பின்னிரவில்
பெய்யும் மழையின் சத்தத்தைக்
கேட்டவாறே
எனது இளமைப் பருவத்தை
நினைவுகூர முயல்கிறேன்-
அது வெறும் கனவுதானா?
மெய்யாகவே ஒருகாலத்தில்
நான் இளமையாக இருந்தேனா?
m
என் சொந்த ஊரில்,
இரு சகோதரர்கள்
நேரெதிர் குணங்களுடன்
இருக்கிறார்கள்
ஒருவரோ புத்திசாலி
பேச்சாற்றல் மிக்கவரும் கூட,
மற்றொருவர் அசடு
பெரும்பாலும் அமைதியாக இருப்பார்.
அசட்டையானவருக்கு
இவ் உலகத்தில்
எல்லாவற்றிற்கும் நேரம்
இருப்பதாகவே தெரிகிறது
புத்திசாலியோ
தனது வாழ்நாளைச்
செலவழிப்பதில்
எப்போதும் ஒழிச்சலின்றிக் காணப்படுகிறார்.
m
அழுக்கான இவ் உலகம்
தூய்மையானதாக
மாற வேண்டும் என்று
நான் கூறமாட்டேன்.
மாறாக
பள்ளத்தாக்கில்
பாய்ந்தோடும்
சிற்றோடை நீரில்
என்னை நான்
கழுவிக்கொள்வதோடு,
எனது உருவத்தின் பிரதிபலிப்பைச்
சரிபார்க்கவும் செய்கிறேன்.
m
கீழே கிராமத்தில்
குழலினதும்
முழவினுடையதும்
சப்தம்,
இங்கே மலையின் மத்தியிலோ எங்கும் பைன் மரங்களின் சலசலப்பு.
m
கிளைச் சாலைகளில்
இன்றைய யாசகம் முடிந்தது;
நான் ஹச்சிமன் சன்னதிக்கு அருகில் திரிகிறேன்
சில குழந்தைகளுடன் பேசுகிறேன்.
கடந்த வருடம்,
நான் ஒரு முட்டாள் துறவி;
இந்த ஆண்டும்
எந்த மாற்றமும் இல்லை!
m
வானத்திலிருக்கும்
நிலவினைச் சுட்டிக்காட்டுவதை நீங்கள் நிறுத்துங்கள்,
மேலும்
நிலவு பிரகாசிக்காத வரை
விரல் பார்வையற்றது.
ஒரு நிலவு,
ஒரு கவனக்குறைவான
சுட்டு விரல்,
இவை இரண்டும் வெவ்வேறா, ஒன்றா?
கேள்வி ஒரு சுட்டி
கற்கத் தொடங்கும் ஒருவர்
மூடுபனி போன்ற தடிமனான அறியாமையிலிருந்து விலக
அது வழிகாட்டுகிறது.
கூர்ந்து கவனியுங்கள்.
மர்மம் மென்மேலும் அழைக்கிறது:
நிலவு இல்லை,
விரல் இல்லை
அங்கே எதுவும் இல்லை.
m
ஆம்,
மரங்களுக்கும் செடிகளுக்கும் மத்தியில் வாழ்கிற நான் உண்மையிலேயே ஒரு மூடன்தான்.
தயவு செய்து மாயை மற்றும் ஞானம் பற்றி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள்
இந்த வயோதிகன்
தனக்குத்தானே புன்னகைக்க விரும்புகிறான்.
நான் மெலிந்த கால்களுடன் நீரோடைகளில் அலைந்து திரிகிறேன்,
நல்ல வசந்த பொழுதினில்
ஒரு பையைச் சுமந்து செல்கிறேன்.
அதுதான் என் வாழ்க்கை,
இவையன்றி
இவ்வுலகம் எனக்கெதுவும் கடன்பட்டிருக்கவில்லை.
m
நான் இன்றே
அங்கு செல்ல வேண்டும்…
நாளைக்கென்றால்
பிளம் பூக்கள் சிதறிப்போய்விடும்.
m
எனது குடிசையைவிடவும் உயரமாகக்
கொடிகளையும் பூச்செடிகளையும் வளர்த்தவன்
இப்போது தலைவணங்குகிறேன்
காற்றின் விருப்பத்திற்கு.
m
என் கவிதைகளைக்
கவிதைகள் என்று
அழைப்பது யார்?
என் கவிதைகள்
கவிதைகளல்ல.
என் கவிதைகள்
கவிதைகளல்ல என்பது உங்களுக்குத் தெரிந்தால்தான்
நாம் ஒன்றாகக் கூடி கவிதைகளைக் குறித்துப் பேசமுடியும்.
ரியோகன் (1758 – 1831)
ஜப்பானிய இலக்கியத்தில் முதன்மையான ஜென் கவிஞர்களுள் ஒருவராக அறியப்படும் ரியோகன், கி.பி.1785 இல் ஜப்பானின் வட பகுதியிலுள்ள எச்சிகோ மாகாணத்தில் ஒரு கிராமத் தலைவரின் மகனாகப் பிறந்தார்.
ரியோகனின் தந்தை ஹைக்கூ கவிதைகள் எழுதியதோடு வெற்றிகரமான வணிகராகவும் விளங்கினார். ரியோகன் ஜப்பானிய சீன இலக்கியத்துடன் மதபோதனையையும் எழுத்துக் கலையையும் பயின்றார்.
ரியோகன் தனது பதினெட்டாவது வயதில் ஜென் மாஸ்டர் கோகுசெனைச் சந்தித்து அவருடன் தமாஷிமாவில் உள்ள என்ட்சு-ஜி கோயிலுக்குச் சென்றார், அங்கு அவர் புத்த துறவியானார். ரியோகன் தனது துறவறப் படிப்பில் சிறந்து விளங்கினார். பிறகு கோகுசென் இறந்தபோது மடத்தின் தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், அந்தப் பதவியையும் துறவறத்தையும் நிராகரித்த ரியோகன், அதற்கு மாறாக ஜப்பானின் கிராமப்புறங்களில் அலைந்து திரிந்து, பிச்சையெடுத்து வாழ்ந்ததோடு கவிதைகளும் எழுதிவந்தார். இறுதிகாலத்தில் குகாமி மலையின் அடிவாரத்திலுள்ள கோகோ-ஆன் என்றழைக்கப்படும் துறவியர் இல்லத்திற்குச் சென்றவர், அங்கு தனது மறைவு வரையிலும் வாழ்ந்தார்.