கறுப்புத் திரை

ஜா.தீபா

நீ சிலரைச்
சிலநேரங்களில் முட்டாளாக்கலாம்
எல்லா நேரங்களிலும்
எல்லோரையும் முட்டாளாக்க முடியாது
எங்களுக்கு வெளிச்சம் தெரிகிறது
எங்கள் உரிமைகளுக்காக
நாங்கள் எழுந்து நிற்போம்
Get Up Stand Up for your Right

பாப் மார்லியின் இப்பாடலைக் கேட்டிருப்போம். பாடலின் தொடக்கத்தில் ஒரு துள்ளலான தாள இசை வரும். அது ஓர் அழைப்புக்கான இசையும் கூட. நீண்ட சொற்பொழிவுகளைக் காட்டிலும் நான்கு நிமிட பாடல்கள் மாயம் செய்யக்கூடியவை. இந்த மாயத்தை ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே செய்துவருகிறார்கள்.

இசையுலகில் ஆப்பிரிக்க இசைக்குத் தனிப் பாரம்பரியம் உண்டு. அவர்களின் இசை இன்றும் மக்களிடமிருந்து உருவாகிவருகிறது. பிறப்புத் தொடங்கி இறப்பு வரை எல்லாவற்றையும் இசையால் கொண்டாடுபவர்கள். பயிரிடும் காலமும், அறுவடைக் காலங்களும் அவர்களுக்கு இசைக்கானவை. தொடக்கத்திலிருந்தே இசையைக் கதை சொல்லலுக்காக, தகவல் பரிமாற்றத்துக்காகப் பயன்படுத்தியவர்கள். இதனாலேயே ஆப்பிரிக்க வம்சாவழியினர் எங்கு சென்றாலும் இசையைத் தங்களின் வாழ்வின் அங்கமாகப் பார்க்கிறார்கள்.

ஆப்பிரிக்காவின் வட பகுதியிலிருந்து அமெரிக்காவிற்கு அடிமைகளாக அழைத்து வரப்பட்டவர்கள் அமெரிக்காவின் வயல்களிலும் பருத்திக் காடுகளிலும் தொழிற்சாலைகளிலும் வேலை செய்கையில் முணுமுணுக்கும் பாடல்கள் பல வடிவங்கள் பெற்று ஜாஸ் இசையாக மாறியது. செய்யும் வேலையில் சிறு தேக்கமும் தவறும் நிகழ்ந்தால் அவர்களைப் பதம் பார்க்கக் கையில் சவுக்கு கம்புகளோடு நிற்கும் அமெரிக்கக் கங்காணிகளிடமிருந்து தப்புவதற்காகப் பாடிக்கொண்டே வேகமாக வேலை செய்யும் முறையை ஆப்பிரிக்கர்கள் பின்பற்றினார்கள். பாட்டோடு சேர்ந்து தாங்கள் சொல்ல விரும்பியதையும் இரகசியக் குறிப்புகளோடு பாடல் வரிகளில் இணைத்துப் பாடினர். இந்த முணுமுணுப்புகள் உரத்தக் குரல்களாக மேடைகளில் ஒலிக்க ஒரு நூற்றாண்டுக்கும் மேல் எடுத்துக்கொண்டது.

கறுப்பின இசை என்பது உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. அவர்களுக்கெனத் தனி அடையாளம் கிடைத்தது. இந்த இசை உலகத்தில் தங்களுக்கென ஓர் இடத்தை உருவாக்கிச் சரித்திரத்தைத் தங்கள் பக்கம் திரும்ப வைத்த பாடகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலரை இந்தக் கட்டுரை வழியே நினைவுகூரலாம்.

1939ஆம் ஆண்டு அமெரிக்காவில் இனப்பாகுபாடு உச்சத்தைத் தொட்டிருந்த காலகட்டம். வெள்ளை இன மக்களின் தங்குமிடங்கள், உணவகங்கள், பொதுக் கழிப்பறைகள் ஆகியவற்றில் கறுப்பினத்தவர்களுக்கு அனுமதி கிடையாது என்றிருந்த காலம். மரியன் ஆண்டர்சன் இசை உலகத்துக்குள் அடியெடுத்து வைத்திருந்தார். அவரது பெயரும் பாடும் திறமையும் இசை விமர்சகர்களை ஈர்த்திருந்தன. மரியன் ஆண்டர்சன் ஒரு பொது நிகழ்வில் பாடுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது அமெரிக்கக் குடியரசின் மகள்கள் என்கிற அமைப்பு. இதனை எதிர்த்துப் பத்திரிகையில் சிலர் எழுதினார்கள். வயதான சில பெண்கள் சேர்ந்து, மரியன் ஆண்டர்சனைப் பாடவிடாமல் செய்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்டிருந்தார்கள். அப்போதுதான் அவருக்கும் அமெரிக்கக் கறுப்பின் மக்களின் வரலாற்றுக்கும் மறக்க முடியாத நிகழ்வு நடந்தது. அது ஆவணப்படமாக இன்றும் காணக் கிடைக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் – திருமதி ரூஸ்வெல்ட் இருவருமாகச் சேர்ந்து லிங்கன் நினைவு அரங்கத்தின் முன்பு ஈஸ்டர் அன்று மரியன் ஆண்டர்சனை மக்கள் முன்பாகப் பாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இது நம்ப முடியாத வாய்ப்பு. நான்காயிரம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த அரங்கில் அன்று 75,000 அமெரிக்கர்கள் கூடியிருந்தார்கள். மேடையில் மட்டும் இருநூறு அமெரிக்க முக்கியஸ்தர்கள் நிறைந்திருந்தனர். மரியன் ஆண்டர்சன் அங்கு பாட வேண்டும். முதல் வரிசைகளில் வெள்ளை இன மக்கள் இருக்க, சில கிலோமீட்டர் தாண்டி கறுப்பின மக்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்களுக்கு மேடை கூட தெரிந்திருக்காது. ஆனால், தங்களில் ஒருவர் அந்த மேடையில் நிற்கிறார் என்பது அவர்களுக்கு எத்தனை பெரிய உணர்வினை ஏற்படுத்தியிருக்கும்! மரியன் மெதுவாக மேடை ஏறி வருகிறார், மைக் முன் நிற்கிறார். இந்த நிகழ்ச்சியை இலட்சக்கணக்கானவர்கள் நேரடியாக வானொலியில் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் மரியனுக்குத் தெரியும். ஒரு கறுப்பினப் பெண் அத்தனை பேர் முன்னிலையிலும் நிற்பதென்பதே பெரிய போராட்டம். அங்கு அவர் பாட வேண்டும். மரியன் அமைதியாக மைக் முன்பு நிற்கிறார். மக்களின் முகத்தில் எதிர்பார்ப்பு. அவருக்குத் தெரியும், இது தனக்கான வாய்ப்பு மட்டுமல்ல, தனது இனத்தின் பிரதிநிதியாக நிற்கிறோம் என்பது. இது இன்னும் பொறுப்பான சுமை. கண்களை மூடுகிறார். நீண்ட பெருமூச்சினை விடுகிறார். சட்டென்று உடைபடுகிறது குரல்.

ஈஸ்டர் தினத்தில் அவர் “எங்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்” என்று பாடினார். மேடை மறுக்கப்பட்ட ஒருவரின் குரலது. அமெரிக்க இசைத்துறை மறக்காத ஒரு பெயர் மரியன் ஆண்டர்சன். இதன்பிறகு அமெரிக்க அரசியல் வரை இந்த நிகழ்வின் தாக்கம் இருந்தது. மரியன் ஆண்டர்சன் ஓர் ஆளுமையாக மாறினார்.

அதன்பிறகு வந்தவர் ரே சார்லஸ். இவரது இசைத்தட்டுகள் இலட்சக்கணக்கில் விற்பனையாகின. இவரின் இசை துள்ளலானது. காதுகளை நிறைக்கக் கூடியது.

ரே சார்லஸ் சிறு வயதில் தன் அப்பாவைப் பிரிந்தவர். இவருடைய அம்மா ரேவோடும் அவரது தம்பியோடும் சிறு உணவகத்தில் வேலை பார்த்துக்கொண்டு அங்கேயே தங்கினார்கள். அந்த உணவகத்தில் பியானோ வாசிப்பவரிடம் அடிப்படை பியானோ இசையைக் கற்றுக்கொள்கிறார் சார்லஸ் ரே. அவருக்கு நான்கு வயதாக இருக்கையில் ஒரு தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்துவிடுகிறார். அதிலிருந்து காப்பாற்றப்பட்டாலும் அவருடைய கண்பார்வை மெதுவாக மங்கத் தொடங்கியது. ஏழு வயதாகும்போது முற்றிலும் பார்வையை இழக்கிறார். இவருடைய அம்மா அவரைப் பார்வை திறனற்றவர்களுக்கான பள்ளியில் சேர்க்கிறார். அதற்குப் பலரின் சிபாரிசை நாட வேண்டியிருந்தது. படிப்பில் நாட்டமில்லாமல் இசையில் பிடிப்புக் கொண்டிருந்த ரே, அம்மா ஒவ்வொருவரிடமும் தனக்காக மன்றாடுகிறாரே என்ற காரணத்துக்காகப் பள்ளியில் சேர முடிவு செய்தார். அங்கு அவர் பிரெய்லி முறையைக் கற்றுக்கொள்கிறார், பியானோ வகுப்பிலும் சேர்கிறார். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது அவரது தம்பியும் அம்மாவும் இறந்து போகிறார்கள். யாருமற்ற ரே, அம்மாவின் இறுதிச் சடங்கு முடிந்ததும் மீண்டும் பள்ளிக்குப் போக வேண்டாம் என்கிற முடிவோடு ஓர் உணவகத்தில் பியானோ வாசிப்பவராகச் சேர்கிறார். இங்கு அவருக்குப் புதுப் புது இசைக்கோர்வைகளை முயற்சித்துப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. அவரது புகழ் பரவுகிறது, பிரபலமடைகிறார்.

ரே சார்லைசைப் பற்றி இன்றும் பேசிக்கொண்டிருப்பதன் காரணம் இவரின் வருகைக்குப் பிறகு ஜாஸ் இசை வேறொரு தளம் கண்டது. உணர்ச்சிகரமான இசை என்பது மென்மையாகவும் இருக்க முடியும் என வடிவமைத்தவர். பல மனநல மருத்துவமனைகளில் ரே சார்லசின் இசையை ஒலிக்கவிடுகையில் தங்களையறியாமல் நோயாளிகள் கண்ணீர் விடுவதையும், அந்த இசை ஒலிக்கும் இடம் நோக்கி நடந்து போவதையும் அவரைப் பற்றிக் குறிப்பிடுபவர்கள் சொல்கிறார்கள். அதனால்தான் இவரை ‘ஆன்ம இசையின் தந்தை’ என்கிறார்கள்.

நீ வீட்டிற்கு வந்ததும்
உன்னிடம் என்ன எதிர்பார்க்கிறேன்
மரியாதையைத்தானே..
அதுவும் கொஞ்சமாக…
நீ வீட்டைவிட்டுப் போனதும்
நான் எந்தத் தவறும் செய்யவில்லை மிஸ்டர்.
நீ எனக்கு மரியாதை தரலாம்
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமேனும் மரியாதை கொடு..
உனக்காக நான் என் பணத்தையெல்லாம் தந்தேன்.
அதற்குப் பதிலாக மரியாதை கொடு

இப்படியான ஒரு பாடலை எழுதிக் கோடிக்கணக்கானவர்களை முணுமுணுக்க வைத்தவர் அரேதா ஃபிராங்க்ளின். சட்ட உரிமைப் போராட்டத்தில் இவருடைய பாடல்கள் அதிகம் கேட்கவும் பாடவும் பட்டன.

பில்லி ஹாலிடேவின் குரலில் உள்ள உருக்கம் என்பது அவர் கடந்துவந்த பாதையிலிருந்து உருவானது. பிழைப்புக்காக இவர் சிறுவயதில் செய்யாத வேலை இல்லை. இரயிலைச் சுத்தம் செய்திருக்கிறார்; உணவகத்தில் வேலை செய்திருக்கிறார்; வீடுகளை, கழிவறை உட்பட சுத்தம் செய்திருக்கிறார். இதெல்லாம் இவரது பனிரெண்டு வயதிற்குள் நடந்தவை. அக்காலகட்டத்தில் பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் இவரிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்க, அவர் குறித்துக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சில நாட்கள் இவரைக் காப்பகம் ஒன்றில் பாதுகாத்து வைத்தனர். அங்கிருந்து வெளியேறியதும் மீண்டும் வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியில் சேர்ந்தார். கிளப்களில் வேலை செய்கையில் அங்கு பாடப்படும் பாடல்கள் அவரை ஈர்த்தன. யாரும் கற்றுத் தராமல் தானாகப் பாடிப் பயிற்சி எடுத்துக்கொண்டு, சாக்சபோன் வாசிக்கும் ஒருவரைச் சந்திக்கிறார். பின்னர் இருவருமாகச் சேர்ந்து ஓர் இசைக்குழுவை உருவாக்குகிறார்கள். எங்கெல்லாம் பாட வாய்ப்பு வருகிறதோ அங்கு போய்ப் பாடுவார் பில்லி. இவரது குரலில் உள்ள காத்திரத்தன்மை பலரை ஈர்த்தது.

மெதுவாக உயரத்தை அடைந்தது இவரது வளர்ச்சி. அமெரிக்காவின் தென்பகுதிக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இசைக்குழுவில் பில்லிக்குப் பாடகியாக இடம் கிடைத்தது. அந்தக் குழுவில் இவர் மட்டுமே கறுப்பினப் பாடகி. எல்லோரும் உட்கார்ந்துகொண்டிருந்தாலும் கடைசிவரை ஓய்வெடுக்கக் கூட யார் முன்பும் உட்கார முடியாத சூழல் அவருக்கு இருந்தது. பல மேடைகளில், கறுப்பினப் பெண் பாடினால் கேட்கமாட்டோம் என்று பார்வையாளர்கள் சொல்ல பாதியில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார். ஒரு மேடையில் யாரோ இவரைப் பார்த்து மோசமான வார்த்தையைச் சொல்ல, கோபத்தில் பில்லி அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட்டார். தங்குமிடத்தில் லிஃப்ட்டில் கறுப்பினப் பெண் ஏறக்கூடாது என்று சொல்ல, ஒவ்வொரு முறையும் பல மாடிகளை எப்படி ஏறி இறங்குவது என்று பதிலுக்குக் கேட்டிருக்கிறார். மீண்டும் அவரது இனம் பற்றிய வசவுகளும் கேலிகளும் பதிலாக வர, அதோடு அந்த இசைக்குழுவிலிருந்து வெளியேறினார் பில்லி ஹாலிடே.

பில்லியின் வாழ்க்கை முழுவதும் பெரும் போராட்டமாகவே இருந்திருக்கிறது. ஆனாலும் அவரிடமிருந்த புன்னகையை அவர் விட்டுத்தந்ததில்லை. இசைக் குறித்த முறையான பயிற்சியற்ற பில்லி ஹாலிடே நான்கு கிராமி விருதுகளை வென்றிருக்கிறார்.

பாப் இசையின் சக்கரவர்த்தி என்றழைக்கப்படுகிற மைக்கேல் ஜாக்சனின் மிகப் பிரியத்திற்குரிய முன்னோடி ஜேம்ஸ் பிரவுன். வறுமையிலிருந்து தப்பிக்க அம்மாவுடன் நியூயார்க் வருகிறார். இரண்டாம் உலகப் போருக்கு வீரர்கள் சென்றுகொண்டிருக்கும் பாதையில் நின்று அவர்களை உற்சாகமூட்ட சிறுவன் ஜேம்ஸ் பிரவுன் தெருவில் ஆடிக்கொண்டிருப்பான், பாடல்கள் பாடுவான். இப்படியாக உள்ளூரில் சில பாடகர்களின் அறிமுகம் கிடைத்தது. பதினாறு வயதில் குத்துச்சண்டை வீரராகவும் இருந்திருக்கிறார். போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் இசையைக் கைவிடவில்லை. சிலரைச் சேர்த்துக்கொண்டு அங்கேயே ஓர் இசைக்குழுவை உருவாக்கினார். அவர்களே பாடல்கள் எழுதிப் பாடுவார்கள். சிறையில் கால்பந்தாட்டப் போட்டிகள் நடக்கையில் ஜேம்ஸ் பிரவுனின் பாடல்கள் கூடுதல் உற்சாகமளித்திருக்கின்றன. சிறைக் கொடுமைகளிலிருந்து இவரது பாடல்கள் சிறு வெளிச்சத்தை அங்குள்ளவர்களுக்குத் தந்திருக்கின்றன.

ஜேம்ஸ் பிரவுன் சிறையிலிருந்து வெளியேற வேண்டுமானால் பிரசங்கப் பாடல்களை மட்டுமே பாட வேண்டும் என்ற நிபந்தனை போடப்பட்டது. அதன் அடிப்படையில் சிறையிலிருந்து வெளியேறினார். சில காலங்கள் பிரசங்கப் பாடல்களைப் பாடினார். ஊர் ஊராகச் சென்றார். இவரது பாடல்களுக்கும் குரலுக்கும் பெரும் ரசிகர்கள் உருவானார்கள். இசைத்தட்டுகள் அதிகம் விற்பனையாகின. வெவ்வேறுவிதமான பாடல்களை இவரது நண்பர் எல்லிஸ் எழுத இவர் மேடைதோறும் பாடினார்.

Say it Loud, I am Black I am Proud என்கிற இவரது பாடல் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகளைக் கொண்டு பாட வைத்திருப்பார். இப்போது வரை அமெரிக்க இளைஞர்களால் விரும்பிக் கேட்கப்படும் பாடலது. ‘Get up and say something’ போன்ற பாடல்கள் ‘கறுப்பின மக்களுக்காகக் குரல் கொடுப்போம்’ என்கிற குழுவினர் அமைதி காத்தபோது அவர்களுக்காக எழுதப்பட்டு இவர் பாடியவை. தனது பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கி கறுப்பின மக்களுக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

அமெரிக்க அரசியலிலும் சமூகத்திலும் அடிமைகள் என்ற பெயரில் தொடர்ந்து சில குரல்கள் புறக்கணிக்கப்பட்டுவந்தன. பேச்சுரிமை தடை செய்யப்பட்டது. பொதுவெளியில் அடிமை முறைக்கு எதிராக உரையாற்றுபவர்கள் கண்காணிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். கடும் வேலை செய்பவர்களுக்குக் கூலி குறைக்கப்பட்டன. இவர்கள் நிறுவனம் தொடங்கத் தடை இருந்தது. திரைப்பட உலகுக்குள் ஒரு கறுப்பினத்தவர் கூட நுழைய முடியாதபடி கதவுகள் மூடப்பட்டிருந்தன. இந்தச் சூழலில்தான் இந்தப் பாடகர்கள் அலை போல எழுந்துவந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு வழிகாட்டினார்கள். எதையும் இசையால் கடத்த முடியும் என்று நம்பினார்கள். அது தொடர்ந்து நிகழவும் செய்தது.

ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அமெரிக்க நிலத்தில் தங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு இந்த இசை பெரும் பங்காற்றியிருக்கிறது. இவர்களில் சிலரை மட்டும் இந்தக் கட்டுரை மூலமாக நினைவு கொண்டுள்ளோம். இன்னும் எத்தனையோ பேர் தங்களின் வாழ்வைப் பணயமாக வைத்து இசையை ஒரு போர்க்கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மக்களை உத்வேகப்படுத்த சொற்களைக் காட்டிலும் பாடல்வரிகள்தாம் தொடக்கத்திலிருந்தே பெரும் பங்காற்றியுள்ளன.

நாம் ஏன் இப்படி ஆனோம் என்கிற கழிவிரக்கக் கேள்விகளிலிருந்து, இப்படியிருக்க மாட்டோம் என்ற பிடிவாதமான குரலாக மாறுவதற்கு இந்த இசையுலகம் அதிக வருடங்களை எடுத்துக்கொள்ளவில்லை என்பதை அமெரிக்க ஜாஸ், பாப் இசையின் வரலாற்றை அறிந்தவர்களால் புரிந்துகொள்ள முடியும்.

இசை எப்போதுமே சுதந்திரத்தின் வெளிப்பாடு, இவர்கள் அதன் தூதுவர்கள்.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!