தலித் ஓர்மை: மேல்பாதியும் புதிய நாடாளுமன்றமும்

முப்பது ஆண்டுகளுக்கு முன்னே மதுரை மாவட்டம் மேலவளவு கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராக முருகேசன் வெற்றிபெற்றதையொட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்படுவதற்கு முன் சாதி இந்துக்கள் ஒரு கூட்டம் நடத்தி, ‘நாட்டுக்கொரு பறையன் ஜனாதிபதியானாலும் ஊருக்கு ஒரு பறையன் தலைவனாக விடக்கூடாது’ எனப் பிரகடனப்படுத்தினர். மேலவளவு முருகேசன் ஊராட்சி மன்றத் தலைவரானபோது கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்தார். தலித் சமூகத்தவரான அவரைத் தலித் என்று குறிப்பிடுவதற்குப் பதில் பறையன் என்கிற பொருளில் தீர்மான கூட்டத்தில் பேசியிருந்தார்கள்.

கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் கழித்து, இந்த இரு ஒப்பீடுகளையும் நினைவுகூரும் வகையில் ஒரே காலத்தில் இரண்டு சம்பவங்கள் தற்போது நிகழ்ந்திருக்கின்றன. விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் பட்டியலினச் சமூகத்தாரைத் திரெளபதி அம்மன் கோயிலில் வழிபட விடமாட்டோம் என்று அங்குள்ள வன்னியர்கள் சாதியாக அணிதிரண்டு நிற்கிறார்கள். மீறி அனுமதித்தால் தீக்குளிப்போம் என்று சொன்னதோடு அதற்கான முயற்சியும் நடந்து காவல்துறை அதைத் தடுத்து நிறுத்தியது. அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர், அதிகாரிகள் ஆகியோர் வன்னியர்களோடு தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தையை நிகழ்த்திய வண்ணம் இருக்கிறார்கள். அதேவேளையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழாவுக்கான அறிவிப்பும் வெளியாகி, அதில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நிராகரிக்கப்பட்டு, பல தரப்பட்ட சமய நம்பிக்கைகள் கொண்ட மதச்சார்பற்ற நாட்டில் நிலக்கிழார்களான வெள்ளாள மடாதிபதிகளை வைத்து நாடாளுமன்றம் திறக்கப்பட்டது, எந்த எதிர்ப்புமின்றி.

1929களில் பாபாசாகேப் அம்பேத்கர் அடுத்தடுத்துக் கோயில் நுழைவுப் போராட்டங்களில் ஈடுபட்டார். அடிப்படை உரிமை என்கிற அளவில் அந்நடவடிக்கைகள் சரி. ஆனால் அதுவே இலக்கு என சமூகம் கருதிவிடக் கூடாது என்று உணர்ந்தவர், நாளடைவில் அத்தகைய போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதை நிறுத்திக்கொண்டார். அம்பேத்கர் உணர்ந்ததைப் போலவே அம்பேத்கரியர்களும் கோயில் நுழைவு, அனைத்துச் சாதி அர்ச்சகர் உள்ளிட்டவை குறித்துப் பேசுவதை நிறுத்திக்கொண்டனர். இவை கோட்பாடு மற்றும் கருத்தியல் தளத்தில் நிகழ்ந்த மாற்றம். ஆனால், மேல்பாதி கிராமத்தில் தற்போது நிகழ்ந்துகொண்டிருப்பது இதற்கெல்லாம் அப்பாற்பட்ட உள்ளூர் சாதியின் யதார்த்தம்.

சாதியின் தோற்றுவாய், அது இயங்கும் விதம் குறித்து மக்களுக்குப் பொதுவான மதிப்பீடுகள் என்று ஏதுமில்லை. தங்களது அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லைக்குள் அவை பேணி காப்பாற்றப்பட வேண்டும் என்கிற சிந்தனையே எப்போதும் மேலோங்கி இருக்கிறது. இந்த உளவியலிலிருந்துதான் ஒரு தலித் குடியரசுத் தலைவராகக் கூட ஆகலாம், ஆனால் ஊராட்சி மன்றத் தலைவராகி விடக்கூடாது என்கிற சிந்தனை உருவாகிறது. கிட்டத்தட்ட இதே உளவியல்தான் அரசியல் தளத்திலும் இருக்கிறது. உலகம் முழுக்க நடக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராய்த் தீவிரமாகப் பேசத் துணிகிறவர்களால், உள்ளூரில் இயங்கும் சாதியத்திற்கு எதிராய் அதே தீவிரத்தோடு பேச முடிவதில்லை.

தமிழ்நாட்டில் நடக்கும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்துப் பேசும்போது திமுகவை விமர்சிக்கும் பாரதிய ஜனதா கட்சி, புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழாவுக்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை மோடி நிராகரித்தது குறித்துப் பேசுவதில்லை. மேலவளவில் கொல்லப்பட்ட முருகேசன் திமுககாரராய் இருந்தும் கூட அவரைப் பாதுகாக்கத் திமுகவால் முடியவில்லை.  தற்போது விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்களே ஒழிய அவற்றைத் தீண்டாமைக் குற்றமாகக் கருதி எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க அவர்களால் இயலவில்லை. அதேபோல நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தை என்பது சமூகநீதியைப் பெற்றுத் தருவதற்கான முனைப்பு மட்டுமே என்றும் நாம் கருதிவிட முடியாது. கோயிலுக்குள் நுழைவதிலிருந்து தலித்துகள் பின்வாங்கினாலும் அது பேச்சுவார்த்தையின் வெற்றிதான்.

மேல்பாதி கோயிலில் தலித்துகள் அனுமதிக்கப்படுவதோ, திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படுவதோ இங்கு பிரச்சினை இல்லை. விமர்சனங்களை எதிர்கொள்வதற்கேனும் அவை என்றாவது ஒருநாள் சாத்தியப்படும். இங்கே கருத்தில் கொள்ளப்பட வேண்டியது, சாதி எப்படித்

தனது அதிகார வரம்பிற்குள் வீரியமாகச் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதைத்தான். எந்த எல்லைக்குட்பட்டுச் சாதியின் அதிகாரம் கை ஓங்கியிருக்கிறதோ, அதே எல்லைக்குட்பட்டு அதை வீழ்த்துவதற்கான ஆற்றலோடு தலித்துகளின் சமூகநிலை மாறினால் மட்டுமே இப்பிரச்சினைகள் முற்றுப்பெறும். ஆனால், மீண்டும் மீண்டும் தலித்துகளை நீதியைப் பெற்றுக்கொள்கிறவர்களின் இடத்திலும், நீதிக்காகக் காத்துக்கொண்டிருப்பவர்களின் இடத்திலும் தேக்கி வைத்திருப்பதில்தான் பிற்போக்கு  – முற்போக்கு என எல்லா அரசியலும் ஒரு புள்ளியில் நிற்கிறது.

தலித் ஓர்மை கொண்ட அணிதிரட்சியும், பிற அதிகார மட்டங்களில் தீர்மானிக்கக்கூடிய இடத்தில் தலித்துகள் இருப்பதும் ஒருசேர நடக்க வேண்டும். இது நிகழாமல் தனிப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஆற்றலைச் செலுத்திக்கொண்டிருந்தால் கண்டனம், கோரிக்கை, நன்றி என இம்மூன்றைத் தாண்டி ஓர் அடி கூட முன்நகர்வதற்கான வாய்ப்பில்லை என்பதே யதார்த்தம்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!