மணிப்பூரில் அமைதி என்பது எப்போதும் ஆபத்தானதாகத்தான் இருந்திருக்கிறது

சௌதிக் பிஸ்வாஸ் | தமிழில்: பிரேசில்

ந்திய இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஒருவர், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழ்நிலைக் குறித்துக் கவலைப்பட்டார். அது அவரின் சொந்த மாநிலம்.

“மாநிலம் இப்போது நிலையற்றதாகியிருக்கிறது” என்று ட்வீட் செய்துள்ள எல்.நிஷிகாந்த சிங், “லிபியா, லெபனான், நைஜீரியா, சிரியா போன்ற நாடுகளில் யாராலும் எப்போது வேண்டுமானாலும் உயிரும் உடைமையும் அழிக்கப்படலாம்” என்கிறார்.

இனக்கலவரத்தால் பீடிக்கப்பட்டுச் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மணிப்பூர் உள்நாட்டுப் போரின் விளிம்பில் இருப்பதாகப் பலர் நம்புவதைப் போலவே மணிப்பூரும் தவித்துக்கொண்டிருக்கிறது. பெரும்பான்மைச் சமூகமான மெய்தேய்க்கும் – சிறுபான்மை குகி சமூகத்துக்கும் இடையிலான மோதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; நானூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சுமார் 350 முகாம்களில் கிட்டத்தட்ட 60,000 இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 40,000 பாதுகாப்புப் படையினர் – இராணுவ வீரர்கள், துணை இராணுவத்தினர், போலீஸார் – வன்முறையை அடக்குவதற்குப் போராடிக்கொண்டிருக்கின்றனர். கும்பல் ஒன்றால் போலீஸ் ஆயுதக் களஞ்சியங்களிலிருந்து நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அதில் நான்கில் ஒரு பகுதி ஆயுதங்கள் மட்டுமே அரசிடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

மோதலில் ஈடுபட்டுள்ள சமூகங்களுக்கிடையில் அவநம்பிக்கை கூர்மையடைந்துள்ளது, இருவரும் பாதுகாப்புப் படைகளைக் குற்றஞ்சாட்டுகின்றனர். இருநூறுக்கும் மேற்பட்ட தேவாலயங்களும் பதினேழு கோயில்களும் அழிக்கப்பட்டுள்ளன, சேதப்படுத்தப்பட்டுள்ளன. உள்ளூர் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் வீடுகள் தீவைக்கப்பட்டுள்ளன.

இயல்பு வாழ்க்கை நெரிக்கப்பட்டிருக்கிறது. 16 மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் தொடர்கிறது; பள்ளிகள் மூடப்பட்டு இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பொருட்களை எடுத்துச் செல்வதற்கான பிரதான நெடுஞ்சாலை போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டுள்ளது. கொலைகளும் தீ வைப்புகளும் நடக்கின்றன. அமைதிக் குழுவிற்கான மத்திய அரசின் முன்மொழிவு மக்களால் வரவேற்கப்படவில்லை.

அமைதிக்கான வடகிழக்கு இந்திய மகளிர் அமைப்பைச் சேர்ந்த பினாலக்ஷ்மி நேப்ரம் “மணிப்பூர் வரலாற்றில் இது “இருண்ட தருணம்” என்கிறார். “இரண்டு நாட்களில் [வன்முறை தொடங்கியபோது], வீடுகள் எரிக்கப்பட்டன, மக்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்; தீக்கிரையாக்கப்பட்டனர்; சித்திரவதைக்கு உள்ளாயினர். மணிப்பூர் அதன் நவீன வரலாற்றில் இதுபோன்ற வன்முறையைக் கண்டதில்லை.”

இந்தியாவின் தொலைதூர வடகிழக்குப் பகுதியில் உள்ள மூர்க்கமான எட்டு மாநிலங்களில் 400க்கும் மேற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 45 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். பிராந்தியம் முழுவதும் உள்ள குழுக்களிடையே பல ஆண்டுகளாக, பத்துக்கும் மேற்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. மியான்மர் தேச எல்லைக்கு அண்மையில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலம், இன வன்முறைக்குப் புதியதல்ல.

சுமார் 33 பழங்குடி இனங்கள் வாழும் இந்த மாநிலம் மிகவும் பன்முகப்பட்டது – கடுமையாகப் பிளவுபட்டது. இது சுமார் 40 கிளர்ச்சிக் குழுக்களின் தாயகமாகும். மெய்தேய், நாகா, குகி ஆகிய பழங்குடிகளைச் சேர்ந்த போராளிகள், பாதுகாப்புப் படையினருக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கிய இந்திய ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் (கிதிஷிறிகி) போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொடர்ந்து ஆயுதப் போராட்ட பிரச்சாரங்களைச் செய்தனர். தாயகக் கோரிக்கைகளில் இப்போராளிகள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுச் சண்டையிட்டுள்ளனர்.

மணிப்பூரின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேலானவர்கள் மெய்தேய் சமூகத்தினர். ஏறக்குறைய 43% குகி இனத்தினரும் நாகா இனத்தினரும் வாழ்கிறார்கள், இரண்டு முக்கியமான பழங்குடிச் சமூகத்தினர் மலைகளில் வாழ்கின்றனர். பெரும்பாலான மெய்தேய்கள் இந்து மதத்தையும் குகிகள் கிறிஸ்தவத்தையும் பின்பற்றுகிறார்கள்.

மணிப்பூரில் இதற்கு முன்னர் பல இன – மத – மோதல்கள் நடந்துள்ளன; நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். “இந்த மோதல் நிச்சயமாக இனப் பிரச்சினையில் வேரூன்றியுள்ளது, மதப் பிரச்சினையில் அல்ல,” என்கிறார் ‘தி ஃபிரான்டியர் மணிப்பூ’ரின் ஆசிரியர் தீரன் ஏ சடோக்பம்.

மே மாதம் தொடங்கிய இப்பிரச்சினைக்கான காரணம்: பழங்குடி பட்டியலில் மெய்தேய் இனத்தவரைச் சேர்க்கக் கோரும் கோரிக்கைக்கு குகி இனத்தவர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், இதுமட்டுமே மணிப்பூரைச் சூழ்ந்துள்ள இன வன்முறைக்கான காரணமாகக் கொள்ள முடியாது.

நீண்டகாலக் கிளர்ச்சி, போதைப்பொருள் மீதான சர்ச்சைக்குரிய சமீபத்தியப் போர், மியான்மர் எல்லைகள் வழியாகச் சட்டவிரோத இடம்பெயர்வு, நிலத்தின் மீதான உரிமை, வேலைவாய்ப்புகள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் சிக்கலான தொடர்புகள் உள்ளன. இதனால் இப்பகுதி இளைஞர்கள் கிளர்ச்சிக் குழுக்களில் இணையும் அபாயம் ஏற்படுகிறது.

பல தசாப்தங்களாகப் போதைப்பொருள் வர்த்தகத்தில் அரசியல்வாதிகளுக்குப் பங்கு இருந்ததாகக் கூறப்படுவதையும், அரசியல்வாதிகளுக்கும் போராளிகளுக்கும் இடையேயான தொடர்பையும் வன்முறைக்கான காரணங்களாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மெய்தேய் இனத்தைச் சேர்ந்த முதல்வர் என்.பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு, கசகசா விவசாயத்தைக் குறிவைத்துச் சர்ச்சைக்குரிய “போதைக்கு எதிரான போர்” பிரச்சாரத்தைத் தொடங்கியது. 2017 முதல் 18,000 ஏக்கருக்கும் அதிகமான கசகசா வயல்களை அழித்ததாக அரசு கூறுகிறது, அவற்றில் பெரும்பாலானவை குகி மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ளன. (ஓபியம் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடான மியான்மரின் எல்லையில் மணிப்பூர் மாநிலம் உள்ளதால் போதைப் பொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.)

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் பிரச்சாரம் குகிகளில் ஒரு பிரிவினருக்கும் அரசுக்கும் இடையே பிளவுகளை அதிகப்படுத்தியதாகத் தெரிகிறது. கசகசா வளரும் கிராமங்கள் – பெரும்பாலும் குகிகளின் தாயகங்கள் – அங்கீகாரம் இல்லாமலாக்கப்படும் என்றும் நலத்திட்ட உதவிகள் பறிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மார்ச் மாதம், ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், பாதுகாக்கப்பட்ட காடுகளை ஆக்கிரமிப்புச் செய்யும், போதைப்பொருள் வியாபாரம் செய்யும் சில குகிகளுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் தனது அரசு எடுத்ததாகக் கூறினார். அதே மாதம், தங்கள் சமூகத்தைக் குறிவைத்து நடவடிக்கை எடுத்த பாஜக அரசுக்கு எதிராகக் குகிகள் மலை மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தினர். குகி கிளர்ச்சிக் குழுக்கள் மக்களைத் தூண்டுவதாக பிரேன் சிங்கின் அரசு குற்றஞ்சாட்டியது.

மணிப்பூரில் நிலம் தொடர்பான பிரச்சினைகளும் நிறைய உள்ளன. சுமார் 60% மக்கள் மாநிலத்தின் 10% நிலப்பரப்பு மட்டுமே கொண்ட இம்பாலில் வசிக்கின்றனர். பழங்குடியினரல்லாத மக்கள் மலை மாவட்டங்களில் நிலம் வாங்கவோ அல்லது குடியேறவோ அனுமதிக்கப்படுவதில்லை என்ற நடைமுறையால் மெய்தேய்கள் வெறுப்படைந்துள்ளனர். பங்களாதேஷ், மியான்மர் போன்ற அண்டை நாடுகளிலிருந்து வரும் ‘வெளியாட்கள்’ தடையின்றி நுழைவதைத் தடுக்கவும் அவர்கள் விரும்புகிறார்கள். அண்மைக்காலமாக இந்த ‘வெளியாட்க’ளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் சொல்கின்றனர்.

நிலம் மீதான உரிமை கிராமத் தலைவரின் மூத்த மகனுக்குச் செல்வதால், குடும்பத்தின் பிற ஆண்கள் புதிய நிலங்களுக்கு இடம்பெயர்ந்து கிராமங்கள் அமைத்துக்கொள்கின்றனர். இது குகி இனத்தின் பாரம்பரியம். இதனால் நிலம் சார்ந்த பிரச்சினைகளின் அழுத்தம் கூடுகிறது.

“இந்த அவநம்பிக்கை இம்மக்களிடையே ஆயுதமாக்கப்பட்டுள்ளது,” எனக் கூறும் நெப்ரம், “பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, துப்பாக்கிகள், போதைப் பொருட்களுடன் மனிதக் கடத்தலில் ஈடுபடும் சிறிய இனக்குழுக்களுக்குப் பல தசாப்தங்களாக டெல்லியில் ஆயுதங்களும் பயிற்சியும் அளிக்கப்பட்டது” என்கிறார்.

அதுமட்டுமல்ல. கடந்தாண்டு மாநில அரசு கௌப்ரு மலையையும் தங்ஜிங் மலையையும் மணிப்பூரின் பண்டைய வரலாற்று நினைவுச்சின்னங்கள், தொல்பொருள் இடங்கள், எச்சங்கள் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவித்தது. மெய்தேய் இனத்தினர் கௌப்ரு மலையைப் புனிதமாகக் கருதுகின்றனர். குகி இனத்தவரோ அரசு தங்கள் வாழிடங்களை ஆக்கிரமிப்பதாகக் கருதினர். இப்பிரச்சினையும் நிலம் தொடர்பான அழுத்தத்தைத் தந்தது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பகத் ஓயினம், “சில பழங்குடி நம்பிக்கைகள் தொடர்பாகவும் ஆக்கிரமிப்புத் தொடர்பாகவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இரு சமூகங்களுக்கிடையில் பகைமையும் கோபமும் அதிகரித்துவருகின்றன” என்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த வன்முறை குறித்து ஆய்வு செய்யாமல் மௌனம் காப்பதாக விமர்சிக்கப்படுகிறது. ஆளும் பாஜகவைச் சேர்ந்த பெரும்பான்மையான அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தலைநகர் டெல்லியில் கூடி, நிலைமையைத் தீர்ப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் உத்திகளை வகுத்துள்ளனர்.

டெல்லியின் நேரடி ஆட்சியை மாநிலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குகிகள் கோரியுள்ளனர். மேலும் தமது சமூகத்திற்கெனத் தனி நிர்வாகத்தையும் கோரியுள்ளனர். இது நாகர்களிடமிருந்து பின்னடைவுக்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது, இதே கோரிக்கையை அவர்களும் முன்வைக்கலாம். “எங்கள் சொந்த மண்ணில் சொந்த மக்களுடன் நிம்மதியாக வாழ்ந்துகொள்கிறோம். எங்களை நாங்களே ஆண்டுகொள்கிறோம். என்ன நடந்தாலும் இறுதியில் இந்த முடிவுதான் அமைதியைக் கொண்டுவரும்“ என்கிறார் குகி பழங்குடி தலைவர்கள் மன்றத்தைச் சேர்ந்தவரான மேரி ஹாக்கிப்.

மணிப்பூர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுபது உறுப்பினர்களில் பத்துப் பேர் குகிகள், பத்துப் பேர் கொண்ட பிரேன் சிங்கின் அமைச்சரவையில் மூவர் குகி சமூகத்தினர். “இரண்டு சமூகங்களுக்கிடையில் சில அரசியல், நிர்வாகத் தொடர்புகள் உள்ளன. இருப்பினும், அவர்களுக்கிடையில் வளர்ந்துவரும் அந்நியத்தன்மை அவர்களை மேலும் மேலும் பிரித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது” என்கிறார் குகி பத்திரிகையாளர் கேபி சோங்லோய்.

நம்பிக்கையின்மை தீவிரமான பிளவை ஏற்படுத்தியுள்ளது, இரு சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சியால் பொதுவான முடிவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வன்முறையில் தனது சகோதரனை இழந்த குகி கிராமவாசியான அலெக்ஸ் ஜாம்கோதாங் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில், “இது உள்நாட்டுப் போர் மட்டுமல்ல, அரசாங்கத்திற்கு எதிரானதொரு சண்டையும் கூட” என்கிறார்.

“பழங்குடிகளுக்குத் தன்னாட்சியை வழங்குவது பிரச்சினையைத் தணிக்கும் வழியாக இருக்கக் கூடும்” என்கிறார் ‘Insurgent Crossfire: North-East India’ நூலை எழுதிய சுபிர் பாமிக். அதற்கு உதாரணமாகத் திரிபுரா மாநிலத்தைச் சொல்கிறார். அங்கு மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பழங்குடியினராக அங்கீகரிக்கப்பட்டு, மாநிலத்தின் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பைத் ‘தன்னாட்சிப் பெற்ற மாவட்டக் கவுன்சில்’ மூலம் கூட்டாக ஆளுகின்றனர்.

நெப்ரம் உள்ளிட்ட சிலரோ பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் மறுவாழ்வுடன் கூடிய உண்மை – நல்லிணக்க ஆணையம் ஒன்றையும் கோருகின்றனர். என்ன இருந்தாலும், இரு இனங்களுக்கிடையிலான உரையாடலை முன்னெடுக்காத வரையில் மணிப்பூரில் பிரச்சினை தீரப் போவதில்லையெனச் சிலர் அஞ்சுகின்றனர்.

மணிப்பூரில் அமைதி என்பது எப்போதும் ஆபத்தானதாகத்தான் இருந்திருக்கிறது. சமீப காலங்களில் அமைதி என்பது இயல்பானதாக இல்லை என்கிறார் சடோக்பம். மேலும், “இதை இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தில் திணிக்கப்பட்டிருக்கும் அமைதி என்று நாங்கள் அழைக்கிறோம்” என்கிறார். இந்த நேரத்தில், சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இல்லை என்று தோன்றுகிறது, ஏனெனில் நீண்ட மோதலுக்காக இருபுறமும் தோண்டிக்கொண்டிருப்பது போல் தெரிகிறது. 1990களின் முற்பகுதியில் நாகாக்களுக்கும் குகிகளுக்கும் இடையிலான மோதல்கள் ஓராண்டு நீடித்ததை மக்கள் நினைவுகூர்கிறார்கள்.

“இது விரைவில் முடிவடையும் என்று நான் நினைக்கவில்லை. இரு தரப்பும் சோர்வடையும் வரை – அல்லது ஒரு தரப்பு ஆதிக்கம் பெறும்வரை தொடரும்” என்று இம்பாலில் உள்ள மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகிறார். “இது இன்னும் நீண்ட தொலைவு செல்லும்.”

(‘Manipur: Fears grow over Indian state on brink of civil war’ என்ற தலைப்பில் BBC இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger