கனி காக்காவும் தேத்தண்ணியும்

ஷேக் பீர்முகம்மது

“மீயாச்சா… லே… மீயாச்சா…”

“யாரு…?”

“நாந்தான்… காவன்னா”

“அவன் குளிச்சிட்டு இருக்காமா… நீ வீட்டுக்குள்ள வாயேன்” அழைத்தாள் மீயாச்சாவின் உம்மா.

வண்டியைவிட்டுக் கீழே இறங்கி, ஸலாம் சொல்லிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தேன்.

பதில் ஸலாம் சொல்லிக்கொண்டே… “ஏ பேரப்புள்ள எத்தன வாட்டிச் சொல்லிருக்கேன், அவன அப்டி கூப்பிடாத வாய் நிறஞ்சமாரி மீராசாஹிபுன்னு கூப்டுனு. அதென்ன மீயாச்சா குத்தவச்சாச்சானு.” மீரம்மா கண்ணா வெற்றிலை இடித்துக்கொண்டே சடைந்துகொண்டாள்.

“கண்ணாக்குக் கோவத்த பாரேன்… இப்போ ஏம்பேரு காதர் முகைதீன். எவன் அந்தப் பேரச் சொல்லிக் கூப்பிடுறான். ஊரு முழுக்க காவன்னா காவன்னானுதான் கூப்டுறானுவோ. இன்னும் சொல்லப்போனா நானே என்ன காவன்னானுதான் சொல்றன். அத போலத்தான் மீயாச்சாவும், பேர்ல என்ன கண்ணா இருக்கு.” கண்ணா வாஞ்சையோடு திரும்பிக்கொண்டாள்.

“எப்பவும் வாப்மாவுக்கு, வர்றவங்க போறவங்க கிட்டல்லாம் இதேதான் சோலி. ஏன்னா… அவங்க வீட்டாளோட பேர எனக்கு வச்சிருக்குல்ல.” மீயாச்சா தலை துவட்டியபடி சொல்லிக்கொண்டே வந்தான். சற்று நேரத்தில் பேண்ட் சட்டைக்கு மாறிய மீயாச்சாவும் நானும் வெளியே கிளம்பினோம்.

“ரெண்டு பேரும் ஏதாவது பசியாறிட்டுப் போங்கலே…” அடுப்படியிலிருந்து உம்மாவின் குரல் ஒலித்தது. “அவசர சோலியா போறோம், அங்க ஏதாவது குடிச்சிக்கிறோம்.” வெளியேறி வண்டியில் புறப்பட்டோம்.

மீயாச்சா சிறு வயதிலேயே தந்தையை இழந்தவன். வீட்டில் அவனும் உம்மாவும் வாப்மாவும் மட்டும்தான். முப்பத்தைந்து வயதாகியும் அவனுக்குத் திருமணம் ஆகவில்லை, உம்மா எலிமெண்டரி ஸ்கூலில் சத்துணவு டீச்சர். மீயாச்சா மிக நேர்த்தியான வேலைக்காரன். ரெக்ஸின் பேக் உற்பத்திக்காக ரெக்ஸினை நுட்பமான முறையில் விதவிதமான மாடலில் கட்டிங் செய்யக் கூடியவன், புதுப் புது ரகங்களை அறிமுகம் செய்து, மார்க்கெட்டைப் புதுப்பொலிவுடன் தன் கைக்குள் வைத்துக்கொள்பவன். அளவுக்கு அதிகமாகச் சம்பாதிக்கவும் மாட்டான், சேமிக்கவும் மாட்டான். அன்றாடம் அவனுடைய பிரதான உணவு, இரண்டு கட்டு செய்யது பீடியும், ஏழெட்டு டீயும்தான். விருப்பப்பட்டால் கொஞ்சம் சாப்பிடுவான்.

கையில் முதலீடு கிடையாது. யார் கீழும் வேலை செய்யமாட்டான். பணம் இருக்கும் ஆசாமியிடம் வாய் ஜாலம் காட்டி, அவர்களை முதலாளியாக உருவாக்குவான்.தொழில் சம்பந்தமாக அவனின் முடிவே இறுதியானது. அவன் உருவாக்கிய முதலாளிக்கு, முதலீடு செய்வதைத் தவிர எந்த வேலையும் கிடையாது. வேலை நடக்கும் இடத்தில் பணம் போட்டவன் எதாவது ஆலோசனைச் சொல்லி விட்டால், போட்டது போட்டபடி கோபம் தலைக்கேறி வெளியேறிடுவான். அடுத்தவன் ஆலோசனை அவனுக்குச் சரிபட்டு வராது. கடைசியாக மூன்று நாட்களுக்கு முன்னும் அவன் தலைக்குப் பித்தேறி இப்படித்தான் நடந்தது.

வண்டி மெயின் ரோட்டுக்குத் திரும்பியதும் பின்னுக்கு இருந்த மீயாச்சா, “லே… காவன்னா கைல சுத்தமா காசில்ல. தென்காசிக்காரன் ஆர்டர் தந்து மூணு நாளாச்சி, இன்னும் ஒரு வாரத்துல டெலிவெரி குடுக்கணும். உடனே ஒரு முதலாளிய உருவாக்கி ஆகணும்லே.”

“நேர நவாப் கடைக்கு வண்டிய உடுலே, ஒரு டீய குடிச்சாதான் மண்ட லெகுவாகும்” என்றான்.

ஏர்வாடி பஜாரில் டீக்கு ஒரு நூற்றாண்டாகப் பேர்பெற்ற கடை, நவாப் கடை. மிட்டாய் கடையுடன் சேர்ந்த டீக்கடை. அந்தக் கடையில் கால் நூற்றாண்டாக, டீ மாஸ்டராக இருப்பவர் உதுமான்கனி. அளவான உயரம், கருத்த நிறம், கனத்த உடம்பு, கனிவான பார்வை, நாங்கள் அவரை கனி காக்கானுதான் கூப்பிடுவோம். கனி காக்கா, மீயாச்சாவுக்குத் தாய்மாமன் முறை. என்ன காரணமோ, இவன் அவரிடம் சிறு வயதிலிருந்தே முகம் கொடுத்துப் பேச மாட்டான். இருந்தும், அவனுக்கு அவர் போடும் டீ மேல் அப்படி ஒரு அலாதி பிரியம். அவனுக்கு மட்டுமல்ல ஊரிலுள்ள அநேகப் பேருக்கும், அந்த டீ மேல் அளவு கடந்த அவா இருந்தது.

எனக்கு ஹோட்டலில் டீ குடிக்கப் பிடிக்காது. பீடி பழக்கமும் கிடையாது. இருந்தாலும், நவாப் கடை அல்வாவுக்கும், மிச்சருக்கும் அடிமைப்பட்டிருந்தேன். தினம் மாலை ஐந்து மணிக்குச் சுடச்சுட ஐம்பது கிராம் அல்வாவை வாங்கி, வாழை இலையில் என் முன் வைக்கும்போது, எனது இதயம் இடம் மாறி அந்த இலையில் துடிப்பதைப் போல் உணர்வெழும். அங்குள்ள பெஞ்சில் அமர்ந்து சாப்பிட்டால், அல்வாவின் இனிப்பு மங்க, டீ குடிக்க ஏதுவாக, ஒரு கை குத்து விலையில்லா மிச்சரை அதே இலையில் தருவார்கள் .

வண்டியை, நவாப் கடை அருகில் நிறுத்தினோம். கடைக்குள் சில பேரும், வெளியில் சில பேரும் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள்.

மீயச்சாவுக்குக் காசோ, வேலையோ இல்லாத காலங்களில் இந்த டீக்கடையை, அவனது திறந்தவெளி அலுவலகமாக மாற்றிக்கொள்வான்.

 “காவன்னா… எனக்கொரு டீ சொல்லுல”

 “உனக்குக் குடிக்க நீயே சொல்லு” என்றேன்.

ஒருவித தயக்கத்தோடு சென்று, டீ பாய்லரைப் பார்த்து, ‘ஒரு டீ’ என்றான். கனி காக்கா என்னைப் பார்த்துப் புன்சிரிப்போடு, அவனுக்கான டீயைப் போடத் தொடங்கினார்.

அருகே தரையில், உமிழ்ந்த எச்சிலில் ஈக்கள் மொய்ப்பதை, டீ குடித்தபடியே, ஒருவர் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். புகைத்துப் போட்ட சிகரெட் துண்டிலிருந்து எழும் புகையைப் பார்த்தவாறு, மற்றொருவர் டீயைக் குடித்த வண்ணம், நிலை குத்தி நின்றிருந்தார். இப்படியே டீ குடிக்கும் ஒவ்வொருவரும் அக நிலைக்குள் ஆழ்ந்திருப்பதை என்னால் பார்க்க முடிந்தது.

அவனுக்கான டீயை கனி காக்கா போடும்போது அவரின் கையையே கவனித்துக்கொண்டிருந்தான். கிளாஸில் வெந்நீர் பிடித்தார். இவன் கண் சமிக்ஞை செய்ததும், வெந்நீர் நின்றது. அதுபடியே பாலும், டிக்காசனும், சீனியும் அவன் கண் சமிக்ஞை அளவின்படி நின்றது. அவன் கண்ணும் அவர் கையும் ரகசிய உரையாடல் நிகழ்த்தியதை நான் கண்டேன். பின்னர், டீயை ரெண்டு முறை ஆற்றி நுரை பொங்க திண்டில் வைத்தார். ஈக்களெல்லாம் பறந்தோடின.

 “காவன்னா… நான் டீய குடிக்கேன், நீ வடைய திண்ணு” என்றான்.

எப்போதெல்லாம் கனி காக்காவின் டீயை வாயில் வைத்து உறிஞ்சி ஒவ்வொரு மிடறும் அவனுள் செல்கிறதோ, அக்கணமே அவனின் புலன்களெல்லாம் தெளிவடைந்து, ஒரு ஞானியைப் போல் பேசத் தொடங்கிவிடுவான் மீயாச்சா. டீ இல்லாமல் எந்த வேலையும் ஓடாது, அவன் உயிர் எப்போதும் அந்த டீக்குள் இருப்பது போல் உணர்வான்.

மீயாச்சா, பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுத் துளாவி பீடி இல்லாததை உணர்ந்து, ரோட்டில் சற்றுத் தூரத்தில் சைக்கிளில் போனவரை ‘ஆப்தீன் காக்கா…, ஆப்தீன் காக்கா…’ என்று கத்திக் கூப்பிட்டான்.

தட்டுத் தடுமாறி அருகில் வந்து “லே எழவெடுத்துப் போவானே, அப்டி என்னலே தல போற காரியம்”

“காரியம் ஒண்ணும்மில்ல… காக்கா டீ குடிக்கீளா…”

ஆப்தீன் காக்கா நிதானமடைந்து, “வேணாம்லே இப்பத்தான் பாச்சா ஓட்டல்ல பசியாறிட்டு வாரேன்”

“அதுக்கென்ன காக்கா, இந்தக் கடை டீய எப்ப வேணுன்னாலும் குடிக்கலாம்” என்றான் மீயாச்சா.

“மூத்தவனே… எனக்கே சொல்றியோ… நீ பொறக்க முன்னாலேயே எனக்குத் தெரியும்லே” என்றார் ஆப்தீன் காக்கா.

 “ஆப்தீன் காக்காக்கு ஒரு டீ” டீ பாய்லரைப் பார்த்துச் சொல்லிவிட்டு,

“காக்கா பீடி வச்சிரிக்கீளா…” என சன்னக் குரலில் கேட்டான் மீயாச்சா.

 “இந்த எழவ கேக்கவால உயிர் போற மாரி கத்துனே” சொல்லிக்கொண்டே, இடுப்பிலிருந்து செய்யது பீடி ஒன்றை எடுத்து மீயாச்சாவிடம் நீட்டினார். டீ குடித்துவிட்டு காக்கா விடைப்பெற்றார்.

“லே ஆப்தீன் காக்கா டீக்கும் என் டீக்கும் காசு குடுத்துருல”

சற்றுக் கோபமான நான், “ஓன் டீக்குச் சரிலே, அவருக்கு நா ஏம்பல குடுக்கணும்”

“நப்பியா இருக்காதல… வாழ்க்கைல எப்பவும் ஹேப்பியா இருக்கணும்.” சிரித்தபடி சொன்னான் மீயாச்சா.

“இங்கப் பாரு மீயாச்சா.., இப்போ நீ சொன்னதுக்காக அவரு குடிச்ச டீக்குக் காசு குடுக்கற, அடுத்தவாரம் அவரு கடையில முடிவெட்டிட்டு, இந்த டீ காச கழிச்சிட்டுதான் மிச்ச காச குடுப்பேன் பாத்துக்கோ.”

“அது கெடக்கெட்டு, அப்ப பாத்துக்கலாம்”

“மணி பதினொண்ணாச்சி, மொதலாளி ஆவ எவனுக்கும் ஆச இல்ல போல” முணுமுணுத்தபடி, மீயாச்சா என்னைப் பார்த்தான்.

மீயாச்சாவை முழுதாக நம்பியவருக்கு வியாபாரத்தில் லாபம் ஈட்டி கொடுப்பான். அவனைப் பண அதிகாரத்தோடு கையகப்படுத்த நினைப்பவருக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவான். இரண்டும் மாறி மாறி நடக்கும். அதுபோல் ஒரே குதிரையின் மேல் வியாபார பயணம் செய்ய மீயாச்சா எப்போதும் விரும்புவதில்லை.

மீயாச்சா, கனி காக்காவின் கண் மறைவாக நின்று தம் அடித்தவாறே தனது நோக்கியா செல்போனை நோண்டிக்கொண்டிருந்தான். சற்று நேரம் ரோட்டோரம் பார்வையைக் குவித்து, தூரத்தில் வரும் ஒரு உருவச் சாயலைக் கண்டு யூகித்துக்கொண்டான்.

“சப்ப பஷீரு…”

“லே… காவன்னா… இவன் எப்பம்ல ஊருக்கு வந்தான்”

எட்டாந்தெரு பஷீர் எங்களைக் கண்டு அருகில் வந்து, ஸலாம் சொல்லி நலம் விசாரித்தான்.

“ஆமா…. நீ எப்போ சவுதியிலிருந்து வந்தே?”

“நேத்து சாயங்காலம் மாப்ளே”

“ஆளே சோந்தமாரி இருக்க, உடம்பு கிடம்பு சரியில்லையா?” மீண்டும் ரெண்டு டீ சொன்னேன்.

மூவரும் காற்றோட்டமாகச் சற்றுத் தூரமாக நின்று ஊர் கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம். டீ வந்து ஒரு மடக்கு உள்ளே போனதும் பஷீர் உற்சாகமாகி கண்ணை விரித்துக்கொண்டு என் பக்கம் திரும்பிக் கேட்டான்,

“இங்க இப்பவும் கனி காக்காத்தான் டீ மாஸ்டரா?”

“ஆமா…” என்றேன்.

“உனக்கு எத்தன நாள் லீவு, எப்ப மாப்ளே திருப்பிப் போணும்?”

“இனி போற மாரி இல்ல மாப்ளே, இங்கயே ஒரு பொழப்பப் பாக்க வேண்டியதுதான். இக்கரைக்கு அக்கரைப் பச்சை. சம்பாரிச்சு சம்பாரிச்சு வாழ்க்கைல என்னத்தக் கண்டோம்… வாலிபமும் வயசும் போனதுதான் மிச்சம்.”

பஷீர் சொன்னதும் மீயாச்சா என்னைப் பார்த்து நம்பிக்கை ஒளியோடு புன்னகைத்தான்.

“ஆமா… வெளிநாட்டுல இருந்து வந்தவுடனே எல்லாரும் சொல்ற வார்த்ததான். போன தடவ வந்தப்ப கூட இதத்தான் சொன்னே… நீ திருப்பி போவலியா? ஏன்னா நம்ம கெரவம் அப்டி. நம்ம ஊர்லே உண்டாக்கவும் அனுபவிக்கவும் அழிக்கவும் ஆயிரமாயிரம் செல்வம் கொட்டிக் கெடக்கு மாப்ளே…, அதுல ஒண்ணுதான் நாம குடிக்கிற இந்த டீயும்.”

“நெசமாத்தான் மாப்ளே சொல்றேன், ஒனக்குத் தெரிஞ்ச ஒரு பொழப்பிருந்தா சொல்லேன், சேந்து பண்ணுவோம்.”

“பொழப்பு இருக்கு… நீ ஒத்து வந்தா பண்ணலாம்.”

எதிரே வந்த 67 பாபநாசம் பஸ்ஸைப் பார்த்தவாறே, நிச்சயமா பண்ணுவோம், களக்காட்ல இருக்க சாச்சி வீட்டுக்குப் போறேன். பொறவு நாலு மணிக்கு இங்கனயே பாப்போம்.” குடித்த டீக்குக் காசு கொடுத்துவிட்டு ஸலாம்கூறி, பத்தடி தூரமிருந்த பஸ் ஸ்டாப்பில் வந்து நின்ற பஸ்ஸில் ஏறிப்போனான்.

“காவன்னா… இவன் நமக்குத் தேறுவானா? இல்ல தவறுவானாலே?”

“தேறுனா நமக்கு நல்லது, தவறுனா அவனுக்கு நல்லது…” என்று சிரித்தேன். மீயாச்சா முறைத்தான்.

எதிரே ரோட்டைத் தாண்டி இருந்த பெட்டிக்கடையை நோக்கி நாங்கள் நகர்ந்தோம். டீ குடித்தவுடன் பீடி குடிக்கலைனா மீயாச்சா மண்டைக்குக் கிறுக்குப் பிடித்துவிடும்.

“மொய்தீன் காக்கா ஒரு கெட்டு செய்யது பீடி குடுங்கோ, பைசா பொறவு தாறேன்.”

“இதோட ரெண்டு கெட்டு பீடியாச்சி தம்பி.”

பெட்டிக்கடையில் மீயாச்சா நட்சத்திர வாடிக்கையாளன், அவனை நம்பி ஐந்து கட்டுப் பீடிக்கு மேல் கடன் தரமாட்டார் மொய்தீன் காக்கா.

பீடிக்கட்டை வாங்கி, கைகளுக்கிடையில் வைத்துச் சுருட்டித் தேய்த்துக் கட்டைப் பிரித்து, ஒவ்வொரு பீடியாக உருவி உருவி சோதித்தான். அதிலிருந்து, இரண்டு பீடிய எடுத்து முணுமுணுத்தபடி ஒடித்துப் போட்டான்.

“இதுல இருக்கதே பதினோரு பீடி, அதுல ரெண்டு பொக்கு வேற, எப்பவுமே இப்படித்தான்…. இந்த ஏமாத்து வேலைய வியாபார வித்தேன்னு மெச்சுவானுவோ” கடிந்துக்கொண்டே மீயாச்சா ஒரு பீடியைப் பற்ற வைத்தான்.

“டூப்ளிகேட்டா இருக்குமோ?” என்றேன்.

பீடியை ஒரு இழுப்பு இழுத்து, புகையை வெளியே விட்டபடி….

“பீடிக்கெட்ட பிரிக்காமலே கையில வெச்சி, ரெண்டு தடவ உருட்டித் தேச்சா தெரிஞ்சிரும்லே. இன்னுஞ் சொல்லப்போனா, குடிக்கிற பீடில இழுக்குற கடைசி இழுப்புல தெரியும் அது ஆவுமா, ஆவாதா, சொகமா, சோகமானு… உனக்குச் சொன்னா புரியாதுல, அதுவொரு போத.”

“ஓங்கிட்ட கஞ்சா அடிகிறவன் தோத்தான் போ”

“போத கஞ்சாலையோ பீடிலையோ இல்ல, நாம உணர்றதுலதான் இருக்கு. இங்க இறையனுபவம் கூட ஒரு போததாம்ல.”

மீண்டும் ரோட்டைத் தாண்டி நவாப் கடைக்கு வந்தோம்.

“காவன்னா… மணி பன்னெண்டு… கடசியா ஒரு டீய குடிச்சிட்டு, மத்தியானம் சாப்பாட்டுக்கப்பறம், கொஞ்ச நேரம் கட்டைய சாச்சிட்டு வருவோமா…?”

மீயாச்சா, மீண்டும் பாய்லரைப் பார்த்து ஒரு டீ என்றான். வந்த டீயைக் கையில் எடுத்துக்கொண்டு, கடையின் ஓரமாக நின்று ஒரு பீடியைப் பற்றினான். ஒரு மடக்கு டீயும், ஒரு இழுப்பு பீடியுமாகக் குடித்துக்கொண்டிருந்தான். அவன் ஆழ்ந்த யோசனையில் இருந்தால் மட்டுமே ஒரே கணத்தில் குடிக்கவும் இழுக்கவும் செய்வான். சட்டென, ஏதோ முடிவுக்கு வந்தவன் போல், தலையை ஆட்டிக்கொண்டே கடைசி மடக்கு டீயையும் கடைசி இழுப்பு பீடியையும் ஆனந்தமாகக் குடித்து முடித்தான்.

“காவன்னா… நீ இன்னைக்கு ஏ ஊட்ல சாப்டு, நாலு மணிவாக்குல இங்க ஒண்ணா வருவோம்.”

வண்டியை வீட்டின் ஓரமாக நிழலில் நிறுத்திவிட்டு, ஸலாம் சொன்னபடியே அவன் வீட்டினுள் நுழைந்தோம்.

பதில் ஸலாம் சொல்லிவிட்டு, “வேனா வெய்யில்ல எங்க போய் சுத்திட்டு வாறியோ, மூஞ்செல்லாம் பாரு கருத்துப்போய் கெடக்கு. சொலையா… புள்ள வந்திருக்கானுவோ பாரு, அவங்களுக்குச் சோத்த வை” என்றாள் கண்ணா.

பாயில் அமர்ந்த சற்று நேரத்தில் சுடச்சுடச் சோறும், பருப்பும், ரசமும், பொரித்த மொரக் கருவாடும் எங்கள் முன் கமகமத்தது. இரண்டு பேர் தட்டிலும் உம்மா சோறு போட்டாள். கொலைப்பசியில் சாப்பிட ஆரம்பித்தேன். மீயாச்சா சோற்றில் கையை வைத்துப் பிசைந்தபடி வீட்டுத் தரையை உற்று நோக்கிக்கொண்டிருந்தான். நான் வயிறாரச் சாப்பிட்டு முடித்ததும், அவன் இரண்டு பிடி சோறு பேருக்குக் கொத்திவிட்டு எழுந்துக்கொண்டான். மணி இரண்டு.

இருவரும் பாயில் சற்றுச் சாய்ந்தோம். அவன் தூக்கம் வராமல் புரண்டான். “காவன்னா… காவன்னா…”னு சத்தம் கேட்டு விழித்தேன். மணி மூன்றரை,

“லே… நேரமாச்சு போவணும், எந்திரிச்சி வா…”

“நாலு மணிக்குத்தானே”

“ஒரு வேல இருக்கு, சீக்கிரம் கிளம்பு”

முகத்தைக் கழுவிவிட்டு, வண்டிச் சாவியை எடுத்து வெளியே இறங்கினேன். அதற்குள் மீயாச்சா வண்டி அருகில் நின்றிருந்தான்.

“தேத்தண்ணி ஏதாவது குடிச்சிட்டுப் போங்கலே…” மீரம்மா கண்ணா சொன்னாள்.

“பொறவு குடிச்சிக்குறோம் கண்ணாஞ் நேரமில்ல.” வண்டியைக் கிளப்பினோம்.

“காவன்னா எவ்ளோ ரூவாலே வச்சிருக்கே?”

“நூறு ரூவா இருக்கு”

“நேர செய்யது ஸ்டோருக்குப் போ…”

வண்டி, கடை வாசலில் நின்றது. ரூபாயை வாங்கிக்கொண்டு கடைக்குள் போனான். பின்னாடியே நானும் போனேன்.

“அன் ரூல்ட்ல பத்துப் பேப்பர், ரெண்டு ரீபில் பேனா, ரெண்டு பென்சில், ரெட்ல ஒண்ணும் பச்சைல ஒண்ணும் ஸ்கெட்ச் குடுங்க காக்கா. மொத்தம் எவ்ளவு ஆச்சி”

“நாப்பத்தஞ்சு ரூவா” என்றார் காக்கா.

மீதியை என்னிடம் தந்தான். நான் ஒன்றும் அறியாதவனாய் குழம்பிப் போய் அவனை ஏறிட்டு, “என்னலே இங்கெ நடக்குது…” என்றேன்.

“மொதல்ல டீக்கடைக்குப் போல, சொல்றேன்.”

Illustration by Sanny Van Loon

 

வண்டி டீக்கடையில் நின்றது. மணி மூணே முக்கால். கடையில் கூட்டமே இல்லை. வாங்கிய பேப்பர், பேனாவைக் கையில் வைத்தபடியே கனி காக்காவிடம் டீ ஒன்றை வாங்கி, உள்ளே இருவரும் பெஞ்சில் அமர்ந்தோம். பின்னால் அல்வா தயாராகிக்கொண்டிருப்பதை வாசனை உணர்த்தியது. மீயாச்சா, யாரையோ எதிர்பார்த்திருப்பது போல் டீயைக் குடித்துக்கொண்டிருந்தான். கடைசி மடக்கு குடித்துமுடிக்கவும் பஷீர் வரவும் சரியாக இருந்தது. மணி நான்கு.

ஒருவருக்கொருவர் முகமன் சொல்ல முதலில் பேச்சை ஆரம்பித்தான் மீயாச்சா. எப்போதும் வாய் ஜாலம் காட்டி முதலாளியை உருவாக்குபவன் இந்த முறை பேச்சைக் குறைத்துக்கொண்டு வேறு வழியைக் கையாண்டான். எனக்கும் இது புதிதாக இருந்தது. பஷீரைப் பெஞ்சில் அமரவைத்துக் கையிலிருந்த பேப்பரை எடுத்துப் பேனா, பென்சில், ஸ்கெட்சை வைத்து, பெருசும் சின்னதுமாகத் தத்ரூபமாகத் தான் ஆர்டர் எடுத்துவந்த ரெக்ஸின் பேக்கை விதவிதமாக வரைந்து, அதில் வரும் இலாப நட்டத்தையும் தனியாக எழுதி தெளிவாகக் காட்டினான். பஷீரும் நானும் வாயடைத்துப் போனோம்.

 “கனி காக்கா ரெண்டு டீ போடுங்கோ” என்று உற்சாகமாய்ச் சொன்னேன்.

மணி ஐந்து. கடைக்குள் கூட்டம் வர ஆரம்பித்தது. அல்வாவுக்கும் மிச்சருக்குமான ரசிகர்கள் கூட்டம். நானும் அமர்ந்து அல்வாவையும் மிச்சரையும் சாப்பிட்டேன். கனி காக்கா பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தார். அவருக்குக் காலையை விட மாலையில்தான் வேலை அதிகம். நின்றுகொண்டே வேலை செய்வதால் அவரின் கால் இரண்டும் வீங்கி இருந்தன.

மீயாச்சாவும் பஷீரும் பேசிக்கொண்டே வெளியே வந்து டீயைக் குடித்தார்கள்.

கடையிலிருந்து நானும் வெளியே வந்தேன். இருவரும் வியாபார ஒப்பந்தத்துக்கு உடன்பட்டதை அவர்களின் முகங்கள் எனக்கு உணர்த்தின. நாங்கள் குடித்ததுக்கும் தின்றதுக்கும் காசு கொடுத்துவிட்டு, பஷீர் ஸலாத்தோடு விடை பெற்றான். மீயாச்சா ஒரு பீடியைப் பற்ற வைத்தான்.

“உனக்குப் படமெல்லாம் வரைய தெரியுமால? நீ படிக்கும் போதெல்லாம் இப்படி இல்லியேல, கொஞ்ச நேரத்துல என்னா ஒரு வித்தயக் காட்டிட்ட”

புகையைப் பக்கவாட்டில் விட்டபடி மீயச்சா சொன்னான்,

“பதினஞ்சு வருசத்துக்கு முன்னால மெட்ராஸ்ல சினிமா பேனர்ல ரஜினி, கமல், விஜய், அஜீத்னு வரஞ்ச கையில இது. இதல்லாம் எம்மாத்ரம். நீ அப்பப்போ வந்துட்டுப் போறவனாச்சே, கிட்டே இருந்தாத்தான் ஒரு சில விசயமெல்லாம் புரியும்.”

மீயாச்சா மறுபடியும் ஒரு டீய வாங்கிக் குடிக்க ஆரம்பித்தான்.

 “நாளைக்கு சுபுஹூ தொழுதுட்டு இங்கன வா, பஷீர் பணம் தருவான், நாளையில இருந்து வேலைய ஆரம்பிக்கணும்.”

மறுநாள் காலை தொழுகை முடித்து ஐந்தரை மணிக்கு நவாப் டீக்கடைக்கு வந்தோம். பஷீரும் வந்தான். ஆறாவது தெரு இமாம் மட்டும் கனி காக்கா கையால் டீ வாங்கிக் கனிவோடு குடித்து முடித்துத் தூரமாகப் போய்க்கொண்டிருந்தார். பஷீர் இரண்டு டீயைச் சொன்னான். டீக்கடைக்கு உள்ளே பெஞ்சில் அமர்ந்தோம். மீயச்சாவிடம் பஷீர் ஐநூறு ரூபா கட்டு ஒன்றைக் கொடுத்தான். எண்ணி சரிபார்த்துப் பேண்ட் பாக்கெட்டில் வைத்தான் மீயாச்சா. நாங்கள் வெளிய வந்ததும், வழக்கத்தை விட திடீரென டீக்கடையில் கூட்டம் சேர்ந்தது.

“என்ன சாச்சா, சம்பக்கட பக்கம் ஆளேயே காணல” மைக்கேல் அண்ணன் கேட்டார்.

“நேத்து தெருல பவுளி அக்கா கருவாடு கொண்டுவந்து வீட்ல வாங்குனமே…” என்றான் .

“இன்னைக்கு நல்ல மீனெல்லாம் வந்திருக்கு, வா சாச்சா”

“ஆமா… என்ன இவ்வளவு கூட்டம்?

“அதுவா… இன்னைக்குக் கோயமுத்தூர்ல செம்மொழி மாநாடாம், ரெண்டு வேன்ல போறாங்களாம். அதான் இப்டி கூட்டம்” என்றார் மைக்கேல் அண்ணன்.

மீயாச்சா பீடியைப் பற்ற வைத்தான். மூவரும் கூட்டாக மீயாச்சா தலைமையில் வேலையை ஆரம்பித்தோம். ஓர் இடத்தை வாடகைக்குப் பிடித்து, ரெக்ஸின் பேக்கிற்குத் தேவையான இதரப் பொருட்களையெல்லாம் கொள்முதல் செய்து, டீயும் பீடியும் கொடுத்த உத்வேகத்தில் உற்பத்தி செய்து, ஒருவாரத்தில் தென்காசிக்காரனுக்குச் சொன்னபடி மீயாச்சா டெலிவரி செய்து வியாபாரத் திறமையைத் தக்கவைத்துக்கொண்டான். ஈட்டிய இலாபத்தில் பஷீருக்கு உரியதைக் கொடுத்தான். அவனுடைய லாபத்திலிருந்து எனக்குரியதைத் தந்தான்.

இலாபமடைந்த பஷீர், மறுநாள் மௌனமாக அடுத்த வியாபாரத்துக்கு இசைந்தான். மீயாச்சா, அடுத்ததாக மதுரைக்குப் போய் ஆர்டர் எடுக்கத் திட்டமிட்டான். என்னையும் கூட அழைத்துப் போவதாகச் சொன்னான். ஆலோசனைப்படி அடுத்த நாள் ஆறு மணிக்கு இங்கிருந்து புறப்படலாமென உறுதியாயிற்று.

இரண்டு நாட்களுக்கான துணி மணிகளைப் பேக்கில் எடுத்துக்கொண்டு காலையில் இருவரும் நவாப் கடையில் சங்கமித்தோம். கனி காக்கா அன்று விடுப்பு. வேறொரு மாஸ்டர் மீயச்சவுக்கு டீ போட்டுக் குடுத்தார். இரண்டு மடக்குக் குடித்துவிட்டு முகத்தைச் சுளித்தபடி அப்படியே தூரமாக வைத்துவிட்டான். பீடி இழுத்துக்கொண்டே அங்கே பஸ் வருவதைக் கண்டு டீக்குக் காசு கொடுத்துவிட்டு நானும் மீயாச்சாவும் கிளம்பினோம்.

மதுரைக்கு மதியம் போய் சேர்ந்தோம். கூடுமான வரையில் அன்றே ஆர்டர்களை எடுத்து முடித்தோம். மீயாச்சா டீ குடித்த இடத்திலெல்லாம் சண்டைப் போட்டான். அன்றிரவு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான். தாய்ப்பாலுக்கு ஏங்கும் குழந்தையைப் போல அவன் ஊரையும் கனி காக்கா டீயையும் தேடுவதை உணர்ந்தேன். மீதி ஆர்டரை மறுநாள் மதியத்துக்குள்ளேயே எடுத்து முடித்து மூன்று மணிக்குள் ஊர் வந்து இறங்கினோம்.

 “நாக்கு ரெண்டு நாளா செத்துக் கெடக்குல. மொதல்ல ஒரு டீய குடிக்கணும்” டீக்கடைக்கு வந்தோம். அன்றும் கனி காக்கா விடுப்பில் இருப்பதாகச் சொன்னார் கடை முதலாளி.

அவன் முகம் சுருங்கி, மண்டைக்கு மேலும் கிறுக்குப் பிடித்தது.

வீட்டுக்குப் போனால், வீடு பூட்டியிருந்தது. வீட்டு வாசலில் அமர்ந்தோம். பீடியைப் பற்ற வைத்து, இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு விரக்தியோடு நசுக்கித் தரையில் எறிந்தான். அஸர் தொழுகைக்காகப் பாங்கு சொல்லப்பட்டது. சற்று நேரத்தில் உம்மாவும் கண்ணாவும் வந்தார்கள்.

“பசி உயிர் போவுது, சோடி போட்டு எங்க போனியோ?”

வீட்டைத் திறந்து பாயைப் போட்டுச் சாப்பாடு வைத்தாள் உம்மா. மீயாச்சா செல்போனுக்கு சார்ஜ் போட்டான், நான் சாப்பிட்டேன். அவனுக்கு ரெண்டு வாய்க்கு மேல் இறங்கவில்லை.

“கனி மாமா மேலுக்குச் சரி இல்ல, அதான் ஒரெட்டுப் போய் பாக்கப் போனோம்.” தண்ணீரை டம்ளர்களில் ஊற்றிக்கொண்டே சொன்னாள் கண்ணா.

“யாரு எக்கேடு கெட்டுப் போனா அவனுக்கென்னா… திண்ணுட்டுத் திண்ணுட்டுக் கோயில் மாடு மாரி ஊர சுத்துனா மட்டும் போதும். குடும்பத்துல ஒரு மக்க மனுசரையும் போய் பாக்குறதில்ல” கவலையில் உம்மா திட்டினாள்.

“நீ பொறந்தப்போ ஓன் நாக்குல சேனத்தண்ணி வச்சது அவந்தாம்ல. அவன் போடுற டீய குடிப்பானாம் அவன புடிக்காதாம்… இது எந்த ஊரு நியாயம்?” என்றாள் உம்மா.

நான் சூழ்நிலையை அறிந்து அங்கிருந்து கிளம்பினேன். சற்று நேரத்தில் மொபைலில் என்னை, அவன் வீட்டுக்கு வர சொல்லி அழைத்தான்.

போனபோது தலை கவிழ்ந்து படியில் உறைந்திருந்தான். என்னைப் பார்த்ததும் தலையைத் தூக்கி “கனி மாமாவைப் பாக்கணும்” என்றான்.

இருவரும் ‘இஞ்சிக்காலனி’யிலிருந்து பைத்துஸ்ஸலாம் பள்ளிவாசல் வழியாகப் பர்மா காலனியிலிருக்கும் கனி காக்கா வீட்டுக்கு நடந்தோம்.

“மாமாக்கும் எனக்கும் தீராப் பக ஒண்ணுமில்ல. சின்ன வயசுல மாமி கிட்ட வச்சு, மாமாவ மரியாதக்கொறவா பேசிட்டேன். மாமிக்கு அது புடிக்காம என்ன திட்டிட்டாங்க. அவங்க வயசுல பெரியவங்க, அத மறந்திருப்பாங்க. நான் செஞ்சதும் தப்புதான்… இதுவரைக்கும் எம்மனசுல அது செரிக்காம உருண்டுக்கிட்டே கெடக்குல.” கனி காக்கவின் வீடு வந்தது.

மீயாச்சாவின் மாமி தெரு வாசல் கூட்டிக் கொண்டிருந்தாள். நிமிர்ந்து எங்களைப் பார்த்து, ஸலாம் சொல்லிக்கொண்டு “இப்பதான் மருமொவப்புள்ளைக்கு வழி தெரிஞ்சிதாக்கும்” என்று வீட்டினுள் அழைத்தாள். கனி காக்கா கட்டிலில் படுத்து இருமிக்கொண்டே எங்களை இன்முகத்துடன் வரவேற்றார். ஸலாம் சொல்லிக்கொண்டே உள்ளே போனோம்.

மீயாச்சா, சிறுது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “மாமா… உடம்பு பரவாயில்லையா? மருந்து மாத்திர சாப்டிங்களா? டாக்டர் என்ன சொன்னார்?”

“கொஞ்சம் பரவாயில்ல. இந்த ரெண்டு காலுதான் ரொம்பா நாளா தொந்தரவு பண்ணுது, பொறுக்க முடியாத வேதனையாயிருக்கு. இன்னைக்கு ராத்ரியோட மருந்து முடிஞ்சுரும் நாளைக்குக் கடைக்குப் போணும்” என்றார்.

“அலியாத்து… பிள்ளையளுக்குக் குடிக்க ஏதாவது போட்டுக்கொண்டா…” என்ற உடனே “அலியாத்து, கொஞ்சம் பொறு” என்று தட்டுத் தடுமாறி அடுப்படியில் நுழைந்தார்.

நாங்களே எதிர்பாரா வண்ணம் கனி காக்காவே தன் கையால், எங்களுக்கு டீ போட்டுக்கொண்டு வந்தார். “எதுக்கு மாமா செரமம்” என்றபடியே மீயாச்சா நெகிழ்வோடு எடுத்து, குடிக்காத என்னையும் மரியாதைக் கருதி டீ குடிக்க வைத்தான்.

டீ குடித்துக்கொண்டே கனி காக்கா தன் ஆயுளின் பாதிக் காலத்தை நின்றுகொண்டே கழித்த கால்கள் வீங்கி அழுவதைக் கண்டேன். மீயச்சா ஒவ்வொரு மடக்கு டீயைக் குடிக்கும்போதும் அவன் முகம் பொலிவடைந்ததையும் கண்டேன். ஊர் கதையைப் பேசிக்கொண்டிருந்ததில் மணி ஏழானதும் கனி காக்காவிடமும் மாமியிடமும் விடைபெற்று வெளியேறினோம்.

திரும்பும் வழியில் பேச்சற்று நடந்தோம். மௌனம் கலைத்தவனாக நான், “லே மீயாச்சா… ஒரே பாத்திரத்துல எப்படி ரெண்டுபேருக்கும் புடிக்கிற மாரி டீ போட முடியும்” என்றேன்.

“ரெண்டு பேருக்கு இல்லல, இருபது வெவ்வேற மனசுக்கும் புடிக்கிற மாரி டீ போடுறவந்தான் நல்ல டீ மாஸ்டர். அதனால்தான் அவரு மாஸ்டரா இருக்காரு.” மீயாச்சா வீடு வந்தது. நான் வண்டியை எடுத்துக் கிளம்ப ஆயத்தமானேன். மீயாச்சா பீடியைப் பற்ற வைத்தபடியே நாளை செய்ய வேண்டிய வேலையைப் பற்றி விவரித்தான். பின்பு ஸலாத்தோடு விடைபெற்றோம்.

விடியற்காலை ஆறு மணிக்கு, தலையருகில் செல்போன் அடித்தது… “சொல்லு மீயாச்சா” என்றேன். நா தழுதழுத்து கனி காக்காவின் மரணச் செய்தியைச் சொன்னான். என் நாக்கு ஒரு கணம் உறைந்து போனது. உடனே கனி காக்கா வீட்டுக்குச் சென்று அவர் மய்யித்தைப் பார்த்தேன். போர்த்திய வெள்ளைத் துணியின் நடுவே அவர் முகம் பிரகாசித்தது. அனைவரின் கையிலிருந்த செல்போன்களும் மரணச்சேதியைப் பரிமாறின. வெளியே சாமியானா பந்தலின் ஓரமாக மீயாச்சா மனமுடைந்து சேரில் உக்கார்ந்திருந்தான்.

நான் அவன் பக்கத்தில் அமர்ந்தேன். அருகில் ஒருவர் வந்து கேட்டார்,

“ஜனாஸா எப்ப எடுக்கிறாங்க, எப்ப அடக்கம்…?”

மீயாச்சா கோபத்தோடு முறைத்தான். நிலைமையை அறிந்து அவர் அங்கிருந்து நகர்ந்தார். அவன் அவரை மய்யித்தாக நினைக்க மறுத்தான். முற்றிலும் நிலைக்குலைந்து போனான்.

“அஸ்ஸலாமு அலைக்கும்.

லெப்பையன்னார் வீடு மர்ஹூம் முகம்மது அசனார், அசன் பாத்து அவர்களின் மகனுமான,

அலிபாத்து அவர்களின் கணவருமான மதார், சித்தீக் ஆகியோரின் தகப்பனாருமான,

உதுமான் கனி அவர்கள் இன்று காலை ஆறு மணியளவில் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்குப் பின் ஆறாவது தெரு மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அஸ்ஸலாமு அலைக்கும்.”

பள்ளிவாசல் ஒலிபெருக்கி அறிவித்தது.

மனதைத் தேற்றி, குழி வெட்ட காசிம் காக்காவிடம் சொல்லிவிட்டு, மீரான் காக்கா கடையில் ஓலைபாயும் பனங்கட்டையும் வாங்கி மைய வாடிக்கு அனுப்பிவிட்டு, கட்டளைத் தெரு சேவர் கடையில் மைய்யித்துச் சாமானும், அலி ஸ்டோரில் கபன்துணியும் வாங்கிவந்தேன். சந்தூக்கு வீட்டின் முன் இருந்தது. டீக்கடை முதலாளி வருத்தத்தில் முகம் கவிழ்ந்திருந்தார். முன்பிருந்த இடத்திலிருந்தே சந்தூக்கை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் மீயாச்சா.

நேரம் நெருங்க நெருங்க மகன்களும் உறவினர்களும் வந்தனர். மய்யித்தைக் குளிப்பாட்டி கபன் பொதிந்து உரிய மரியாதைச் செய்து, சந்தூக்கில் முறையாக வைத்து மூடினர்.

சந்தூக்கை முன்னால் இரு மகன்களும் பின்னால் நானும் மீயாச்சாவும் ஒருசேரத் தூக்கி ஆறாவது தெரு பள்ளிவாசல் மையவாடியை நோக்கித் தோளில் சுமந்து சென்றோம். வீட்டுக்கும் மையவாடிக்குமிடையே தெற்கே முக்கால் கிலோ மீட்டர் தூரம். இருபத்தைந்து பேர் கூடே வந்தார்கள். கை வலிக்க ஆள் மாறி மாறிச் சுமந்துச் சென்றோம். கடைசிவரை மீயாச்சா மட்டும் ஜின்னு போல் தோளில் சுமந்துவந்தான். அப்போது லுஹர் தொழுகைக்கான பாங்கு சொன்னது. போகப் போக, ஜனாஸா பின்னாடி கூட்டம் அதிகரித்துக்கொண்டே வந்தது.

பள்ளிவாசலில் சந்தூக்கை இறக்கி வைத்துவிட்டு, தொழுகைக்காக உளு செய்துகொண்டு லுஹர் தொழுகைக்குப் பின், ஜனாஸா தொழுகையும் முடித்து, ஜனாஸாவை மையவாடிக்குள் கொண்டு சென்றோம். எல்லாச் சமூகத்தினரும் திரளாக உள்ளே வந்தனர். அனைத்து முகங்களும் வாடிக்கிடந்தன.

பீர்சாஹிப் பள்ளிவாசல் மையவாடி ஆறாவது தெரு கடைசி தெற்கே நம்பி ஆற்றங்கரையோரம் கருங்கற்களாலான சுற்றிலும் நீண்ட மதில் சுவரைக் கொண்டது. மையவாடிக்குள் வேப்பமரமும் புளிய மரமும் நிறைந்திருந்தது. முன்பு தலைப்பிள்ளைகள் அடக்கம் செய்வதற்கெனத் தனியாக ஒரு பகுதி இரும்புக் கம்பியால் பாதுகாக்கப்பட்டிருந்த தடயம் இருந்தது. இப்போது அது செயல்பாட்டில் இல்லாமல் உருக்குலைந்திருந்தது.

பெரும் புளியமரத்திற்குக் கீழ் குழிதோண்டப்பட்டிருந்தது. உச்சி வெயிலில் புளியமர நிழலில் சந்தூக்கை திறந்து, “கடைசியாக முகம் பாக்குறவங்கல்லாம் பாத்துக்குங்க” குரல் கேட்டதும் அநேகம்பேர் பார்த்தோம். மீயாச்சா தன்னிலை மறந்து ஓரமாக நின்றான். குழியைச் சுற்றி நின்று மய்யித்தை உரிய முறையில் அடக்கம் செய்தோம். இமாம் பிரார்த்தனை செய்ய தொடங்கியதும் எங்களின் கண்கள் மூடின. பிரார்த்தனை முடிந்தும் நீண்ட ஒரு அமைதி நிலவியது. மயான அமைதி. நான் கண் விழித்தபோது திகைத்துவிட்டேன். எவரும் கலைந்து போக மனமில்லாமல் நிற்க மைய வாடி நிரம்பி வழிந்திருந்தது.

கனி காக்காவின் டீயின் சுவைக் கண்ட ஒவ்வொரு நாவும் அவரின் மறுமைக்காகப் பிரார்த்தனை செய்வதை உணர்ந்தேன்.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!