போலவே பெரிய நாவல்கள். நண்பர்கள் வாசித்துப் பாராட்டினர். ஆனால், அதை என்ன செய்வதென்று தெரியாததால் வீட்டிலேயே வைத்துவிட்டேன். 1971இல் சேசு சபையில் சேர்ந்தேன். நண்பர்கள் உட்பட யாருக்கும் அதில் உடன்பாடில்லை. ஒருமுறை விடுமுறையில் வீட்டுக்கு வந்தபோது நாவல் பிரதிகளைத் தேடினேன். பழைய பேப்பர் கடையில் தந்துவிட்டதாகச் சொன்னார்கள்.

செண்பகனூரில் உள்ள திருஇருதய கல்லூரியில் தத்துவவியல் படிக்கும்போது எங்கள் பேராசிரியர் மரிய லூயிஸ், ‘தமிழின் முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வாசிப்போம். வாரம் ஒருமுறை அதுகுறித்து விவாதிப்போம்’ என்றார். சில வரையறைகளையும் தந்தார்: எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் தனிமனிதரை எவ்வாறு சித்திரிக்கிறார்கள்; மனிதருக்கும் குடும்பத்திற்குமுள்ள உறவை; சமூகத்தோடு உள்ள உறவை; இறைவனோடு உள்ள உறவை எப்படிச் சித்திரிக்கின்றனர் என்பது குறித்து ஆராய்வோம் என்றார். நான் அகிலனைத் தேர்ந்தெடுத்தேன். மற்றவர்கள் கண்ணதாசன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், மணியன் ஆகியோரைத் தேர்ந்தெடுத்தனர். இது பாடத்திட்டத்தில் இல்லை, எங்கள் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் செய்தது. வாரம் ஒருமுறை கூடி விவாதித்தோம். இரண்டாமாண்டு இறுதியில் விவாதித்ததைத் தொகுத்துக் கட்டுரையாகச் சமர்ப்பித்தோம். அது சிறப்பாக வரவே, அவ்வெழுத்தாளர்களை நேரில் சந்திப்பது என்று திட்டமிட்டோம். சென்னை சென்று அவர்களைச் சந்தித்து, கட்டுரைகளைக் கொடுத்து, உரையாடுவது என்று முடிவானது. அதன்படி அவர்களை இலொயோலா கல்லூரிக்கு வருமாறு கேட்டுக்கொண்டோம். ஜெயகாந்தன், மணியன் தவிர மற்றவர்கள் வந்தனர். மறக்க முடியாத அனுபவம் அது. மீண்டும் எழுதும் ஆர்வம் உண்டானது.

இக்காலத்தில் கத்தோலிக்கத் திருச்சபையிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இரண்டாம் வாத்திகன் பொதுச் சங்கம், பொது நிலையினருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. அதேபோல் நான் சார்ந்திருக்கும் சேசு சபையின் 32ஆவது பொது அமர்வில், சபையினரது விசுவாசமானது நீதியை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. அப்போதுதான் ஊரில் நண்பர்களுடனான உரையாடல்களை நினைத்துப் பார்த்தேன். வெவ்வேறு பின்னணி கொண்டவர்களாக இருந்தபோதிலும் எங்களிடையே இருந்த பொதுவான அம்சம், நீதிக்காக உழைக்க வேண்டும் என்பதே. இதை வெளிப்படுத்தும் வகையிலான நாவலை எழுத வேண்டும் என்று தோன்றியது.

பல்மேரா (கிழக்கு இராமநாதபுர மக்களின் செயல்பாடு, விடுதலைக்கான இயக்கம்) என்ற பெயரில் ஓராண்டு மக்களோடு தங்கிப் பணியாற்றினேன். பின்னர் இறையியல் படித்தேன். முதன்முதலாகத் தமிழில் இறையியல் சொல்லித் தரப்பட்டது. ஆங்கிலத்தில் படிப்பதைத் தமிழில் படிக்கும் மொழிபெயர்ப்பாக இல்லாமல், தமிழ் மக்களின் பண்பாடு, சமூகம், அரசியல், பொருளாதார நிலைக்கேற்ப புதிய இறையியல் சிந்தனையை உருவாக்கும் விதமாக இருந்தது. அதில் முதல் பணியாக, மக்களைச் சந்தித்து அவர்களது சமூக – பொருளாதார – கலாச்சாரக் கூறுகளை ஆராய்ந்து அதைக் கட்டுரையாகச் சமர்ப்பிக்கச் சொன்னார்கள். நான் மானுடவியல் பேராசிரியர் ஜெயபதியிடம், “கட்டுரை நமது வடிவமல்ல, மேற்கத்திய வடிவம். நம்முடைய மரபு கதை சொல்வதுதான். நம் இலக்கியங்கள் அனைத்தும் கதைகளே. கட்டுரையில் என்ன புனிதத்துவம் இருக்கிறது? ஏன் மாற்று வடிவத்தை நோக்கி நகரக் கூடாது?” என்றெல்லாம் கேட்டுவிட்டு என்னுடைய நாவல் அனுபவங்களைச் சொன்னேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். மற்றவர்கள் கட்டுரையாக எழுத, நான் ‘வருவான் ஒருநாள்’ நாவலாகச் சமர்ப்பித்தேன். அது மிகவும் பாராட்டப்பட்டு உடனடியாகப் பதிப்பிக்கப்பட்டது.

இரண்டாமாண்டு இறையியல் படிக்கும்போது, கிறிஸ்தவத்தில் ஜாதிய அடிப்படையில் கல்லறைகள் கட்டப்படுவது குறித்து நாவல் எழுதினேன் (‘சுவர்கள்’). மூன்றாம் ஆண்டில் குறிப்பிட்ட தலைப்பின் கீழ் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும். அதையும் நாவலாக எழுத நினைத்தேன். அப்போது தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம். திருப்பத்தூர் பகுதிகளில் அடித்தட்டு மக்களை ஒருங்கிணைத்துக் கூலி உயர்வு உள்ளிட்டப் போராட்டங்களை முன்னெடுத்த படித்த இளைஞர்களை ‘நக்சல்கள்’ என்று முத்திரையிட்டுச் சுட்டுக் கொன்றார்கள். இச்சம்பவங்களை நாவலாக எழுத முடிவெடுத்தேன். பேராசிரியர்களிடையே விவாதம் உண்டானது. இம்முயற்சிக்கு வழிகாட்டியாக (மேற்பார்வையாளர்) இருக்கத் தயங்கினர். ஒருவர் மட்டும் சம்மதித்தார். பின் கள ஆய்வு செய்து ‘கத்தியின்றி இரத்தமின்றி’ நாவல் எழுதினேன். அது பரவலாகக் கவனம் பெற்றது. இப்படித்தான் எழுத்துலகிற்குள் வந்தேன்.

இங்கு சாதி ஒரே தன்மையில் இயங்குவதில்லை, நிலத்திற்கு நிலம் வேறுபாடுகள் இருக்கும். தமிழகத்திலும் வடக்கு – தெற்கு என்ற ரீதியில் சாதியின் தன்மையில் வேறுபாடுகள் உள்ளனவா?

வேறுபாடு இருக்கிறதென்றே நினைக்கிறேன். தென் தமிழக்தில் தலித்துகளிடையே மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன – தேவேந்திரர், பறையர், அருந்ததியர். வடதமிழகத்தில் தேவேந்திரர் பெருமளவில் இல்லையென்றே சொல்லலாம். ஆகையால் தென் தமிழகத்தில் தலித்துகளுக்குள்ளேயே முரண் நிலவுகிறது. அருந்ததியர்களை மற்ற இரு பிரிவினரும் ஒடுக்கிறார்கள். தேவேந்திரர் – பறையர் இடையேயான மோதல்களும் நடக்கும். வட தமிழகத்தில் தேவேந்திரர்கள் இல்லாததால் பறையர்களுக்குப் போட்டியாக வன்னியர்கள்தான் இருக்கிறார்கள். ஜாதிய அமைப்பில் தங்களுக்கு உடனடியாக மேலே – கீழே யார் இருக்கிறார்களோ அவர்களுடன்தான் போட்டி இருக்கும். தென் தமிழகத்தில் முக்குலத்தோர் இருக்கிறார்கள், அவர்கள் அதிகமாக மோதுவது தேவேந்திரர்களோடுதான். முதுகுளத்தூர் கலவரம், இமானுவேல் சேகரன் படுகொலை, கம்பம் – போடி கலவரம் எல்லாமே இவர்களுக்கிடையிலான மோதல்கள்தாம்.

இங்கே மற்றொரு ஜாதிய மோதல் எதுவென்றால் முக்குலத்தோருக்கும் நாடார்களுக்குமான மோதல்தான். 1900களில் நடந்த சிவகாசி கலவரம் இதற்குச் சான்று. பொருளாதாரத்தில் நாடார்கள் முன்னேறிச் செல்வது கண்டு, “ஊருக்குள் நுழைந்து உங்கள் பொருட்களைச் சூறையாடுவோம்” என்று வெளிப்படையாக அறிவித்தனர் முக்குலத்தோர். முற்காலத்தில் தலித்துகளைப் போல் இருந்தவர்கள்தான், பின்னர் பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேறிச் சமூக அளவிலும் தங்களை முன்னிறுத்திக்கொண்டதால் நாடார்களும் தாக்குதலுக்குத் தயாராக இருந்தனர். தெருக்களில் தடுப்புகளை ஏற்படுத்தி, வீட்டு மாடிகளில் மிளகாய்ப் பொடியோடும் கொதிக்கும் எண்ணெய்யோடும் காத்திருந்தனர். மாட்டு வண்டிகளில் வந்த முக்குலத்தோர் இத்தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. பொருட்களைச் சூறையாடிச் செல்ல நினைத்த வண்டிகளில் சடலங்களைத் தூக்கிச் சென்றனர்.

வட பகுதியில் இப்படியான கலவரங்கள் அதிகம் இல்லையெனலாம். இங்கு முதலியார்கள் ஓரளவு பெரும்பான்மையாக உள்ளனர். ஜாதிய தன்மையில் வடதமிழகத்திற்கும் தென்தமிழகத்திற்கும் அதிக வேறுபாடுகள் இருப்பதை அங்கு பணியாற்றியதன் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால் அந்தந்தப் பகுதிகளுக்கேற்றவாறுதான் பணி செய்ய முடிந்தது. திட்டவட்டமான செயல்முறை என்பதே கிடையாது. சூழ்நிலைக்கேற்ற அணுகுமுறைதான். எங்கு சென்றாலும் அப்பகுதியின் சமூக – பொருளாதார – பண்பாட்டு நிலவரங்களை ஆய்வுசெய்த பிறகே என் பணியைத் தொடங்குவேன்.

இந்தியச் சூழலில் திருச்சபைக்குள் சாதியம் நுழைந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால், சாதி குறித்துத் திருச்சபையின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

கிறிஸ்தவத்தில் ஜாதி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகிவிட்டது. அதற்குக் காரணமாக ராபர்ட் டி நொபிலியைச் சொல்வார்கள். அது வேறு கதை. இப்போது, ‘ஜாதி என்பது யதார்த்தம். அது இருக்கத்தான் செய்யும். நாம் விண்ணகத்தைப் பற்றி யோசிப்போம்’ என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். ஆனால், இயேசு சொன்ன இறையரசின் அடித்தளம் சமத்துவம், நீதி, அன்பு. இவற்றைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது நாங்கள் தலித் கிறிஸ்தவ இயக்கம் மூலமாகத் திருச்சபைக்கு நெருக்கடி கொடுத்தோம். பின்னர் அந்தோணிராஜ் என்ற பாதிரியார் தமிழ்நாடு அளவில் மக்களை ஒருங்கிணைத்து ‘தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்க’த்தைத் தொடங்கி, தொடர்ப் போராட்டங்களை முன்னெடுத்தார். திருச்சபை கொஞ்சம் கொஞ்சமாகத் தலித் தரப்பு நியாயங்களுக்குச் செவி கொடுத்தது. 1990 – 2000 காலகட்டத்திற்குள் திருச்சிபையிலிருக்கும் அனைத்து பாகுபாடுகளையும் தீண்டாமையையும் நீக்க வேண்டுமென்று முடிவெடுத்துப் பத்து அம்சத் திட்டத்தை வெளியிட்டது.

அதேபோல் சேசு சபையினரின் இல்லத் தலைவர்களும் பணிக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்த கூட்டம் 1992இல் திண்டுக்கல்லில் நடைபெற்றது. அதில் தலித் கிறிஸ்தவப் பிரதிநிதிகள், கிறிஸ்தவ மக்கள்தொகைக்கேற்பக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு என்பன உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினர். அவற்றில் ஒன்பது கோரிக்கைகளைச் சபை ஏற்றுக்கொண்டாலும் நிறைவேற்றுவதில் சுணக்கம். அதற்கும் போராட்டம் நடைபெற்றது. விளைவாக, கிறிஸ்தவ நிறுவனங்கள் தலித்துகளுக்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கின. இதைச் சலுகை என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் தங்கள் உரிமையென்றே தலித்துகள் கருதினர். திருச்சபை இதை அங்கீகரித்திருப்பது பெரிய மாற்றம்தான். கிறிஸ்தவர்களில் பெரும்பான்மை தலித்துகள்தாம். சதவீத அளவு வட்டார அளவில் மாறுபடலாம். ஆகையால் 50 சதவீத இடஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கித்தான் தலித்துகளின் பயணம் இருக்கிறது.

 

 

தலித் என்ற சொல் பரவலாக அறியப்படாத காலத்தில் தலித் கிறிஸ்தவ இயக்கம் தொடங்கியிருக்கிறீர்கள். அதன் பின்னணி என்ன?

வாசிப்புப் பழக்கம்தான் காரணம் என்று நினைக்கிறேன். 80களில் தலித் என்ற சொல் இங்கு யாருக்கும் தெரியாது. நொறுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், சிதைக்கப்பட்டவர்கள் என்ற பொருளில் ஜோதிராவ் புலேதான் முதன்முதலில் இச்சொல்லைப் பயன்படுத்தினார். அப்போது உத்திரமேரூர் அருகே ஓங்கூரில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அருகிலுள்ள ஊரில் அமல அன்னை திருநாளுக்குத் திருப்பலி நிறைவேற்ற வருமாறு அவ்வூர் பாதிரியார் கேட்டுக்கொண்டார். அதன்படி 1984ஆம் ஆண்டு டிசம்பர் எட்டாம் நாள் அமல அன்னையின் திருவிழா அன்று சென்றிருந்தேன். அங்கு தெலுங்கு பேசுபவர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். மறையுரை ஆற்றும்போது, “ஜென்ம பாவம் உண்டா என்றால் இருக்கிறது. ஜாதிதான் அது. திருமுழுக்கு மூலமாக அது கழுவப்பட்டுவிடுகிறது. அதன் பிறகும் ஜாதி பார்த்தால் அது சாவான பாவம்” என்றேன். உடனடியாக மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, என்னைக் கெரோ செய்தனர். இச்சம்பவம் பல படிப்பினைகளைத் தந்தது.

இங்கு மட்டுமல்ல, பல ஊர்களிலும் கிறிஸ்தவத்தில் தீண்டாமை இருக்கிறது. இதை ஒழிக்க வேண்டுமானால், ஓர் இயக்கம் மூலமாகத்தான் முடியும் என்ற எண்ணம் எழுந்தது. இதை நண்பர்கள் பாதிரியார் ஜார்ஜ் ஜோசப், பாதிரியார் மார்ட்டின் ஆகியோரிடம் சொன்னேன். இணைந்து பணியாற்றலாம் என்றார்கள். நானும் மார்ட்டினும் பள்ளியகரத்தில் மக்களைக் கூட்டினோம். ‘நாம் பல பிரிவுகளாக இருக்கிறோம். நம்மை ஒன்றிணைக்கக் கூடிய சொல்லைக் கண்டறிய வேண்டும். ஹரிஜனங்கள், பட்டியல் இனத்தவர், அவர்ணர்கள் போன்றவையெல்லாம் பிறர் நமக்குச் சூட்டியவை. நமக்கு நாமே ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றெண்ணி ‘தலித்’ என்ற சொல்லையும் அதன் பொருளையும் விளக்கினேன். மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். இப்படித்தான் தலித் கிறிஸ்தவ இயக்கம் உருவானது. பல போராட்டங்களை நடத்தினோம். முன்பே சொன்னதுபோல் அந்தோணி ராஜ் அதை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றார்.

இதன் தொடர்ச்சியாக நீங்கள் முன்னெடுத்த புதிய ஆன்மிக கருத்தியல் குறித்தும் சொல்லுங்கள்.

பொதுவாகவே தலித்துகளிடம் (மத வேறுபாடு இல்லை) இறை நம்பிக்கை அதிகம். ஜாதிய அமைப்பில் மேல் நோக்கிப் போகப் போக இறை நம்பிக்கை குறைந்துகொண்டே போகும். அவர்களுக்கு அதிகாரம்தான் முக்கியம். அடித்தட்டு மக்களிடம்தான் இறை நம்பிக்கை அதிகம். நம்மை எந்த அளவுக்கு வருத்திக்கொள்கிறோமோ அந்த அளவுக்குக் கடவுள் அருள் நமக்குக் கிட்டும் என்ற எண்ணம் இம்மக்களிடம் உண்டு. எனக்கு இது குழப்பமாக இருக்கும். இதனால் யாருக்கு என்ன இலாபம் என்று தோன்றும். தமிழகப் பண்பாட்டில் அடித்தள மக்களிடம் அம்மன் வழிபாடு இருக்கிறது. இதையொட்டியே கிறிஸ்தவர்களும் அன்னையின் பக்தர்களாக இருக்கின்றனர். எனவே, அன்னையை மையப்படுத்தி தலித் கிறிஸ்தவர்களின் விடுதலைக்கான ஆன்மீகத்தை உருவாக்கத் திட்டமிட்டேன்.

ஓங்கூருக்கு அருகிலுள்ள நல்லூர் கிராமத்தில் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் வசதி, சுகாதார வசதி, சாலை வசதி ஆகியவை இல்லை. இவற்றைச் செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால், செய்ய மறுக்கிறார்கள். இதை எதிர்த்து அரசு அலுவலகங்களுக்கு நாம் செல்லும் ஊர்வலமே அன்னை விரும்பும் பாத யாத்திரை, இதற்காக நாம் மேற்கொள்ளும் உண்ணாவிரதமே அன்னை விரும்பும் நோன்பு, அரசை எதிர்த்து மொட்டை போட்டுக்கொள்வதே அன்னைக்குச் செலுத்தும் முடி காணிக்கை… இப்படி வரிசையாகப் பத்துக் கருத்துகளை முன்வைத்தேன். மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஒவ்வோர் ஆலயத்திற்கும் தல புராணம் உண்டு. நல்லூரில் ஆலயம் இல்லை, அவர்கள் ஓங்கூரிலுள்ள தேவாலயத்திற்கு வர சாலை வசதியும் இல்லை. அதற்காகப் போராடி சாலை வசதிப் பெற்றனர். அதுவே தல புராணம் ஆனது.

அன்னைக்குத் தலித் மாதா என்று பெயர் சூட்டினோம். மேலும் மக்களோடு உரையாடிப் புதிய திருவுருவத்தையும் உருவாக்கினோம். சேலை கட்டி கறுப்பு நிறத்தில் உரிமைக்காகப் போராடும் விதமாகக் கையை உயர்த்திய நிலையில் புதிய உருவத்தை வடிவமைத்தோம். மக்களே இணைந்து கோயிலைக் கட்டினார்கள். இச்சிந்தனை முறையை நியாயப்படுத்தும் வகையில் இறையியல் கல்லூரி பேராசிரியர் ஆரோக்கிய தாஸ் சிறப்பான கட்டுரை ஒன்றை எழுதித் தந்தார். அதை அச்சிட்டுப் பரவலாக்கினோம். ‘தலித் மாதா பாடல்கள்’ என்ற ஒலிப்பேழையையும் வெளியிட்டோம். கோயிலைத் திருநிலைப்படுத்த பேராயரைச் சந்தித்து அழைத்தேன், கட்டுரையையும் தந்தேன். தன்னால் வர இயலாது என்றார். அதேவேளை, மக்கள் விருப்பப்படி தலித் மாதா பெயரில் கோயில் திறக்கப்படுவதையோ, ஆன்மிகத் திருத்தலமாக உருவாவதையோ தான் தடுக்கவில்லை என்றார். மக்களிடம் சொன்னேன். பேராயர்தான் கோயிலைத் திறக்க வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருந்ததால், அவர்களே முடிவெடுக்கட்டுமென்று இருந்தேன். தலித் மாதா என்ற பெயரை விடுதலை மாதா என்று மாற்றினர். பேராயர் வந்து கோயிலைத் திறந்து வைத்துத் திருப்பலி நிறைவேற்றினார். மக்கள் இன்றளவும் தலித் மாதா என்றுதான் அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது பிற பகுதிகளுக்கும் பரவலாகவில்லை என்பதில் வருத்தமுண்டு. பிற்காலத்தில் அதிகம் பரவும் என்று நம்புகிறேன்.

இலக்கியத்திற்கு வருவோம். பெரும்பாலும் பணி அனுபவங்களைக் கொண்டுதான் எழுதுகிறீர்கள். புனைவின் எல்லைகள் விரிந்துகொண்டே இருக்கும் சூழலில் உங்கள் எழுத்தில் இன்றும் பிரச்சாரத் தன்மையே அதிகம் இருக்கிறது. ஆ.சிவசுப்பிரமணியன் ‘விவரணை நாவல்’ என்று உங்கள் எழுத்துகளை வகைமைப்படுத்துகிறார். இருப்பினும் புனைவு குறைவாகவும் ஆவணத்தன்மை அதிகமாகவும் இருக்கிறதே.

இலக்கியத்திற்கு வரையறை இல்லை. இலக்கியம் இலக்கியத்திற்காக, அதன் அழகியலுக்காக என்றெல்லாம் சொல்வார்கள். இந்த விவாதம் நடந்துகொண்டேதான் இருக்கும். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அப்படியே எழுதலாம். ஆனால், அது உண்மையைக் கண்டறியும் குழுவின் அறிக்கையைப் போல் இருக்கும்; மக்களிடம் போய்ச் சேராது. கதை வடிவில் சொன்னால்தான் நிலைத்து நிற்கும். எனக்கொரு கருத்து இருக்கிறது, அதைச் சொல்கிறேன். இது பிரச்சாரம்தான். சமத்துவத்தை, நீதியை, மனிதநேயத்தை மையப்படுத்தி எழுதக் கூடிய பிரச்சாரம். இருந்துவிட்டுப் போகட்டுமே. இப்படி இருக்கக் கூடாது என்று சொல்வது சட்டாம்பிள்ளைத்தனம். பலரிடம் இது குறித்து விவாதித்திருக்கிறேன்.

என் எழுத்தில் பிரச்சார நெடி இருக்கத்தான் செய்யும். இது உண்மைக்கு நெருக்கமானது. பாத்திரங்களும் சம்பவங்களும் உண்மையானவை. சிறிய மாற்றங்கள் செய்திருப்பேன், அவ்வளவுதான். உண்மையை நீங்கள் வேறு விதமாக ஆவணப்படுத்துகிறீர்கள், நான் கதையாக ஆவணப்படுத்துகிறேன். இதைத் தெரிந்தேதான் செய்கிறேன். விமர்சனம் செய்துகொள்ளுங்கள், அது உங்கள் உரிமை. ஆனால், வாசகர்களிடையே, குறிப்பாகத் தலித் கிறிஸ்தவர்களிடையே இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘மீள்வெளி’ நாவல் அனைவரது வீடுகளிலும் இருக்க வேண்டிய பைபிள் என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். தலித் கிறிஸ்தவப் போராட்ட வரலாறுகளையெல்லாம் அதில் பதிவு செய்திருக்கிறேன். விமர்சனம் செய்பவர்கள் செய்யட்டும். என் நிலைப்பாடு இதுதான்.

மொழியிலும் சிக்கல் இருக்கிறது. பெரும்பாலும் சாதாரண தமிழில்தான் உரையாடல்கள் அமைந்துள்ளன. ஆனாலும் அங்கங்கே தென் தமிழக வட்டார மொழி எட்டிப் பார்க்கிறது. கதைக்களம் வேறொரு பகுதியாக இருக்க, உரையாடல்களில் குழப்பம் ஏற்படுகிறது.

அது உண்மைதான். ‘யாத்திரை’ நாவலின் கதைக்களம் வட தமிழகம். ஆனால், அதில் மதுரைத் தமிழைப் பயன்படுத்தியிருப்பேன். அம்மக்களோடு பழகி கள ஆய்வு செய்தாலும், அவர்களின் மொழி அவ்வளவு எளிதில் கைகூடவில்லை. அதையும் மீறி முயன்றால் செயற்கையாக இருக்குமென்று விட்டுவிட்டேன். அந்தந்த வட்டார மொழியில் எழுதினால் கதையின் கனமும் வாசிப்பு அனுபவமும் கூடும்தான். ஆனால், கலாச்சார ரீதியாக நான் பிறந்த ஊரின் மொழி நெருக்கமாக இருப்பதால் அம்மொழியிலேயே எழுதுகிறேன். அது ஒரு குறைதான்.

தலித் இலக்கியத்தைத் தலித்துகள்தான் எழுத வேண்டும் என்றும், ஜாதி எதிர்ப்பு உணர்வுள்ளவர்கள் யாரும் தலித் இலக்கியத்தை எழுதலாம் என்றும் விவாதங்கள் தொடர்ந்து நடக்கின்றன. உங்கள் கருத்து என்ன?

தலித் இலக்கியம் எழுதுகிறேன் என்ற சிந்தனையோடு யாரும் எழுதுவதில்லை என்று நினைக்கிறேன். ‘நாங்கள் எங்கள் வாழ்க்கையை எழுதுகிறோம், விமர்சகர்கள்தாம் இவ்வாறு வகைமைப்படுத்துகிறார்கள்’ என்கின்றனர் தலித் படைப்பாளிகள். தலித் அல்லாதாரும் தலித் இலக்கியம் எழுதலாம். ஆனால், அவர்களின் வாழ்க்கையை உள்வாங்கிக்கொள்வதில் நிச்சயம் சிக்கல்கள் இருக்கும். இந்த வகையில் தலித் எழுதுவதற்கும் பிறர் எழுதுவதற்கும் வேறுபாடுகள் இருக்கும். என்னைப் பொறுத்தவரையில் எழுதக் கூடாது என்று சொல்ல மாட்டேன். எல்லோரும் எழுதலாம், வாசகர்கள் தீர்மானிக்கட்டும். இதில் முத்திரை குத்துவது தேவையற்ற வேலை.

பல அடித்தள சமூகங்களுக்காகப் பணியாற்றியிருக்கிறீர்கள். குறிப்பாக அருந்ததியர் பற்றி ஆய்வு நூல் எழுதுவதற்கு என்ன காரணம்?

சேசு சபையினர் ‘பல்மேரா’ என்ற சமூகச் செயற்பாட்டுக் குழு வழியாகத் தேவகோட்டை பகுதியில் பட்டியலின மக்களை இலக்காகக் கொண்டு பணியாற்றினர். விளைவாக, தேவேந்திரர்களும் குறைந்த எண்ணிக்கையில் பறையர்களும் பயனடைந்தனர். கடைநிலையிலிருந்த அருந்ததியர்கள் கவனிக்கப்படாததை உணர்ந்து, இவர்களுக்காகப் பணியாற்ற முடிவெடுத்தேன். மாநிலத் தலைவரும் அனுமதித்தார். விருதுநகரில் பணியாற்ற முடிவெடுத்து அம்மண்ணோடு தொடர்புடைய ‘கரிசல்’ என்ற பெயரில் ஐவர் ஒருங்கிணைந்தோம்.

மாலை நேர ஆசிரியர் என்ற அடையாளத்தோடு எங்கள் பணியைத் தொடங்கினோம். வளர்ச்சிப் பணி, இயக்கப் பணி என்ற இரு தளத்தில் செயல்பட்டோம். வளர்ச்சிப் பணிக்காக அம்மக்களைக் கொண்டே ‘கரிசல் சங்கம்’ ஆரம்பித்தோம். மாணவர் விடுதிகள், பெண்கள் தொழிற்கல்வி, சுகாதார நிலையம் என சங்கத்தின் விருப்பங்களைச் சங்கத்தின் பெயரிலேயே நிறைவேற்றினோம். நாங்கள் பணியாளர்கள் மட்டுமே, மக்களே சங்கத்தின் நிர்வாகிகள். பெண்கள் சுயஉதவிக் குழுக்களைத் தொடங்கி, சிறு சேமிப்பை ஊக்குவித்தோம். பெண் துறவிகள் மூலமாகப் பெண்களுக்குத் தொழிற்கல்வியையும் நல வாழ்வையும் கற்றுக்கொடுத்தோம்.

இம்மக்களிடையே ஓரளவுக்குப் பரவியிருந்த ‘அருந்ததியர் ஜனநாயக முன்னணி’ இயக்கம் ஆழமாக வேரூன்ற உழைத்தோம். வீதி நாடகங்கள், பொதுக் கூட்டங்கள் என விழிப்புணர்வு அளித்ததன் விளைவாக, வரலாற்றில் முதல்முறையாக ஊராட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஓரிடத்தில் வெற்றிபெற்றனர். இராஜபாளையம் முதல் விருதுநகர் வரை எட்டு நாள்கள் தீண்டாமை ஒழிப்பு நடைபயணத்தை இயக்கம் நடத்த உதவினோம். இம்மக்கள் நடத்தியப் போராட்டங்களை எல்லாம் ஆவணப்படுத்தினோம். இவர்களை வைத்து நாவல் எழுதலாம் என்ற எண்ணம்தான் முதலில் இருந்தது. ஆனால், நான் சேகரித்தத் தகவல்கள் மானுடவியல் ஆய்வுக்கு இட்டுச் சென்றது. அப்படித்தான் ‘அருந்ததியர்: வாழும் வரலாறு’ எழுதினேன்.

அங்கு பணியாளர்கள் இருவருக்கு நடந்த சம்பவம் சுவாரசியமாகவும் பல படிப்பினைகள் தருவதாகவும் அமைந்தது. எங்கள் பணித்திட்டத்தின்படி எளிய வாழ்க்கை வாழ்வதென்ற முடிவில், குறைந்த பொருட்களையே பயன்படுத்தினர். தற்செயலாக அவர்கள் இருந்த குடிசைக்கு வந்த சிறுமி, “நீங்கள் என்ன இவ்வளவு பொருட்கள் வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டாளாம். இவர்களுக்கு அதிர்ச்சி. “ஆமாம். நீங்கள் ஆளுக்கொரு பாய் வைத்திருக்கிறீர்கள், எங்கள் வீட்டில் ஏழு பேருக்கும் ஒரே பாய்தான். நீங்கள் ஆளுக்கொரு சோப் வைத்திருக்கிறீர்கள், எங்கள் ஏழு பேருக்கும் ஒரே சோப்தான். நீங்கள் சமைப்பதற்கு இரண்டு பாத்திரங்கள் வைத்திருக்கிறீர்கள், நாங்கள் ஒரே பாத்திரத்தில்தான் சமைக்கிறோம்” என்று அடுக்கிக்கொண்டே போனாளாம். நாம் எளிமை, எளிமை என்று பேசிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் அது நாம் பேசுவதற்கெல்லாம் அப்பாற்பட்டது. எளிய மக்களுக்காக வாழ்வதும் எளிய மக்களாகவே வாழ்வதும் ஒன்றல்ல. நம்மால் அவர்களைப் போல் வாழவே முடியாது என்ற படிப்பினையைத் தந்தது இச்சம்பவம்.

இப்படியாகப் பல்வேறு அரும்பணிகளைச் செய்திருக்கும் மிஷனரிகள் மீது, ‘இந்திய மரபைச் சிதைத்தவர்கள்’, ‘இந்திய வரலாற்றைத் திரித்துக் கூறியவர்கள்’, ‘மதமாற்ற பித்தர்கள்’ போன்ற குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

(சிரிக்கிறார்…) என்ன சொல்வதென்று தெரியவில்லை. மிஷனரிகள் வருவதற்கு முன்பு இங்கு ஆவணப்படுத்துதல் என்ற வழக்கமே அவ்வளவாக இல்லை. மன்னர்கள் துதிபாடும் கவிதைகளை, புராணங்களை இப்போது நாம் ஆவணங்களாகக் கருதுவதில்லை. ஆக, பல்வேறு ஆய்வுகள் செய்து, பயணம் செய்து ஒவ்வொன்றையும் ஆவணப்படுத்தியது மிஷனரிகளே. திரிங்கால் செய்த பணிகள் எண்ணற்றவை. அனைத்தையும் அவர் ஆவணப்படுத்தியுள்ளார்.

1537இல் தென் தமிழகக் கடற்கரையோரப் பகுதிகளில் பெரிய கலவரம் நடந்தது. பரதவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பணியாரம் விற்றார். அவரிடம் பணியாரம் வாங்கிய இஸ்லாமியர் ஒருவர் பணம் தராமல் செல்லவே, இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்தது. இஸ்லாமியர் பரதவப் பெண்ணின் காதை அறுத்துவிட்டார். காதை அறுப்பதென்பது அச்சமூகத்தை இழிவுப்படுத்தும் செயலாகும். கொந்தளித்த பரதவர்கள் தாக்குதலுக்குச் செல்ல, பெரும்பான்மையாக இருந்த இஸ்லாமியர் பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டனர். இதனால், பரதவர்கள் சாந்தா குரூஸ் என்று போர்த்துகீசிய படைத்தலைவனிடம் முறையிட்டார்கள். நீங்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக மாறினால் உதவி செய்வதாகப் படைத்தலைவன் தெரிவித்தான். பரதவர்களும் ஒத்துழைக்கவே, கொச்சியிலிருந்த உயர் படைத்தளபதியிடம் விஷயத்தைச் சொன்னார் சாந்தா குரூஸ். அவர் படையோடு சென்று இஸ்லாமியர்களை அடக்கினார். பின் கோவாவில் உள்ள பிரான்சிஸ் சபை மூலம் பரதவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்றனர். அதன்பின் பிரான்சிஸ் சேவியர் என்ற இயேசு சபைப் பணியாளர் பரதவர்கள் அனைவரையும் கிறிஸ்தவராக்கினார். இப்படிப் பாதுகாப்புக்காகப் பல சமூகங்கள் கிறிஸ்தவத்தைத் தழுவின. கழுகுமலையில் நடந்த படுகொலைகளுக்குப் பிறகு முக்குலத்தோரிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவே நாடார்கள் கிறிஸ்தவத்திற்கு மாறினர்.

ஆனால், இன்னொரு சம்பவமும் நடந்தது.1600களில் திருச்சியில் பறையர்களில் ஒரு பிரிவான வள்ளுவ குலத்தைச் சேர்ந்த ஆன்மிகக் குரு ஒருவர் இருந்தார். சிறந்த தமிழறிஞர், சிவ பக்தர். இவருக்கு 2000 சீடர்கள் இருந்தனர். குதிரையிலும் பல்லக்கிலும் செல்லும் உரிமையை மதுரை நாயக்க மன்னர் இவருக்கு அளித்திருந்தார். அதோடு நெல் விளையும் நிலங்களையும் தந்திருந்தார். குருவின் ஞானத்திற்கு இவையே சாட்சி. தனது கம்மாளச் சீடர் மூலமாக ராபர்ட் டி நொபிலி எழுதிய ‘உண்மைச் சமயத்தின் அடையாளங்கள்’ புத்தகத்தைப் படித்த அவர், உடனடியாக அவரைச் சந்திக்கச் சென்றார். “உங்கள் கருத்தை ஏற்கிறேன் ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று தன் சைவ அடையாளங்களையெல்லாம் அழித்துக்கொண்டார். அவருக்குக் கிறிஸ்தவத்தைக் கற்றுக்கொடுத்து, பின் ‘முக்தியுடையான்’ என்று பெயரிட்டுத் திருமுழுக்குக் கொடுத்தார் நொபிலி. ஆங்கிலத்தில் இவரை ஹிலரி என்கிறார்கள். இது சரித்திரம் இல்லையா? இன்று அயோத்திதாசரைப் பேசிக்கொண்டிருக்கிறோம். அவருக்கு முன்பே ஞானகுருவாக இருந்த இவரைப் பற்றியும் பேச வேண்டும். பாதுகாப்புக்காகக் கிறிஸ்தவத்தைத் தழுவிக்கொண்ட சமூகங்களுக்கு மத்தியில், அதன் கொள்கைகளைப் படித்துணர்ந்து ஏற்றுக்கொண்ட வள்ளுவச் சமூகத்து ஞானியைப் பற்றி இவர்களுக்குத் தெரியுமா?

இப்படிச் சொல்பவர்கள் யார், சமூக அமைப்பில் மேலே இருப்பவர்கள்தான். அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சொகுசான இடத்தில் இருந்துகொண்டு இப்படியான கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் படைப்புகளில் பாதிக்கப்பட்டோர் குரல் மட்டுமல்லாது பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் குரலையும் பதிவுசெய்கிறீர்கள். இது முக்கியமான சிந்தனைப் போக்கு. இருதரப்பு நியாயங்களையும் சொல்லும்போது உரையாடல் விரிவடையும் சாத்தியம் உண்டு. இதை எப்படிக் கைக்கொண்டீர்கள்?

யதார்த்த வாழ்க்கையில் கதாநாயகன், வில்லன் என்று யாரும் இல்லை. பாதிப்பை ஏற்படுத்துபவன், தான் எதை நம்புகிறானோ அதன்படி வாழ்கிறான். ஜாதியை அவன் சமூக இயல்பாகக் கருதுகிறான். பாதிக்கப்பட்டவன் இதைச் சமூக அநீதியாகப் பார்க்கிறான். ‘யாத்திரை’ நாவலில் தலித் கிறிஸ்தவர்களின் பிரச்சினைகளைச் சொல்லியிருக்கும் அதேவேளையில் கிறிஸ்தவ ரெட்டியார்களின், நாயுடுகளின் மனநிலையையும் சொல்லியிருப்பேன். ‘எல்லா இடத்துலயும்தான் சாதிப் பாகுபாடு இருக்கு. ஏன் தாழ்த்தப்பட்டவுககூட பள்ளன், பறையன், சக்கிலியன்னு பிரிஞ்சு கிடக்காங்களே! அப்பிடியிருக்க ஏன் எங்கள மட்டும் சாதி வெறியங்க மாதிரி காட்டணும். இங்ககூட பிள்ளை, உடையார், வன்னியர், நாடார்னு எம்புட்டுச் சாதிக் கிறிஸ்தவங்க இருக்குறாங்க…’ என்று போகும் அது. யாரையும் வில்லனாகக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. நாவலில் மொத்தம் முப்பது அத்தியாயங்கள். மூன்று அத்தியாயங்கள் முன்னதாகவே நாவல் முடிந்துவிட்டதென்றாலும் என் நிலைப்பாட்டை விளக்கி வாசகர்கள் முடிவெடுக்கட்டும் என்றுதான் இறுதி அத்தியாயங்களை எழுதினேன். தலித்துகளின் நியாயம் மனிதநேயத்தோடும் ஆதிக்க ஜாதியினரின் நியாயம் மனிதநேயமற்றதாகவும் இருக்கும். என் எல்லாப் படைப்புகளையும் இந்த அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். தான் யார் பக்கம் என்று வாசிப்பவரையே முடிவு செய்யத் தூண்டுபவை என் படைப்புகள்.

 

 

பெரியாருக்குப் பின் சாதி மறுப்புக் குறித்த உரையாடல்கள் ஏன் சாதி இந்துக்கள் தரப்பிடம் மேற்கொள்ளப்படுவதில்லை? அவர்களின் மனமாற்றமே ஒருங்கிணைந்த சமூக வளர்ச்சிக்கு வித்திடும் என்பதை உணர்ந்த நீங்கள், இந்தத் தேக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

உண்மைதான். நானும் கள ஆய்வுகளுக்குச் சென்றிருக்கிறேன். குருஞ்சாகுளம் கலவரம் நடந்தபோது பாதிக்கப்பட்டவர்களுடன் தங்கி தகவல்கள் சேகரித்து ‘குருதி குடிக்கும் குருஞ்சாகுளம்’ நூலைக் கொண்டுவந்தேன். அதுபோல் சிறுவாச்சி கலவரம் குறித்தும், பஞ்சமி நிலப் போராட்டங்கள் குறித்தும் கள ஆய்வுசெய்திருக்கிறேன். பாதிக்கப்பட்டோர் குரலைப் பதிவுசெய்தால் போதுமென்று இருந்துவிட்டேன். அச்சமயத்தில் அதுதான் சரியென்றும் தோன்றியது. பாதிப்பை ஏற்படுத்துவோரைச் சந்தித்து, நீங்கள் செய்தது தவறு என்று பேசும் சூழல் இன்னும் உருவாகவில்லை. தாங்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்துகிறார்களேயொழிய, சுயவிமர்சனக் குரல் அவர்களிடமிருந்தும் வரவில்லை. இனிவரும் காலங்களில் அவர்களில் மனிதநேயமுள்ள சிலர் அப்படிச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இயேசு ஒரு யூதர். தன் வாழ்நாளெல்லாம் அவர் யூதர்களைத்தான் எதிர்த்தார்; அவர்களாலேயே கொல்லப்பட்டார். அதுபோல் சுயசாதி விமர்சனம் செய்யக் கூடிய ஆட்கள் வர வேண்டும். நான் அப்படித்தான் செயற்படுகிறேன் என்று நினைக்கிறேன்.

பொருளாதார முன்னேற்றம் சாதிய ஆதிக்கத்தைப் போக்கிவிடும் என்ற குரல் உங்கள் படைப்புகளில் தொடர்ந்து இடம்பெறுகிறது. இன்றும் இதில் உறுதியாக இருக்கிறீர்களா?

அது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஜாதியக் கட்டுமானத்தின் அடித்தளமாக இருப்பது பொருளாதாரம்.   இந்திந்த ஜாதியினர் இந்திந்த வேலைகளைத்தான் செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கிறது. அதனால்தான் அம்பேத்கர் ‘கற்பி’ என்று கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். நானும் என் பணியை அவ்வாறே வடிவமைத்துக்கொண்டேன். இந்தக் கல்வியின் மூலமாகத் தன்னுடைய அந்தஸ்த்தை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கிறது. யாரையும் சார்ந்து வாழாத பொருளாதார முன்னேற்றத்தைக் கல்வியே கொடுக்கிறது. அதன்மூலம் அரசியல் ரீதியான அதிகாரத்தையும் பெற முடிகிறது. எங்கள் ஊரில் உள்ள தலித்துகளில் படிக்காதவர்கள் என்று யாருமே இல்லை. வீட்டிற்கு ஒன்றிரண்டு பட்டதாரிகள் இருப்பர். இதனால் அவர்களுக்குச் சுயமரியாதை கிடைக்கிறது. விவசாயக் கூலியாக இருந்தவர்கள், கல்வி மூலம் கிராமங்களை விட்டு வெளியேறி வேலைவாய்ப்பைத் தேடிக்கொள்ளும் நிலை இருக்கிறது, ஜாதிய இறுக்கமும் குறைகிறது. முற்றிலுமாக மாறிவிட்டதென்று கூற மாட்டேன். அதேவேளை எதிர்த்துக் கேள்வி கேட்கக் கூடிய நிலை கல்வியாலும் பொருளாதார வளர்ச்சியாலும் சாத்தியமாகியிருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தை எடுத்துக்கொண்டீர்களானால் 90 சதவீத அருந்ததியர்கள் ஆதிக்க ஜாதியினரைச் சார்ந்து இருந்தனர். தற்போது பட்டாசுத் தொழிற்சாலை, தீப்பெட்டி தொழிற்சாலை, அச்சகம் போன்றவற்றில் பணிசெய்வதால் பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்து வாழாத நிலை உருவாகியிருக்கிறது. தொழிலாளர் சங்கங்கள் இருப்பதால் இவர்களது பணிப் பாதுகாப்பும் உரிமைகளும் உறுதிசெய்யப்படும் சூழல் இருக்கிறது. இது ஜாதியக் கட்டுமானத்தை மொத்தமாக மாற்றிவிட்டதென்று சொல்ல மாட்டேன். அதை நோக்கிய முதல்படி என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. 90களில் புதிய பொருளாதாரக் கொள்கையினால் வடதமிழகத்தில் நிறையத் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. அதுவரை விவசாயத் தொழிலாளர்களாக இருந்த தலித் மக்கள், ஆலைத் தொழிலாளர்களாகச் சீருடை, காலணிகள் அணிந்து ஆலை பேருந்துகளில் சென்றார்கள். சீருடையோடு அவர்கள் தெருவில் நடக்கும்போது மிடுக்காக இருக்கும். புதிய பொருளாதாரக் கொள்கை மீது நமக்குப் பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், தலித்துகளுக்கு அதுதான் சுய கௌரவத்தைக் கொடுத்தது.

தலித் மக்கள் மீது தீண்டாமை திணிக்கப்பட்டதற்கு அவர்களிடமிருந்து நிலம் அபகரிக்கப்பட்டதுதான் காரணம் என்ற கருத்து இருக்கிறது. அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியதற்கும் நிலம் முக்கியக் காரணமாக இருக்கிறது. இந்நிலையில் உங்களது ‘பஞ்சமி நிலப் போர்’ வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணம். அதுகுறித்துச் சொல்லுங்கள்.

ஓங்கூரில் நான் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது பக்கத்து ஊரில் மார்ட்டின் இருந்தார். செங்கல்பட்டு பகுதிகளில் நிறையப் புறம்போக்கு நிலங்கள் இருந்தன. அவற்றை நிலமற்ற ஏழை தலித் மக்களுக்காக ஆக்கிரமித்தார். இதற்காகவே SAM (Social Action Movement) என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்மூலம் புறம்போக்கு நிலங்களைத் தலித்துகள் ஆக்கிரமிக்க உதவினார். இவரைப் போலவே இயேசு மரியான் என்ற பாதிரியாரும் செயற்பட்டார். இதுகுறித்தெல்லாம் ‘பஞ்சமி நிலப் போர்’ நூலில் பதிவுசெய்திருக்கிறேன். இயேசு மரியான் வழக்கறிஞரும் கூட. அதனால் தலித் மக்களுக்குச் சட்ட ரீதியான பாதுகாப்பைத் தந்தார். இந்நிலையில் தீபன் சக்கரவர்த்தி என்பவர், வறுமை காரணமாகத் தன் தந்தை தனக்குக் கொடுத்த நிலத்தை ஐம்பதாயிரத்திற்கு விற்றிருக்கிறார். அவர்கள் முன்பணமாக இருபத்தைந்தாயிரம் தந்துவிட்டு மீதிப் பணத்தைப் பத்திரம் பதியும்போது தருவதாகச் சொல்லியிருக்கின்றனர். ஆனால், மீதிப் பணமும் வரவில்லை, பத்திரம் பதிவதற்கும் அவர் அழைக்கப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் சில வருவாய்த்துறை அதிகாரிகளைக் கேட்டபோது தான் விற்றது பஞ்சமி நிலம் என்பதும்; சட்டப்படி அந்நிலத்தைப் பிற சாதியினருக்கு விற்க முடியாது என்பதும்; தான் கையெழுத்திட்டது பவர் பத்திரம் என்பதும்‘ அவருக்குத் தெரியவருகிறது. மேலும் தன் கிராமத்தில் பலரும் இவ்வாறு ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. SAM அமைப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு மார்ட்டினை அணுகினார். பிறகுதான் பஞ்சமி நிலம் குறித்த ஆவணங்களைத் தேடத் தொடங்கினோம்.

1892இல் திரமென்ஹீர் என்ற பிரிட்டிஷ் ஆட்சியாளர் செங்கல்பட்டு மாவட்ட பறையர்கள் குறித்துப் பிரிட்டிஷ் அரசுக்கு நீண்ட அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருக்கிறார். அதன் விவரங்களைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், எல்லா நிலங்களும் அரசுக்குத்தான் சொந்தம். ஏற்கெனவே இங்கு நடைமுறையிலிருந்த அமைப்பை மாற்ற விரும்பாத அரசு, ஜமீன்தார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரயத்துவாரி முறையைக் கொண்டுவந்தனர். அதன்படி ஜமீன்தார்கள் எவ்வளவு நிலங்களை வேண்டுமானாலும் அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். அதில் விவசாயம் செய்யும் நிலங்களுக்கு மட்டும் வரி செலுத்தினால் போதும். இதில் திரமென்ஹீர் என்ன மாற்றங்களை முன்வைத்தாரென்றால், ஒரே ஒருமுறை மட்டும் இந்த உரிமையை ஜமீன்தார்கள் பயன்படுத்திக்கொள்ளட்டும். ஆனால், பெற்றுக்கொள்ளும் எல்லா நிலங்களுக்கும் வரி செலுத்த வேண்டும். அவ்வாறு முடியாத பட்சத்தில் அந்நிலங்களை அரசு எடுத்துக்கொள்ளும். விவசாயம் செய்யாத தரிசு நிலங்களைக் கூலிகளாக உள்ள பறையர்களுக்கு வழங்கும். விவசாயம் செய்யத் தேவையான கடனுதவிகளையும் வழங்கலாம். இதன் மூலம் அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும், விவசாயமும் செழிக்கும்.

சில நிபந்தனைகளோடு இந்நிலங்களைப் பறையர்களுக்கு வழங்கலாம். அரசு கொடுக்கும் நிலங்களை அடுத்த பத்தாண்டுகளுக்கு விற்கவோ அடமானம் வைக்கவோ கூடாது. பத்தாண்டுகளுக்குப் பிறகு விற்பதென்றாலோ அடமானம் வைப்பதென்றாலோ தலித் சமூகத்திற்குள்ளேயேதான் செய்துகொள்ள வேண்டும். பிற சமூகத்தினருக்குக் கொடுத்தாலும் அது சட்டப்படி செல்லாது. இவற்றை பிரிட்டிஷ் அரசு ஏற்றுக்கொண்டு பறையர்களுக்கு வழங்கிய நிலம்தான் பஞ்சமி நிலம். இதுகுறித்து அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததால் காலப்போக்கில் ஆதிக்க ஜாதியினர் இந்நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டனர். இதுதான் தீபன் சக்கரவர்த்திக்கும் நடந்தது. இப்படி பிரிட்டிஷ் அரசு கொடுத்த நிலங்கள் தற்போது அரசியல்வாதிகளாலும், அரசு அதிகாரிகளாலும், பணக்காரர்களாலும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

இந்நிலங்களை மீட்கத்தான் மார்ட்டின் சட்டப் போராட்டங்களைத் தொடங்கினார். அது எதிர்பார்த்த பலனைத் தராததால், அரசியல் ரீதியான போராட்டத்தை முன்னெடுத்தார். மக்களோடு கலந்துரையாடி தீபன் சக்கரவர்த்தி நிலத்தில் அம்பேத்கர் சிலை வைக்க முடிவுசெய்யப்பட்டு, சிலையும் நிறுவப்பட்டது. ஆனால், ஆதிக்க ஜாதியினர் அரசு அதிகாரிகளோடு இணைந்து அதை அப்புறப்படுத்தினர். இதை எதிர்த்து ஆட்சியரிடம் மனு கொடுக்க 5000 தலித் மக்கள் செங்கல்பட்டில் ஊர்வலமாகச் சென்றனர். ஆட்சியாளர் இவர்களைச் சந்திக்க மறுக்கவே சாலை மறியலில் ஈடுபட்டனர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் ஜான் தாமஸ், ஏழுமலை இருவரும் கொல்லப்பட்டனர். மார்ட்டின், யேசு மரியான் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகத் தலித் மக்களுக்குப் பஞ்சமி நிலம் பற்றிய விழிப்புணர்வும் அதை மீட்க வேண்டும் என்ற உறுதியும் ஏற்பட்டது. ‘பஞ்சமி நிலப் போர்’ நூலில் திரமென்ஹீர் அறிக்கையின் சுருக்கத்தை மட்டுமே தந்திருப்பேன். முழு அறிக்கையை மதுரையில் உள்ள நண்பர் வே.அலெக்ஸிடம் கொடுத்தேன். அதைத் தன் எழுத்து பதிப்பகம் மூலம் மொழிபெயர்த்து வெளியிட்டார். மிகச் சிறந்த ஆவணம் அது. ஏதோ கிறிஸ்தவர்கள் சரித்திரத்தைத் திரித்துவிட்டதாகச் சொல்கிறார்களே, இதுதான் உண்மையான சரித்திரம். நாம் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் அது.

SAM அமைப்புப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர்களின் செயற்பாடுகளை இன்னும் விரிவாகச் சொல்ல முடியுமா?

SAM அமைப்பில் நான் எந்தப் பொறுப்பையும் வகிக்கவில்லை. மார்ட்டின்தான் அதை முழுமையாகக் கவனித்துக்கொண்டார். கரும்பை உற்பத்திச் செய்யும் விவசாயி ஆலைகளுக்குக் கொடுக்கும்போது அதை வெட்டிக் கொடுப்பதற்காகச் சில தொழிலாளர்கள் இருந்தனர். அதில் அவர்களுக்கு நிறையச் சிரமங்கள் உண்டு. போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இருக்காது, வயலில் பாம்பு கடித்து உயிரிழப்பு ஏற்படும், வெட்டும்போது கை, கால்கள் பாதிக்கப்படும். போதுமான கூலி கிடைக்காது. இதைக் கவனித்த மார்ட்டின், கரும்பு வெட்டும் இவர்களையும் ஆலைத் தொழிலாளர்களாக அங்கீகரிக்க வேண்டுமென்று போராட்டம் நடத்தினார்.

தலித் கிறிஸ்தவ இயக்கம் தொடங்கும்போது அதில் பறையர்களோடு புதிரை வண்ணார்களும் பணியாற்றினர். முன்பே குறிப்பிட்டதுபோல் நான் ஓங்கூரிலும் மார்ட்டின் பள்ளியகரத்திலும் பணியாற்றிக்கொண்டிருந்தோம். அருகே மூசிவாக்கம் என்ற ஊரில் புதிரை வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குருப்பட்டம் பெற்றிருந்தார். அவரது முதல் திருப்பலி பூசைக்குத் தலித் கிறிஸ்தவ இயக்கத்தினர் அனைவரும் சென்றிருந்தோம். அங்கு அவரது குடும்பத்தினர் விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அதில் இயக்கத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை. “எங்க வீட்டுல வந்து சோறு வாங்குறவங்க வீட்டுல நாங்க எப்படி சாப்பிடறது?” என்று எல்லாருமே சென்றுவிட்டார்கள். எங்களுக்கு அதிர்ச்சி. “நாம் என்னென்னவோ கனவு காண்கிறோம், இங்கு இப்படி நடக்கிறதே” என்று மார்ட்டின் வருத்தப்பட்டார். சரி, இவர்களுக்கென்று அமைப்பை உருவாக்குவோம் என்று முடிவெடுத்துச் செயற்பட்டார். நடை இஸ்திரி வண்டிகளை வாங்கிக் கொடுத்து மாற்றுத் தொழிலையும் ஏற்படுத்தித் தந்தார். வீடுகளும் கட்டிக் கொடுத்தார்.

இப்பகுதிகளில் நிறைய இருளர் மக்கள் இருந்தனர். 90களில் அவர்களுக்கும் அமைப்பை உருவாக்கி, அம்மக்களுக்குச் சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான போராட்டங்களை முன்னெடுத்தார் மார்ட்டின். “நீங்கள் இருளர்கள் என்று எப்படி நம்புவது என்றுதானே அதிகாரிகள் கேட்கிறார்கள். எல்லோரும் ஆளுக்கொரு பாம்பு பிடியுங்கள். பிடித்த கையோடு ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்வோம்” என்று மக்களை ஒருங்கிணைத்துப் போராடினார். அவர்களின் பாரம்பரியம் மருந்து கொடுப்பது. அதற்காக, பாலாறுக்கும் மாமண்டூருக்கும் இடையில் நிலம் வாங்கி, மூலிகைத் தோட்டம் அமைத்துக் கொடுத்தார். அங்கேயே மருந்தகமும் இருக்கிறது.

செங்கல்பட்டு, மதுராந்தகம் பகுதிகளில் உள்ள அரிசி ஆலை ஊழியர்களை இணைத்து அமைப்பாக்கி, தொழிற் பாதுகாப்பை உருவாக்கினார். காஞ்சிபுரத்தில் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வை உறுதிப்படுத்தினார். மூலிகை தோட்டத்திற்குப் பின்புறம் தொழிற்கல்விக்கான சமூகக் கல்லூரியைத் (Community College) தொடங்கினார். தலித் பெண்களை ஒருங்கிணைத்து சுயஉதவிக் குழுக்களை ஏற்படுத்தி, சிறு சேமிப்பை உறுதிப்படுத்தினார். சிறுசேமிப்பாக ஐந்து கோடி இருப்பில் இருந்தது. பத்திரிகை வழியாக மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க விரும்பிய மார்ட்டின், ‘தலித் முரசு’ இதழ் தொடர்ந்து 15 ஆண்டுகள் வெளிவர நிதியுதவி செய்தார். ஒருகட்டத்திற்கு மேல் அவரால் அமைப்பைத் தொடர முடியவில்லை. தான் SAM அமைப்பைத் தொடங்கியதன் நோக்கம் நிறைவேறிவிட்டது, அது போதும் என்றெண்ணிய மார்ட்டின் அமைப்பின் அலுவலகக் கட்டடத்தை விற்றுப் பணியாளர்களுக்குப் பகிர்ந்தளித்தார். 2021இல் மாரடைப்பால் காலமானார்.

தலித் இலக்கியத்தின் பிறப்பையும் வளர்ச்சியையும் பார்த்தவர் நீங்கள். எண்பதுகளில் நீங்கள் எழுத வந்தபோது என்ன மாதிரியான சூழல் இருந்தது, தற்போது தலித் இலக்கியம் சந்தைப் பொருளாகிவிட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தக் கேள்வி கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. சந்தை என்பது கனமான சொல், அதை எந்தப் பொருளில் கூறுகிறீர்களென்று தெரியவில்லை.

அடித்தட்டு மக்களோடு பணிபுரிந்த அனுபவங்களை நான் இலக்கியங்களாக்கினேன். அதைப் பதிப்பிப்பதில் பிரச்சினைகள் எழுந்தன. எனக்கே இந்நிலை என்றால், புதிதாக எழுதவரும் தலித்துகளின் படைப்புகளை யார் வெளியிடுவார்? பதிப்புத்துறையை ஆராய்ந்ததில் கிறிஸ்தவம் உட்பட பெரும்பான்மை பதிப்பகங்கள் ஆதிக்க வர்க்கத்தினரிடம் இருந்தன. பொதுவுடைமை பதிப்பகங்கள் வர்க்கப் பிரச்சினைகளுக்கே முக்கியத்துவம் தந்தன. தலித் படைப்புகளும் அவர்களின் சிந்தனைகளும் புறக்கணிக்கப்பட்டன. பூமணி, சிவகாமி போன்றோர் ஏற்கெனவே எழுதினாலும் தலித் படைப்பு என்று அவை அங்கீகரிக்கப்படவில்லை.

இச்சூழலில் சேசு சபையின் சமூகப் பணிகள் ஒருங்கிணைப்பாளராக 1991இல் நியமிக்கப்பட்டேன். மதுரை ஐடியாஸ் (Institute of Development Education, Action and Studies) மையத்தில் தங்கினேன். அது அம்பேத்கர் நூற்றாண்டு, தலித் மக்களிடையே பெரும் விழிப்புணர்வு ஏற்பட்ட காலம். தலித் கிறிஸ்தவர்களின் பிரச்சினைகளை அவர்களே எழுதவும், அவற்றைப் பதிப்பிக்கவும் திட்டமிட்டேன். எழுத ஆர்வமுள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்தேன். எழுத்துப் பயிற்சிக்காக ராஜ் கௌதமனை அணுகினேன். அவர் ‘தலித் இலக்கியம்’ என்ற தலைப்பில் கட்டுரை தந்தார். அதை நாற்பது பக்க நூலாக வெளியிட்டோம். ரவிக்குமார், பிரபஞ்சன் மூலம் எழுத்துப் பயிற்சி அளித்தோம். தலித் இலக்கியத்தின் பிறப்பு இங்குதான் உருவானது எனலாம். அதில் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி பால், ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர், எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தினார். பின்னர் அவர் பறையர்கள் குறித்தும், புதிரை வண்ணார்கள் குறித்தும், நரிக்குறவர்கள் குறித்தும் இனவரைவியல் நூல்களை எழுதினார்.

துறவு சபையிலிருந்து வெளியேறிய தலித் கிறிஸ்தவப் பெண் பாஸ்டினாவை எழுதத் தூண்டினேன். ‘கருக்கு’ என்ற தன்வரலாற்று நாவலை எழுத, ‘பாமா’ என்ற புனைபெயரில் ஐடியாஸ் அமைப்பு மூலமாக வெளியிட்டேன். கோமல் சுவாமிநாதன் தனது ‘சுபமங்களா’ இதழில் நீண்ட கட்டுரை எழுதினார். எழுத்தாளர் சுஜாதாவும் பிரபஞ்சனும் பாராட்டியிருந்தனர். தலித் இலக்கியம், தலித் மொழி, தலித் அறநெறி பிறந்துள்ளதாக விமர்சகர்கள் பாராட்டினர். அந்த உற்சாகத்தில் அடுத்து ‘சங்கதி’ எழுதினார். அவரது ‘கிசும்புக்காரன்’ சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டோம். ஸ்டெல்லா என்பவர் (விடிவெள்ளி) எழுதிய ‘கலக்கல்’ நாவலை வெளியிட்டோம். தலித் இலக்கியம் என்றாலே ஐடியாஸ் அமைப்புதான் என்று சொல்லுமளவுக்குக் கவனம் பெற்றது. இவை அதிகமாகப் பேசப்பட்டதேயொழிய, போதுமான அங்கீகாரம் கிடைத்தா என்றால், இல்லை.

‘கருக்கு’ நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்கள். அது Crossword விருது பெற்றது, உலக அளவிலான அங்கீகாரம் பெற்றது. பின்னர் ‘சங்கதி’, ‘கிசும்புக்காரன்’ நூல்கள் ஆங்கிலம், பிரெஞ்ச் மட்டுமல்லாது பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. தமிழில் வெளியானபோது குறுகிய வட்டத்தில் மட்டுமே பேசப்பட்டவை, ஆங்கிலத்தில் வெளியான பின் பன்னாட்டு அங்கீகாரம் பெற்றன. அது மட்டுமல்லாது பாமாவின் படைப்புகளை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் பலர். சமீபத்தில் தலித் பெண்கள் எழுதிய சிறுகதைகளைத் தொகுக்கும் பணி பாமாவிடம் கொடுக்கப்பட்டது. அது ஆங்கிலத்தில் மொழி

பெயர்க்கப்பட்டுக் கடந்த ஆண்டு வெளியானது. இங்குதான் நீங்கள் சந்தையாக மாறியது என்று சொன்னது கனமான சொல்லாகப் பட்டது. தலித் இலக்கியம் பரவலாகக் கூடாது என்று நினைக்கிறீர்களா? அப்படியே சந்தையானாலும் ஆகட்டுமே, அதில் என்ன தவறு?

தலித் படைப்புகள் உலக அளவில் வரவேற்கப்படுவதை நான் சந்தை என்று குறிப்பிடவில்லை. தலித் இலக்கியம் சீரிய வளர்ச்சியைக் கண்டிருக்கும் இன்றைய சூழலில், இனியும் கழிவிரக்கம் கோரக் கூடிய படைப்புகள் வேண்டாம் என்றும் எழுச்சியை உண்டாக்கும் படைப்புகளே வேண்டும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. கழிவிரக்கத் தொனியிலான படைப்புகள் நல்ல வரவேற்பைப் பெறுவதால் சில பதிப்பகங்கள் அவை மட்டுமே தலித் இலக்கியம் என்று முத்திரையிட்டு அத்தகைய படைப்புகளையே எதிர்பார்க்கிறார்கள். இந்தப் பார்வையைத்தான் சந்தை என்றேன்.

அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. தேக்கநிலை இருக்கிறதென்று சொல்கிறார்கள். அதையும் நான் மறுக்கிறேன். ஜாதி இருக்கிறவரை தலித் இலக்கியமும் இருக்கும். எந்த மாதிரி எழுத வேண்டும் என்பதையும் எழுத்தாளர்களே தீர்மானித்துக்கொள்வார்கள்.

இருக்கும் பணிச் சூழலில் தொடர்ந்து வாசிக்க முடிகிறதா? சமகால இலக்கிய ஆக்கங்களைக் கவனிக்கிறீர்களா? அதன்வழியாக உங்கள் எழுத்தைச் சுயமதிப்பீடு செய்துகொள்வீர்களா?

வாசிக்கும் பழக்கம் குறையவில்லை, சமகால படைப்புகளும் அதில் அடக்கம். பிரான்சிஸ் கிருபா எழுதிய ‘கன்னி’ நாவல் மிகவும் பாதித்தது. ஜோ டி குருஸ் எழுதிய ‘ஆழி சூழ் உலகு’, பூமணியின் ‘அஞ்ஞாடி’, சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல் கோட்டம்’, ‘வேள்பாரி’, சோ.தர்மனின் ‘சூல்’, பொன்னீலனின் ‘மறுபக்கம்’ என்று சொல்லிக்கொண்டே போகலாம். சாகித்ய அகாதமி விருது பெறும் அனைத்து நூல்களையும் படித்துவிடுவேன்.

இப்படைப்புகள் மீது விமர்சனங்களும் இல்லாமலில்லை. எல்லாம் ஜாதியைப் போற்றும் எழுத்துகளாகத்தான் இருக்கின்றன. ‘கொற்கை’ நாவல் பரதவர் சமூகத்தைத் தூக்கிப் பிடிக்கிறது; ‘அஞ்ஞாடி’ (தேவேந்திர குல வேளாளர்கள்), ‘காவல் கோட்டம்’ (நாயுடு), ‘சூல்’ (தேவேந்திர குல வேளாளர்) என அனைத்தும் இதே வகைமைதான். பொன்னீலன் ‘மறுபக்கம்’ என்றொரு நாவல் எழுதினார். மண்டைக்காடு கலவரம்தான் கரு. நாடார்கள் குறித்து விரிவாகவும் சிறப்பாக எழுதியவர், முக்குவர்கள் குறித்துப் பெரிதாகப் பதிவுசெய்திருக்க மாட்டார். சோ.தர்மன் நான் பணிபுரிந்த கோட்டூருக்குப் பக்கத்து ஊர்க்காரர்தான். அவர் சாகித்ய அகாதமி விருதுபெற்றபோது பாராட்டு விழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். அப்போது மேடையிலேயே இந்தக் கருத்தைச் சொன்னேன். இவை நல்ல படைப்புகள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், சாதியத்தைப் போற்றும் சிக்கலும் இருக்கிறது.

இந்தத் தொடர் வாசிப்பும் அணுகுமுறையும் எனக்கும் உதவியாக இருக்கின்றன. என்னுடைய தொடக்கக் கால நாவலுக்கும் கடைசியாக வெளியான ‘முன்னத்தி’ நாவலுக்கும் எழுத்துமுறையில் வேறுபாடுகள் இருப்பதை வாசித்தவர்கள் அறிவார்கள்.

இனி புரட்சி சாத்தியமில்லை என்ற கையறு நிலையில் ஆன்மீகத்திலோ சாதியிலோ இணைந்து கொள்வது வழக்கம். உங்களின் இயற்கை வாழ்வு முறை நோக்கிய நகர்வும் அத்தகையதுதானா, அல்லது புரட்சியின் நீட்சியாகத்தான் அதை முன்வைக்கிறீர்களா?

‘யாத்திரை’ நாவல் எழுதும்போது அதன் தொடர்ச்சியாக இன்னொரு நாவல் எழுதுவேன் என்று சொன்னேன். இருபத்தைந்து ஆண்டுகள் கழித்துதான் ‘மீள்வெளி’ எழுத முடிந்தது. இதை இரண்டு பாகங்களாக எழுதியிருப்பேன். முதல் பாகம் முழுக்கப் போராட்ட வரலாறு; அம்மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்வது குறித்து இரண்டாம் பாகத்தில் எழுதியிருப்பேன். இதைப் பிரச்சாரமாகத்தான் செய்கிறேன். இயற்கை பற்றிய விழிப்புணர்வு தற்போது உலகளாவிய கவனம் பெற்றுவருகிறது. போப் கூட இதுகுறித்து ‘இறைவனைப் புகழ்வோம்’ என்றொரு அறிக்கையை வெளியிட்டார். இயற்கை குறித்து வெளிவந்ததில் சிறந்த அறிக்கையாக இதைக் குறிப்பிடுவேன்.

பெரும்பாலும் மரம் வளர்ப்பது, சூரிய மின்சக்தி, காற்றாலை போன்றவைதான் இயற்கை சார்ந்த நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், நம்முடைய வாழ்க்கை முறையிலேயே மாற்றம் வேண்டும். தமிழகத்திலும், உலக அளவிலும் பல மக்கள் தனித்தனிக் குழுக்களாக இயற்கையோடு இணைந்து வாழ்கிறார்கள். ‘நிலம் அனைவருக்கும் பொதுவானது; எந்த முடிவானாலும் அனைவரும் கூட்டாகத் தேர்ந்து தெளிந்து எடுப்பது; அனைவரும் கூட்டாகச் சமைத்து உண்பது; உணவே மருந்து என்ற சிந்தனை; இயற்கை மருத்துவம்; இயற்கை விவசாயம்; இயற்கை வழிபாடு; கல்வி முறையும் அத்தகையதே.’ இதுதான் அவ்வாழ்க்கை முறையின் விதிகள். இச்சிந்தனையை அமைப்பாகச் செயற்படுத்த விரும்பினேன். வயதைக் காரணமாகச் சொல்லிச் சபை மறுத்துவிட்டது. சரி, இதைக் கதையாக எழுதலாம் என்றுதான் ‘ஐம்பேரியற்கை’ எழுதினேன்.

ஐம்பதாண்டுகால எழுத்து – சமூகப் பணி, இப்பயணத்தை எப்படி உணர்கிறீர்கள்?

தொடக்கக் கால நண்பர்கள் எனக்கு நல்ல அடித்தளமாக அமைந்தனர். அப்போது தெரியவில்லை, போகப் போகத்தான் அவர்களின் கருத்துகள் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்தேன். இயேசுவின் ஆன்மீகத்தை, பெரியாரின் பகுத்தறிவாதத்தை, நண்பர்களின் பன்முகக் கருத்துகளை ஆராயும்போது இதன் அடித்தளத்தில் இருப்பது ஒரேயொரு சிந்தனைதான் என்பதைப் புரிந்துகொண்டேன். அது மனிதநேயம். என்னுடைய படைப்புகளும் செயற்பாடுகளும் மனிதநேயத்தையும் அடித்தட்டு மக்களை ஒருங்கிணைத்து நீதிக்காகப் போராடுவதையும் நோக்கிய பயணமாகத்தான் இருக்கும். என்னை எழுத்தாளன் என்று எங்கும் சொல்லிக்கொண்டதில்லை. அடிப்படையில் நான் செயற்பாட்டாளன். அந்த வகையில், என்னால் முடிந்த அளவுக்குப் பணியாற்றியிருக்கிறேன், பணி அனுபவங்களை நாவலாக எழுதியிருக்கிறேன் என்ற மனநிறைவு உள்ளது. அதனாலேயே என்னுடைய சுயசரிதைக்குப் ‘பேருவகை’ என்று பெயரிட்டேன்.

அதேசமயம் என்னிடம் குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன. அதிகமாகக் கோபப்படுவேன். பகைவர்களையும் மன்னியுங்கள் என்று இயேசு எளிதாகச் சொல்லிவிட்டார். சில விஷயங்களில் மன்னிப்பு என்பதே என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான் நடத்திவைத்த ஜாதி மறுப்புத் திருமணம் ஒன்று ஆணவக் கொலையில் முடிந்தது. இப்போது நினைத்தாலும் சம்மந்தப்பட்ட நபர் மீது கட்டுப்படுத்த முடியாத கோபம் வருகிறது. இப்படியான சில குறைகளும் இருக்கின்றன. மொத்தமாகத் திரும்பிப் பார்க்கும்போது அடித்தட்டு மக்களுக்காக, பழங்குடியினருக்காகச் செயல்பட முடிந்தது. சேசு சபை என்ற அமைப்புக்குள் இருந்ததால் இது சாத்தியமானதென்று நினைக்கிறேன். சில நெருக்கடியான சமயங்களில் நான் அமைப்பை விட்டு வெளியேறியிருக்கலாம். ஆனால், மாற வேண்டியது நானல்ல அமைப்புதான் என்ற உறுதி இருந்ததால் அமைப்புக்குள் இருந்துகொண்டே என் பணிகளைச் செய்வதே சரியென்று தோன்றியது.

தலித் மக்களின் விடுதலைக்கான தேர்வாகக் கிறிஸ்தவம் இருந்த சூழலில் இன்று இஸ்லாமும் பௌத்தமும் மாற்றாகக் கருதப்படுகிறது. எங்கே தவறவிட்டீர்கள்?

உண்மைதான். மீனாட்சிப்புரம் சம்பவமே சிறந்த உதாரணம். பெரியார் கூட இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து என்று சொன்னார். முக்கியக் காரணம் ஜாதி. கிறிஸ்தவத்தில் ஜாதி இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அது கொள்கை ரீதியானதல்ல. அதனால் உள்ளிருந்துகொண்டே போராடிச் சமத்துவத்தை எட்ட முடியும். இங்கேயும் போராட்டமா என்ற சலிப்பில்தான் சிலர் இஸ்லாத்தையும் பௌத்தத்தையும் தேர்ந்தெடுக்கிறார்கள். பௌத்தம் நோக்கிச் செல்வதற்கு இடஒதுக்கீடும் முக்கியக் காரணம். கிறிஸ்தவத்தில் இருந்தால் பட்டியலின இடஒதுக்கீடு கிடைக்காது என்பதால் பௌத்தத்தை நோக்கிச் செல்கின்றனர். ஜாதி என்பது மதத்தைக் கடந்து சமூகப் பிரச்சினையாக மாறிவிட்டது. இஸ்லாத்திலும் ஜாதி பாகுபாடுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள், உறுதியாகத் தெரியவில்லை.

m

மாற்குவின் படைப்புகள்

நாவல்கள்

வருவான் ஒருநாள் (1980)
சுவர்கள் (1984)
கத்தியின்றி ரத்தமின்றி (1987)
யாத்திரை (1993)
மறியல் (2006)
மறுபடியும் (2008)
இப்படியும் (2010)
எப்படியும் (2010)
உண்மையா… அது என்ன? (2011)
மீள்வெளி (2016)
இறங்கு (2017)
ஐம்பேரியற்கை (2018)
முன்னத்தி (2021)

சிறுகதைத் தொகுப்பு

ஆவேசம் (2006)

விழிப்புணர்வு

அடித்தள விழிப்பினிலே (1987)

கள ஆய்வு

குருதி குடிக்கும் குருஞ்சாகுளம் (1992)
சிறுவாச்சியில் ஒரு வெறியாட்சி (1992)
கிறிஸ்தவத்தில் தீண்டாமை (1994)
பஞ்சமி நிலப் போர் (1996)

மானுடவியல் ஆய்வு

அருந்ததியர் : வாழும் வரலாறு (2001)

தன்வரலாறு

தேடல் (2007)
பேருவகை (2019)

இறையியல்

செயலறம் (2013)

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!