என் திறம் கேட்டியோ இளங்கொடி நல்லாய்!

சிவராஜ் பாரதி

“இதனை இவரே சுயமாகப் புனைந்துள்ளார்” என்று (நபியே) இவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறும்: “நானே இதனைச் சுயமாகப் புனைந்திருந்தால் அந்தக் குற்றத்திற்கு நானே பொறுப்பாளி ஆவேன். ஆனால்,  நீங்கள் செய்யும் குற்றங்களுக்கு நான் பொறுப்பாளி அல்லன்.”

– குர்ஆன் 11: 35

 

மலர்வனம் புக்க காதை

‘சாதி, மதம், குடும்பம் (பாலியல்) சுரண்டல், பொருளாதாரம் ஆகியவற்றை நிர்மூலமாக்குகின்ற அரசியல் நிலைப்பாடு எடுத்து, இனியொரு சாதியோ, மதமோ, குடும்பமோ, சுரண்டலோ உருவாகாதபடி செயல்படுவதையே தலித் இலக்கியம் எனலாம். இத்தகைய அரசியலை மேற்கொண்ட, கருத்தியல் ரீதியில் தலித்துக்களான அனைவராலும் இத்தகு தலித் இலக்கியத்தைப் படைக்க முடியும்.’1 அரசியல் – சமூக – மத – பாலின – பொருளாதார ரீதியில் சுரண்டப்படும் யாவரும் தலித்துகளே. இவர்களது இலக்கியமே தலித் இலக்கியம். அந்தவகையில் தலித் இலக்கியத்தின் எதிர்கால பேசுபொருள்கள் என்னவாக இருக்க வேண்டும் என்ற யோசனையின் ஊடாக, தலித்துகள் வரலாற்றில் அதிகம் அறியப்படாத சில கதைகளைச் சொல்வதன் மூலம் இனிவரும் தலித் கதையாடல்களில் சின்ன அசைவுகளை ஏற்படுத்துவதே கட்டுரையின் நோக்கம். இங்கு உரையாடப்படுவது வெறும் கதைகள் மட்டுமே.

1790இல் ஹென்றி பெர்னார்டின் செயிண்ட் பியர் எழுதிய ‘La Chaumiere Indienne’ என்ற ஃப்ரெஞ்ச் நாவல் வெளியானது. 2000த்தில் ‘ஒரு குடிசையிலிருந்து’ என்ற பெயரில் ராவணன் அதை மொழிபெயர்த்திருந்தார். ‘உலகின் முதல் தலித் நாவல்’ என்ற பிரகடனத்தோடுதான் ஆதித்தமிழர் வெளியிட்டார்கள். ஆச்சரியம் என்னவென்றால் இந்நூலுக்கு இராமதாஸ் முன்னுரை எழுதியிருக்கிறார். கிறிஸ்தவ விடுதலை இயக்க நிறுவனர் அந்தோணி ராஜ், பேராசிரியர் கோ.தங்கவேலு ஆகியோரும் முன்னுரை எழுதியிருக்கிறார்கள்.

 உலக அறிவுக் களஞ்சிய தொகுப்பு ஒன்றுக்காக ஐரோப்பிய அறிஞர் ஒருவர் இந்தியா வருவார். ‘உண்மையை எங்கு தேட வேண்டும்; யார் மூலம் அறிய வேண்டும்; உண்மையை மக்களுக்குச் சொல்லலாமா’ இந்த மூன்று சந்தேகங்கள் அவருக்குத் தோன்றுகிறது. பூரி ஜெகன்னாதர் கோயில் தலைமை பார்ப்பனரிடம் கேட்கச் சொல்கிறார்கள். இவரும் பரிசுப் பொருள்களோடு அவரைப் பார்க்கப் போகிறார். பரிசுப் பொருள்கள் மீதிருந்த ஆசையில், ‘உண்மை வேதங்களில் உள்ளது; அதைப் பிராமணர்கள் மூலமாகத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்; உண்மையை மக்களிடம் சொல்லக் கூடாது’ என்கிறார் பார்ப்பனர். அறிஞருக்கு அதில் திருப்தி இல்லை. திரும்பும் வழியில் மழையில் சிக்கிக்கொள்கிறார். ஊருக்கு வெளியில் வசிக்கும் பறையர் வீட்டில் தங்குகிறார். இவரது சந்தேகங்களுக்குப் பறையர் திருப்தியான பதில்கள் சொல்வார். இப்படிப் போகும் அது.2

பொதுவாகத் தலித் இலக்கியம் புலம்பலாகவும் கழிவிரக்கம் கோருவதாகவும் இருப்பதாகச் சொல்லப்படுவதுண்டு. இக்கூற்றை இரண்டு வகையாக அணுகலாம். தொடர் அடக்குமுறைகளால் துயருறும் சமூகம் அதை எதிர்க்கத் துணியும்போது அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, ‘ஏன் என்னை ஒடுக்குகிறாய்’ என்பதாகத்தான் இருக்கும். அவர்களின் பிள்ளைகள் எழுதும் முதல் கதை, தம் பெற்றோரைப் பற்றியதாகத்தான் இருக்கும். இப்படித்தான் தொடங்கும். வலியைச் சொல்லாமல் போராட்ட உணர்வைத் தூண்ட முடியாது. புலம்பல், கழிவிரக்கம் என்பதெல்லாம் குறைகளல்ல. இரண்டாவது, காலனியம். காலனியக் காலகட்டத்தில் நம் சமூக நிலை என்னவாக இருந்தது, நம் வரலாறு என்னவாக நமக்குச் சொல்லித்தரப்பட்டது, நம் எதிர்ப்புணர்வு எப்படி இருந்தது என்பவையும் முக்கியம். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டோம் என்று சொல்வதே முரண்பாடானது. அவ்வாறிருக்க வாய்ப்பே இல்லை. எல்லாப் பகுதிகளிலும் சாதியின் தன்மை ஒன்றுபோல இருந்ததில்லை. குறிப்பாக, தீண்டாமையின் தோற்றம் மிகவும் முக்கியமானது. அதிலேயே நிறைய வேறுபாடுகள் உண்டு. அண்ணல் அம்பேத்கரும் பண்டிதர் அயோத்திதாசரும் முரண்படும் இடமும் இதுதான். அண்ணல் கி.பி.  4 – 6 நூற்றாண்டு இடைவெளியில்தான் தீண்டாமை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார். தமிழ்ச் சூழலில் கி.பி. 10 – 11 நூற்றாண்டுகளில்தான் தீண்டாமை தோன்றியிருக்கக் கூடுமென்று பண்டிதர் சொல்கிறார். சாதி தோன்றிப் பல காலத்துக்குப் பிறகுதான் தீண்டாமை உருவாகிறது. அதேநேரம், ஆங்கிலேயர்களால்தான் சாதிய ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகின, அவர்கள்தான் வரலாற்றைத் திரித்து மக்களிடம் பரப்பிவிட்டார்கள் என்ற கருத்தும் இந்துத்துவர்களால் சொல்லப்படுகிறது. இவற்றின் பின்னணியைப் புரிந்துகொண்டால், காலனியம் நமக்குச் சொன்ன வரலாற்றின் உண்மையையும் புரிந்துகொள்ளலாம். இதில் இன்னொன்றும் இருக்கிறது. தலித்துகள் என்று சொல்லப்படும் பட்டியல் சாதிகள் மீது மட்டும்தான் தீண்டாமை திணிக்கப்பட்டது என்பதில்லை. இன்று மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்று சொல்லப்படும் சாதிகள் மீதும் ஒருகாலத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. இக்கதைகளைப் பேசுவதன் மூலமாக நமக்கான வரலாறெழுதியலைச் சாத்தியப்படுத்தலாமென்று நினைக்கிறேன். அந்தவகையில், தலித் இலக்கியத்தின் போக்கை முன் தலித்தியம் – பின் தலித்தியம் என இரண்டாக வகைப்படுத்துகிறேன்.

 

பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை

மார்க்கசியம் – பின்னை மார்க்சியம், நவீனத்துவம் – பின்நவீனத்துவம் போன்று தலித்தியத்தின் அடுத்த கட்டமாகத்தான் பின்தலித்தியத்தைப் புரிந்துகொள்கிறேன். இக்கோட்பாட்டை உருவாக்கிய பிரபல தமிழ் எழுத்தாளர் குறித்துப் பிறகு சொல்கிறேன். முன்தலித்தியம் என்பது, தலித்தியம் உருவான காலகட்டத்திற்கு முன்பு இருந்த சமூகம் பற்றிய சித்திரமே. அதாவது தலித்துகள், தலித்துகளாக்கப்பட்டதற்கு முன்பு என்னவாக இருந்தார்கள் என்பதே அதன் பேசுபொருள். சமகால பனுவல் ஒன்றிலிருந்து தொடங்கலாம். தோப்பில் முகம்மது மீரான் எழுதிய ‘சாய்வு நாற்காலி’ நாவலில், தன் பரம்பரை சொத்தான நாற்காலியை முஸ்தபா ஒருகட்டத்தில் விற்றுவிடுவார். ஒருநாள் வீட்டு வேலைக்காரன் இஸ்ராயீலோடு தெருவில் நடந்து போகும்போது, அவரது நாற்காலி ஒரு பறையர் வீட்டில் இருப்பதைப் பார்த்து, ‘போயும் போயும்ஞ்.. இவனுக்காடா வித்துப்போட்டா” என்று இஸ்ராயீலிடம் கேட்பார். ‘ஆருக்கு வித்தா என்ன, இண்ணு ராத்திரி அவனுக்கெ காய்க்கெ தைரியத்திலெதானே பெண்ணு கட்ட எறங்கி வந்தியோ’ என்று இஸ்ராயீல் சொல்ல, ‘இருந்தாலும் இவனுக்கு வித்திரிக்கப்படாது’ என்பார் முஸ்தபா. அப்போது இஸ்ராயீல், ‘அப்படிச் சொல்லதெங்கொ. இப்பம் காலம் அவுங்கெ கையிலெயாக்கும்.ஞ். நம்மொ ஆண்ட பூமியா இது? ஒருகாலத்திலெ புலயனும் பறையனும் ஆண்ட பூமிதானே இது? அவுங்களுக்கு வாக்கப்பட்ட மண்ணுதானே இது?’ என்பார். இந்த இடம்தான் முக்கியமென்று நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்களாக இன்று சொல்லப்படுபவர்கள், ஒரு காலத்தில் மண்ணை ஆண்டிருக்கிறார்கள். மீரான் ஒருவரியில் கடந்து போய்விட்டார். ஆனால், அதனுள் பல்லாண்டு வரலாறு பொதிந்திருக்கிறது. அந்தச் சொற்கள் கவனிக்கப்பட வேண்டியவை. புலையனும் பறையனும்… சங்க இலக்கியங்களில் ‘பறையர்’ என்கிற சொல் குறைவாகத்தான் வரும். புலையர்தான் அப்போது புழக்கத்தில் இருந்த சொல்லென்று நினைக்கிறேன். ‘ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்‘ என்றுதான் பக்தி இலக்கியங்களும் சொல்கின்றன. பாரதியார்தான் ‘ஈனப் பறையரேனும்‘ எனப் பாடினார். இதற்குள்ளும் பெரிய வரலாறு இருக்கும். இவையெல்லாம்தான் முன் தலித்தியக் கூறுகள். நமக்கான நில மரபு, பண்பாட்டு மரபு, அறிவு மரபு, மொழி மரபு ஆகியவற்றைக் கண்டடைவதே முன்தலித்தியம்.

இதில் காலவரிசைப்படி பின்னோக்கிப் போவது சுவாரசியமாக இருக்கும் என்று தோன்றுகிறது. காலனியக் காலக்கட்டத்து ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டிடமிருந்து தொடங்கலாம். 1898ஆம் ஆண்டு அயோத்திதாசர் தலைமையில் ஒரு குழு ஆல்காட்டைப் பார்க்கப் போயிருக்கிறார்கள். ‘நாங்கள்தான் இந்தியாவின் பூர்வீகக் குடிகள். அசோகப் பேரரசர் காலத்தில் பௌத்தர்களாய் இருந்தோம். இதை நிரூபிப்பதற்கு எங்களிடம் பழங்கால நூல்கள் இருக்கின்றன. நாங்கள் பௌத்தத்தைப் புதுப்பிக்க எண்ணுகிறோம். நீங்களதற்கு உதவி செய்ய வேண்டும். எங்களுக்குப் பௌத்தக் கோயில் கட்டித் தர வேண்டும். ஒருவேளை நீங்கள் பௌத்த சங்கத்தை உருவாக்கினால், அதில் இணைவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். ஆல்காட்டுக்கு ஆச்சரியம். அவர்கள் கோரிக்கைக்கிணங்க அயோத்திதாசரையும் மற்றொருவரையும் இலங்கைக்கு அழைத்துச் சென்று பௌத்தராக்குகிறார். சென்னை திரும்பிய பிறகு சங்கம் தொடங்குவதற்கான வேலைகளைச் செய்கிறார்கள். அப்போது அம்மக்கள் சொன்ன பழங்கால நூல்ளை ஆல்காட் கேட்கிறார். ‘அயோத்திதாசர் வீட்டிலில்லாத வேளையில் வஞ்சக எண்ணம் கொண்ட ஒருவன் களவாடிவிட்டான்’ என்று சொல்கிறார்கள்.3 அந்த நூல் அஸ்வகோஷரின் ஓலைச்சுவடி. காணாமல் போன அஸ்வகோஷரின் சுவடியைத் தேடிக் கண்டுபிடிப்பது மாதிரியான ஒரு கதையை எழுதிப் பார்க்கலாம்.

நாம் இழந்த சொத்துகளில் ஓலைச்சுவடிகளும் அடங்கும். கிடைத்த சுவடிகளைச் சரியாகப் படியெடுக்காததிலும் நாம் நிறைய இழந்திருக்கிறோம். உ.வே.சா.தான் ஞாபகத்திற்கு வருகிறார். ஒரு புறநானூற்றுப் பாடல். பசுவைக் கொல்வது, பெண்ணின் கருவை அழிப்பது, பார்ப்பனரை அடிப்பதுஞ் இவையெல்லாம் பாவச்செயலென்று வரிகள் இருக்கும். இதில் சுவடியில் ‘குரவர்’ என்றிருந்ததை உவேசா ‘பார்ப்பான்’ என்று திரித்துவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. குரவரென்றால் பெற்றோர், ஆசிரியர் எனப் பொருள்கள் உண்டு. இந்த வாதப்பிரதிவாதங்கள் நெடுங்காலமாக நடக்கிறது. அது உண்மையா பொய்யா என்பது வேறு விவாதம். ஆனால், இம்மாதிரியான ஓலைச்சுவடிகளைப் படியெடுக்கும்போது ஏராளமான திரிபு வேலைகள் நடந்திருக்கலாம். அறியாமையில் நாம் தொலைத்த ஓலைச்சுவடிகளும் பல. இங்கு உவேசா  என்றவுடனே எனக்கு வேறொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. எழுத்தாளர் சுஜாதா ஒரு சங்கப் பாடலுக்கு விளக்கம் எழுதும்போது ‘பூசணிச் செடி’யென்று எழுதிவிட்டாராம். அதற்குப் ‘பூசணிச் செடியன்று, பூசணிக் கொடி’ எனக் கவிஞர் அறிவுமதி மறுப்புச் சொன்னாராம். சுஜாதா உடனே, ‘உவேசா அப்படித்தான் உரை எழுதியிருக்கிறார்’ என்று பழியைத் தூக்கி அவர்மீது போட்டுவிட்டாராம். அறிவுமதியும், ‘உவேசா சொல்லிவிட்டார் என்பதற்காகப் பூசணி செடியில் காய்க்காது கொடியில்தான் காய்க்கும்’ என்றாராம். இதை எழுத்தாளர் கண்மணி குணசேகரன் ஒரு மேடையில் சொன்னார். இப்படி நிறைய உண்டு. சீவக சிந்தாமணியில் வரும் ‘காமன் – சோமன்’ வரைக்கும் பேசலாம். ஆனால், அவரைப் பற்றி ஏன் இத்தனை கதைகள் தெரியுமா, அவர் செய்திருக்கும் வேலைகள் அப்படி. அதையும் நாம் மறக்கக் கூடாது.

இன்னும் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால் தீண்டாமை உருவாக்கப்பட்ட காலம். அயோத்திதாசர் சொன்ன 10 – 11ஆம் நூற்றாண்டு. அதுவரைக்கும் தமிழ்ச் சூழலில் தீண்டாமை இல்லை. வலங்கை – இடங்கை மாதிரியான கிடைமட்ட சமூக அமைப்புதான் இங்கே. அதை மேல் – கீழ் என்கிற செங்குத்துச் சமூக அமைப்பாக மாற்றிவிட்டார்கள்.4 இராஜராஜன் ஆட்சியில்தான் இது நடந்திருக்கக் கூடும். அவர் ஆட்சிக்கால கல்வெட்டுகளில்தான் ‘தீண்டாச் சேரி’ போன்ற இடங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அண்ணல் குறிப்பிடுவதுபோல் 4 – 6 நூற்றாண்டுகளில் இல்லாமல் 10 – 11 நூற்றாண்டுகளில் இங்கே தீண்டாமை உருவாக்கப்பட்டதற்குக் களப்பிரர் ஆட்சியும் ஒரு காரணமாக இருந்திருக்குமென்று நினைக்கிறேன். மக்களின் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, அவர்கள் பண்பாட்டில் சில திரிபுகளை உண்டாக்கி, மன்னர்களை ஏமாற்றி, சமூக அதிகாரத்தை மொத்தமாகக் கைப்பற்றி, தங்களோட கருத்தியலை அரச சட்டமா மாற்றுவதற்கு 600 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இன்னொன்று, சாதியமைப்பு எல்லா இடத்திலும் ஒன்றுபோல இல்லை. அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

600 ஆண்டுகளென்பது வேகமான வளர்ச்சிதான். உலகம் உருவாகி, மனிதன் உருவாகுற வரைக்குமான காலகட்டத்துக்கும் மனிதன் உருவாகி இன்றுவரைக்குமான காலகட்டத்துக்கும் உள்ள வளர்ச்சி வேறுபாடுகளைக் கவனித்தால், மனித மூளையின் திறமையும் ஆபத்தும் தெரியும். பரிணாம வளர்ச்சியில் ஓரறிவிலிருந்து இரண்டாவது அறிவு உருவாகக் கோடி ஆண்டுகள் ஆகுமாம். இப்போது புரிகிறதா மனித மூளையின் திறம். சரி, இராஜராஜனுக்கு வருவோம். அவர் அரசராவதற்கு முன்பு சோழ அரசியலில் பெரிய குழப்பம் நடந்தது, ஆதித்த கரிகாலன். அவரது மரணம் இன்றுவரை மர்மம்தான். இராஜராஜன் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டித்ததாகக் கல்வெட்டு இருக்கிறது. ஆனால் காரணம்? உத்தம சோழன், இராஜராஜன் காலகட்டங்களிலிருந்து பார்ப்பனர்கள் கை ஓங்கினதற்கும் ஆதித்த கரிகாலனின் மரணத்திற்கும் தொடர்பு இல்லாமல் இருக்குமா! இதிலும் ஒரு கதை இருக்கிறது. அதையும் எழுதிப் பார்க்கலாம். ஆதித்த கரிகாலன் பௌத்தம் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நிறையப் பௌத்த சங்கங்களோடு தொடர்பில் இருந்தார். அவர் காஞ்சிபுரத்தில் இருந்ததும் காரணமாகயிருக்கலாம். ஒருவேளை அவர் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பௌத்தம் பரவத் தொடங்கிவிடுமென்றுதான் அவரைக் கொன்றுவிட்டார்கள். நாம் வெறும் சோழ – பாண்டிய பகையாகவும், ஆரிய – தமிழ் பகையாகவும் விவாதித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், திரை மறைவில் வேறொரு கதை உள்ளதை யாரும் அறியாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இதுவும் ஒரு செயல்திட்டம். ஆதரிக்கிறவர்களும் எதிர்க்கிறவர்களும் தன்னுடைய கருத்தியலைக் கொண்டவர்களாக இருத்தி, உண்மையான பிரச்சினையை மறைத்துவிடுவது. கிட்டத்தட்ட தற்போதைய கார்ப்பரேட் மாதிரி. இதை மக்கள் மனநிலையாக மாற்றியதில்தான் அவர்களின் சாமர்த்தியம் இருக்கிறது. மக்கள்தான் சமூகத்தின் அடிப்படை கூறு. அவர்களது எல்லா நடவடிக்கைகளையும் தனக்கேற்றார்போல் மாற்றியது பெரிய காரியம். உதாரணத்திற்கு இங்கிருக்கும் பிரபலமான கதைகளை எடுத்துக்கொண்டால், எல்லாமே அவர்களின் கதைகள். அதற்கெதிராக வேறு கதை வந்தாலும், அதுவும் அவர்களின் எல்லைக்குள்தான் நிற்கிறது. இராமாயணம் இருக்கிறதுஞ் அதற்கு மாற்றாக இராவண கதைகள் வந்தன. ஆனாலும் என்ன, கதை அதேதான். ஹீரோ, வில்லன் பெயர்கள் மட்டும் வேறுபடும். இதுவும் அவர்களுக்கு வெற்றிதான். பௌத்த இராமாயணம் என்றொரு கதை உள்ளது. அதில் இராவணனெனும் கதாபாத்திரமே கிடையாது. அதனால் போரும் இல்லை. அதேபோல் ஜைன இராமாயணம் இருக்கிறது. அதில் வாலியும் இராவணனும்தான் முதன்மை கதாபாத்திரங்கள்; சீதை இராவணனின் மகள்.5 இதுபோன்று பல இராமாயணங்கள் இருக்கின்றன. ஏன் இவ்வளவென்று யோசித்தால், இராமாயணம் எழுதப்படாவிடினும் கூட இராமன், இராவணன் எல்லாம் மக்களின் மனதில், சடங்குகளில் இருந்திருப்பார்கள். வாய்மொழிக் கதைகள்தான் இதிகாசங்களாகவும் காப்பியங்களாகவும் மாறுகின்றன. அதற்குதான் அந்தச் சக்தி உண்டு. வாய்மொழி கதைகளாக இருந்ததினால்தான் ஒவ்வொரு வட்டார அளவிலும் சின்னச் சின்ன மாற்றங்களோடு இன்னும் அவை உயிர்ப்போடு இருக்கின்றன. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இராமாயணத்தில், அனுமார் இலங்கை போனதும் அங்கே ஒரு மாளிகையில் உட்கார்ந்து அதைப் புத்த வியாரமென்று சொல்கிறார். அதேபோல அருணாசல கவிராயர் எழுதிய சுந்தர காண்டத்தில், ‘பறையர் ஊரிலே சிறையிருந்த என்னைப் பரிந்து கை தொடுவாரோஞ்’ என்று வரும்.6 இப்படி இலங்கையைப் பறையர் ஊரென்று சொல்வது ஒருபுறம், அனுமார் புத்த விகாரின் மேல் உட்கார்ந்தாரென்பது ஒருபுறம். ஆயின், இன்றுள்ளது போலவே அன்றும் இலங்கை பௌத்த நாடாகத்தான் இருந்திருக்க வேண்டும். வழக்கமான ஆரிய X திராவிட, சைவ X வைணவ முரண்பாடாக அல்லாது, அண்ணல் சொன்னது போல் பௌத்தம் X பிராமணியம் முரண்பாடாக இராமாயணத்தைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

இதில் ஒரு சிக்கல் உண்டு. நல்லவன் X கெட்டவன் என்ற இருமை வேண்டாமென்று பேசும் நாம், திரும்பத் திரும்ப அதை நோக்கித்தான் ஈர்க்கப்படுகிறோம். ஏன் இராவணன் மட்டும் பௌத்தனாக இருக்க வேண்டும், இராமனும் பௌத்தனாக இருக்கட்டுமே. அதுவும் சரிதான் என்று யோசித்தாலும் பௌத்த மன்னர்கள் எதற்குத் தங்களுக்குள் போர் புரிய வேண்டும் என்ற கேள்வி எழும். பதிலுக்கு, பௌத்த மன்னனின் நாட்டில் எதற்குச் சிறை, அப்பாவிப் பெண்ணை எதற்காகச் சிறைப்படுத்த வேண்டும், பௌத்த – சமண மன்னர்கள் போர் செய்திருக்கிறார்களா போன்ற எதிர்க்கேள்விகளும் எழுந்தால் நீங்கள் யாரும் அறியாத வரலாற்றுக்குள் நுழைவீர்கள்.

 

 

ஐம்பெருங், ஐஞ்சிறு காப்பியங்கள் எல்லாமே சமண, பௌத்தம் சார்ந்தவைதாம். இவற்றில் பரவலாகப் பேசப்படுவது சிலப்பதிகாரமும் மணிமேகலையும். மற்றவை குறித்த விவாதங்கள் இங்கு அதிகம் இல்லை. வளையாபதி போன்ற சில காப்பியங்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம். சிலப்பதிகாரம் தவிர்த்து மற்றவையின் மேலோட்டமான கதை கூட பொது வெளிக்குத் தெரியாது. சிலப்பதிகாரமும் திராவிட இயக்கத்திற்கான அறுவடையோடு ஓய்ந்துவிட்டது. ஏன் சிலப்பதிகாரம் மட்டும் இத்தகைய புகழை அடைந்தது, எந்த விதத்தில் மணிமேகலை குறைந்துவிட்டது போன்ற கேள்விகள் எழாமல் இல்லை. காரணம் ஒன்றுதான், பெண்மை. பொதுப் புத்தியில் பெண்ணுக்கு என்னென்ன குணங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றனவோ அவை அனைத்தையும் ஒருசேரக் கொண்டவள் கண்ணகி, மீறியவள் மணிமேகலை. இன்னொன்றும் சொல்வார்கள், மணிமேகலை மாயாஜாலக் கதை போல் இருக்கிறது. நம்பும்படி இல்லையென்று. அதெல்லாம் ஒப்புக்குச் சொல்பவைதான். இதைவிட மாயாஜாலம் நிறைந்த இராமாயணத்தையே ஏற்றுக்கொண்டார்களே. காரணம் எளிது, மணிமேகலை தானே சிந்திக்கிறாள்; தேர்வு செய்கிறாள்; செயல்படுகிறாள். இது மட்டுமே காரணம். இவர்கள் சொல்வது போல் சிலப்பதிகாரம் முற்றும் நம்பும்படி இருக்கிறதா, சிலம்பின் முடிவே இதைப் பொய்யாக்கிவிடும். சமண மதமும் அகிம்சையைத்தான் போதிக்கிறது. எனில், கண்ணகி மதுரையை எரித்ததைச் சமண மதம் எப்படி ஏற்றுக்கொள்ளும். இதன் சூழ்ச்சியை வேறு வகையில் எளிதில் புரிந்துகொள்ளலாம். நந்தனார் தீயில் இறங்கியதன் பின்னணியோடு கண்ணகியின் மதுரை எரிப்பை இணைத்துப் பாருங்கள். கோவலன் இறந்ததால் கண்ணகியும் அதே சிதையில் தன்னை மாய்த்திருக்கலாம். அதையே கண்ணகி மதுரையை எரித்ததாகக் குறியீடாக்கியிருக்கலாம். கண்ணகி தன் மார்பிலொன்றை அறுத்தது இதற்குச் சாட்சியாகிறது.

எல்லாவற்றையும் இழந்து
உன் முன் ஏதுமற்றதாய் நிற்கிறது என் வரலாறு.
அப்படித்தான் நம்பிக்கொண்டு இருக்கிறாய் நீயும்.
ஆனால் எவரும் அறியாத படி
எங்கள் எல்லோரிடமும் இருக்கிறது
கண்ணகியின் இன்னொரு மார்பு.

என்ற கண்மணி ராசாவின் கவிதையையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

சாதி கட்டமைப்புக்குள் வராமல் வெளியே இருந்தவர்கள்தான் பார்ப்பனர்களுக்குத் தொந்தரவாக இருந்தனர். அவர்கள் மீது திட்டமிட்டுத் திணிக்கப்பட்டதுதான் தீண்டாமை. இதில் அவர்களின் பெயரைக் கூட இழிவாக மாற்றியது பெரிய உளவியல் தாக்குதல். பறையரெனும் பெயர் பறையடித்ததால் வந்ததென்று சொல்லப்படுகிறது. பறையடிப்பது இழிவில்லையென்றாலும், அப்படியாகத்தான் பொருள் கொள்ளப்படுகிறது. இதில், ‘பறை’யென்றால் ‘சொல்லுதல்,

 பேசுதல்’ எனும் பொருள் உள்ளது. அப்படிப் பார்த்தால் பிறரால் பேசப்படுகிற, புகழப்படுகிறவர்கள்தான் பறையர்களென்று ஒரு கதை.7 இன்னொன்றும் இருக்கிறது, அதுதான் ரொம்ப சுவாரசியமானது. கஷ்யப முனிவருக்குத் திதி, அததியென்று இரண்டு மனைவிகள். திதியின் பிள்ளைகளுக்கும் அதிதியின் பிள்ளைகளுக்கும் எப்போதும் பகைதான். அதனால் திதி தன் பிள்ளைகளோடு தென்திசையில் உள்ள காஞ்சிபுரம் பகுதிக்கு வருகிறார்கள். இங்கு வாத்து மாதிரியான பறவைகள் அதிகம் இருப்பதால் இதற்குப் பறவை நாடு என்றொரு பெயரும் உண்டு. பறவை நாட்டில் வாழ்ந்தவர்களின் பெயர் பறயர். இவர்களால்தான் இப்பகுதியில் பௌத்தம் செழிப்பாக இருந்துள்ளது. பிறகு, அதிதியின் பிள்ளைகள் இங்கு வந்து போர் புரிந்து வென்று இவர்களைத் தொண்டர்களாக மாற்றிவிட்டார்கள். இப்பகுதியைத் தொண்டை மண்டலமென்று அழைப்பதற்கு இதுதான் காரணம்.8

அருந்ததியரென்று சொல்லப்படும் சக்கலியர்களுக்கும் பௌத்த விளக்கங்கள் உள்ளன. புத்தரோட வம்சம் சாக்கிய வம்சம். அந்தப் பரம்பரையில வந்தவர்கள்தான் சக்கிலியரென்று ஆய்வாளர் புத்தமித்திரன் சொல்றார். அவர்களின் உட்சாதி பெயர்களுக்கும் (முக்காயனுவாரு – புத்தம், தம்மம், சங்கம் எனும் முக்காயங்களை  உலகெங்கும் பரப்பியவர்கள்; புட்டகலுவாரு – பிடகம் எனும் பௌத்த சிந்தனைக் கூடைகளைப் பரப்பியவர்கள்) இதே மாதிரியான விளக்கங்கள் தருகிறார்.9 இவருக்கு முன்பே இத்தகைய விளக்கங்களை முன்வைத்தவர்கள் இருக்கலாம். ஆனால் நான் யார் மூலமாகத் தெரிந்துகொண்டேனோ அவர் பெயரைச் சொல்வதுதானே சரியாக இருக்கும். கணிதம், மருத்துவம், சோதிடம் என சகல துறையிலும் வல்லவர்கள் வள்ளுவர்கள். இவர்கள் திருவள்ளுவரின் பரம்பரையென்றும் அம்பிகை அம்மன் (அவ்வையார்) பரம்பரையென்றும் சொல்லப்படுகிறார்கள். பௌத்த பள்ளி – விவசாய நிலம் – உழவு இவற்றோடு பள்ளர்களைத் (தேவேந்திர குல வேளாளர்கள்) தொடர்புபடுத்தலாம்.

பண்டிதன்/முண்டிதன்/இங்கிதன்/சங்கிதன்/
நால்விதன் தெரிந்தவனே நாவிதன்

என்றும் சொல்லப்படுகிறது. (‘ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்’ – கலைவாணன். இ.எம்.எஸ்).

நன்கு கவனித்தீர்களானால், பார்ப்பனர்கள் ஒதுக்கிவைத்த அனைத்திலும் பௌத்தத் தொடர்புகள் இருக்கும். கேரளாவில் புலையரெனும் சாதி இருக்கிறது. தோப்பில் மீரான் நாவலிலும் அதுதான் வெளிப்பட்டிருக்கிறது. இங்கு பறவை நாடு இருந்துது போல அங்கு புலையர் நாடு, வள்ளுவ நாடு இருந்திருக்கின்றன. புத்த மதத்தில் ஹீனயானம், மகாயானம் என இரண்டு பிரிவுகள். ஹீனயானம்தான் புத்தரின் நேரடிக் கொள்கைகளைக் கொண்ட பிரிவு. இதைப் பின்பற்றியவர்கள் ஹீனர்கள். அதைத்தான் இவர்கள் ‘ஈனர்’ என்று இழிவுபடுத்துகிறார்கள். ஒன்று, அவர்களின் அறிவு மரபை தனதாக்கிக்கொண்டு அவர்களை ஒதுக்கிவைப்பது. இரண்டு, பண்டிதர் சொல்வது போல், உள்மெய்யான பொருள் தெரியாமல் தன்போக்கில் திரித்துச் சொல்வது. இதுதான் தந்திரம்.

இந்த இடத்தில் பண்டிதரை வியக்காமல் இருக்க முடியவில்லை. நாம் பேசிய யாவற்றுக்கும் மூலம் அவர்தான். இன்னும் மேலே போய் அவர் என்ன செய்கிறாரென்றால் புத்தரின் காலத்தையே மாற்றுகிறார். எவருமே செய்யத் துணியாத வேலை இது. வரலாற்றின்படி புத்தரின் காலம் கி.மு. 563 – 480. பண்டிதர் அப்படியே ஆயிரம் ஆண்டுகள் முன்னாடி கொண்டு செல்கிறார்.10 அவர் காலத்திலும் சரி, பிறகும் சரி எவரும் இப்படி யோசித்ததில்லை. இதற்குக் காரணம் இருக்கிறது. பிராமணியத்தை எதிர்க்கத்தான் புத்தர் வந்தார் என்ற பிம்பத்தை உடைத்து, முதலில் புத்தர்தான், அவரை எதிர்க்கத்தான் பிராமணர்கள் வந்தார்கள் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கவே பண்டிதர் அப்படி எழுதினார். இது உண்மையில்லை என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் ஒரு உண்மைதான் இருக்க வேண்டும் என்பதல்ல, பல உண்மைகள் இருக்கலாம். புத்தர், அவரை எதிர்த்துப் பிராமணர் என்ற கருத்தாக்கத்தை வைத்துப் பெரிய நாவலே எழுதலாம். நம்மிடமிருந்து நிறைய வரலாற்று நாவல்கள் வர வேணடும். பௌத்த – சமண – ஆசீவக எச்சங்கள் அவ்வளவு இருக்கிறது இங்கே, எழுதி எழுதித் தள்ளலாம். நந்தனார் கதையெல்லாம் வேண்டாம். மகாநந்தன் கதைதான் வேண்டும். பண்டிதரே அதற்கும் மூலம்.11

 

உலக அறவி புக்க காதை

பின்தலித்தியம் எழுத்தாளர் சிவசங்கர் எஸ்.ஜேவின் உருவாக்கம். இதன் தேவை, வரையறை எல்லாம் அவருடைய சொற்களிலிருந்தே தருகிறேன்,

  • ‘பின்னைக் காலனியம் போன்றே பின் தலித்திய வாசிப்பும் எழுத்தும் அவசியப்படுகிறது. உட்காலனிய எச்சத்தைத் தலித்துகள் உதற வேண்டிய தருணம் இது. எழுத்தில் இன்னும் பதிவுசெய்யப்படாத தலித் குழுமங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது ஒருபுறம் என்றாலும் காலனிய ஓர்மையிலிருந்து விடுபடுதலும் பிரதானம்.
  • … உட்காலனியம் குறித்த புரிதல் வழித் திணிக்கப்படும் மேலாதிக்க அவதூறுகளை உதறும் முயற்சியே பின்தலித்தியம்.
  • … தலித் படைப்பாளி ஒரே நேரத்தில் தலித்தாகவும் இருந்து மற்ற எல்லாரையும்போல் சமகால உலக நிகழ்வுகள், தத்துவங்கள், கோட்பாடு, பொருளாதாரச் சிக்கல்கள், கலையனுபவம் யாவற்றிலும் தன்னை ஈடுபடுத்தவே செய்கிறான். ஆனாலும், புனைவெழுத்து என வரும்போது அவனது எல்லைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
  • … பிற எந்தப் படைப்பாளியும் தனது படைப்பின் வழிச் சாதிய அடையாளத்தைப் பெறுவதில்லை. ஒரு தலித் தன் படைப்பின் மூலம் மட்டுமே கூடச் சாதிச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • … பின்தலித்தியம் என்னும் சொல்லாடலின் அர்த்த தளத்தின் ஓர் எல்லையாகக் குறிப்பிட விரும்புவது, ‘காலனிய எச்சங்களை எதிர்ப்பது, அதை மீறுவது. இதை உட்காலனியத்துக்குப் (Internal Colonisation) பொருத்தும்போது சாதிய எச்சங்களை எதிர்ப்பது, அதன் அடையாளங்களை மீறுவது.’
  • அடையாளம், அடையாளத்தின் அர்த்தம், அதன் அர்த்த மதிப்பு (Sign Value of Identity) என்கிற கருத்தாக்கத்தின் வழிப் பார்க்கையில் திணிக்கப்பட்ட அடையாளம் அல்லது இந்த அடையாளத்தின் கீழ்மையான அர்த்தம் இவற்றை உதறுதல், மீண்டும் அதே அடையாளத்திற்கான அல்லது புதிய அடையாளங்களுக்கான புதிய அர்த்தங்களை உற்பத்தி செய்தல் என்னும் செயல்படு தளம் பின் தலித்திய உரையாடலில் சாத்தியம்.’12

பின்தலித்தியத்தின் மொத்த வரையறையும் இதுதான். இனி எழுதவருபவர்கள் இதைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது என்று கூறுமளவுக்கு மிகத் தெளிவான சிந்தனையை முன்வைத்ததுடன் அதை அடிப்படையாகக் கொண்ட புனைவுகளை எழுதியும்வருகிறார். திணிக்கப்பட்ட அடையாளத்தை எதிர்த்துதான் தலித் இலக்கியம் உருவானது. ஆனால் இன்றும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. புதிய அடையாளத்தை (பூர்வ பௌத்தர்) உருவாக்குவது பற்றிதான் இவ்வளவு நேரம் உரையாடினோம். அது வரலாற்றுக் கதையாடல். அதேமாதிரி எதிர்கால கதையாடலும் இருக்கிறது, அடையாளத்தை இழப்பது. இருக்கும் அடையாளங்கள் யாவற்றையும் துறந்து சுதந்திர – சமத்துவ – சகோதரத்துவ உலகை உருவாக்குவது.

என்னவோ இவ்விடத்தில் எழுத்தாளர் பிரேம் ஞாபகம் வருகிறது. தலித் விடுதலையில் அவர் இரண்டு வகைமைகளைச் சொல்வார். தன்மீது திணிக்கப்பட்ட அடையாளத்தை ஏற்றுக்கொண்டு, தன் நிலை கீழானதுதானென ஒப்புக்கொண்டு அதிலிருந்து விடுதலை கேட்டுப் போராடுவது. இதை ‘நியாயம் கேட்டு நிற்கும் உளவியல்’ என்று சொல்வார். அடக்குறவனிடமே நீதி கேட்டு நிற்கும் ‘அரசியல் கீழ்நிலையாக்கம்’ அது. எந்தவகையிலும் முழு விடுதலை தராது. நம் உரிமைகளை நாமே எடுத்துக்கொள்கிற, நம்மை அடக்குபவனின் அரசியல் அடிப்படையையே உடைத்தெறிகிற ‘மேல்நிலையாக்கப்’ போராட்டமே தீர்வு தருமென்று சொல்வார்.13 இது இலக்கியத்திலும் வர வேண்டும். சிவசங்கர் சொன்னது போலவே நாம் என்ன எழுத வேண்டுமென்பதைக் கூட அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். சினிமாவிலும் இதுதான் நடக்கிறது. நம் அறிவு மரபு குறித்தோ, புதுக் கோட்பாடுகள் குறித்தோ அவர்களுக்குக் கவலையில்லை. எதுவென்றாலும் தன்னிடம் கேட்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். நான் யார் என்பதையும் அவர்களே தீர்மானித்துக்கொள்கிறார்கள்.

புத்தமித்திரன் இரண்டு விஷயங்கள் சொல்கிறார். ‘kill by untouchability, kill by silence’.14 இது அதிகாரம் நம்மீது பயன்படுத்தும் யுத்தி. நம் மரபைப் பற்றிப் பேசாமல், தொடர்ந்து இழிவை மட்டுமே திணிப்பது. சாதியின் தன்மையும் தீண்டாமையின் தன்மையும் எப்போதும் ஒரேமாதிரி இருந்ததில்லை. தீண்டாமையை அனுபவித்த பல சாதிகள், இன்று ஆதிக்கச் சக்தியா வளர்ந்திருக்கிறார்கள். அது எப்படிச் சாத்தியமானது? ஒற்றுமைதான் பிரதான காரணம். சாதியை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். சாதியால் ஒன்றிணைந்தார்கள். இருக்கும் அமைப்பை உடைப்பதற்குப் பதிலாக அதைப் பலமாக்கி, அதில் தங்களது இடத்தை நிலைப்படுத்திக்கொண்டனர். நாமும் அப்படி இயங்கலாமே என்று சிலர் பேசிவருகிறார்கள், இளைஞர்களின் குரல் சற்று உரக்கக் கேட்கிறது. அது சரியான வழி இல்லை. பண்டிதரும் அண்ணலும் அப்படி நினைத்திருந்தால் யார் தடுத்திருக்க முடியும், ஆனாலும் தவிர்த்தார்கள். அப்படிச் செய்தால் சாதிய அமைப்பை ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகிடும். அதுவே அவர்களுக்கு வெற்றிதானே. அதிகாரம், பணம், ஆள்பலம் எல்லாம் இருக்கிறதுஞ் ஆனாலும் ஏன் இன்றும் சத்சங்கம், பக்தி நிகழ்வுகள் என நடத்தித் தன் புராணங்களைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.., பயம். என்றைக்கென்றாலும் அவர்களின் ஓட்டுப் பானை உடைந்துவிடுமென்ற பயம். தோண்டும் இடமெல்லாம் புத்தர் சிலை கிடைக்கிறதென்ற பயம். அந்தப் பயத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தலைகீழாக்கம் தேவையில்லைஞ் ஏற்கெனவே தலைகீழாகத்தான் இருக்கிறது. வேறொன்றை உருவாக்க வேண்டும். பௌத்தக் கதைகளை நாம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். தீவிர, வெகுஜன, இடைநிலை என எல்லா இலக்கிய வகைகளிலும், பிற ஊடகங்கள் வழியாகவும் சொல்ல வேண்டும்.

பௌத்தம் மட்டும் என்றில்லை, கிறித்தவம் – இஸ்லாத்திற்கு மாறிய தலித்துகளுக்கும் கதைகள் இருக்கின்றன. வரலாற்றுக் காலகட்ட கதைகள் பற்றி எழுதியிருக்கிறார்கள்.15 சிலுவை நண்டு கதை போன்று பண்பாட்டுக் கதைகள் உண்டு கிறிஸ்தவத்தில்; அண்ணல் இஸ்லாம் தழுவினா தன் பெண்ணை அவருக்கு நிக்கா செய்து வைப்பேனென்று ஓர் இஸ்லாமியத் தலைவர் சொன்னார். அண்ணல் மீதிருந்த மரியாதையில் அவர் மதம் மாறுவதற்கு முன்பே தன் பெண்ணை அவருக்கு நிக்கா செய்துவைத்திருந்தால்ஞ் இந்த மாதிரி நிறைய யோசிக்கலாம். (அண்ணல் ஏன் இஸ்லாத்தைத் தழுவவில்லை என்பதற்கு அவரே காரணம் சொல்லிவிட்டார். மீண்டும் அப்படி யோசிப்பது சரியாவெனத் தெரியவில்லை. ஆனால் ஒன்று, ஒரே கடவுள், ஒரே சட்டம், ஒரே மொழிஞ் இப்படியான ஒற்றை அதிகாரம் எந்த வழியில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும்.)

பௌத்த, இஸ்லாமிய, கிறித்துவக் கதைகளைப் பற்றி, புதிய அடையாளத்தை உருவாக்குவது பற்றிப் பேசினோம். ஆனால், இந்து அடையாளத்துக்குள் இருக்கிறவர்களையும் விட்டுவிடக் கூடாதல்லவா. அவர்களுக்குத் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன்தான் சரி. திணிக்கப்பட்ட அடையாளத்தின் முகத்தை மாற்றுவது. தமிழை உருவாக்கின சிவன் சுடுகாட்டுப் பறையர், தமிழ்ப் புலவராகி சிவன் மீதே குற்றம் சொன்ன நக்கீரனும் பறையர்தான்.16 இதுமாதிரி ஒவ்வொரு கடவுளுக்கும் பூர்வ கதைகள் இருக்கும். மதுரை வீரன், முத்துப்பட்டன், காத்தவராயன் கதைகளெல்லாம் பரவலாக எல்லோருக்கும் தெரிந்ததுதான். அந்தப் போர்க்குணம்தான் முக்கியம். நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்பது முக்கியமல்ல. என்னைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதுதான் முக்கியம். இந்த இடத்தில் பௌத்தம் பற்றிய தாத்தா ரெட்டமலை சீனிவாசனோட விமர்சனங்களும் முக்கியம்.17 முன்பு பேசின நல்லவன் X கெட்டவன் இருமைக்குள்ள மாட்டிக்கொள்ளாமல் இருக்க இந்தச் சிந்தனை உதவும். பலதரப்பட்ட எதிர்ப்புக் குரல்கள் இருப்பதும் முக்கியம். தலித்துகள் என்பதைச் சாதிய ரீதியாகச் சுருக்காமல், இன – மத – மொழி – பால் என எவ்வகையில் ஒடுக்கப்பட்டாலும் அவர்கள் தலித்துகளே. இன்னொன்றும் கவனிக்கப்பட வேண்டும். நாம் பேசின கதைகள் அனைத்திலும் பூர்வகுடிகளின் அறிவு மரபு அத்துனை வீரியமாக இருந்திருக்கிறது. மருத்துவம், சோதிடம், கணிதம், மொழி உட்பட எல்லாவற்றிலும் நாம் சிறந்து விளங்கியிருக்கிறோம். பண்டிதரையும் அண்ணலையும் மட்டும் திரும்பத் திரும்பக் குறிப்பிடுவதற்கு, சமூக விடுதலைக்கான கருத்தியலை உருவாக்கித் தந்தவர்கள் என்பதுதான் காரணமே ஒழிய, அவர்கள் மட்டுமே தலித்துகளது அறிவு மரபு என்பதல்ல. அண்ணலின் ஆங்கில மேதைமை நாம் அறிந்ததே. பேரறிஞர் எம்.சி.ராஜாவுக்கும் இந்தப் பெருமை உண்டு. நாம் பள்ளியில் படித்த ‘அம்மா இங்கே வா வா…’, ‘கை வீசம்மா கை வீசு…’ போன்ற குழந்தைப் பாடல்கள் எம்.சி.ராஜா எழுதியது. வள்ளல் மதுரைப் பிள்ளை, சுவாமி சகஜானந்தா, நாராயண குரு என இப்படி நிறைய உண்டு.

தமிழ் மொழியின் எழுத்து வடிவத்தைக் கண்டுபிடித்ததே புத்தர்தான் என்று சொல்லப்படுகிறது. பிராமி எழுத்துகளில் இருந்துதான் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள எழுத்துகள் உருவானதாகச் சொல்கிறார்கள்.18 அதேபோல் பாலி மொழியிலிருந்துதான் தமிழ், தெலுங்கு உருவானதாக புத்தமித்திரன் சொல்கிறார். மயிலை சீனி.வேங்கடசாமியும் முன்னரே சொல்லியிருக்கிறார். இவர்களிடம் எழுத்தையும் மொழியையும் கொடுத்த பாவத்திற்குதான் நம் அறிவு மரபை இருட்டடிப்புச் செய்கிறார்கள். நமக்குள்ள நெருக்கடிகள் எதுவும் அவர்களுக்கில்லை. தான்தோன்றித்தனமான கருத்துகளைச் சொல்லிவிட்டு ‘கலை கலைக்கானது’, ‘மானுட தரிசனம்’, ‘எழுத்தின் பித்த நிலை’ என்றெல்லாம் பேசுவார்கள். நாம் இயல்பாக ஒரு வார்த்தைப் பேசிவிட்டால், ‘இதுதான் இவர்களின் சமூகநீதி’, ‘போராளி வேஷம்’ என்று கொதித்தெழுவார்கள். ஒரேவேளையில் நாம் தனிமனிதராகவும், கம்யூனிஸ்டாகவும், அம்பேத்கரியராகவும், பெரியாரியராகவும், பெண்ணியவாதியாகவும், எழுத்தாளராகவும் இருக்க வேண்டிய நெருக்கடிக்குள்ளாகிறோம். ஆனாலும் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறோம், அதுவே நம் பலம்.

m

இவை எல்லாமே நான் சேகரித்த தகவல்களின் தொகுப்புதான். இதில் என் கருத்து எதுவும் இல்லையா என்றால், நான் நம்பும் கருத்தியலின் அடிப்படையிலேயே இத்தகவல்களைச் சேகரித்திருக்கிறேன். என் கருத்து மறைமுகமாக இருக்கிறது. இவற்றில் விடுபட்ட கதைகளும் உண்டு. சுயசாதி விமர்சனமும் முக்கியம். எல்லாவற்றையும் ஒரே கட்டுரையில் பேசிவிட முடியாது என்பதால் இந்த அளவில் விட்டுவிடுகிறேன்.

பண்டிதரும் அண்ணலும்தான் நமக்கான முன்னுதாரணங்கள். எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் தான் அனுபவித்த கொடுமைகளைச் சொல்லிக்காட்டியதில்லை. கஷ்டமான நிலையிலும் எதிர்கால தலைமுறையினரின் நலனுக்காக ஏதாவது செய்திட வேண்டுமென்றே யோசித்தார்கள். அவர்களின் கனவே நம் முன்னேற்றம்தான். சமூக – பொருளாதார – அரசியல் முன்னேற்றம். அதை நோக்கித்தான் நாமும் போக வேண்டும். யதார்த்த எழுத்து, மீபுனைவு, மீமெய்யியல் என எந்த வகைமையில் எழுதினாலும் நம் நோக்கம் விடுதலைதான். இலக்கை எய்தவுடன் குரு ரவிதாசர் கனவுலகமான பேகம்புராவிலோ, பண்டிதரின் இந்திரர் தேசத்திலோ நம் வாழ்வைத் தொடரலாம். இருக்கிற சூழலில் இது சாத்தியமா என்று மட்டும் யோசிக்கத் தேவையில்லை. சமகால உதாரணம் இசைஞானி இளையராஜா. அவரும் தன் சோகத்தை மனதில் வைத்துக்கொண்டு எல்லலோருக்குமான ஒரு மானசீக துணையாக இருக்கிறார். இனி வரும் இலக்கியங்களும் அப்படித்தான் இருக்க வேண்டும்.

சுட்டி

  1. ராஜ் கௌதமன், ‘தலித்திய விமர்சனக் கட்டுரைகள்’, காலச்சுவடு பதிப்பகம், ப. 21
  2. நிறப்பிரிகை, நவம்பர் 1994, ப. 103
  3. ஹென்றி ஸ்டீல் ஆல்காட் – கோர்ட்ரைட், ‘தலித் மக்களும் கல்வியும்’, தமிழில்: ஆ.சுந்தரம், நீலம் பதிப்பகம், ப. 46
  4. ரவிக்குமார், ‘தலித்துகளும் நிலமும்’, மணற்கேணி பதிப்பகம், ப. 6
  5. அ.கா.பெருமாள், ‘இராமன் எத்தனை இராமனடி!’, காலச்சுவடு பதிப்பகம், ப. 41 – 68
  6. டி.கோபால் செட்டியார், ‘ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்’, பதிப்பாசிரியர் : ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், ப: 27
  7. மேலது, ப. 15
  8. மேலது, ப. 24
  9. ‘கறுப்பு – எதிர்க்கதையாடல்கள்’, தொகுப்பு : சுகனும் ஷோபாசக்தியும், அடையாளம் பதிப்பகம், ப: 163 – 186
  10. அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 2
  11. புலவர் ஜே.ஆனந்தராசன், ‘பவுத்தமும் பழந்தமிழ்க் குடிகளும்’, அன்றில் பதிப்பகம், ப: 111 – 125
  12. சிவசங்கர் எஸ்.ஜே, ‘சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை’, காலச்சுவடு பதிப்பகம், ப. 15 – 18
  13. பிரேம், ‘அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப் போராட்டம்’, எதிர் வெளியீடு
  14. ‘கறுப்பு எதிர்க்கதையாடல்கள்’, தொகுப்பு : சுகனும் ஷோபாசக்தியும், அடையாளம் பதிப்பகம், ப : 163
  15. சிவராஜ் பாரதி, ‘குதிரை வீரன் வருகை’, காலச்சுவடு டிசம்பர் 2019
  16. அன்பு பொன்னோவியம், ‘எம்.சி.ராஜா சிந்தனைகள்’ (சிறப்புரை), நீலம் பதிப்பகம், ப. 26
  17. கோ.ரகுபதி, ‘இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு’, தடாகம், ப. 23 – 33
  18. புலவர் ஜே.ஆனந்தராசன், ‘பவுத்தமும் பழந்தமிழ்க் குடிகளும்’, அன்றில் பதிப்பகம், ப: 200

(30.04.2023 அன்று நடைபெற்ற வானம் வேர்ச்சொல் நிகழ்வில் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட கட்டுரை வடிவம்)

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!